Friday, December 11, 2009
அண்ணா மாயை!
குற்றவாளியை பாதுகாக்கும் ஊரிஸ் கல்லூரி
தீண்டாமைக்கு எதிரான சிபிஎம் போராட்டம் - முனைவர்கள் விழித்துக் கொள்வார்களா?
Tuesday, August 4, 2009
வெண்மணி: பெரியாரின் எதிர்வினை : செல்வம்
பெரியார் தலித்துகளுக்கான போராட்டங்களில் பாரபட்சத்துடன் நடந்து கொண்டாரென்று தொடங்கிய விவாதம், இன்றைய தலித் புத்தி ஜீவிகளென வர்ணிக்கப்படுபவர்களால் அவரை தலித் விரோதியெனவும் நிலப்பிரபுத்துவ ஆதரவாளரென்றும் பழிசுமத்துமளவிற்கு வந்துவிட்டது. இந்து மதத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் ஒழிக்காமல் ஜாதிப் படிநிலையை தவிர்க்கவியலாது என்பதிலும் பஞ்சமர்களின் விடுதலையின்றி சூத்திரர்களின் விடுதலையும் சாத்தியமில்லையென்பதிலும் பெரியார் கொண்டிருந்த தெளிவும் நம்பிக்கையும் அவரை மிகவும் மேலோட்டமாக வாசிக்கும் நபராலும்கூட இனங்கண்டு கொள்ளமுடியும் என்றிருக்க, இப்பழிசுமத்தல்களின் பின்னணி, திராவிடக் கட்சிகளில் சிதறிக்கிடக்கும் தலித்துக்களை ஒருங்கிணைத்து அவற்றிற்கிணையான ஓட்டுக்கட்சியாய் தம்மை ஸ்தாபித்து, ஆட்சியதிகாரங்களில் பங்கு கேட்கும் மலிவான அரசியல் உத்தியேயன்றி, சுத்த சுயம்புவான தலித் எழுச்சிக்கான முன்னேற்பாடுகள் அல்ல.ஈரோடு ஆதிதிராவிடர் வாலிபர் சங்க விழாவில் தந்தைபெரியார் ஆற்றிய உரையிலிருந்து (குடி அரசு 4-12-1932) சிறுபகுதியொன்றை கோடிட்டுக்காட்டுவது இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக அமையும்:"உலகமே வெறுத்துத் தள்ளிய சைமன் கமிஷனை, சுயமரியாதை இயக்கம்தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று, உங்கள் குறைபாடுகளைச் சொல்லிக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டதுடன் உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன்தான் இப்போது எத்தனையோ பேர் தடுத்தும், சூழ்ச்சிசெய்தும் ஒரு அளவாவது நீங்கள் அவைகளிலும் ஸ்தானம்பெற முடிந்தது. உங்களுக்குத் தனிக்கிணறும், தனிக்கோவிலும் கட்ட வேண்டும் என்று சொன்ன தேசியங்களும் மாளவியாக்களும் உங்களுக்குப் பொதுக்கிணற்றில் உரிமையும், பொதுக் கோவில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயளவிலாவது சொல்லக்கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுயமரியாதை இயக்கம் உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசியத்தின் வண்டவாளத்தை வெளிப்படுத்தியும், தீண்டாமை விலக்கின் சூழ்ச்சியை வெளியாக்கியும் செய்த பிரச்சாரமல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்''காந்தி தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக கூறிக் கொண்டதை அம்பேத்கரைப் போலவே வன்மையாகக் கண்டித்த பெரியார், சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்குமான வேறுபாட்டினை உணர்ந்திருந்ததன் காரணமாக தன்னை எச்சூழலிலும் தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக சொல்லிக்கொள்ளாத நேர்மையை அவர் ஆதிதிராவிடர்கள் மாநாடுகளில் கலந்துகொண்டு பேசியபொழுது ‘நீங்கள், உங்களுடைய' என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தியன் மூலமாக விளங்கிக் கொள்ளலாம். சூத்திரன் என்பதற்கான பொருள் தாசிமகன், வேசிமகன் என்றிருப்பதால் ‘பறையர்' என்பதை விடவும் ‘சூத்திர'னென்பது இழிவானதென்றவர் ‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரி பேசப்படும் பேச்சுக்களும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களின் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்குமே' (குடி அரசு 11.10.1931) என்ற தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கான தவிர்க்கவியலாத காரணங்களையும் சுட்டிக்காட்ட தவறியதில்லை.பூனா ஒப்பந்தத்தின்போது பெரியார் ஐரோப்பியாவிலிருந்தபோதும் அம்பேத்கருக்கு ‘6, 7' கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிட கேலவமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்துவிடாதீர்கள்' என்று தந்தி கொடுத்ததுடன் ‘மகாத்மாவின் பொக்கவாய்ச் சிரிப்பில் மயங்கியும், மாளவியா, ராஜகோபாலாச்சாரியார் போன்ற பிரகஸ்பதிகளின் ஆசிர்வாதத்திற்கு ஏமாந்ததும் கையெழுத்து போட்டதும் தலித்துகளின் விடுதலையைப் பாழாக்கிவிட்ட'தென விமர்சனம் செய்தவர் பெரியார். மேலும் ‘பூனா ஒப்பந்தம் இதர இடங்களில் எப்படிப் போனாலும் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையாவது ரத்து செய்யப்பட வேண்டுமென'வும் (குடி அரசு 03.02.1935) பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானதெனவும் வலியுறுத்தினார். (குடி அரசு 8.11.1925).பெரியாரின் சமகாலத்தியவர்களும் அவரால் மதிக்கப்பெற்ற தலைவர்களுமான முகமது அலி ஜின்னாவும், அம்பேத்கரும் மதம், ஜாதி அடிப்படையில் முஸ்லீம்களாகவும், தலித்துகளாகவும் தம்மக்களை ஒருங்கிணைத்த சூழலில் பெரியாரோ, பார்ப்பனரல்லாதார் என்ற வகைப்பாட்டிற்குள் முகமதியர்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ-இந்தியர் முதலிய இந்துகளல்லாதவர்களையும், இந்து மதத்திற்குள் பிராமணர் நீங்கிய பலஜாதியினரோடு தீண்டத்தகாதரென தள்ளி வைக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைக்கும் கடினமான செயல்திட்டத்தை முன்வைக்க, அது இன்னும் நிறைவேறாமல் காலம் நீடிக்கிறது. இந்நிலையில் பெரியாரின்மீது சுமத்தப்படும் தலித் விரோதியென்ற குற்றச்சாட்டை நிரூபிக்க 44 தலித்துகள் எரித்துக் கொல்லப்பட்ட வெண்மணி சம்பவம் குறித்து அவர் பேசவில்லையென்பது சான்றாக்கப்பட்டு வருகிறது.‘நிறப்பிரிகை'யின் கூட்டு விவாதத்திலும் பலரால் இக்கருத்து சொல்லப்பட்டு, பெரியாரிய ஆய்வறிஞர்களுள் ஒருவரான பேரா. அ. மார்க்ஸ் அவர்களும் அது குறித்து தமக்கு தெரியவில்லையென்று கூறியுள்ள சூழலில் (பெரியார் : நிறப்பிரிகை கட்டுரைகள் டிசம். 1995-விடியல் வெளியீடு) வெண்மணி குறித்த பெரியாரின் எதிர்வினையைக் கவனப்படுத்துவது அவசியமாகிறது.வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்து வந்தாரென்பதும் 28.12.68 அன்றுமாலையே இல்லம் திரும்பினாரென்பதும், டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் திரு.கி.வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியக் கிடைப்பதால், பெரியாரால் அறிக்கையெதுவும் எழுதவியலாததை அனுமானிக்கலாம். எனினும், 12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீடு வெளிப்படுகிறது:"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''பெரியாரது வழமையான பாணியில் இவ்விமர்சனமும் பொதுப்புத்தி சார்ந்தும் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் அமைந்திருக்கிறது. சோவியத் ரஷ்யாவை பல்வேறு சந்தர்ப்பங்களில் விதந்தோதிய பெரியார் இந்திய கம்யூனிஸ்டுகளை எப்பொழுதுமே பொறுக்கித் தின்பவர்களென்றே அழைத்து வந்தார். அதைப் போலவே இந்திய கம்யூனிஸ்டுகளும் பெரியாரையும் அவர் வலியுறுத்திய இன, பிராந்திய உணர்வுகளையும் கண்டு கொண்டதில்லை. ‘இந்தியாவில் சமதர்மமும் பொதுவுடைமைத் தத்துவமும் ஏற்பட வேண்டுமானால், வருணாசிரமமும், பரம்பரைத் தொழில் முறையும், கைத்தொழில் முறையும் முதலில் ஒழியவேண்டும்.' (குடி அரசு 14.6.1931)‘வருணாசிரமத்தையும் பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடையை ஏற்படுத்திவிட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்துவிடும் என்றும் சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும் பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளச்செய்யும்...' (குடிஅரசு 25.3.1934). அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறதென்ற பெரியாரின் அவதானிப்பு காலம்கடந்தே நமக்கு உறைக்கிறது.‘கம்யூனிஸ்ட்-எவன் காலை நக்கியாவது வயிறுவளர்க்கிறதுதான் அவன் வேலை; இன்னாரோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை; நாம் வலுத்தால் நம்கிட்டே; பார்ப்பான் வலுத்தால் அவன்கிட்டே; இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே; உலகத்திலே கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் நம் கம்யூனிஸ்ட்டுதான்' (திருச்சியில் 4.11.1973 அன்று பேசியது) என்ற கணிப்பும் இன்றையவரைக்கும் நீடிக்கும் நிலைதான் இருக்கிறதெனினும் சமீப காலமாக கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை ஏற்றுக்கொள்வதும்; இனம், மொழி குறித்தெல்லாம் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இம்முடிவுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தால் அதனுடைய விளைவுகள் மிகச் சிறப்பாக இருந்திருக்குமே.கூலி உயர்வுக்கான தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை பெரியார் ஒருபோதும் ஆதரித்ததில்லை. இது ஏதோ வெண்மணி விஷயத்தில் மட்டும் எடுக்கப்பட்ட முடிவல்ல. 1933-ஆம் ஆண்டிலேயே கொச்சி, ஆலப்புழை, திருநெல்வேலி ஆகியவிடங்களில் கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார்:"எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள்நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்றுசேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்கவேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம்கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தக்கராறு என்பது, முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்'' (குடிஅரசு, 1.10.1933)."நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்கு கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படி செய்ய வேண்டும்'' என்ற பகுத்தறிவு கட்டுரையும் (2.12.1934) "முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்' என்ற 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானமும் "அரசாங்கத்தின் சலுகையால் முதலாளி வாழமுடிகிறது. ஆகையால் முதலாளி கூடாதென்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின்மீது திரும்பவேண்டு'மென்று பொன்மலையில் 27.9.1953 அன்று பேசியதும் இங்கு சேர்த்தெண்ணத்தக்கது.பெரியாரின் செம்பனார்கோயில் பேச்சிலிருந்து திராவிடக் கட்சிகளின்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை விளங்கிக்கொள்ள இயல்கிறது. அந்நம்பிக்கையும் சிதறுண்டுபோய் அவர் "ஓட்டுகளுக்காக கூட்டிக் கொடுக்கவும் செய்வார்கள்' என்று இறுதிக்காலத்தில் பேச வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி திராவிடக் கட்சிகள் ஆட்சியிலமர்ந்ததை சுயமரியாதை இயக்கத்தின் வெற்றியென அவர் கருதிக்கொண்டதும், அவர்கள் ஆட்சியிலிருப்பது சுயமரியாதை இயக்கப் பணிகளுக்கு ஆதரவாக இருக்குமென்பதும் அவர் நம்பிக்கைகளுக்கு காரணமாயிருந்தன.கம்யூனிஸ்டுகளிடம் விவசாயக் கூலித் தொழிலாளிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற பெரியாரின் அறிவுரையில் இப்பொழுது திராவிடக் கட்சிகளையும் தலித் அமைப்புகளையும் தயக்கமின்றி இணைத்துக் கொள்ளலாம். தலித் அமைப்புகள் பெரியாரை முற்றாகப் புறக்கணிப்பது பார்ப்பனீயத்திற்கு துணைசெய்வதே ஆகும். ஜாதி, மத ஒழிப்பிற்கான பெரியாரின் நுட்பமான அவதானிப்புகளை புறந்தள்ளுகிறபட்சத்தில், நெடிய காலம் தள்ளி அதன் பெருந்தீங்கை உணர வேண்டியிருக்கும்.
Wednesday, July 29, 2009
நிழல் தேடிய ஓட்டமும் ஆட்லெறி வந்து விழாத ஓரு இடமும்…டி.அருள் எழிலன்By இனி
நிழல் தேடிய ஓட்டமும் ஆட்லெறி வந்து விழாத ஓரு இடமும்…டி.அருள் எழிலன்By இனி • Jul 29th, 2009 • Category: அரசியல் - சமுகம் முள்ளிய வாய்க்காலில் இறுதிப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது யாழ் பல்கலைக்கழத்தின் விவசாய பீடத்திற்குச் சொந்தமான மனிக்ஃபாம் காடு. அதில் மரங்களை வெட்டி சமவெளி ஒன்றை உருவாக்க கூலி வேலைக்கு தமிழ் மக்களை அழைத்துச் சென்றது இராணுவம். ஏற்கனவே முகாம்களில் தஞ்சமடைந்த மக்களும் இவ்விதமான காடு வெட்டும் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அடர்த்தியான அந்த பருவ மழைக்காடுகள் வெட்டப்பட்டு சமப்படுத்தப்பட்டது . அடர்ந்த அந்தக் காடுகளை வெட்டியது எதற்காக என்றோ? யாருக்காக? என்றோ? அவர்களுத் தெரியவில்லை. ஆனால் மே மாதம் பதினெட்டாம் தேதி பெருந்தொகையான மக்கள் முள்ளியவாய்க்காலில் இருந்து வெளியேறி நந்திக்கடல் என்னும் நீரேரியைக் கடந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது அவர்களை அடைத்து வைக்க இலங்கை அரசு உருவாக்கிய கண்காணிப்பு முகாம்தான் புதிதாக வெட்டி உருவாக்கப்பட்ட மனிக்ஃபாம் முகாம்.இப்போது மனிக் முகாமில் மட்டும் 1,60,000 பேர் இருப்பதாக ஆதரமற்றச் செய்திகள் சொல்கின்றன. இந்த நூற்றாண்டின் மிக மோசமான துர்பாக்கியசாலிகள் அவர்களாகத்தான் இருப்பார்கள். இறுக்க வேயப்பட்ட வேலிகளுக்குள் மந்தையில் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் ஆடுகளைப் போல அவர்கள் முகாம்களுக்குள் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளுக்குள் பல நூறாய் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைக்குள் அம்மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். பாரம்பரீயமான அவர்களின் நிலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு மூடப்பட்ட கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகளிலும், மருத்துவமனைகளிலும், பல் நோக்கு கூட்டுறவு வளாகங்களிலும் கடுமையான கண்காணிப்பின் கீழ் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கம்பி வேலிகளுக்குள் அவர்கள் தாங்கள் உயிர் பிழைத்திருப்பதை நம்ப முடியாமல் சோர்வுடன் வாழ்வைக் கழிக்கிறார்கள். இனி எப்போது தங்களின் வீடுகளுக்குத் திரும்புவோம் என்கிற உத்திரவாதம் இல்லாமல் பெரும் சுமையைச் சுமக்கிறார்கள். குழந்தைகள் கம்பிவேலிகளைப் பிடித்தபடி யாராவது வருவார்களா? என்று எதிர் நோக்கிக் காத்திருக்கிறார்கள்.அந்த எதிர்பார்ப்பில் உண்ண உணவோ, அல்லது சில பிஸ்கெட் துண்டுகளையோ பெற்று விடும் ஏக்கம் அவர்களிடம் இருக்கிறது. பெரியவர்களோ தலை குனிந்து இராணுவச் சிப்பாய் முன்னால் மண்டியிட்டு நிற்கிறார்கள். பிடித்துச் செல்லப்பட்ட தங்களின் இளம் பிள்ளைகள் குறித்து எவ்விதமான கேள்விகள் கேட்கவும் திராணியற்றவர்களாய் வெறுமையால் நிரைந்திருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அந்த கொட்டகைக்குள் வரிசையில் நின்று உணவு வாங்க கூச்சப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கூச்சம் தேவையற்றது ஏனென்றால் அங்கு வரிசையில் நிற்கிற எல்லோருமே தங்கள் வாழ்வு இப்படியானது குறித்து தங்களைத் தாங்களே சபித்துக் கொண்டும் கழிவிரக்கத்தால் அழுது கொண்டும். இருக்கிறார்கள். இந்த ஹைடெக் யுகத்தில் வெளியுலகத் தொடர்புகள் ஏதுமற்று கூனிக் குறுகி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அவர்கள் இந்த பேரினவாதப் பிசாசுகளிடம் சிக்கியவர்கள். கிளர்ச்சிக் குழுவின் பலவீனமான போர்த் தந்திரத்திற்குப் பலியானவர்கள்.அவர்கள் நம்மிடம் சொல்ல ஏராளமான கதைகள் உண்டு. போரின் கூரூரம் பற்றி, கிளிநொச்சியில் தொடங்கிய இடப்பெயர்வு நந்திக்கடலில் முடிந்து பற்றி.யாரிடம் வாழ முடியாது என்று வன்னியில் இருந்து விலகி இருந்தார்களோ அவர்களிடமே வந்து சரணடைந்த கொடுமை பற்றி. இன்று முகாம்களை பார்வையிடுவதற்காக வந்து சென்று படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டிருக்கும் ஐநாவின் சிறப்புத் தூதர் விஜய் நம்பியாருக்கோ அல்லது ஐநாவின் தலைவர் பான்கிமூனுக்கோ, அவர்கள் வழமையான ஒரு வாழ்வை வாழ்ந்தவர்கள் என்றோ செழிப்பான ஒரு நாகரீத்தின் விவாசாயக் குடிகளாக வாழ்ந்தவர்கள் என்பதோ தெரியாது. அவர்கள் தங்களின் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லவே விரும்புகிறார்கள். தன்னார்வக் குழுக்கள் கொடுக்கும் உணவை அருந்தவோ இராணுவத்திடம் கையேந்தி நிற்கவோ அவர்கள் விரும்பவில்லை. தமிழ் சமூகத்தின் இந்துப் பண்பாட்டின் எல்லா கூறுகளும் அவர்களிடமும் உண்டு. சாதி,ஆண்மரபு வழி சொத்துக்களை பேணுதல், தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல வரதட்சணை கொடுத்து மணம் முடித்தல் என்று எளிய சடங்குகளோடு வாழ்ந்தவர்கள் அவர்கள். சேமிப்புகளில் அதிக கவனம் செலுத்தினார்கள். போருக்கு, போராளி அமைப்புக்கு என்று தங்கள் பிள்ளைகளை அனுப்பி அவர்கள் ஏராளமான உயிர்களை விடுதலையில் பெயரில் இழந்திருந்தாலும் அம்மண்ணில் இராணுவ அதிகாரத்தின் கீழான ஒரு வாழ்வை விட மரியாதையான வாழ்வையே வாழ்ந்து வந்தார்கள். வன்னி நிலம் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என்ற மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய விவாசய நிலம்தான் வன்னி எனப்படுவது. வவுனியா, மன்னார் மாவட்டங்களின் 40% சதப் பகுதியையும் முல்லைத்தீவில் 90% சதப்பகுதியையும் கிளிநொச்சியின் முழு நிலப்பரப்பையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் புலிகள். இலங்கையின் வட பிராந்தியமான வன்னி பெருநிலத்தின் வடக்கை கிளிநொச்சியும், கிழக்கை மதவாச்சியும், கிழக்கு மேற்கை கடலாகவும் கொண்டு அமைந்த நிலம்தான் வன்னி நிலம். கடந்த முப்பதாண்டுகளாக விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகின் கீழ் ஆளப்பட்டு வந்தது. முப்பதாண்டுகால புலிகளின் நிர்வாக அலகின் கீழான வாழ்வு என்பது பல்வேறு சாதக பாதகங்களைக் கொண்டது. பெரும்பாலான விவசாயிகள் சொந்தமான காணிகளைக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். பாலாலியில் இருந்து வீசப்படும் ஆட்லெறி வந்து விழாத தொலைவில் வாழ்வது அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. அதுவே அவர்களின் பாதுகாப்பு ஆசையாகவும் இருந்தது. கிளிநொச்சியை எடுத்துக் கொண்டால் அங்கு இரணைமடுக்குளமும், விசுமடுக் குளமும் பிரதான விவசாய நீர் பயன்பாட்டுக் குளங்களாக இருக்கின்றன. மாங்குளத்தில் தொடங்கி இரணைமடு வரை பரந்து விரிந்திருக்கும் இரணைமடுக்குளம் அவர்களின் பிரதான விவசாய பயிர்செய்கைக்குப் பயன்படுகிறது. அது போல விசுவமடுக்குளமும் அவர்களின் தண்ணீர் தேவையை வருடம் முழுக்க பூர்த்தி செய்யும். இதனாலேயே கிளிநொச்சியும் அதனை அண்டிய வன்னிப் பிரதேசமும் மழையில்லாத காலங்களில் கூட முப்போக விளைச்சலைக் கண்டிருந்தது. அது போலவே முல்லைத் தீவிலும் முத்தையன்கட்டுக் குளம். தண்ணீர் முறிப்புக் குளம் போன்றவை விவாசார நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. பெரும் தென்னை வளத்தைக் கொண்ட முல்லைத் தீவு சணல் ஆலைத் தொழிலையும் பிரதானமாகக் கொண்டிருந்தது. உலகின் பல்லுயிர் வாழ்வுக்கு உகந்த சூழல் வன்னிப் பெருநிலத்தில் இருப்பதாக அறியமுடிகிறது. இலங்கை அரசும் கிளிநொச்சியின் 155&ம் கட்டையில் பட்டுப்பூச்சி சந்திப்பில் ஒரு வேளாண் ஆய்வு மையத்தை நடத்திவருகிறது. பருவமழை பொய்த்துப் போனாலும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு கண்மாய்களும் குளங்களும் அதன் மண் வளத்தை பாதுகாத்து வருகின்றன. பிரதானமாக விவசாயத்தையும் இன்னொரு பிரதானத் தொழிலாக (கடற்தொழில்) மீன் பிடித்தலையும் கொண்டிருந்தாலும் முப்பதாண்டுகளில் பல் வேறு பொருளாதாரத் தடைகளையும் கடந்த ஒரு சுகவாழ்வேனும் அவர்களுக்கு சாத்தியமாகியிருந்தது. பொருளாதார நெருக்கடிகள் வந்த ஆரம்பகாலத்தில் அவர்கள் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்காக அதிக விலையைக் கொடுத்தார்கள். விதை நெல்லுக்கு பற்றாக்குறை இல்லை ஆனால் விதைப்பதற்கும் உரத்திற்கும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டார்கள். அப்படியே விளைந்தாலும் நெல்லுக்கு விலையில்லாமல் அவர்கள் சந்தித்தது புதிய நெருக்கடி. 95, 96, காலப்பகுதியில் யாழ்குடா நாடு இராணுவ முற்றுகைக்குள்ளானது பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்து குடாநாட்டு மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தார்கள். செயலிழந்த இலங்கை அரசின் நிர்வாகம் போரின் காரணமாக புனரமைக்கப்படாத சாலைகள் என்று அன்றைக்கு போதுமான கட்டமைப்புகளை வன்னி கொண்டிருக்கவில்லை. அவர்களிடம் இருந்ததெல்லாம் பசுமையான நிலம். 1997&ல் ஜெயசிக்குரு போர் நடவடிக்கையின் போதும் மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தார்கள். பெருந்தொகையான மக்கள் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் போரை எதிர் கொண்ட போது நிர்வாக வசதியின்மை, போக்குவரத்து சிரமம். பொருள் உற்பத்தி என்று அன்றைய மக்கள் சந்தித்த நெருக்கடிகளில் இருந்தே புலிகளின் நிர்வாக அலகுகள் விரிவு படுத்தப்பட்டது. பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு உணவு உற்பத்தி நீண்ட கால சேமிப்பு என நிர்வாகத்தை தொலை நோக்கோடு விரிவு படுத்தியது அதன் பிறகுதான். மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் ரேஷன் சிஸ்டத்தைக் கட்டுப்படுத்தி மக்களுக்கும் தங்களுக்குமான விநியோகத்தைக் கொண்டு வந்ததும் புலிகள்தான். ஐம்பது கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல்லை சேரன் அரிசி ஆலை தொள்ளாயிரம் ரூபாயில் தொடங்கி ஆயிரம் ரூபாய் வரைக் கொடுத்து கொள்முதல் செய்து அதை தங்களின் அரிசி ஆலையில் அடித்து அரிசி ஆக்கி அதை ஏற்றுமதியும் செய்து கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகளின் மூலம் ரேஷன் சிஸ்டத்தையும் நடத்தி வந்திருக்கிறார்கள் புலிகள். வன்னிப் பகுதி மட்டுமல்லாமது இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் புலிகள் அரிசி ஏற்றுமதி செய்து வந்ததும் தெரிகிறது.பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து பல மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் திட்டம் இருந்தாலும் சர்வதேச அளவில் எழுந்த பொருளாதார நெருக்கடியும் புலிகளின் வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டமையும் அவர்களின் நெருக்கடியை ஒரு பக்கம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது.ரணில் ஆட்சிக்கு வந்த சமாதானக் காலத்தில் வன்னி மக்கள் பல்வேறு அனுகூலங்களை அடைந்ததும் உண்மைதான் தாராளமாக அவர்களுக்கு உரங்கள் கிடைத்தது. ரேஷன் பொருட்களில் தட்டுப்பாடில்லை, தொலைத் தொடர்பு வசதிகளும் இருந்தது. இந்நிலையில் வெளி உலகின் அங்கீகாரம் இல்லாத புலிகளின் நிர்வாக அலகின் கீழ் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். வன்னி மக்கள் மீது ஏவப்பட்டு கொடூரமான போரை ராஜபட்சே நடத்தி முடித்திருந்தாலும். வெளிப்படையாக அல்லாமல் ரணிலின் ஆட்சிக்காலத்தில் ஏவப்பட்ட மறைமுகப் போர் ஒரு சுகமான சுமையாக மக்கள் மீது ஏவப்பட்டதும் தெரிகிறது. இக்காலத்தில் வன்னிக்கு ஏராளமான வசதிகள் வந்த போது தன்னார்வக் குழுக்கள் என்ற போர்வையில் உள்நாட்டு, வெளிநாட்டு உளவாளிகள் வன்னிக்குள் நீள அகலமாக ஊடுறுயதும் இப்போது தெரியவந்திருக்கிறது. வன்னிக்கு அப்பால் பாலாலி விமான தளத்தை பிரதான தங்கு தளமாக கொண்டியங்கும் இலங்கை இராணுவம் பலாலியில் இருந்து தங்களின் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்ததே தவிற வன்னிக்குள் கடந்த முப்பதாண்டுகளில் இலங்கை இராணுவம் நுழைந்ததில்லை. முப்பதாண்டுகளில் இராணுவத்துக்கு நேரடியாக முகம் கொடுக்காத வன்னி மக்கள் புலிகள் தங்களை பாதுகாப்பார்கள் என்றே கடைசி வரை நம்பினார்கள்.வன்னி மக்களின் தாக்குதல் தளமாக இருந்த பலாலி விமானத்தளத்தை புலிகள் பல முறை தாக்க முயர்சித்தார்கள் சில முறை கடுமையாக அதை தாக்கிச் சிதைத்திருக்கிறார்கள். அதன் விமான ஓடுபாதைகளை சேதப்படுத்தி பலாலியை செயல்பட முடியாதபடி ஆக்கியும் இருக்கிறார்கள். ஆனால் பலாலியை பல முறை புனரமைப்புச் செய்து கொடுத்தது இந்தியாதான். பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை இலங்கை இராணுவம் நவீன போர்க்கருவிகளையோ அதி சிறந்த காமாண்டோ படைகளையோ திறமையான புலனாய்வுக் கட்டமைப்பையோ கொண்டிருக்கவில்லை. இலங்கையின் புலனாய்வுப் பிரிவிவை விட புலிகளின் புலனாய்வு பத்தாண்டுகளுக்கு முன்னர் திறம்பட இருந்தது. ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் புலிகளின் உளவாளிகள் இருந்தார்கள். அரசு நிறுவனங்களிலும் அவர்கள் ஊடுறுவி இருந்தார்கள். தங்களின் கமாண்டோக்களின் திறமையான இராணுவ நடவடிக்கைகளாலும் தற்கொலை தாக்குதலாலும் அவர்களுக்கு ஒரு விதமான பாதுகாப்பு இருந்ததும் உண்மைதான். இவ்விதமாய் கடந்த முப்பதாண்டுகளாய் வன்னி மக்கள் இலங்கை இராணுவத்தை வன்னியில் கண்டதில்லை. கிடுகுவேலிக் காலாசாரத்திற்குள் வாழ்ந்த அந்த மக்கள்தான் இன்று ஒட்டு மொத்த ஈழப் போராட்டத்தின் சாட்சியங்களாய் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். கிழக்கிலோ, யாழ்பாணத்திலோ திறந்த வெளி சிறைக்குள் அன்றாடம் கண்காணிப்புக்குள் வாழும் மக்களை விட இவர்களின் நிலை மோசமானது காரணம் இவர்கள் புலிகளோடு வாழ்ந்தார்கள் . அரசை எதிர்த்து போராடுகிற கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வாழும் மக்களின் நிலை என்னவோ அதுதான் வன்னி மக்களின் நிலையாகவும் இருந்தது.அவர்களின் எளிமையான நிலத்தோடு தொடர்புடைய விவசாய வாழ்வு சிதைக்கப்பட்டு இன்று அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். வன்னி மீதானப் போர். இது ஒரு பெரும் ஓட்டம் நிற்க நிழல் வேண்டி ஓடத்துவங்கி ஒவ்வொன்றாய் இழந்து கடைசியில் படுகொலையாகி எஞ்சிய மக்கள் வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்ட கதை வேதனையானது. இன்று அவர்களின் கதை முடிவில்லாத கேள்வியற்ற நிர்கதியான மனிதர்களின் கதையாக மாறியிருக்கிறது. இரண்டு வருட காலமாக நீடித்த இந்தப் போரின் முடிவு இவ்விதமாக இருக்கும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. யாரேனும் ஒருவர் இந்த சண்டியரை தடுத்து தங்களை மீட்பார்கள் என்று நம்பியிருந்தார்கள். மலைக்காலத்தில் துவங்கி கோடை கொழுத்தும் கோடையில் முள்ளியவாய்க்காலில் அவர்களின் கதை முடிவதாக இருந்தது. சாட்சியமற்ற இனப்படுகொலையின் மௌனசாட்சிகளாக அவர்கள் இன்று முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். நான்காண்டுகால அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து போரின் தொடக்கம் கிழக்கை கைப்பற்றுவதிலும் மாவிலாறை கைப்பற்றுவதிலுமே இருந்தது. மாவிலாறை அண்டிய பகுதிகளில் புலிகளின் அரண்களை அவர்கள் கைப்பற்றிய போது, வடக்கின் மீதான போரை அறிவித்தார்கள். உண்மையில் மாவிலாறு ஒரு மறைமுக சமிக்ஞையாகவே இராணுவத்தால் புலிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் புலிகள் அதை எந்த அளவுக்கு சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. இராணுவ ரீதியாக இலங்கை இராணுவத்தை எதிர் கொள்ளும் வலும் தெம்பும் தங்களுக்கு இருப்பதாக புலிகள் நினைத்திருக்கக் கூடும். மாவிலாறு படையினரிடம் விழுந்ததை ஒட்டு வன்னி மக்கள் மீதான போர் 2007 மார்ச்சில் துவங்குகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நடந்த மிக மிக கொடூரமான இந்தப் போர் 2009& மே 18 முள்ளியவாய்க்காலில் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இலங்கையில் முப்பதாண்டுகால ஆயுதப் போராட்ட வரலாற்றில் மூன்றாண்டுகளையும் கடந்து நடந்த போர் இதுதான். பெருந்தைகையான மக்கள் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்டதும் இந்த மூன்று ஆண்டுகளில்தான். இத்தீவில் சிங்களர்களும் தமிழ் மக்களும் இனி எப்போதும் ஒன்று பட்டு சேர்ந்து வாழும் சாத்தியங்கள் அறுந்து விழுந்து அம்மக்கள் வெற்றி கொள்ளப்பட்டு அடிமைகளாக்கப்பட்டதும் இந்தப் போரில்தான். மாவிலாறில் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் மோதல் வெடித்த போது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அதில் தலையிட எத்தனித்தார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பை இலங்கை அரசு கொடுக்கவே இல்லை அதே நேரம் தங்களின் இராணுவத் தந்திரங்கள் பின்னடவை சந்திக்கிறது என்பதை புலிகளும் உணரவில்லை. அது பிடறியில் அல்ல முகத்தில் விழுந்த அடி. அதை புலிகள் அவதானித்திருந்தால் இந்தப் போரின் போக்கு மாறியிருக்கக் கூடும். பெரும் அழிவை தவிர்த்திருக்கலாம். மணலாற்றில் நடந்தது ஒரு எச்சரிக்கைதான். மன்னாரில் 2006 ஜூலை மாதவாக்கில் தீவீரமான போது மன்னாரின் மேற்கு அடம்பன், ஆண்டாங்குளம், பெரியமடு போன்ற கிராமங்களில் அதிகளவான இடப்பெயர்வுகள் நடந்தது, இருபதாயிரத்துக்கும் அதிகமாக மக்கள் அங்கிருந்து வெளியேறி கிளிநொச்சி நோக்கி நகர்ந்தார்கள். அனைத்து சமூக மக்களாலும் நேசிக்கப்படும் மடு மாதா தேவாலயம் இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட போது அங்கிருந்த மாதா சிலை ஜூலை மாதத்தில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. பெருநிலப்பரப்பு என்று வர்ணிக்கப்பட்ட வன்னி நிலம் சுருங்கத் தொடங்கியது மன்னாரில் இருந்துதான் மன்னாரில் இருந்து ஓடத் தொடங்கி ஏ 32 சாலைவழியாக பூநகரியை அடைந்து அங்கிருந்து பரந்தனுக்கு வந்து ஏ 35 சாலைவழியாக புதுக்குடியிருப்பை வந்தார்கள் ஒரு தொகுதி மக்கள். இன்னொரு தொகுதியினர் பல் வேறு கிராமப்பகுதிகளினூடாகவும் ஏ 9 சாலையைக் கடந்தும் புதுக்குடியிருப்பு சந்திப்புக்கு வந்தார்கள் அல்லது முல்லைத் தீவிற்குவந்தார்கள். போர் நடவடிக்கை ஈவிரக்கமற்ற முறையில் இருந்ததாலும் கிட்டத்தட்ட நான்கு பெரும் பிரிவுகளோடு ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக சிப்பாய்களைக் கொண்ட பல் வேறு பிரிவுகளால் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராலும் மக்கள் கடந்து சென்ன பகுதிகள் எல்லாம் இராணுவத்தினர் வசம் விழுந்தது. ஊடறுத்தோ உடைத்தோ எதிர் தாக்குதல் நடத்துவதற்கான சந்தர்ப்பங்களே புலிகளுக்கு வழங்கப்பட வில்லை. அவர்கள் ஒரு தற்காப்பு யுத்தம் ஒன்றை நடத்துகிற சூழலுக்குள் நிரந்தரமாகவே தள்ளப்பட்டார்கள். எதிர்தாக்குதல் நடத்தவோ பல முனைத் தாக்குதல் நடத்தவோ புலிகளுக்கு வாய்ப்பும் வழங்கப்பட வில்லை. அவர்களை ஒன்று சேரவிடாமல் ஒரு படுபயங்கரமான போர் நெறியை இலங்கை இராணுவம் பயன்படுத்தியது. இப்போதைய போரில் புலிகள் சந்திப்பது இதுவரை அவர்கள் சந்திக்காத இலங்கை இராணுவத்தை . முந்தைய காலப் போரில் விழுந்த இராணுவத்தினப் பார்த்ததும் ஏனையவர்கள் ஓட்டிப் போகவில்லை. அவர்கள் யுத்த வெறி ஊட்டப்பட்ட சிப்பாய்களாக இருந்தார்கள்.மாதாந்திர ஊதியம் அரசு வேலை போதிய பயிர்ச்சி இன்மை இள வயது என்பதை எல்லாம் தாண்டி அவர்களுக்கும் சிங்களத் தேசீய வெறி ஊட்டப்பட்டிருந்தது. லால்கர் அனுபவம் விளைவு புலிகள் பின்வாங்கினார்கள் பின்வாங்கினார்கள் பின்வாங்கிக் கொண்டே இருந்தார்கள். மக்களும் அவர்களுடனே சென்றார்கள். அல்லது அழைத்துச் செல்லப்பட்டார்கள். மக்கள் இந்தப் போரின் கொடூரத் தன்மையை கிளிநொச்சி வரை உணரவில்லை. புலிகள் பெரும் தவறைச் செய்து இராணுவ ரீதியாகவோ அல்லது இன்னொரு நாட்டு ஒன்று தலையிட்டு போரை நிறுத்தும் என்றோ நம்பிக் கொண்டிருந்தார்கள். புலிகள் அமெரிக்காவை நம்பிக் கொண்டிருந்ததும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் மூலம் காங்கிரஸ் அரசு அல்லாமல் வேறு ஒரு அரசு அமையுமானால் அது போரை நிறுத்த வழி பிறக்கும் என்றோ நம்பியிருக்கிறார்கள். ஒரு போராளி அமைப்பு தனது இராணுவ பலத்தையோ, மக்களையோ, அரசியலையோ நம்பியதைக் காட்டிலும் ஏகாதிபத்தியங்களையும் பிராந்திய வல்லரசுகளையும் நம்பியிருப்பது எவளவு துர்பாக்கிய நிலை. இந்த இடத்தில் நாம் சரியாகச் சுட்டிக்காட்டினால் லால்கரில் மாவோயிஸ்டுகளைச் சொல்லலாம். கடந்த எட்டு மாதத்திற்கும் மேலாக மேற்குவங்க அரசிடம் இருந்து மாவோயிஸ்டுகள் விடுவித்து தங்களின் கட்டுக்குள் வைத்திருந்த லால்கரை ஒட்டிய பகுதியை மீட்கும் நடவடிக்கையை இந்திய இராணுவம் முன்னெடுத்த போது அவர்கள் இன்னொரு சக்தியின் தலையீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. நிலங்களை விட்டு விட்டு மக்களையும் விட்டு விட்டு ஜார்கண்டுக்கு நகர்ந்து விட்டார்கள். பத்து பொது மக்களின் மரணங்களுடன் லால்கரை மீட்டிருக்கிறது இந்திய இராணுவம். ஆனால் இந்த மீட்பு நடவடிக்கையின் போதும் அதற்குப் பின்னரும் மேற்குவங்கச் சூழலைப் பார்க்கும் போது அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மாவோயிஸ்டுகளுக்காகப் போராடுகிறார்கள், பழங்குடிகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். மாவோயிஸ்டுகளோ ஜார்கண்டில் இந்த படியே போராட்டம் தொடரும் என்கிறார்கள். பழங்குடிகளோ மிக வலுவான முறையில் மாவோயிஸ்டுகளை ஆதரித்து நிற்கிறார்கள். இந்தப் போர் மக்களை பலவீனமாக்க வில்லை மாறாக ஒரு வர்க்கப் போரில் மக்களின் பங்களிப்பை முன்னிலும் பார்க்க உறுதிப்படுத்தியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இராணுவ ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ மாவோயிஸ்டுகளை இந்திய அரசு வெல்ல நீண்ட போராட்டம் ஒன்றை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் போது. நடந்து முடிந்த வன்னிப் போரில் புலிகள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். என்பதோடு மக்களும் புலிகளிடமிருந்து மனம் வேறு பட்டி நிற்பதைக் காணமுடிகிறது. இன்று அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட ஒரு ஆயுதப் போராட்டத்தின் முடிவின் ஒரு பயங்கரவாத அரசின் கொடூர இரத்த வெறிக்கு பலியாகி நிற்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஜனவரி முதலாம் நாள் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்த அன்று சிங்கள இராணுவத்தினர் கிளிநொச்சிக்குள் நுழைந்து சிங்கக் கொடியை ஏற்றிய போது அந்த நகரமும் அதை அண்டிய கிராமங்களும் துடைத்து எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அப்படியானால் அவர்கள் திரும்பி வருகிற உத்தேசத்தோடு முல்லைத் தீவு நோக்கி சென்றிருக்கிறார்கள். முல்லைத்தீவும் புதுக்குடியிருப்பும் விழுந்த பிறகு செல்வதற்கு கடலைத் தவிற வேறு இடங்கள் ஏதும் இல்லாத சூழலில் முள்ளியவாய்க்காலில் இலங்கை இராணுவத்தின் பொறி வளைக்குள் சிக்கிக் கொண்டார்கள். பெப்ரவரி மாதவாக்கில் புதுக்குடியிருப்புக்குப் போன ஒரு கிளிநொச்சிப் பெண்ணின் வாக்குமூலம் இப்படியாக இருந்தது . ”நாங்கள் வன்னிப் பிரதேசத்து மக்கள். முதலில் எங்களையும் தமிழீழத்தின் ஏனையப் பகுதி மக்களுக்குமான வித்தியாசங்கள் உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே இங்கே நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையின் கோரத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் போரின் ஆரம்ப காலம் தொட்டே வன்னிப் பகுதிதான் அதன் இதயப்பகுதியாக இருந்து வந்திருக்கிறது. வடக்கு,கிழக்கின் எல்லாத் தமிழ் குடும்பங்களும் ஈழ விடுதலைப் போரில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தாலும் அங்குள்ள மக்கள் எல்லாக் காலத்திலும் அரசப் படைகளின் கண்காணிப்புக்குள்ளேயே வாழ நேர்ந்து வந்திருக்கிறது. ஆனால் வன்னி மக்களை மட்டும் புலிகளிடமிருந்து வேறு படுத்திப் பார்த்து விட முடியாது. ஒவ்வொரு வன்னிக் குடும்பமும் ஒரு புலிக்குடும்பமே. நாங்கள் யாரும் புலியாக பிறந்ததில்லை. புலியாக வேண்டும் என வளர்ந்ததும் இல்லை. இன்று தம்பியும், நானும் விரும்பியா சாகிறோம். அல்லது வேண்டி விரும்பி மரணத்தை நேசிக்கிறோமா? இல்லை நாங்கள் வாழ்வதற்காகவே போராடுகிறோம். வாழ்வதற்கான உரிமையை இந்திய அரசு உங்களுக்கு எப்படி வழங்கியிருக்கிறதோ அதே உரிமை எனக்கும் என் குழந்தைக்கும் உண்டு. ஆனால் ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் அதிலும் குறிப்பாக வன்னித் தமிழனுக்கும் வாழ்வதற்கான உரிமையை மறுத்து சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத் தூவி இந்தியாவின் ஆதரவோடு கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் வேகமாக ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது சிங்களப் பேரினவாதம். கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றிய போது நாங்கள் முல்லைத்தீவிற்குப் போனோம். எங்கள் உடமைகளையும், கால்நடைகளையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனோம். புலிகள் எங்களை முல்லைத் தீவிற்கு கடத்திச் சென்று விட்டதாக சிங்கள ராணுவம் சொன்னது. ஒரு வேளை புலிகளோடு நாங்கள் செல்லாமல் கிளிநொச்சியில் ராணுவத்தை வரவேற்றிருந்தால் இன்றைக்கு வவுனியாவிலும் மன்னாரிலும் என்ன நடக்கிறதோ அது எங்களின் தாய்வீடான கிளிநொச்சியிலேயே நடந்திருக்கும். நாங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயரத் துவங்கியது ஒரு மழைக்காலத்தில். சிங்களப் படைகளின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகள் சேரும் சகதியுமான சதுப்பு நிலத்திற்குள் சிக்கி கிட்டத்தட்ட பத்து நாட்கள் தடை பட்டபோது நாங்கள். பரந்தன் முல்லைத்தீவு ஏ&35 நெடுஞ்சாலையோரமாக குடும்பம் குடும்பாக இடம்பெயர்ந்தோம் ஏற்கனவே நாங்கள் கடும் யுத்த சூனியத்துக்குள் சிக்கியிருந்த படியால் இடப்பெயர்வுக் காலத்தில் உண்ண போதுமான உணவு எங்கள் யாரிடமும் இருக்க வில்லை. ஆனாலும் வழிநெடுகிலும் நாங்கள் நம்பிக்கையை மட்டும் இழக்க வில்லை. தருமபுரம், விசுவமடு, உடையார்க்கட்டு, புதுக்குடியிருப்பு என ஒவ்வொரு கிராமமாக போனோம். ஒவ்வொரு கிராமத்தையும் சிங்கள ராணுவம் ஆக்ரமித்தது. எந்த இடத்தை பிடிக்கப் போகிறார்களோ அந்த இடத்தை பாதுகாப்பு வலயமாக( sணீயீtஹ் க்ஷ்ஷீஸீமீ) அறிவிக்கிறது சிங்கள ராணுவம். நாங்களும் பாதுகாப்பு வலயமாக இருக்கிறதே என அங்கு செல்கிறோம். உண்மையில் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கை அரசு உருவாக்குகிற இடங்களுக்குள் செல்கிற மக்களின் கதி என்ன தெரியுமா? நரிவளைக்குள் போய் சிக்கிக் கொண்ட முயல்களுக்கு என்ன கதி நேருமோ அதே கதிதான் இன்று எங்களுக்கும் நேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு இடமாக ஓடினோம். ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் ஒதுங்கினோம். கிடைத்ததை உண்டோம். வள்ளிப்புனம், தேவிபுரத்திற்குப் போனோம்,( இவை இரண்டும் மக்கள் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடங்கள்) அங்கிருந்தும் கடைசியில் ஓட வேண்டியதாயிற்று. ஓடி ஓடி இப்போது நாங்கள் வந்து நிற்பது முல்லித்தீவின் கடைசி கடலோர சிறு நகரமான முள்ளியவாய்க்காலில், நாங்கள் இந்த ந்ந்திக்கடலுக்கு அருகில் வந்து சேர்ந்த போது கிளிநொச்சியிலிருந்து நாங்கள் எடுத்து வந்த எதுவும் எங்களுடன் இல்லை. கால்நடைகள், தார்ப்பாய்கள், என எதுவும் இல்லை அது மட்டுமல்ல ஒரு குடும்பத்தில் இன்னும் எஞ்சியிருப்பது ஒரு சில உயிர்கள் மட்டுமே.கண்ணெதிரில் குழந்தையை துளைத்துச் சாய்க்கிறது குண்டு. வீதியில் சாகிற இளையவளைத் தூக்கச் சென்றால் இருக்கிற இரண்டு குழந்தைகளையும் இழக்க நேரிடலாம் அதனால் நாங்கள் எங்கள் குழந்தைகளின் பிணங்களை அப்படியே விடுகிறோம். முல்லைத்தீவு முழுக்க வீதியோரம் புதைக்க ஆளில்லாமல் சிதறிக்கிடக்கிறது ஆயிரக்கணக்கான உடல்கள். அத்தனையும் பாதுகாப்பு வலயத்திற்குள் வீசப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளால் எரிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள், தமிழர்கள் என்பதால் எரிந்து சாம்பாகிக் கிடக்கிறார்கள். இப்போது நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் உறவென்று சொல்லிக் கொள்ளவோ,தஞ்சமடையவோ எங்களுக்கென்று ஒரு இடமில்லை. கடைசியில் எதிரியிடமே சரணடைந்தால் என்ன என்று விசுவமடுவில் நாங்கள் கைகளைத் தூக்கினோம். யாழ்பாணத்தையும். மட்டக்களப்பையும் சிங்கள ராணுவம் கைப்பற்றிய போது அங்குள்ள மக்களை எப்படி அவரவர் இல்லத்தில் குடியமர்த்தி மொத்தமாக அந்தப் பிரதேசங்களை திறந்த வெளிச்சிறைச்சாலையாக்கினார்களோ அப்படி எங்களையும் எங்கள் பூர்வீக நகரமான கிளிநொச்சிக்கு அனுப்புவார்கள் என நம்பினோம். ஆனால் நாங்கள் எங்கு சரணடைந்தோமோ அந்த இடத்திலேயே எங்கள் பிள்ளைகள் இருவேறாக பிரிக்கப்பட்டார்கள். குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், என வடிகட்டினார்கள் அதில் குழந்தைகளையும், முதியவர்களையும் எங்கோ கொண்டு சென்றார்கள். இளைஞர்களையும் இளம் பெண்களையும் சிறப்பு முகாம் என அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவிற்கு கொண்டு சென்றார்கள். எத்தனை பேர் சரணடைந்தார்கள் என்றோ அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றோ எந்த விபரமும் யாருக்கும் தெரியாது. கிளிநொச்சியில் ஒரு குடும்பம் கூட குடியமர்த்தப்படவில்லை. ஆனால் வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். பெண்களை அவர்கள் அபகரிக்கிறார்கள் எங்களுக்கு மாற்று உடைகள் இல்லை உள்ளாடைகள் இல்லை ஏனைய ஆண்களுக்கு முன்னால் சகஜமாக நடக்கக் கூட கூச்சமான ஒரு வாழ்வையே நாங்கள் வாழ்கிறோம். எங்களின் ஆடைகள் எல்லாம் ரத்தக் கறைகள். இப்போது என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. புலிகளும் அழிகிறார்கள் நாங்களும் அழிகிறோம்.” என்று நீண்டு செல்கிறது அந்த வாக்குமூலம். இன்றைக்கு சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது இந்த வாக்குமூலம் மிகைப்படுத்தப்பட ஒன்றாக தெரியவில்லை. சமாதானக் காலத்தில் அங்கு ஏராளமான தன்னார்வக்குழுக்கள் பணி செய்து வந்தார்கள். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும் தன்னார்வக்குழுக்களும் அங்கு பல் வேறு பணிகளை ஆற்றி வந்தார்கள். சமாதானத்திற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்ட பிறகு முதன் முதலாக அங்கிருந்து யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் வெளியேறினார்கள். ஐநாவின் மனித உரிமை கண்காணிப்பகமும் அங்கிருந்து வெளியேறியது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை போர் பகுதிக்குள் இராணுவம் அனுமதிக்க வில்லை இருந்தவர்களையும் வெளியேற்ற நெருக்கடிகளை உருவாக்கி வந்தது. சில மருத்துவர்கள், சர்வதேசப் பணியாளர்களும் மக்களோடு மக்களாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்னும் சூழலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி தமிழக உறுப்பினர்கள் போர் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது வெறும் எழுபதாயிரம் மக்களே போர் பகுதிக்குள் சிக்கியிருப்பதாகச் சொன்னார். பிரணாப் இலங்கையிடம் என்ன தகவலைக் கேட்டாரோ அந்த தகவலை மறு திருத்தமோ விசாரணையோ இன்றி அப்படியே இந்திய மக்களுக்குச் சொன்னார். இரண்டு லட்சம் மக்கள் போர்ப் பகுதிக்குள் சிக்கியிருக்க எழுபதாயிரம் பேருக்கு மட்டுமே போதுமான உணவு நீண்ட இடைவெளி விட்டு அனுப்பப் பட்டது. அது சுத்தமாக அவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் பட்டினிச்சாவுகள் மிக அதிக அளவில் அங்கு நடந்திருக்கிறது. குழந்தைகள் ஊட்டச் சத்தில்லாமல் இறந்தது போக முதியோர்களும் கடும் மன நெருக்கடியிலும் குண்டுக் காயங்களிகும் மடிந்தார்கள் இன்றும் மடிந்து கொண்டிருக்கிறார்கள். மே 14&ஆம் தேதி வரை புதுமாத்தளன் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. நான் அன்றாடம் நள்ளிரவில் தொலைபேசி செய்து மக்களின் நிலை குறித்து விசாரித்து வந்தேன். அங்குள்ள தாதிகள் சிலரிடமும் பிரதான மருத்துவப் பணியாளர்கள் சிலரிடம் என்னால் கடைசி நேர தொடர்புகள் பேணப்பட்டிருந்தது அனால் 16&ஆம் தேதி நான் மருத்துவமனை எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அந்த எண் செயலிழந்திருந்தது. அதற்கு முன்னர் பேசிய போதெல்லாம் நாங்கள் செயலிழந்து கொண்டிருக்கிறோம். எங்களின் மருத்துவர்கள் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் காயமடைந்தவர்களை இங்கு கொண்டு வரவோ அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவோ எங்களால் இயலவில்லை கடும் எரிகணைத் தாக்குதலில் நாங்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம். ஏதாவது அற்புதங்கள் நடந்தால் மட்டுமே மீதியிருக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என்று அங்கே கடைசியாக பணியிலிருந்த ஒரு தாதிப் பெண் என்னிடம் குறிப்பிட்டார். அவர் சொன்னக் கணக்கில் பிணங்கள் மட்டும் பல ஆயிரங்களைத் தாண்டி இருந்தது. அங்கிருந்து கடைசியாக வந்த புகைப்படங்களும் கனரக ஆயுதங்களின் பிரயோகிப்பட்டதை உறுதிப்படுத்தின.ஆனால் இந்தியாவும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் அங்கே கனகர ஆயுதங்கள் பயன்படுத்த வில்லை என்று தொடர்ந்து சொல்லி வந்தனர். கலைஞர் தன் உண்ணாவிரதத்தை ஒட்டி அந்த கோடூரமான இறுதிப் போரை இப்படி வர்ணித்தார் ” மழை விட்டும் தூரல் இன்னும் விட வில்லை ” என்றார். கிளிநொச்சியில் இருந்து தங்கள் வீட்டின் நிலைகளைக் கூட பெயர்த்துக் கொண்டு டிராக்டர்களிலும் மாட்டு வண்டிகலிலும் இரு சக்கர வாகனங்களிலுமாக குழந்தைகள், பெண்கள், ஆண்கள், அவர்களுக்கான உடுதுணிகள், குடைகள், சமையல் பாத்திரங்கள், உழவு இயந்திரங்கள், நகைகள், பணம், கால்நடைகள், கோழிகள், நாய்கள் என வீட்டுப் பிராணிகளையும் எடுத்துக் கொண்டு சென்றவர்கள் இப்போது உடுத்த துணியோடு எஞ்சிய தங்களின் உறவுகளைச் சுமந்தபடி இராணுவ முகாமகளை நோக்கி வந்தார்கள். அவர்கள் நந்திக்கடலைக் கடக்க வேண்டியிருந்தது . அது ஒரு வேதனையாக திரும்புதல். முல்லைத்தீவு கடலில் தரையிரங்கும் முயர்ச்சியின் போது பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டு கடைசியாக அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலையமும் உடைக்கப்பட்டபோது புலிகள் சில நூறு அடிகளுக்குள் குறுகிய எல்லைக்குள் முடக்கப்பட்டார்கள் மக்கள் உடைக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்திலிருந்து வெளியேறத் துவங்கினார்கள். குற்றுயிரும் குலையிறுமாக அவர்கள் நந்திக்கடலை கடக்க வேண்டியிருந்தது. வயது முதிர்ந்த முதியவர்களை நந்திக்கடலில் வழியே மீட்டு வர முடியாத சூழலில் பெரும் வேதனையோடு தாய்மார்கள் குழந்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களை கைவிட்டபடியே கடந்து வந்தார்கள். பலரும் தங்களின் முதிய தாய்களை இவ்விதமாய் வேதனையோடு கைவிட்டதை நினைவு கூர்கிறார்கள். அவர்கள் இப்போது என்ன ஆனார்கள் என்ற தகவல் யாரிடமும் இல்லை. வருகிற வழியில் நந்திக்கடலில் ஏராளமான பிணங்கள் மிதந்ததையும் பலர் அந்த நீரேரியிலேயே விழுந்து மடிந்ததையும் காயங்களுக்கு மருந்தில்லாத சூழலில் வருகிற வழியிலேயே நடக்க முடியாமல் காவிச் செல்வதற்கான கழிகள் கூட இல்லாமல் பலரும் மடிந்திருக்கிறார்கள். பசி, காயம், மனநலப்பாதிப்பு, உடல் உபாதைகள், நீண்ட கால ஓட்டம் என எல்லாமே அவர்களை நிர்கதியாய் கொண்டு வந்து சிங்களச் சிப்பாய்களிடம் நிறுத்தியது. இன்று அவர்கள் முகாம்களுக்குள்.
Friday, July 17, 2009
பெரியாரைப் பிழையாமை - கோவி. லெனின்
அரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் - டாக்டர் அம்பேத்கர்
உலக அரங்கில் ஜாதியை மறைக்கும் இந்தியாஅய்.நா. அவையில் சாதிய விவாதத்தை – பா.ஜ.க. அரசைப் போலவே தடுத்த காங்கிரஸ் அரசு
இனவெறிக்கு எதிரான உலகளாவிய மாநாடு 2001 ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்றது. இம்மாநாட்டு முடிவுகளை நடைமுறைப்படுத்தியது பற்றி மதிப்பீடு செய்ய, ஜெனிவாவில் அய்க்கிய நாடுகள் அவை அண்மையில் (ஏப்ரல் 20 – 24, 2009) கூட்டிய மாநாடு உப்புச் சப்பற்று முடிவுற்றது. இஸ்ரேலை எதிர்த்து ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாத்தின் அறிக்கை மீதான உரத்த சப்தம், அதனைத் தொடர்ந்த அவரது வெளிநடப்பையும் தவிர்த்து, இம்மாநாடு பற்றிய வேறு எந்தச் செய்தியையும் வெகுஜன ஊடகங்கள் வெளியிடவில்லை. டர்பன் மாநாடு நடைபெற்றபோது மாநாட்டின் விவாதப் பொருள், எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக எழுந்த கடுமையான விவாதங்களை பல வாசகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இச்சூழலில், எட்டாண்டுகளுக்குப் பிறகு இனவெறி, இது தொடர்பான பிற பாகுபாடுகள் குறித்த முதல் உலக மாநாடு சலனமற்று முடிவுற்றது மிகுந்த வியப்பை அளிக்கிறது. செப்டம்பர் 2001இல் இனவெறியின் ஒரு குறிப்பிட்ட வடிவமே சாதிப் பாகுபாடு என்ற இந்தியர்களின் கோரிக்கை பெரும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அப்போது மய்ய அரசில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு டர்பன் மாநாட்டு ஆவணங்களில், தனது ‘வளரும் வல்லரசின்' அதிகார தந்திரம் மற்றும் சட்ட, தர்க்க அளவிலான வாதங்கள் மூலம், சாதி தொடர்பான எந்தக் குறிப்பையும் முற்றாக இடம் பெறாமல் கவனமாக பார்த்துக் கொண்டது. அரசின் இந்நிலைப்பாட்டிற்குப் பின்னால் இந்தியாவை பன்னாட்டு ஆய்விற்கு உட்படுத்துவதற்கான எதிர்ப்பில், இந்து தேசியம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்வையில் மறைந்திருந்தது என்பது வெளிப்படையான ஒன்று.இனவெறி, இனப்பாகுபாடு, அந்நியர் மீதான காழ்ப்புணர்வு, சகிப்பின்மை ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்ற மாநாட்டில் சாதிப் பாகுபாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிய தலித் ஆர்வலர்கள் சமகால உலகில் பிறப்பு, தொழில் மற்றும் சமூகக் குழுவமைப்பின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் பாகுபாடு – வெளிப்படையாகவும் முதன்மையா கவும் உள்ளதென வாதாடினர். சாதிப் பாகுபாடு, அரசமைப்புச் சட்டம் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளையும் மீறி இந்தியாவில் உள்ள மக்களை பாதிப்பதுடன், தெற்காசிய நாடுகளில் உள்ள பிற மக்களையும் பாதிக்கிறது.இந்து மத பழக்க வழக்கங்களை உலகளாவிய ஆய்விற்கு உட்படுத்த, இந்து தேசியவாத பாரதிய ஜனதா அரசு அனுமதிக்க மறுத்தது தெரிந்த ஒன்றே. ஆனால் எட்டரை ஆண்டுகளுக்கு மேலான பிறகும்கூட, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முந்தைய அரசைப் போலவே டர்பன் மறு சீராய்வு மாநாட்டில் சாதிப் பாகுபாடு தொடர்பான எந்த ஒரு விவாதத்தையும் அனுமதிக்காமல் விடாப்பிடியாக இருந்துள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க வந்த 40 அரசு சாரா அமைப்புகளில் தலித் மற்றும் சிறு தேசிய இனத்தைச் சார்ந்த 33 அமைப்புகளை, இந்திய அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்க விடாமல் தடுத்தது மட்டுமின்றி, முந்தைய பாரதிய ஜனதா அரசு சாதி தொடர்பான குறிப்புகளை இம்மாநாட்டு ஆவணங்களில் இடம் பெறாமல் செய்த நிலைப்பாட்டையே இப்போதும் எடுத்துள்ளது.இந்திய அரசமைப்புச் சட்டம் சாதி பாகுபாட்டை தடை செய்துள்ளது. அதே வேளையில் இப்பாகுபாட்டிற்கு ஆட்படுவோருக்கு உதவிட பல வழிகளையும் வகுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. செய்யத் தவறிய பல நடவடிக்கைகளை தவிர்த்து இதுபோன்ற பாகுபாடுகளை எதிர் கொண்டுள்ள பல நாடுகளை விட, இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பாகவே உள்ளன. எனினும் சாதியச் சிந்தனையோடு செயல்படும் அரசு அதிகாரிகளும் சாதி எதிர்ப்புச் சட்டங்களை மழுங்கடிக்கச் செய்ய அரசும், அதன் நிர்வாக அமைப்புகளும் தொடர்ந்து துணை புரிவதும் மறுக்க முடியாததே.சாதிப் பாகுபாடு நமது சமூகத்தில் ஆழமாக நிலைப்பெற்றுள்ளது. நடுநிலையான அரசு நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அது பரவியுள்ளது. இந்திய அரசு விடாப்பிடியாக உலகளாவிய அமைப்பின் முன் சாதியம் தொடர்பான சங்கதியை விவாதிக்க விடாமல் தடுத்துள்ளது, ‘உயர் சாதி' இந்தியாவின் ஒழுக்கக்கேட்டின் அடையாளம் என குற்றம் சாட்டுவதில் துல்லியமான காரணிகள் உள்ளன.இச்சமூக எதார்த்தத்தை மறுப்பதில் எவருக்கும் நன்மை இல்லை. இதனை மறுப்பதன் மூலமே மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் பிற பிரச்சினைகளை கையிலெடுப்பதையும், உலகளாவிய அழுத்தத்தை தவிர்க்கவுமே என்றால் அது முடியாது. குறைகளையும், தவறுகளையும் நேர்மையுடன் ஒப்புக் கொள்வதே தவறுகளை திருத்திக் கொள்ள மேற்கொள்ளும் தேவையான நடவடிக்கையாகும். மேலும், இது மேற்கத்திய நாடுகளின் தூதரக மேலாதிக்கத்தைத் தவிர்க்கவும், எதிரிகளை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவும் உதவும். இதுவே உள் நாட்டில் சாதி எதிர்ப்பு இயக்கங்களை வலுப்படுத்தவும் வெளிநாட்டில் உள்ள தலித் மக்களை ஆதரிப்பதாகவும் இருக்கும். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டையே காங்கிரஸ் அரசும் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது என்றாலும், இந்நாட்டின் அடுத்த அரசை தேர்ந்தெடுக்க உள்ள பொதுத் தேர்தல் சூழலில் இங்கு இது பற்றிய பொது விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்பது வியப்புக்குரியதாக உள்ளது.டர்பன் மாநாடு சாதிப் பாகுபாடு குறித்து சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறிவிட்டபோதும், பாலஸ்தீனியர்கள் சந்திக்கும் பாகுபாடு மற்றும் ஒதுக்கப்படும் நிலை தொடர்பாக நீர்த்துப் போனதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்து, தொடர்ந்து மாநாட்டு நடவடிக்கைகளையும் புறக்கணித்துள்ளன. ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போலந்து போன்ற நாடுகளும் இப்புறக்கணிப்பில் கலந்து கொண்டுள்ளன. யூத ஆதிக்கமும் இனவெறியும் ஒன்றே என்று கண்டனம் எழுந்துள் ளதும், அதனைத் தொடர்ந்த வெளிநடப்பும் இந்நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு தத்தம் நாடுகளில் இனவெறி, இனப்பாகுபாடு, அந்நியர் மீதான காழ்ப்புணர் வுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவியுள்ளன.அரபு மற்றும் இஸ்லாமியர் மாநாட்டு அமைப்பின் தூதரக உறவு பலத்தால் இனவெறி ஆவணங்களில் பாலஸ்தீனம் இடம் பெற முடிந்த நிலையில், உலக அரங்கில் தலித் அமைப்புகளின் வலிமையற்ற, நீர்த்துப் போன இயக்கங்களால் சுமார் 30 கோடி மக்களை பாதிக்கும் பாகுபாடு மட்டும் இவ்வாவணத்தில் இடம் பெற முடியாமல் போய் விட்டது. Economic & Political Weekly-ன் தலையங்கம் (மே 16, 2009) – தமிழில்: பொழில்
Wednesday, July 15, 2009
ஆதவன் தீட்சண்யா - பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு
அன்புள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கு,நான் உங்களைப் போல போலி மார்க்ஸிய அடிமையல்ல. மாறாக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக பழங்குடி மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டவனும், நந்திகிராமில் மார்க்ஸ்சிஸ்டுகளால் கொல்லப்பட்ட விவசாயத் தோழர்களின் மீதான படுகொலைகளுக்காகவும், மேற்குவங்க மார்க்சிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு இன்று வேட்டையாடப்படும் ஒரு இனமாக மாறியிருக்கிற பழங்குடி இனத்தின் இன்னொரு பிரிவில் பிறந்தவன் என்கிற முறையிலுமே இதை உங்களுக்கு எழுத நேர்ந்தது.நீங்கள் தமிழ் நதிக்கு எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்தது. அவரைப் போட்டு காய்த்து எடுத்து விட்டீர்கள். இதற்கெல்லாம் அவரிடம் என்ன பதில் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்னும் நிலையில் என்னிடம் சில பதில்கள் இருக்கின்றன. அதைப் பதில்களாக நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி இல்லை வழக்கம் போல இதெல்லாம் புலிக் கோஷம் என்று நிராகரித்தாலும் சரி எமக்கு அது குறித்து கவலை இல்லை. மதுரையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் காரசாரமான உரையாடலின் போது தமிழ்நதி ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்று உங்களைக் கேட்டதாகவும், நீங்கள் அதற்கு ‘‘நீங்கள் மலையக மக்களையும், தலித்துக்களையும் முஸ்லீம்களையும் எப்படி நடத்தினீர்கள்? ஏனைய அமைப்புகளைக் கொன்றீர்கள்? உங்களுக்காக ஏன் நாங்கள் பேச வேண்டும். அதை எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்?’’ என்று பேசியதாக நண்பர்கள் சொன்னார்கள். சத்தியமாக தமிழ்நதி சொல்லவில்லை.நீங்கள் பேசியது குறித்து தேவேந்திரபூபதியிடம் கேட்டபோது, அவர் தமிழ்நதிக்கும் ஆதவனுக்குமிடையிலான விவாதத்தில் வந்தது என்று சொல்லிவிட்டு பிஸியாக இருப்பதாகவும், அப்புறம் பேசுவதாகவும் சொன்னார். நான் அவரை விட பிஸியாக இருந்தேன் என்பதைத் தாண்டி இதை அவர் பேச விரும்புகிறாரோ இல்லையோ என்பதால் அதை விட்டு விட்டு இதை எழுதத் துவங்கிவிட்டேன்.நீங்கள் பேசியது உண்மை என்றால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உங்கள் பேச்சு மிக ஆபாசமானது. ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு, தினந்தோறும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படும் ஓர் இனம் குறித்த உங்களின் இந்தப் பேச்சு தலித் அரசியலின் பெயரால் நீங்கள் செய்த ஆபாசமான வன்முறை. புலிகளின் தவறுகளை மட்டுமே வைத்தும் ஈழத்தின் ஆதிக்க சாதி அமைப்பை வைத்தும் நிகழ்காலத்தில் நடந்துள்ள மாபெரும் இனவெறிக் கொலைகளை, கொடுமைகளை மறைப்பீர்கள் என்றால், நீங்கள் ஈழம் என்கிற கருத்துருவையே மறுக்கிற நிராகரிக்கிற பார்ப்பன தலைமையிலான உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் நின்று கொண்டு தலித் அரசியலை துணையாக்கி உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்று கூறுகிறேன்.தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு தொடர்பாக வலதுகளுக்கும் இடதுகளுக்கும் ஏராளமான முரண்கள் உண்டு. புதிய தேசம் ஒன்று அதுவும் வலதுசாரிக் கொள்கை கொண்ட தேசம் ஒன்று உருவாவதை மார்க்ஸிஸ்டுகள் நீங்கள் விரும்பமாட்டீர்கள். இன்னும் சொல்லப்போனால் பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமை என்ற மார்க்ஸிய கோட்ப்பாட்டைக் கூட உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்கிற நிலையில், நாம் தேர்தல் பரபரப்பில் இருந்தபோது, அங்கே வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது சிங்களப் படைகள். ‘சண்டையை நிறுத்து; பேச்சுவார்த்தை நடத்து’ என்று இன்று லால்கரில் ஒலிக்கிற உங்கள் குரல் ஈழத்திற்காக ஒலிக்கவில்லை.தமிழ் மக்களை புலிகள் பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். லால்கரில் ஐம்பது கிராமங்களை இராணுவம் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றி விட்டது. அந்த கிராமங்களின் பெரும்பங்கு மக்கள் மாவோயிஸ்டுகளோடு ஜார்க்கண்ட் காடுகளை நோக்கி நகர்ந்து விட்டார்கள். அந்த ஆதிவாசிகள் எப்படி மாவோயிஸ்டுகள் இல்லையோ - ஆனால் மார்க்ஸ்சிஸ்டுகள் செய்த துரோகம் எப்படி அவர்களை மாவோயிஸ்டுகளை நோக்கி நகர்த்தியதோ - இராணுவம் துரத்தும் போது சிக்கினால் சீரழிந்து விடுவோம் என்று எப்படி மாவோயிஸ்டுகளோடு சென்றார்களோ, அப்படியே வன்னி மக்களும் புலிகளுடன் போனார்கள். அதுதான் உண்மை. வன்னி மக்கள் எல்லாம் புலிகள் என்றோ ஈழ மக்கள் எல்லோருமே புலிகள் அமைப்பில் குப்பி சுமந்தவர்கள் என்றோ யாருமே சொல்லவில்லை. அவர்கள் சிங்களனை விட புலிகள்தான் தமக்கு பாதுகாப்பானவர்கள் என்று நம்பினார்கள். அதுதான் உண்மையும் கூட.இந்தியா, கம்யூனிச சீனா, பாகிஸ்தான், ஈரான், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பிராந்திய, ஏகாதிபத்திய வல்லரசுகளின் கூட்டு இராணுவ பலத்துடன் மோதிய புலிகளால் அவர்களையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பதோடு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் அப்போரின் கசப்பான முடிவு. உண்மையில் இலங்கை அதன் உண்மையான இராணுவ பலத்தோடு புலிகளை எதிர்கொண்டிருந்தால் கிழக்கையும் மீட்டிருக்க முடியாது வடக்கையும் மீட்டிருக்க முடியாது என்பதோடு இந்தப் போரின் முடிவில் பெரும் அழிவை இலங்கை இராணுவம் சந்தித்திருக்கும் என்பதுதான் இராணுவ யதார்த்தம். ஆனால் அரசியல்? அது துளி கூட புலிகளிடம் இல்லையே? அழிவுக்குப் பிறகு இன்றைக்கு புலி ஆதரவாளர்கள் சொல்கிற அரசியல் போராட்டம் என்கிற கருத்தை மூன்று வருடங்களுக்கு முன்பே, செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலேயே நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இராணுவ வாதத்தால் எல்லாவற்றையும் வெல்லலாம் என்ற புலிகளின் மிதமிஞ்சிய நம்பிக்கையும் இந்த கசப்பான முடிவுக்கு ஒரு காரணம். இதை நாம் நெடுமாறன் அவர்களிடமிருந்தோ அல்லது சீமான் பேசியோ, அல்லது வரதராஜனிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் யதார்த்தம்.இன்றைக்கு மாவோயிஸ்டுகளை அரசியல் ரீதியாக வெல்ல வேண்டுமே தவிர அதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியாது என்று மேற்குவங்கத்தில் சொல்ல வேண்டிய கசப்பான யதார்த்தத்துக்கு வந்திருக்கிற நீங்கள் ஈழம் என்று வந்தால், புலிகள் என்று வந்தால் புலி எதிர்ப்பின் பெயரால் சிங்கள வெறியர்களுக்கு காவடி தூக்குகிறீர்கள். சமீபத்தில் லீனாமணிமேகலை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பிரான்சில் இருந்து வந்திருந்த சுகன் சிங்களர்களின் தேசிய கீதத்தை பாடித்தான் தன் உரையை தொடங்கினார். (வாங்குன காசுக்கு ரொம்பத்தாண்டா கூவுறான் கொய்யால). ஆனால் அப்படி பாடுவதற்கு முன்னால் புலிகளையும் அவர்களுக்காக பாடல்கள் எழுதிய காசி ஆனந்தன் அவர்களையும் தன் அறிவால் உடைத்துத் தகர்த்து விட்டே இந்த மொள்ளமாரித்தனத்தை செய்தார் சுகன். மகாசேனனும், துட்டகைமுனுவும் பண்டாரவன்னியனையும், எல்லாளனையும் வென்றதைவிட கடினமான வெற்றி என்று தமிழ்மக்களை வென்றதை ஒரு வார விழாவாக கொண்டாடச் சொன்னான் பயங்கரவாத ராஜபட்சே. அதை சிங்கள தேசிய கீதத்தை சென்னையில் பாடி கொண்டாடிவிட்டுப் போனார் சுகன்.தேசத்துரோகிகளும், மறுத்தோடிகளும் எப்படி ஒரு தேசத்தின் அதுவும் பாசிச பயங்கரவாத தேசத்தின் கீதத்தை பாட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்ப்பற்று என்று தாங்கள் நம்புகிற ஒன்றிற்காக, தமிழர், தமிழினம் என்று உணர்வுப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிற ஒன்றிற்காக ஆவேசமாகப் பேசும் தமிழகத்து ஈழ ஆதரவாளர்களை வைத்தே நீங்கள் ஈழ விடுதலையை அணுகுறீர்கள். புலிகளின் தோல்வியில் ஒட்டு மொத்தமாக சிதைக்கப்பட்டுக் கிடக்கும் மக்களின் பிணங்களின் மீது நின்று சிங்கள தேசியகீதத்தைப் பாடும் சுகன் போன்றோருக்கும், உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் எனக் கேட்கும் உங்களைப் போன்ற தலித்தியப் பார்வை கொண்ட மார்க்ஸ்சிஸ்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?புலி எதிர்ப்பு குறித்தும் இலங்கை இறையாண்மை குறித்தும் இன்றைய சூழலில் பேசுவதில் தான் ஆதாயம் அதிகம். புலி எதிர்ப்பு என்கிற கருத்துக்காக இலங்கை அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை புலத்தில் கொட்டுகிறது. சிங்கள தேசிய கீதத்தை பௌத்த மரபுக்குள் நின்று பாடுகிற சுகன்கள்தான் இன்றைய இலங்கைச் சூழலில் ஆயிரம் கருணாக்களுக்கு சமம். ஷோபாசக்தியோ, ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள் என்று நான் நம்பவில்லை. பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் புலி ஆதரவாளர்களுக்கு புலிகள் காசு கொடுப்பார்கள் என்பதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை. அவர்கள் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வார்களே தவிர அவர்கள் யாருக்கும் கொடுத்தார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஆனால் புலத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் இங்கு புலிகளை எதிர்ப்போர், ஆதரிப்போர் என இருசாராரையுமே அங்கு அழைத்து விருந்து வைப்பதும் கவனிப்பதும் இருந்தது. அந்த வகையில் சிலர் புலத்திற்கு அழைத்தவர்களுக்கு நன்றியாக செயல்படுகிறார்கள். காப்பி கோப்பை கழுவியும், கார்பெட் துடைத்தும், டாய்லெட் க்ளீன் பண்ணியும் சம்பாதித்த காசில் இங்கிருந்து போய் வந்த சில புலி ஆதரவாளார்கள் இந்தத் தேர்தலின்போது புலிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தார்கள் என்பதைக் குறிப்பிடுவதோடு புலி ஆதரவாளர்களை விட புலி எதிர்ப்பாளார்களுக்கு கிடைக்கிற அனுகூலம் அதிகம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தன்னார்வக்குழுக்கள், இலங்கை அரசு என பலதரப்பிலும் பணம் கொடுக்கிற ஒரு துறைதான் புலி எதிர்ப்பு. புலிகளின் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டத்தையோ, சகோதரப் படுகொலைகளையோ, சிறுபான்மை முஸ்லீம்களை துரத்தி விட்டதையோ - மாற்றுக்கருத்தோ கண்டனமோ இல்லாமல் நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என நினைக்கிறீர்களா? (புலிகளுக்கு மட்டுமல்ல அங்கு ஆயுதம் தூக்கிய எல்லா போராளிக் குழுக்களுக்குமே தெளிவான விடுதலைப் பார்வை இருந்ததில்லை.) இந்தியாவை நம்பியே ஈழப் போரை துவங்கினார்கள். சகோதரப்படுகொலையில் புலிகள் நடந்து கொண்ட விதத்தைத் தவிர, ஏனைய அமைப்புகளை விட புலிகள் சிறந்தவர்கள்தான். என்னைக் கேட்டால் நான் பார்த்த தலைவர்களுள் என்னைக் கவர்ந்தவரும், என்னில் நிறைந்திருப்பவரும் பிரபாகரன்தான். நீங்கள் ஆசியாவின் சேகுவேரா என்று பிரபாவை நக்கல் செய்தாலும் உண்மை அதுதான். தன்னையும் தன் பிள்ளைகளையும் களத்தில் பலியாக்கி வீரமரணமடைந்த பிரபாகரன், (பிரபாகரன் சரணடைந்து கெஞ்சினார்; உயிர்ப்பிச்சை கேட்டார் என்றெல்லாம் புலி எதிர்ப்பு சகோதரக் குழுக்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது தனி) - இலங்கைக்கு எதிராக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்த க்யூபாவின் முன்னாள் போராளியான சேவோடு பிரபாகரனை ஒப்பிடுவதல்ல விஷயம் - உண்மையில் பிரபாகரன் என்கிற பிம்பம் ‘சே’வை தமிழக இளைஞர்களிடம் காலியாக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் யதார்த்தம்.புலிகள் மீதான விமர்சனங்களை ராஜபட்சேவின் தோள்களில் நின்று கொண்டு பேசுவதையோ, பாரதமாதாவின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு பேசுவதையோ நாங்கள் விரும்பவில்லை. காரணம் எமது மக்களை கொன்றொழித்தவர்களை நாம் எப்படி நண்பர்களாகக் கொள்ள முடியும்? இந்தப் போருக்குப் பிறகு ஒரு பேரினவாத, பயங்கரவாத அரசாகவே நான் ராஜபட்சேயையும் இலங்கை அரசையும் பார்க்கிறேன். இனி எப்போதும் தமிழ் மக்கள் சிங்களர்களுடன் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் இல்லை. ஆனால் இங்குள்ள சி.பி.எம் வரதாராஜனும், பிரகாஷ்காரத்துக்களும் இலங்கையின் இறையாண்மை குறித்தே கவலைப்படுகிறார்கள். விளைவு மேற்குவங்கத்திலும், கேரளத்திலும் உங்களின் கட்சி இறையாண்மை களவு போனது. மேற்கு வங்கத்தில் வரக்கூடிய காலங்களில் உங்கள் கட்சி அப்புறப்படுத்தப்படும்.பட்டாச்சார்யாக்களும், நாயனார்களும், யெச்சூரிகளும், நம்பூதிரிகளும், பிரகாஷ்காரத்துக்களும், பாப்பா உமாநாத்துக்களும், வாசுகிகளுமான பார்ப்பன தலைமையே மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலைமை. கேரளத்தில் அச்சுதானந்தன் தலித் என்று நீங்கள் சொல்லலாம். பாவம் என்ன செய்வது? மக்கள் செல்வாக்குப் பெற்றிருக்கும் அச்சுதானந்தனுக்கு கட்சியில் செல்வாக்கில்லை. கட்சி ஊழல் மன்னன் பிரணாய் விஜயனையே கொண்டாடுகிறது. விளைவு அச்சுதானந்தன் தனிக்கட்சி துவங்கும் ஆலோசனை கூட நடத்தினார்.நீங்களும் நானும் நம்பக் கூடிய தலித் அரசியலின் உரையாடலை நீங்கள் ஈழத்துக்கு எதிராக, புலிகளுக்கு எதிராக, எளிய தமிழ் மக்களின் இந்துக் கதையாடலுக்கு எதிராக வைத்து தமிழ் அரசியலை உடைத்தெறிகிறீர்கள். சிங்களப் பேரினவாதத்திற்கு மாறாக தமிழ்ப் பேரினவாதம் என்ற ஒன்றை முன்வைக்கிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். புலிகளின் ஜனநாயக மறுப்பை முன்னிட்டு வைக்கும் இந்த தமிழ்ப் பேரினவாதம் என்கிற அயோக்கியத்தனத்தை உங்களால் நிறுவ முடியுமா? மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் வன்னிப் போர் வடக்கில் மட்டும் ஐம்பதாயிரம் விதவைகளை உருவாக்கி இருக்கிறதாம். நான்காயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தவர்களாக, அன்றாடம் பாலியல் கொடுமை, கொலைகளுக்குள் வாழ்கிறார்கள். இவர்களா தமிழ்ப் பேரினவாதிகள்.தமிழர் உரிமைக் கோரிக்கையை உடைக்க நீங்கள் பயன்படுத்தும் தலித் அரசியலை உங்கள் கட்சிக்குள் ஒரு விவாதமாகவாவது வைக்க முடியுமா? நானும் உத்தபுரத்திற்காக எழுதினேன், சட்டக்கல்லூரி நிகழ்விற்காக எழுதினேன். ஆனால் உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் உத்தபுரத்திற்காக எழுதிய அளவுக்கு பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறியின் பிடியில் இருந்து வதைக்கப்பட்ட சட்டக்கல்லூரி தலித் மாணவர்கள் குறித்து எழுதவில்லையே ஏன்? அதற்காக போராடவில்லையே ஏன்? சங்கரன்கோவிலில் கொல்லப்பட்ட இரண்டு தலித் சிறுவர்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை இங்கே தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் இட்டுக் கட்டி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஜெர்மனியில் அகதிகளுக்கு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்தும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை பார்த்தும் இலங்கை அரசின் அனுசரணையோடும் வாழும் சுசீந்திரனை பொறுக்கி எடுத்து புது விசையில் நேர்காணலாக வெளியிட்டிருந்தீர்களே? அந்த நேர்காணலில் பதில்கள் மட்டுமல்ல, நீங்களும் யவனிகாவும் கேட்ட கேள்விகளுமே நக்கலாகத்தான் இருந்தது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி மரியாதைக்குரிய முத்துக்குமார் குறித்த கேள்விகள் எல்லாமே கிண்டல் தொனியில்தான் இருந்தது. புலி எதிர்ப்பின் பெயரால் பௌத்த மரபுக்குள் ஒழிந்து மக்கள் அழிவை ரசிக்கிற மனோநிலையில் இருக்கும் உங்கள் நண்பர்களும் நீங்களும் பேசுவதுதான் மார்க்ஸியமா? இது மார்க்சிய இனவாதம் இல்லையா? சமணக்காட்டை அழிக்க அன்றைய பார்ப்பான் சமணர்களைக் கழுவுவேற்றியதைப் போல இன்று பௌத்த மரபுக்குள் ஒழிந்து கொண்டு புலி எதிர்ப்பின் பெயரால் தமிழ் மக்களைக் கழுவேற்றுகிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். இதையே நீங்களும் செய்கிறீர்கள். இந்த சுசீந்திரனை அம்பலப்படுத்தி இணையம் வழியே ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது அதையும் உங்களுக்குத் தருகிறேன்.தமிழ்நதிக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், அவர்கள் ஊர் திரும்பிச் செல்வது குறித்து எழுதியிருந்தீர்கள். எந்தத் தமிழனும் வாழ்வதற்குரிய சூழலோ சுதந்திரமாக சென்று வரும் சூழலோ இலங்கையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைய இலங்கைச் சூழலில் ஷோபாசக்தியோ, சுகனோ, நீங்களோ கொழும்பு சென்றால் உங்களுக்கு இலங்கை அரசின் சிகப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் உங்கள் பௌத்த மரபுதான் அங்கே இப்போது ரத்த வெறியோடு தமிழ் மக்களை வீழ்த்தியதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்ந்தியோ, புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த என்னை மாதிரி நபர்களோ இல்லை ஏனைய ஈழ ஆதரவாளர்களோ இலங்கைக்கு அல்ல இராமேஸ்வரத்துக்கே செல்ல முடியாத தமிழர் அரசியல் வீழ்ச்சியுற்ற இந்த நிலையைத்தான் சுகன் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்.தமிழ்நதியால் தற்போது அங்கு செல்ல முடியாது என்பது தெரிந்திருந்தும் அவர் தமிழகத்தில் இருப்பது குறித்து கிண்டல் செய்கிறீர்கள். நீங்களோ நானோ நமக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறது. மனைவி குழந்தையோடு சந்தோசமாக வாழ்கிறோம். ஒரு அரங்கக் கூட்டம் என்பதும் மாற்றுக்கருத்து என்பதும் இந்த வாழ்வில் நாம் செலவிடுகிற மிகக் குறைவான இன்னொரு பகுதிதான். ஆனால் அவர்களுக்கு அப்படியல்ல. காலம் முழுக்க அவர்கள் இழப்புகளினூடே வாழ்கிறார்கள். இந்தியாவில் இருந்து இந்த அரசால் எப்போது துரத்தப்படுவோம் என்று அஞ்சி வாழ்கிறார்கள். அவர்கள் சகஜமான வாழ்வை இங்கு வாழ முடியவில்லை. ஆனாலும் தமிழகச் சூழல் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. தமிழ்நதிக்கும் உங்களுக்கும் இடையிலான இலக்கிய, அரசியல் விவாதங்களை முன்னெடுக்கும்போதே அவரது உயிர்வாழ்வோடு தொடர்புடைய தமிழக இருத்தல் குறித்து நக்கல் செய்கிறீர்களே? புலத்தில் இருந்து வருகிற தமிழ்நதி ஆனாலும் சுகன் ஆனாலும் ஷோபாசக்தியானாலும் அவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை இலங்கையில் இருந்து கள்ளத்தோணி வழியாக முகாம்களுக்கு வருகிற ஏழைத் தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை. அகதி என்றால் மேற்குலகில் இருந்து வருவோரே என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருந்தாலும் அவர்கள் இங்கு சந்தோசமாக இல்லை. அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. போவதற்கு இடம் இருந்தால் போவார்கள். ஆகவே அவர்களை ‘‘இப்போ உங்க நாட்டுக்கு போங்களேன் பாப்போம்’’ என்று வெவ்வே காட்டாதீர்கள். அது அசிங்கமானது.தமிழக தமிழ்த் தேசியவாதிகள் குறித்து...பொதுவாக புலி ஆதரவாளர்கள் என்றும் தமிழ் தேசியவாதிகள் என்றும் அழைக்கப்படுகிற தமிழக ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. சாதி ஒழிந்த தமிழ் தேசியம் பேசும் குழுக்கள், சுயநிர்ணய உரிமை பேசும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற இடது அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம் போன்ற தீவிர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள், அப்புறம் நெடுமாறன், சீமான் போன்றவர்கள். இதை விட ஆர்.எஸ்.எஸ். நகைமுகன் போன்றோர் கூட தமிழர் விடுதலை குறித்துப் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாம் நமக்கு பிடித்தவர்களாகவும் பிடிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். தலித் அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே ஈழ விடுதலையை எறிந்து விடுவீர்களா என்ன? தலித் மக்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை, அருந்ததியினரின் உள் ஒதுக்கீடு கோரிக்கை, சட்டக்கல்லூரி, உத்தபுரம் போன்ற விவகாரங்களில் தமிழ் தேசியவாதிகளின் கள்ள மவுனத்தை நான் வெளிப்படையாக தீவீரமாக கண்டித்திருக்கிறேன். ஆனால் சீமான் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார் என்கிறீர்கள். ஈழம் தவிர இட ஒதுக்கீடு, பார்ப்பன எதிர்ப்பு தொடர்பாகவும் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவரது ஈழக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு. உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாத, காலியாக உள்ள இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன போது அதை வரவேற்று அறிக்கை விட்ட ஒரே தமிழ் தலைவன் யார் தெரியுமா? சி.பி.ஐ.எம் வரதராஜன்தான். பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் முலாயம் சிங் யாதவ் உள் ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்கிறார். மார்க்ஸ்சிஸ்டுகள் குதியோ குதி என்று குதிக்கிறார்கள். எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது பத்து பார்ப்பனர்கள் தலைவர்களாக வந்தார்கள் என்கிற பழைய டயலாக் இன்றைய சி.பி.ஐ.எம் -க்கும் பொருந்தும்.வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்கள் பெருந்தன்மை, அன்பு, கருணை, கரிசனம் இந்த வார்த்தைகளை எல்லாம் இப்போது நான் அதிகமாகக் கேட்கிறேன். சுகன் கூட இப்படி ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகளை அன்றைக்குப் பேசினார். கேட்பதற்கு ‘திவ்யமாக’ இருந்தது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்ப்பணிப்பு உங்களிடம் இருக்கிறதா? வெறுப்புணர்வுக்கு எதிரான முகமென்றால் உங்களுக்கு உடனே தெரிவது இந்து ராமைத்தான். ஆமாம் கொலைகார ஜெயேந்திரனின் சிஷ்யப் பிள்ளையும் குட்டி காமுகனுமான விஜயேந்திரனை தன் காரில் வைத்து ஹைதராபாத்தில் இருந்து அழைத்து வந்த மார்க்சிய முகமூடியான இந்து ராமிடம் இருந்தே தற்காலத்தில் வெறுப்புணர்வுக்கு எதிரான முகமும் இந்த வார்த்தைகளும் பிறக்கின்றன. சந்திரிகாவிடம் எப்போது அவர் சிங்கள கேல் விருது பெற்றுக் கொண்டாரோ அப்போதே அவரது வெறுப்புக்கு எதிரான முகமூடி கழண்டு அம்மணமாகிவிட்டது. ஆனால் அதே இந்து ராமுடன் கூட்டு சேர்ந்துதான் சிபிஐஎம் ஈழப் பிரச்சனையில் நிலைப்பாடு எடுக்கிறது; வெறுப்புணர்வுக்கு எதிரான கூட்டம் நடத்துகிறது. சிங்கள பாசிஸ்ட் கட்சியும் இனவெறிக் கட்சியுமான ஜே.வி.பி-க்கும் மார்க்ஸ்சிஸ்டுகளுக்குமான தொடர்பு ஆழமாக நோக்கப்பட வேண்டியது. சென்னையில் நடக்கும் இவர்களின் மாநாட்டுக்கு அவர்கள் கொழும்பில் இருந்து வருவதும் கொழும்பில் நடக்கும் அவர்களின் மாநாட்டிற்கு இவர்கள் செல்வதுமாக இந்து ராம், ஜே.வி.பி, மார்க்ஸ்சிஸ்ட் கூட்டுதான் ஈழத்தின் மீதான் கொலை வெறிக் கொள்கையை கொண்டிருக்கிறது. ஆதவனின் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டை தலித்திய அரசியலில் இருந்து அணுகுவதென்பது ஷோபா சக்தியின் சிந்தனை. அவருடைய இன்னொரு கூந்தல் நடிகன்தான் சுகன். ஒருவர் பௌத்தமரபு, ஒருவர் மறுத்தோடி, இன்னொருவர் தலித் அரசியல் நிலைப்பாடு கொண்டவர். புலி எதிர்ப்புக்கு ஒன்று சிங்கள் அரசு ஆதரவிற்கு ஒன்று என்று மிகத் துல்லியமான அமைக்கப்பட்டிருக்கும் குழு.சிபிஐஎம்-என் அறிவிக்கப்படாத லோக குரு இந்துராம். இந்துராமின் அயலுறவுக் கொள்கைதான் சிபிஐஎம்-ன் அயலுறவுக் கொள்கை. கட்சி வளர்த்துவிட்ட செக்குமாட்டு சிந்தனைகளின் வார்ப்புதான் ஆதவன் போன்றவர்களின் ஈழப்பிரச்சினை நிலைப்பாடு. தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்களை சுசீந்திரன் போன்ற புலியெதிர்ப்பு குழுவினரிடமிருந்து உருவியெடுத்து தலித் அரசியல் நிலைபாட்டில் இருந்து ஈழத்தை அணுகுகிறார் தோழர்.ஈழத்தில் இந்து மதமும் சாதியும் இருக்கிறது என்ற உலக மகா கண்டுபிடிப்பு ஒன்றை இவர்கள் பிரான்சுக்கும் ஜெர்மனுக்கும் போய் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று வரை இந்துப் பாசிச பார்ப்பனக் கருத்தியல் குறித்து மார்க்ஸ்சிஸ்டுகளுக்கு தெளிவான பார்வையே கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை தந்தை பெரியாரை இழிவுபடுத்தி காந்தியை வைத்து ஜல்லி அடித்துக் கொண்டிருந்தவர்கள்தான் இவர்கள். இங்குள்ள மார்க்ஸ்சிஸ்ட் கட்சியில் தலித்தியத்திற்கோ, பெரியார் சிந்தனைகளுக்கோ துளியும் இடம் கிடையாது. நிலைமை இப்படி இருக்க ஆதவன் பேசுகிற நம்புகிற கொள்கைகளை குறைந்த பட்சம் கட்சியின் மாநிலக் குழுவிலாவது வைக்க முடியுமா? என்ன செய்ய? பில்டிங்கு ஸ்டிராங்கு! பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்கு!!சாதி எங்கே இருக்கிறது? இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சாதி இருக்கிறது. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், ஏன் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது. அதனால்தான் ஈழத்தில் இந்தியத் தமிழர்களை வெள்ளாளத் தமிழர்கள் அவமானப்படுத்துகிறார்கள்; இங்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்டு, பார்ப்பன மார்க்சிஸ்ட் தலைவர்கள் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். வெள்ளாளத் தமிழர்களுக்காக ஈழப்பிரச்சினையை ஒதுக்கும் ஆதவன், கிரீமி லேயர் கேட்கும் சிபிஐஎம் கட்சியை ஒதுக்காமல் அண்டியிருப்பது ஏனோ? எல்லா இடத்திலும் இருக்கிறது ஆகவே அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. இனவாதமும் இனக் கொலைகளுமே ஒரு நாட்டின் கடந்த கால நிகழ்வாக இருக்கும் போது அதை எதிர்கொள்ளத் துணியாமல் புலிகளையிட்டு தலித்தியத்தின் பெயரால் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா? கட்சியின் அடுத்த விசாரணையை அவர் சந்திக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநாடுகள், பொலிட்பீரோ கூட்டங்கள் நடத்திய பின்னர்தான், சாதியை ஒரு பிரச்சினையாக பார்க்கும் தெளிவு மார்க்சிஸ்ட்களுக்கு வருகிறதென்றால், அந்தத் தெளிவை உயிர் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லாது, போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் ஆதவன் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்.ஆதவன் நீங்கள் தலித் அரசியலில் இருந்தால் மார்க்ஸ்சிஸ்டாக இருக்க முடியாது. நான் தலித் அரசியலில் இருந்து கொண்டே தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது இதுதான் யதார்த்தம். தமிழகத்தில் தமிழ், தமிழன், தமிழினம். திராவிடர் என்கிற ஒற்றை அடையாளத்தின் கீழ் இணைவதை நான் எதிர்க்கிறேன் காரணம், தலித் அரசியல் நிலைப்பாடுதான். ஆனால் ஈழத்தில் அப்படியல்ல. அது சாதீய சமூகமாக இருந்தாலும் இனப்படுகொலையும் இன முரணுமே அங்கு பிரதானம். எப்படி ‘‘வர்க்கப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும்’’ என்று உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் சொல்கிறார்களோ அது போல ஈழத்திலே தமிழ் தேசியப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும் என்று நான் சொல்லவில்லை. அந்த முட்டாள்தனமும் எனக்கில்லை. ஆனால் அந்த தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் செயல்படாதன்மையை பயன்படுத்தி தலித்தியம் என்கிற அரசியலை உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு இனியும் பயன்படுத்தாதீர்கள். அதிலிருந்து உங்களுக்கு ஆதாயமாக பொய் பிரச்சாரம் செய்யாதீர்கள். “ஆமாம் ஆதவன் ஒரு மநு விரோதி எப்படி மநுவின் நிழலில் அரசியல் செய்ய முடியும்?”குறிப்பு:(ஈழ நிலைப்பாடு ஒன்றை மட்டுமே வைத்து, ஆதவனின் தலித் அரசியல் – இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடுகளில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. மாறாக இவற்றிலெல்லாம், அவரது கட்சி நிலைப்பாடே அவருக்கு எதிராக இருக்கும்போது ஏன் ஷோபா சக்தியின் ஸ்பீக்கரை இங்கே ஒலிக்க வேண்டும்? ஷோபாவே நேரடியாக இங்கே பேசலாம். அதற்குத் தடை ஒன்றும் இல்லை.)இந்து ராமின் மார்க்ஸ்சிஸ்ட் முகமூடி கட்டுரையை எழுதி முடித்து, ‘அப்பாடா’ என்று கீற்றிற்கு அனுப்ப இணைய தளத்தில் உலாவியபோது இந்தச் செய்தி கண்ணில்பட்டது.மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்காணிப்பு முகாம்கள் என்று இலங்கை அரசாலும் இந்து ராமாலும் அழைக்கப்படும் வதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கிறார்கள். அன்றாடம் பாலியல் கொடுமைகள் அதன் விளைவாய் தற்கொலைகள் என்று ஓர் இனமே அழிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு பாசிச கொடூர மிருகங்களிடம் சிக்கியிருக்கிறது. முகாம்கள் குறித்து அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த மேற்குலக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை மனித உரிமை அமைப்புகளையோ தொண்டு நிறுவனங்களையோ முகாம்களுக்குள் அனுமதிக்க மறுக்கிற இலங்கை அரசாங்கம் அங்கு அன்றாடம் கொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் கேள்விக்கிடமின்றியும் சாட்சியங்களின்றியும் நடத்தி வருகிறது.உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மேற்குலக ஊடகவியலாளர்களை அனுமதிக்காத இலங்கை அரசு முகாம்களைப் பார்க்க அழைத்துச் சென்றது யாரைத் தெரியுமா? மார்க்சிஸ்ட் முகமூடியை அணிந்து முற்போக்கு பேசிவரும் இந்து ராமை... பார்ப்பன வெறி பிடித்த இந்து ராம் இப்போது முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு இலங்கை அரசிற்கும் ராஜபட்சேவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். தோழர் ஆதவன் அவர்களே வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்களின் யோக்கியதை இப்போதாவது தெரிகிறதா? அது மட்டுமல்ல இலங்கைக்கு இப்போது ராஜமரியாதையோடு செல்லத் தகுதியானர்கள் யார் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.அந்த செய்தி இதோ,சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன - இந்து ராம் கூறியதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது:இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர், முகாம்களை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ராம், சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன என்பதை இதன்போது தன்னால் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.சர்வதேச ஊடகங்கள் முகாம்களுக்கு சென்று உண்மை நிலைமையை அறிக்கையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தமிழ் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக முகாம்களில் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மக்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றுவார் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இந்து பத்திரிகையின் ஆசிரியர் கடந்த காலம் முதல் இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமான முனைப்புகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் இலங்கை ஆட்சியாளர்களுடன் நெருங்கி தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.நன்றி- http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=11424&cat=1வாங்குன காசுக்கு sorry சந்திரிகாவிடம் வாங்குன விருதுக்கு ரொம்பதாண்டா கூவுறான்...கொய்யா...ல. என்று போய் விடலாம். ஆனால் நம் மௌனம் அப்படி அமைதியடைய மறுக்கிறது.ஒரு இனமே அழிந்து கண்ணீரிலும் இயலாமையிலும் தவித்துக் கொண்டிருக்கும் போது கொலைகார இராணுவத்துக்கும் கொடூர ராஜபட்சேவிற்கும் சான்றிதழ் கொடுக்கும் இம்மாதிரி மநுவாதிகளை மக்கள் விரோதிகளை, ஆதவன், முடிந்தால் அம்பலப்படுத்துங்கள். - டி.அருள் எழிலன் (arulezhiland@gmail.com)