எந்த நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு பண்டிதர் அயோத்திதாசரவர்களால் ‘தமிழன்' தொடங்கப்பட்டதோ, அந்த லட்சியத்தை ‘தமிழன்' இதுபோதும் கைவிடாது பின்பற்றி வருவதுடன் அரசியலிலும் சமூக உரிமையிலும் தாழ்த்தப்பட்டோர், இப்போதைய நிலைமைகளுக்கேற்ப எவ்வெத் துறைகளில் கவனம் செலுத்த வேண்டுமோ, அவ்வத் துறைகளையும் ‘தமிழன்' இயன்ற வரை பின்பற்றித் தங் கடமையையாற்றி வந்திருக்கிறது.விஞ்ஞான ஒளி பரந்துலவும் இவ்விருபதாம் நூற்றாண்டில் மனித சமூகம் தேசம், நிறம், ஜாதி, மதம் முதலிய வரம்புக்குள் கட்டுப்பட்டு விடாமல், எங்ஙனம் விசாலமான நோக்கத்தோடு உலகியலைப் பரந்து நோக்கி, அவ்விஞ்ஞான உலகத்தோடு ஒட்ட ஒழுகத்தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள வேண்டுமோ, அவ்வியலை மக்கள் பின்பற்றிச் செல்லுமாறு எவ்வெவ் வழிகளைத் துணை பற்ற வேண்டுமென்பதைத் ‘தமிழன்' சிறிதும் கைசோரவிடவில்லை.அதன் காரணமாக ஏற்பட்ட எதிர்ப்புகள் அளவு கடந்தனவாம். மைசூர் சமஸ்தான கவர்ன்மெண்டின் பத்திரிக்கை சட்டத்தினால் ‘தமிழன்' நிற்பாட்டப்பட்டும் மிகுந்த சிரத்தையோடு அதனை மீண்டும் வெளியாக்கி வந்தோம். இவ்வளவு இடையீடுகளையேற்றும் மிக்க சகிப்புத் தன்மையோடு பத்திரிக்கையை நடத்தி வந்ததின் காரணம், சமூக முன்னேற்றத்தின் மீது கொண்டிருந்த அளவு கடந்த ஆர்வத்தினாலன்றி வேறன்று. - தமிழனின் தன்னிலை விளக்கம்... பவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார் 2 கோலார் தங்கவயலில் புத்தரை முன்மொழிந்து, பவுத்தத்தை வழிமொழிந்து நடந்தவர்கள் கடவுள் மறுப்பு, அனைத்துமத எதிர்ப்பு, ஆண்டாண்டுகால மரபு பழக்க வழக்க எதிர்ப்பு, வேத புராண இதிகாச மறுப்பு, வேதியம் எடுத்துக் கொண்ட அதிகார மறுப்பு என ஒட்டுமொத்தத்தில் பார்ப்பனியச் சமூக அமைப்பின் ஒழுங்கியலை தடுப்போராகவும், வீண் குழப்பத்தை விளைவிப்போராகவும் சமூகத்திற்கு தீங்கானவர்களால் குற்றம் சாட்டப் பட்டார்கள்.ஆங்கிலேயர் ஆட்சி கட்டவிழ்ந்தவுடன் அதைக் கைப்பற்றும் முனைப்புடன் புதிய வியூகமாகக் கட்டப்பட்ட, இந்தியத் தேசியம் எனும் வெளிப்பூச்சின் உள் அந்தரங்கமான இந்துத்துவ அரசியலை முன்னெடுத்த பார்ப்பனர்களின் - பணக்காரர்களின் இந்திய விடுதலைக்கு பவுத்தம் எதிராக நின்றது. சாதியக் கட்டை குலைக்க விரும்பாத பார்ப்பனியர்களின் நாட்டு விடுதலை முழக்கத்தில் - தலித் விடுதலை எனும் மானுட விடுதலை இல்லையென்றே அறிவித்தது.கோலார் தங்க வயலுக்கு பவுத்த மார்க்க பரப்புநராக வந்த (1903 - 1907) எம். ராகவர் அதிகமான இன்னல்களை அனுபவித்தவராக பவுத்தப் பணியினை மேற்கொண்டார். கோலார் தங்கவயலின் மூலை முடுக்கெல்லாம் புத்தரை அறிமுகம் செய்து, அவரது லட்சியங்களைப் பதிய வைக்க, ராகவர் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இந்து விஷமிகள் அவரைப் பற்றி அவதூறினை கிளப்பிவிட்டார்கள். அவரது செயல் திட்டங்களில் குறுக்கீடு செய்தனர். ராகவர், மதங்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுபவராக பாவிக்கப்பட்டார். கோலார் தங்க வயலில் ராகவர் இருப்பது, இந்து மதத்திற்கும் கிறித்துவ மதத்திற்கும் தீங்கானது என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே, மதவெறி மூர்க்கர்களால் முறைவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டார். ராகவரின் வீடு "தீ'க்கு தின்னக் கொடுக்கப்பட்டது. நெருக்கடிகளையும் துன்பங்களையும் எதிர்த்து, அவற்றை வசப்படுத்தும் மனமே பவுத்தமனம். மலினங்களின் ஆட்டங்களை அலட்சியப்படுத்தி பவுத்தம் எனும் மெய்மையை எந்தச் சூழலிலும் ஸ்பரிசிக்க வல்ல ஆற்றலான ராகவர், இடர்களைக் கடந்து பவுத்த நீட்டிப்பிற்கே தன்னை ஈந்தார்.ராகவர் போன்ற தொடக்க கால பவுத்த முன்னோடிகளின் உண்மையான ஈடுபாடும், அழுத்தமான அர்ப்பணிப்பும் குறிதவறாத நோக்கத்தை நோக்கிய முன்னெடுப்பும் விரைவிலேயே கோலார் தங்கவயலில் பவுத்தம் காலூன்ற ஏதுவாகியது. பவுத்த மார்க்க காலவோட்டத்தில் 1907 ம் ண்டு ஒரு குறிப்பிடத்தக்க எல்லைக் கல்லை நட்டு வைத்தது. அயோத்திதாசரால் சூன் 9 அன்று தொடங்கப்பட்ட "ஒரு பைசா தமிழன்' என்ற வார ஏடு, தன் தோற்றம் குறித்து "உயர் நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு, நீதி, சரியான பாதை மற்றும் நேர்மையை கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும், இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாரும், இலக்கியவாதிகளும், ஒன்றுகூடி ‘ஒரு பைசா தமிழனை' வெளிக்கொண்டு வந்தார்கள்'' என்று குறிப்பிட்டது. ‘ஒரு பைசா தமிழன்' உண்மையாகவே ஒரு பவுத்த வார இதழ்தான். சாக்கிய பவுத்த சங்கத்தின் அனைத்து புதிய கிளைகளையும் தொடர்புபடுத்தும் செய்திமடலாக அது செயல்பட்டது. புதியவர்களுக்கு தமிழ் பவுத்தத்தின் நெறிமுறைகள் கோட்பாடுகள் மற்றும் நடைறைகளைக் கற்பித்தது. பவுத்த உலகில் நடந்த புதிய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களையும் அறிக்கைகளையும் தந்தது. பொதுவாக துணைக் கண்டத்தின் வரலாற்றையும் குறிப்பாக தமிழகத்தின் வரலாற்றையும் பவுத்த நிலைப் பாட்டில் இருந்து பெயர்த்துரைக்க முயன்றது. ஆனால், இவற்றை யெல்லாம் விடவும் கூடுதலானதாகவும் இருந்தது அது: "உளறும் பத்திரிகைகளை தடை செய்க''‘தமிழன்' இதழில் 19.11.1930 அன்று வெளிவந்த "நான் மந்திரியானால்...'' என்ற தலைப்பில் ‘கிறுக்கன்' எனும் புனைப்பெயரில் அப்பாதுரையார், 14 அம்ச திட்டத்தினை வெளியிட்டார். இன்றும் நீளும் சாதி- வர்க்க - ஆணாதிக்க சூழ்நிலைமையில், முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே அதிகபட்ச சாத்தியங்களை அகப்படுத்தி, பகுத்தறிவு சமதர்ம வழியில் புதுவிசையையும் வீச்சையும் உருவாக்கியவர். சவால்கள் மிகுந்த எதிர்மறை பிராந்தியங்களை, எவ்விதத் தயக்கமுமின்றி அசாத்தியமாக எதிர்கொண்ட அப்பாதுரையார், தன் 14 அம்ச பகுத்தறிவு சமதர்மத் திட்டத்தினை இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மைசூர் சமஸ்தான மன்னர், சென்னை மாகாண அமைச்சர்கள் பி.டி. ராசன், குமாரசாமிராசா ஆகியோர் பார்வைக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.1. இந்தியாவிலுள்ள கோயில்களையெல்லாம் பள்ளிக் கூடங்களாகவும், சிறு கைத் தொழில் கூடமாகவும் மாற்றுவேன். 2. கடவுள் பேரால் நடக்கும் நிகழ்ச்சிகளை தடை செய்வேன். 3. இந்தியா முழுமையும் ஒரே சம்பளம் என்று முறை வகுப்பேன். அதிகாரிகள் 1000 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறாத வகையில் சட்டம் கொண்டு வருவேன்.4. தன் பெயர்களுக்குப் பக்கத்தில் ஜாதிப் பெயர் குறிப்பிடுவதை தடை செய்து அபராதம் விதிப்பேன். சந்நியாசிகள், சாமியார்கள், மதகுருக்கள் அனைவரையும் எங்குமில்லாமல் செய்து மதங்கள் என்பதை அழித்து விடுவேன். 5. மாணவ மாணவியர்களுக்குரிய பாடப்புத்தகங்களிலுள்ள புராண, மதக் கருத்துகளடங்கிய பாடப்புத்தகங்களை அகற்றிவிடுவேன். 6. தேசியம், புராணம், இதிகாசம், மதம், கடவுள் என்று உளறிக் கொண்டிருக்கிற பத்திரிகைகளை தடை செய்வேன்.7. அய்ந்தாயிரம் ரூபாய்க்கு மேல் எவரும் பணம் வைத்திருக்கக்கூடாது என்றும், சாதி மறுப்பு கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் செல்லுபடியாகும் என்றும் சட்டம் செய்வேன்.8. பெண்கள் 18 வயதுக்கு மேல்பட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்று சட்டம் ஆக்குவேன். 9. மந்திரவாதிகளையும் சோதிடம் பார்ப்பவர்களையும் ஒழிப்பேன். 10. பிச்சை எடுப்பவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் வேலை செய்து பிழைக்கும் வகையில் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வழி செய்வேன். 11. எல்லா ஊர்களிலும் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்க, அரசாங்கக் கடைகளைத் திறப்பேன். 12. இந்தியா எங்கும் ஒரே மொழி வழங்க ஏற்பாடு செய்வேன். 13. தூக்குத் தண்டனையை எடுத்து விடுவேன்.14. கோயில் பேராலும் கடவுளின் பேராலும் இருக்கிற சொத்துகளைப் பறிமுதல் செய்வேன்."தமிழர்களின் சமகால சமுதாய அரசியல் வாழ்வில் தலையிடும் தெளிவான நோக்கமுள்ள வானிலை அறிக்கைகள் - பண்டங்களின் விலைகள் - கண்டுபிடிப்புகள் - மக்களை பாதிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அரசின் கொள்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிடுகிற, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும் நடப்பு சமுதாய, அரசியல் நிகழ்வுகளை முரணின்றி திறனாய்கிற வாழ்வின் எல்லாத் துறைகளிலும் விளிம்புநிலைக் குழுக்கள் அதிகாரம் பெறுவதற்கு ஓய்வின்றிப் பாடுபடுகிற, வெகுசனத் தலைமைக்குரிய ஏடாக விளங்கவே அது வல் கொண்டது. இவை எல்லாவற்றுக்குள்ளும் இவை எல்லாவற்றின் வழியாகவும் காலனிய ஆட்சியின் கீழ் ஏற்றம் பெற்றுவிட்ட பார்ப்பனியத்தின் எல்லா வடிவங்களுக்கும் எதிராக ஒரு மாற்று தேசிய அடி சொல்லாடலை நிறுவுவதை அது தன் உறுதியான நோக்கமாகக் கொண்டது'' (ஞான. அலாய்சியஸ்).இதழின் தொடக்க காலங்களில் தொடர்ந்து எழுதிவந்தவர்கள் சி.எம்.சி. மூர்த்தி, சொப்பனேசுவரி அம்மாள், டி.சி. நாராயண பிள்ளை, ஏ.பி. பெரியசாமிப் புலவர் முதலியோர் ஆவர். ‘தமிழன்' தனக்கெனத் தனித்த ஒரு மார்க்க பண்பாட்டு கருத்தியலும், சமுதாய செயல்பாட்டுக்கான கொள்கைத் திட்டம் கொண்ட மய்யமாகவும் நிறுவனமாகவும் மாற்றப்பட்டது. எல்லா மதங்களிலும் குறுக்கீடு செய்து அவற்றை விடுவித்துக் கொண்டுதான் மனித வாழ்வியலுக்கான குறியீட்டு நெறியாகவும், ஒரு சமூக விடுதலை இயக்கமாகவும் தமிழ்ப் பரப்பில் பவுத்தம் இடம் பிடித்தது. இந்தப் புதிய கட்டுமானத்தோடு மிகுந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மிக்க எம்.ஒய். முருகேசம், சி. குருசாமி, எம். ராகவர், ஏ.பி. பெரியசாமி ஆகியோர் மாரிக்குப்பம் கோலார் தங்கவயல் பவுத்த சங்கத்தின் மய்யக் குழுவாக இருந்த வேளையில், அதன் நற்பேறாக இணைந்தவரே அப்பாதுரையார்.பவுத்தர்கள் மட்டுமே மானுட சாராம்சத்திற்கான கருத்திற்கும் காரியத்திற்கும் தகுதியானவர்கள் என்ற அப்பாதுரையாரின் முடிந்த முடிவால், கோலார் தங்கவயலிலும், வடாற்காட்டிலும், சென்னை மாநகரிலும் பவுத்தம் ஒரு ஜீவத்துடிப்பைப் பெற்றது; அவரது நல் வரவால் அது மிகவும் வலுப்பட்டது. 1911 இல் பிக்கு இந்தி வன்சலின் மூலம் சீலம் பெற்றுக் கொண்ட அப்பாதுரையார், அதிலிருந்து பவுத்த சங்கத்தின் மதிப்பிற்குரிய புதிய உத்வேக சேர்க்கையாக தம்மை அவர் மெய்ப்பித்ததோடு, பவுத்த உலகத்தை சாத்தியப்படுத்துவதில் செயலாளர் நாயகமானார். பவுத்த கட்டுமானத்தில் அயோத்திதாசரின் தன்மையான படைத் தலைவர்களில் முன்னணியான ஆளுமையாக இடம் பிடித்தார். அப்பாதுரையார், பிற்போக்கானதாகவும், கொடுமையானதாகவும் அநீதியாகவும் ஆன பார்ப்பனியத்திற்கு எதிராகவும், பவுத்தம் பரவுவதற்குமான கூட்டுப் போராட்டத்தில் ‘தமிழனுடன்' பங்களிப்பதில் அயோத்திதாசருடன் தோழமை கொண்டார். சரளமாகவும் சாரத்தோடும் எழுதக் கூடிய அப்பாதுரையார், ‘தமிழனில்' தவறாமல் எழுதி வந்தார். அவரின் எழுத்து, தமிழனின் வீரியத்திற்கு கிரியா ஊக்கியாகத் திகழ்ந்தது. மயிலை பி.எம். சுவாமி என்பவர், புத்தரை கிறித்துவுடனும், முகம்மதுவுடனும் ஒப்பிட்டு எழுதியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1914 இல் அப்பா துரை ஒரு திறனாய்வை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.பொய்யறிவைப் பற்றி எச்சரிக்கையாயிருக்கவும், அறியாமையைவிட அது அதிக பத்தானது என்று அறிவிக்கவும், கடவுள் என்பது ஒரு நீண்ட கால வதந்தி! வதந்திகளை நம்பாதீர்! வதந்திகளைப் பரப்பாதீர்! என்றே புத்தர் கேட்டுக் கொண்டார். புரிபடல் என்பது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டுமெனில், நாம் நிற்கும் தளம் தர்க்க நியாயத்தினால் கட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் புரிதலும் இல்லை, அர்த்தமும் இல்லை. ஏசுவும், முகம்மது நபியும் இறைத்தூதர்கள். இக்கருத்தை ஏற்பவர்கள்தான் - கிறித்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் இருக்க முடியும். இவ்வாறாக ஏசுவும், நபியும் தங்களுக்கான இருத்தலை உறுதி செய்து கொண்டனர். இதுபோன்ற எந்தவித நிபந்தனைகளையும் புத்தர் ஏற்படுத்தவில்லை. தன்னை சுத்தோதனருக்கும் மகாமாயாவிற்கும் பிறந்த மனிதர் என்றே புத்தர் அறிவித்துக் கொண்டார். அவர் தன்னுடைய தம்மத்தில் தன் இருந்தலுக்கான எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. எல்லா மதங்களும் மோட்சத்தை இறுதியாகக் கொண்டுள்ளன. ‘ஆத்மா'வின் வீடு பேற்றை அடைவதே மனித வாழ்க்கையின் நோக்கங்கள் என மதங்கள் வலியுறுத்துகின்றன. பல காலகட்டங்களில் எல்லா மதங்களிலும் இறைதூதுவர்கள், அவதாரப் புருசர்கள், மகான்கள், மகாத்மாக்கள் தோன்றி தங்கள் தங்கள் மதக் கருத்துகளை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றனர்.மாறாக, புத்தர் மோட்சம் ஏதும் இல்லையென்றும், தன்னை ஒரு வழிகாட்டி என்றும் அறிவித்தார். தம்மத்தை மனிதர், மனிதர்களுக்காக கண்டுபிடித்த தத்துவம் மட்டுமே என்றார். இத்தத்துவம், உண்மைக்கும் எல்லாவித ஆய்வுக்கும் உட்பட்டது. அதில் எவ்வித இறை தன்மையையும் புகுத்தக்கூடாது என்றார். இதுவே புத்தரால் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படையான செய்திகளாகும். இச்செய்திகளை அப்பாதுரையார் தன் திறனாய்வில் உள்ளடக்கி, மதங்களுக்கும் பவுத்தத்திற்கும் உள்ள வேறுபாட்டினைத் தெளிவுபடுத்தினார். பார்ப்பனியத்தின் வெற்றியினால் அடிமையாக்கப்பட்ட, வரலாற்றால் மறைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு அயோத்திதாசர் நிறுவிய பவுத்த சங்கம், ‘தமிழன்' இதழுமே புகலிடமாக நடைபோட்டது. இம்மண்ணின் முதற்குடிகளை பூர்வ பவுத்தர்கள் என்பதை உணர வைத்து "நாம் இந்துக்கள் அல்லர்'' என்ற முடிவுக்கு உந்தித் தள்ளியது. ‘சங்கமும்', "தமிழனும்' இந்து, கிறித்துவ மதங்களின் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. சங்கரன், திருஞான சம்பந்தர் தோன்றி, திபவுத்தமாகிய நாத்திகத்தை அழித்து விட்டதுபோல, புதியதாக வந்த பவுத்தத்தையும் அழித்துப்போட, கடவுளின் அடியோர்கள் எவரும் வரமாட்டாரா? என்று இந்து வெறியர்கள் ஏக்கம் கொண்டார்கள். இருப்பினும் ‘சங்கமும்', ‘தமிழனும்' திடமாக நடத்தப்பட்டு வந்தது.1914 ம் ஆண்டு மே 5 ம் நாள் அயோத்திதாசர் உடலால் பிரிந்து நினைவில் வாழ்பவர் ஆனார். அயோத்திதாசருக்குப் பிறகு ‘தமிழனை' சிறிதுகாலம் அவரது குமாரர் பட்டாபிராமன் நடத்தி வந்தார். அதன் பிறகு ‘தமிழனை'ப் பொறுப்பேற்று நடத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த அப்பாதுரையார், எம்.ஒய். முருகேசம் பின்பலத்துடன் ‘தமிழனை'க் கொண்டு வந்தார். அப்பாதுரையாரை ஆசிரியராகவும் வி.பி.எஸ். மணியரை பதிப்பாளராகவும் கொண்ட ‘தமிழன்' 1921 முதல் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. பவுத்த சங்கத்திற்கும் தமிழனுக்கும் தன்னிகரில்லா துணைவராகத் திகழ்ந்த எம்.ஒய். முருகேசம் காலமாகவே ‘தமிழன்' வெளிவருவது தடைப்பட்டது. இருப்பினும், அப்பாதுரையாரின் விடாமுயற்சியால் ‘தமிழன்' மீண்டும் 1926 ம் ஆண்டு சூலை முதல் வாரத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது. வழிகாட்டி அயோத்திதாசர், புரவலர் எம்.ஒய். முருகேசம் ஆகியோருக்குப் பிந்திய காலகட்டத்தில், கொள்கைக்குன்றாய் அப்பாதுரையாரின் பணி மேலும் தீவிரமடைந்தது.
Wednesday, April 29, 2009
Monday, April 13, 2009
சென்னை ஐ.ஐ.டி.யில் நசுக்கப்படும் தலித்கள்அம்பலப்படுத்துகிறது "தலித் குரல்
சென்னை ஐ.ஐ.டி.யில் நசுக்கப்படும் தலித்கள்அம்பலப்படுத்துகிறது "தலித் குரல்
இந்திய நாடாளுமன்றத்தால் அமுல்படுத்தப்பட்ட இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி 1961 (Act 59/61) சட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஆறு நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்று 1961இல் அறிவிக்கப்பட்டன. சென்னை அய்.அய்.டியும் அப்படிப்பட்ட ஒரு நிறுவனமே. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசிடமிருந்து இந்நிறுவனங்கள் ஆயிரம் கோடி ரூபாய் பெறுகின்றன. சென்னை அய்.அய்.டி. 300 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னையில் கவர்னர் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ளது. சென்னையில் இந்த அய்.அய்.டி. அமைவதற்கான காரணம் முன்னாள் முதலமைச்சர் காமராசர் அவர்களே. தமிழ்நாட்டில் அய்.அய்.டி. இருந்தாலும் இங்குத் தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.அறிவியல் துறையில் உலகிலேயே முன்னணியில் உள்ள பார்ப்பனக் கோட்டையாக இந்த அய்.அய்.டி. மாறியுள்ளது. கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இயக்குநர்கள், டீன்கள் போன்ற முடிவெடுக்கும் தலைமைப் பதவிகளில் பார்ப்பனர்களே அமர்ந்து இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இந்த நிறுவனத்திற்கு இயக்குநராக ஒரு தலித்தோ, ஒரு பிற்படுத்தப்பட்டவரோ வந்தது கிடையாது. சென்ற பத்தாண்டுகளில் மிகப்பெரும் அளவில் நடந்த பொருளாதாரக் குளறுபடிகளால் மற்றும் பொது நிதியைத் தவறான விதத்தில் கையாண்டதால் பத்திரிகைகள் மற்றும் பாமரமக்களின் கவனத்தை இந்த அய்.அய்.டி. ஈர்த்துள்ளது. ஆசிரியர் பதவிகளுக்கு நடந்த தேர்ச்சி முறைகளைப் எதிர்த்துப் பல ரிட்மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்டுச் சொல்லுவோமேயானால் கடந்த பத்தாண்டுகளில் 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த நிறுவனத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.மனித உரிமை மீறல்கள்:கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித்துகளுக்கும் அரசியல் சட்டத்தால் கொடுக்கப்பட்டிருக்கிற இடஒதுக்கீடு (மனித உரிமை) இங்கே மாணவர் சேர்க்கையிலோ ஆசிரியர் தேர்விலோ கொடுக்கப்படுவதில்லை. இங்கே பணிபுரியும் மொத்த ஆசிரியர் எண்ணிக்கை 450 பேர் அதில் 2 பேர் தான் தலித்துகள் (இப்போது 4 பேர் என்பது கணக்கு). ஆனால், அரசியல் சட்டமோ 22.5% இடங்களைத் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு (குறைந்த பட்சம் 100 தலித்துகள் ஆசிரியர்களாகப் பணியாற்ற வேண்டிய இடத்தில் நான்குபேர் பணியாற்றுகிறார்கள்).இங்கே பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் 50 பேர் தான். மற்ற ஆசிரியர்களோ உயர்சாதிக்காரர்கள். முக்கியமாகப் பார்ப்பனர்கள். ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் பதிவாகி நிலுவையில் கிடக்கும் வழக்குகளின் சில விவரங்கள்.(W.P.No. 5415/ 95, W.P.No. 16528/95, W.P.No. 16863/95, W.P.No. 17403/95, W.P.No. 4242/97, W.P.No. 4256/97, W.P.No. 4257/97, W.P.No.37020/2003)அரசியல் சட்ட ஆணையில் இருந்து தப்பிப்பதற்காக இந்த அய்.அய்.டி, காண்ட்ராக்ட் முறையிலும் (ஒப்பந்தமுறை) அடாக் (தற்காலிகம்) முறையிலும் ஆசிரியர்களை நியமனம் செய்து கொண்டிருக்கிறது. காலப் போக்கில் உயர்சாதியைச் சார்ந்த இந்த ஆசிரியர்களின் தற்காலிக வேலை, நிரந்தர வேலையாக ஆக்கப்படுகிறது. சட்ட திட்டங்களிலிருந்து தப்பிப்பதற்காக இந்த அய்.அய்.டி யில் விளம்பரத்தை வெளியிடுகிறார்கள். ஆனால், எந்த விளம்பரமும் சட்டநிலைக்கு முன் நிற்காது. ஏன் என்றால் வேலைவாய்ப்பிற்குரிய எல்லாச் செய்தி விபரங்களும் அதில் முற்றிலுமாகக் காண முடியாது. காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட காலியிடங்கள் போன்றவற்றை அந்த விளம்பரங்களில் காணமுடியாது.மாணவர் சேர்க்கை:ஆசிரியர் நியமனங்கள் போலவே மாணவர்கள் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. முதன் முதலில் 1978 ஆம் ஆண்டில் தான் தலித் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பற்றி யோசித்தார்கள். ஆனால் இந்த 22.5 சதவிகிதத்தைக் கூட முழுமையாக இங்கு நிரப்புவதில்லை. அதற்குப் பதிலாகக் கண்துடைப்பு வேலையான கட் ஆப் மார்க் முறையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அடிப்படை உரிமையான சமத்துவத்தை மீறும் விதத்தில் பி.டெக் பட்டப்படிப்பிற்குத் தேர்ச்சி பெறும் தலித் மாணவர்களை ஓராண்டு தயாரிப்பு வகுப்பில் சேர்த்து அதன் பிறகு தான் பி. டெக் படிப்பிற்கு அனுமதிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அய்.அய்.டி.யில் இட ஒதுக்கீடே கிடையாது. இவர்களுக்கு என்று தேர்ச்சிக்குரிய விதிகளைக் குறைக்கவும் மாட்டார்கள். தகுதி என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவிகிதம் அய்.அய்.டியில் இட ஒதுக்கீடு கூறி ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.என்.வி.சி. சாமியின் பதவிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள்:1995 ஆம் ஆண்டில் அய்.அய்.டியின் இயக்குநராக இருந்தவர் டாக்டர். என்.வி.சி. சாமி. ஏப்ரல் 1995இல் அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் கூட இயக்குநர் பதவியிலேயே 30 சூன் 1996 வரை நீடித்தார். எப்படியென்றால் தனது பதவிக்கால நியமனம் நீட்டிப்புப் பெற்றதாக பொய்க்காரணம் சொல்லி, அந்த நேரத்தில் அவர் 60 வயதுக்கு மேலாகவும் இருந்தார். ஒரு அய்.அய்.டியின் இயக்குநர் பதவி நியமனம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தான் நடைபெற முடியும். ஏனென்றால் அனைத்து அய்.அய். டிக்கும் விசிட்டர் என்பவர் குடியரசுத் தலைவரே. ஆனால் குடியரசுத் தலைவரின் அனுமதி இல்லாமலேயே அப்போதிருந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கல்விச் செயலாளர் ஒரு கடிதத்தின் மூலம் (DO Letter No. 12-17/95 TSI Dated Oct – 31, 1995) என்.வி.சி. சாமிக்கு மூன்று மாதக் காலம் நீட்டிப்பு கொடுத்தார். இதை எதிர்த்து சென்னை அய்.அய்.டியின் ஆசிரியர் சங்கம் உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. ரிட்மனு அனுமதிக்கப்பட்ட பின்னர் என்.வி.சி. சாமி ராஜினாமா செய்தார்.80 ஆசிரியர்களின் நியமனம்:சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் தான் இயக்குநராக இருந்த காலத்தில் டாக்டர். என்.வி.சி. சாமி அவசர அவசரமாக விளம்பரங்கள் வெளியிட்டு ஆசிரியர் பதவிகளை நிரப்பினார். மூன்றே மாதத்திற்குள் 80 உயர்சாதிக்காரர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது.தனக்கு விருப்பமான நபர்களைத் தேர்ச்சி செய்வதற்காகவே என்.வி.சி.சாமி வெளிவந்த விளம்பரங்களை மாற்றங்களுடன் மறுபடியும் வெளியிட்டார். உதாரணமாக கணிதத் துறையில் அசோசியேட் பேராசிரியர் பதவிக்கான விளம்பரத்தில், (No.IITM/R/8/94) தெளிவாகக் கூறியிருந்தது.விண்ணப்பதாரருக்கு கணக்கில் அடிப்படை முதுகலைப் பட்டம் இருக்க வேண்டும் என்று இந்த விதிமுறையை ஒழுங்காகப் பின்பற்றியிருந்தால் ஒரே ஒரு உயர் சாதிக்காரர்கூட தேர்ச்சி பெற்றிருக்கமாட்டார். அதனால் அவருக்கு வேண்டியவரான முனைவர் எஸ்.ஜி. காமத்தை (இவர் பௌதிக பட்டதாரி) தேர்ச்சி செய்வதற்கு இந்த அடிப்படைத் தேர்வு விதிமுறையையே மாற்றினார்கள். இதற்கென்றே மறு விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்கள். (No. IITM/R/1/95) இதில் விதிமுறைகளைத் தளர்ச்சி செய்து கணிதத்தில் அடிப்படை பட்டம் தேவை என்பதை எடுத்துவிட்டார்கள். அந்த விளம்பரமும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்தே விண்ணப்பங்களைக் கேட்டது. ஆனால், இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முனைவர் ஏ. ரெங்கன் என்பவர் அசோசியேட் பேராசிரியராக கணிதத்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பார்ப்பனர். அதேசமயம், முதல் வகுப்பில் வெற்றி பெற்று மிகவும் தகுதிவாய்ந்த பேராசிரியர் டாக்டர் வசந்தா கந்தசாமி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த காரணத்தினால் தேர்ச்சி செய்யப்படவில்லை.இடஒதுக்கீடு அமுல்படுத்தப்படவில்லை:சென்னை அய்.அய்.டியின் 145 வது கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் 11/1994 வாயிலாக மனித வள மேம்பாட்டுத் துறையினுடைய கடிதத்தின் அடிப்படையில் (Dt. 01.11.1993) இடஒதுக்கீட்டை அய்.அய்.டியில் அமுல்படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் (Department of Personnel & Training) அலுவலக ஆணை இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அரசு ஊழியர்களின் வேலைவாய்ப்பிலும் அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களுக்கும் இடஒதுக்கீடுகள் அமுல் செய்யக் கோரியது. டாக்டர். என்.வி.சி. சாமியின் 5 ஆண்டு பதவி காலத்தில் நடைபெற்ற அத்தனை ஆசிரியர் நியமனங்களிலும் அரசியல் சட்ட ஆணையான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதை எதிர்த்து அய்.அய்.டி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கத் தலைவர் கே.என். ஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை (W.P.No. 5415/95) தாக்கல் செய்தார். இந்த ரிட் மனு தாக்கல் செய்த பின்பு உதவிப் பேராசிரியர், துணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகளுக்கான நியமன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள். (Please note that the High Court of Madras by its order dated 17.4.1995 in W.M.P. No. 8893 in W.P. No. 5415 of 1995 has made the following order: the offer of appointment is subject to the result of the writ petition).பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அமுல்படுத்தப்படாததால் வன்னியர் சங்கமும் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இது போலவே மற்றொரு ரிட் மனுவும் (W.P.No.17403/95) தாக்கல் செய்யப்பட்டது.ஃபெரா மீறல்கள் (Foreign Exchange Regulation Act) :வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுவதாகச் சொல்லி அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்தவர் என்.வி.சி.சாமி. இந்தப் பயணங்களின் போது அமைச்சகங்களிடமிருந்தோ ரிசர்வ் வங்கியிடமிருந்தோ இவர் ஒப்புதல் பெற்றுச் சென்றதே இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் அய்.அய்.டி.யின் முன்னாள் மாணவர்களிடமிருந்து டாலர்களில் நன்கொடை பெற்றார். ஆனால் இந்தப் பணத்தை அய்.அய்.டி.யின் கணக்கிலே வரவு வைக்கவில்லை. இவர் சேகரித்த பணம் பலகோடி என்று அய்.அய்.டி.யின் உள்ளேயே சொல்லப்படுகிறது.
அயோத்திதாசர்: ஒரு நேரடிப் பார்வைதேவமைந்தன்
முதலில் பாளை. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் வெளியீடாகவும் புதுதில்லியின் சமயம் மற்றும் சமுதாய ஆய்வுக்கான கிறித்துவ நிறுவனத்தின் பிரதி உருவாக்கத்துக்கும் காரண காரியமாக இருந்து ஆக்க வழியில் பண்டிதர் அயோத்திதாசரின் 1907 - 1914 'தமிழன்' வார இதழின் எழுத்துப் பிரதிகளை முற்றிலும் நம்பகத்தன்மை கூடிய அரசியல் - சமூகம் - சமயம் - இலக்கியம் என்ற நான்கு பெரிய பிரிவுகளுக்குள் அடக்கி அடுக்கிய தொகுப்பாசிரியர் ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எதற்கு என்றால்,1997ஆம் ஆண்டு 'ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சுக்கூடம்' வெளியிட்ட 'இந்தியாவில் தேசம் இல்லாத தேசியம்,' 1998ஆம் ஆண்டு 'நியூ ஏஜ் இண்டர்நேஷனல்' வெளியிட்ட 'அடிமைத்தளை அறுக்கும் அடையாளமாக சமயம்: குடியேற்ற நாட்டை விரிவுபடுத்தும் கொள்கையின்கீழ் தமிழரிடை ஒரு பௌத்த இயக்கம்' என்ற ஆங்கில ஆய்வு நூல்களின் ஆசிரியர் என்று மெய்யாகவே பெருமிதம் அடைந்து நின்றுவிடாமல், தன் ஆய்வுகளுக்கான மூலப் பொருளை, நமக்கு 'வெள்ளைச் சட்டைப் பட்டி'கள் போலல்லாமல், ஆக்கவழியில் பொறுப்பாக அறிமுகம் செய்து வைத்ததற்காகத்தான். புதுச்சேரியில் முதலாவதாக நண்பர் திரு சீனு. தமிழ்மணிவழி 1999இன் கடைசி காலாண்டில் அறுநூறு ரூபாய்க்கு வாங்கி வாசித்த 'அயோத்திதாசர் சிந்தனைகள்' அசல் தொகுப்பு முதலாக, சில நாள் முன்னர் வாங்கி வாசித்த 'அநிச்ச' என்ற -அருமையானதும் 560 பக்கங்களில் ஓய்வாக எழுதப்பட்ட ஆய்வுநூல்கள் சாதிக்க முடியாத 'கம்யூனிகேஷ'னை 56 பக்கங்களில் சாதித்திருப்பதுமான இரு மாத இதழில் வெளிவந்திருக்கும் அயோத்திதாசர் பற்றிய 'மெல்ல முகிழ்க்கும் உரையாடலும் உரையாடலுக்கு முன்னான கதையாடலும்' என்ற நண்பர் ம. மதிவண்ணன் அவர்களின் செறிவான விவாதச் சொல்லாடல் வரையில் விசுவாசமாக, கிடைத்தவற்றையெல்லாம் வாசித்துவிட்டேன். இடையில் முனைவர் தர்மராஜன் முதலோனோரின் ஆய்வுகளையும் சிரமப்பட்டு வாசித்தேன்.எனக்கு அயோத்திதாசர் பெயர் பண்டிதர் என்றுதான் எங்களூர் (கோயமுத்தூர்) பள்ளபாளையத்தில் அறிமுகம். இப்பொழுது அந்த ஊரின் பெயர், செல்வபுரம். ஊர்ப்பெயர்தானே மாறியுள்ளது என்று நாம் காலங்காலமாய்க் கோட்டை விட்டுவிட்டோம். பள்ளபாளையத்தின் வடக்கு வளவில் இருந்த சங்கத்துப் பெரியவர்கள்தாம் 'தமிழன்' பத்திரிகை குறித்தும் எனக்கு நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன் சொன்னவர்கள். ஆனால், உண்மையாகச் சொல்லுகிறேன் - அதன் பிரதிகளை நான் அலாய்சியஸ் அவர்களின் மறுபிரதியில்தான் முதன் முதலாகக் கண்டேன். அதனால்தான் அவருக்கு முதலில் நன்றி என்றேன். பிறகு என் மூத்த அண்ணார் உதகையில் வணிகவரி அலுவலகத்தில் பணிபுரிந்து அங்கிருந்தபொழுது, 'பெர்ன் ஹில்' என்று ஞாபகம், தமிழ்ப் பௌத்தர் ஒருவர்வழி அயோத்திதாசர் பற்றிக் கேள்வியுற்றேன். அன்றைய வடதமிழ் நாட்டுச்சூழலின் அடையாளங்கள் முற்றிலும் மறைந்துபோகுமுன்னரே அங்கே பிறந்து புழங்கி வாழ்ந்தவன் என்ற முறையில் உறுதியாகச் சொல்வேன். அவரை எங்களூரிலும் உதகையிலும் சங்கம் வைத்துப் போற்றியவர்கள் தமிழ்ப் பவுத்தம் தழுவியவர்களான தலித் உட்சாதியினர் அனைவரும் பிற சாதியினரும்தாம்.அதனால்தான் 'தலித் முரசு' நேர்காணலில் ஞான. அலாய்சியஸ், “சக்கிலியர் சமுதாயத்தைப் பொறுத்த மட்டிலாவது இந்த பிரிவினை[இயல்பாய்த் தாழ்ந்தவர் - தாழ்த்தப்பட்டவர் பிரிவினை] தவறானது என்பது எனது அனுபவம். கோயம்புத்தூர்ப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டிருந்த காலங்களில் நான் கண்ட உண்மை. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மற்ற சமுதாயங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அத்தனையும் சக்கிலியர் சமுதாயத்திற்கும் உண்டு. அவர்களும் வரலாற்றில் தாழ்த்தப்பட்டோரே, விவசாயம் தவிர்த்த ஏனைய பணிக் களங்களில் சிறப்பாக வாழ்ந்த இந்த சமுதாயம், காலனியாதிக்கத்தின் கீழேயே தன் நிலை இழந்து பெருவாரியாகத் தாழ்த்தப்பட்டது. இந்தத் தாழ்த்தப்பட்ட நிலையை அவர்களது தமிழ் இலக்கிய அறிவுமூலம் கதைகள், கவிதைகள், விடுகதைகள்மூலம் கண்டறிய முடிந்தது. .......... மேலும் நவீன காலகட்டத்தில், சமுதாயக் குழுக்களைப் பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டோர் என்று பிரிப்பதிலான சிக்கல்களை சமூகவியலாளர் பெரிதும் விவரித்துள்ளனர். ஆகவே அயோத்திதாசரின் இந்த வரலாற்றுக் கணிப்பு தவறானது. இதை மூடிமறைக்கவோ, மறுக்கவோ தேவையில்லை. மேலும் அயோத்திதாசரின் முழுமையான வரலாற்று விளக்கங்களில் ஏற்பட்டுள்ள தவறு இதுமட்டுமல்ல" என்று கூறவேண்டியிருந்துள்ளது.(இந்தப் பகுதியை நான் 'அநிச்ச' இதழ் நவம்பர் 2005 பக்கம் 39இலிருந்து எடுத்துத் தந்துள்ளேன். எனவே அப்பகுதி இடம்பெற்ற விவாதப் பிரதி ஆசிரியரான திரு ம.மதிவண்ணன் அவர்களுக்கும் பிரசுரித்த ஆசிரியர்கள் திரு நீலகண்டன், அ. மார்க்ஸ் முதல் சுகன் வரையிலான நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.)இந்த இடத்தில் முக்கியமானதொரு 'வெள்ளைச்சட்டைப் பட்டி'[white collar]ப் பேராசிரிய மற்றும் முனைவ மற்றும் பெருநூலாசிரிய முரண்பாடொன்றைச் சுட்டவும் வேண்டும். வரலாற்று ரீதியில் அயோத்திதாசர் பாட்டனார் கந்தசாமி காலத்திலிருந்தே ஒடுக்கப்பட்டோரை மட்டம் தட்டி வந்த பார்ப்பனரை விட்டுவிட்டு [தன்னை அவர்கள் பரம்பரை ஏந்திப் பிடிப்பதனால்?] அவர் எங்களூரிலும் நீலமலைப்பட்டி [இப்பொழுது 'ஹள்ளி'கள்]களிலும் நட்புடன் வாழ்ந்த விவசாயிகளான வேளாளர்களின் பின்னணி அறியாமல் அவர்களின் பாடுகள் உணராமல் நடுநாட்டு - தொண்டைமண்டல வேளாளர்களோடு சேர்த்து ஒட்டுமொத்தமாக ['மம்மானை'யாக]க் கருணையின்றிக் குற்றங் கூறும் 'எல்லாவகைகளிலும் மேல்தட்டுக்குரிய உத்தியோக - பண்பாட்டுப் பின்னணியில் வாழும் 'நூலகக் கூட'[Library Research] ஆய்வாளர்களை என்ன என்று சொல்வது? 'தேவேந்திரகுல வேளாளரும்' அவர்களும் ஒருமுறைகூட எந்தப் பிணக்கும் கொள்ளாமல் வாழ்ந்த ஐம்பது ஆண்டுகளை நான், முன்குறிப்பிட்ட கோவை - பேரூர் சாலைப் பள்ளபாளையத்தில் கண்டிருக்கிறேன். எங்கள் குடும்பத்திலும் கந்தசாமி, கந்தன் என்ற பெயர்கள்தாம் அதிகம்.அயோத்திதாசர் தன் பாட்டனார் அனுபவத்தைச் சொல்லும் விதத்தை மேற்கோள் காட்டும் திரு அன்பு பொன்னோவியம் அவர்களின் சிறப்புரைப் பகுதி இதோ: '' தமிழ்ப் பற்று கொண்ட எல்லிஸ் என்ற ஆங்கிலேயர் தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேர்த்துக் கொண்டிருந்தார். திருக்குறளை அவரிடம் யாரும் கொடுக்கவில்லை. அவருடைய நண்பர் ஆரிங்டன் என்ற மற்றொரு ஆங்கிலேயரிடம் வேலையாக இருந்த அயோத்திதாசருடைய பாட்டனாரான கந்தசாமி என்பவர் திருக்குறளையும் நாலடி நானூறு போன்ற சில ஓலைச்சுவடிகளையும் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக்கொடுக்க வந்துகொண்டிருக்கும் பிராமணர்களிடம் கந்தசாமி கொடுத்ததாகக் கூறியிருக்கிறார். அப்போது அவர்கள் கந்தசாமி தீண்டாதவர் என்றும் சாதிப் பாகுபாட்டையும் கூறினார்கள். எல்லீஸ் மீண்டும் கந்தசாமியை அழைத்து மேலும் சில விளக்கங்கள் கேட்க கந்தசாமி கீழ்வரும் விபரங்களைக் கூறியதாக அயோத்திதாசர் தன் பத்திரிகையில் எழுதியுள்ளார்: "எங்கள் குலத்தோர்க்கும் இவர்கள் குலத்தோர்க்கும் ஏதோ பூர்வ விரோதம் இருக்கிறது. அதனால் இவர்களை இழிவாகக் கூறி துரத்துவது வழக்கம். எங்கள் குலத்தோர் வீதிக்குள் இவர்கள் வந்துவிடுவார்களானால் இவர்களை துரத்தி உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகிவிடும் என்று சொல்லிக்கொண்டு இவர்களைத் துரத்தி இவர்கள் வந்த வழியிலும் சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்து தெளித்துச் சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் (தமிழன் - 10.3.1909)என்று அயோத்திதாசர் எழுதுவதைப் பார்க்கும்போது இந்தப் பகைமை 19 ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. இவரது பாட்டனார் கந்தசாமி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு1785 வாக்கில் வாழ்ந்தவராகும். தமிழ்நாட்டின் தீண்டாமை வரலாற்றிற்கு இச்செய்தி மிக முக்கியமாகக் கருதப்பட வேண்டும். "நிறப்பிரிகை ரவிக்குமாருடன் ழோன்போல் சார்த்தர் குறித்தும் எட்வர்ட் செய்த் பற்றியும் பயனுள்ளபடிப் பேசியிருந்த அந்தப் பொன் காலைப் பொழுதுக்குப் பின்னர், 'அநிச்ச'வில் முகம் தெரியாமல் [வாசிப்பதன்மூலம்] தொடர்புகொண்ட ம. மதிவண்ணன் அவர்களுடைய விவாத முன்வைத்தலில்தான் 'விஷயகனங்க'ளின் ஆளுகைக்கு உட்பட்டு 'சுயம்' இழந்து என் பாட்டனின் சிநேகிதர்பற்றி என்னால் யோசிக்க முடிந்தது. எனவே அவர்களுக்கும் நன்றி.இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே
தமிழ் வணிகர் திருமா மதிவாணன்
மதுரையிலிருந்து திண்டுக்கல் வரும்போது வீடியோ பஸ்களைத் தவிர்க்கமுடியாது. அவ்வாறான ஒரு சமயத்தில் வடிவேலு நகைச்சுவை ஒன்று ஓடியது, வடிவேலு ஒரு தியேட்டர் முதலாளி. அவரின் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அருவாளுடன் ஒருவன் வருகிறான். அவனது மனைவி மற்றொரு ஆணுடன் படம் பார்க்கவந்திருப்பதாகக் கூறுகிறான். படத்தை நிறுத்தி இருட்டாக்கிவிட்டு அந்தப் பெண்ணை மட்டும் வெளியே போகச்சொல்கிறார் வடிவேலு. வெளிச்சம் வந்தபிறகு பார்த்தால் இரண்டு ஜோடியைத் தவிர தியேட்டரே காலியாகிவிடுகிறது. மகிழ்ந்துபோன வடிவேலு கற்பு மிக்க அந்த ஜோடிகளுக்குப் பரிசு அறிவிக்கிறார். அந்தப்பெண்ணோ மற்றொரு ஜோடியிலிருந்த ஆணுக்குப் பரிசை அளிக்கச் சொல்கிறார். அவன்தான் இந்தப் பெண்ணின் கணவனாம். அதிர்ந்துபோகிறார் வடிவேலு என்று அந்த காமெடி போகிறது.கற்புக் காவலர்கள் திருமாவளவனும் இராமதாசும் இந்தப் படத்தை பார்க்கவில்லையோ என்று ஆச்சரியப்பட்டேன். ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கற்பையே அந்த நகைச்சுவைக் காட்சி கேள்விக்குள்ளாக்குகிறது. வைகைத் தமிழன் வடிவேலுவை எதிர்ப்பதா என்று தமிழர்கள் தலைவர்களாகிய அந்த இருவரும் யோசித்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். கற்பு என்பது தமிழர்களின் உன்னதமான கற்பனைகளில் ஒன்று.நீதிபோதனைகள் நிறைந்ததாக ஒரு சமூகம் இருக்கிறது என்று சொன்னால் நீதிபோதனைக்கு அங்கே அவசியம் இருப்பதாக அர்த்தம். கற்பு பற்றி நிறைய பேசினார்கள் என்றால் அங்கு கற்பு பற்றாக்குறை இருக்கிறது என்று அர்த்தம். தமிழகத்தின் பண்பாடே கற்புதான் என்று யார் அதட்டினாலும் கற்பு நெறி அமுலாவதில் பிரச்சனையிருக்கிறது என்றே அர்த்தம். இதன் மறுதலையும் உண்மைதான். எங்கெல்லாம் கட்டிய கணவனுடன் அல்லது மனைவியுடன் கடைசி வரை வாழ்ந்து தொலைத்தே தீர வேண்டும் என்ன ஆனாலும் சரி என்ற நிர்ப்பந்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை மீறுவது திருட்டுத்தனமாக நடந்துகொண்டே இருக்கும். மனமொத்த துணையுடன் வாழ்வதே மனித இயல்பு. மனித இயல்புக்கு எதிரான மிரட்டல்கள், அவை சமூக ரீதியாக, குடும்ப ரீதியாக, ஒழுக்க ரீதியாக, சொத்து ரீதியாக இருக்கும்போது, கள்ளத்தனம் தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. செய்திப் பத்திரிகைகள் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று விளங்கும். ஆணும் பெண்ணும் மனம் ஒத்து வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதும், அது சாத்தியமில்லை என்றானபோது எந்த பிரச்சனையும் இன்றி பிரிந்து தனக்கான துணையைத் தேடிக்கொள்வதும்தான் மனித இயல்பு. உடலின் நிமித்தம் இணை சேர்வதை மிருகங்கள் செய்யும். மனம் சேர முடியாத போது மனிதர்களின் உடலும் சேரமுடியாது போகும் என்ற உண்மையைச் சமூகம் ஒப்புக்கொள்ளாதபோது கள்ளத்தனம் ஒன்றே காதல் வாழ்க்கைக்கான வழியாகிப்போகிறது. அது தமிழ்ச் சமூகத்தில் மலிந்து கிடக்கிறது என்பதைத்தான் பத்திரிகையில் அடுக்கப்படும் கள்ளக்காதல் செய்திகள் சொல்கின்றன. இந்த அவமானகரமான நிலையிலிருந்து மீள வேண்டுமானால், சுதந்திரமாகத் தனது துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை மனிதர்களுக்கு வேண்டும். அதனை நோக்கித் தமிழ்ச் சமூகம் முன்னேறிக்கொண்டிருக்கும்போது திருமணமான ஆணும் பெண்ணும் கட்டாயமாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கற்பு நெறியை நிர்ப்பந்திக்கிற திருமாவும் இ.தாசும் தமிழ்ச் சமூகத்தைப் பின்னுக்கு இழுக்கிறார்கள். பிற்போக்குத் தமிழர்களாகிய இவர்களை தமிழ்ச் சமூகம் எதிர்த்தே ஆகவேண்டும்.கற்பு நெறி என்பது பெண்ணுக்குப் போடப்பட்ட விலங்கு. ஏனென்றால், தமிழ் கற்பு பெண்ணுக்கு மட்டுமே. ஆணுக்கு பொது மகளிர் என்ற அங்கீகரிக்கப்பட்ட முறையை தமிழ்ச்சமூகம் வெகுநாட்களாக வைத்திருக்கிறது. இதன் பொருள் கற்பு நெறி பெண்ணுக்கு மட்டுமே என்பதன்றி வேறென்ன? பொருந்தாத மண வாழ்வில் பெண் மாட்டிச் சாக வேண்டும். ஆண் பொருத்தமான அல்லது தற்காலிகமான துணையைத் தேடிக்கொள்ளலாம் வைத்துக்கொள்ளலாம் என்பது தமிழ் கலாச்சாரமாக இருக்கிறது. நிரூபிக்க வேண்டுமா? வைப்பாட்டி, தேவடியாள், வேசி, சின்னவீடு சக்களத்தி போன்ற வார்த்தைகளுக்குப் பொருத்தமான ஆண் பால் வார்த்தைகளைச் சொல்லுங்கள் பார்ப்போம்.எனவே பெண்ணின் சுயநிர்ணய உரிமையை கற்பு நெறி மறுக்கிறது. அதனை பெண்கள் எதிர்த்தே ஆகவேண்டும். பெண்களை பழமை இருட்டுக்குள் தள்ளத் துடிக்கும் திருமா, இ.தாசு கூட்டணியை பெண்கள் எதிர்த்தே ஆக வேண்டும்.அப்படியானால் பெண்கள் தறிகெட்டுப் போவார்களா? கவலையே படாதீர்கள். மாட்டார்கள். கட்டற்ற பாலுறவு என்ற காட்டுமிராண்டி நிலையிலிருந்து ஜோடி முறையைக் கொண்டுவந்தவர்கள் பெண்கள் தான் என்பதை மனித சமூகத்தின் வரலாறு காட்டுகிறது. உடலுக்காக அல்லது மனதுக்காக வாழ்வது என்ற முறையை அமுல்படுத்தியவர்கள் பெண்கள்தான். அவர்களின் உடல்கூறு கட்டற்ற பாலுறவை அனுமதிப்பதில்ல. ஆனால், ஆண்கள் அனுபவித்து விட்டு ஓடும் உடல் வேட்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பொது மகளிர் முறையைக் கொண்டுவந்தார்கள். இன்றும் இதுபோன்ற சட்டபூர்வ உடல் விற்பனையைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். எனவே, ஆணாகப் பிறந்த எவனும் பெண்ணுக்கு ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் அவசியம் இல்லை.ஆனால், முதலாளித்துவ சமூகம் பெண்ணை உடலாக விற்பனை செய்வதை விரைவுபடுத்தியுள்ளது. அதேசமயம் நிலப்பிரபுத்துவ பண்பாடு பெண்ணை அடிமையாக கட்டுக்குள் வைப்பதை ஆதரிக்கிறது. இந்த இரண்டு கூறுகளும் விரவிக் கிடக்கும் நமது சமூகம் ஒரு பக்கம் பெண் உடல் விற்பனையையும் (நட்சத்திர விடுதிகள், சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள், அரசியல் கட்சிகளின் மேடை வர) நடத்திக்கொண்டே, மறுபக்கம் கற்பின் புனிதம் பற்றியும் பேசுகிறது. சில பத்திரிகைகள் மிகவும் விவரமாக கற்பு நெறி காக்க செய்தி வெளியிட்டுக்கொண்டே பெண் உடல் விற்பனையை நடத்திக் கொண்டிருக்கின்றன. (உதாரணமாக, குஷ்பு பிரச்சனையை ஊதிப் பெரிசாக்கிய தமிழ் முரசு பத்திரிகை தன் தொலைக்காட்சி விளம்பரத்தில் 'சும்மா நச்சுன்னு இருக்கு தமிழ்முரசு' என்ற விளம்பரத்தில் 'நச்' என்ற வார்த்தை வரும்போது ஒரு பெண்ணின் (நடிகையின்) குறுக்குவெட்டு மார்புத்தோற்றப் படம் 'நச்'சென்று தெரியும்படி பார்த்துக்கொள்கிறது). இந்த வெளிவேசத்தை நாம் ஒப்புக்கொள்ளவோ ஆதரிக்கவோ கூடாது.திருமா தன்னை தலித் இனக் காவலனாகக் காட்டிக்கொண்டார். தலித் இன அரசியலை ஒருவர் ஆதரிக்கவில்லை என்றால், அவர் தலித் விரோதி என்றார். அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதற்கு பதிலாக தலித் ஒடுக்குமுறை மட்டுமே பிரதானம் என்ற அவரின் குறுகிய தலித் அரசியல் அதன் எல்லையைத் தொட்டுவிட்டதால் அரசியல் வணிகத்தின் நிமித்தம் அவருக்கு தமிழர் என்ற அடையாளம் தேவைப்படுகிறது. அதே நிலைமைதான் இ,தாசுக்கும். இந்த இரண்டுபேரும் தமிழர் அரசியலை சில்லறையாக வணிகப்படுத்தி வருகிறார்கள். (மொத்த வியாபாரி கருணாநிதி).ஆனால் தமிழர்கள் எதிர்கொள்ளும் விவசாய அழிவு, விவசாயக் கூலி குறைவு, சூறையாடப்படும் தலித்/வன்னியப் பெண்கள் கற்பு, ஆலைகளில் திருமணத் திட்டத்தின் கீழ் சுரண்டப்படும் பெண்கள், அங்கே பறிபோகும் தமிழ் கற்பு பற்றியெல்லாம் கவலையில்லை. அதுமாதிரி சிரமமான காரியங்களை எடுத்து அரசியல் செய்தால் ஓட்டு கிடைக்குமா? பணம் கிடைக்குமா? குவாலீஸ் கார் கிடைக்குமா? மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? நமது சுகமான வாழ்க்கைக்கு என்ன வழி என்பது இந்த இரண்டு அரசியல் தலைவலிகளின் கவலை. எளிதான தமிழர் உணர்வைத் தூண்டிவிட்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் சில சீட்டுகளைக் கருணாநிதியிடமோ, ஜெயலலிதாவிடமோ வாங்கிவிட தங்கள் பலத்தைக் காட்டப் பார்க்கிறார்கள். அவ்வளவுதான். அதனால்தான் இவர்கள் வடிவேலுவைக் கண்டுகொள்ளவில்லை. குஷ்பு சுகாசினியை விடுவதாகவும் இல்லை. மட்டரகமான அரசியல் செய்யும் இந்த இரண்டு பேர்வழிகளையும் தமிழக அரசியலில் இருந்து விரட்டியடிப்பது பெண்களின் தேவையாக உள்ளது. அதைவிட முக்கியமாக தமிழர்களின் தேவையாக உள்ளது.திருமாவின் பேச்சு வரம்பு மீறுகிறது. பெண்விடுதலை பேசுபவர்கள் கையில் ஆணுறை வைத்துக்கொண்டு அலைகிறார்கள் என்றார் அவர். திருமா போன்றவர்கள் அரசியலில் தலையெடுப்பதற்கு முன்பிருந்தும், தலித் விற்பனையை திருமா நிகழ்த்திக் கொண்டிருந்தபோதும், இன்று தமிழ் விற்பனை செய்து கொண்டிருக்கும்போதும் தலித் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களின் பாதுகாப்பு முன்னேற்றம் என்ற சமூகச் செயல்பாட்டில் இருப்பவர்கள் இந்தப் பெண்ணியவாதிகள். இன்றைக்குப் பெண்கள் எட்டியிருக்கும் முன்னேற்றம் அனைத்துக்கும் முதல் காரணம் அவர்கள். அவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசிய திருமா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும்.அப்படியானால் குஷ்பு பேசியது சரியா? சரிதான். முதலாளித்துவ பண்டம், நிலப்பிரபுத்துவ புனிதம் என்ற இரட்டை மதிப்பீட்டு நிலையில் எழும் பெண்ணின் குரல் அது. அது நியாயமானது முற்போக்கானது.அப்படியானால் அவர் என்ன முற்போக்குவாதியா? பெரியாரின் வாரிசா? எதுவும் இல்லை. ஒரு பெண். மேற்கண்ட இரட்டை மதிப்பீட்டில் பலியான அல்லது தன்னையே அதற்கு அர்ப்பணித்துக்கொண்ட ஒரு பெண். தனது வாழ்க்கையின் அவலத்திலிருந்து அவர் பேசினால் அந்தக் கருத்து தவறாகிவிடுமா என்ன? சிகரெட்டை ஊதித் தள்ளி உடல் உபாதைகளை அனுபவிக்கும் நான் சிகரெட் குடிப்பது நல்லதல்ல என்று சொன்னால் அது தவறாகிவிடுமா என்ன?இந்த மொத்த விவகாரத்தில் வெளியே தெரியாத இரண்டு ‘உத்தமர்கள்’ இருக்கிறார்கள். முதலாமவர் ஊடக வணிகத் துறையில் இருக்கும் கருணாநிதி. ஜெ தொலைக்காட்சி வணிகத்தின் பிரதானமாக இன்று இருக்கும் குஷ்புவை வீழ்த்த தனது ஊடகப் பலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் அவர்.மற்றொரு உத்தமர் ஜெ. பெண் என்பதால் அளப்பறிய சிரமங்களுக்கு ஆளான அந்தப் பெண்மணி அவர் வெளியிட்டிருக்க வேண்டிய தனது சொந்தக் கருத்துகளுக்கு எதிராக குஷ்புவைக் கண்டித்துள்ளார். என்ன செய்வது? ஊடக வணிகத்தைப் பார்ப்பாரா? அரசியல் சிக்கல்களைப் பார்ப்பாரா? அல்லது பெண்களின் மீது பரிவு காட்டுவாரா? ஜெவைக் காட்டிலும் குஷ்பு எத்தனையோ மடங்கு மேல். அதற்காக குஷ்புவை முன்னிறுத்தி பெண்ணியவாதிகள் யாரேனும் இயக்கம் கட்ட நினைத்தால் அவர்களுக்கு ஒரு அய்யோ பாவத்தை இப்போதே சொல்லிவிடுகிறேன். குஷ்பு திறமையான வணிகர் என்ற செய்தி அவர்களுக்குத் தெரியாது.கண்ணுக்குத் தெரியும் எதிரிகள் திருமா, இ.தாசையும், கண்ணுக்குத் தெரியாத உத்தமர்கள் கருணாநிதி மற்றும் ஜெவையும் சேர்த்து எதிர்க்க வேண்டியது தமிழகப் பெண்களின் வேலையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரியான இந்த நபர்களின் கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை என்று பெண்கள் அமைப்புகள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். அனைத்துக்கும் முன்னதாக திருமா காண்டம் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்கும் வரை பெண்கள் அமைப்புகள் ஓயக்கூடாது.- மதிவாணன் (mathivanan_c@yahoo.com)
கனம் கோர்ட்டார் அவர்களே... ஆதவன் தீட்சண்யா
நீதிதேவதையின் கண்கள் இங்கே கட்டப்பட்டிருப்பது நியாயத்தை ஒருபோதும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவா?. பாரபட்சமின்றி சார்புத்தன்மையற்று ஒருபால் கோடாமையோடு செயல்படும் ஆன்மத்துணிவு கொண்டதென நம்பப்பட்ட நீதித்தறையின் மீது சந்தேகம் பாரிக்கிறது விஷமாக. எவ்விதத் தலையீடுமற்ற சுதந்திரமான நீதித்துறை என்னும் கனவை அரிக்கும் கரையான்கள் அதனுள்ளேயே ஊறித் திமிர்க்கின்றன. இப்போது தேவை சுதந்திரமா கண்காணிப்பா? எவரின் கேள்வியையும் எதிர்கொள்ளாது வளர்ந்த பிரிட்டிஷ்பாணி மூளையும் வேலையும், மக்களின் கேள்வியெழுப்பும் உரிமையை மதிக்கும் ஜனநாயக மாண்பை உள்ளேற்குமா? சமீபத்திய நிகழ்வுப்போக்குகள் அதன் உள் வளரும் அழிவை முன்னறிவிக்கின்றனவா...1எல்லோரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். சரி, சட்டம் யாருக்கு கட்டுப்பட்டது... சமூகத்திற்கா, நீதிமன்றங்களுக்கா...? நீதிமன்றங்கள் சமூகத்திற்கு உட்பட்டவையா அல்லது அதற்கும் மேலானவையா...? கேள்விகள் எழுகின்றன அனந்தமாய். பதில் தேடும் முயற்சி நீதிமன்ற அவமதிப்பாகி கடுந்தண்டனைத் தாக்குமோ... அச்சம் மேலோங்கி அடக்கிவிடுகிறது. இருப்பினும் ஒரு சாமானியக் குடிமகன் தனது எளிய ஐயங்களை வெளிப்படுத்த இந்நாட்டின் நீதிமன்றங்கள் அனுமதிக்கும் என்று நம்பியே தொடங்க வேண்டியுள்ளது முயற்சியை.பொதுவாகவே, சட்டம் யாவற்றுக்கும் முன்பாகத் தோன்றி இன்னின்னது இப்படியிப்படி இருக்குமாறு உத்தரவிட்டதன் பேரிலேயே சமூகத்தில் சகலமும் உருவானதான புனிதத்தோற்றம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அனாதிக்காலந்தொட்டு சட்டப்படியே சமூகம் இயங்குவதாயும் அதன்முன்னே அனைவரும் சமம் என்றும் நம்புகிற மூடப்பழக்கம் நீடிக்கிறது நெடுங்காலமாய்.சமூக வளர்ச்சிநிலையின் ஒவ்வொரு கட்டத்திலும் அப்போதைக்கு அரசியல், பொருளாதார, பண்பாட்டு அரங்கில் செல்வாக்குள்ள பிரிவினர் தமது நலன்களை தற்காத்துக் கொள்ள செய்திடும் ஏற்பாடாகவே சட்டங்கள் எப்போதும் இருந்திருக்கின்றன, இருக்கவும் போகின்றன. இவர்கள் ஒழுங்கு, கடமை, உரிமை, பொறுப்பு ஆகிய கற்பிதங்களை சட்டம் என்று தமக்கேற்றாற்போல் வரையறுத்து அதை பரிபாலனம் செய்வதே நீதி என்கின்றனர். அதாவது அவர்களின் மேலாண்மைக்கு எதிர்ப்பு வராமலும் வருமானால் அடக்கி நிலைநிற்கவுமான ஏற்பாடுகளைத்தான் அரசியல் பதம் கொண்டு சட்டம், நீதி என்கின்றனர். இயல்பாகவே இச்சட்டங்கள் இன்னொரு சாராருக்கு எதிரானதாக இருப்பதில்தான் அவற்றை உருவாக்கியவர்களின் நலனும் வெற்றியும் பொதிந்திருக்கிறது. இதை மறைக்கவே சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்ற ஆரவாரப் பிரகடனத்தின் முழக்கம். எதுவுமே பொதுவின்றி எதிரெதிர் நலன்கள் பொருதும் களமாக பிரிந்திருக்கும் சமூகத்தில் சட்டம் மட்டும் பொதுவானதாயிருக்கும் என்று நம்புவது கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லிக்கொண்டே கோயிலிருக்கும் தெருவில் நடமாடக்கூட ஒரு சாராரை அனுமதிக்காத போலிமைக்கு ஒப்பானதாகும். செல்வாக்கு பெற்றவர்களின் சட்டத்தால் பாதிக்கப்படுவோர், அதிலிருந்து மீள மேற்கொள்ளும் எத்தனிப்புகளை சட்டவிரோதம் என்று அறிவித்து குற்றவாளிகளாக்கி தண்டிக்கும் நோக்கோடும் அதிகாரத்தோடும் நிறுவப்பட்டவையே அரசு இயந்திரத்தின் நிறுவனங்கள் அனைத்தும். எனில், நீதிமன்றங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மேற்சொல்வதெனில், இவ்வேற்பாட்டில் மட்டற்ற அதிகாரம் பூண்டவையாய் முன்னிற்பவை நீதிமன்றங்களே. மட்டுமன்றி, லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் ( அதிகாரம் என்பதே துஷ்பிரயோகம் தான் என்பது தனி விசயம்), சமன் செய்யவியலாத பாகுபாடுகளால், நிலவும் சமூக அமைப்பின்மீதும் அதனை வெளிப்படையாக கட்டிக்காக்கும் அரசாங்கத்தின் மீதும் அவநம்பிக்கை கொள்ளும் மக்களை, சாதுர்யமான சில தீர்ப்புகளின் வழியாக தணியச்செய்யும் அரசியல் நடவடிக்கையிலும் இவை ஈடுபடத் தயங்குவதில்லை. பொறுப்புவாய்ந்த ஒரு அரசாங்கத்தின் ஸ்தானத்தில் நீதிமன்றங்கள் தம்மை அவ்வப்போது இருத்திக் கொள்வதானது மக்களைக் காப்பதற்காக அல்ல. மாறாக இங்கிருக்கும் சட்டத்தையும் அதன் வழியாக பேணப்படுகிற சமூக அமைப்பையுமே பாதுகாக்கத் துடிக்கின்றன.இன்றைய நீதிமன்றங்களும் சட்டங்களும் இந்திய சமூகத்தின் தேவையிலிருந்து உருவானவையல்ல. காலகாலத்துக்கும் இந்தியாவைச் சுரண்டிக் கொழுக்கும் தனது சாம்ராஜ்யக் கனவைத் தூர்த்த சுதந்திரப் போராளிகளை அடக்கியொடுக்க பிரிட்ஷாரால் நிறுவப்பட்டவை. எத்தனை உயிர்கள் சட்டத்தின் பேரால் பறிக்கப்பட்டிருக்கின்றன...? குடித்த ரத்தம் கொஞ்சமா..? தேசமே திறந்தவெளி சிறைச்சாலையாக சிறுமைப்பட்டு கிடந்ததே... நாகரீக சிந்தையுள்ள யாரும் வெட்கிக்கூசும் அடக்குமுறைகள் அனைத்தும் சட்டத்தைக் காப்பதற்காக நீதிமன்றங்களால் செயல்படுத்தப்பட்டவை தானே...? இந்தியர் அனைவரையுமே எதிரியாய் கருதி உருவாக்கப்பட்ட அக்கொடிய சட்டங்களில் எதையெல்லாம் நீக்கியிருக்கிறோம் சுதந்திரத்திற்கு பிறகு...? அடித்த செருப்பையே கிரீடமாக சூடிக்கொள்ள அடிமை கூட ஒப்பமாட்டான். ஆனால் நாமோ, இயல்பிலேயே இந்தியர்களுக்கு மேலானதாகவும் எதிராகவும் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் சட்டங்களை அப்படியே வைத்திருக்கிறோம். நீதிமன்ற நடைமுறைகளைக்கூட மாற்றிக்கொள்ளவில்லை. மக்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கவும் பத்திரிகைகளின் கழுத்தை நெரிக்கவும் பிரிட்டிஷ் சட்டங்கள் தான் மிகவும் தோதானதாக இருக்கும் என்று ஆதிக்கசக்திகளும் ஆட்சியாளர்களும் கருதியதால் விடுதலையடைந்த ஒரு நாட்டின் பிரத்யேகத் தேவைகளை முன்வைத்து சுயேச்சையான நீதியமைப்பை கண்டடைய வேண்டிய அவசியத்தை உணரவேயில்லை.2அழுக்கண்டாத ஒளிவட்டம் சூடி, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு, தன்னைத்தானே வழிநடத்திக் கொள்ளும் அமானுஷ்யத்தன்மை கொண்ட காவிநிறக் கட்டிடம் என்பதான மாயபிம்பத்தை நீதிமன்றமென இன்றைய மக்கள் தொடர்புச்சாதனங்கள் உருவாக்கியுள்ளன. சைலன்ஸ் என்று டவாலி சத்தம் எழுப்பிய மாத்திரத்தில் உலகமே மயான அமைதியோடு நீதிமன்றத்தை கவனிக்கவேண்டியுள்ளது. கதாநாயகனும் வில்லனும் மோதும் பரவசக்களமாக கோர்ட்சீன்களை சினிமாவில் கண்டிருந்தவர்கள் வாதி, பிரதிவாதிகளாய் காத்திருக்கின்றனர், கோர்ட்டே சொல்லிருச்சு என்ற சமாதானத்தில் மூழ்குவதற்காக. தாம் காத்திருப்பது நீதிக்காகத்தானா என்ற சந்தேகம் உருக்குகிறது அவர்களை.நீதிமன்றம் என்பதும் சராசரி மனிதர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது என்பதை நம்ப மறுக்கிறது மந்தை மனம். சாதி, மதம், இனம், மொழி, பிரதேசம், சுயநலம், ஏற்றத்தாழ்வு, கட்சியரசியல், ஆணாதிக்கம், சொத்துடமை உணர்வுகளால் பீடிக்கப்பட்டதொரு சமூகத்தின் கூட்டுச்சிந்தனைகளால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஒருவரே நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார் என்பதையும் காணத்தவறுகிறோம். காலம் உதறியெறிந்த கருத்துக்களை சுமக்கும் பிற்போக்குத் தன்மையை கடந்தவரா, நிகழ்காலச் சமூகத்தின் இயங்குவிதிகளை அறிந்து செயலாற்றும் அக்கறைகள் அவருக்கு உண்டா, எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளை கையளிக்கும் வகையில் முன்னோக்கிப் பார்க்கும் திறனுண்டா என்பதற்கெல்லாம் நிரூபணமேதும் தராத ஒருவரே நமக்கு நீதிபதியாகிறார். சராசரி உணர்வு நிலையிலிருந்தும் குறுகிய நம்பிக்கைகளிலிருந்தும் விடுபட்டு யாவரையும் ஒன்றென பாவிக்கும் தகுதிநிலை கொண்டவரா என்று சோதித்தறிய அளவுகோல் ஏதுமற்ற நிலையில் நீதியை நிர்வகிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் போன்றே ஒரு தொழிற்கல்வியாக சட்டத்தைப் பயின்று அதன்ரீதியில் சம்பாதிப்பது என்று தேர்ந்து கொண்டதைத் தவிர நீதியை நிலைநாட்டுவதில் அவருக்கு தனித்த விருப்புறுதி எதுவும் கிடையாது. சட்டம் வேறு, நீதி வேறு.நீதிபதியானவர், ஏற்கனவே வரையறுத்து இறுகிய சட்டகத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொள்வதோடு தன் பணி நிறைவடைந்ததாக கருதுவதுதில்லை. மாறாக, அதற்குள்ளிருந்து தனது நோக்கங்களோடே செயல்படுகிறார். சமூகம் குறித்த அவரது புரிதலின்படி அமைந்தப் பார்வையே சட்டப் புத்தகங்களிலிருக்கும் வார்த்தைகளை போர்த்திக்கொண்டு தீர்ப்பாக வெளிவருகிறது. சமூகத்தில் எந்தப் பிரிவின்மீது அவரது அக்கறைகள் சார்ந்துள்ளனவோ அவற்றுக்கு அனுசரணையாக சட்டத்தின் இண்டுஇடுக்குகளில் புகுந்து துழாவியெடுத்து தீர்ப்பாக முன்வைக்கிறார். இதன்மூலம் ஒருசாராருக்கு சாதகமாகவும் அதன் காரணமாகவே மறுசாராருக்கு பாதகமாகவும் அவர் தன்னியல்பாகவே முடிவெடுப்பவராகிறார். கூடவே, தன் வார்த்தையே இப்போதைக்கு இறுதியானது என்கிற அதிகார மயக்கமும் சேர்ந்துவிட அவர் ஒரு எதேச்சதிகாரியாகவும் செயல்படுகிறார். விசாரணைகளின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எவ்வித சட்டப்பூர்வ அந்தஸ்தும் இல்லாததை அறிந்தேயிருப்பினும் வரம்பற்ற முறையில் பலவிதமான விமர்சனங்களை வெளிப்படுத்துகின்றனர். இப்படியான கருத்துக்களின் பரபரப்பில் மக்கள் திளைத்துக் கிடக்கையில் அதற்கு நேரெதிரான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படியானால் தன்னை திருப்பி விமர்சிக்க முடியாத பலஹீனராக குற்றஞ்சாட்டப்பட்டவர் இருக்கிறார் என்கிற மனநிலையின் முறுக்கில் தான் நீதிபதியானவர் பேசுகிறாரோ?தீர்ப்பை கண்டிக்கவோ விமர்சிக்கவோ முடியாது. மேல்முறையீடு தான் செய்யமுடியும். இந்த சட்டப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் பத்திரமாக இருந்துகொண்டு தான் நீதிபதியானவர் தீர்ப்பிடுகிறார். மேல்முறையீடு ஏற்பாடே நீதிபதிகள் தவறு செய்வதற்கான சாத்தியத்தை ஒப்புக்கொள்வதுதானே... தவறிழைப்பதற்கான மனநிலையைத் தாண்டியவரென்ற புனிதமுத்திரை யாருக்குமில்லை.ஒரு வழக்கை இந்த தேதிக்கு முன்பாக விசாரிக்கக்கூடாது அல்லது விசாரித்தேயாக வேண்டும், இவர்தான் விசாரிக்கவேண்டும் அல்லது விசாரிக்கக்கூடாது, இந்த மாநிலத்தில் விசாரிக்கக்கூடாது அல்லது விசாரிக்கவேண்டும் என்றெல்லாம் சமீபகாலங்களில் தொடரப்படும் வழக்குகளும் தீர்ப்புகளும் நீதித்துறையின் நம்பகத்தன்மை மாயையானது என்பதை நீதிமன்றங்களே தம்மையறியாமல் அம்பலப்படுத்திவிடுகின்றன. இவர் விசாரித்தால் இன்னாருக்கு பாதகமாக அல்லது சாதகமாகத்தான் தீர்ப்பிருக்கும் என்ற அனுமானத்தில் அவருக்கு பதிலாக வேறொருவர் தான் விசாரிக்க வேண்டும் என்பதே புதிதாக விசாரிக்கப் போகிறவர் எவ்வாறு விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மறைமுக உத்தரவும் நிர்ப்பந்தமும் தானே...கீழமை நீதிபதிகள் சட்டத்திற்குட்பட்டே தீர்ப்பளிப்பதாக தெரிவித்துக் கொண்டாலும் மேல்முறையீட்டில் அத்தீர்ப்புகள் மாற்றப்படும் பட்சத்தில் கடும் கண்டனத்திற்கும் உள்ளாகிறது. அப்படியானால் சட்டத்தின் படி எது சரியான தீர்ப்பு... ? ஒரு தீர்ப்பு மட்டுமே சரியெனில் தவறான தீர்ப்பளித்த நீதிபதியை வழிநடத்தியது எது? எந்தவொரு தவறுக்கும் ஏதாவதொரு சட்டப்பிரிவைக் காட்டி தண்டனை வழங்குவதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்துவதுமாகிய ஏற்பாடுகள் இருக்கும்போது தவறான தீர்ப்பளித்த எத்தனை நீதிபதிகள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் எல்லாமே மக்களுக்கு பதில்சொல்லும் பொறுப்பில் இருக்கும்போது நீதித்துறை மட்டும் மக்களுக்கு மேலானதாக, மேலிருந்து பார்த்து கீழுக்கு நீதி இறைப்பதாக, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருப்பது மக்களாட்சி முறைக்கு ஏற்புடையதா? வெளிப்படைத்தன்மையற்ற இந்நிலைமையே நீதிபதியின் தன்னிச்சைப் போக்குகளுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கிறது.3பெரும் தொழிற்சாலைகளின் பெருக்கம், அகண்ட தார்ச்சாலைகள், வான் தொடும் கட்டிடங்கள், பேரணைகள் ஆகியவையே நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி என்ற கருத்துடைய நீதிபதியால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தீர்ப்பைத் தரமுடியாது.தலித் சமூகத்தைச் சார்ந்த நீதிபதி உட்கார்ந்த இருக்கையை கங்கை நீர் கொண்டு கழுவி தீட்டு போக்குமளவுக்கு சாதிப்பித்தும் துவேஷமும் உச்சத்திலேறியவரிடம் தீண்டாமை குறித்த வழக்கொன்று வருமானால் அவர் தமது சொந்த நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு சட்டத்தின் வழிகாட்டுதலை மட்டுமே ஏற்று செயல்பட வாய்ப்பில்லை. உல்லாசமான பாலியல் தொடர்புகளில் நாட்டம் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் துயரத்தையும் அவமானத்தையும் உணரமுடியாது. நெறியற்ற வகையில் சொத்துசேர்ப்பது தவறில்லை என்று லஞ்சம் வாங்கும் ஒருவர் நீதிபதியானால் பொதுச்சொத்தை சூறையாடுவோருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கமாட்டார். நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சத்திற்கு நாட்டின் ஜனாதிபதிக்கே பிடிவாரண்டு பிறப்பிக்கும் நீதிபதி இருக்கும் மாநிலத்தில், மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் அங்கு தங்களுக்கு நீதிகிடைக்காது என்று அஞ்சுவதில் தவறென்ன?நீதிபதியின் வார்த்தைகள் ஒரு வழக்கின் தீர்ப்பாகவும் அதுவே நீதிமன்றத்தையே அறிந்திராதவரையும்கூட கட்டுப்படுத்தும் சட்டமாகவும் மாறிவிடுகிறது. எனவே சமூகத்தில் தாங்கள் வகிக்கும் பாத்திரத்திற்குரிய பொறுப்புணர்வையும் நடுநிலைத்தன்மையையும் உணர்ந்து செயல்பட வேண்டியவராகிறார். இந்தியச் சமூகத்தின் பொதுவாழ்வைச் சீரழிக்கும் பிறழ்நெறிகள் அனைத்தையும் கடந்தவர்கள் நீதிபதிகள் என்று நம்பியே சாமானிய மக்கள் இன்னும்கூட நீதிமன்றங்களை நாடிவருகின்றனர். ஆனால் எல்லா வகையிலும் புரையோடியும் அடக்குமுறைக் கருவி என்பதற்கான முழு அர்த்தத்திலும் ஆளும்வர்க்கத்தின் கருத்தியல் செல்வாக்கை வெகுமக்கள் மீது திணிப்பவையாக அரசு இயந்திரம் முழுவதுமே கட்டமைக்கப்பட்டிருக்கும் சூழலில் நீதித்துறை மட்டும் களங்கமற்று மக்களின் நலன் காப்பதாய் இருக்கமுடியாது.கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, பாலியல் கொடுமை போன்ற வழக்குகளில் வெளியாகும் தீர்ப்பானது எவ்வகையாய் இருப்பினும் அவற்றில் நேரடியான பாதிப்பு அல்லது பலன் தனிநபர் அல்லது தனிக்குடும்பம் என்ற அளவிலானது. அதற்கு ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டங்களைப் பற்றிய குறைந்தபட்ச தெளிவே போதுமானதாய் இருக்கக்கூடும். ஆனால் சமூகவியல் பிரச்னைகளை உள்ளடக்கமாகக் கொண்ட வழக்குகளில், நாட்டின் அரசியல் பொருளாதார பண்பாட்டுச் சூழலையும் இணைத்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. தீர்ப்பினால் பலனடையக் கூடியவர்கள் சமூகத்தின் எப்பிரிவினர் என்கிற பார்வை மிக அவசியமானதாய் இருக்கிறது. ஆனால் அதிகாரத்தின் வலிய தடுப்பரண்களால் வெகுமக்களின் வாழ்க்கையிலிருந்து அன்னியப்பட்டு, மேட்டிமை மனோபாவத்தோடு ஒதுங்கிக் கிடக்கிற நீதிபதிகளுக்கு சமூக அக்கறையுடன் கூடிய பார்வை கூடிவருவது எளிதல்ல. இந்தப் பின்னணியோடுதான் சுயநிதிக் கல்லூரிகள் குறித்த வழக்கை பரிசீலிக்க வேண்டியுள்ளது.சுயநிதி கல்லூரி முதலாளிகள் அந்தரத்திலிருந்து வந்தவர்களல்ல. தம்முடைய கைக்காசை கொட்டியாவது இந்த சமூகத்திற்கு கல்வி புகட்டியேத் தீர்வது என்கிற லட்சியவாதிகளுமல்ல. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு நேர்காணலில் சொன்னதுபோல, கல்விச்சாலையை நடத்துவதைவிட சாணியுருண்டை விற்பதுதான் லாபம் என்ற சூழ்நிலை உருவாகுமானால் இவர்களெல்லாம் மாடுமேய்க்கும் தொழிலுக்குப் போய்விடக்கூடியவர்களே. இந்த சமூகத்தின் பல்வேறு வளங்களையும் பயன்படுத்தியே கல்லூரி தொடங்குவதற்கான மூலதனத்தை திரட்டியுள்ளனர். ஏற்கனவே அரசு உருவாக்கியிருக்கும் கட்டமைப்பை பயன்படுத்கின்றனர். அரசின் பல்வேறு கல்விச்சாலைகளில் உருவான அறிவாளிக் கூட்டத்தை தமது கூலியடிமைகளாகப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் இம்முதலாளிகளின் கல்விக்கொள்ளை தொடருவதில் ஏதேனும் பிரச்னைகள் எழுமானால் சட்டம் காவல் நீதி நிர்வாகம் என எல்லா முனைகளிலிருந்தும் அரசின் உதவியைப் பெறுகின்றனர். ஆகவே சமூகத்தின் பொதுவளங்களை, அரசின் உதவிகளை மிகுதியாக பயன்படுத்தி நடக்கும் ஒரு துறையில் அல்லது தொழிலில் அரசின் தலையீடும் அரசுக்கான பங்கும் தேவையாயிருக்கிறது. ஒருவேளை சுயநிதிக் கல்லூரி நடத்துவதை கொள்ளைத் தொழிலாக அறிவித்துவிடும் பட்சத்தில் அத்தகைய குற்றத்தில் பங்கு கேட்பது ஒரு அரசின் தார்மீக நெறிகளுக்கு புறம்பானது என்று வேண்டுமானால் ஒதுங்கிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. கல்வியை ஒரு தொழிலாகவும் வியாபாரமாகவும் சீரழித்திருக்கும் சுயநிதி கல்லூரிகள் விசயத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. வெளிநாட்டிலிருந்து படிக்க வருபவர்களுக்கு இடவொதுக்கீடு வேண்டும் என்று அக்கறை கொள்ளும் நீதிமன்றம் உள்நாட்டிலிருப்பவர்களுக்கு மறுப்பதற்கு என்ன நியாயத்தை கைக்கொண்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது மக்களிடையே. ஒருவேளை நியாயம் எதுவென்பதை நீதிமன்றம் அறிந்தேயிருந்தாலும் சட்ட நுணுக்கங்கள் அடிப்படையில் வேறுவழியின்றி கல்லூரி முதலாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதோ என்றும் கூட அப்பாவித்தனமாய் நம்பியிருந்தனர். எனவேதான் இடஒதுக்கிட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் நிலை உருவானது. ஆனால் அரசாங்கத்தின் அம்முயற்சியை உச்சநீதிமன்றம் எதிர்கொண்ட முறை தேசத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூகத்தின் பொதுவளங்களை பயன்படுத்தி இயங்கும் ஒரு நிறுவனம் சமூகத்திற்கான பங்களிப்பை முறையாக திருப்பிச் செலுத்தவேண்டும் என்ற இயற்கை நீதியின் அடிப்படையில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு என்று வலுப்பெற்றுவரும் கோரிக்கைக்கு சுயநிதி கல்லூரிகளில் இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு பெரும் பின்னடவை உருவாக்கும். இடஒதுக்கீட்டுக்கு எதிரான உயர்சாதி மனோபாவம் ஒரு நாட்டின் உயரிய நீதி பரிபாலன அமைப்பிலிருந்தும் வெளிப்படுமானால் அது தனியார்த்துறையில் இடஒதுக்கீட்டை மறுப்பவர்களுக்கு வலுவூட்டுவதாக அமையும். இப்பிரச்னையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றிருப்பது நம்பிக்கையளிக்கிறது. நீதிபதிகளையும் கண்காணிக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் மத்திய அரசின் அறிவிப்பானது நீதித்துறையை ஜனநாயகப்படுத்துகிற- சமூகத்திற்கு கட்டுப்பட்ட ஒரு அமைப்பாக அதை நெறிப்படுத்தக் கூடிய முயற்சி என்ற அளவில் வரவேற்க வேண்டியுள்ளது.சட்டப்புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும் கண்களைப் பெயர்த்தெடுத்து சமூக நிலவரங்களை பார்ப்பதற்கும் அதில் நீடிக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் அநீதிகளையும் களைவதற்கு தனது சட்டஅறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் சிந்திக்கிற மனவலிமை தமக்கு உண்டு என்பதை நிரூபித்த நீதிபதிகளை கடந்த காலத்தில் இந்நாடு கண்டிருக்கிறது. நீதித்துறையை சக்திமிக்க வகையில் சமரசமின்றி பயன்படுத்தி சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் ஒடுக்குண்ட மக்கள் கையூன்றி எழவும், நாகரீகச் சமுதாயமாய் நாடு பரிணமிப்பதைத் தடுக்கும் அதிகார அத்துமீறல்களை தடுக்கவும் தமது சட்ட மேதமையையும் அயராத உழப்பையும் நல்கிய கண்ணியம்மிக்க அந்நீதிபதிகளை நாடு பெருமிதத்தோடு நினைவுகொள்கிறது. விதிவிலக்குகள் எப்போதும் விதிவிலக்குகளே. விதிவிலக்குகள் பெரும்பான்மையாக மாறுவதற்கான முயற்சி என்பது எளிய மக்களுக்கு நீதியை கொண்டு செல்வதற்கான நெடிய அரசியல் போராட்டத்தினுடன் இணைந்தே இருக்கிறது.- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
தண்ணீர் - தாகத்துக்கா? லாபத்துக்கா?
தண்ணீர் பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். சென்னையின் பல பகுதிகளில் குடம் தண்ணீர் 5 ரூபாய் விலை விற்கிறது. தண்ணீருக்கே மாதம் ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியிருப்பதாகக் கூறிக் குமுறுகிறார்கள் பெண்கள். தமிழகத்தின் பல நகராட்சிகள் 4, 5 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்கின்றன. குழாயடிச் சண்டை முற்றி திருச்சியில் ஒரு கொலையே விழுந்திருக்கிறது.குடிநீருக்காக மக்கள் இப்படித் தவிக்கும் சூழ்நிலையில் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்தித் தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டும். நீர்வளத்தைப் கையகப்படுத்தி இலவசமாகவோ குறைந்த கட்டணத்திலோ மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். தாகத்தைக் காசாக்கும் தண்ணீர் வியாபாரத்தைத் தடை செய்ய வேண்டும்.ஆனால் அரசு என்ன செய்கிறது? தண்ணீருக்காகப் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துகிறது. நெல்லை அருகே கங்கை கொண்டான் எனும் கிராமத்தில் அமையவிருக்கும் கொக்கோ கோலா ஆலைக்கோ, தாமிரவருணி ஆற்றிலிருந்து குழாய் போட்டுக் கொண்டு வந்து, லிட்டர் ஒண்ணரை பைசா விலைக்கு தண்ணீர் விற்க ஒப்பந்தம் போடுகிறது. கோயில்பட்டி, சாத்தூர் மக்களுக்குக் கிடைக்காத தாமிரவருணித் தண்ணீரை கொக்கோ கோலாவுக்கு வழங்கிறது. அதை பாட்டிலில் அடைத்து லிட்டர் 13 ரூபாய் விலைக்கு விற்று தமிழக மக்களைக் கொள்ளையடிக்கப் போகிறது கொக்கோ கோலா.அமெரிக்கக் கம்பெனிக்கு வாரி வழங்குமளவுக்கு இங்கே நீர்வளம் கொழிக்கிறதா? “தமிழகத்தின் நிலத்தடி நீரில் 72 சதவீதம் குடிக்க லாயக்கற்றது” என்று கூறுகிறது பொதுப்பணித் துறை. மீதமுள்ள 28 சதவீகித நீர்வளத்தை போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சிக் காசாக்குகிறார்கள் தனியார் முதலாளிகள். 600 தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் ஏரிகளையும் நிலத்தடி நீரையும் உறிஞ்சுகின்றன. சென்னை நகரில் மட்டும் இவர்களது தண்ணீர் வியாபாரம் மாதமொன்றுக்கு 50 கோடி ரூபாய் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது பொதுப்பணித்துறை. அதாவது, ‘தாகத்தால் தவிக்கும் மக்களைக் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள்’ என்று தனியார் முதலாளிக்களுக்குத் கண்ணைக் காட்டிவிட்டுருக்கிறது இந்த அரசு. ‘அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் பேர்வழிகள். பொதுச் சொத்தைச் சூறையாடும் திருடர்கள், இவர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால் இவர்கள் திருடர்கள் மட்டுமல்ல, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கூலிகள், உலக வங்கியின் அடிமைகள். அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜா.க, தெலுங்கு தேசம் என எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்த அடிமைகளின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இவர்களுக்கு ஆண்டையான உலக வங்கியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.உலக வங்கிக்காரன் என்பவன் யார்? ‘குடிநீர் முதல் கக்கூசு வரை எல்லா நலத்திட்டங்களுக்கும் உதவி வழங்கும் வள்ளல் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஒரு கந்துவட்டிக் கும்பல்; ஏழை நாடுகளுக்கு வலியக்கடன் கொடுத்து வலையில் வீழ்த்தி அந்த நாடுகளின் வளங்களையும் சொத்துக்களையும் வளைத்துப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்குவதுதான் உலகவங்கியின் பணி.‘உலக வங்கி ரேசன் அரசி விலையை உயர்த்தச் சொல்கிறது, மின் கட்டணம்-பேருந்துக்கட்டணத்தைக் கூட்டச் சொல்கிறது’, என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் சட்ட சபையிலேயே பேசுவதை நீங்கள் எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்! மத்திய அரசு முதல், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் வரை அனைத்து மட்டங்களிலும் உலக வங்கி நேரடியாக அதிகாரம் செலுத்துகிறது; கண்காணிக்கிறது.அந்த உலக வங்கிதான் தண்ணீரைத் தனியார் மயமாக்கச் சொல்லி ஆணையிடுகிறது. பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதைப் போலவே ஆறு, குளம், ஏரிகளையும் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கச் சொல்கிறது ‘மக்களுக்கு இலவசக் குடிநீர் வழங்குவது என்ற கொள்கையையே ஒழித்துக் கட்ட வேண்டும்’ என்று வெளிப்படையாக அறிவிக்கிறது.இயற்கையின் கொடையான தண்ணீரை, உயிரின் மூலமான தண்ணீரை, உயிரினங்கள் அனைத்தின் உரிமையான தண்ணீரை ஒரு விற்பனைச் சரக்கென்று சொல்கிறது. ஆறுகளும் குளங்களும் மக்களின் பொதுச்சொத்தல்ல. முதலாளிகள் தொழில் செய்வதற்கான முதலீடு என்கிறது. காற்றைப் போலத் தண்ணீரும் மனிதனின் இயற்கையான தேவை என்பதை மறுத்து, அது காசு கொடுப்பவனுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய சேவை என்கிறது.‘தண்ணீரைத் தனியார் மயமாக்கினால்தான் கடன் தருவேன்’ என்று மிரட்டிய பல ஏழை நாடுகளின் நீர் வளத்தைப் பன்னாட்டு முதலாளிகளின் உடைமையாக மாற்றியிருக்கிறது உலக வங்கி.நிர்பந்தங்கள் மூலம் ரகசியமாக இது நாள் வரை உலக வங்கி திணித்து வந்த தண்ணீர் தனியார் மயத்தை சட்ட பூர்வமாகவும் வெளிப்படையாகவும் செய்கிறது ‘காட்ஸ்’ ஒப்பந்தம். ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தின் படி கல்வி, மருத்துவம், வங்கி, காப்பீடு போன்ற தனியார் மயமாக்கப்பட வேண்டிய சேவைத்துறைகளின் பட்டியலில் தண்ணீரும் ஒரு சேவைத் துறை. இந்த ‘காட்ஸ்’ ஒப்பந்தத்திலும் இதற்கு முந்தைய ‘காட்’ ஒப்பந்தத்திலும் தெரியாமல் ஒரு அதிகார வர்க்கக் கும்பல் கையெழுத்திட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு எல்லா ஓட்டுக் கட்சி ஒப்புதல் அளித்து விட்டன.‘உலக வங்கி - ஐ.எம்.எப் - காட்ஸ் - உலக வர்த்தகக் கழகம்’ என்ற இந்த ஏகாதிபத்திய நிறுவனங்கள் சொல்வதுதான் இனி இந்தியாவின் சட்டம், நிர்வாகம், அரசியல், பொருளாதாரம். சட்டத்துறைகளில் உலக வர்த்தகக் கழகம் என்ன ஆணையிடுகிறதோ அதற்கேற்ப இந்தியாவின் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இறையாண்மையற்ற இந்த அடிமைத்தனத்தைத் தான் மறு காலனியாக்கம் என்று சொல்கிறோம். தண்ணீர் தனியார் மயம் என்பது மறு காலனியாக்கத்தின் ஒரு குரூரமான வெளிப்பாடு.தண்ணீர் தனியார் மயமாக்கப் பட்டால் என்ன நடக்கும்? அது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும், மாதந்தோறும் எண்ணெய் விலை ஏறுவது போல தண்ணீர் விலையும் ஏறக் கூடும். லாப வெறி பிடித்த முதலாளிகள் நீர் வளத்தைப் போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சி இயற்கையை நாசமாக்குவார்கள். நம் கண் முன்னே ஒரத்துப் பாளையம் நீர்த்தேக்கத்தைத் தமது கழிவு நீர் தொட்டியாக மாற்றி எட்டு மாவட்டத்து மக்களின் குடிநீரையும் பாசன நீரையும் நஞ்சாக்கியிருக்கிறார்கள் திருப்பூர் முதலாளிகள்.பன்னாட்டு முதலாளிகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? நீர் வளத்தை அழித்து புல், பூண்டுகள், தாவரங்கள், கால்நடைகள் என எல்லா உயிரினங்களையும் அழித்த அந்தப் பேரழிவை இயற்கையே கூட மீண்டும் சரி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளி விடுவார்கள்.இவையெல்லாம் நாளை வரவிருக்கின்ற அபாயங்கள் அல்ல. இன்று நம் கண் முன்னே தென்னாப்பிரிக்காவில் தண்ணீர் அளிக்கும் ‘கிராமப்புற கூட்டுக் குடிநீர்த் திட்டம்’ இத்தகையது தான். ஏரி, குளங்களை இனி அரசாங்கம் பராமரிக்காது. பயனாளிகளே பராமரித்துக் கொள்வது என்ற பெயரில் நீர் வளங்கள் அனைத்தும் கிராமப் புற ஆதிக்க சக்திகளிடம் ஒப்படைக்கப்படும். சந்தைக்கும் கக்கூசுக்கும் டெண்டர் எடுத்த சமூக விரோதிகளைப் போல பாசன நீருக்கு இவர்கள் விவசாயிகளிடம் விருப்பம் போல பணம் பிடுங்குவார்கள். தமிழகத்திற்கு உலக வங்கி வழங்கியிருக்கும் இந்த திட்டத்தை மராட்டிய காங்கிரசு அரசு சட்டமாகவே நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டத்தின் படி ஒரு ஏக்கருக்கு ஒரு போகத்துக்கு விவசாயி கட்ட வேண்டிய தண்ணீர் வரி ரூ.8000. ஏழை நடுத்தர விவசாயிகளை விவசாயத்தை விட்டே துரத்துவதுதான் உலக வங்கியின் தண்ணீர் தனியார்மயத் திட்டம்.தண்ணீர் தனியார்மயமென்பது தண்ணீர்ப் பிரச்சனை மட்டுமல்ல. தண்ணீரை இழந்தால் நாம் சோற்றையும் இழப்போம். விதைகளின் மீது நமது விவசாயிகள் கொண்டிருக்கும் பாரம்பரிய உரிமையை ரத்து செய்து அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குகிறது மத்திய அரசின் புதிய விதைச் சட்டம். உரமும், பூச்சி மருந்தும் தான் ஏற்கனவே அவர்களது கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அரசு கொள்முதல் ஒழிக்கப் பட்டு நாடெங்கும் ஐ.டி.சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதலைத் தொடங்கி விட்டன. ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் பன்னாட்டுக் கம்பெனிகள் ஏற்றுமதிக்கான விவசாயம் செய்வதற்காகவே ‘தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்’ நாடெங்கும் கொண்டு வரப்படுகிறது. தற்போது தண்ணீர் விற்பனையில் இறங்கியிருக்கும் அமெரிக்க மான்சாண்டோ நிறுவனம் ‘மொத்த உணவுச் சங்கிலியையும் கைப்பற்றுவது தான் எங்கள் திட்டம்’ என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது.தண்ணீர் தனியார் மயமாக்கப் பட்டால் நாம் சுய சார்பை இழந்து உணவுக்கும் தண்ணீருக்கும் கப்பலை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்போம். தண்ணீரைக் கட்டுப்படுத்துபவன் எல்லா ஆதாரங்களையும் கட்டுப்படுத்த முடியும். தண்ணீரை இழந்தால் பெயரளவிலான இறையாண்மையையும் நாம் இழப்போம். பிளச்சிமாடாவின் கதை நமக்கு ஒரு பாடம்.முப்போகம் விளைந்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தில் கொக்கோ கோலா நிறுவனம் ஆலை அமைத்தது. கோடிக்கணக்கான லிட்டர் நீரை நிலத்திலிருந்து உறிஞ்சி எடுத்தது. ஒரு லிட்டர் கோக்கிற்கு எட்டு லிட்டர் ரசாயனக் கழிவு நீரை வெளியேற்றியது. பிளாச்சிமடா கிராமத்தின் நிலம் அழிந்தது. கோக் நிறுவனம் அனுப்பும் தண்ணீர் லாரிக்காக மக்கள் கையேந்தி நிற்கும் நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் பிளச்சிமடாவை சுடுகாடாக்கிய கோக் தனக்கு சாதகமாக நீதிமன்ற உத்திரவும் பெற்று விட்டது. இப்போது தாமிரவருணியைக் குறி வைத்திருக்கிறது.கோக் ஒரு குறியீடு. ‘உலகின் நீர் வளங்கள் அனைத்தும் எம் தனி உடைமை’ என்று கூறும் பன்னாட்டு தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு கோக் ஒரு பிரதிநிதி. நமது ஆறு குளங்களூம் நிலத்தடி நீர் வளமும் நமக்கு சொந்தமா, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி.- திருநெல்வேலி கங்கைகொண்டானில் செப்டம்பர் 12,2005 அன்று ‘கோக்’ ஆலைக்கு எதிராக நடத்தவிருக்கும் மறியல் போராட்டம் தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகியவை வெளியிட்டுள்ள துண்டறிக்கையிலிருந்து.
‘ஒடுக்கப்படவர்களின் ஆயுதமாக பௌத்தம்’ - சாத்தியப்பாடு குறித்த ஓர் அவதானம்
‘ஒடுக்கப்படவர்களின் ஆயுதமாக பௌத்தம்’ - சாத்தியப்பாடு குறித்த ஓர் அவதானம்
யதீந்திரா
1
‘கீற்று’ இணையத்தினூடாக தமிழக சிந்தனைத்தளத்தை தொடர்ந்து அவதானித்து வருகின்றேன். பொதுவாகவே தமிழகத்தின் அரசியல் மற்றும் சிந்தனைப் போக்குகளை ஈழத்தவர்களாகிய நாம் அவதானிப்பதும், ஈழத்தின் அரசியல் மற்றும் சிந்தனைப் போக்குகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அவதானிப்பதும் ஒரு தொடர் செயற்பாடாகவே நீடித்து வருகின்றது. அப்படித்தான் சமீபத்தில் கீற்றில் இணைக்கப்பட்டுள்ள ‘தலித்முரசு’ இதழ்களை அவதானித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் கருத்தைப் பார்த்தேன். அது 2006 செப்டம்பரில் வெளியான ‘தலித் முரசு’ இதழில் இடம்பெற்றிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டதே இக்கட்டுரை.
அயோத்திதாசரின் தமிழன் இதழ்களின் திரட்டிய தொகுப்பு வெளியீட்டின்போது பேசிய தொல்.திருமாவளவன், பௌத்தம் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். அவர் கூறியிருப்பது கீழே...
“உலகிலேயே மூத்த மதம் பவுத்த மதமாகும். அதன் பிறகே பிற மதங்கள் தோன்றி தங்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகளை பவுத்தத்திலிருந்தே பெற்றுக் கொண்டன. உலகுக்கு பவுத்தத்தின் கொடை என்பது தமிழர்களின் கொடையாகும். பவுத்தம் ஒரு மதமன்று, அது தோன்றிய காலம் முதலே அவைதீக நடைமுறையைச் சார்ந்த பகுத்தறிவு இயக்கமாகும். அன்றும் இன்றும் ஒடுக்கப்படவர்களின் ஆயுதமாக பவுத்தம் திகழ்கின்றது.”
(‘தலித்முரசு செம்டம்பர்- 2006’)
2
தமிழகத்தில் தலித்திய சிந்தனையை முன்னிறுத்தி செயற்படுபவர்கள் மத்தியில் பௌத்தத்தை ஒரு விடுதலை சிந்தனையாக குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சிந்தனையாக விவாதிக்கும் போக்கொன்று நிலவி வருகின்றது. அம்பேத்கர் வழிவந்த இந்த சிந்தனைப் போக்கை தமிழக தலித்திய அரசியல் மற்றும் இலக்கிய செயற்பாட்டாளர்கள் முதன்மைப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. பௌத்தம் ஒரு விடுதலைச் சிந்தனையென்று வாதிடும் இவர்களிடம், அதன் சமகால போக்கு குறித்து எந்தவிதமான விமர்சனங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆதரவு சக்திகளில் ஒருவரான தொல்.திருமாவளவன் ஈழத்தில் பௌத்தம் சிங்கள ஒடுக்குமுறை அரசியலில் எவ்வாறு பங்காற்றி வந்தது, வருகிறது என்பது பற்றிய ஆராய்வில்லாமல் ‘பௌத்தம் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமாகத் திகழ்கின்றது’ என்று குறிப்பிடுவது பொருத்தமான ஒன்றாக எனக்குத் தெரியவில்லை.
பௌத்தம் தோன்றிய நாடு இந்தியா எனினும் அது தோன்றிய நாட்டிலேயே நிலைகொள்ள முடியாதளவிற்கு பௌத்த இயக்கம் வைதீக எதிர்ப்புக்களைச் சந்தித்தது, இறுதியில் சிதைந்து போனது. பௌத்தம் ஒரு மதமல்ல, அது ஒரு தத்துவம் என்ற வாதத்தை கருத்து நிலையில் ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், அது நிலைகொண்டுள்ள நாடுகளில் அதனால் ஒரு மதமாகத்தான் உயிர்வாழ முடிந்ததேயொழிய தத்துவமாக அல்ல. பௌத்தத்தின் அடிப்படையான - உயிர்களை மதித்தல் என்னும் வாதம் அதனை பின்பற்றும் நாடுகளில் வலுவிழந்த ஒன்றாகவே இருக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணம்தான் சிறிலங்கா தேசமாகும்.
கடவுள் - மதம் என்ற விடயங்கள் குறித்து எனக்கு எந்தவிதமான ஈடுபாடுகள் இல்லாவிட்டாலும், நான் சில வேளைகளில் நினைப்பதுண்டு - ஒரு வேளை இலங்கையில் பௌத்தம் சிங்கள இனவாதத்தின் ஊதுகுழலாக தொழிற்படாது இருந்திருக்குமானால் நான் ஒரு தமிழ் பௌத்தனாக இருந்திருக்கக் கூடும். ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இலங்கையில் நிலவும் மேலாதிக்க அரசியலின் அடிப்படையே - இலங்கை என்பது ஒரு சிங்கள பௌத்த நாடாகும் என்ற பெரும்பான்மை நிலைப்பாடுதான். சிங்களத்தின் சகலவிதமான அரசியல் உரையாடல்களும் இந்த நிலைப்பாட்டில்தான் வேர் கொண்டிருக்கின்றது. இன்றைய சிங்களப் பேரினவாத கருத்துருவம் என்பதே பௌத்த மத நோக்கிலிருந்தும் அதனைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட பௌத்தமத சங்கங்களிலிருந்தும் உருப்பெற்றதாகவே வரலாற்றியல் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். இலங்கையின் சமகால சிங்களத்துவ அரசியல் நகர்வுகளின் போதெல்லாம் இது வெள்ளிடைமலையாகத் தெரியும் ஒரு நடைமுறை உண்மையாகும். கொழும்பின் அரசியல் தலைமையை கைப்பற்றும் ஒவ்வொரு ஆட்சியாளரும் தமது முதல் கடமை சிங்கள பௌத்தத்தை பேணிப் பாதுகாப்பதுதான் என்று கருதுகின்றனர். இலங்கையைப் பொருத்தவரையில் சிங்கள ஆளும் வர்க்கத்தை பாதுகாப்பதற்கான ஒரு கருத்தியலாகவே பௌத்தம் தொழிற்பட்டு வருகின்றது என்பதில் விவாதங்களுக்கு இடமில்லை.
இந்த இடத்தில் இலங்கையில் பௌத்தத்தின் தோற்றம் குறித்தும் சில விடயங்களை இணைத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். இலங்கையில் பௌத்தத்தின் வருகையானது இந்தியாவின் ஊடாகவே நிகழ்ந்தது. வடஇந்தியாவில் உருவாகிய பௌத்தம் தென் இந்தியா வரை பரவியதுடன் இந்தியாவிற்கு வெளியிலும் பரவலாயிற்று. பொதுவாக இந்தியாவில் ஏற்படும் அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் இலங்கையைப் பாதிப்பது வழக்கமான ஒன்று என்ற அடிப்படையிலேயே இதனை நாம் நோக்க வேண்டும். ஆனால் கி.பி முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பௌத்த சிந்தனைக்குள் ஏற்பட்ட தேரவாதம் - மகாயாணம் என்னும் பிளவானது பௌத்தம் பரவிய இடங்களிலும் முரன்பாடுகளை தோற்றுவித்தது.
மகாயானம் தென் இந்தியாவிற்கு பரவியதுடன் அங்கிருந்து இலங்கையினுள்ளும் பரவியது. இதனால் இலங்கையிலும் தேரவாதம் - மகாயானம் என்ற முரண்பாடுகள் வலுவடைந்தன. இந்த முரண்பாடுகள் வன்முறைகளாகவும் நாடுகடத்தல்களாவும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. தென்னிந்திய தமிழ் பிக்குவான சங்கமித்திரே மகாசேனன் என்ற மன்னனை மகாயான பிரிவுக்கு மதமாற்றம் செய்தார். இதனைத் தொடர்ந்தே இலங்கையில் தேரவாதப் பரிவு பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. இதுவே காலப்போக்கில் தமிழ் - சிங்கள முரண்பாடாக உருப்பெற்றதாகவே வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். இது பற்றி போராசியர் எஸ்.பத்மநாதனின் கருத்து இந்த இடத்தில் இணைக்கத்தக்கது.
“மகாசேனன் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 207 - 30) மகாயானத் தத்துவங்களை எடுத்துரைத்தவர்களின் செல்வாக்கிற்கு அரசசபை உட்பட்டது. மகாசேனன் மகாயானத்தைத் தழுவிக் கொண்டான். சோழ நாட்டிலிருந்து வந்த சங்கமித்தர் என்ற பிக்குவே அரசனை மதம் மாற்றினார். சங்கமித்தரின் தலைமையில் மகாயானவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் மகாவிகாரை பெரிதும் பாதிப்புற்றது. மகாசேனன் காலத்தில் மகாவிகாரை அடக்கி ஒடுக்கப்பட்டமை அதன் ஆதரவாளர்களின் மத்தியில் மிகக் கசப்பான நினைவுகளை ஆழப்பதித்தது. இந்த நிகழ்வின் விழைவாக தமிழர்களின் அரசியற் பண்பாட்டுச் செல்வாக்கிற்கெதிரான பகைமையுணர்வு வலுப்பெற்றது”
“பௌத்த மதம் சிங்கள இனத்தின் இணைப்பாக்க சமயமாயிற்று. ஆனால் அது தமிழ் நாட்டில் ஒரு போதும் முன்னிலையில் நின்றதில்லை. அது செழிப்புற்றிருந்த நிலையங்கள் (பௌத்த நிலையங்கள்) மகாயான செல்வாக்கிற்குட்பட்டிருந்தன. இந்நிலையங்களிலிருந்து மகாயான சிந்தனைகள் இத்தீவிற்கு பரவின. மகா விகாரையின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் அழித்துவிடக் கூடியளவிற்கு மகாயானச் செல்வாக்கு ஓங்கியிருந்தது.”
இதிலிருந்து நாம் தமிழ்நாட்டில் செல்வாக்கடைந்திருந்தது மகாயான பௌத்தம் என்பதைக் காணலாம். ஆரம்பத்தில் சிங்கள, தமிழ் பிக்குகள் என்ற வேறுபாடுகள் இருக்கவில்லை. புகழ் பெற்ற பௌத்த தர்க்கவியல் அறிஞர்களான திக்குநாகர், நாலந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்த தர்மபாலதேரர் மற்றும் போதிதர்மதேரர் ஆகியோர் காஞ்சியைச் சேர்ந்த தமிழர்கள் ஆவர். ஆனால் தேரவாத - மகாயான கருத்து முரண்பாடுகள் பின்னர் தமிழ் - சிங்கள முரண்பாடாக வளர்ச்சியடைந்தது. இது முதலில் இந்திய எதிர்ப்பாகவும் பின்னர் தமிழர் எதிர்ப்பாகவும் வளர்ச்சியடைந்து உறுதியடைந்தது. இன்றைய ஈழத் தமிழர் விரோத அரசியல் என்னும் மரத்தின் வேர்கள், ஆழப்பதிந்திருப்பதோ மேற்படி வரலாற்றில்தான்.
இலங்கையில் பௌத்தத்தின் நிலைமை இதுவென்றால், இந்தியாவில் நடந்ததோ வேறு. குறிப்பாக தமிழகத்தில் ஆரம்பத்தில் தேரவாத - மகாயான கருத்து முரண்பாடுகளாக இருந்த பௌத்த மதச் சிக்கல்கள் பின்னர் இந்து - பௌத்தமத முரண்பாடாக உருமாறியது. ஏலவே படிப்படியாக சரிவடைந்துவந்த பௌத்தம் கி.பி 6ஆம் நூற்றாண்டளவில் இந்துமதத்தின் வலுவான எதிர்ப்புக்களை எதிர்கொண்டிருக்கிறது. இங்கு எதிர்ப்புக்குள்ளாகியது மகாயான பௌத்தமே தவிர தேரவாத பௌத்தம் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிலைமையின் தொடர்சியாக காலப்போக்கில் இந்துமதம் மகாயான பௌத்தத்தை தனக்குள் உள்வாங்கி கரைத்துக் கொண்டது. இது பற்றி வரலாற்று ஆய்வாளர் கே.எம். பணிக்கர் குறிப்பிடும் கருத்துக்கள் இந்த இடத்தில் பொருத்தமானது.
“கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் புத்த பிரான் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு அவர் வழிப்பாட்டிற்குரிய கடவுளாக பிரகடனப்படுத்தப்பட்டார். மச்ச புராணத்தில் இவர் அவதாரங்களில் ஒருவராக இணைக்கப்பட்டுள்ளார். பாகவத புராணமும் புத்தபிரானை விஷ்ணுவின் ஓர் அவதாரம் என்று கூறுகிறது 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டின் மூலம் தென்னிந்தியாவிலும் புத்த பிரான் ஒரு அவதாரமாகக் கணிக்கப்பட்டார் என அறியமுடிகின்றது”
நான் மீண்டும் எனது பிரதான விடயத்திற்கு வருகிறேன். இந்த வரலாற்று பின்புலத்தில் பார்த்தால் பௌத்தம் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமாக இருக்கிறதென்ற வாதத்தில் பௌத்தத்தை பொதுமைப்படுத்தி நோக்கும் ஆபத்து நிகழ்ந்திருக்கிறது. அதாவது பௌத்தத்தில் தமக்கான விமோசனத்தைத் தேடும் தலித்தியர்களிடம் மகாயான - தேரவாத பௌத்த முரண்பாடுகள் குறித்த சரியான மதிப்பீடுகள் இல்லை. இது ஒரு குறைபாடு. மற்றையது ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு மதத்தை பயன்படுத்திக் கொள்ள முற்படும்போது அதன் நீடித்த தன்மை குறித்த பார்வை இருக்க வேண்டியது அவசியமாகும். அப்படியொரு பார்வை இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
எமது அனுபவத்தில் பார்த்தால் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் தீண்டாமை எதிர்ப்பு நோக்கில் கிறிஸ்தவத்தை தழுவிக் கொள்ளும் போக்கொன்றும் இருந்தது. அன்றைய சூழலில், அது ஒரு தற்காலிக விமோசனத்தை வழங்கியிருக்கலாம். ஆனால் அவ்வாறு கிறிஸ்தவத்தைத் தழுவிக் கொண்டவர்களும் தமது புதிய கிறிஸ்தவ வாழ்க்கையில் தமது முன்னைய இந்துமதச் சடங்குகளை, வழமைகளை பின்பற்றுபவர்களாக இருந்தனரே தவிர கிறிஸ்தவ தத்துவத்தையோ அதன் ஏற்றத்தாழ்வுகளை மறுதலிக்கும் போக்கையோ பின்பற்றவில்லை. அவர்கள் இறை வழிபாட்டில் கிறிஸ்தவர்களாகவும் நடைமுறை வாழ்வில் இந்துக்களாகவுமே இருந்தனர். இப்படியொரு நிலைமை பௌத்திற்கு நேராது என்று நாம் எப்படி வாதிட முடியும்.
ஒரு மொழியைப் பேசும் மக்கள் என்னவிதமாக நம்பிக்கைளைக் கொண்டிருந்தபோதும் அவர்கள் மத்தியில் வழக்கமாக இருந்துவரும் நடைமுறைகளை அவர்களது புதிய நம்பிக்கைள் அழித்துவிடுவதில்லை என்ற உண்மையைத்தான் மதத்தை விமோசனமாகக் கொள்வோரிடமிருந்து நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. சமூக கட்டமைப்பிலுள்ள ஏற்றத்தாழ்விற்கான அடிப்படைகளை தகர்க்காமல் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளாமல் அவற்றை வெறுமனே மதச் சிந்தனைகளால் அழித்துவிட முடியுமென நம்புவது ஒரு அறிவியல் தழுவிய வாதமல்ல என்பதே எனது துணிபு.
எனவே தொல்.திருமாவளவன் கூறும், ‘பவுத்தம் அன்றும் இன்றும் ஒடுக்கப்படவர்களின் ஆயுதமாக திகழ்கின்றது’ என்னும் வாதம், இன்று பௌத்தம் உயிர்வாழும் நாடுகளின் அரசியல் அனுபங்களிலிருந்து நோக்கும்போது கனதியிழந்து போகிறது. திருமாவளவன் சொல்வது போன்று அன்று பௌத்தம் அப்படியொரு பங்கை வகித்திருக்கலாம் ஆனால் இன்று அது அவ்வறானதொரு பங்கை ஆற்றவில்லை.
“தனது தத்துவ போதனைகள் 500 வருடங்கள் மாத்திரம் நிலைக்கும்” என்று புத்தர் கூறியதாக ஒரு பாரம்பரிய செய்தி உண்டு. ஆனால் அது இன்று வேறு தன்மையில் நிலைத்திருக்கிறது. புத்தரின் போதனைகள் மிகவும் சுருக்கமானவை, ஆசைகள் துன்பத்திற்குக் காரணமாகின்றன. ஆசைகளைத் துறந்தவன் விடுதலை பெறுகிறான். நன்கு வேயப்படாத வீட்டுக் கூரையிலுள்ள துவாரத்தினூடாக மழை நீர் உள்நுழைவதுபோல் ஜம்புலனை அடக்காதவரிடம் தீயசெயல்கள் குடி கொள்கின்றன. கோபம், பேராசை, தீய நடத்தை என்பவற்றைத் துறந்தவனே துறவி. கொல்லாமை அவனுடைய மிகப்பெரிய நற்செயல். ஆனால் இதிலுள்ள அவலம் என்னவென்றால், இலங்கையில் அவர் அடங்கா வெறியின் குறியீடாக மாறிப்போயிருப்பதுதான்.
இலங்கையில் புத்தர்சிலை என்பது ஆக்கிரப்பின் குறியீடாகத் திகழ்கின்றது. எனவே இலங்கை அனுபவத்தில் நின்று நோக்கும் போது, ஒரே நேரத்தில் பௌத்தம் ஒடுக்குமுறை அரசியலுக்கான கருத்தியலாகவும் தமிழக தலித்திய அர்த்தத்தில் விடுதலையின் குறியீடாவும் இருக்க முடியுமென்பது ஒரு சரியான தெரிவாகவோ அல்லது ஒரு சரியான பார்வையாகவோ இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானதாகும். எனினும் இது குறித்து பரந்த தளத்தில் உரையாடல்கள் இடம்பெற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
- யதீந்திரா (jathindra76@yahoo.com)
Sunday, April 12, 2009
உள்நோக்கிப் பேசுவதுஆதவன் தீட்சண்யா
1.அரசியல் என்றதும் கட்சிகளை உருவகப்படுத்திக் கொள்ளும் சீக்குப் பிடித்த மனநிலையை நாம் விட்டொழிப்பது நல்லது. அரசியல் என்பது கட்சியோடு தொடர்புடையதல்ல. சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் அரசியலோடு கட்சிகள்தான் தம்மை தொடர்புபடுத்திக் கொள்கின்றன. பொருளியல் மற்றும் பண்பாட்டுத் தேவைகளை எவ்வாறு உற்பத்தி செய்து கொள்வது, அவற்றை எவ்வாறு தமக்குள் பகிர்ந்து கொள்வது, இந்த பகிர்வு சமத்துவமானதா ஏற்றத்தாழ்வானதா, சக மனிதர்களுக்கிடையேயான உறவுநிலை எத்தகையது, ஆண் பெண் உறவு எவ்வாறிருக்க வேண்டும் என்பதையெல்லாம் எந்தவொரு கட்சியின் தலையீடும் இல்லாமல் ஒவ்வொரு சமூகமும் தனது வளர்ச்சிப் போக்கில் சுயேச்சையாக தேர்ந்துகொள்கிறது. நிலவும் ஒரு சமூக அமைப்பின் இத்தகைய அடிப்படைகளையும் அதன் இயங்குவிதிகளையும் இயக்கு சக்திகளையும் குறித்த அறிவு அல்லது புரிதலே அரசியல் எனப்படுகிறது.நிலவும் அமைப்பை அப்படியே மாற்றமின்றி ஏற்றுக்கொள்வது, அடிப்படைகளை தக்கவைத்துக் கொண்டு சிற்சில மாற்றங்களோடு தொடர்வது, முற்றாக மாற்றியமைப்பது என்கிற கருத்தோட்டங்களே - அரசியல் கண்ணோட்டம் எனப்படுகிறது. (இதில் ஏதாவதொரு வகை கண்ணோட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கிறவையாகவே கட்சிகள் தோன்றுகின்றன.)இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை அது சாதிகளாகப் பிளவுண்டு, அந்தந்த சாதியின் படிநிலைக்குத் தகுந்த அதிகாரத்தையும் பொருளியல் வளங்களையும் பண்பாட்டு மேன்மைகளையும் கொண்டதாக இருக்கிறது. திருப்பிச் சொல்வதெனில் படிநிலை இறங்குமுகத்தில் வரும்போது எல்லாவகையிலும் புறக்கணிக்கப்படுகிறவர்களாகவும், அந்த புறக்கணிப்பை எதிர்க்காமல் இருக்கும் பொருட்டு ஒடுக்கப்படுகிறவர்களாகவும் தலித்துகளே எஞ்சுகின்றனர். எனில் இங்கு தலித் அரசியல் என்று முன்மொழியப்படுவது எது? பெரும்பாலும் இந்த கேள்விக்கான பதில், உள்ளாட்சி மன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரையான அதிகாரமையங்களில் சிறுவீதத்தை தலித்துகளுக்கு ஒதுக்கிக் கொடுப்பதுதான் என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அல்லது முழுக்க முழுக்க தலித்துகள் மட்டுமே அங்கம் வகிக்கிற - தலித்துகளால் மட்டுமே தலைமையேற்று நடத்தப்படுகிற அமைப்புகளை உருவாக்கி தேர்தல்களில் ரிசர்வ் தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வது என்கிற புரிதலும் இருக்கிறது. நிலவக்கூடிய சாதிய சமூக அமைப்பைச் சிதைக்காமல் அல்லது சின்னச்சின்ன சேதாரங்களை மட்டும் நிகழ்த்தி இங்குள்ள அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு இந்த அமைப்பிற்குள்ளேயே தலித்துகளால் வாழ்ந்துவிட முடியும் என்பதிலிருந்து இந்தப் புரிதல்கள் உருவாகின்றன.ஆனால், உலகின் வேறெந்த சமுதாயத்திலும் இல்லாத தனித்துவமாக இருக்கும் சாதியமைப்புக்குள் சிற்றளவிலான மாற்றங்களை நிகழ்த்தி சில்லரைச் சலுகைகளையும் உரிமைபோல் தெரிகிற ஏமாற்றுகளையும் வைத்துக்கொண்டு தலித்துகளால் இங்கு பிற குடிமக்களைப் போல வாழ்ந்துவிட முடியுமா? இந்த கேள்விகளுக்கான எளிய பதில், இல்லை என்பதுதான்.2.ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்ற விரிந்த மக்கள் திரளை குறிப்பதாக முன்மொழியப்பட்ட தலித் என்கிற பொது அடையாளம் தீண்டத்தகாத சாதியினரை மட்டுமே குறிப்பதாய் மாறியுள்ள நிலையில் அவர்களது உடனடித் தேவை தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுபடுவதுதான் என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த புரிதலின் அவக்கேடான விளைவு என்னவென்றால் தீண்டாமையை ஒழிப்பதன் மூலம் சாதிப் பிரிவினையின் கடுமையைக் குறைத்து நாளடைவில் சாதி என்பதை தேவையற்ற ஒன்றாக மாற்றி, தானாகவே உதிர்ந்துவிடும் ஒன்றாக கற்பனை செய்து கொள்கிற செயலற்றத் தன்மைக்கு தலித்துகளை இட்டுச் செல்வதுதான். அடிப்படையில் இதுவும் முன்பே சொல்லப்பட்ட சீர்திருத்தவாதத்திற்குள் போய் முடங்கிப் போவதற்குத்தான் வழிவகுக்கும். அப்படியானால் அதிதீவிரம் பேசி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான உடனடிப் போராட்டங்களை தலித் அரசியல் நிராகரிக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.தீண்டாமை சாதிக்கு வெளியே இருப்பதல்ல. சாதிக்குள்ளிருந்துதான் தீண்டாமை உருவெடுக்கிறது. ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் இவரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று யாரும் தீர்மானம் கொள்வதில்லை. அவரது சாதியை அறிந்து கொண்ட பின்தான், அவரோடு தான் எவ்வாறு பழகுவது என்பது குறித்த முடிவை ஒருவர் எடுக்கிறார். வெளிப்படையாக அவரை ஒதுக்கிவைக்க சூழல் அனுமதிக்காத போது எதற்கு வம்பென்று ஒதுங்கிக் கொள்வதன் மூலம் தீண்டாமை புதிய வடிவமெடுத்து நிலைநிற்கிறது. ஆகவே சாதி இருக்கும் வரை தீண்டாமை இருக்கும். தீண்டாமை இல்லாதபோதும் சாதி இருக்கும். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு சைவப்புலியாக இருந்து கொண்டிருக்காது. தன் இருப்புக்கும் தூய்மைக்கும் பங்கம் ஏற்படுவதாக அஞ்சும் நிலை வந்தால் அப்போது அதன் கடைவாயில் கோரைப்பல் முளைத்து குரல்வளையைக் கவ்வும். அல்லது அப்போதைக்கு எது சாத்தியமோ அந்த வடிவிலான தீண்டாமையை அது வெளிப்படுத்தும்.தீண்டாமையை கடைபிடிக்கிறவர்களுக்கு தங்களது வெறுப்பை ஒரு தலித்துக்கு எப்படி உணர்த்த முடியும் என்ற நுட்பம் கைவரப் பெற்றிருக்கிறது. இந்த அவமானத்தையும் புறக்கணிப்பையும் தலித்துகளும் மிகச்சரியாகவே உணர்ந்து கொள்கின்றனர். இது இருதரப்பாருக்குமிடையேயான ஒரு சங்கேத மொழிபோல நிகழ்ந்து விடுகிறது. பல தருணங்களில் தாங்கள் அவமதிக்கப்பட்டு விட்டதாக தலித்துகள் கூறும்போது அதை மற்றவர்களால் உணரமுடியாமல் போவதற்கும் இந்த சங்கேதத்தன்மைதான் காரணமாகிறது. சிலவகையான அவமதிப்புகளை, அவமதிப்பென்று ஒத்துக்கொள்ள முடியாத மொன்னைத்தனம் வாய்ப்பதற்கும் இந்த தலித்தல்லாத உள்ளுணர்வுதான் தவறாக வழிநடத்துகிறது. எனவே, சாதியை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாமைக்கு எதிராக மட்டுமே குரலெழுப்புவதோ போராடுவதோ தலித்துகளுக்கு தற்காலிக நிவாரணத்தை மட்டுமே பெற்றுத்தரக் கூடியது என்பதே உண்மை.தவிரவும் தீண்டாமை ஒரு வடிவத்தில் இருக்குமானால், அதை எதிர்த்துப் போராடி ஒழித்துவிட இலக்கு நிர்ணயிக்கலாம். ஆனால் அது காலத்திற்கேற்றவாறு தகவமைக்கப்பட்டு ஒரு வடிவத்தில் தோற்கடிக்கப்பட்டால் வேறுவடிவத்தில் வெளிப்படுவதாயிருக்கிறது. எனவே தீண்டாமைக்கு எதிரானப் போராட்டங்கள் தலித் அரசியலின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியுமேயன்றி அது முழுமையானதல்ல. காரணங்களை எதிர்த்தப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது விளைவுகளை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கும் என்ற தத்துவார்த்தப் புரிதலோடு, சாதியமைப்புக்கெதிரான சமரசமற்றப் போராட்டத்துடன் தீண்டாமை¦Â¡ழிப்புச் செயல்பாடுகள் இணைக்கப்பட வேண்டும். அதன்றி முன்வைக்கப்படும் எந்தவொரு தீர்வும் வெறும் சீர்திருத்தவாதமாக சுருங்கிப்போகும் பலவீனத்தையேக் கொண்டிருக்கும். எனவே இங்கே தலித் அரசியல் என்பது சீர்திருத்தவாதங்களுக்குள் முடங்கிக் கொள்ளாமல், சாதியழிப்புக்கும், எல்லோரும் இணங்கி சமத்துவமாய் வாழும் ஒரு புத்துலகத்திற்குமான அறைகூவலை ஒருங்கே முன்வைக்கிறது. அதாவது நிலவும் சமூக அமைப்பை புரட்சிகரமானதாய் மாற்றியமைப்பதே தலித் அரசியல் என்றாகிறது.3.சாதியழிப்புக்கு குறைவான எந்தவொரு மாற்றமும் தமது விடுதலையைத் தரமுடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட தலித்துகளின் அரசியல் பிரதிநிதியாக யார் அல்லது எந்த அமைப்பு இருக்க முடியும் என்ற விவாதத்துக்கு வருவோம்.தலித்துகளின் அரசியல் பிரதிநிதி யார் என்ற விவாதம் அம்பேத்கர் காலத்திலேயே தீவிரமடைந்தது எனலாம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட யாவருக்கும் தாமே ஏக பிரதிநிதி என்று காங்கிரசும் காந்தியும் அறிவித்துக் கொண்ட நிலையை மறுக்க அம்பேத்கர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளிலிருந்து இந்த விவாதம் உச்சநிலைக்குச் சென்றது. காங்கிரஸ்காரன் என்றால் கதராடை உடுத்த வேண்டும் என்று தன் கட்சிக்காரன் உடையணிவதையும்கூட கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டிருந்த காங்கிரசும் காந்தியும் சாதிமறுப்பு- தீண்டாமை ஒழிப்பு விசயத்தில் அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் எதையும் முன்வைக்காதது ஏன் என்று கேள்வியெழுப்பினார். அம்பேத்கரின் இந்த நுட்பமான வாதத்தை எதிர்கொள்ளக் கிளம்பிய காந்தி, கடைசியில் வர்ணாசிரமத்திற்கு கட்டுப்பட்ட பொறுப்பான இந்துவாக தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.வர்ணாசிரமத்தையும் சாதியமைப்பையும் ஒத்துக் கொள்கிற காந்தியும் காங்கிரஸ் தலைமையும் தலித்துகளின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று அறிவித்தார் அம்பேத்கர். தலித்துகளை தனி அரசியல் சக்தியாக அணிதிரட்டினார். அதில் ஓரளவே அவரால் வெற்றிபெற முடிந்தது. பொருளாதாரரீதியாகவும் சாதிரீதியாகவும் கிராமப்புறங்களில் ஆதிக்கம் பெற்றிருந்த பகுதியினரிலிருந்து உருவான காங்கிரசின் தலைவர்கள், பல்வேறு காரணங்களை முன்னிட்டும் தம்மைச் சார்ந்திருக்கும் தலித்துகளை காங்கிரசின் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்திக் கொண்டனர். கிராமப்புற சமூகங்களில் தலித்துகள் தன்விருப்பத்தோடு ஒரு அரசியல் முடிவை எடுக்க முடியாமல் இருப்பதற்கு இந்த அம்சமே இன்றளவும் காரணமாயிருக்கிறது.படிப்பும் சொத்தும் வாக்குரிமைக்கு முன்நிபந்தனையாக வைக்கப்பட்டதை எதிர்த்து வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று அம்பேத்கர் எழுப்பிய கோரிக்கை வெற்றியடைந்த பிறகு தலித்துகளின் முக்கியத்துவம் கூடத் தொடங்கியது. எண்ணிக்கை பலமாகவும், கட்டுப்பட்ட மக்கள் திரளாகவும் இருக்கிற தலித்துகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் பொருட்டு காங்கிரஸ் தலைமை தீண்டாமை ஒழிப்பை பெயரளவுக்கேனும் பேச வேண்டி வந்தது. அந்தக் கட்சி நாடு முழுவதும் அமைப்புரீதியாக பரவியிருந்ததால் தலித்துகளை திரட்டுவது அதற்கு எளிதான ஒன்றாகவே இருந்தது. கிராமப்புறங்களை ஊடுருவித் தாக்கி காங்கிரசிலிருந்து தலித்துகளை மீட்டெடுக்கும் அமைப்புரீதியான ஏற்பாடுகளற்று இருந்தது அன்றைய தலித் இயக்கம்.தலித்துகள் மத்தியிலிருந்து கல்வியறிவு பெற்ற புதிய பகுதியினர் உருவாகி, பொதுவெளியில் தலித்துகளுக்கு இழைக்கப்படும் பாரபட்சங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து குரலெழுப்பியதோடு அதிகாரப் பகிர்வையும் கோரினர். ஆதிக்கசாதியினருக்கு எல்லாமுனைகளிலும் ஒரு போட்டியையும், சாதி, தீண்டாமை குறித்த அறிவார்ந்த விவாதத்தையும் இவர்களால் உருவாக்க முடிந்தாலும் இவர்களது செயல்மையங்களாக பெரும்பாலும் நகர்ப்புறங்களே இருந்தன. கிராமப்புற ஆதிக்கசாதிகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குறுக்கீடுகளை நிகழ்த்துவதில் நீடித்த பலவீனம் திட்டமிட்டு நடந்ததல்ல. தவிரவும், சாதியமைப்புக்கும் இங்குள்ள உற்பத்தி மற்றும் உடைமைச் சக்திகளுக்கும் இடையேயுள்ள பிணைப்பை மதிப்பீடு செய்வதிலும்கூட சீர்திருத்தவாத அணுகுமுறையையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த அரசியல் போதாமையை உணர்ந்தவராக அம்பேத்கர் இருந்தாலும், நடைமுறைச் சாத்தியமான மாற்றுவழியாக அவர் பௌத்தத்தைì கண்டு, மதரீதியாக தலித்துகளை ஒருங்கிணைத்துவிட முடியும் என நம்பினார்.அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் தத்துவார்த்த, செயல் எல்லைகள் வெகுவாக சுருங்கிவிட்டன. தலித்தல்லாதவர்களின் மனங்களில் எந்த குறுக்கீடும் நிகழ்த்தாத அளவுக்கு அவை அரசியல் பண்பாட்டுத்தளங்களில் பலவீன நிலைக்கு எட்டிவிட்டன. அம்பேத்கர் நூற்றாண்டைத் தொடர்ந்து தலித் அமைப்புகள் நிறையத் தோன்றி தலித்துகளை அணிதிரட்டிய போதிலும், தலித் அரசியல் என்பது சமூகத்தின் விவாதப்பொருளாக மாற்றப்படவில்லை. தலித்துகளின் அமைப்புரீதியான திரட்சி, தீண்டாமைகளின் கடுமையைக் குறைக்க உதவியிருக்கிற அதேவேளையில் சாதிமுறைமைக்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டம் மங்கிக் கொண்டே வருவது கவலையளிக்கும் போக்குதான்.எல்லோருக்கும் பொதுவானவை என்று சொல்லிக்கொண்டு இங்கு எண்ணற்ற கட்சிகள் இயங்ககின்றன. சாதி மத பேதமற்ற சமத்துவ சமூகமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொள்ளாத கட்சிகள் அநேகமாக தமிழகத்திலோ இந்தியாவிலோ ஒன்றுமில்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. சாதிச்சங்கத்தை கட்சியாக மாற்றிக்கொண்டவர்களும்கூட இந்த முழக்கத்தை எழுப்பத் தவறுவதேயில்லை. அந்த கட்சிகளில் தலித்துகளுக்கென்று தனிப்பிரிவுகளும்கூட உண்டு. இந்த தனிப்பிரிவுகள் தலித்துகளின் கோரிக்கைகளை கட்சித் தலைமைக்குத் தெரிவித்து அவற்றுக்குத் தீர்வு காணவோ, தீர்வு கிட்டாத பட்சத்தில் ஒட்டுமொத்த கட்சியமைப்பையும் தலித்துகளுக்காக போராட வைக்கவோ உருவாக்கப்பட்டவையல்ல. மாறாக, கட்சியின் நோக்கங்களை தலித்துகளிடம் கொண்டு செல்கிற ஒருவழிப்பாதை கொண்டதாகவே உள்ளன. இக்கட்சிகளின் தலித் பிரிவுகளைத் தவிர மற்றெல்லாப் பிரிவுகளின் தலைமைப் பொறுப்புகளையும் சாதிப் பெருமிதமும் சாதி ஒடுக்குமுறையில் நாட்டமும் கொண்ட தலித்தல்லாதவர்களே ஆக்கிரமித்துள்ள நிலையில், அக்கட்சி தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தோ சாதியழிப்புக்கு ஆதரவாகவோ துரும்பளவும் இயங்காது.தலித்தல்லாதவர்களின் நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய கட்சிகளுக்குள் தலித்துகள் விரும்பி இணைவதில்லை. எற்கனவே காங்கிரஸ் என்ன செய்ததோ அதேபாணியில் தலித்துகளை எண்ணிக்கை பலமாகவும் வாக்குகளாகவும் கருதி கட்சிகள்தான் அணிதிரட்டுகின்றன. சாதிமத பேதமற்ற சமத்துவ சமுதாயம் என்ற முழக்கத்தை மெய்யாக்க கட்சி ஏன் போராடவில்லை என்று கேள்வியெழுப்பவோ அதன் பொருட்டான நெருக்கடியைத் தரவோ வலுவில்லாத மக்கள் திரளாக இருக்கும் தலித்துகளை சமாளித்து தம் பிடிக்குள் வைத்திருப்பது கட்சித் தலைமைகளுக்கும் எளிதானதாகவே இருக்கிறது.பொருளாதார ரீதியாகவும், சாதிரீதியாகவும் செல்வாக்கும் அதிகாரமும் மிக்க சமூக அடுக்குகளிலிருந்து வரும் கட்சித் தலைமைகளுக்கு தங்களின் கீழுள்ள தலித்துகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது சாத்தியமான விசயம்தான். பொருளியல் காரணங்களுக்காகவும் வன்கொடுமைகளை எதிர்கொள்ள வலுவற்றிருப்பதாலும் தலித்துகளும் அவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கிறது. எனவே சாதியழிப்புக்காக போராடாத எந்தவொரு கட்சியையும் - அது அம்பேத்கர், பெரியார் படங்களை எவ்வளவு பெரிதாக வைத்துக்கொண்டிருந்த போதும் - ஒருவேளை தலித்துகள் கணிசமாக அக்கட்சிக்குள் அணிதிரண்டிருந்தாலும்கூட- அதை தலித்துகளின் பிரதிநிதியாக ஒத்துக்கொள்ள முடியாது.4.எல்லோருக்கும் பொதுவானதென்ற பம்மாத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக - ஒரு பாரபட்சமான நியாயத்தை முன்வைத்து புரட்சிகரமாக சமுதாயத்தை மாற்றியமைப்பது என்ற தலித் அரசியலை உள்வாங்கிய இயக்கங்களாக அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சீய இயக்கங்களையே வகைப்படுத்த முடியும்.சாதியழிப்பையும் தனியுடமை ஒழிப்பையும் இணைக்கும் புள்ளியாக உருவான பெரியாரியம், இன்று தலித் மற்றும் பொதுவுடமை இயக்கங்களால் உள்வாங்கப்பட்டுள்ளது. எனவே இங்கு சமூகமாற்றம் குறித்த உரையாடல் பெரியாரியத்தை உள்ளடக்கியே நடைபெறுகிறது. எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் தாயாக சாதியமைப்பே இருக்கிறது என்ற அவரது புரிதலோடு இயங்குகிற பெரியாரிய இயக்கங்களும் சாதியழிப்புக்கு பங்காற்றும் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.நிலம் முழுவதையும் அரசுடமையாக்கி, மக்களை குத்தகைதாரர்களாகக் கொண்டு கூட்டுப்பண்ணைகளை நிறுவுவதன் மூலம் சமூகத்தின் இயற்கை வளங்கள் மீது எல்லோருக்கும் பங்கிருப்பதை உத்தரவாதப்படுத்த முடியும் என்றார் அம்பேத்கர். தலித்துகளை ஆதிக்கசாதியினரின் பிடியிலிருந்து விடுவித்து அதிகாரப்படுத்த நிலத்தின் தேவையை அவர் வெகுவாக வலியுறுத்தினார். பொதுவுடமை இயக்கங்கள் முன்வைக்கும் நிலப்பகிர்வு என்பதற்கு இணையாக வைத்துப் பார்க்கப்பட வேண்டிய அளவுக்கு அம்பேத்கரின் கூட்டுப்பண்ணைத் திட்டமும் முக்கியத்துவம் கொண்டது. ஆனால், ஒரு சமாதானப்பூர்வமான மாற்றத்தினூடே இந்த நிலப்பகிர்வு நடக்கும் என்ற அவரது கணிப்பு நடைமுறைச் சாத்தியமற்றது. அம்பேத்கர் சமூகப்புரட்சியை முன்மொழிந்த போதும், அந்த புரட்சி பௌத்தம் வழிப்பட்ட அஹிம்சை வழியில் நிகழும் என்று நம்பினார். சாதியின் ஒடுக்குமுறையை சட்டத்தின் கடுமை கொண்டு தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே, ஆதிக்கசாதியினரின் மனசாட்சியோடு ஒரு உரையாடலைத் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் அவர் முயற்சித்துக் கொண்டேயிருந்தார். அவர் சுதந்திரத் தொழிலாளர் கட்சி போன்ற அமைப்புகளை நிறுவியதும்கூட இந்த முயற்சியின் பகுதியாகத்தான். ஆனால் அது வெற்றிபெறவில்லை. இந்தியப் பரப்புக்குள் பௌத்தத்தின் செல்வாக்கும் மனித மனங்களை குறுக்கீடு செய்து மாற்றியமைக்கும் வலுவோடு இப்போது இல்லை.இதே காலகட்டத்தில் உருவான பொதுவுடைமை இயக்கம், ஆலைத்தொழிலாளர் பகுதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கத்திலிருந்தும் உருவான தனது ஊழியர்களை கிராமப்புற உழைப்பாளி மக்களை ஒரு வர்க்கமாகத் திரட்டும் அரசியல் பணிக்காக அனுப்புகிறது. அடிப்படையில் கிராமப்புற உழைப்பாளி மக்களாக பெரும்பாலும் தலித்துகளே இருப்பதையும், அவர்கள் மீதான உழைப்புச் சுரண்டலையும் உணர்கின்றனர். தலித்துகளை சாதிரீதியாக புறக்கணிக்கிற பிற்பட்ட சாதியினரில் பெரும்பாலானவர்களையும் இந்த உழைப்புச் சுரண்டல் விட்டுவைக்கவில்லை. ஆகவே தலித்துகளையும் பிற்பட்ட சாதியினரையும் இணைக்கிற பொதுப்புள்ளியாக இருக்கும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.உழைப்புச் சுரண்டலுக்கு எதிரானப் போராட்டத்தில் தலித்துகளின் நேசசக்தியாக இணைந்து நிற்கிற பிற்பட்ட சாதியினர், சாதியடுக்குமுறைக்கு எதிரானப் போராட்டத்தில் தலித்துகளின் எதிர்முகாமாக மாறிவிடுகிற முரண்பாட்டை கம்யூனிஸ்ட்டுகள் உணர்ந்தே இருந்தனர். ஒரு வர்க்கமாக தொடர்ந்து போராடுவதன் மூலம் சாதியுணர்வு மங்கி மறைந்துவிடும் என்பது அவர்களது புரிதலாகவும் கனவாகவும் இருந்தது. ‘பாடுபாடும் பாட்டாளிக்கு சாதி இல்லை மதம் இல்லை/ இனம் இல்லை மொழி இல்லை/ கொள்கையுண்டு கோஷம் உண்டு/ கோரிக்கைகள் பலவுண்டு’ என்ற முழக்கம் உருவான பின்னணிகூட இதுதான். சாதி மதமெல்லாம் மங்கி மறைந்துவிட்டது என்ற அர்த்தத்தில் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவற்றையெல்லாம் உதறித் தள்ளி ஒரு வர்க்கமாக ஒன்றுபடு என்பதற்கான முழக்கம்தான் அது. ஆனால், வர்க்கம் என்பதை உருப்பெற்றுவிட்ட ஒன்றாகக் கருதி, சாதி போன்ற விசயங்களைப் பேசுவது வர்க்க ஒற்றுமையை குலைக்கும் என்ற புரிதல் மேலோங்கிய போது ‘வர்க்கம் என்பது அடைய வேண்டிய லட்சியமேயொழிய, அதுவே நிலவும் எதார்த்தம் அல்ல’ என்று கம்யூனிஸ்டுகளை எச்சரித்தார் அம்பேத்கர்.சாதியானது இந்த நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்போடும் பண்பாட்டு நடவடிக்கைகளோடும் இணைந்த ஒன்றுதான். இவற்றை ஒன்றிலிருந்து இன்னொன்றென தனித்தனியே பிரித்தெடுப்பது சாத்தியமில்லை. உண்மையில் இவை ஒன்றுக்கொன்று உள்சொருகி பிரிதொன்றைப் பாதுகாத்து இது அடிக்கட்டுமானம், இது மேல்கட்டுமானம் என்ற மரபார்ந்த வகைப்பிரிப்பை திணறடிக்கும் மயக்கப்புள்ளிகளைக் கொண்டுள்ளன. இன்னின்ன சாதிகளுக்கு சொத்து வைத்துக்கொள்ள அனுமதியில்லை என்கிற மநுவின் கட்டுப்பாடுகளை மேற்கோளிட்டு, ‘சாதியே அடிப்படை. அதை முன்வைத்துதான் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருக்கிறது’ என்றும், ‘சொத்துக்களை சுருட்டிக் கொள்வதற்காகத் தான் சாதி முன்னிறுத்தப்பட்டது’ என்றும் வெறுமனே வாதித்துக் கிடப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. (இப்படிப்பட்ட வெற்று வாதங்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதிலிருந்து தடுத்து வெறும் வாய்ச்சொல் வீரர்களையே உருவாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.) ஆனால், அம்பேத்கரிய வரலாற்று வாசிப்பு ஒரு விசயத்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. அதாவது, இந்திய சமூகத்தில் சாதி என்பதுதான் மற்றெல்லா வளங்களையும் அடைவதற்கான திறவுகோலாய் இருக்கிறது என்பதே அது.எது அடிக்கட்டுமானம் எது மேற்கட்டுமானம் என்ற தத்துவார்த்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக நடைபெற்ற மயிர்பிளக்கும் விவாதங்கள் பலநேரங்களில் சாதியின் இருப்பை குறைத்து மதிப்பிடவே உதவி செய்தன. இந்த சிக்கலுக்குத் தீர்வு கண்டுவிட்டால் போதும், மறுநாள் காலை எட்டரை மணி பஸ்சில் புரட்சியைக் கொண்டுவந்துவிடலாம் என்பது போன்ற பாவனைகளுடன் இந்த விவாதங்களை நீட்டித்துக் கொண்டிருப்பது தேவையற்றது. மேலைச்சமூகங்களுக்கு பொருந்திய அளவுகோல்களைக் கொண்டு இந்திய சமூகத்தின் தனித்துவமான சாதியை மதிப்பீடு செய்வதில் உள்ள அபத்தங்களை உணர்ந்த இடதுசாரி இயக்கங்கள், சாதி என்கிற எல்லையைத் தாண்டுவதும் ஒரு வர்க்கமாக இணைவதும் தனித்தனியே சாதிக்கக்கூடியவையல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டன. இந்தப் புரிதலோடு கருத்தியல் தளத்திலும் களத்திலும் நிகழும் போராட்டங்கள் மூலம் சாதி, பொருளாதாரம், பண்பாடு, பால்நிலை ஆகிய ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதே அவர்களது அரசியலாக இருக்கிறது. அதாவது தலித் அரசியலின் அடிப்படைத் தேவைகளோடு பொருந்துவதாக இடதுசாரி அரசியல் தகவமைந்துள்ளது.மற்றெல்லா ஒடுக்குமுறைகளையும் சாதியடுக்குமுறையோடு இணைப்பதன் மூலம் சாதியத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் அதற்கெதிரானப் போராட்டங்களை நீர்த்துப்போக வைப்பதாகவும் இடதுசாரிகள் மீது தலித் அமைப்புகள் வைக்கும் குற்றஞ்சாட்டுகளை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டும். அதேநேரத்தில் சாதியழிப்பையும் மையப்படுத்திய சமூக மாற்றம் என்ற பொதுஇலக்கை எட்டுவதற்கான இடதுசாரிகளின் போராட்டத்தில் தலித் அமைப்புகளும் பங்கெடுக்க வேண்டும். இணைந்து செயலாற்றுவதன் மூலம் ஏற்படும் கருத்தொற்றுமையே இங்கு நிகழவேண்டிய எல்லா மாற்றங்களுக்கும் முன்னிபந்தனையாக இருக்கிறது.- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
Subscribe to:
Posts (Atom)