Tuesday, February 3, 2009

நான் ஒரு பண்புள்ள மனிதன்

தனிப்பார்வைக்கு

பி.ஆர். அம்பேத்கர்தா

மோதர் ஹால்பரேல்,

பம்பாய்9-12-1924

அன்பார்ந்த திரு. பண்டிட்,இம்மாதம் 6 அன்று எழுதிய தங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. இக்கடிதத்தின் உள்ளடக்கத்தை நான் மிகக் கவனமாகப் படித்தேன். பரோடா அரசுடனான எனது முந்தைய கடிதப் போக்குவரத்தை தாங்கள் பார்த்திருந்தால், அரசுக்கான என் கடமையை நினைவுபடுத்த வேண்டிய அவசியத்தை தாங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். எனக்கும் பரோடா அரசுக்கும் இடையிலான சட்ட ரீதியான உறவுகள் என்னவாக இருந்தாலும், எனக்காக அரசு செலவழித்த பணத்தைக் கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்பது குறித்து அவர்களுக்குப் பல முறை எழுதியுள்ளேன்.என்னை நம்புங்கள், என்னிடம் பணமிருந்தால், இப்பொழுதே ஒரு நிமிடமும் தாமதிக்காமல் எனது கடமையை நிறைவேற்றி இருப்பேன்... ஆனால், நான் இன்றுள்ள நிலையில் வாழ்வதற்கே போதுமான பணம் என்னிடமில்லை. இந்நிலையில் என் கடன்களைத் திருப்பித் தர எப்படிப் பணம் ஒதுக்க முடியும்?... இத்தகைய சூழலில், நான் எவ்வளவுதான் விரும்பினாலும், இப்போதைக்கு பணத்தைத் திருப்பித்தர என்னால் இயலாது. கொடுக்க முடியாத எனது இயலாமையை நான் திருப்பிக் கொடுக்க விரும்பவில்லை என்று பரோடா அரசு பொருள்படுத்திக் கொண்டால் அவர்களுக்குள்ள ஒரே வழி, அது அவர்களுக்கு உண்மையில் ஏற்புடையதாக இருக்கும் என்று கருதினால் நீதிமன்றத்திற்குப் போய் தீர்ப்பைப் பெற்று அதை நடைமுறைப்படுத்துவதுதான். விஷயம் நீதிமன்றத்திற்குச் சென்றால், சமூகத்தின் பெயர் பாதிக்கப்படும். மாறாக, நான் என்ன நினைக்கிறேன் என்றால், வழக்கு நடைபெறும்போது பரோடா அரசிடம் நான் எப்படி நடந்து கொண்டேன் என்று சமூகம் தெரிந்து கொண்டால், என் பக்கம் நான் வெட்கப்பட வேண்டியது எதுவும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன். மாறாக, இவ்வழக்கு நடைபெறும்போது சேறு வாரி இறைக்கப்படும். அதில் சற்று, மேன்மை தாங்கிய பரோடா மன்னர் மீதும் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது இருவருமே வெட்கப்பட வேண்டும்.இவையெல்லாம் தவிர்க்கப்பட்டால் நிச்சயமாக நல்லது. இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி, திருப்பிக் கொடுக்கும் நிலைக்கு நான் வரும்வரை, பரோடா அரசு எனக்கு அவகாசம் அளிப்பதுதான். பரோடா அரசு என்னைப் போதுமான அளவு புரிந்து கொள்ளவில்லை. நான் ஒரு பண்புள்ள மனிதன் என்பதை ஒரு முறை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்தேன். என்னிடம் போதுமான பண்பு இல்லையெனில், நான் பரோடாவுக்கு திரும்பி வந்திருக்க மாட்டேன். பிரிட்டிஷ் பணியில் நுழைய எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஒரு பண்புள்ள மனிதனைத் தவிர, வேறு யாரால் இவற்றைத் தூக்கி எறிந்திருக்க முடியும்? நான் சுதந்திரமானவன் என்று மட்டுமே அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், பண்புள்ள ஒருவன்தான் சுதந்திரமாக இருக்க முடியும் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.அரசுக்கான கடமையை செய்ய நான் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறேன் என்றும், நான் கஷ்டப்படுவதால்தான் உடனே அதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். எப்பொழுது நான் லகுவான நிலையில் இருப்பேனா, அப்பொழுதே பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்குவேன் என்பதைத் தாங்கள் நம்பலாம். இதற்கு மேல் இப்பொழுது எதையும் சொல்லவோ, செய்யவோ முடியாது.நான் வெளிப்படுத்தியுள்ள உண்மையான நோக்கம் என்னவெனில், அந்தத் தொகையை பம்பாய் பல்கலைக்கழகத்திற்கு திருப்பிக் கொடுத்து, அந்தத் தொகையில் பரோடா அரசு பெயரில், தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்ய பல்கலைக் கழகத்தை கேட்டுக் கொள்ளத்தான் இந்தத் தொகை தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஓர் உறுப்பினர் என்ற அடிப்படையில் எனக்காக செலவிடப்பட்டது. எனவே, அரசின் தனிப்பட்ட முறையிலான செலவுக்கு அந்தப் பணம் செலவழிக்கப்படக் கூடாது என்பதும், தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலனுக்காகவே அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். ஆனால், இத்தகைய ஒரு வியாபார முறையில் அரசு செயல்பட்டு வருவதால், எனது திட்டம் பாராட்டப்படும் என்று நான் கருதவில்லை.எனக்கும் பரோடா அரசுக்கும் இடையே தீர்மானிக்கும் முடிவை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.தங்கள் உண்மையுள்ள,(பி.ஆர். அம்பேத்கர்)(டாக்டர் அம்பேத்கர் அயல்நாடு சென்று படிப்பதற்காக, பரோடா மன்னர் சயாஜிராவ் கெய்க்வாட் அரசு, அவருக்கு 20,434 ரூபாய் கல்வி உதவித் தொகை அளித்தது. இத்தொகையை திருப்பித்தர வலியுறத்தி பரோடா அரசு அதிகாரிகள், மன்னருக்குத் தெரிவிக்காமலேயே (நீதிமன்றத்திற்குச் செல்வது உள்ளிட்ட) நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதற்கு டாக்டர் அம்பேத்கர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1); பக்கம் 215)

நஞ்சு கக்கும். ம. மதிவண்ணன்

உள் ஒதுக்கீடு சாத்தியமா என்று "தினமணி' 25.11.2008 அன்று ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டது. அதில் வழக்கம் போல செ.கு.தமிழரசன், மத்திய அரசுதான் வழங்க முடியும்; ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று பஜனை பாடியிருந்தார். என்.வரதராஜன், சி.மகேந்திரன் போன்றவர்கள் உள் ஒதுக்கீட்டை வரவேற்றிருந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த ரவிக்குமார், "தலித் தலைவர்களை ஆணையம் கருத்து கேட்கவில்லை' என்று புகார் வாசித்து விட்டு, பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பி விட்டுதான் அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பின்னடைவுப் பணியிடங்களை எல்லாம் அவர்தம் சாதியினரைக் கொண்டு நிரப்பி விட்டு, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு என்று வெறுமனே வாயளவில் அறிவிக்கப்பட வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறாரோ என்னவோ? அதைவிட முக்கியமாக, "தினமணி'யின் பார்ப்பனிய தந்திரம் அர்ஜுன் சம்பத்தின் கருத்தாய் வெளியிடப்பட்டதில் தான் அடங்கியிருந்தது. "அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென ஆறு ஆண்டுகளாக இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது. இப்போது நிறைவேற்றப்படுவதை வரவேற்கிறோம்' என்று பசப்பியிருந்தார் அவர். ஆறு ஆண்டு காலமாக அக்கோரிக்கையை அவரது கட்சி அலுவலகத்தில் உள்ள கழிவறைக்குள் போய், உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென முனகிக் கொண்டு அச்சுவரில் எழுதி வைத்து விட்டு வந்தார்களோ என்னவோ! அவர்களுக்கும், "தினமணி'க்கும்தான் வெளிச்சம்!அதே நாளில் இன்னொரு பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியில், "உள்ஒதுக்கீட்டின் பயன்களை உண்மையான இந்து அருந்ததியர் மட்டுமே அனுபவிக்க வேண்டும். பெயரளவில் இந்துக்களாக இருந்து கொண்டு, உண்மையில் கிறித்துவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அனுபவிக்காத வகையில் உரிய வழிவகை காணப்படவேண்டும்' என்று இல. கணேசய்யர் உபதேசித்திருந்தார். இந்துத்துவக்குரல் இதோடு முடிந்து விடுவதற்காகவா "தினமணி'யின் ஆசிரியராக வைத்தியநாதன் பொறுப்பேற்றிருக்கிறார்? 27ஆம் தேதி அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை பத்து சதவிகிதமாக வழங்க வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கோரியதாக ஒரு செய்தியை "தினமணி' வெளியிட்டது.இந்துத்துவவாதிகளின் குரலாக இருந்தாலும் அது அருந்ததியருக்கு ஆதரவாக அல்லவா வருகிறது. அந்தளவோடு விட்டுவிடலாமா? அதனால்தான் அதே நாளின் தலையங்கப் பக்கத்தில் ரா. சோமசுந்தரம் என்பவரின் கட்டுரையை வெளியிட்டு கணக்கைச் சரிசெய்து கொண்டது "தினமணி'. அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கும் நோக்கத்தோடு அமைச்சரவைக் கூட்டம் கூடுகின்ற நாளன்று பார்த்து இவ்வாறான கட்டுரை வெளியிடப்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்நிலையில் அன்று (27.11.08) கூடிய அமைச்சரவையில் உள்ஒதுக்கீட்டின் செயலாக்கம் குறித்து ஆராய, அமைச்சரவைக் குழு ஒன்றை அமைப்பது என்று முடிவு எடுத்தது. பொறுக்குமா தினமணிக்கு? அடுத்த நாள் தலையங்கப் பக்கத்தில் உள்ஒதுக்கீடு விருந்தா? விஷமா? என்ற டாக்டர் கிருஷ்ணசாமியின் கட்டுரையை வெளியிட்டது.அக்கட்டுரையில், “இந்தியா முழுவதும் மய்ய, மாநில அரசாங்கம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 10 லட்சம் பின்னடைவுப் பணியிடங்கள் உள்ளன. தமிழக அரசுப் பணியிலும் 4 லட்சம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் 1 லட்சம் பேரே பணியில் இருக்கிறார்கள். அருந்ததிய மக்களின் வாழ்க்கை நிலையே அவர்களின் வலைவாய்ப்புக்கான அடிப்படைக் கல்வியைப் பெற முடியாமல் ஆக்கிவிட்டது. இடஒதுக்கீடே ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாத போது, உள் ஒதுக்கீட்டை எவ்வாறு அமுல்படுத்தப் போகிறார்கள்? உள்ஒதுக்கீட்டைப் பொறுத்த மட்டிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அந்தப் பட்டியலில் இடம் பெறக்கூடிய அனைவரும் அவரவர்களின் திறமைக்கேற்பப் பங்கைப் பெற வேண்டும். 3 சதவிகிதம் பேருக்கு உள்ஒதுக்கீடு எனும் விருந்தை அளியுங்கள். அதே நேரத்தில் 18 சதவிகிதம் பேருக்கு (3 சதவிகிதம் போனால், 15 சதவிகிதம் இல்லையா?) உண்டான உரிமைகளையும் அளியுங்கள். இல்லையேல் 3 சதம் பேருக்கு விருந்தானது 18 சதம் பேருக்கு விஷமாக மாறும்'' என்று எழுதியிருந்தார்.டாக்டர் கிருஷ்ணசாமியிடம் சில கேள்விகள் : உள்ஒதுக்கீடு என்று பேசும் போதெல்லாம் பின்னடைவுப் பணியிடங்கள் என்று மிரட்டுகிறீர்களே! உள்ஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்பில் மட்டுமல்லாது கல்வியிலும் அளிக்கப் படுவதல்லவா? அவ்வாறு கல்வியில் உள்ள இடஒதுக்கீடு என்பது, ஒவ்வொரு ஆண்டும் முறையாக "கட்ஆப்' மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டுக் கொண்டு தானே வருகிறது. அதில் அருந்ததியருக்கு உரிய அளவு ஒருபோதும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை எல்லாம் வழங்கியிருந்தோமே அதைப்பற்றி மட்டும் வாய் திறக்கமாட்டேன் என்கிறீர்களே! இந்தியா முழுமைக்குமான பின்னடைவுப் பணியிடங்கள் எல்லாம் அருந்ததியர் உள்ஒதுக்கீடு கேட்கும் போது மட்டும் ஏன் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றன? அவரவர் திறமைக்கேற்ப பங்கைப் பெற வேண்டும் என்கிறீர்களே - அப்படி உங்களை சொல்ல வைப்பது, அம்பேத்கரியமா? பார்ப்பனியமா? மேலும், “வளர்ந்து வரும் நாகரிக சமுதாயத்தில் எந்த வகுப்பினரும் வஞ்சிக்கப்படக்கூடாது. அந்த அடிப்படையில் உயர் வகுப்பின ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கு நாம் எதிரானவர்கள் அல்ல'' ("தினமணி' 27.12.2008) என்று அவர் கூறியிருக்கிறார். டாக்டர் கிருஷ்ணசாமியின் வாதம், அருந்ததியர்கள் விஷயத்தில் மட்டும் ஏன் "அநாகரிக'மாகி விடுகிறது?

வி.பி. சிங் மறைந்தும் ஆள்கிறார்

இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வாழ்ந்த ஒரு மனிதரின் மரணம், இந்த சமூகத்தில் மன ரீதியான எந்த உணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவரை நன்றாகப் புரிந்து கொண்ட பார்ப்பன ஊடகங்கள் அவரை புதைத்தன. இந்தத் தருணத்தில் சமூக நீதி மண் என்று சொல்லப்படும் தமிழ் நாட்டிலும் நிலவும் மவுனத்தைக் களைய, சென்னை புக் பாயிண்ட் அரங்கில், கீற்று இணையதளம், வி.பி. சிங் நினைவேந்தல் நிகழ்வை 14.12.2008 அன்று நடத்தியது. இந்நிகழ்ச்சியில், ஓவியா, அ. மார்க்ஸ், ஞாநி, அதியமான், அழகியபெரியவன், ஆதவன் தீட்சண்யா, விடுதலை ராசேந்திரன் ஆகியோர் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் "விடுதலை' ராசேந்திரன் : “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் அரசாணையில் கையெழுத்திட்டபோது, அன்று வி.பி. சிங் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான்தான் என்பதை, பிற்படுத்தப்பட்ட மக்கள் மறந்துவிடக் கூடாது. வி.பி. சிங் மண்டல் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்போது, அதை எதிர்த்து இந்தியாவில் பெரிய இயக்கம் நடைபெற்றது. "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை மட்டும் மண்டல் அறிக்கைக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட அருண் சோரியின் கட்டுரைகளை வெளியிட்டது. அதே போல, அத்வானி ரத யாத்திரை நடத்தியபோது வாஜ்பாய் வி.பி. சிங்கை நேரில் சந்தித்து, நீங்கள் 27 சதவிகித இடஒதுக்கீட்டை கொண்டு வரமாட்டேன் என்று வாக்குறுதி அளித்தால், அடுத்த நிமிடமே ரத யாத்திரையை நிறுத்துகிறேன் என்று பேரம் பேசினார். அதற்கு வி.பி. சிங், நான் என் கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று கூறி தனது ஆட்சியையே இழந்தார். அப்போதுதான் நான் "மண்டலை' எடுத்தேன்; அவர்கள் "கமண்டல'த்தை எடுத்தார்கள் என்று வி.பி. சிங் கூறினார்.“நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அவர் பேசிய பேச்சு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பேச்சை தொடங்கும் போதே பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் நன்றி சொல்லிதான் தொடங்கினார். அதில் இந்த நாட்டு மக்களுக்காக சமூக நீதி கதவை திறந்துவிட்டிருக்கிறேன். இங்கு வாக்கெடுப்பில் இரண்டு அணிகள் உள்ளன. ஒன்று சமூக நீதி வேண்டும் என்று சொல்கின்ற அணி; இன்னொன்று வேண்டாம் என்று சொல்கின்ற அணி. நான் சமூக நீதி வேண்டும் என்பதை முன்வைத்து நம்பிக்கை வாக்கு கேட்கிறேன். இதன் மூலம் சமூக நீதி வேண்டும் என்பவர்கள் யார் என்பதை இந்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.ஆனால், இடஒதுக்கீடு கூடாது என்று நாடாளுமன்றத்தில் ராஜிவ் காந்தி 10 மணி நேரம் பேசினார். ராஜிவ் காந்தியின் குரலும் அத்வானியின் குரலும் ஒரே மாதிரியாக நாடாளுமன்றத்தில் அன்று ஒலித்தது. அவர்கள் மட்டுமல்ல; தமிழ் நாட்டில் அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்தில் இருந்த அ.தி.மு.க.வும், பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. நான் என்ன தவறு செய்துவிட்டேன், இந்த நாட்டிலே இருக்கக் கூடிய அதிகார அமைப்புகள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். இந்த நாட்டில் உள்ள கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தில் பங்கேற்கும் போதுதான் - அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் எந்திரமாக இந்த அரசு மாறும். எனவே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றார். 27 சதவிகித இடஒதுக்கீடு இருக்கும் வரை, வி.பி. சிங்தான் ஆட்சி செய்து கொண்டிருப்பார். இந்த இடஒதுக்கீட்டை தனியார் துறைக்கும் விரிவுபடுத்த வேண்டும். அதுதான் வி.பி. சிங்கிற்கு நாம் செய்யும் மரியாதை.''முன்னதாக, ஆதவன் தீட்சண்யா, இந்தியா டுடே பத்திரிகையை ஒரு பத்திரிகையாகவே மதிப்பதில்லை என்று பேசத் தொடங்கி, அவ்விதழைக் கடுமையாகத் தாக்கினார். ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், “அம்பேத்கர் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய எழுத்துக்கள், பேச்சுக்கள் அனைத்தும் நூல்களாக வெளியிடப்பட்டன. அதன் பின்புதான் அம்பேத்கர் யார் என்று தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும். அதுபோல, வி.பி. சிங்கும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் பேசப்படுவார். ஏனென்றால் இந்தியாவில் 90 சதவிகித மக்கள் வாழ்க்கை பெறக் கூடிய மண்டல் அறிக்கையை, 10 ஆண்டுகள் கிடப்பில் கிடந்ததை நிறைவேற்ற ஆணை பிறப்பித்தவர் அவர்.“இன்றும் கையால் மலத்தை அள்ளி தோளில் கொண்டு போகிறான். எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மனித உரிமை என்று பேசுகிறவர்கள் எல்லாம் வாய் மூடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மலம் அள்ளுபவர்கள் யார்? பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியருக்கு உள் இடஒதுக்கீடு கிடைக்கிறதென்றால், அருந்ததியருக்கு கிடைக்காதா? நாங்கள் செய்யும் இழி தொழிலுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாங்கள் இடஒதுக்கீடு கேட்கும்போது மட்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லை என்று சொல்கிறார்கள். கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் நிதி உதவியோடு நடக்கிறது. அதுபோல் தமிழ்நாட்டிலும் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் விகிதாச்சார அடிப்படையில் வகுப்புவாரி உரிமை சரியாக கிடைக்கும்'' என்றார்.- நம் செய்தியாளர்