Friday, December 11, 2009

அண்ணா மாயை!

தமிழர்கள் மீதான பிறவி இழிவைத் துடைத்தழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் இடையிலேயே பிளவுபட்டு, திசைமாறி, இறுதியில் ஆட்சியை மட்டும் கைப்பற்றி – இன்று ஒரு தேக்க நிலைக்கு வந்துவிட்டது. இதற்கான மூல காரணமாக அரசியல் மோகத்தையும்; அதற்கு வித்திட்டவராக அண்ணாவையும் சொல்ல முடியும். அண்ணா நூற்றாண்டிற்கு ‘இந்து' நாளேடு சிறப்பிதழ் வெளியிட்டதை, இவ்வரலாற்றுத் துரோகத்திற்கான சான்றாகக் கொள்ளலாம். ஓராண்டு நடைபெற்ற இந்நூற்றாண்டு விழா, தி.மு.க. என்ற ஆளும் கட்சியின் கொண்டாட்டமாகவே சுருங்கிப் போனதற்கும் அதுதான் காரணம். தந்தை பெரியார் முன்னிறுத்திய கடவுள் மறுப்பை கல்வெட்டாக நாடெங்கும் வைத்தவர்கள், அதற்கு இணையாக அவர் முன்வைத்த ஜாதி, மத, அரசியல் மறுப்பை மட்டும் திட்டமிட்டு மறைத்து விட்டனர். சிந்து சமவெளித் தமிழன் மீது இழிவைத் திணித்தது இந்து மதம். இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம், அதிகார ஆட்சி வெறியில் இழிவையும் இசைவுடன் ஏற்றுக் கொண்டது. அதன் விளைவு, ‘தமிழன்' என்பது அரசியல் அடையாளமாகவும், ‘ஜாதி' என்பது சமூக, பண்பாட்டு அடையாளமாகவும் – பெருமையும் இழிவும் இரண்டறக் கலந்துவிட்டது. இம்முரண்பாட்டை அவமானமாக எண்ணி, அழித்தொழிக்க எவரும் தயாரில்லை. திராவிடன் என்ற இன அடையாளத்துடன் விடுதலைக்காகப் போராடுவதற்கு மாறாக, திராவிட நாட்டின் ஆரியர்களையும் முன்னேற்றும் கழகம் என திரித்து, வாக்குகளை மட்டுமே குறிவைத்து செயல்பட்டதால் ஏற்பட்ட ஆபத்தை இன்று அவர்களே அனுபவிக்கின்றனர். அண்ணா நூற்றாண்டைக் கொண்டாடும் கட்சிக்கு எதிரி, அண்ணா பெயரிலேயே அமைந்துள்ள – அவருடைய நூற்றாண்டைக் கொண்டாட மறுக்கும் – ஆரியத் தலைமையிலான கட்சிதானே! இந்த முரண்நகைக்காக ‘அண்ணாயிஸ்டு'கள் வெட்கப்படுவதில்லை. தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்ததால் ஏற்பட்ட நிரந்தரப் பக்க விளைவு இது. ‘தி.மு.க.வை அண்ணா தோற்றுவிக்காமல் இருந்திருந்தால், ஆட்சி அதிகாரம் தமிழனிடம் வந்திருக்குமா?' என்ற பட்டிமன்றக் கேள்விகள் அறிவின்பாற் பட்டவையல்ல; அப்பழுக்கற்ற சுயநல அரசியலின் பாற்பட்டவை. சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்திடவில்லையா? அன்று தொடக்கம் இன்றுவரையிலும் தமிழன் சூத்திரப் பட்டத்தை சுமந்து கொண்டுதானே ‘அதிகாரத்தில்' திளைக்கிறான். அய்ந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் தமிழக முதல்வரால் தன்/இனத்தின் சூத்திரப் பட்டத்தை அழிக்க முடிந்ததா? இன்னும் நூறாண்டுகளுக்கு ஆட்சியில் இருந்தால்கூட, தமிழர்கள் மீதான இழிவை அகற்றிவிட முடியாது. இந்த இன இழிவைச் சொல்லி, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்குதான் தேர்தல் அரசியல் பயன்படும். தமிழனின் ஆட்சி என்பதற்காகப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? முப்பது கல் தொலைவில் இருக்கும் ஈழத்தில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டபோதும் தமிழனின் அதிகாரத்தால் என்ன செய்ய முடிந்தது – சில மணி நேரம் பட்டினி கிடந்து, மண்டியிட்டதைத் தவிர? போருக்குப் பிறகும் நிராயுபாணிகளாக இருக்கும் மக்கள் வதைபடுவதைத் தடுக்க – கடிதம் எழுதி, தீர்மானங்களை முன்மொழிந்து, கோரிக்கை மனுக்களை அளிப்பதற்குப் பெயர் அதிகாரம் அல்ல; அடிமைத்தனம். சட்டமன்றம் தவிர்த்த (சமூகம்/நீதிமன்றம்/அரசு எந்திரம்/ஊடகம்) பிற அதிகாரங்கள் அனைத்தும் இன்றளவும் பார்ப்பனர்களிடம்தானே இருக்கிறது. இங்கிருக்கும் சேரித் தமிழனையாவது வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்ற, ஆட்சி அதிகாரம் பயன்படுகிறதா? உடனே, இலவச நலத் திட்டங்கள் பட்டியலிடப்படும். வாக்கு அறுவடைக்காக, அதை காங்கிரஸ்/பா.ஜ.க. ஆட்சிகள்கூட செய்து தொலைக்கும். செந்தமிழ் நாடெங்கும் ‘உத்தப்புர சுவர்கள்' ஊரையும் சேரியையும் பிரித்து நிற்கிறதே! இச்சமூகக் கொடுமைகளை மறைப்பதற்குதான் அண்ணாவின் அரசியல் பயன்படுகிறது. அது ஒருபோதும் சமூக – பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களை உய்விக்காது. நாற்பதாண்டு கால திராவிட ஆட்சியில் ஊழலும், ஜாதியும், வாரிசு அரசியலும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன. வேட்பாளர் தேர்வு முதல் கட்சி நிருவாகம், ஆட்சி நிருவாகம் வரை ஜாதி அடிப்படையில் பங்கு போட்டுக் கொண்டு, மறுபுறம் எந்தக் கூச்சமுமின்றி தமிழ் நாட்டையே சமத்துவபுரமாக்கும் லட்சியத்தை அறிவிப்பது – கடைந்தெடுத்த அரசியல் கயமையல்லவா? சமூக – பண்பாட்டு ரீதியாக சமத்துவத்தை எய்தும் வரை, தமிழன் சுயமரியாதையுடன் வாழவே முடியாது. அதற்கு வக்கற்ற தமிழன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்குதான் அண்ணா மாயை!

குற்றவாளியை பாதுகாக்கும் ஊரிஸ் கல்லூரி

சாதிய வன்கொடுமைகள் நடைபெறுவதற்கு காரணமாக இருக்கும் குற்றவாளிகளை விடவும் கொடுமையானவர்கள், அக்கொடுமைகளை வாய்மூடி மவுனமாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள். ஆம், வேலூர் ஊரிஸ் கல்லூரி நிர்வாகமும் மவுனமாக வன்கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அக்கல்லூரியின் விடுதியில் 29.8.09 அன்று ஒரு தலித் மாணவியை, தமிழ்த்துறை விரிவுரையாளரும் விடுதிக் காப்பாளராகவும் இருந்த மணிவண்ண பாண்டியன் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்த முயன்றார். இக்கொடுமை நடந்து 2 மாதங்கள் கடந்த பிறகும் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து குற்றவாளிக்கு எதிராக உறுதியான எந்த நடவடிக்கையும் இல்லை. அந்நிர்வாகம் வேலூரில் இருக்கும் சில தலித் அரசியல் கைக்கூலிகளை விலைக்கு வாங்கி, சி.எஸ்.அய். பேராயத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு, அம்மாணவிக்கு ‘விபச்சாரி' பட்டம் கட்டி, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு வகை தேடிய நிர்வாகம், மிகவும் தந்திரமாக அமைச்சர் துரைமுருகனை அழைத்து, அண்ணா நூற்றாண்டு விழாவை அவசர அவசரமாக கொண்டாடி இருக்கிறது. அக்கல்லூரி நிர்வாகத்திற்கும் குற்றமிழைத்தவருக்கும் உதவி செய்யும் கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தவும் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரை 4.10.09 அன்று பேராசிரியர் அய். இளங்கோவன் தலைமையில் ஒரு குழு சந்தித்தது. ‘கட்சித் தலைமையே இவ்விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும். தலைவரின் கவனத்திற்கு இவ்விஷயம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது' என்று ரவிக்குமார் கூறிவிட்டார். ஆனால், அக்கட்சியின் பொறுப்பாளர்கள் சிலர் தன்னிச்சையாக குற்றமிழைத்த மணிவண்ண பாண்டியனோடு இணைந்து கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகவும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதை நிறுத்தவில்லை. இச்சிக்கலில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் பிற அமைப்புகள் முனைப்போடு ஆதரவு செயல்பாட்டில் இறங்கவில்லை. சி.பி.எம்.இன் வேலூர் மாவட்டத் தலைமை, ‘பாதிக்கப்பட்ட மாணவி நடத்தைக் கெட்டவள்' என்று எதிராளிகள் சொன்னதை நம்பி, தன்னுடைய ஆதரவு செயல்பாட்டினை நிறுத்திக் கொண்டது. இச்சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அரசியல் இயக்கங்களும் ‘ஜேக்டோ' அரசு ஊழியர் ஆசிரியர் அய்க்கியப் பேரவை, ராணிப்பேட்டை ‘பெல்' எஸ்.சி./எஸ்.டி. நலச்சங்கம், வேலூர் மாவட்ட எஸ்.சி./எஸ்.டி. அரசு ஊழியர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக செயல்படுவதை மேலும் துரிதப்படுத்தியுள்ளனர். வேலூர் மாவட்ட ‘ஜேக்டோ' அமைப்பின் சார்பில் 11.10.2009 அன்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தியிருக்கிறது. வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘ஜேக்டோ' பொறுப்பாளர்கள் எல். மணி, செ. சரவணன், அய். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். க. ராமஜெயம், பழ. ராஜேந்திர பிரசாத், பி. லோகநாதன், அழகிய பெரியவன், சி.பி. தேசி, கார்த்திக் விக்ரமன், வ. சின்னதுரை, முகமதுஷா நவாஸ், செ.நா. ஜனார்த்தனன், ம. தினகரன், எஸ். ராமன், மு. பரந்தாமன், ஜெ. துளசிராமன், இல. பிரதாபன், ஆர். பெருமாள்சாமி, வ. ராமமூர்த்தி, டி. குபேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினர். ஆசிரியர் ஒருவரால் பாதிக்கப்பட்ட இம்மாணவியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவரின் கல்லூரி படிப்பு தொடர வேண்டும். குற்றமிழைத்த ஆசிரியர், விடுதிக் காப்பாளர், என்.சி.சி. அலுவலர் ஆகிய பதவிகளில் இருந்து கல்லூரி நிர்வாகத்தால் நீக்கப்பட வேண்டும். அந்த ஆசிரியருக்கு பாதுகாப்பு வழங்கும் ஊரிஸ் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட நடப்பு நிர்வாகக் குழு மாற்றப்பட வேண்டும். அந்த ஆசிரியர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பறை முழக்கத்தின் எழுச்சியோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையே மணிவண்ணனின் அண்ணன் உள்ளிட்ட சிலர், ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான துண்டறிக்கைகளை விநியோகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் அடுத்து, காவல் துறை அவர்களை அப்புறப்படுத்தியது. இந்த சம்பவத்தின் மீது உறுதியான நடவடிக்கையை போராட்டக் குழு எதிர்நோக்குகிறது. மாவட்டம் தோறும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பாதுகாப்பையும் சட்டப்பூர்வ உதவிகளையும் வழங்குவதற்கு, சமூக நலத்துறையுடன் இணைந்த ஒரு தனிப்பிரிவை உருவாக்கிடவும் போராட்டக் குழு வலியுறுத்துகிறது. இக்குற்றங்களை இழைப்பவர்கள் தலித்துகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதையும் போரட்டக் குழு வலியுறுத்துகிறது.

தீண்டாமைக்கு எதிரான சிபிஎம் போராட்டம் - முனைவர்கள் விழித்துக் கொள்வார்களா?

மார்க்சிஸ்டுகளின் புதிய அக்கறை - ஆலய நுழைவுப் போராட்டம் என்ற தலைப்பில் முனைவர் வே.பாண்டியன் சமீபத்தில் கீற்றில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஒருவர் எழுதும் கட்டுரையில் தனக்கு தோன்றும் கருத்தை முன்வைக்க உரிமையுண்டு. அது கட்டுரையாளரின் கருத்து சுதந்திரம். ஆனால் எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் ஒரு இயக்கத்தின் மீது சேற்றைவாரி இறைப்பது நாகரீகம் அல்ல. அதே போல தான் விரும்பும் நிலைபாட்டை அனைவரும் எடுக்க வேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. அவரது அந்த கட்டுரையின் சாரம் இதுதான். செட்டிப்புலம் கோயில் நுழைவு மார்க்சிஸ்ட் கட்சி விடுதலைப்புலிகளின் நிலைபாடுகளை ஆதரிக்க வெண்டும், இலங்கைப் பிரச்சனையில் விமர்சனம் செய்யக்கூடாது. இலங்கையில் தனிநாடுதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தீண்டாமையெல்லாம் ஒரு முக்கிய பிரச்சனையே அல்ல, எனவே இலங்கை பிரச்சனை தீர்ந்தவுடன் அதை பார்த்துக் கொள்ளலாம். இந்த கருத்தைதான் முனைவர் வே.பாண்டியன் சொல்ல வருகிறார். அதை நேரடியாக சொல்லும் நேர்மை இல்லாமல் ஆலயநுழைவுப் போராட்டத்தை ஏன் நடத்துகிறார்கள் எனத் துவங்கி அவரும் குழம்பி படிப்பவர்களையும் குழப்புகிறார். முனைவர் அல்லவா? அவரை போல சுற்றிவலை(ளை)க்க தேவையில்லை, அவருக்கான பதிலை நேரடியாக சொல்லலாம். இலங்கையில் இருக்கும் வஞ்சிக்கப்பட்ட, வாழ்க்கையை இழந்துநிற்கும் அப்பாவி தமிழ் மக்களுக்காகத்தான் குரல் கொடுக்கமுடியுமே அல்லாது புலிகளின் அனைத்து நிலைபாடுகளையும் ஆதரிக்கமுடியாது. புலிகளின் அனைத்து நிலைபாடுகளையும் ஆதரிக்காதவர்கள் எல்லாம் தமிழின துரோகிகள் என்ற குற்றச்சாட்டு மிகவும் பாசிசதனைமை வாய்ந்தது என்பதை இவரைப் போல முனைவர்கள் உணர்வதில்லை. இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட பின் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உலகத்திற்கு இரண்டு வாய்ப்புகளே இருப்பதாகக் கூறினார். ஒன்று அமெரிக்கா பக்கம் நிற்க வேண்டும் அதாவது யோக்கியன் எல்லாம் என்பக்கம் வா! அப்படி நிற்காதவர்கள் பின்லேடன் ஆதரவாளர்கள், அதாவது அயோக்கியன் கூட்டாளி என்றார். (தமிழ் தேசியவாதி அய்யா முனைவரே.. சார்சு புசு என்று கூட தங்களை அழைத்துக்கொள்ளுங்கள்) அதேபோல தமிழகத்தில் சில நபர்கள் புலிகளை கேள்வி கேட்காமல் ஆதரித்தால்தான் இலங்கைப் பிரச்சனையை பற்றி பேச முடியும் இல்லையெனில் பேசுபவர்கள் அங்கு நடக்கும் கொலைகளுக்கு ஆதரவான நிலைபாடு எடுப்பதாக முத்திரை குத்துகின்றனர். இந்த உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தனர் என்பது இருக்கட்டும், முள்வேலிக்குள் முடக்கப்பட்டுள்ள லட்சக்கண‌க்கான அப்பாவி தமிழ்மக்களைவிட இவர்களுக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதுதான் முக்கியமாகப்படுகிறது. 1983 முதல் மார்க்சிஸ்ட் கட்சி என்று ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அதிகாரம் படைத்த தமிழ்ப் பிரதேசம்தான் தீர்வு என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம். இப்போதும்தான். இன்றைய அம்மக்களின் நிலையை முதலில் மாற்ற அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்பதை விடுத்து, போரை முடித்த ராசபக்சே மீள்குடியமர்த்துவதை தாமதப்படுத்துவதை எதிர்த்து, அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீள்குடிய‌மர்த்தப்படும் பிரதேசங்களில் விவசாயம், சுகாதாரம், வேலை, கல்வி போன்ற அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த அரசியல் ரீதியாக நிர்பந்தங்களை உருவாக்குவதை விட இப்போது முதன்மைப் பணி வேறெதுவும் இல்லை. இதற்காக அனைவரும் தமிழகத்தில் போராடுவதுதான் அறிவுடைய செயலாக இருக்கும். இப்படி மாற்றுக் கருத்தை முன்வைத்தால் அதற்கும் ஒரு கூட்டம் இலங்கை கைக்கூலிகள் என்று குரல் கொடுப்பார்கள். ஆனால் இவர்களால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று சொல்லத் தெரியாது. கொஞ்சம் கூட கூச்சமின்றி இல‌ங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு என்று எழுதுவது கயமையின் உச்சகட்டம். ஆதாரம் இல்லாமல் யாரும் யார்மீதும் குற்றம் சுமத்த முடியும் என்பதை கட்டுரையாளர் உணர்வது நல்லது. ஆக இணைய தளத்தில் இடம் கிடைப்பதாலும், நேரம் கிடைப்பதாலும் ஆதாரமற்ற எதையும் எழுதுவது __________ சமம். கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்க. இவர் எழுதுகின்ற கட்டுரையைப் படித்தவுடன் ஆதவன் தீட்சன்யா எழுதிய இது வேறு மழை கவிதைதான் நினைவுக்கு வந்தது. - 2 - அடுத்து முனைவரின் அரிய கண்டுபிடிப்புக்கு வருவோம். "மார்க்சிஸ்டுகளின் புதிய அக்கறை - ஆலய நுழைவுப் போராட்டம்". இதை கண்டுபிடித்து அவர் அடுக்கும் ஆதாரங்களும், தீர்வும் புல்லரிக்க வைக்கிறது. மார்க்சிஸ்டுகளின் குறைந்த பட்ச வரலாற்றைக் கூட தெரிந்துக்கொள்ளாமல், நமது நாட்டின் சாதிய அமைப்பின் அழத்தை, அதன் வெளிப்பாட்டு தளங்களை புரிந்துக்கொள்ளாமல் முனைவர் எழுதியது நகைப்பிற்குறியது. அதே போல மார்க்சிஸ்டுகள் ஏதோ ஆல‌ய நுழைவுப் போராட்டத்தை மட்டுமே நடத்துவது போலவும் அதனால் தமிழகத்தில் சாதிகளுக்கிடையே பகைமை உண்டாகி பழந்தமிழர் ஒற்றுமை சிதைந்துவிடும் என்றும் கவலைப்படுகிறார். இப்போது பழம் பெருமை உள்ள தமிழர்கள் நிலையைப் பார்ப்போம். ஆலயங்களில் நுழையத் தடை, கோயில் விழாக்களில் பாரபட்சம், இரட்டை டீ கிளாஸ் முறை, பெஞ்சுகளில் உட்கார முடியாமல், பொதுக்குழாய்களில், கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாமல், குளங்களில் குளிக்க முடியாமல், பொதுப்பாதைகளில் நடக்கமுடியாமல், குடைபிடிக்க முடியாமல், செருப்பு போட முடியாமல், தோளில் துண்டு போடமுடியாமல், பொது மயானத்தை பயன்படுத்த முடியாமல், தனி மயானத்திற்குப் பாதை மறுக்கப்பட்டு, சலூன்களில் முடிவெட்ட முடியாமல், துணிகளுக்கு இஸ்திரி போட முடியாமல், பிணக்குழி தோண்ட கட்டாயப் படுத்தப்படுவது, மலம் அல்ல கட்டாயப்படுத்தப்படுவது, சாவு சேதிச் சொல்ல கட்டாயப்படுத்தப்படுவது, தப்படிக்க கட்டாயப்படுத்தப்படுவது, செத்த வில‌ங்குகளை அப்புறப்படுத்த கட்டாயப்படுத்தப்படுவது, தலித் பெரியவர்களை ஒருமையில் அழைப்பது, தலித் பெயரில் மரியாதைப் பகுதியை அழைக்காமல் விடுவது, தலித் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, அவர்களை துன்புறுத்துவது, சாதியின் பெயரால் திட்டுவது, தலித் தரும் பணத்தை கையால் தொடாமல் இருப்பது, தலித் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிமை மறுப்பது, உரிமையை நிலைநாட்டினால் படுகொலை செய்வது, தலித் பகுதிகளில் தேர்தல் நடைபெறாமல் தடுப்பது, பள்ளிகளில் தலித் மாணவர்களை பாரபட்சமாக நடத்துவது, கிராம பொது சொத்துக்களை தலித்துகள் பயன்படுத்தாமல் தடுப்பது, தலித்துகள் நிலங்களை அபகரித்து திருப்பித்தர மறுப்பது, பொது விநியோகம் - அரசு அலுவலங்களை தலித் குடியிருப்பு பகுதியில் அமைக்க மறுப்பது, தலித் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை செய்துதர மறுப்பது, தலித் மக்களிடம் காவல் துறையின் பாரபட்சம் என தொடர்கிறது.... அதாவது பச்சைத் தமிழன் மற்றொரு பச்சைத் தமிழன் மீது தொடுக்கும் தாகுதல்களில் குறைந்தபட்ச பட்டியல் இது. இது ஏதோ கற்பனையில் பட்டியலிடப்பட்டது அல்ல. தமிழகத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் மார்க்சிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைத்து, தீண்டாமை குறித்த சர்வே எடுத்தது. உண்மை நிலையை பட்டியலிட்ட பின்பு தமிழக அரசு ஏழாயிரம் கிராமங்களில் தீண்டாமை நிலவுவதை ஒப்புக்கொண்டது. குடும்பத்தில் பெண்களை அடுக்களைக்குள் ஒதுக்கி வைப்பது எப்படி இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோ அப்படி ஊருக்கு வெளியே சேரி என்ற பெயரில் தலித் மக்களை ஒதுக்கி வைப்பதும் சமூக பொது புத்தியில் இயல்பாய் இருக்கிறது. இந்தியாவில் ஒரு அமெரிக்க அளவும், தமிழகத்தில் பாதி இல‌ங்கை அளவும் மக்கள் தொகையில் உள்ள தலித் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த மண்ணில் வர்க்கம் இருக்கிறது. அதற்குப் பக்கதிலேயே சாதியும் இருக்கிறது. இங்கு காற்றுக்கும், பாசன கால்வாய்க்கும், விளையும் பூமிக்கும், கோவிலுக்கும், குளத்திற்கும், பள்ளிக் கட்டிடத்திற்கும், ஊர் பொது இடத்திற்கும், உண்ணும் உணவிற்கும், குடிக்கும் தண்ணீருக்கும், உடுத்தும் உடைக்கும், பேசும்மொழிக்கும், இலக்கியத்திற்கும், கலாச்சாரத்திற்கும், அரசுக்கும், அதன் சட்டத்திற்கும், நீதிக்கும், நீதிமன்றத்திற்கும், பிணத்திற்கும், மயான‌த்திற்கும், சாமிக்கும், பேய்க்கும் கூட சாதி இருக்கிறது. இந்தப் புரிதல் இருப்பதால்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட பின்பு நடந்த முதல் மாநாட்டில் சாதிய வேற்றுமைகளை எதிர்த்துப் போராட அறைகூவல் விடப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குப் பெயர் "பறையன் கட்சி". காரணம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று இயக்கம் கண்டதுதான். அதே போல அந்த மக்களுக்காக வாழ்ந்து மறைந்த சீனுவாசராவ் பார்ப்ப‌னர் என்பதைவிட உழைக்கும் மக்கள் தலைவராகவே அடையாளம் காணப்பட்டார். விழுப்புரம் மாவடத்தில் 1988ல் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் அரசூர் சேட்டு (முனைவர் ஊருக்குப் பக்கம்தான்) கொலை செய்யப்பட்டதும், அங்கு 152 குடிசைகள் கொளுத்தப்பட்டதும் திரவுபதி அம்மன் ஆலைய நுழைவு உரிமைக்கான போராட்டம் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. திருப்பூர் ரத்தினசாமி கொலை செய்யப்பட முதல் காரணம் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றார் என்பதுதான். சாதி திரட்சிக்கான போராட்டத்தை மார்க்சிஸ்டுகள் எப்போதும் ஆதரித்தது இல்லை. ஏனெனில் அது கலவரங்களையே உண்டாக்கும் எனத் தெரியும். ஆனால் தலித் மக்கள் எழுச்சியை வரவேற்றது. ஏனெனில் அது காலகாலமாக அடக்கப்பட்ட கோபம். கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி சென்னை அண்ணாசாலையிலிருந்து கோட்டையை நோக்கி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும், மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் பேரணி நடந்தது. ஆயிரக்கணக்கானோர் திரண்ட அந்தப் பேரணியில் தீண்டாமைக்கு எதிராக குரல் எழுப்பி வந்தவர்களில் சரிபாதி பேர் தேவர்களும், வன்னியர்களும் உள்ளிட்ட தீண்டாமையை கைக்கொள்ளும் ஆதிக்க சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்க்சிஸ்ட் கட்சியால் இது எப்படி முடிந்தது எனில் அனைத்து சாதியில் இருக்கிற உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் திரட்டியதால்தான் சாத்தியப்பட்டது. இது ஒரு சிறிய முயற்சிதான் செல்ல வேண்டியதூரம் அதிகம் என்பதை அறிவோம். - 3 - பல ஆண்டுகலாய் களத்தில் கிடைத்த அனுபவத்துடன் தான் தீண்டாமை எதிர்ப்பு நேரடி நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்கிறது. இதனால் ஆதிக்க சாதியினர் கோபித்துக்கொள்வார்கள் என்பதும் அவர்களுக்கு வகுப்பெடுத்து, விய‌ர்த்தால் துடைத்து விட்டு அவர்கள் முழுமன சம்மதத்துடன்தான் தீண்டாமையை ஒழிப்பது என்பது பம்மாத்து வேலை. முனைவர் அய்யா என்ன சொல்கிறார்.. "........தமிழகத்தின் நீண்ட வரலாற்றையும், அது கண்ட பெருமிதங்களையும், அந்தப் பெருமிதங்களில் பங்கேற்ற அனைத்து மண்ணின் மக்களையும், இந்த மண்ணின் மக்கள் பொதுவாக எதிர்கொள்ளும் அபாயங்களும், அந்த அபாயங்களை எதிர்கொள்ள இந்த மண்ணின் மக்கள் ஒன்றிணைய வேண்டிய நிர்பந்தங்களையும், அக்குவேறு ஆணி வேறாக எடுத்தியம்பினால், இம்மக்கள் விரைவில் மனமுதிர்ச்சி அடைவார்கள்." என அப்பாவித்தனமாக எழுதுகிறார். நாம் எல்லாம் ஒரே தமிழருப்பா என சாதி வெறிபிடித்த ஆதிக்க சக்திகளிடம் சென்று பேசிப்பார்த்தால் தெரியும் "அக்குவேறு ஆணிவேறாக" கிழிவது எது என்று. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடிகள் தான் பார்ப்பனிய சிந்தனைகளை தூக்கித் திரிகின்றனர் என்பதை மறக்கிற அல்லது மறைக்கிற வாதம் இது. ஒருவர் பிறப்பால் பார்ப்பனராய் இருந்தாலும் அவர் உழைப்பாளி மக்களுக்காக நிற்பதை கொச்சைபடுத்துகிற முனைவர்தான் ஆதிக்க சாதியினருக்கு வகுப்பெடுக்கச் சொல்கிறார். மற்றொரு இடத்தில் "..........பார்ப்பனீய வர்ணாசிரமக் கோட்பாட்டால் செயற்கையாக சிதைக்கப்பட்ட, தனித்துவமான, பழம்பெரும் இந்திய நிலப்பரப்பின், சாதிய வேற்றுமைகளை இவர்கள் திட்டமிட்டே குறைத்து மதிப்பிட்டு, சாதிய வேற்றுமைகளைக் களையவேண்டிய ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டங்களை நேர்மையுடன் முன்னெடுக்காமல், வர்க்க வியாக்கியானங்களையே நிகழ்த்திக் கொண்டிருந்தனர்" என எழுதுகிறார். அதாவது மார்க்சிஸ்டுகள் திடீரென ஆல‌ய நுழைவுப் போராட்டம் நடத்துகிறார்கள், தலித் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று எழுதிவிட்டு, மேற்கண்ட பத்தியில் இங்கு உள்ள சாதிய ஆபத்தை புரிந்துகொள்ளவில்லை, வர்க்க வியாக்கியானங்களையே நிகழ்த்திக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். அவரது கூற்றில் கூட அவரால் உண்மையாய் இருக்க முடியவில்லை. முனைவரின் பிரச்சனை மிகவும் எளிதானது. தான் கட்டமைக்கின்ற தமிழ் தேசிய கருத்தில் சாதி பிரச்சனைகளை கண்டும் காணாமலிருக்க வேண்டும் என்பதுதான். இதற்கு இவர் மார்க்சிஸ்டுகளை வசைமாரிப் பொழிகிறார். முல்லை பெரியாறு பிரச்சனை முதல் மேற்குவங்கம் வரை உதாரணம் காட்டுகிறார். முல்லைப் பெரியாறு பிரச்சனை பேசி தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைபாடு. ஏனெனில் அது மற்றொரு தேசிய இனத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் ஒரே தேசிய இன மக்களான பாண்டிச்சேரி தமிழர்களுக்கு கொடுக்க வேண்டிய இரண்டு டி.எம்.சி தண்ணீரை தமிழ் தேசிய இனம் கொடுக்காமல் ஏமாற்றுவது குறித்து தமிழ்த் தேசியவாதிகள் வாய்திறக்க மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. அதற்கும் ஒரு கட்டுரை எழுதி இலங்கைப் பிரச்சனையை அதில் நுழைத்து திசைத் திருப்பினாலும் திருப்புவார். - 4 - மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பன தலைமையில் சிக்கி இருப்பதாக அந்த கட்சி உறுப்பினர்களை விட முனைவர்தான் மிகவும் கவலைப்படுகிறார். அவருக்கு இந்தக் கவலை தேவையற்றது. ஏனெனில் இந்தத் தலைமைதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்பணித்துள்ளது. தமிழக உழைக்கும் மக்களின் உரிமைக்காக நிறைய போராடி உள்ளது. ஒருவரை கொச்சைப்படுத்த அவரது சாதியைப் பயன்படுத்துவது அறிவுடைய செயலா என்பதை யோசிக்க வேண்டும். இந்தியாவில் ஆதிக்க‌ சாதி என்று அழைக்கப்படுகிற நம்பூதிரி சாதியில் பிறந்த ஈ.எம்.எஸ் என்கிற வரலாற்று மனிதன் முதலமைச்சரானபோது போட்ட‌ கையெழுத்து தலித் மக்களுக்கு நிலத்தை உரிமையாக்கும் சட்டத்திற்குப் பயன்பட்டது என்பதை மறந்துவிடகூடாது. தான் ஒரு தலித் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி இன்று வரை தமிழகத்தில் உள்ள ஐம்பது லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை ஒடுக்கப்பட்ட நிலமற்ற மக்களுக்குக் கொடுக்க மறுக்கிறார். சமீபத்தில் மட்டும் மார்க்சிஸ்டுகளின் தொடர்சியான போராட்டத்தினால், அருந்தியர்களுக்கு 3 சதம் உள் ஒதுக்கீடு கிடைத்தது. உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு தலித் மக்களுக்குப் பொதுப்பாதை கிடைத்தது. திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவில், திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி காளியம்மன் கோவில், நெல்லை மாவட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பாதாங்கி கிராமம் சிவன் கோவில், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் காசிவிஸ்வநாதர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம், வேட வந்தாடி கிராமம் கூத்தாண்டவர் கோவில், விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் கிராமம் திரௌபதியம்மன் கோவில், நாகை மாவட்டம் செட்டிப்புலம் கிராமம் ஏகாண்ட ஈஸ்வரர் கோவில், ஆகிய ஆலயங்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றது. தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, முடிவெட்டும் உரிமை, பொதுப்பாதையை பயன்படுத்தும் உரிமை, சலவையகங்களில் துணி சலவை செய்துதரும் உரிமை, பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் உரிமை, பொது மயான உரிமை, தனி மயானத்தில் பாதை உரிமை என பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் வெற்றி கிடைத்தன. மார்க்சிஸ்டுகள் இப்படிப்பட்ட ஆலயங்களை கடவுள் இருக்கும் இடமாக பார்க்கவில்லை, அது தீண்டாமை என்ற அதிகாரத்தை ஆதிக்க‌சாதிக்கு வழங்கும் இடமாக இருப்பதால் அதில் நுழைந்து அதிகாரத்தை கேள்வி எழுப்ப விரும்புகிறது. இந்தப் போரட்டங்களில் ஏராளமான ஆதிக்க‌சாதியைச் சார்ந்த மக்களும் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெள்ளைக்காரர்கள் தலித் மக்களுக்கு கொடுத்த பஞ்சமி நிலம் இன்று அந்த மக்கள் கையிலிருந்து அபகரிக்கப்பட்டுள்ளது. அதற்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கட்சி. ஆக.. இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் தலித் மக்கள் விடுதலையை நிலம் என்ற வாழ்வியல் உரிமை சார்ந்த, உழைக்கும் வர்க்கம் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகுகிறது. வர்க்கப் போராட்டத்திற்கான அணி திரட்டல் தாமதப்பட காரணம் இங்கு வர்க்கம் சாதியாய் பிளவுபட்டு நிற்பதுதான். அதனால்தான் சாதியப் பிரச்சனைகளையும், வர்க்க அணி திரட்டலையும் இணைத்து நடத்துகிற கடினமான பணியை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்கிறது. அதே நேரம் உலகமயம், அது விதைக்கிற தாராள‌மயம் தனியார்மயம் நிதிமூலதனம் போன்றவை இன்று அனைத்துப் பகுதி மக்களையும் வீதியில் நிறுத்துகிறது. தேசங்களின் எல்லைகள் அதற்குக் கிடையாது, இனங்களின் எல்லைகள் அதற்குக் கிடையாது, மொழிகளின் எல்லைகள் அதற்குக் கிடையாது, சாதிகளின் எல்லைகள் அதற்குக் கிடையாது ஆகவே தமிழ் முதலாளியும், பார்பன - பனியா முதலாளிகளும் தங்களுக்குள் ஒற்றுமையாய்த்தான் இருக்கின்றனர். உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்றுதான் சாதியத்தைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்று உழைக்கும் வர்க்கம் ஒன்று சேர்ந்து போராடுவதுதான் அதற்கு முதல் நிபந்தனை சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவதுதான். அந்தப் பணியை செய்யும் மார்க்சிஸ்டுகளுடன் தமிழ்த் தேசியவாதிகளும் கைகோர்ப்பதுதான் இன்றைய தேவை. முனைவர்கள் விழித்துக்கொள்வார்களா? - எஸ்.ஜி.ரமேஷ்பாபு