Monday, July 22, 2013

சொந்த சாதித் திருமணங்களை வெறுப்போம்! -- நீலவேந்தன்

சொந்த சாதித் திருமணங்களை வெறுப்போம்!

    


 கடவுள், மதம், சாதி உள்ளிட்டவைகளைப்போல அறிவியலுக்கு முரணானது எதுவுமில்லை.   ஒரு செல் உயிரி அமீபாவிலிருந்துதான் உலகின் அனைத்து உயிர்களும் தோன்றின எனும்போது உலக மாந்த இனமே ஒரு சாதியாகத்தான் இருக்க முடியும். ஆனால், சாதி என்கிற பொய்மைவாதக் கருத்தை வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்புக்காக மனித குலத்தின் இயங்கியலுக்கு எதிராகச் சிந்தித்தும் பேசியும் வருகிறார்கள்.
தர்மபுரியில் ஒரு இளைஞனும் இளைஞியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதைக் காரணம் காட்டி தலித்துகள் படித்து, உழைத்து, சம்பாதித்து, நல்ல முறையில் வீடுகட்டி வாழ்வதையும் நல்ல முறையில் உடை உடுத்தி, பண்பாட்டுடனும் நாகரீகத்துடனும் வாழ்வதைப் பொறுத்துக்கொள்ளாமல், தலித்துகளை அடித்து நொறுக்கி, அவர்களின் உடைமைகளை வெட்கமில்லாமல் திருடிக்கொண்டு, ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட உழைப்பால் விளைந்த வீடுகளை அடித்து நொறுக்கி, மிச்சம் மீதி இருக்கக்கூடாதென நெருப்பால் கொளுத்தி தாங்கள் குயுக்தியான வஞ்சகமிக்க காட்டுமிராண்டிகள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
     இந்தியாவில் உள்ள 4000த்துக்கு மேற்பட்ட சாதிகளில் எந்தவொரு இரண்டு சாதியும் இணையானது இல்லை எனக் கற்பிக்கும் இந்துத்துவ வருணாசிரமக் கொள்கையை உள்வாங்கிக் கொண்டு, கடந்த நவம்பர் மாதம் 10ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிநேலியனூரில், ஒரு அருந்ததியர் இளைஞர் கார்த்திகேயனை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக ஆதிதிராவிடர் பெண் கோகிலாவை அவரது பெற்றோரே கொலை செய்து காவல்துறை கண்முன்னால் எரித்திருக்கிறார்கள். கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், கோகிலாவைக் கொலை செய்ததற்காக நீதி கேட்டு சட்ட ரீதியாகப் போராடும் வழக்கறிஞர்களை வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து நீக்குவது, நீதிமன்ற வளாகத்தில் பலபேர் முன்னிலையில் இழிவுபடுத்துவது என சாதிய வக்கிரக்கொலை (கௌரவக்கொலை என்று நாம் எப்படி சொல்ல முடியும்?) நடத்துகிறார்கள்.    
     கடலூர் மாவட்டம் பாச்சாரப்பள்ளியில் ராமதாசு ஒரு வீடு திறப்பு விழாவுக்கு வந்துபோன அடுத்த நாள் 7 தலித் குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளன. தர்மபுரி வெறியாட்டத்தைக் (தர்மபுரி கலவரம் என்று பலபேர் சொல்லுகிறார்கள். இருதரப்பும் மோதிக்கொண்டால்தானே அது கலவரம்?) கண்டித்துச் சுவரொட்டி ஒட்டியதற்காக 7 வீடுகள் எரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் உண்மை அதுவல்ல. தமிழ்நாடு காவல்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 7 தலித் இளைஞர்களின் வீடுகள் குறிவைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன. அதுபோக இந்த 7 பேரும் காவல்துறையில் சேருவதற்கு உரிய பயிற்சிகளை சிரமேற்கொண்டு அளித்த திருஞானம்  என்பவர் குடிசைகள் எரிக்கப்படுவதற்கு முன்பு மிகக்கோரமாகத் தாக்கப்பட்டு, இறந்து விட்டார் எனக் கருதி கண்மாயில் வீசி எறியப்பட்டிருக்கிறார். ஆக, தலித்துகள் கண்ணியத்தோடு வாழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சாதிய வன்மத்தின் வெளிப்பாடாக இந்தக் குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. ரெட்டியாரும், செட்டியாரும், பிள்ளைமாரும், கோனாரும், முதலியாரும், யாதவரும் காவல்துறைக்கு தேர்வானபோது வராத வன்மம் தலித்துகள் தேர்வாகிறபொழுது வருகிறதென்றால், தனக்குக் கீழானவன் தலித் என வடித்தெடுக்கப்பட்டிருக்கிற சாதிய வருணாசிரமச் சிந்தனையன்றி வேறில்லை.
     இதேபோலத்தான், தேனி மாவட்டம் பெரியகுளத்தில், - நமக்கு உடன்பாடில்லாவிட்டாலும் கூட - கடவுள் நம்பிக்கையில் ஊறிப்போய் அங்கிருக்கிற கோவிலில் அறங்காவலர் குழு உறுப்பினராகப் பணியாற்றி வந்த நாகமுத்து என்கிற திருமணமாகாத ஆதிதிராவிடர் இளைஞரை அறங்காவலர் குழுவிலிருந்து விலகச் சொல்லியும், கோவிலுக்கு இனிமேல் வரக்கூடாது எனச் சொல்லியும் சொல்லணா மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலை செய்யுமளவு துன்புறுத்தியிருக்கிறார்கள். என் தற்கொலைக்குக் காரணம் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாதான் என எழுத்துப்பூர்வமாகச் சொல்லியிருந்தும் கூட 5 நாட்கள் பிணத்தை எடுக்க மாட்டோம் என ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு நின்று போராடியும் கூட ஒரு வழக்குக்கூட பதிவு செய்யத் தயங்குகிறது காவல்துறை.
     ஒன்றரை மாத இடைவெளிக்குள்ளாக வெளியே தெரிந்தவை மாத்திரம் இவையென்றால், தலித்துகளின் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த தாக்குதல் எப்படி இருக்கிறது? சமூகம் சாதியால் எவ்வளவு புரையோடிப்போய் இருக்கிறது? என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
     ஆனால், இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் முன்னர் நடந்த காலத்தில், இவைகளைக் கண்டிக்க மனமில்லாவிட்டால் கூட, வெளிப்படையாக ஆதரிக்கத் தயங்குவார்கள். ஆனால் இப்பொழுது, துளியும் வெட்கமில்லாமல், சாதிய வன்கொடுமைகளை ஆதரித்துப் பேசுகிறார்கள். கேள்வி கேட்பாரில்லாமல் வன்கொடுமை வெறியாட்டம் நடத்துவதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என மறைமுகமாகவும் திருத்த வேண்டும் என வெளிப்படையாகவும் பேசி வருகிறார்கள்.
     அத்தோடு சாதி ஒழிப்பிற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிற சாதிய மறுப்புத் திருமணங்கள் அறவே கூடாது என அறிவியலுக்கும் சமூகநீதிச் சிந்தனைக்கும் எதிராக பட்டவர்த்தனமாக பேசுகிறார்கள்.
     தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் கூலிங் கிளாஸ் போட்டு ஆதிக்க சாதிப் பெண்களை மயக்குகிறார்கள் என்கிற பேச்சு, தலித் இளைஞர்கள் கோவணத்தோடு அலைய வேண்டும் என்கிற விருப்பத்தைச் சுமந்திருப்பதோடு, ஆதிக்க சாதிப்பெண்கள் கூலிங் கிளாசுக்கும் ஜீன்ஸ் பேண்ட்டுக்கும் மயங்கி விடுவார்கள் என்கிற பெண்கள் மீதான கொச்சையான இழிவையும் சேர்ந்தே சுமந்திருக்கிறது.
     ஆதிக்க சாதிப்பெண்கள், வேறு சாதி ஆண்களை மணந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்துபவர்கள், வேறு சாதியினரிடம் முடி வெட்டிக் கொள்ளக்கூடாது, வேறு சாதியினரிடம் துணி வெளுத்துக் கொள்ள மாட்டோம், வேறு சாதியினர் எங்கள் மலத்தை அள்ள விட மாட்டோம் எனவும் அறிவிப்பார்களா? என்று கேட்க விரும்புகிறோம்.
     அவசர சிகிச்சையின் போதோ, விபத்து காலங்களில் ஏ குரூப், பி குரூப் என வகை பிரித்துக் கேட்காமல் இன்ன சாதி ரத்தம் வேண்டும் என்று கேட்பார்களோ என்று கேட்கவும் தோன்றுகிறது.
     ஆக, அறிவியலுக்கு முரணான சாதியத்தின் விளைபொருட்களான இது போன்ற கருத்துக்களையும் இயக்கங்களையும் முறியடிப்பதற்கு, சாதிமறுப்புத் திருமணத்தை ஊக்குவிப்போம்! அப்படி சாதிமறுப்புத் திருமண ஆதரவு சக்திகளை சாதி மதம் கடந்து கருத்தியலுடன் கூடிய அணி சேர்ப்போம்!!
- நீலவேந்தன், ஆதித்தமிழர் பேரவை ( neelaventhan.p@gmail.com)

அத்துமீறும் சிறுவாலை தலித் மக்கள் கே.எஸ்.முத்து

அத்துமீறும் சிறுவாலை தலித் மக்கள்

                
இந்தியா விடுதலை பெற்று 66 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த நாட்டின் தொல்குடி மக்கள் சாதி இந்துக்களின் சிறைக்கூடங்களில் சிக்கி, மீளமுடியாமல் அனுபவித்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் ஏராளம். கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்கிறார்கள். விவசாயம் முற்றிலும் அழிந்து மரணிக்கும் தருவாயில் அந்த முதுகெலும்பு சாதியைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? நாகரிக உலகத்தில் வாழ்ந்தாலும் இன்னும் பிற்போக்குச் சிந்தனையுடன் மனிதப் பண்பாடற்றுப் போய் மிருகத்தனமாக வாழ்ந்து வரும் சாதிவெறி பிடித்த ஆயிரக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒரு கிராமத்தைப் பற்றிதான் இக்கட்டுரை பேசுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில்
தலித் மக்கள் ஊருக்குள் செருப்பணிந்து நடக்க முடியாது; மிதிவண்டி ஓட்டிச் செல்ல முடியாது; தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளைமுறை; கோயில்களில் நுழைந்து வழிபட அனுமதி இல்லை; பொதுக்குழாயில் தண்ணீர் எடுக்க முடியாது; செத்த பிணங்களை ஊர் வழியே எடுத்துச் செல்ல முடியாது; பொதுச் சொத்துகளை அனுபவிக்கும் உரிமை கிடையாது; ஆடம்பரமான முறையில் திருமணங்களோ, தங்களது குலசாமி திருவிழாக்களோ நடத்த முடியாது; அரசியல் கட்சியிலோ, ஆட்சி நிர்வாகத்திலோ பங்கேற்க உரிமை மறுக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற எண்ணற்ற எழுதப்படாத சட்டங்களால் அடக்குமுறைக்கு உள்ளான தலித் மக்கள் குறிப்பாக அருந்ததியர் சமூகத்தினர் ஒருவர்கூட இதுவரை அரசுப்பணியில் இல்லை. ஒருவர்கூட படித்து பட்டதாரியானவர்கள் இல்லை என்கிற அவல நிலைதான் இன்னும் இக்கிராமத்தில் நீடிக்கிறது.
கிராம அமைப்பும் தொழிலும்
மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது சிறுவாலை. ஊரைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை இயற்கை எழில் கொஞ்சும் வயற்காடுகள், குன்றுகள், மலைகள் சூழ்ந்த ஓர் அழகான கிராமம் இது. அருந்ததியர், பள்ளர், பறையர், புதிரை வண்ணார், மருத்துவர், நாயக்கர், தேவர், அகமுடையார், கவுண்டர், பிள்ளை, நாடார், ஆசாரி என 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு முரண்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றன. இங்கிருக்கும் அனைத்துச் சாதிகளிலும் பள்ளர் சமூகத்தினரே எண்ணிக்கையில் அதிகமாக (60 குடும்பங்கள்) பெரும்பான்மை சாதியினராக உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து அருந்ததியர் சமூகத்தில் 45 குடும்பங்களும், பறையர் சமூகத்தில் 20 குடும்பங்களும் உள்ளன. இம்மூன்று சாதிகளும் இணைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் இவர்களை மீறி இக்கிராமத்தில் எந்த சாதியும் மேலாதிக்கம் செய்ய முடியாது. இவர்களுக்குள் தனித்தனியே பிளவுகள், வேற்றுமைகள் காணப்படுவதால் சிறுபான்மைச் சமூகத்திடம் அடிமைகளாக – தீண்டத்தகாதவர்களாக வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது சிறுவாலைக்கு மட்டுமல்ல; தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பொருந்தும்.
பள்ளர், பறையர் சமூகத்தில் பெரும்பான்மையோர் விவசாயக் கூலிகளாக இருப்பதால் இங்குள்ள சாதி இந்துக்களைச் சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஆனால் அருந்ததியர் சமூகத்திலுள்ள ஆண்களும், பெண்களும் வெளியூருக்கு தினக்கூலிகளாக (வர்ணம் தீட்டுதல், கட்டட வேலை, பிறகூலி வேலை) சென்று வருகின்றனர். அருந்ததியர்கள் வெளியூர்களில் தங்கி குலத்தொழில்களை விட்டொழித்து நவீனத் தொழில்களில் ஈடுபட்டு, கிராமத்தில் கிடைக்கும் வருமானத்தை விட அதிகளவு வருமானத்தை ஈட்டி ஓரளவிற்கு வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். அதனால் ஒடுக்கப்பட்ட இம்மூன்று சாதிகளுக்குள் சுமூகமான, ஆரோக்கியமான உறவுமுறை தொழில் ரீதியாகவோ, பண்பாட்டு அடிப்படையிலோ உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளது. இவர்களுக்குள் கொடுக்கல், வாங்கல் முறை பொருள் வடிவிலும் இல்லை; உறவு நிலைகளிலும் இல்லை என்பது இவர்களுக்குள்ளும் சாதி குறித்த உணர்வு வேரூன்றிப் போயுள்ளதை காட்டுகிறது.
இங்கு வழக்கத்திற்கு மாறாக அருந்ததியர் குடியிருப்புகளின் அருகில் தான் அரசு உயர்நிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி, பள்ளிக்கூடம், கிராம பொது நூலகம், புறக்காவல் நிலையம் (தற்பொழுது இயங்கவில்லை), ரேசன் கடை போன்றவை அமைந்துள்ளன. இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் தொண்ணூறு சதவிகித மாணவர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களே. சாதி இந்துக்களின் குழந்தைகள் வாடிப்பட்டி, சமயநல்லூர், மதுரை போன்ற நகர்ப்புறப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
சிறுவாலை மிகச்சிறிய கிராமம் தான். ஆனால், ஓராண்டுக்கு ஏழு லட்ச ரூபாய் இக்கிராமத்திற்கு வருமானமாக கிடைக்கிறது. ஊருக்கென்று அசையும் மற்றும் அசையா சொத்துகள் நிறைய உள்ளன. இவ்வூரில் சிறுபான்மை எண்ணிக்கையுள்ள ஒரு சாதியினர் தொடர்ந்து இங்கு ஆட்சியதிகாரம் செலுத்தி, இவ்வூரின் வருமானத்தை எவருக்கும் கணக்கு காட்டாமல் கள்ளத்தனமாய் கைப்பற்றி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட சாதிகளில் பெரும்பான்மையாக வசிக்கின்ற பள்ளர்கள், கள்ளர் சாதிக்கு துணை போவதால் ஆட்சியதிகாரத்தில் பங்கு கேட்கவோ, அசையும், அசையா சொத்துகளில் உரிமை கோரவோ முடியாத சூழ்நிலை உள்ளது. பறையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அவர்களுடைய குரலும் எடுபடவில்லை. அருந்ததியர்கள் மட்டும் எதேச்சதிகாரப் போக்கை எதிர்த்து கேட்பதால் தொடர்ந்து சாதி இந்துக்களுக்கும் அருந்ததியர்களுக்கும் இடையே மோதல் உருவாகி அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சாதி இந்துக்களை எதிர்த்து நியாயமான கேள்விகளை எழுப்பும் அருந்ததியர்கள் மீது காவல்துறையின் துணையோடு பொய்வழக்குப் புனைந்து, அவர்களின் விடுதலை உணர்வை வீழ்த்திவிட பல்வேறு நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சி ஓடி ஒளிந்து கொள்ளாமல் துணிந்து நின்று, ஆதித்தமிழர் பேரவையின் துணையோடு எதிரிகளுடன் நேருக்கு நேர் களமாடி வருகிறார்கள் இவ்வூர் அருந்ததிய இளைஞர்கள்.
எதிர்கொள்ளும் சவால்கள்
அனைத்து சாதிகளுக்கும் பொதுவான காமாட்சியம்மன் கோயிலில் அருந்ததியர்கள் நுழைந்து வழிபட இன்றுவரை அனுமதி இல்லை. அதேபோல் அருந்ததியர்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த சாமிக்கு அருந்ததியர்கள் ஒன்று கூடி திருவிழா எடுக்கும் போதெல்லாம் சாதி இந்துக்கள் திட்டமிட்டே கலவரத்தைத் தூண்டி விழா நடத்தவிடாமல் செய்து வருகின்றனர். “சக்கிலியனுக்கு என்னடா திருவிழா?” என்ற சாதி ஆணவத்தோடு சாமி எடுத்து வரும் போது அருந்ததிய மக்களை வீடு புகுந்து அடிப்பதும், திருவிழா பாதியிலே நின்று போவதும் இங்கு தொடர் நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் காளியம்மனுக்கு விழா எடுக்கும் போதும் சாதி இந்துக்கள் மீதான பயத்தோடும் என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வோடும் தான் திருவிழா கலவரத்தை சந்தித்து வருகிறது. திருவிழாவிற்கு ஒலிபெருக்கி வைத்துக் கொள்வதற்கு கூட அனுமதி கிடையாது. காவல்துறையிடம் முறையாக அனுமதி கேட்டாலும் அவர்களும் அனுமதி அளிப்பதில்லை.
சாதி இந்துக்களைப் போல உடை உடுத்தவோ, காது குத்து, திருமணம், திருவிழா போன்ற சடங்குகளை நிகழ்த்தவோ அருந்ததியர்களுக்கு உரிமை இல்லை. சாதி இந்துக்களுக்கு நிகராக தலித் மக்கள் ஒருபோதும் வாழக்கூடாது. அதையும் மீறி யாராவது நடந்து கொண்டால் அது தனக்கு நேர்ந்த அவமானமாக சாதி இந்துக்கள் கருதுகிறார்கள். தங்களை விட எப்போதும் கீழ்நிலையிலேயே தலித் மக்கள் வாழவேண்டும் என சாதி இந்துக்கள் விரும்புகிறார்கள். ஆனால் இங்குள்ள அருந்ததிய இளைஞர்கள் அந்த எண்ணத்தை தகர்த்து வருகிறார்கள்.
இக்கிராமத்தில் அருந்ததியர்கள் தங்களுக்கான பங்கைக் கேட்கும் போதெல்லாம் அவமதிப்பிற்கும் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். இந்த கிராமத்திற்கு சொந்தமான பொதுச் சொத்துகளை ஆண்டுதோறும் குத்தகைக்கு விடுவதுண்டு. அதில் வயக்காடு குத்தகை, வாத்துகுத்தகை, நெல் குத்தகை, கடை குத்தகை, கண்மாய், ஊரணியில் மீன் பிடிக்கும் குத்தகை என பல்வேறு ஏலங்கள் விடப்பட்டாலும் அருந்ததியர்களுக்கு ஏலம் எடுக்க உரிமை இல்லை. பொதுச் சொத்துகளை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கின்ற லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை சாதி இந்துக்கள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். கிராம வளர்ச்சிக்காக இந்தப் பணத்தை பயன்படுத்தாமல் தங்களின் சொந்த வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி ஏகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.
அரசியலதிகாரத்தில் அருந்ததியர்கள்
அரசியலதிகாரத்தைப் பொருத்தவரை கள்ளர் கமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களே இங்கு மாறி மாறி பஞ்சாயத்துத் தலைவராக ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். பெரும்பான்மையாக உள்ள பள்ளரும், அருந்ததியரும் இங்கு பஞ்சாயத்துத் தலைவராகவோ, பால்பண்ணை சங்கத் தலைவராகவோ வரமுடியவில்லையே என்ற கேள்விக்கான விடையை ஆராய்ந்தபோதுதான் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. இந்த கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக தொடர்ந்து அரசியலாதிக்கம் செய்து வருபவர் ஆண்டியப்பன் குடும்பத்தினரே. ஆண்டியப்பத் தேவரின் இரண்டாவது மனைவி பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். எனவே தேர்தல் வரும் போதெல்லாம் தன் இரண்டாவது மனைவியை ஆயுதமாகக் கொண்டு அதன் மூலம் பெரும்பான்மையாக வசிக்கின்ற பள்ளர்களின் சமூக வாக்குகளையும் முக்கியப் புள்ளிகள் வழியே அருந்ததியர் வாக்குகளையும் பெற்று தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு, பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்று வருகிறார்கள் ஆண்டியப்பன் குடும்பத்தினர்.
சிறுவாலை பஞ்சாயத்து தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டவுடன் அதுவும் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டவுடன் ஆண்டியப்பத் தேவரின் இரண்டாவது மனைவியின் மகள் நாகரத்தினத்தை தேர்தல் களத்தில் மோதவிட்டு எதிர்ப்பின்றி தேர்தலில் வெற்றி பெற எல்லா வேலைகளையும் ஆண்டியப்பத் தேவர் குடும்பத்தினர் செய்து விடுவார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாகரத்தினத்தை தலையாட்டி பொம்மையாக வைத்துக் கொண்டு ஆண்டியப்ப குடும்பத்தினரே சர்வாதிகாரம் செய்வார்கள். அவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்று வந்தால் அதாவது “பொதுத் தொகுதின்னா நான்; தனித்தொகுதின்னா நீ” (நாகரத்தினம்) வேறு யாருக்கும் அந்தப் பதவியை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது. வேறு யாராவது அந்த இடத்திற்கு நெருங்க முயற்சி செய்தால் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அழித்தொழிப்பு நடவடிக்கையை தன் அடியாட்கள் மூலம் அரங்கேற்றுவது ஆண்டியப்பன் குடும்பத்தினருக்கு கைவந்த கலை.
இப்படித்தான் ஒருமுறை தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட சிறுவாலை பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த அழகுராமன் மனைவியும், நாகரத்தினமும் போட்டியிட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் அழகுராமன் மனைவி அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைந்த நிலையில் இருந்த போதிலும் கூட, குறைந்த வாக்குகள் பெற்ற நாகரத்தினமே தேர்தலில் வெற்றி பெற்றார் என அறிவித்தனர். அன்று முதல் அருந்ததியர்கள் தேர்தலில் போட்டியிடுவதைப் புறக்கணித்து வருகின்றனர்.
பொருளாதாரத் தடை
இங்குள்ள அருந்ததியர்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு சென்றுதான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அதனால் ஓரளவு வசதியான வாழ்க்கையை தங்களின் கடின உழைப்பினால் அனுபவித்து வருகிறார்கள்; ஒன்றிரண்டு குடிசை வீடுகளைத் தவிர அனைத்து வீடுகளும் கான்கிரீட் போட்ட வீடுகள்; ஒவ்வொரு வீட்டிலும் இரு சக்கர வாகனம் ஒன்று உள்ளது. இவர்களில் ஒரு சிலர் சொந்தமாக மரசாமான்கள் வாங்கி கொட்டகை போடுதல், டிரம்செட் அடித்தல் போன்ற தொழில்களை செய்து வந்தாலும் இவர்களை சாதி இந்துக்கள் அழைத்து தொழில் வாய்ப்புகளை கொடுப்பதில்லை. அருந்ததியர்களை எந்த வகையிலும் ஊக்கப்படுத்துவதற்கு சாதி இந்துக்கள் தயாராக இல்லை. அருந்ததியர்களும் சாதி இந்துக்களுக்கு அடிமைகளாக வாழ விரும்பவில்லை.
இங்கு வசிக்கும் எல்லா சாதிகளை விட அருந்ததியர்கள்தான் அதிகமாக வெளியூருக்கு வேலைக்குச் சென்று திரும்புகின்றனர். ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அரசுப் பேருந்து ஊருக்குள் வந்து போனதால் பயணம் செய்வதற்கு ஊரே சிரமத்திற்குள்ளானது. இது குறித்து அரசிடம், உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அனுப்பியும் அவர்கள் செவி மடுக்கவில்லை. இந்நிலையை எதிர்த்து அருந்ததிய இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசுப் பேருந்தை தினமும் ஊருக்குள் வரவழைத்தனர். வேறு எந்தச் சாதியும் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளவில்லை. ஆனால் பேருந்து வரும்போது சாதி இந்துக்கள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும்போதும் அருந்ததியர்களை சாதி சொல்லி இழிவாகப் பேசுதல், பேருந்தில் அவர்களை ஏறவிடாமல் தடுத்தல்,திட்டமிட்டே சண்டை போடுதல் போன்ற சாதியகாழ்ப் புணர்வுக் கொடுமைகள் அதிகரிக்கத் தொடங்கியதும்சாதி இந்துக்களுடன் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறு
மோதிக் கொண்டதால் வழக்கு ஏற்பட்டு இன்று வரை நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றனர்.
சாதி இந்துக்களின் அடாவடித்தனம்
அருந்ததியர் குடியிருப்புகளின் அருகில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் தலித் மாணவ, மாணவியர் தான் அதிகம் படிக்கின்றனர். இப்பள்ளியை சாதி இந்துக்கள் இரவு நேரங்களில் மதுக்கூடாரமாகவும், விபச்சாரக் களமாகவும் பயன்படுத்துகின்றனர். இதைக் கண்டித்து சாதி இந்துக்களிடம் பலமுறை எடுத்துக் கூறிய பின்னரும் தொடர்ந்து இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிடுவது, ஆணுறைகளைப் பயன்படுத்திவிட்டு எறிந்து விடுவது போன்ற சமூக இழிவுகளைச் செய்து வந்துள்ளனர். இத்தகைய கீழ்த்தரமான செயலுக்கு எதிராக அருந்ததிய இளைஞர்கள் ஒன்று திரண்டு அவர்களுடன் தாக்குதல் நடத்தி நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதைவிட இன்னும் கேவலமான முறையில் சாதிவெறியர்கள் நடந்து கொள்வது அவர்களின் கேடுகெட்ட சாதி ஆணவத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் கிராமப்புறத்தில் வாழ்பவர்கள் தங்களுக்கென்று சொந்தமாக கழிப்பறை கட்டிக்கொள்ளும் பழக்கமில்லை. அருந்ததியர் பகுதியிலுள்ள பெண்கள் மலம் கழிக்க காட்டிற்குச் செல்லும் போது காட்டிற்குள் ஒளிந்து ஒளிந்து வேடிக்கைப் பார்ப்பதும், செல்போன் கேமரா மூலம் போட்டோ எடுப்பதும், வீடியோ எடுப்பதும் என ஒரு சில சாதி இந்துக்கள் செய்து வருகின்றனர். கேடுகெட்ட இச்செயல்களில் ஈடுபடும் சாதி இந்துக்களை அருந்ததிய இளைஞர்கள் கோபம் கொண்டு எதிர்த்துக் கேட்டபோது “நாங்கள் அப்படித்தான் பார்ப்போம்; அப்படித்தான் வீடியோ எடுப்போம்” என சாதியாதிக்கத் திமிரோடு பேசியதால் அருந்ததிய இளைஞர்கள் அவர்களை அடித்து நொறுக்கி ஓடஓட விரட்டியுள்ளனர். இந்த சம்பவத்திலும் அருந்ததியர் இளைஞர்கள் மீது பொய்வழக்குப் புனைந்து காவல்துறை சாதி இந்துக்களுக்கு தன் விசுவாசத்தைக் காட்டியுள்ளது.
காவல்துறையின் அடக்குமுறை
காவல் துறையினர் சட்டப்படி நீதியை காப்பாற்றுவதற்குப் பதிலாக தங்கள் சாதியைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். கிராமங்களில் வாழும் சாதி இந்துக்கள் எத்தகைய சமூகக் குற்றங்களில் ஈடுபட்டாலும் சாதி தீண்டாமைக் கொடுமைகளை கடைப்பிடித்தாலும் அவர்கள் மீது வழக்குப் போடுவதில்லை. அவர்களை தட்டிக் கேட்பதுமில்லை. ஆனால் அதே வேளையில் தலித் மக்கள் பக்கம் தான் நியாயம் உள்ளது எனத் தெரிந்த பின்னும் கூட அவர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து துன்புறுத்தும் போக்கும் குறைந்த பாடில்லை.
சிறுவாலையில் நடக்கும் எந்தவொரு அநீதியையும் தட்டிக் கேட்கும் அருந்ததிய இளைஞர்கள் மீது சமயநல்லூர் காவல்துறையினர் விசாரணை ஏதுமின்றி பொய் வழக்குப் புனைந்து அவர்களின் எதிர்ப்புக் குணத்தை நீர்த்துப் போகச் செய்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் அருந்ததியர்களாக இருந்தாலும் அவர்கள் மீதே வழக்குப் போட்டு மேலும் மேலும் அவர்களை உளவியல் ரீதியாக காயப்படுத்தி வருகிறது காவல்துறை. ஆனால் அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனைகளால் அரசியல்படுத்தப்பட்ட அருந்ததிய இளைஞர்கள் காவல்துறை மற்றும் சாதி இந்துக் கூட்டத்தை சவால் விட்டு எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே இந்த இளைஞர்களை நாம் பாராட்டியே தீரவேண்டும்.
நில ஆக்கிரமிப்பு
சமகாலச்சூழ்நிலையில் செட்டியார் காடு, தேவர் காடு, கவுண்டர் காடு, கோனார் காடு என சாதி இந்துக்களின் பெயரைத் தாங்கியே விளை நிலங்கள் அழைக்கப்பட்டு வருவதை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். சிறுவாலைப் பகுதியில் "சக்கிலியன் காடு' என்னும் ஒரு காடு உள்ளது. சாதி இந்துக்களுக்கு சக்கிலியன் காடு என்ற சொல் கோபத்தையும், வெறுப்புணர்வையும் தூண்டும்; ஆனால் சமூக நீதியை நேசிப்பவருக்கு இந்த சொல் நிச்சயமாய் ஒரு சிறிய நம்பிக்கையை விதைக்கும். சிறுவாலையை ஆட்சி செய்து வந்த ராஜ வம்சத்தினர் அனுப்பக் கவுண்டர்கள். இவர்களது வீடுகளிலும், வயல்வெளிகளிலும் உழைக்கும் மக்களாக அருந்ததியர் சமூகத்தினர் அடிமை வேலைகளைச் செய்து வந்துள்ளனர். அனுப்ப கவுண்டர்களின் குலசாமியான காமாட்சியம்மனுக்கு அனுப்ப சக்கிலியர்கள் கொண்டு வரும் பாலை ஊற்றித்தான் பூசை செய்து வந்துள்ளனர். அந்த வகையில் அனுப்பக் கவுண்டர்களுக்கும், அனுப்ப சக்கிலியர்களுக்குமிடையே நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது.
கவுண்டர்களுக்கு ஈடாக பிள்ளைமார் சமூகத்தினரும் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளனர். கவுண்டர்கள் மட்டுமே அப்பகுதியை அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த காரணத்தாலும், சக்கிலியர் சமூகத்தினர் அவர்களுக்கு கட்டுப்பட்டே அடிமை வேலை செய்து வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தாலும் மேற்படி இருசமூகத்தினருக்குமிடையே அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து வந்துள்ளன. தன்னுடைய முதலாளியோடு அடிக்கடி பிரச்சினை செய்கிறார்களே என்று எண்ணிய மொட்டழகனும், கரியனும் பிள்ளைமார் சமூகத்திற்கு சொந்தமான மாட்டை ஓட்டி வந்து மாட்டைவெட்டி தோலை உரித்துவிட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக விரட்டிவிட்டுள்ளனர். இதைக்கண்ட அச்சமூகத்தினர் கவுண்டர்களின் தூண்டுதலாலேயே சக்கிலியர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்றும் இச்செயலில் ஈடுபட்ட இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டுமென்றும் ஊர்க்கூடி பேசியது.
ஊர்க்கட்டளைப்படி ராஜவம்சத்தினர் மணியக்காரரும், அம்பலக்காரரும் சேர்ந்து இருவரையும் கொலைசெய்து விடவேண்டுமென கூறியிருக்கிறார்கள். அப்போது மேற்படி இருவரும் நாங்கள் சாவதற்குத் தயாராகவே உள்ளோம்; ஆனால் நாங்கள் இறந்த பிறகு எங்கள் வம்சத்தினர் எங்களை குலசாமியாக கும்பிடவேண்டும் அதற்காக எங்களுக்கு நிலம் வழங்கி சிலை எழுப்புங்கள் என்று கூறியுள்ளனர். அவர்களின் உத்தரவை ஏற்று இருவரையும் மூலக்கரையில் வைத்து வெட்டிப் புதைத்து அவர்களின் நினைவாக இரு கல்லையும் நட்டு வைத்துள்ளார்கள். பின்னாளில் இருவருடைய பெயரிலும் நிலம் வழங்கப்பட்ட பின்பு அங்கு அவர்களின் வாரிசுதாரர்கள் இருவருக்கும் சிலைவைத்து இன்று வரை குலசாமியாக வணங்கி வருகிறார்கள். அந்தக்காட்டையே "சக்கிலியன் காடு' என்று அழைத்து வருகின்றனர்.
தற்போது அந்த நிலத்தில் 2 சென்ட் இடம் மட்டுமே மேற்படி வாரிசுகளுக்கு சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தில் தான் மொட்டழகன், கரியன் சிலைகள் உள்ளன. மீதியுள்ள நிலங்களை அப்பகுதியிலுள்ள கோனார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஏமாற்றி ஆக்கிரமித்துள்ளனர் எனவும் அவரே இன்று வரை அந்த நிலத்தின் உடைமையாளராகவும், விவசாயம் செய்து வருபவராகவும் உள்ளார். இரண்டு ஏக்கர் நிலத்தில் இன்று இரண்டு சென்ட் இடத்தைத் தவிர மீதியுள்ள நிலத்தை சாதி இந்துக்கள் ஆக்கிரமித்து அனுபவித்து வருவதை எதிர்த்துக் கேட்க ஆளில்லாத காரணத்தால் அவர்களின் சாதியாதிக்கம் தலை விரித்தாடுகிறது.
அதுபோல அருந்ததியர் மற்றும் பள்ளர் சமூகத்திற்கென்று சுடுகாடு அமைத்துக் கொள்வதற்காக அரசு மூன்று ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. இந்த மூன்று ஏக்கர் நிலத்தை பள்ளரும், அருந்ததியரும் ஒன்றரை ஏக்கர் வீதம் சமமாகப் பிரித்து சுடுகாடு அமைத்துக் கொண்டனர். இந்த நிலம் சாதி இந்துக்கள் பகுதியில் அமைந்துள்ளதால் இறந்து போன சடலங்களை ஊருக்குள் எடுத்துச் செல்ல முயலும் போதெல்லாம் சாதி இந்துக்கள் வழிமறித்து ஊரைச் சுற்றி கொண்டு போகும்படி வற்புறுத்தியுள்ளனர். சாதி இந்துக்கள் தெரு வழியாக சக்கிலியன் பிணம் போகக்கூடாது என்பது இக்கிராமத்தில் எழுதப்படாத விதியாக இருந்தது. மழைக்காலங்களில் வயலைக் கடந்து பிணங்களை தூக்கிச் செல்வது கடினமான ஒன்றாகும். இதனால் அருந்ததியர்கள் செத்தப்பிணத்தை சாலையில் போட்டு போராட்டம் நடத்தியதன் விளைவாக இன்று பிணத்தை ஊர் வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர். அதேபோல் சாதி இந்துக்கள் அந்த சுடுகாட்டையும் விட்டு வைக்கவில்லை. மூன்று ஏக்கர் நிலத்தில் இன்று ஒன்றரை ஏக்கர் நிலத்தை சாதி இந்துக்கள் அபகரித்துக் கொண்டனர். சக்கிலியன் வேண்டாம் ஆனால் அவனுடைய சொத்தும், சக்கிலியப் பெண்ணும் வேண்டும் என்பது சாதி இந்துக்களின் மனநிலை என்றால் இவர்கள் உண்மையிலேயே மனநோயாளிகள் தானே!
மாறிவரும் சூழ்நிலைகள்
அருந்ததிய இளைஞர்களின் அத்துமீறலால் சிறுவாலையில் சமூக மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆதித்தமிழர் பேரவையின் அறிமுகம் கிடைத்தவுடன் இவ்வூர் இளைஞர்கள் அதியவன், செல்வப்பாண்டி, சன்னாசி போன்றோர் தன்னெழுச்சி பெற்று சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராக களமிறங்கிப் போராட மக்களை அணிதிரட்டி எழுச்சியூட்டி வருகிறார்கள். செருப்பணிந்து நடந்துவர மறுக்கப்பட்ட தடையை தகர்த்தெறிந்துள்ளனர். வயற்காடு வழியே சுமந்து சென்ற செத்த பிணம் இன்று சாதி இந்துக்களின் தெரு வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஊர்பொதுத் திருவிழா நடந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் அருந்ததியர்களுக்குப் பாத்தியப்பட்ட காளியம்மன் கோயில் திருவிழாவை இரண்டு லட்ச ரூபாய் செலவழித்து மிக ஆடம்பரமான முறையில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அருந்ததியர்களின் ஆதரவு வாக்குகளின்றி வேறு எந்தச் சாதியைச் சேர்ந்தவரும் பஞ்சாயத்துத் தலைவராகவோ, கூட்டுறவு வங்கித் தலைவராகவோ வரமுடியாத சூழலை உருவாக்கியுள்ளனர்.
சிறுவாலை கிராம அருந்ததிய இளைஞர்களின் வழிகாட்டுதலின் பேரில் சுற்றியுள்ள பத்து கிராமங்களிலும் விழிப்புணர்வை ஊட்டி புரட்சிகரப் பாதையில் பயணிக்கத் துணையாக உள்ளனர். அருகிலுள்ள எந்த கிராமத்திலும் சாதியின் பெயரால் தாக்குதல், ஒடுக்குதல் நடந்தாலும் சிறுவாலை கிராம இளைஞர்கள் அங்கு சென்று பிரச்சினைகளை தீர்த்து வருகிறார்கள். சாதி தீண்டாமைக்கொடுமைகள் எந்த வடிவத்தில் நடைமுறையில் இருந்தாலும் அதை எதிர்த்து கலகக்குரல் எழுப்புவதற்கும் அதை அழித்தொழிக்கவும் அணியமாகி விட்டனர். தங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்கவைத்து சமூகத்தில் பெரிய ஆளாக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றத் தொடங்கிவிட்டனர்.
சுரண்டல் மூலம் சாதி இந்துக்கள் கையகப்படுத்தியுள்ள தங்கள் நிலங்களை மீட்டெடுக்கப்போராடவும் முன் வந்துள்ளனர். தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை தங்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் தடைகளின்றி சுவீகரித்துக் கொள்ளும் நிலைக்கு உருவாகியுள்ளனர்.
இந்தியக் கிராமங்களில் நடைபெற்று வரும் சாதிய மோதல்களுக்கெல்லாம் காரணம் இந்துமதம் தான். ஏனெனில், சமத்துவமின்மைக் கோட்பாட்டை பகிரங்கமாக கடைப்பிடிப்பதற்கு இந்துக்கள் சிறிதும் வெட்கப்படுவதில்லை. சமத்துவத்தை விரும்பும் தலித் மக்கள் பிறரோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டாலும் அதை சாதி இந்துக்கள் ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆக, தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையே கிராமங்களில் நடைபெறும் மோதல் என்பது, சமத்துவமின்மைக்கும் சமத்துவத்திற்கும் இடையிலான தொடர் யுத்தம் என்பதை கண்டுணர முடிகிறது. சிறுவாலை இந்த யுத்தத்தில் வெற்றியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இளவரசனின் உயிர் தின்ற சாதிவெறி அரசியல்... கண்டனக் கூட்டம்

இளவரசனின் உயிர் தின்ற சாதிவெறி அரசியல்... கண்டனக் கூட்டம்




ஞாயிறு ( 7-7-2013) மாலை 4 மணி அய்க்கப் அரங்கம், இலயோலா கல்லூரி எதிரில், சென்னை
இளவரசனைக் கொன்று தனது அகோரப் பசியைத் தீர்த்து கொண்டது சாதிய சமூகமும், பா.ம.க-வின் அரசியலும். நேற்று கண்ணகி-முருகேசன், இன்று திவ்யா-இளவரசன் என்று பல சாதி படுகொலைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது இந்த சாதிய சமூகம். இன்னும் ஆயிரமாயிரம் இளவரசன்களையும், திவ்யாக்களையும் இந்த சாதிய அரக்கர்களிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் எப்படி காப்பாற்றப் போகிறோம்?
திவ்யாவின் தந்தையின் மர்ம மரணம், அதன் பிறகு முன்னூறு தலித் குடியிருப்புகள், உடைமைகள் எரிப்பு, இன்று இளவரசனின் மர்ம மரணம் என்று தொடர்ச்சியாக பா.ம.க-வினரால் தூண்டப்பட்ட வன்னிய ஆதிக்க சாதி வெறியர்கள் நிகழ்த்திய வெறியாட்டங்களுக்கு விடை தேட‌ வேண்டிய கட்டாயத்திற்கு நாம் வந்திருக்கின்றோம்.
இளவரசனின் மரணம் கொலையாக இருந்தாலும், தற்கொலையாக இருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு வன்னிய ஆதிக்க சாதி வெறியை தூண்டி விட்டு ஆதாய‌ம் அடைய‌ நினைத்த‌ ராமதாசும், தலித் மக்களின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத வன்னிய ஆதிக்க சாதி வெறியும், சாதிப் படுகொலைகளை கண்ணை மூடிக்கொண்டு மௌனமாக கடந்து செல்லும் நம் சமூகமும் தான். சென்ற தேர்தலில் படுதோல்வியடைந்த பா.ம.க இந்த‌ சாதிய‌ ச‌மூக‌த்தில் தாழ்த்த‌ப‌ட்டோருக்கு எதிரான‌ மனநிலையை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு சாதகமான அரசியல் நலன்களை அறுவடை செய்ய ஒரு தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. சென்ற ஆண்டு மகாபலிபுரத்தில் காடு வெட்டி குரு பேசியதன் விளைவே தர்மபுரி வன்முறை. இந்த ஆண்டு மரக்காணத்தில் திட்டமிட்டு வன்முறையை உருவாக்கியதும் பா.ம.க.வே, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளிலிருந்து வன்னிய மக்களை திசை திருப்பி சாதி ஆதிக்க அரசியல் பக்கம் அழைத்து செல்கின்றது பா.ம.க. தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் பெண்க‌ளுக்கு உள்ள‌ ச‌ன‌நாய‌க‌ உரிமையையும் பா.ம‌.க மறுக்கின்ற‌து.
முன்னாள் நக்சல்பாரி கிராமங்களான நத்தம், அண்ணா நகர்,கொண்டம் பட்டி இந்த மூன்று கிராமங்களும் தொடர்ச்சியாக உளவுத்துறையின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வந்துள்ளது. இந்த மூன்று கிராமங்களில் 2000த்திற்கும் அதிகமான வன்னியர் வந்து தாக்குதலை நிகழ்த்தியதை கண்டுகொள்ளாமல் விட்ட காவல்துறையின் பங்கு இன்னும் விசாரிக்கப்பட‌வில்லை? தருமபுரி வன்முறையை தடுத்திருந்திருக்க வேண்டிய தமிழக அரசு, அதை தடுக்காமலும், அந்த வன்முறைக்கு காரணமானவர்களை விசாரணை செய்து தண்டிக்காமல், பேருக்கு ஒரு விசாரணை குழுவை(CBCID) அமைத்தது. ஒன்பது மாதங்களாகியும் இன்னும் விசாரணை முடியவில்லை. 900 பேரின் மேல் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வெறும் 150 பேரை கைது செய்து, இன்று அந்த 150 பேரும் பிணையில் வந்து சுதந்திரமாக‌ பல குற்றங்கள் செய்ய வாய்ப்பளித்து வருகின்றது அரசும், காவல்துறையும். தர்மபுரி வன்முறையில் முதன்மை குற்றவாளிகள் சரியான சட்டங்களின்(வன்கொடுமை தடுப்பு சட்டம்) வழியே தண்டிக்கப்பட்டிருந்தால் மரக்காணம் வன்முறை நிகழ்ந்திருக்காது. அரசு தர்மபுரியில் நடந்து கொண்டதைப் போலவே மரக்காணத்தில் நடந்த வன்முறையையும் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடக்கும் வன்முறைகளையும், படுகொலைகளையும் அரசின் இவ்வமைதி ஊக்குவித்து வருகின்றது..
ஒரே சாதியில் திருமணம் செய்திருந்தால் இம்மரணம் நிகழ்ந்திருக்காது என்று கூறும் ஒவ்வொருவரும் மனதில் சாதிய வன்மத்தோடும், கைகளில் இரத்தக்கறையோடும் நிற்கின்றோம்.நாம் நாகரீக சமூகத்தில் தான் வாழ்கின்றோமா? அல்லது இன்னும் காட்டுமிராண்டி நிலையில் தான் இருக்கின்றோமா? என்ற கேள்வியை நம்முன் எழுப்புகின்றது இப்படுகொலை. காதல் திருமணம் தோல்வியடைந்ததால் தற்கொலை, கணவர் மரணம் என்று ஊடகங்களும் வழக்கமான ஒரு நிகழ்வாக இதையும் கடந்து செல்லும். ஒரு வெற்று கண்டனம் கூட தெரிவிக்காமல், விசாரணைக்கு உத்தரவிட்டு விட்டு தமிழக அரசும் கை கழுவிவிடும். நாமும் ஆர்ப்பாட்டங்களும், கண்டனக் கூட்டங்களுமாக சில நாட்கள் மேடைகளில் முழங்கி விட்டு கலைந்து செல்லப் போகிறோமா ? சாதிய கட்டமைப்புகளை நிலை நிறுத்துவதற்காக அரங்கேற்றப்படும் படுகொலைகளை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறோம்?
ilavarasan_savetamils_640
க‌ண்ட‌ன‌ உரையாற்றுவோர்:
தோழர்.செந்தில்- சேவ் த‌மிழ்சு இய‌க்கம்
தோழர்.விடுத‌லை இராசேந்திர‌ன் - திராவிட‌ர் விடுதலை க‌ழ‌கம்
தோழர்.ஆளூர் ஷ‌ந‌வாஸ் - விடுத‌லை சிறுத்தைக‌ள் க‌ட்சி
தோழர்.நீதிராஜ‌ன் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி
தோழ‌ர் தியாகு -த‌மிழ்த் தேசிய‌ விடுத‌லை இய‌க்க‌ம்
வ‌ழ‌க்க‌றிஞர்.அம‌ர்நாத்- த‌ந்தை பெரியார் திராவிட‌ர் க‌ழ‌கம்
தோழர்.சிவகாமி - சமத்துவ மக்கள் படை
தோழர்.செல்வி - தமிழ்நாடு மக்கள் கட்சி
ஏகலைவன் - ஊட‌க‌விய‌லாள‌ர்
குட‌ந்தை அர‌சன் - த‌மிழ் புலிக‌ள்
தோழர்.உத‌ய‌ன் - த‌மிழ்த் தேசிய‌ பொதுவுட‌மை க‌ட்சி
தோழர்.சேக‌ர்- தொழிலாள‌ர் சீர‌மைப்பு இய‌க்க‌ம்
தோழ‌ர்.இளைய‌ராஜா - த‌மிழ்நாடு மாண‌வ‌ர் இய‌க்க‌ம்
தோழ‌ர்.ச‌ந்தோஷ்- இல‌யோலா க‌ல்லூரி மாண‌வர்
பேராசிரியர்.லெனின் - இல‌யோலா க‌ல்லூரி.
ஒருங்கிணைப்பு - சேவ் தமிழ்சு இயக்கம் - 09884468039 - www.Save-tamils.org.

காதலைச் சாகச் செய்திட்ட சாதியமே! உன்னைச் சாகச் செய்யாமல் ஓய்ந்திடோம்!! தியாகு

காதலைச் சாகச் செய்திட்ட சாதியமே! உன்னைச் சாகச் செய்யாமல் ஓய்ந்திடோம்!!



இளவரசன் நினைவாக....
கொலையா? தற்கொலையா? தர்மபுரி இளவரசனின் கோரச் சாவு எப்படி நிகழ்ந்தது? கொலை என்றால் செய்தது யார்? தற்கொலை என்றால் தூண்டியது யார்? இந்த வினாக்களுக்குக் கூர்மையும் நேர்மையுமானதொரு புலனாய்வினால்தான் விடை காண முடியும். எனவேதான் இந்த வழக்கு நடுவண் புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) ஒப்படைக்கப்பட வேண்டும் என்று இளவரசனின் பெற்றோரும் உற்றாரும் மற்றோரும் கோருகின்றனர். சமூக விருப்புவெறுப்புகள் முனைப்புடனிருக்கும் இப்போதைய சூழலில் மாநில அளவிலான புலனாய்வு அமைப்புகளால் இந்தப் பணியைச் செவ்வனே செய்ய இயலுமா? என்ற ஐயம் எழுவது இயல்பே.
தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் அறிவித்துள்ள நீதி விசாரணை உண்மையை வெளிக்கொணரப் பயன்படாது. கொலையா? தற்கொலையா? என்பதையும் அதற்குக் காரணமானவர்களையும் காரணமானவற்றையும் கண்டறியப் புலனாய்வினால்தான் முடியும், நீதி விசாரணையால் முடியாது என்ற எளிய உண்மைகூட முதலமைச்சருக்குத் தெரியாமல் போனது ஏன்? அல்லது தலித் மக்களும் சனநாயக ஆற்றல்களும் இளவரசனின் சாவு குறித்துக் கொண்டுள்ள மன வெப்பம் தணியும் வரை காலங்கடத்தும் உத்தியாகத்தான் நீதி விசாரணை அறிவிக்கப்பட்டுள்ளதா?
தமிழக அரசு நீதி விசாரணை நடத்தட்டும். அந்த விசாரணை இளவரசன் சாவு குறித்து மட்டும் நடத்தப்படாமல், இளவரசன் – திவ்யாவின் காதல் திருமணம் தொடங்கி – திவ்யாவின் தந்தை நாகராசன் தற்கொலை – மூன்று தலித் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் (கலவரம் அன்று) – இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரிக்க நடந்த முயற்சிகள் – உயர் நீதிமன்ற வழக்கு நீதிபதி அந்த வழக்கைக் கையாண்டவிதம் – திவ்யாவின் முரண்பட்ட வாக்குமூலங்கள் – காவல்துறையின் பங்கு – இவை அனைத்திலும் சாதி சார்ந்த வழக்குரைஞர்களின் பங்கு – இவர்களுக்குப் பின்னிருந்து இயக்கிய சாதிச் சங்கங்கள், சாதிக்கட்சிகள் – இளவரசனின் சாவுக்கு இட்டுச் சென்ற காரணிகள் - என்று எல்லாவற்றைப் பற்றியும் முழுமையாகவும் விரிவாகவும், ஆனால் விரைவாகக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் விசாரிக்கட்டும். காதல் திருமணங்களையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கட்டும். அப்படியொரு நீதி விசாரணைக்கு அரசு ஆணையிட்டால் வரவேற்போம்.
இளம்பெண் திவ்யா தந்தையை இழந்து, காதல்-கணவனையும் இழந்து தவிக்கும் பெருந்துயரத்துக்கான பழி காதலை எதிர்க்கும் சாதி வெறியையே சாரும். சாதிமீறிக் காதலித்த குற்றத்துக்காக உயிர்கள் பலியிடப்படுவது இந்த நாட்டில் புதிய செய்தியன்று. ஆனால் சாதி வெறியோடு சாதி சார்ந்த அரசியல் பதவி வெறியும் சேர்ந்து திவ்யா – இளவரசன் காதலுக்குப் பகையாக முளைத்து விட்டதுதான் இவ்வளவு கொடிய முடிவு ஏற்படக் காரணமாகி விட்டது.
     தலித் இளைஞன் வன்னியப் பெண்ணைக் காதலித்து மணப்பதை நாடகத் திருமணம் என்று கொச்சைப்படுத்திய பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசின் மேடை வசனத்தை இளவரசனின் உயிர்ப்பலி பொய்ப்பித்துக் காட்டி விட்டது. வன்னியப் பெண்ணைக் காதலித்து மணக்கும் தலித்தின் கையை வெட்டச் சொன்ன காடுவெட்டி (கை வெட்டி, கால் வெட்டி., தலை வெட்டி?) குருவின் வன்முறைப் பேச்சுதான் இளவரசனின் உயிரைப் பறிக்க உந்துதலாயிற்று எனலாம். இராமதாசு வகையறாக்கள் இப்போதாவது வருந்தட்டும், வருந்தித் திருந்தட்டும். இல்லையேல் தமிழக அரசியலில் தலையெடுக்க முடியாதபடி இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவர்கள் அணிசேர்க்கத் துடிக்கும் தலித்தல்லாத பிற சாதியினர் மட்டுமல்ல, இவர்களின் சொந்தபந்த வன்னிய மக்களே இவர்களைப் புறக்கணிக்கும் நிலை வரத்தான் போகிறது.
     காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கும் ஆதரவும் பாதுகாப்பும் ஊக்கமும் தரும் கொள்கையை இந்திய அரசும் தமிழக அரசும் வெளிப்படையாக அறிவித்துச் செயலாக்க வேண்டும். சனநாயக, சமூகநீதி ஆற்றல்களும் காதல் திருமணங்களையும் காதல் இணையரையும் சாதி வெறி வன்செயலர்களிடமிருந்து பாதுகாப்பதை ஒரு செயல்திட்டமாகவே கொண்டு இயங்க வேண்டும். வருண–சாதியமைப்பைக் கட்டிக்காக்கும் இறுதிப் பண்பாட்டு அரண் சொந்த சாதிக்குள் மணம் புரிந்து கொள்ளும் அகமண முறையே என்று அம்பேத்கர் கூறியதை நினைவிற்கொண்டு, சாதியொழிப்பில் காதலுக்கும் சாதிமறுப்புத் திருமணங்களுக்கும் உள்ள பெரும்பங்கினை உள்வாங்கி, இவற்றைக் காக்கவும் வளர்க்கவும் தமிழ்த் தேசியச் சமூகநீதி ஆற்றல்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
     முழுச் சிக்கலையும் தலித்துகளுக்கும் தலித்தல்லாதாருக்கும் இடையிலான வன்மோதலாகவும், தலித்தல்லாதார் அனைவரையும் தலித்துகளின் பகைவர்களாகவும் சித்திரிப்பது தலித்துகளைத் தனிமைப்படுத்தும் சாதி வெறியர்களின் சதித் திட்டத்துக்கே துணை புரியும். தலித்தியம் என்பதன் சாரம் சாதியொழிப்பே தவிர பிற சாதியினரை ஒழிப்பதன்று. தலித்துகள் தலித்தல்லாத சமூகநீதி, சனநாயக ஆற்றல்களோடு கொள்கையடிப்படையில் ஒன்றுபடுவதே சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்தப் பயன்படும் என்பதை உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும்கூட மறவாமலிருப்பதே நன்று.
     பண்பாட்டுத் தளத்தில் காதலும் சாதி மறுப்புத் திருமணமும் செழித்து வளர வேண்டுமானால் பொருளியல் தளத்திலும் அரசியல் களத்திலும் அடைய வேண்டிய மாற்றங்களை மறந்து விடலாகாது. இந்த மாற்றங்களைத் தலித்துகள் மட்டும் தனித்துச் சாதித்து விட இயலாது என்பது எளிதில் விளங்கும். சேரக் கூடாதவர்களுடன் சேருவது அறிவீனம். சேர வேண்டியவர்களுடன் சேராமலிருப்பது பலவீனம்.
     காதல் என்பது தமிழர் வாழ்வியல் கூறுகளில் ஒன்று. காதலைப் போற்றாத தமிழ்த் தேசியம் தமிழ்த் தேசியமே அன்று. அன்பின் வழியது உயிர்நிலை. ஆண் – பெண் அன்பின் ஆக்க வடிவமே காதல். காதலால் தமிழ் வளர்ப்போம். தமிழால் காதல் வளர்ப்போம். சாதி கொன்ற காதல் உயிர்த்தெழும்.
     அது சாதியைக் கொன்று இளவரசன்களுக்கும் திவ்யாக்களுக்கும் நீதி செய்யும்.
- தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

ஜாதி இல்லாத ஒரு சமூகம் உருவாக வேண்டும் என நான் நினைக்கிறேன்- தருமபுரி திவ்யா

ஜாதி இல்லாத ஒரு சமூகம் உருவாக வேண்டும் என நான் நினைக்கிறேன்



தருமபுரி சாதி வெறியாட்டத்திற்கு திவ்யா இளவரசன் இணையரின் சாதி மறுப்பு காதல் திருமணம் ஒரு முக்கியக் காரணம். எல்லாம் முடிந்து ஓராண்டாகும் நிலையில் இவ்விருவரையும் பிரித்துவிடத் துடிக்கிறார்கள், தருமபுரியில் வெறியாட்டம் போட்ட அதே ஜாதி இந்துக்கள். அதற்கு நீதிமன்றத்தின் துணையையும் நாடி, தற்பொழுது இவ்விணையரை தற்காலிகமாகப் பிரித்தும் விட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஏப்ரல் 5, 2013 அன்று இளவரசனுடன் வந்திருந்த திவ்யா, வழக்குரைஞர் ரஜினிகாந்த் முன்னிலையில் "தலித் முரசு'க்கு அளித்த வாக்குமூலத்தில் (திவ்யா அளித்த வாக்குமூலத்தின் ஒலி வடிவம் நம்மிடம் உள்ளது) இருந்து சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கு வெளியிடுகிறோம்."காதல் நாடகம்' என்று பழிசுமத்தி, ஜாதி அரசியல் நாடகம் நடத்துபவர்கள் யார் என்ற கேள்விக்கு இந்த வாக்குமூலமே பதிலடியாக அமைந்திருக்கிறது.
சந்திப்பு : மீனாமயில்
தருமபுரி மாவட்டம் மாரவாடி அஞ்சலுக்குட்பட்ட செல்லங்கொட்டாய் என் சொந்த ஊர். அப்பா நாகராஜ், நாயக்கன் கொட்டாயில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்தார். அம்மா தேன்மொழி; தம்பி மணிசேகர். செம்மாந்தங்குப்பத்தில் உள்ள கார்மல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து, கோனாயக்கனள்ளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன். சோகத்தூர் ஓம்சக்தி நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த போதுதான் என் காதல் திருமணம் ஊரை சூறையாடக் காரணமாக அமைந்தது.
கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போது இளவரசனோடு பேசத் தொடங்கினேன். அவர் என்னை விரும்புவதாகச் சொன்ன போது, நீங்களும் நானும் வேறு வேறு சாதி; நான் சம்மதித்தாலும் என் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறித் தயங்கினேன். ஆனால் அவரை எனக்கு பிடித்திருந்தது. என் வீட்டிற்காகத்தான் அவரது காதலை நான் ஏற்கவில்லை என அவருக்கு தெரிந்தது. நான்கு மாதங்கள் கழித்து அவரை விரும்புவதாக நானும் கூறினேன். பேருந்திலும் பேருந்து நிறுத்தத்திலும் நாங்கள் சந்தித்து பேசும் தகவல் பரவி, அது என் அப்பாவின் காதிற்கும் வந்து சேர்ந்தது. "குட்டி' என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் சொல்லாத என் அப்பா என்னை மிரட்டவில்லை, அடிக்கவில்லை, கண்டிக்கவில்லை; அறிவுரை கூறினார். இளவரசனையும் அழைத்து அறிவுரை கூறினார். அப்பாவை கஷ்டப்படுத்த வேண்டாமென நானும் உடனே விடுதியில் சேர்ந்துவிட்டேன். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வரும்போது மட்டும் இளவரசனை பார்த்துப் பேசுவது என எங்கள் சந்திப்பை குறைத்துக் கொண்டேன்.
ஆனாலும் அவசர அவசரமாக எனக்கு திருமண ஏற்பாடு நடந்தது. சென்னை கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் ராஜகோபால் என்ற உறவுக்காரர் ஒரு வார இறுதி நாளில் என்னைப் பெண் பார்க்க வந்தார். இப்போதைக்கு திருமணம் வேண்டாமென நான் எவ்வளவோ மறுத்தும் அம்மா அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. எனவே, இந்த வரனை அழைத்து வந்திருந்த என் பெரியம்மாள் மகளை தொலைபேசியில் அழைத்து எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறினேன். ஆனால், அவள் என் அப்பாவிடம் இது குறித்து புகார் கூறிவிட்டாள். இவரை திருமணம் செய்ய முடியாது என்றால் நீ இளவரசனையும் திருமணம் செய்யக்கூடாது என்று என் அப்பா என்னிடம் சத்தியம் வாங்கினார். ஆனாலும் எனக்கு தெரியாமலேயே எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திரைமறைவில் நடந்த விஷயங்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
8.10.2012 அன்று இளவரசனை தொலைபேசியில் அழைத்து அழுதேன். நான் கல்லூரி செல்லும் வழியிலிருந்து என்னை அழைத்துக் கொண்டு திருப்பதிக்குச் சென்றார். எங்கள் திருமணம் எந்த திட்டமிடலும் இல்லாமல் நெருக்கடியில்தான் நடந்தது. அப்போதும் கூட இந்த பிரச்சனை ஒரு பத்து நாளில் சரியாகிவிடும்; கல்லூரிப் படிப்பை இருவருமே தொடரலாம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், இப்படியொரு சமூகப் பிரச்சனையாக இது மாறும் என நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. என் அப்பா காதலுக்கு எதிரானவர் இல்லை. என் அம்மாவை அவர் காதலித்துதான் மணம் முடித்தார். என் உறவுமுறையில் நடந்த பல காதல்களை அவர் அங்கீகரித்திருக்கிறார். என் காதலிலும் அதுவே நடக்கும் என நான் நினைத்தேன். எனக்கு அறிவுரை கூறும் போதெல்லாம் என் அப்பா திரும்பத் திரும்பச் சொன்ன ஒரே விஷயம், நான் ஏற்றுக் கொண்டாலும் உன் காதலை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. என் அண்ணன் தம்பிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இளவரசன் பக்கத்து ஊர் என்பதுதான் என் பிரச்சனை. இதே சாதி பையன் தூரத்தில் ஏதாவது ஊரைச் சேர்ந்தவன் என்றால் எப்படியாவது சமாளித்துவிடுவேன் என்பதுதான்.
என் திருமணம் அப்பாவின் குடிப்பழக்கத்தை அதிகப்படுத்தியதை அம்மா எனக்கு தொலைபேசியில் கூறினார். தினமும் ஏதோ ஒரு கும்பல் வீட்டு முன் வந்து நின்று அப்பாவை மிரட்டுவதாகவும், உன் மகளை நீதான் அனுப்பி வச்சியா? உன் மகளை அனுப்பி வச்சுட்டு இன்னும் ஏன் சாகாம இருக்க? என்று திட்டியதாகவும் சொன்னார். என் மேல் அப்பாவுக்கு கோபம் இருந்தது உண்மைதான் என்றாலும் அம்மாவையும் தம்பியையும் கை விட்டு தற்கொலை செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை. என் அப்பா எந்த சாதி சங்கத்திலும் இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழை இல்லை. மூன்று காலனிகளுக்கு நடுவில்தான் என் அப்பாவின் அலுவலகம் இருந்தது. என் அப்பாவின் சாவை தற்கொலை என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்திருந்த நிலையில், கடந்த நவம்பர் 5 ஆம் தேதி என் குடும்பத்தினர் சமரசம் பேசி என்னை அழைத்துச் செல்ல தொப்பூர் என்ற இடத்திற்கு வந்தனர். இவர்கள் எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு அப்பா பைக்கில் வருவதாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் வரவில்லை. என் குடும்பத்தினர் வீடு போய் சேர்வதற்குள் அப்பா இறந்துவிட்ட செய்தி இளவரசனுக்கு வந்துவிட்டது. வீட்டிற்குச் சென்று அம்மா பார்த்தபோது, தூக்குப் போட சாத்தியமில்லாத அறையில் அப்பா நின்ற நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். கதறி அழுத அம்மாவை பொருட்படுத்தாமல் அப்பாவின் பிணத்தை கயிற்றுக் கட்டிலில் போட்டு தூக்கிக் கொண்டு போனது ஒரு கும்பல். என் பெரியப்பா முறையில் வரும் முருகன் என்பவர், அம்மாவை அப்பாவின் சடலத்துக்கு அருகே நெருங்கவிடவில்லை. என் அப்பாவின் மரணம் திடீரென நடந்த தற்கொலை என்றால், வெறும் 50 குடும்பங்களே உள்ள எனது ஊரிலும், வெறும் 20 30 குடும்பங்களே உள்ள பக்கத்து ஊரிலும் இருந்து எப்படி ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, எஸ்.சி. மக்கள் வசிக்கும் நாயக்கன் கொட்டாயை சூறையாடினார்கள் என்பது இன்னும் எனக்கு புரியவில்லை.
தங்களால் தான் இவ்வளவு பெரிய கலவரம் நடந்தது என்ற வருத்தத்தில் இளவரசன் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், எனக்கு தற்கொலையில் விருப்பமில்லை. நடந்த சம்பவங்களுக்கு நான் பொறுப்பில்லை. என் அப்பா என்மீது வைத்த அன்பு உண்மையென்றால் அவர் என்னை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் என்மீது கோபமாகவே இருந்திருக்க வேண்டும். மாறாக, அவர் செத்து அந்த பழியை என் மேல் சுமத்தினால் எப்படி? தற்கொலை செய்ய விருப்பமில்லாமல் காவல் நிலையத்திற்கு சென்றேன். எஸ்.பி. சார் என்னையும் இளவரசனையும் பாதுகாப்பு கருதி சென்னை அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே அம்மா என்னிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். "இதுக்கு மேல உன்னை அங்க இருந்து பிரிச்சுக் கொண்டு வந்து வாழ வைக்க முடியாது. தனியாகவும் உன்னை விட முடியாது. அதனால் என்னால முடிஞ்ச உதவியை செய்றேன். வாய்ப்பு கிடைக்குறப்போ வந்து பாக்குறேன். மத்தவங்க உன் மேல கோபமா இருக்காங்க. நான் அப்படி உன்னை விட்டுட முடியாது' என அக்கறையாகப் பேசுவார். சென்னையில் இருக்கும் போது, "இப்போதைக்கு நான் உன்னை பார்க்க வர முடியாது. நான் உன்கூட பேசுறது தெரிஞ்சாலே பிரச்சனை ஆகும். அங்க ஏதாவது பிரச்சனையா?' என கேட்டார்கள். "வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடக்குறேன்' என பேச்சுவாக்கில் சொல்ல, என் மகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அம்மா கேஸ் போட்டுவிட்டார்.
ஒருநாள் எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து இளவரசனுக்கு தொலைபேசியில் பேசி மகளை பார்க்க வேண்டுமெனக் கேட்டார். இளவரசனும் போய் பார்த்துவிட்டு வா என்றார். ஆனால், என் அம்மா பா.ம.க. வை சேர்ந்த டாக்டர் செந்தில் வீட்டிற்கு என்னை வரச் சொன்னதும் நாங்கள் போக வேண்டாம் என முடிவெடுத்துவிட்டோம். என் அம்மா தனியாக இல்லை. என் அப்பாவை போலவே என் அம்மாவும் யாருக்கோ பயப்படுகிறார். யாரோ அவரை இப்படி செய் அப்படி செய் என மிரட்டுகின்றனர். அம்மாவிடம் கேட்டால் சொல்ல மறுக்கிறார்.
எனக்கு என் அம்மாவும் வேண்டும். இளவரசனும் வேண்டும். அது எப்படி சாத்தியம் என எனக்குத் தெரியவில்லை. சாதி இல்லாத ஒரு சமூகம் உருவாக வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால், அது உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. வீட்டுக்கு தெரியாமல் காதல் திருமணம் பண்ணியதை நான் என் தனிப்பட்ட வாழ்க்கையாகத்தான் பார்க்கிறேன். அதை ஏன் இவர்கள் சமூகப் பிரச்சனையாக்குகின்றனர்? அரசியல்வாதிகள் மட்டுமல்ல, யார் ஜாதிவெறி பிடித்து அலைந்தாலும் அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். அவரவரின் வாழ்க்கையை மட்டும் வாழுங்கள்; அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழையாதீர்கள்.
இப்போதைக்கு என்னுடைய பயம் ஒன்றே ஒன்றுதான். என்னைச் சுற்றி இருக்கும் சாதியால் நானும் சாதியை நம்பிவிடுவேனோ என பயப்படுகிறேன். நான் இளவரசனை வேறு ஆளாக எப்போதும் நினைக்கவில்லை. ஆனால் பயமாக இருக்கிறது. எல்லோரும் இதை ஒரு சமூகப் பிரச்சனையாகப் பார்க்கும்போது, அந்த சமூகமே தேவையில்லை என்று தோன்றுகிறது. தினமும் இரவு உறங்கப் போவதற்கு முன் எத்தருணத்திலும் இளவரசனிடம் வித்தியாசம் பார்த்துவிடக் கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

தருமபுரி வெறியாட்டம் - ஒரு பின் குறிப்பு நல்லான்

தருமபுரி வெறியாட்டம் - ஒரு பின் குறிப்பு




பெரும் போர்களும், கொடும் பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், அணுக்கதிர் வீச்சும், நிலநடுக்கம், ஆழிப்பேரலை என்பன போன்ற இயற்கைப் பேரழிவுகளும் மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகளை நீண்டகால அளவிலே ஏற்படுத்தக்கூடியவை. இப்பட்டியலில் சாதியையும் இணைக்க வேண்டும். அணுக்கதிர் வீச்சு அடங்குவதற்கு 45 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்கிறது அறிவியல். பன்னூறு ஆண்டுகளாக இந்தியாவையும் சில ஆசிய நாடுகளையும் பிடித்துள்ள சாதிவெறி வீச்சும்கூட அடங்குவதற்கு அத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது, 7.11.2012 அன்று நடந்த தருமபுரி சாதிய வெறியாட்டம்.
தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய்க்கு அருகிலிருக்கும் நத்தம், அண்ணா நகர், கொண்டாம் பட்டி தலித் குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சாதிய வெறியாட்டம் ஏற்படுத்திய அலை இன்னமும் அடங்கவில்லை. மக்கள் அந்த வன்முறைகளைப்பற்றி ஓயாமல் பேசிக்கொண்டுள்ளனர். ஊடகங்கள் இன்னும் விவாதம் நடத்துகின்றன. இதழ்கள் இன்னமும் செய்திகளை அச்சேற்றுகின்றன. வியட்நாமில் அமெரிக்க வல்லாதிக்கம் வீசிய நாபாம் குண்டுகளைப்போலவும், ஈழத்தில் ராஜபக்சேவின் இனவெறி அரசு வீசிய கொத்து குண்டுகளைப்போலவும் தமிழ்நாட்டில் ஒரு சாதி அரசியல் கட்சி வீசிய வன்முறை குண்டு துகள் துகளாக வெடித்துச்சிதறி மேலும் தொடர் வெடிப்புகளை ஏற்படுத்திக்கொண்டேயுள்ளது. அவ்வன்முறையின் கோர முகம் சாதி மனங்களை மேலும் இறுகிப்போகச் செய்திருக்கிறது. சாதி ஆதிக்க அமைப்புகள் வெட்கமும், நாகரிகமும் இன்றி வெளியே வந்து செயல்படத் தூண்டியுள்ளது.
எந்த முகாந்திரமுமின்றி சக மனிதனின் மீது இன்னதென்று வரையறுக்க முடியாத வெறுப்புணர்வை இது உருவாக்கியிருக்கிறது. அங்கங்கே கண்ணுக்குத் தெரியாதபடி வன்முறை நெருப்பு கங்குகளை புகைய வைத்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு மட்டுமின்றி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையையே பாழடித்திருக்கிறது. இவ்வன்முறையைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பாச்சாரப்பாளையம், மேலிருப்பு ஆகிய இடங்களிலும் ஆதிக்கச்சாதியினரின் தாக்குதல்கள் தொடர்ந்தன. இரு ஊர்களிலும் தலித் மக்களின் 17 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் உருவான பீதியும், வெறுப்பும், வன்மமும் அம்மாவட்டத்திலிருக்கும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் சாதி அடிப்படையில் பிளவுபடுத்தியுள்ளது. நடைபெற்ற பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் இம்மாவட்டத்து மாணவர்கள் சரியாக தேர்வு எழுதவில்லை. எனவே, இம் மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காடு பனிரெண்டாம் வகுப்பில் 8.46 சதவிகிதமும், பத்தாம் வகுப்பில் 5.89 சதவிகிதமுமாகக் குறைந்துள்ளது ("தி இந்து' – 6.4.2013)
தருமபுரி சாதி வன்முறைக்கு ஓர் ஊடகமாக செயல்பட்டது நத்தம் காலனி இளவரசன், வன்னியப்பெண் திவ்யாவை காதல் மணம் புரிந்ததுதான். சாதிமீறும் திருமணங்களை தடுத்தே ஆகவேண்டும் என்று கொலை வெறிக் கூச்சலிடும் ஆதிக்கச் சாதி தலைவர்களுக்கு இதை சகிக்க முடியவில்லை. அப்பெண் முழுவிருப்பத்துடன் தான் இளவரசனுடன் போனேன்; திருமணம் செய்து கொண்டேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் அளித்தபிறகும் அதை நாடகம், கடத்தல் என்று பா.ம.க., வினர் சொல்லி வருகின்றனர். தன் மகளின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட நாகராஜை “பறையனின் மாமனார்” என்று கேலி செய்தும், “மகளைப் பிரித்துவிடு” என மிரட்டியும் ஓயாமல் தொல்லை செய்த "மூளைச் சலவை' செய்யப்பட்ட சொந்த சாதிக்காரர்களால் அவமானமடைந்து அவர் "தற்கொலை' செய்து கொண்டார்.
இளவரசன், திவ்யா ஆகியோரின் திருமணம் நடந்த ஒருமாத நீட்சி நாகராஜின் தற்கொலையில் முடித்துவைக்கப்பட்டதோடு, ஒரு மாத காலமாக திட்டமிடப்பட்டுக்கொண்டிருந்த கொடுஞ்செயலும் 7.11.2012 அன்று மாலை அரங்கேற்றப்பட்டது. நாகராஜின் பிணத்தை நெடுஞ்சாலையில் கிடத்திவிட்டு, சாலையோர மரங்களை அந்த மூன்று கிராமங்களுக்கும் உள்ளே யாரும் நுழைய முடியாதபடி வெட்டிப்போட்டு, தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. 268 வீடுகள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டன. வீடுகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. 54 வாகனங்கள் எரியூட்டப்பட்டன. ஊர் கோயில் நகைகளும் கூட கொள்ளைபோயிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். வன்னியப் பெண்களும் சிறுவர்களும் கூட இக்கொடுஞ்செயலில் ஈடுபடுத்தப் பட்டதாக சொல்கிறார்கள். வன்மமும் வெறுப்பும் கூட்டுச்சக்தியாக திரளும்போது அது பேரழிவை ஏற்படுத்தும் வன்முறையாக உருவெடுத்துவிடுகிறது. தலித் மக்களின் மீது நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் இப்படியே உருக்கொள்கின்றன. திருவிழாவில் திளைக்கும் கூட்டுக்களியாட்ட மனநிலையைப்போல் இது கூட்டுவெறி மனநிலை. நாட்டை உலுக்கிய கயர்லாஞ்சி, ஜஜ்ஜார், சுண்டூர், கொடியங்குளம், குண்டுப்பட்டி, புளியூர், மங்களாபுரம் என பல கூட்டுவெறி சூறையாடல்களையும், வன்கொடுமைகளையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
தங்களது உடைமைகளை முற்றிலுமாய் இழந்துவிட்ட தலித் மக்கள் மாற்றுத் துணிகூட இன்றி வாரக்கணக்கில் அவதிப்பட்டதோடு, நடுத்தெருவில் சமைத்து உண்டு உறங்கியிருக்கிறார்கள். “தீபாவளி அன்று எல்லா குழந்தைகளும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தபோது, எங்கள் குழந்தைகள் தட்டை கையில் ஏந்தி ஒரு வேளை சாப்பாடு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தனர். அன்று நாங்கள் பட்டினி கிடந்தோம். விடிய விடிய காட்டுக்குள் பாம்பு பல்லிகளுக்கு நடுவே பதுங்கியிருந்தோம். ஒரு பெண் உயிருக்கு பயந்து ஓடிய போது தடுக்கி விழுந்தாள். அவள் வைத்திருந்த பிறந்து 3 மாதத்தில் மூளை ஆபரேஷன் செய்யப்பட்ட குழந்தை இறந்து விட்டது.” சு இப்படி பொது விசாரணையில் தலித் பெண்கள் சொன்ன கொடூர அனுபவங்கள் பல.
மாலை நான்கு மணிக்கு தொடங்கிய வெறியாட்டம் இரவு ஏழு மணி வரை நீடித்திருக்கிறது. காவல்துறையோ, தீயணைப்பு வண்டிகளோ வரவில்லை. ஆனால் அங்கு காவலுக்கு 30 காவலர்களைப் பணியமர்த்தியதாக மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரி பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அங்கு காவலர்கள் இல்லை என்றால் தாக்குதலை அனுமதித்து மவுனம் காத்ததாகவும், இருந்திருந்தால் வேடிக்கைப் பார்த்ததாகவும் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பிறகு எதற்கு ஓர் ஆய்வாளரையும், ஒரு துணை ஆய்வாளரையும், காவலர் ஒருவரையும் இத்தாக்குதலை முன்னறிந்து தெரிவிக்காததற்காக அரசு பணியிடை நீக்கம் செய்தது என்று தெரியவில்லை!
இதுதொடர்பாக, “அரசின் மெத்தனம் இத்தாக்குதலை தடுக்காததற்கான முதற்காரணம் என்று சொல்ல முடியும். உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்து இருந்துள்ளது” என்று கூறி தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் மக்களின் கருத்தை எதிரொலித்திருக்கிறது. ஊர் ஊராகக் கூட்டம் போட்டு, "வன்னியப் பெண்களை கட்டும் பறையன்களை வெட்டுங்கள்' என்று பேசிய காடுவெட்டி குரு போன்றவர்கள் மீது அரசு முன்னதாகவே கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். கொலை வெறியைத் தூண்டும்படி தான் பேசவில்லை என்று குரு சொன்னாலும், "அவர் அப்படிப் பேசியது தவறு' என்று அன்புமணியே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். மாமல்லபுரம் சித்திரை விழாவுக்குப்பிறகு எடுக்கப்பட்ட உறுதியானதும் சிறப்பானதுமான நடவடிக்கையைப் போல ஒன்றை அரசு எடுத்திருந்தால், அது சாதி ஆதிக்கவாதிகளின் மனதில் ஓரளவுக்கேனும் அச்சத்தை உருவாக்கியிருக்கும். தருமபுரி தாக்குதல் நடந்திருக்காது.
தருமபுரி தாக்குதலுக்கு சாதிமீறிய திருமணமே காரணம் என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே அல்ல; உள்ளே கொதித்துக் கொண்டிருந்த சாதி வன்மத்தை வெளிப்படுத்த உதவிய ஒரு தற்செயல் நிகழ்வு அது. சாதி மீறும் திருமணங்கள் சில கொலையில் முடிகின்றன. தனிமனித அழிப்போடு நின்றுவிடும் அவை மிக அரிதாகவே ஊரையே சூறையாடுவதில் முடிகின்றன. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் சாதி மீறிய திருமணம் ஒன்று நடந்ததற்காக ஹரியானாவிலுள்ள பாப்னவா கிராமத்தில் இருந்த தலித் வீடுகள் சிதைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. சாதி மீறி காதல் மணம் புரியும் பல இணைகள் கொல்லப்படுவது இப்போது தமிழகத்திலும் அதிகரித்திருக்கிறது.
மிக அண்மையில் திருவள்ளூரைச் சேர்ந்த ஓர் இளைஞர், தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு நாகர்கோவில் சென்று, சாதி மீறி திருமணம் செய்து கொண்ட தன் தங்கையை கொடூரமாகக் கொன்றுவிட்டு வந்து காவல்துறையிடம் சிக்கியுள்ளான். 2011 இல் தமிழகத்தில் 890 பெண்கள் கவுரவக் கொலையுண்டுள்ளனர். 7,000 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் காதல் மணத்துக்காக இப்படி ஒரு வன்முறை வெறியாட்டம் தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்ததில்லை. இந்த கொடிய வரலாறை இப்போது தொடங்கி வைத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.
சாதி மறுத்த காதல் திருமணங்களை எதிர்க்கும் போக்குக்கு அடிப்படை சாதி அகமண முறையில் உயிர்வாழ்கிறது என்பதே. சாதியை மீறவேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஓர் ஆணோ, பெண்ணோ காதல் புரிவதில்லை. என்றாலும் அவர்கள் தம்மை அறியாமலேயே ஒரு சமூகப் புரட்சியை, கலகத்தை நிகழ்த்துகின்றனர். அம்பேத்கரும், பெரியாரும் வலுவாய் பரிந்துரைத்த சாதி ஒழிப்பு நடவடிக்கையே கலப்பு மணம். ஆனால் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே தமிழகத்தில் நடக்கும் கலப்பு மணம் சாதியை ஒழிக்கும் பணியை அத்தனை தீவிரமாய் செய்துவிடுமென சொல்லிவிட முடியாது. தருமபுரி உள்ளிட்ட ஆண்டுகள் பலவாய் நடந்துவரும் வன்கொடுமைகளுக்கு காரணம் சாதிய வன்மம். சாதியை அதிகாரம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனித மனம் இன்னொருவன் மீது அதிகாரம் செலுத்த எப்போதுமே விரும்புகிறது. தலித் மக்கள் பொருளாதார அடிப்படையில் பலவீனமானவர்களாயும், அரசியல் நோக்கில் திரண்டெழாத சக்தியாகவும் இருந்த காலம் போய்விட்டது. தலித் மக்கள் அரசியல் நோக்கில் ஒன்று திரண்டு தம்மீது இழைக்கப்படும் சாதி வன்கொடுமைகளுக்கு உடனடியாக எதிர்வினை புரிகிறார்கள். வன்கொடுமைகளை கேள்வி கேட்கவும், அம்பலப்படுத்தவும், சட்டத்தின் பிடியில் கொண்டுவரவும் முனைப்புடன் போராடுகிறார்கள். மாறிவரும் பொருளாதார சூழல்கள் நிலவுடைமை சமூகத்து ஆண்டான் அடிமை முறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளன.
அண்மைக் காலத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 72 லட்சம் விவசாயத் தொழிலாளிகள் உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட வேறு துறைகளுக்கு மாறிவிட்டதாக பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தொழிலாளர்கள் எல்லோருமே ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வருபவர்கள். அதிலும் குறிப்பாக காலங்காலமாக வரும் சாதிய மரபுகளை ஏற்கவிரும்பாத இளம் வயதுக்காரர்கள். இவர்கள் ஆதிக்கச் சாதியினரின் வயல்களிலும், தோப்பு துரவுகளிலும் கைகட்டி வேலைக்கு எதிர்பார்த்திருக்க விரும்பாதவர்கள்.
தருமபுரியில் வன்முறை நடந்த பகுதிகளில் வாழும் தலித் ஆண்கள் திருப்பூரிலும், ஓசூரிலும், பெங்களூரிலும் போய் வேலை செய்து பொருளீட்டுபவர்கள் என்பதை கவனிக்க வேண்டும். தலித் மக்களிடம் உருவாகத் தொடங்கியிருக்கும் இந்தத் தற்சார்பையும், சுயமரியாதை உணர்வையும் ஆதிக்கச் சாதியினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. உயிர்ச்சேதம் செய்தால் உடனே மீண்டெழுந்துவிடுவர். பொருட்சேதம் செய்தால் மீண்டெழ பல ஆண்டுகள் பிடிக்கும். பொருளின்மை தலித் மக்களை மனரீதியிலும் முடக்கிவிடும் என்ற எண்ணத்துடனேதான் வீடுகளை அழித்து, பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா, தருமபுரி வன்முறையால் ஏற்படுத்தப்பட்ட பொருளிழப்பை சுமார் ஏழு கோடி என மதிப்பிட்டுள்ளார்.
வேறு சாதி ஆண்களால் தம் சாதி பெண்கள் காதலிக்கப்படும்போது பறிபோகும் ஆண் அதிகார நிலை, சாதிமறுப்பு திருமணங்களால் சொத்துகள் வேறு சாதி ஆண்களுக்குப் போய்விடுமே என்ற கோபம் ஆகியவையும் இந்த வன்முறையில் ஒளிந்துள்ளன. காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஆதிக்கச் சாதி பெண்களை, பெற்றோர் முதலில் பாசத்தை காட்டி நைந்து பேசி மாற்ற முயல்கின்றனர். அதற்கு இணங்காமல் உறுதியாக நிற்கும் பெண்ணிடம் "சொத்தில் பங்கு கோர மாட்டேன்' என்று எழுதி வாங்கிக் கொள்கின்றனர். எனவே இங்கு தலித் மக்களின் பொருளாதார தற்சார்பும், இதனால் பறிபோகும் ஆதிக்க சாதியினரின் மேலாதிக்கமும், அதிகாரமும்தான் சிக்கலாக வந்து முன்னால் நிற்கிறது. இந்த உளவியலைத் தூண்டி, சாதி வெறியூட்டி மக்களை ஒன்று திரளச் செய்து அரசியலில் இழந்த தனது செல்வாக்கை திரும்பப் பெறலாம் என்று பா.ம.க. நினைத்து இவ்வன்முறைக்குப் பின்னால் தீவிரமாக செயல்பட்டிருக்கிறது. ஆனால், கிணற்றில் விழுந்தவன் பாம்பை பிடித்துக் கொண்டு தொங்கிய கதையாக மாறிவிட்டது அதன் நிலை.
2
                தருமபுரி வன்முறைக்கு காரணமானவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே என்பதுதான் ஊடகங்கள், மனித உரிமை அமைப்பினர், அரசியல் கட்சிகள், உண்மை அறியும் குழுக்கள் ஆகியவற்றின் உறுதியான கருத்து. இதில் தலித் மக்களை குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இதை ஓயாது சொல்லி வருகிறார்கள். ஆனால், பா.ம.க. அதை இன்றுவரை மறுத்து வருகிறது. அதை மட்டுமின்றி மரக்காணம் கலவரத்தில், ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினரின் கைதையொட்டி தமிழகம் முழுவதும் நடந்தேறிய வன்முறைகள் ஆகியவற்றையும் கூட அது மறுத்து வருகிறது.
தருமபுரி மற்றும் அதற்குப் பிறகான பா.ம.க. வினரின் செயல்பாடுகளை நாம் பட்டியலிட்டாலே ஓர் உண்மைச் சித்திரம் கிடைத்து விடும். தருமபுரி பகுதிகளுக்கு அரசியல் கூட்டங்களில் பேசவந்த குரு, வழக்கமான தனது சாதி வெறிப்பேச்சுகளை நிகழ்த்தியுள்ளார். தாக்குதலை முன்னின்று நடத்தியதாக பா.ம.க. நிர்வாகிகளை அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊடகங்களில் இத்தாக்குதல் தொடர்பாகப் பேசிவரும் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவருமே தாக்குதலை கண்டிக்கவும், அதில் தம் அமைப்புக்கு தொடர்பு இல்லை எனவும் சொல்வதேயில்லை. "தருமபுரி கலவரத்துக்கு பா.ம.க. காரணம் அல்ல' என்று அறிக்கை விட்ட ராமதாஸ், அந்த சாதி வெறித்தாக்குதலை ஓரிடத்திலும் கூட கண்டிக்கவேயில்லை. திவ்யாவின் தந்தை நாகராஜின் இறுதிச் சடங்குகளில் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டதாக எல்லா நாளேடுகளிலும் செய்திகள் வந்தன.
தருமபுரி தாக்குதலுக்குப் பிறகு ராமதாஸ் மிக வெளிப்படையாக தலித் மக்களை இழிவுபடுத்தி பேசத் தொடங்கினார். “தலித் இளைஞர்கள் டி சர்ட், ஜீன்ஸ் அணிந்து, கூலிங்கிளாசுடன் பிற சாதி பெண்களை மயக்கி ஏமாற்றி தம் வலையில் விழவைக்கிறார்கள். பிறகு தமது நாடகக் காதலை நடத்தி பணம் பிடுங்கிக்கொண்டு துரத்திவிடுகிறார்கள். இருபது வயது வரை பெண்ணை வளர்த்த பிறகு திடீரென்று ஒருவன் காதலித்து பெண்ணை கூட்டிச்சென்று விடுகிறான் என்றால் பார்த்துக்கொண்டு இருக்கச் சொல்கிறீர்களா?” என்று எல்லா கூட்டங்களிலும் பேசத் தொடங்கினார். அதோடு நிற்காமல் அனைத்து ஆதிக்கச் சாதியினரையும் (சுமார் 40க்கும் மேல். பெரும்பாலும் "லெட்டர் பேட்' அமைப்புகள்) கூட்டி ஊரூராக கூட்டம் போட்டார். இக்கூட்டங்களில் பேசியவர்களின் உரைகள் சில நாளேடுகளிலும், வார ஏடுகளிலும் பதிவாகியுள்ளன. அத்தனையும் நாகரிக சமூகத்துக்கு சிறிதும் ஒப்புவராத தரம் தாழ்ந்த இழிவான பேச்சுகள். ஆதிக்கச் சாதியினர் இணைந்த "அனைத்து சமூகப் பாதுகாப்பு கூட்டமைப்பின்' அடிப்படை தலித் மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த சாதிய வெறுப்பே. "கடத்தல் நாடகத்தால் பெற்றோர் படும் வேதனை'யைக் குறித்து பா.ம.க. வினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் வடிவேல் ராவணன், கவிஞர் ஜெயபாஸ்கரன் போன்ற "அறிவுஜீவி'கள் பங்கேற்றனர்.
சமூக நீதியை இந்தியாவில் முதன்முதலில் முன்னெடுத்த தமிழகத்தில் தான் ராமதாசிஸ் தலைமையில் சமூக நீதிக்கு விரோதமான தலித் அல்லாதார் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மதவெறியை அரசியலாக்கி அதிகாரம் பெற நினைத்த கட்சிகள் இந்தியாவில் உண்டு. ஆனால் சாதியை எந்தக்கட்சியும் கையில் எடுத்ததில்லை. சாதிய தாக்குதல்களில் சில அமைப்புகளோ, சில குழுக்களோ, தனி நபர்களோ ஈடுபட்டாலும் ஓர் அரசியல் கட்சியே அதில் ஈடுபட்டதில்லை. அவ்வகையில் ராமதாஸ் நவீன வரலாற்றின் கருப்பு பக்கங்களில் இடம்பிடித்திருக்கிறார்.
ராமதாஸ் போடுவது தப்புக் கணக்கல்ல; அது கணக்கே அல்ல என்று வரலாறு அவருக்கு திருப்பிச் சொல்லத் தொடங்கியுள்ளது. சமபலம் கொண்டவனை எதிர்த்து மோதுவதுதான் போர்விதி. அவர் இப்போது போரிடுவதோ உயிரே அற்ற ஒரு கற்பனை எதிரியோடு. நாடகக்காதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்கின்ற ஊதிப்பெருக்கப்பட்ட எதிரியோடு. அவர் அரசியல் நடத்த மின்தடை, ஊழல், பண்பாட்டுச் சீரழிவு, ஈழம், மதுக்கடைகள், அழிந்துவரும் விவசாயம், சூழல் சீரழிவு என எத்தனையோ இருக்கின்றன. அவற்றை விடுத்து கண்ணுக்குத் தெரியாத சிக்கல்களை கையிலெடுத்திருப்பதிலிருந்து அவர் ரத்தமும் சதையும் உணர்வும் கொண்ட சகமனிதனை நம்பாமல் சாதியை நம்புகிறார் எனத் தெளிவாகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ராமதாஸ் வன்முறை கும்பல் என்றிருக்கிறார். 30.4.2013 அன்று ராமதாஸ் கைது செய்யப்பட்ட பிறகு பா.ம.க. வினரால் 16 லாரிகள் மற்றும் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 853 அரசு மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஓட்டுநர்களும் ஒரு பயணியும் பலியாகியுள்ளனர். சுமார் 165 மரங்கள் வெட்டி எரியூட்டப்பட்டுள்ளன. சுமார் ஒன்பது மாவட்டங்களில் 3,868 தடங்களின் பேருந்துகள் ஒரு வாரத்துக்கும் மேலாக இயக்கப்படவில்லை. கல்வீச்சு, வாகனங்களுக்குத் தீ வைத்தல், வழிமறிப்பு, தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு, காயப்படுத்துதல், பாலத்தை தகர்த்தல், மரங்களை வெட்டுதல், உணவுக் கிடங்கு, நியாயவிலைக்கடை ஆகியவற்றுக்கு தீ வைத்தல், குடிநீர் குழாயை உடைத்தல், பேருந்துகளை தாக்குதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டதற்காக சுமார் 7,500 பா.ம.க. வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருபதற்கும் மேற்பட்டோர் மீது குண்டர், தேசிய பாதுகாப்பு சட்டங்கள் பாய்ந்துள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் முதல்வரால் சட்டமன்றத்தில் கூறப்பட்டவை. பா.ம.க. ஒவ்வொரு முறையும் வன்முறையை கையிலெடுக்கிறபோது தமிழ்நாடு அல்லாடுகிறது. இதற்கு மேலும் ராமதாஸ் பிற அமைப்புகளை வன்முறை கும்பல் என்று சொல்வாரா எனத் தெரியவில்லை. அப்படிச் சொல்வாராயின் அது முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது.
எங்கள் தொண்டர்கள் அறவழியில் போராடுகிறார்கள் என்று ராமதாசும், அன்பு மணியும் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர்களின் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடுவதற்கு துணிச்சலும் நேர்மையும் தேவைப்படுகிறது. அது நடந்து முடிந்த "போராட்டம்' எனப்படும் வன்முறைகளில் இருந்ததா? இருசக்கர வாகனங்களில் வந்து ஆளரவமற்ற இடத்தில் பேருந்துகளின் மீது கல்வீசிவிட்டு ஓடிவிடுவது. ஓடும் ரயிலில் பெட்ரோல் குண்டினை எறிவது. பேருந்துகளைப் பின் தொடர்ந்து வந்து தலித் மக்கள் வாழும் நிறுத்தங்களில் நிற்கும்போது கல்லெறிவது (பழியை விடுதலைச் சிறுத்தைகள் மீது போட வசதியாக) இது போலத்தான் இந்த வன்முறைகள் இருந்தன. இதுதான் அறவழி போராட்டம் என்றால் "அறம்' என்ற சொல்லின் பொருளை இனி மாற்றிவிட வேண்டும். ஓர் அரசியல் அமைப்பின் போராட்ட இலக்கு அரசு எனில், ஜனநாயக வழிகளில் தமது எதிர்ப்பை பதிவு செய்து உணர்த்த வேண்டும். தாமே துணிந்து அணியணியாய் சிறைபுக வேண்டும். இதுவே தொண்டர்களுக்கும், கட்சிக்கும் அழகு.
3
                தருமபுரி வெறியாட்டம் பொதுச் சமூகத்தில் மேலும் ஆழமான சாதியப் பிளவை உருவாக்கியுள்ளது. சில படித்த "அறிவீலிகள்' கூட இதை உணர்ச்சியோடு விமர்சித்து பா.ம.க.வுக்கு ஆதரவாகப் பேசுவது நடக்கிறது. எல்லாவற்றையும் ஒதுங்கி நின்று மவுனமாக வேடிக்கை பார்ப்பது போல இந்த கொடுமையையும் வேடிக்கை பார்க்கிற மக்கள் திரளால் நிறைந்திருக்கிறது தமிழ்நாடு. தலித் மக்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எதிராக பா.ம.க. நடத்தும் எதிர்ப்பிரச்சாரத்திற்கு சில அமைப்புகளும் மறைமுகமாக துணை போகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் பா.ம.க. வின் தலைமை குழுவினர் தொடர்ந்து சொல்லிவரும் பொய்ப்பிரச்சாரங்கள் சில உண்டு. திவ்யா கடத்தப்பட்டார். தலித் மக்கள் தாங்களே தங்களின் வீடுகளை கொளுத்திக் கொண்டனர். அரசு வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழங்கும் இழப்பீட்டைப் பெற இப்படி செய்தனர் என்பவை அவற்றுள் சில. இதை அப்படியே "சில' முன்னாள் புரட்சிகர தோழர்கள் இப்போது வடமாவட்டப்பகுதிகளில் சொல்லி வருகின்றனர்.
ஈழ மக்களுக்காக வீதிக்கு வந்தவர்களில் பத்து விழுக்காட்டினர் கூட இச்சாதி வெறியாட்டத்தை கண்டித்து வெளியே வரவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தாக்குதலை கண்டித்திருந்தனவே தவிர, அதை நிகழ்த்தியவர்களை கண்டிக்கவில்லை. ஆனால் பெரியாரிய, மார்க்சிய அமைப்புகள் தலித் மக்களின் பின்னால் நின்றன. திராவிடர் கழகம் சாதி மறுப்பு இணையர்களின் மன்றல் விழாவை நடத்தியது; தருமபுரியில் சாதியொழிப்பு மாநாட்டை கூட்டியது. தந்தை பெரியார் திராவிடர் கழகமும், திராவிடர் விடுதலைக் கழகமும் காதலர் விழா, மநுஸ்மிருதி எரிப்பு மற்றும் சாதி மறுப்பு திருமண ஆதரவு மாநாடு என பல இடங்களில் நடத்தின. ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மநு சாஸ்திர எரிப்பு மாநாட்டில் ஜீன்ஸ் சீருடை அணிவகுப்பு நடந்தது. மார்க்சிய அமைப்புகள் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும், கண்டனப் பொதுக்கூட்டங்களையும் நடத்தின. படைப்பாளிகளும், சமூக ஆர்வலர்களும் தலித் மக்கள் பக்கம் நின்றனர்.
தமிழ்த் தேசியர்கள் வழக்கமாக இதை சகோதரச் சண்டை என்றனர். ஈழத்திற்காக அழுது கொண்டிருக்கும் அவர்களில் சிலரின் கண்களில் திரையிட்டிருக்கும் கண்ணீர் இந்த வன்முறையை பார்க்கமுடியாதபடி செய்துவிட்டது! சாதியம், தமிழ்த்தேசியத்தின் உள்ளே வளரும் புற்றுநோய் என்பதை அவர்களால் உணர முடியவில்லை.
தருமபுரியைத் தொடர்ந்து ஓயாமல் விவாதங்களில் ஈடுபட்ட தொலைக்காட்சி நிலையத்தினர் இரு கருத்து நிலையாளர்களையும் பேச வைத்தனர். கோடிக்கணக்கான பேர் பார்த்திருக்க அவ்விவாதங்களில் பங்கேற்ற எதிர் தரப்பினர் தலித் மக்களுக்கு எதிராகப் பேசி மானுடத்துக்கும், அரசியல் அமைப்புக்கும் எதிராகக் குற்றமிழைத்தனர். தமிழ்ச் செய்தியேடுகள் சில சாதி உணர்வாளர்களின் கருத்துகளை மட்டுமே பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. சாதி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றிய செய்திகளை அவை இருட்டடிப்பு செய்தன. "தினமணி' காந்தியமே தீர்வு என்றது தனது தலையங்கத்தில்.
தொலைக்காட்சி விவாதங்களில் தலித் மக்களுக்கு ஆதரவாகவும், சாதிவெறிக்கு எதிராகவும் சுப.வீரபாண்டியனும் மனுஷ்யபுத்திரனும் சலிக்காமல் பேசிக்கொண்டேயிருந்தனர். அவ்வப்போது காட்சி ஊடகங்களில் பங்கேற்ற ஞாநி, அ.மார்க்ஸ், ஓவியா, அருள்மொழி, கொளத்தூர் மணி எனப்பல சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் தலித் மக்களுக்கு ஆதரவான விவாதங்களை எழுப்பினர். இவ்விவாதங்களில் பங்கேற்ற மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் குரல் அழுத்தமாகவும், ஆழமாகவும் ஒலித்தது. தருமபுரி வன்முறை அதைத் தொடர்ந்த சாதி பரப்புரை ஆகியவற்றில் நேரடியாக குற்றம் சாட்டப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடும், திருமாவளவனின் அணுகுமுறையும் அரசியல் முதிர்ச்சியை தமிழகத்துக்கு உணர்த்தியது.
இலக்கியச் சிற்றிதழ்களும், மாற்று அரசியல் ஏடுகளும் தருமபுரி தாக்குதலை குறித்து பதிவு செய்ததில் மிகச் சரியான பங்கை ஆற்றியுள்ளன என்பதை சொல்ல வேண்டும். "ஆனந்த விகடன்', "இந்தியா டுடே' போன்ற வார ஏடுகள் மிகச்சிறப்பானதும் விரிவானதுமான கட்டுரைகளை வெளியிட்டன. "இந்து', "எக்ஸ்பிரஸ்' போன்ற ஆங்கில நாளேடுகள் தொடர்ச்சியாக இத்தாக்குதல் தொடர்பான செய்திகளையும் ஆய்வறிக்கைகளையும் வெளியிட்டபடியே இருந்தன.
4
                ஒரு சொட்டு நீர் கடலில் விழும்போது அது கடலுடன் கலக்கிறது. ஆனால் அதுபோல் சமூகத்தில் வாழ்கின்ற மனிதர்கள் சமுதாயத்தில் அய்க்கியமாவதில்லை என்றார் அம்பேத்கர். இது இந்தியச் சமூகத்தைப் பற்றிய அவரின் கூற்று. இதற்கு காரணமாக அம்பேத்கர் சாதியையே சொல்கிறார். மனிதர்களை ஒட்டும் பசையை கரைத்துவிடும் நீராக சாதி பன்னூறு ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
சாதியை இறுக்கும் கருவியாக இங்கு இந்துமதம் செயல்படுகிறது. அது உருவாக்கி வைத்திருக்கும் ஆதாரமில்லாத புராண கட்டுக் கதைகளை சாதி இந்துக்கள் தமது மேலாதிக்கத்துக்கு துணையாகப் பயன்படுத்துகிறார்கள். (சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியிலிருந்து தெறித்த நெருப்புத்துகளிலிருந்து தாங்கள் உருவானதாக வன்னியர்கள் சொல்லிக்கொள்கின்றனர். இது மாமல்லபுர மாநாட்டில் பேசப்பட்டது) இந்த கட்டுக்கதைகள் எல்லா சாதியினருக்குமே இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் என்ன ஆதாரம் என்று பகுத்தறிவுச் சிந்தனையோடும் அறியியல் நோக்கிலும் இந்து மத திளைப்பில் மூழ்கியிருக்கும் மனங்கள் கேட்பதேயில்லை. அவர்கள் நாவில் ராம நாமமும் கட்கத்தில் கூரிய வாளும் இருக்கின்றன. அவர்கள் முனிவர்களைப்போல பேசுகிறார்கள்; கசாப்புக் காரரைப்போல நடந்து கொள்கிறார்கள்.
சாதி என்பது ஒரு மனநிலை. அது படித்த, படிக்காத எல்லாரிடமும் ஒரு மனப்பிறழ்வு நோயாக மாறியிருக்கிறது. சகமனிதனின் உரிமையை ஏற்க மறுக்கிறது. அகமணம், கலந்துண்ணாமை, சேர்ந்து வாழாமை, வேலைப்பாகுபாடு ஆகியவற்றில் இன்னமும் சாதியம் உறுதியாக உயிர்வாழ்ந்து வருகிறது. இவற்றைத் தகர்ப்பது சாதியொழிப்பின் முதலும் அடிப்படையானதுமான வேலை. இங்கு ஒவ்வொரு சாதிக்காரனையும், மொழிபேசுபவனையும் தனித்தனி இனம் என்றும் சமுதாயமென்றும் அழைத்துக்கொள்கிற இழிவான போக்கு நிலவுகிறது. இனம் என்பது உலகமனைத்திலும் உள்ள மனித இனத்தையே குறிக்கும். அனைவரும் இணைந்து வாழும் மக்கள் திரளே சமுதாயம். சாதி தனித்தனி இனமல்ல. அது கலப்பால் உருவானது. ஆதிக்கத்தையும் பிரிவினையையும் நிலைநாட்ட உருவாக்கப்பட்டது.
மிகக் குறிப்பாக வாழ்முறையில் ஒன்று போலிருக்கும் தலித் மக்களும், வன்னியர்களும் காலனிய ஆட்சியின் போதும் அதற்கு முன்னரும் வட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அடிமைகளாக இருந்துள்ளனர். பார்ப்பன நிலச்சுவான்தார்களிடம் பள்ளிகளும் (வன்னியர்)அடிமைகளாக இருந்ததாக வருண சிந்தாமணி, நில ஆவணங்கள் மற்றும் காலனிய ஆட்சியாளர்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. (ஆதாரம் : "தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும்', ஏ.கே. காளிமுத்து, 2012, பாரதிபதிப்பகம்) வரலாற்று நோக்கில் ஆண்ட பரம்பரை என்று சொல்லி பிறரை அடிமை செய்வதில் பொருளில்லை. காலனிய ஆட்சி, மராட்டிய ஆட்சி, முகலாயர் ஆட்சி ஆகியவை தமிழகத்தில் ஏற்படுத்திய நில கையகம் மற்றும் வினியோக நடைமுறைகள் தமிழகத்தின் நிலவுடைமை தன்மைகளில் பல பெரிய மாறுதல்களை கொண்டுவந்துள்ளன. அவற்றின் நீட்சி தான் இன்று தலித் மக்களின் நிலமற்ற நிலை.
சாதிய நடைமுறைகளும் அதன் நிலைமைகளும் முற்றிலுமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஆதிக்கச் சாதிகளின் சூழ்ச்சியே சாதி. மானுட நோக்கில் சாதிக்குப் பொருளில்லை. அது போலியானது. வரலாற்றின் பக்கங்களுக்கு மக்களைத் திருப்புகிற போது இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். மக்களுக்காகப் பணியாற்றுவதாகச் சொல்லும் அமைப்புகள் முதலில் வரலாற்று ஆதாரத்துடன் கூடிய உண்மைகளை சமூகத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
“மூவேந்தர், நாலுவேந்தர், வெங்காய வேந்தர் எல்லாம் சாதி வளர்த்தவரே” என்றார் தந்தை பெரியார். சாதி ஒழிப்பு குறித்து பேசும் தமது உரையொன்றில் தான் “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்றார். இந்த கடவுள் சாதிகாப்பாற்றும் கடவுள்; இந்த மதம் சாதி காப்பாற்றும் மதம்; இந்த அரசு சாதி காப்பாற்றும் அரசு; இந்த இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம். இந்த மொழி சாதி காப்பாற்றும் மொழி என்று தோலுரித்தார் அவர். தலித் மக்கள் இந்து மதத்தில் இருக்கும் வரை “கழுதைக்கு வாழ்க்கை பட்டால் உதைக்கு பயப்படக்கூடாது” என்ற நிலைதான். இந்து மதத்திலிருந்து முற்றிலுமாக விலகும் வரை சாதி இழிவு தொடரும். அம்பேத்கரின் அந்தத் தீர்வு நிறைவு பெற நீண்டகாலம் ஆகும் என இன்றிருக்கும் தலித் மக்களின் கருத்து நிலையும் அரசியல் நிலையும் சொல்கின்றன. அந்நிலையை எட்டும் வரை சாதியம் தன் கொடும் பணிகளை செய்யும் புள்ளிகளை கவனமாக இனம் கண்டு, அவற்றைத் தீவிரமாக முறியடிக்க வேண்டியது தான் சாதியற்ற சமூகத்தை உருவாக்க விரும்புவோருக்கு முன்னாலிருக்கும் ஒரே வழி.

தருமபுரி சாதி வெறியாட்டம் - சமத்துவத்திற்கு விடப்பட்ட சவால்! அரங்க.குணசேகரன்

தருமபுரி சாதி வெறியாட்டம் - சமத்துவத்திற்கு விடப்பட்ட சவால்!

               

 தலித் அல்லாதோர் பேரவை' 1999 ஆம் ஆண்டு கோவை செழியனால் உருவாக்கப்பட்டது; இதை மீண்டும் அவரது நினைவு நாளான மார்ச் 14 இல் கொங்கு வேளாள கவுண்டர் பேரவையின் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தொடங்கப் போகிறாராம்! அதற்குக் காரணமாக அவர் அளிக்கும் விளக்கம்தான் விசித்திரமும், வேடிக்கையும் நிறைந்து நகைப்புக்கு உரியதாகவும் இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவான தமிழகத்தில் தலித் அல்லாதோர் பேரவையாம்! ஈழத்து ஆறுமுகனாரும், தமிழகத்து வையாபுரிப் பிள்ளைகளும் நிரந்தரமாகச் சாகவில்லை; தமது சமூக சிந்தனையின் வாரிசுகளை விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை ராமதாசு, மணிகண்டன் போன்றவர்களின் செயல்பாடுகள் நினைவூட்டுகின்றன. இச்சாதி ஆதிக்கவாதிகள், “கலப்புத் திருமணங்கள் அல்லது சாதி மறுப்புத் திருமணங்களால் தங்கள் சாதியின் பாரம்பரியப் பெருமைகளும், தனித்தன்மைகளும் சீரழிந்து போய்விடுகின்றன” என்று கூக்குரலிடுகின்றனர்.
காதல் என்பது வயது, பருவம், பணியிடம், கல்வி கற்கும் சூழல்கள், பழகுவதில் ஏற்படும் நெருக்கம், அன்பு, இரக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இருபால் இளைஞர், இளம்பெண்களிடம் கருக்கொண்டு உருவாகிறது. இதை ஏதோ தலித்துகளின் திட்டமிட்ட சதியாக மணிகண்டனும், மருத்துவர் ராமதாசும் புரிந்து கொண்டிருப்பது அபத்தமாகும். காதல் திருமணங்களை / சாதி மறுப்புத் திருமணங்களை சமுதாய வரலாற்று வளர்ச்சியின் விரும்பத்தக்க அம்சமாக பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் சாதி ஒழிப்புக் கருத்தின் வெற்றியாக, மார்க்சிய, தமிழ்த்தேசிய அரசியலுக்கு உந்து சக்தியாகப் பார்க்க மறுத்து, ஏதோ தங்கள் சாதியின் பாரம்பரியம், பெருமை போன்றவற்றுக்கே கேடு நேர்ந்துவிட்டதாகப் புலம்புகிறார்கள். கொங்கு வேளாளர் பெண்களைத் திருமணம் செய்யும் தலித்துகள் அவர்களது சொத்தில் பங்கு கேட்பதாக வேறு பிதற்றுகிறார்கள்.
கொங்கு வேளாளர், வன்னியர், தேவர் உள்ளிட்ட சாதிகளின் பாரம்பரியப் பெருமைகள் என்று இன்று எதனையும் குறிப்பிட்டுக் கூற இயலாது. கொங்கு மண்டலம் பழைய காலத்தில் வானம் பார்த்த புஞ்சை; நவதானிய பூமி. மரக்கலப்பைகளால் மாட்டைக் கொண்டு ஏர்பூட்டி, நாள் முழுவதும் உழுது விதைத்துவிட்டு, மறு மழை வரும் வரை விதை முளைக்குமா, பயிர் பிழைக்குமா என்றிருந்த நிலைதான் இவர்களது வேளாண்மைப் பாரம்பரியம். ஆனால் இன்றும் அந்த நிலையா நீடிக்கிறது?
 வெள்ளைச்சேலை உடுத்தி விதவைகளை வீட்டுக்குள் அடைத்து வைத்த இவர்கள், இன்று அதே சமுதாய விதவைப் பெண்கள் பல வண்ண ஆடை உடுத்துவதும், மறுமணம் செய்து கொள்வதும் வீட்டுக்கு வெளியே தொழில், வணிக, கல்வி நிறுவனங்களில் வேலைக்குச் செல்வதும் நடக்கிறதா இல்லையா? இதையெல்லாம் கூடாது என்ற பொருளில் நாங்கள் இங்கே வாதிடவில்லை. இப்படிப்பட்ட கண்மூடித்தனமான பழக்கவழக்கங்கள் எல்லாம் மண்மூடிப் போக வேண்டும் என்று தான் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும், மேதை அம்பேத்கரும் இன்னபிற வணக்கத்துக்குரிய சமூக முன்னோடிகளும் பாடுபட்டார்கள். ஆனால் அவர்கள் சொன்னபடியும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் காலமாறுதலில் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட இந்தப் பாரம்பரிய சிசுக்கள், சாதி மறுப்புத் திருமணத்தில் மட்டும் தங்கள் பாரம்பரியம் அழிந்து விடுவதாக உளறுவதுதான் நகைச்சுவையாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவன் குதிரை ஏறிச் சென்று திருமணம் செய்யவும், கட்டை வண்டியின் இருப்பிடத்தில் உட்கார்ந்து வண்டி ஓட்டவும் இருந்த தடைகளைத் தகர்த்து தொழில்நுட்பமும், அறிவியலும் தாழ்த்தப்பட்டவர்களை விமானிகளாகவும், பேருந்து ஓட்டுநர்களாகவும் மாற்றிவிட்ட பிறகு, தலித்துகள் ஓட்டுநர்களாக இருக்கும் வாகனங்களில் பயணம் செய்ய மறுத்து, கொங்குவேளாளர்களும், வன்னியர்களும் கால்நடையாக நடந்தேதான் வெளியூர்களுக்கு செல்கிறீர்களா?
பறையரும், பள்ளரும், சக்கிலியரும் சு கொங்குவேளாளர், வன்னியர், கள்ளர் சாதி உள்ளிட்ட இதரசாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதால் மட்டும் தான் உங்கள் பாரம்பரியம் கெட்டுவிடுமோ? தலித்துகள் கல்வி கற்பதும், அரசு தனியார் துறைகளில், வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் பணிக்குச் செல்வதும், புதிய உடைமை வர்க்கங்களாக வளருவதும், அதன் பயனாக சமூக வளர்ச்சியின் வெளிப்பாட்டில் எங்கோ சிலர் சாதி மறுத்து காதலித்து திருமணம் செய்து கொள்வது மட்டும் எப்படிப் பாரம்பரிய மீறலாகும்?
எல்லாவற்றிலும் தங்கள் பாரம்பரியத்தை மீறிய கொங்குவேளாளர்கள் உள்ளிட்ட தலித் அல்லாத சாதிகள், தலித்துகளோடு திருமணம் செய்து கொள்வதை மட்டும் பாரம்பரியத்துக்கு எதிரானது என்று கூக்குரலிடுவது ஏன்? நம்முடைய வட்டாரக் குலதெய்வங்கள் பலவற்றின் வரலாற்றைத் தோண்டித் துருவினால் அத்தனையும் சாதி மீறிக் காதலித்து திருமணம் செய்து கொண்ட வரலாறுகள் தான். காத்தவராயன் கதை, முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை, வெள்ளையம்மாள் வெள்ளச்சிகதை, வேம்பையன், தங்கயம்மாள் கதை, இப்படிப் பல கதைகளும் வரலாறுகளும் சாதி மீறியும், மாறியும் காதலித்த கதைகள் தான்.
சாதிவெறியைத் தூண்டி தன் சாதி மக்களைத் திரட்டி, தலித்துகளின் மீது தாக்குதல் தொடுத்து அதில் தலைவனாகி, தன் சாதி ஓட்டுகளைப் பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக உயர்ந்து, உயரத்துக்கேற்ப கொள்ளையடித்துப் பணம், சொத்து சேர்க்க இந்தச் சாதிவெறி மூலதனமாகுமேயல்லாமல், தன் சொந்த சாதி ஏழைக்கு, தொழிலாளிக்கு, கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிக்கு மயிரளவும் உதவிட துணை செய்யாது.
பறையர், பள்ளர், அருந்ததியர், வண்ணார், நாவிதர் போன்ற சாதியினர் உங்கள் பார்வையில் என்றென்றும் அடிமைச் சாதிகள், சேவைச் சாதிகள். இவர்கள் இப்படி அடிமைத் தொழிலாளியாக, கூலித் தொழிலாளியாக, சேவைத் தொழிலாளியாக சில நூறாண்டுகாலமாக ஊதியமின்றியும், குறைந்த ஊதியத்திற்கும்; ஏன்? எதற்கு என்று கேட்காமல் நீங்கள் காலால் இட்ட வேலையை தலையால் செய்து தாங்கியதால் தான் உங்களின் "உயர் சாதி'ப் பெருமையும், பாரம்பரியமும் நீடித்து வந்தது, வருகிறது! இது உடைந்து நொறுங்குகிறபோது பாரம்பரிய சாதிப் பெருமைபேசி வானத்துக்கும் பூமிக்குமாய் எகிறிக் குதிக்கிறீர்கள்!
தீண்டாமை, கீழ்ச்சாதி, பிறவி ஏற்றத்தாழ்வு + சாதிப் பெருமை பேசும் மணிகண்டன் உள்ளிட்ட சாதி இந்துக்களே! சாதித் தமிழர்களே! தலித் பெண்கள் வயலில் நடவு செய்யும் போதும் களைபறிக்கும்போதும், அடர்ந்த கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டும் போதும், கால்வழியே தான் சிறுநீர் கழிக்கிறார்கள். நீங்கள் பயிருக்குப் போடும் யூரியாவோடு எங்கள் தலித் பெண்கள் விட்ட சிறுநீரில் உள்ள உப்பும் (யூரியா) சேர்ந்து தான் நெல்லும், கரும்பும், வாழையும், மஞ்சளும், பருத்தியும் விளைகிறது என்பதை உங்கள் அடிமை மூளைகளுக்கு அறியச் சொல்கிறோம்! தலித் பெண்ணின் சிறுநீரில் விளைந்த அரிசியும், கரும்பும் வாழையும் இனிக்கிறபோது, தலித் பெண்ணும் உங்கள் சாதி ஆணும், தலித் ஆணும் உங்கள் சாதிப் பெண்ணும் கலந்து இணைந்து வாழுகிற வாழ்க்கை மட்டும் எப்படிக் கசக்கும்? பெரியார் மொழியில் சொன்னால் பாரம்பரியமாவது வெங்காயமாவது! உடைபடட்டும் உங்கள் பாரம்பரியம்! ஒழியட்டும் சாதியம்; தழைக்கட்டும் சாதி மறுப்புத் திருமணங்கள்! மலரட்டும் தமிழ்த்தேசம்! மிளிரட்டும் மானுடம்!
II
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று செயல்திட்டம் தீட்டி போராட்டம் நடத்துகிறார்கள் இச்சாதிவெறியர்கள். தீண்டாமைக் கொடுமையே செய்யாத நிலையில் பிறசாதியினர் மீது பொய்யாகப் புகார் கொடுக்கிறார்கள். இச்சட்டத்தால் தலித் அல்லாத பிறசாதியினர், அதாவது பெரும்பான்மைத் தமிழ்ச் சாதியினர் அச்சுறுத்தப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம்; எனவே இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கதறுகிறார்கள்.
இதன் பொருள் நாங்கள் எத்துணை மேலவளவுகளையும், திண்ணியங்களையும், தருமபுரிகளையும் நிகழ்த்தினாலும் எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது, ஏனெனில் நாங்கள் ஆளப்பிறந்தவர்கள். எங்களின் ஆளுகைக்கு கட்டுப்பட மறுக்கிறபோது, எங்களின் அடக்கு முறைக்கு நீங்கள் உட்பட்டு, கட்டுப்பட வேண்டுமே தவிர, சட்டத்தின் துணை கொண்டு நீங்கள் தப்பிப்பதையோ, பாதுகாப்புத் தேடிக் கொள்வதையோ, சட்டத்தின் வழியாக எங்களுக்குச் சமமாக உங்களை நாங்கள் நடத்த வேண்டும் என்பதையோ நாங்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது என்பது தானே!
நாட்டில் இருக்கிற கிரிமினல், சிவில் சட்டங்களும், நாடாளுமன்ற, சட்டமன்றங்களும், நீதிமன்றங்களும் அதிகாரவர்க்க நிர்வாக அமைப்பு முறைகளும் எங்களுக்கு (ஆதிக்கச் சாதிகளுக்கு) மட்டும் சேவை செய்வதற்கானதே என்றும், நாங்களாகப் பார்த்து உங்களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுத்தால் மட்டும் அதைப் பெற்றுக் கொள்ளலாமே தவிர, உங்களுக்கென்று, எங்களைக் கட்டுப்படுத்துகிற தனிச் சட்டங்கள் இருப்பதை ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்பதையே மணிகண்டன் பேட்டி மூலம் தலித்துகளுக்குச் சொல்கிறார்.
உலகமயமாதல் கொள்கைக்கு முன்பு 165 வடிவங்களில் தமிழகத்தில் தீண்டாமை நிலவியது. 1990க்குப் பிறகு அதுவே 200க்கும் மேற்பட்ட வடிவங்களில் கோலாச்சுகிறது. ஊராட்சிமன்றங்களின் பொது இடங்களில் வைக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியில், ஊராட்சிமன்ற சிமெட்டிப் (பெஞ்சில்) பலகையில் உட்கார்ந்து தலித்துகள் படம் பார்ப்பது, தலித்துகள் செல்போனில் பேசுவது, இருசக்கர மோட்டார் சைக்கிளில் பயணிப்பது போன்றவற்றைத் தடைசெய்யும் படியாக தீண்டாமை பல புதிய வடிவங்களை எடுத்துள்ளது.
அனைவருக்கும் வாடகைக்கு அளிக்கப்படும் திருமண அரங்குகள், நம்பியூரில் அருந்ததியருக்கு மறுக்கப்பட்டதும் நவீன தீண்டாமைதான். இத்தகைய பாகுபாடுகளுக்கு, கொடுமைகளுக்கு குறைந்த அளவு தீர்வு காணவும், குற்றங்களைக் களையவும் தான் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 ஆம் ஆண்டு இந்திய அளவில் கொண்டு வரப்பட்டது. ஆதிக்கச் சாதியினரால் பணியிடத்திலோ, பொது இடத்திலோ, தனியிடத்திலோ அவமதிக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், ஆயுதம் கொண்டு தாக்கப்படுவதும் மட்டுமே இங்கே தீண்டாமையின் கோரத்தாண்டவமல்ல!
ஆதிக்கச் சாதியிடம் கூலி வேலைக்குப் போகாமல் சொந்த நிலத்தில் தலித்துகள் சாகுபடி செய்யும் சுதந்திரத்தைக் கூட அனுமதிக்கமாட்டோம் என்றுதான் 2006 இல் சாதி வெறியர்கள், மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சி என்கிற கிராமத்தில் பய்யாலால் என்ற தலித் ஒருவரின் மனைவியையும், மகளையும் சாலையில் தரதரவென இழுத்துவந்து வன்புணர்ச்சி செய்து, கொலை செய்து சாதிவெறியாட்டம் போட்டனர்.வேலைக்குப் போக மறுத்தாலும் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் வீடுதேடி வரும் நிலைமையே இன்னும் இங்கே தொடர்கிறது.
இத்தகைய நாட்டில் ஒரு சில கொங்கு வேளாளரும், ஒரு சில வன்னியரும், ஒரு சில கள்ளர்களும் வேண்டாம் என்று சொன்னவுடன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எவ்வளவு வன்மம் இருக்கும் என்பதை தயவு செய்து ஜனநாயக ஆற்றல்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
தலித்துகள் பொய்ப்புகார் கொடுத்தால், அந்தப் புகாரின் பேரில் போலிசார் வழக்குப்போடுவது அவ்வளவு எளிதானதா? உண்மையான குற்றங்களுக்கே புகாரை வாங்க மறுக்கும் போலிசார், பொய்ப்புகார்களை அவ்வளவு எளிதில் வழக்காகப் பதிவு செய்து விடுவார்களா? ஒரு புகார் பொய்யா / மெய்யா என்பதைப் புலனாய்வு அதிகாரியும், நீதிமன்றமும் தான் இறுதி செய்ய வேண்டுமே தவிர, புகாருக்கு உள்ளானவரே அதைப் பொய்ப்புகார் என்பதை எந்த தர்க்கத்தின் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சாதாரணக் கொலை வழக்குகளில் கூட, கொலைக் குற்றம் செய்தவன் தான் கொலையே செய்யவில்லை, என் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்று தான் வாதிடுகிறான். அவன் அப்படிச் சொன்ன மாத்திரத்திலேயே அய்.பி.சி. தண்டனைச் சட்டப்பிரிவுகளையே ரத்து செய்ய வேண்டும் என்று ஒருவன் கோருவான் என்றால் அப்படிக் கோரு பவனை பைத்தியக்காரன் என்று தான் உலகம் சொல்லும்.
இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் நக்சல் பாரிப் புரட்சியாளர்கள், தேசிய இன விடுதலைக்காகப் போராடும் போராளிகள், மனித உரிமைப் போராளிகள், சாதி ஒழிப்புப் போராளிகள் எனப்பலர் மீதும் பல பொய்யான வழக்குகளைப் போட்டு, பல ஆண்டுகள் சிறை வாசிகளாகவே வைத்திருக்கிறார்கள். அவர்கள் கூட இந்தியத் தண்டனைச் சட்டத்தை எடுத்துவிட வேண்டும் என்று கோரவில்லை. தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் மட்டும் அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தபட்டதால் ஜனநாயக ஆற்றல்கள் போராடி அச்சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன.
பொய்யான புகாரில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூட, எப்படி இந்தியத் தண்டனைச் சட்டத்தை ரத்து செய் என்று கோராமல், தான் வழக்காடி தன் மீதான புகார் பொய்யென நிரூபணம் செய்து விடுதலை ஆகிறாரோ அப்படித்தான் தீண்டாமை / வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் வழக்கு நடத்தி தான் குற்றமற்றவரா? தண்டிக்கத்தக்கவரா? என்று நீதிமன்றத்தின் முடிவுக்கு உட்பட வேண்டுமே தவிர, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று சொல்வதும், அனைத்துப் புகார்களும் பொய்யானவை, தலித் அல்லாதவர்கள் அனைவரும் சமரச சன்மார்க்கவாதிகள் என்று பேசுவதையும் ஒப்புக் கொள்ள முடியாது.
வன்கொடுமைத் தடுப்புப் புகாரின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை நீதிமன்றத்தில் தோல்வியடைவதற்குக் காரணம், புகாரின் பொய்த் தன்மையல்ல. மாறாக, பதிவு செய்கிற காவல் அதிகாரி, குற்ற அறிக்கை தயார் செய்கிற காவல் அதிகாரி, மருத்துவ அறிக்கை கொடுக்கிற மருத்துவர், எதிர்வழக்காடுகிற வழக்கறிஞர், தீர்ப்புச் சொல்லுகிற நீதிபதி அனைவருமே சாதி இந்துக்கள். சாதிய இந்து மனங்களைக் கவ்வியுள்ள இருட்டில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்ற சிறு தீக்குச்சி வெளிச்சத்தால் மட்டுமே தலித்துகளுக்கு முழு நீதியும் கிடைத்துவிடாது. ஆகக் குறைந்த அளவு பாதுகாப்பு என்ற அளவில்தான் இச்சட்டம் தன்னளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையும் எடுத்துவிட்டால் சாதி வெறியர்களின் கட்டறுத்த கொலைவெறியாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர வழியே இல்லை.
III
                கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் பெரும் பான்மை சாதி மக்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்றும் இச்சாதி வெறியர்கள் புலம்பிவருகிறார்கள். அப்பட்டமான பொய்யும், அண்டப்புளுகும், ஆகாசப்புளுகும் என்றால் என்ன என்பதற்கு மிகச்சரியான எடுத்துக் காட்டே இது போன்ற புலம்பல்கள்.
இன்றுவரை தெருக்கூட்டுகிற துப்புரவுப் பணியில் 100 விழுக்காடும் தலித்துகள் தான். அதிலும் கூட அருந்ததியினரே 90 விழுக்காட்டினர். நகர சுத்தித் தொழிலான இதுவும் முத்திரை வில்லை (குtச்ட்ணீ) ஒட்டி அரசு சம்பளம்பெறுகிற வேலைதான். அரசுப்பணியில் வேலைவாய்ப்பில் பெரும்பான்மைச் சமூகங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக வேதனைப்படும் மணிகண்டன் துப்புரவுப்பணிக்கு / மலம் அள்ளுகிற பணிக்கு, கழிவுக் கிடங்கில் இறங்குகிற பணிக்கு எத்தனை கொங்கு வேளாளர்கள் தயார்? பட்டியல் கொடுங்கள்; உடனே பணியில் சேர்த்து விடுவோம்! கலெக்டர் வேலைக்கும், பேராசிரியர் வேலைக்கும், பொறியாளர், மருத்துவர் வேலைக்கும் இடஒதுக்கீடு கோருகிற உங்களைப் போன்றவர்கள், ஏன் மலம் அள்ளும் பணிக்கு மட்டும் இடஒதுக்கீடு கோர மறுக்கிறீர்கள்? மருகுகிறீர்கள்?
தமிழகத்தில் தலித்துகள் 22 விழுக்காடு உள்ளனர். அவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட்டிருப்பதோ 18 விழுக்காடு மட்டுமே. பழங்குடியின ருக்கு 1 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளுக்குச் சேரவேண்டியதோ இன்னும் 3 சதவிகிதம் ஆகும். ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள 18 சதவிகிதம் அனைத்துத் துறைகளிலும், அனைத்து நிலைப் பணியிடங்களிலும் முழுமையான இட ஒதுக்கீடு நிறைவு செய்யப்படவில்லை என்பதே தலித்துகளின் தொடர் கோரிக்கையாகவும், போராட்டமாகவும் இருக்கிறபோது, தலித் அல்லாத சாதிகளின் இடஒதுக்கீட்டை தலித்துகள் அபகரித்துக் கொள்வதாக அவர் சொல்வது, ஒருவேளை தலித்துகளுக்கு அரசுப்பணி அளிக்கப்படுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது என்ற சாதி வெறியின் உச்சமாக இருக்குமோ? மாறாக, அவர்களது கரும்புத் தோட்டங்களில் கரும்பு வெட்டும் தினக்கூலிகளாக பண்ணையடிக்க வேண்டும் என்பதுதானே அவரது வாதத்தின் ஆழமான பொருள்.
தமிழ்நாடு உங்களுக்கு மட்டுமோ, உங்களைப் போன்ற சாதி வெறியர்களுக்கு மட்டுமோ பட்டா போடப்பட்ட நாடல்ல. இது தலித்துகளின் தேசம். அவர்களின் ரத்தமும், சதையும், வியர்வையும் கசிந்து வளர்ந்த, வளர்க்கப்பட்ட தேசம் என்பதை உங்கள் கண்களுக்கு ஒளியூட்டியும், காதுகளில் ஓங்கி அறைந்தும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். தலித்துகளை பொருத்தவரை அரசுப் பணிக்கு மட்டும்தான் ஓரளவு வாய்ப்புள்ளது. தனியார் துறையில் தலித்துகள் என்றால் உதட்டைப் பிதுக்கும் முதலாளிகளும், நிறுவனங்களும்தான் இங்கு அதிகம். சில நிறுவனங்களில் தலித்துகளுக்கு வேலையளிக்கப்பட்டாலும் அது குறைந்த கூலியும், கொத்தடிமைக் கீழ் மட்டப் பணியுமாகத்தான் இருக்கும்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் தொகை 75% ஆனால் அவர்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பு நிறுவனங்களில் அளிக்கப்பட்டிருப்பதோ 27 சதவிகிதம் மட்டுமே. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதம், மிகப்பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 சதவிகிதம் தான். இந்த இடஒதுக்கீட்டின் அளவு நியாயமாக 75 சதவிகிதம் ஆக இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் நடைமுறையில் இருப்பதோ (ஆஇ 30/+ Mஆஇ 20%) 50% மட்டுமே. 75% உயர்த்துவதற்குத் தடையாக இருப்பது மணிகண்டன் பட்டியலிடும் பூர்வீக(?) பெரும்பான்மைத் தமிழ்ச்சாதிகளின் எஜமானர்களான பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனிய மனோபாவம் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான். தகுதி திறமை என்ற பெயரால் சிறுபான்மை பார்ப்பனர்கள் பெரும்பான்மை கல்வி, வேலைவாய்ப்புகளைக் கபளீகரம் செய்யக் கண்டு பிடித்த துருப்புச் சீட்டுத்தான் உச்ச அளவு இடஒதுக்கீடு 50% க்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்ற வரம்பு ஆகும். அரசியல் சட்டத்துக்கே முரணாக தீர்ப்பளிக்கும் இந்த நீதிமன்றங்களை எதிர்த்துப் போர் முழக்கமிடாமல் மணிகண்டன்களும், ராமதாசுகளும் தலித்துகளின் மேல் பாய்வது ஏன்?
IV
                இறுதியாக நில        உரிமை மீட்பு பற்றியது. தலித்துகள் கோரும் நில உரிமையோ, உரிமை மீட்புப் போராட்டமோ கொங்கு வேளாளர்களையோ, இதர சாதிகளுக்குச் சொந்தமான நிலங்களையோ குறித்ததல்ல. தலித்துகளுக்கு பிரிட்டிஷார் அளித்த பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக் கோருகிறோம். எங்களால் சம்பாதிக் கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அரசால் பறிக்கப்பட்ட, பறிக்க முயலும் நிலங்களை மீட்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் போராடுகிறோம். எங்கள் தேவைக்கும், வரலாற்று ரீதியாக வஞ்சிக்கப்பட்ட எங்கள் வாழ்வுரிமைக்கும் ஈடாக, தற்போதுள்ள அரசுக்குச் சொந்தமான தரிசுகள், காடுகள், மலைகள், கோயில்கள், மடங்கள் பெயரில் குவிந்து கிடக்கும் நிலங்களில் எங்களின் பங்கினைக் கோரிப் போராடுகிறோம். எங்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவை மத்திய, மாநில அரசுகளே தவிர மணிகண்டன்கள் அல்லவே. எங்கள் பங்குரிமை கொங்குவேளாளர்களால் அபகரிக்கப்பட்ட நிலங்களாக இருக்குமேயானால், அந்நிலங்களுக்காகவும் நாங்கள் போராடுவது எங்கள் நில உரிமைப் போராட்டத்தின் கடமைகளில் ஒன்றுதான்.
தமிழக மீனவர்களை அன்றாடம் தாக்கியும், கடத்தியும், சிறைப்பிடித்தும், 600 மீனவர்களை இதுவரை கொலையும் செய்துவிட்ட சிங்கள அரசுக்கு எதிராகவோ, இத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் ராஜபக்ஷேவுக்கு விருந்து, உபசாரம் நடத்திக் கொண்டும் இருக்கிற மத்திய அரசுக்கு எதிராகவோ உங்கள் ஆதிக்கச் சாதி வெறிக் கூட்டணியின் மயிராவது அசையுமா?
தமிழகப் பெரும்பான்மைச் சாதிகளிடமுள்ள சிறுதொழில், குறுதொழில், வேளாண்மை, வணிக நிறுவனங்களின் இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள இந்திய அரசின் மின்சாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவீர்களா? சில்லரை வணிகத்தை அழித்து, பன்னாட்டு மொத்த வணிக நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் மத்திய அரசை எதிர்த்து மரம்வெட்டி சாலை மறியல் செய்து, மத்திய / மாநில அரசுகளை நிலை குலைய வைப்பீர்களா?
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக உங்கள் நிலங்களைப் பறிக்கும் மத்திய மாநில ஆட்சியர்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் எதிர்த்துப் போராடுவீர்களா? தமிழ் மண்ணின் நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் வணிகச் சந்தையில் கொள்ளை லாபமடிக்கும் கொக்கோகோலா, பெப்சி கம்பெனிக்கு எதிராகப் போராடுவீர்களா? உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு பல கோடிகளை மானியமாகவும், கடன் தள்ளுபடியாகவும் வரி விலக்குகளாகவும் தந்து கொண்டிருக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு பஞ்சுமிட்டாய் மானியங்களைக் கூட வெட்டுவதைக் கண்டித்து வீதிக்கு வருவீர்களா?
இவை எதையுமே செய்யாத உங்கள் சாதிக் கூட்டணி என்ன செய்யும்? தலித்துகளின் நிலங்களை அபகரிக்கும்! வீடுகளைக் கொளுத்தும்! உழைப்பைச் சுரண்டும்! ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கூட்டணி போட்டு ஓட்டுப் பொறுக்கி கொள்ளையில் பங்கு போட்டுக் கொள்ளும்! இதைத்தானே மருத்துவர் ராமதாசு பாட்டாளி மக்கள் கட்சியாக சாதித்தார். அவர் தனியாகச் செய்ததை சாதிக் கூட்டணியில் இணைந்து அனைவரும் கொள்ளை லாபத்தில் பங்கு பெறப்போகிறீர்கள். அதற்குத்தானே தலித் அல்லாதோர் பேரவை! பெரும்பான்மை சாதிகளின் கூட்டணி! என்று பெயர் வைக்கிறீர்கள். "நேரடியாக, கடந்த காலங்களில் தனித்தனியாக ஊரையடித்து உலையில் போட்டுக் கொண்டவர்களின் சாதிக் கூட்டணி' என்று பெயர் வைப்பதுதானே சாலப் பொருத்தமாக இருக்கும்.
தருமபுரி கலவரத்தில் ஊடகங்களும், சனநாயகவாதிகளும், தலித் தலைவர்களும் சொல்வதில் 60 விழுக்காடு உண்மையில்லையாம்; எரியும் ஒரு குடிசையிலிருந்து இன்னொரு குடிசைக்கு படல்களை ஊடகமாக்கி தலித்துகள் தாங்களாகவே எரித்திருக்கிறார்கள். என்றுகொங்குவேளாளர் முன்னேற்றப் பேரவை மணிகண்டன் கூறுகிறார்! "தருமபுரியில் எரிக்கப்பட்டது 4 வீடுகள்தான். மீதி வீடுகள் தலித்துகள் தானாகவே எரித்துக் கொண்டது' சு மருத்துவர் ராமதாசு பேட்டி!
பாரம்பரியப் பெருமை பேசும் கொங்குவேளாளரின் பாரம்பரியம் என்னவென்பது இப்போது தானே எங்களுக்குப் புரிகிறது. தருமபுரியில் எரிக்கப்பட்டவை குடிசைகள் அல்ல; ஓட்டு வீடுகளும், பல லட்சங்கள் ரூபாய் மதிப்புள்ள மாடி வீடுகளும் ஆகும். அவதூறும், பொய்யும் திரித்துப் பேசுவது தான் உங்கள் பாரம்பரியம் என்பதை எண்ணி வெட்கப்படுகிறோம். இப்படிப்பட்ட சாதிப் பெருமிதங்களை கோடி கோடியாய் கொடுத்தாலும் பெறமாட்டார்கள் தலித்துகள். சத்தியம் தவறாத உத்தமர்கள் தலித்துகள்!
சரித்திர ரீதியாக உழைப்பாளிகள் தலித்துகள். பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களே தவிர, யாரையும் வஞ்சித்தவர்கள் அல்லர். நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டியில் தலித்துகளின் வீடுகளைத் திட்டமிட்டு கொள்ளையடித்து விட்டுப் பிறகு தீவைத்துச் சூறையாடியுள்ளது வன்னிய சாதிவெறிக் கூட்டம்! உள்ளே நுழைந்ததும் பீரோக்களை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் பெட்ரோல் குண்டுகளால் தீ வைத்து எரித்துள்ளனர்.
சைக்கிள்கள், இருசக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் வாடகைக்கு விடும் ஒலிபெருக்கி மய்யம் வைத்திருந்த தகரக் கொட்டகை, மரக் கட்டில்கள், மெத்தைகள், கதவுகள், நிலைகள் எரிக்கப்பட்டன. ஓடுகள், கண்ணாடிகள், பண்ட பாத்திரங்கள், ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டி, கிரைண்டர், மிக்சி, வீடியோ செட்டுகள், அனைத்தும் உடைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன. அங்கே நிகழ்த்தப்பட்ட கொள்ளையின், சேதப்படுத்தப்பட்ட பொருள்களின் மதிப்பு அரசு மதிப்பீட்டின்படியே 5 கோடி ரூபாய்க்கும் மேலே. அவற்றை முழுமையாகப் பட்டியலிட உகந்த இடம் இப்பகுதியல்ல என்பதால் ஒரு சிறு துளியளவே இங்கே கோடிட்டுக் காட்டியுள்ளேன். ஒருமுறை தருமபுரி நத்தம் காலனிக்கும், அண்ணாநகர், கொண்டம்பட்டிக்கும் நேரில் வந்து பாருங்கள்.
அதெப்படி கொங்குவேளாளரான மணிகண்டனும், வன்னியரான ராமதாசும் பொய் பேசுவதில் யாரை யார் மிஞ்சுவது என்று போட்டிபோடுகிறீர்கள்? இப்படியே பேச ஆரம்பித்தால் நந்தன் முதல் நத்தம் குடியிருப்பு வரை, வெண் மணி முதல், பாச்சாரம்பாளையம் வரை கொளுத்தப்பட்ட தலித்துகளின் வீடுகளையும், கொல்லப்பட்ட தலித்துகளின் உயிரையும் – தலித்துகள் தங்களுக்குத் தாங்களே கொளுத்திக் கொண்டும், தங்களைத் தாங்களே கொலை செய்து கொண்டும் தங்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொண்டதாகக் கூட உங்கள் இருவராலும் (மணிகண்டன், ராமதாசு) கூற முடியும்.
ராஜபக்ஷேவாக இருப்பதற்கு சிங்களவனாகத் தான் பிறக்க வேண்டுமென்பதில்லை; சாதித் தமிழனாக இருந்தாலே போதும்!