Wednesday, July 29, 2009

நிழல் தேடிய ஓட்டமும் ஆட்லெறி வந்து விழாத ஓரு இடமும்…டி.அருள் எழிலன்By இனி

நிழல் தேடிய ஓட்டமும் ஆட்லெறி வந்து விழாத ஓரு இடமும்…டி.அருள் எழிலன்By இனி • Jul 29th, 2009 • Category: அரசியல் - சமுகம் முள்ளிய வாய்க்காலில் இறுதிப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது யாழ் பல்கலைக்கழத்தின் விவசாய பீடத்திற்குச் சொந்தமான மனிக்ஃபாம் காடு. அதில் மரங்களை வெட்டி சமவெளி ஒன்றை உருவாக்க கூலி வேலைக்கு தமிழ் மக்களை அழைத்துச் சென்றது இராணுவம். ஏற்கனவே முகாம்களில் தஞ்சமடைந்த மக்களும் இவ்விதமான காடு வெட்டும் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அடர்த்தியான அந்த பருவ மழைக்காடுகள் வெட்டப்பட்டு சமப்படுத்தப்பட்டது . அடர்ந்த அந்தக் காடுகளை வெட்டியது எதற்காக என்றோ? யாருக்காக? என்றோ? அவர்களுத் தெரியவில்லை. ஆனால் மே மாதம் பதினெட்டாம் தேதி பெருந்தொகையான மக்கள் முள்ளியவாய்க்காலில் இருந்து வெளியேறி நந்திக்கடல் என்னும் நீரேரியைக் கடந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த போது அவர்களை அடைத்து வைக்க இலங்கை அரசு உருவாக்கிய கண்காணிப்பு முகாம்தான் புதிதாக வெட்டி உருவாக்கப்பட்ட மனிக்ஃபாம் முகாம்.இப்போது மனிக் முகாமில் மட்டும் 1,60,000 பேர் இருப்பதாக ஆதரமற்றச் செய்திகள் சொல்கின்றன. இந்த நூற்றாண்டின் மிக மோசமான துர்பாக்கியசாலிகள் அவர்களாகத்தான் இருப்பார்கள். இறுக்க வேயப்பட்ட வேலிகளுக்குள் மந்தையில் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் ஆடுகளைப் போல அவர்கள் முகாம்களுக்குள் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளுக்குள் பல நூறாய் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைக்குள் அம்மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். பாரம்பரீயமான அவர்களின் நிலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு மூடப்பட்ட கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகளிலும், மருத்துவமனைகளிலும், பல் நோக்கு கூட்டுறவு வளாகங்களிலும் கடுமையான கண்காணிப்பின் கீழ் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கம்பி வேலிகளுக்குள் அவர்கள் தாங்கள் உயிர் பிழைத்திருப்பதை நம்ப முடியாமல் சோர்வுடன் வாழ்வைக் கழிக்கிறார்கள். இனி எப்போது தங்களின் வீடுகளுக்குத் திரும்புவோம் என்கிற உத்திரவாதம் இல்லாமல் பெரும் சுமையைச் சுமக்கிறார்கள். குழந்தைகள் கம்பிவேலிகளைப் பிடித்தபடி யாராவது வருவார்களா? என்று எதிர் நோக்கிக் காத்திருக்கிறார்கள்.அந்த எதிர்பார்ப்பில் உண்ண உணவோ, அல்லது சில பிஸ்கெட் துண்டுகளையோ பெற்று விடும் ஏக்கம் அவர்களிடம் இருக்கிறது. பெரியவர்களோ தலை குனிந்து இராணுவச் சிப்பாய் முன்னால் மண்டியிட்டு நிற்கிறார்கள். பிடித்துச் செல்லப்பட்ட தங்களின் இளம் பிள்ளைகள் குறித்து எவ்விதமான கேள்விகள் கேட்கவும் திராணியற்றவர்களாய் வெறுமையால் நிரைந்திருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அந்த கொட்டகைக்குள் வரிசையில் நின்று உணவு வாங்க கூச்சப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கூச்சம் தேவையற்றது ஏனென்றால் அங்கு வரிசையில் நிற்கிற எல்லோருமே தங்கள் வாழ்வு இப்படியானது குறித்து தங்களைத் தாங்களே சபித்துக் கொண்டும் கழிவிரக்கத்தால் அழுது கொண்டும். இருக்கிறார்கள். இந்த ஹைடெக் யுகத்தில் வெளியுலகத் தொடர்புகள் ஏதுமற்று கூனிக் குறுகி முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அவர்கள் இந்த பேரினவாதப் பிசாசுகளிடம் சிக்கியவர்கள். கிளர்ச்சிக் குழுவின் பலவீனமான போர்த் தந்திரத்திற்குப் பலியானவர்கள்.அவர்கள் நம்மிடம் சொல்ல ஏராளமான கதைகள் உண்டு. போரின் கூரூரம் பற்றி, கிளிநொச்சியில் தொடங்கிய இடப்பெயர்வு நந்திக்கடலில் முடிந்து பற்றி.யாரிடம் வாழ முடியாது என்று வன்னியில் இருந்து விலகி இருந்தார்களோ அவர்களிடமே வந்து சரணடைந்த கொடுமை பற்றி. இன்று முகாம்களை பார்வையிடுவதற்காக வந்து சென்று படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டிருக்கும் ஐநாவின் சிறப்புத் தூதர் விஜய் நம்பியாருக்கோ அல்லது ஐநாவின் தலைவர் பான்கிமூனுக்கோ, அவர்கள் வழமையான ஒரு வாழ்வை வாழ்ந்தவர்கள் என்றோ செழிப்பான ஒரு நாகரீத்தின் விவாசாயக் குடிகளாக வாழ்ந்தவர்கள் என்பதோ தெரியாது. அவர்கள் தங்களின் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லவே விரும்புகிறார்கள். தன்னார்வக் குழுக்கள் கொடுக்கும் உணவை அருந்தவோ இராணுவத்திடம் கையேந்தி நிற்கவோ அவர்கள் விரும்பவில்லை. தமிழ் சமூகத்தின் இந்துப் பண்பாட்டின் எல்லா கூறுகளும் அவர்களிடமும் உண்டு. சாதி,ஆண்மரபு வழி சொத்துக்களை பேணுதல், தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல வரதட்சணை கொடுத்து மணம் முடித்தல் என்று எளிய சடங்குகளோடு வாழ்ந்தவர்கள் அவர்கள். சேமிப்புகளில் அதிக கவனம் செலுத்தினார்கள். போருக்கு, போராளி அமைப்புக்கு என்று தங்கள் பிள்ளைகளை அனுப்பி அவர்கள் ஏராளமான உயிர்களை விடுதலையில் பெயரில் இழந்திருந்தாலும் அம்மண்ணில் இராணுவ அதிகாரத்தின் கீழான ஒரு வாழ்வை விட மரியாதையான வாழ்வையே வாழ்ந்து வந்தார்கள். வன்னி நிலம் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என்ற மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய விவாசய நிலம்தான் வன்னி எனப்படுவது. வவுனியா, மன்னார் மாவட்டங்களின் 40% சதப் பகுதியையும் முல்லைத்தீவில் 90% சதப்பகுதியையும் கிளிநொச்சியின் முழு நிலப்பரப்பையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் புலிகள். இலங்கையின் வட பிராந்தியமான வன்னி பெருநிலத்தின் வடக்கை கிளிநொச்சியும், கிழக்கை மதவாச்சியும், கிழக்கு மேற்கை கடலாகவும் கொண்டு அமைந்த நிலம்தான் வன்னி நிலம். கடந்த முப்பதாண்டுகளாக விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகின் கீழ் ஆளப்பட்டு வந்தது. முப்பதாண்டுகால புலிகளின் நிர்வாக அலகின் கீழான வாழ்வு என்பது பல்வேறு சாதக பாதகங்களைக் கொண்டது. பெரும்பாலான விவசாயிகள் சொந்தமான காணிகளைக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். பாலாலியில் இருந்து வீசப்படும் ஆட்லெறி வந்து விழாத தொலைவில் வாழ்வது அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. அதுவே அவர்களின் பாதுகாப்பு ஆசையாகவும் இருந்தது. கிளிநொச்சியை எடுத்துக் கொண்டால் அங்கு இரணைமடுக்குளமும், விசுமடுக் குளமும் பிரதான விவசாய நீர் பயன்பாட்டுக் குளங்களாக இருக்கின்றன. மாங்குளத்தில் தொடங்கி இரணைமடு வரை பரந்து விரிந்திருக்கும் இரணைமடுக்குளம் அவர்களின் பிரதான விவசாய பயிர்செய்கைக்குப் பயன்படுகிறது. அது போல விசுவமடுக்குளமும் அவர்களின் தண்ணீர் தேவையை வருடம் முழுக்க பூர்த்தி செய்யும். இதனாலேயே கிளிநொச்சியும் அதனை அண்டிய வன்னிப் பிரதேசமும் மழையில்லாத காலங்களில் கூட முப்போக விளைச்சலைக் கண்டிருந்தது. அது போலவே முல்லைத் தீவிலும் முத்தையன்கட்டுக் குளம். தண்ணீர் முறிப்புக் குளம் போன்றவை விவாசார நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. பெரும் தென்னை வளத்தைக் கொண்ட முல்லைத் தீவு சணல் ஆலைத் தொழிலையும் பிரதானமாகக் கொண்டிருந்தது. உலகின் பல்லுயிர் வாழ்வுக்கு உகந்த சூழல் வன்னிப் பெருநிலத்தில் இருப்பதாக அறியமுடிகிறது. இலங்கை அரசும் கிளிநொச்சியின் 155&ம் கட்டையில் பட்டுப்பூச்சி சந்திப்பில் ஒரு வேளாண் ஆய்வு மையத்தை நடத்திவருகிறது. பருவமழை பொய்த்துப் போனாலும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு கண்மாய்களும் குளங்களும் அதன் மண் வளத்தை பாதுகாத்து வருகின்றன. பிரதானமாக விவசாயத்தையும் இன்னொரு பிரதானத் தொழிலாக (கடற்தொழில்) மீன் பிடித்தலையும் கொண்டிருந்தாலும் முப்பதாண்டுகளில் பல் வேறு பொருளாதாரத் தடைகளையும் கடந்த ஒரு சுகவாழ்வேனும் அவர்களுக்கு சாத்தியமாகியிருந்தது. பொருளாதார நெருக்கடிகள் வந்த ஆரம்பகாலத்தில் அவர்கள் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்காக அதிக விலையைக் கொடுத்தார்கள். விதை நெல்லுக்கு பற்றாக்குறை இல்லை ஆனால் விதைப்பதற்கும் உரத்திற்கும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டார்கள். அப்படியே விளைந்தாலும் நெல்லுக்கு விலையில்லாமல் அவர்கள் சந்தித்தது புதிய நெருக்கடி. 95, 96, காலப்பகுதியில் யாழ்குடா நாடு இராணுவ முற்றுகைக்குள்ளானது பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்து குடாநாட்டு மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தார்கள். செயலிழந்த இலங்கை அரசின் நிர்வாகம் போரின் காரணமாக புனரமைக்கப்படாத சாலைகள் என்று அன்றைக்கு போதுமான கட்டமைப்புகளை வன்னி கொண்டிருக்கவில்லை. அவர்களிடம் இருந்ததெல்லாம் பசுமையான நிலம். 1997&ல் ஜெயசிக்குரு போர் நடவடிக்கையின் போதும் மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தார்கள். பெருந்தொகையான மக்கள் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் போரை எதிர் கொண்ட போது நிர்வாக வசதியின்மை, போக்குவரத்து சிரமம். பொருள் உற்பத்தி என்று அன்றைய மக்கள் சந்தித்த நெருக்கடிகளில் இருந்தே புலிகளின் நிர்வாக அலகுகள் விரிவு படுத்தப்பட்டது. பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு உணவு உற்பத்தி நீண்ட கால சேமிப்பு என நிர்வாகத்தை தொலை நோக்கோடு விரிவு படுத்தியது அதன் பிறகுதான். மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் ரேஷன் சிஸ்டத்தைக் கட்டுப்படுத்தி மக்களுக்கும் தங்களுக்குமான விநியோகத்தைக் கொண்டு வந்ததும் புலிகள்தான். ஐம்பது கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல்லை சேரன் அரிசி ஆலை தொள்ளாயிரம் ரூபாயில் தொடங்கி ஆயிரம் ரூபாய் வரைக் கொடுத்து கொள்முதல் செய்து அதை தங்களின் அரிசி ஆலையில் அடித்து அரிசி ஆக்கி அதை ஏற்றுமதியும் செய்து கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகளின் மூலம் ரேஷன் சிஸ்டத்தையும் நடத்தி வந்திருக்கிறார்கள் புலிகள். வன்னிப் பகுதி மட்டுமல்லாமது இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் புலிகள் அரிசி ஏற்றுமதி செய்து வந்ததும் தெரிகிறது.பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து பல மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் திட்டம் இருந்தாலும் சர்வதேச அளவில் எழுந்த பொருளாதார நெருக்கடியும் புலிகளின் வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டமையும் அவர்களின் நெருக்கடியை ஒரு பக்கம் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது.ரணில் ஆட்சிக்கு வந்த சமாதானக் காலத்தில் வன்னி மக்கள் பல்வேறு அனுகூலங்களை அடைந்ததும் உண்மைதான் தாராளமாக அவர்களுக்கு உரங்கள் கிடைத்தது. ரேஷன் பொருட்களில் தட்டுப்பாடில்லை, தொலைத் தொடர்பு வசதிகளும் இருந்தது. இந்நிலையில் வெளி உலகின் அங்கீகாரம் இல்லாத புலிகளின் நிர்வாக அலகின் கீழ் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். வன்னி மக்கள் மீது ஏவப்பட்டு கொடூரமான போரை ராஜபட்சே நடத்தி முடித்திருந்தாலும். வெளிப்படையாக அல்லாமல் ரணிலின் ஆட்சிக்காலத்தில் ஏவப்பட்ட மறைமுகப் போர் ஒரு சுகமான சுமையாக மக்கள் மீது ஏவப்பட்டதும் தெரிகிறது. இக்காலத்தில் வன்னிக்கு ஏராளமான வசதிகள் வந்த போது தன்னார்வக் குழுக்கள் என்ற போர்வையில் உள்நாட்டு, வெளிநாட்டு உளவாளிகள் வன்னிக்குள் நீள அகலமாக ஊடுறுயதும் இப்போது தெரியவந்திருக்கிறது. வன்னிக்கு அப்பால் பாலாலி விமான தளத்தை பிரதான தங்கு தளமாக கொண்டியங்கும் இலங்கை இராணுவம் பலாலியில் இருந்து தங்களின் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்ததே தவிற வன்னிக்குள் கடந்த முப்பதாண்டுகளில் இலங்கை இராணுவம் நுழைந்ததில்லை. முப்பதாண்டுகளில் இராணுவத்துக்கு நேரடியாக முகம் கொடுக்காத வன்னி மக்கள் புலிகள் தங்களை பாதுகாப்பார்கள் என்றே கடைசி வரை நம்பினார்கள்.வன்னி மக்களின் தாக்குதல் தளமாக இருந்த பலாலி விமானத்தளத்தை புலிகள் பல முறை தாக்க முயர்சித்தார்கள் சில முறை கடுமையாக அதை தாக்கிச் சிதைத்திருக்கிறார்கள். அதன் விமான ஓடுபாதைகளை சேதப்படுத்தி பலாலியை செயல்பட முடியாதபடி ஆக்கியும் இருக்கிறார்கள். ஆனால் பலாலியை பல முறை புனரமைப்புச் செய்து கொடுத்தது இந்தியாதான். பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை இலங்கை இராணுவம் நவீன போர்க்கருவிகளையோ அதி சிறந்த காமாண்டோ படைகளையோ திறமையான புலனாய்வுக் கட்டமைப்பையோ கொண்டிருக்கவில்லை. இலங்கையின் புலனாய்வுப் பிரிவிவை விட புலிகளின் புலனாய்வு பத்தாண்டுகளுக்கு முன்னர் திறம்பட இருந்தது. ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் புலிகளின் உளவாளிகள் இருந்தார்கள். அரசு நிறுவனங்களிலும் அவர்கள் ஊடுறுவி இருந்தார்கள். தங்களின் கமாண்டோக்களின் திறமையான இராணுவ நடவடிக்கைகளாலும் தற்கொலை தாக்குதலாலும் அவர்களுக்கு ஒரு விதமான பாதுகாப்பு இருந்ததும் உண்மைதான். இவ்விதமாய் கடந்த முப்பதாண்டுகளாய் வன்னி மக்கள் இலங்கை இராணுவத்தை வன்னியில் கண்டதில்லை. கிடுகுவேலிக் காலாசாரத்திற்குள் வாழ்ந்த அந்த மக்கள்தான் இன்று ஒட்டு மொத்த ஈழப் போராட்டத்தின் சாட்சியங்களாய் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். கிழக்கிலோ, யாழ்பாணத்திலோ திறந்த வெளி சிறைக்குள் அன்றாடம் கண்காணிப்புக்குள் வாழும் மக்களை விட இவர்களின் நிலை மோசமானது காரணம் இவர்கள் புலிகளோடு வாழ்ந்தார்கள் . அரசை எதிர்த்து போராடுகிற கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வாழும் மக்களின் நிலை என்னவோ அதுதான் வன்னி மக்களின் நிலையாகவும் இருந்தது.அவர்களின் எளிமையான நிலத்தோடு தொடர்புடைய விவசாய வாழ்வு சிதைக்கப்பட்டு இன்று அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். வன்னி மீதானப் போர். இது ஒரு பெரும் ஓட்டம் நிற்க நிழல் வேண்டி ஓடத்துவங்கி ஒவ்வொன்றாய் இழந்து கடைசியில் படுகொலையாகி எஞ்சிய மக்கள் வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்ட கதை வேதனையானது. இன்று அவர்களின் கதை முடிவில்லாத கேள்வியற்ற நிர்கதியான மனிதர்களின் கதையாக மாறியிருக்கிறது. இரண்டு வருட காலமாக நீடித்த இந்தப் போரின் முடிவு இவ்விதமாக இருக்கும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. யாரேனும் ஒருவர் இந்த சண்டியரை தடுத்து தங்களை மீட்பார்கள் என்று நம்பியிருந்தார்கள். மலைக்காலத்தில் துவங்கி கோடை கொழுத்தும் கோடையில் முள்ளியவாய்க்காலில் அவர்களின் கதை முடிவதாக இருந்தது. சாட்சியமற்ற இனப்படுகொலையின் மௌனசாட்சிகளாக அவர்கள் இன்று முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். நான்காண்டுகால அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து போரின் தொடக்கம் கிழக்கை கைப்பற்றுவதிலும் மாவிலாறை கைப்பற்றுவதிலுமே இருந்தது. மாவிலாறை அண்டிய பகுதிகளில் புலிகளின் அரண்களை அவர்கள் கைப்பற்றிய போது, வடக்கின் மீதான போரை அறிவித்தார்கள். உண்மையில் மாவிலாறு ஒரு மறைமுக சமிக்ஞையாகவே இராணுவத்தால் புலிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் புலிகள் அதை எந்த அளவுக்கு சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. இராணுவ ரீதியாக இலங்கை இராணுவத்தை எதிர் கொள்ளும் வலும் தெம்பும் தங்களுக்கு இருப்பதாக புலிகள் நினைத்திருக்கக் கூடும். மாவிலாறு படையினரிடம் விழுந்ததை ஒட்டு வன்னி மக்கள் மீதான போர் 2007 மார்ச்சில் துவங்குகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நடந்த மிக மிக கொடூரமான இந்தப் போர் 2009& மே 18 முள்ளியவாய்க்காலில் முடிந்ததாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இலங்கையில் முப்பதாண்டுகால ஆயுதப் போராட்ட வரலாற்றில் மூன்றாண்டுகளையும் கடந்து நடந்த போர் இதுதான். பெருந்தைகையான மக்கள் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்டதும் இந்த மூன்று ஆண்டுகளில்தான். இத்தீவில் சிங்களர்களும் தமிழ் மக்களும் இனி எப்போதும் ஒன்று பட்டு சேர்ந்து வாழும் சாத்தியங்கள் அறுந்து விழுந்து அம்மக்கள் வெற்றி கொள்ளப்பட்டு அடிமைகளாக்கப்பட்டதும் இந்தப் போரில்தான். மாவிலாறில் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் மோதல் வெடித்த போது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அதில் தலையிட எத்தனித்தார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பை இலங்கை அரசு கொடுக்கவே இல்லை அதே நேரம் தங்களின் இராணுவத் தந்திரங்கள் பின்னடவை சந்திக்கிறது என்பதை புலிகளும் உணரவில்லை. அது பிடறியில் அல்ல முகத்தில் விழுந்த அடி. அதை புலிகள் அவதானித்திருந்தால் இந்தப் போரின் போக்கு மாறியிருக்கக் கூடும். பெரும் அழிவை தவிர்த்திருக்கலாம். மணலாற்றில் நடந்தது ஒரு எச்சரிக்கைதான். மன்னாரில் 2006 ஜூலை மாதவாக்கில் தீவீரமான போது மன்னாரின் மேற்கு அடம்பன், ஆண்டாங்குளம், பெரியமடு போன்ற கிராமங்களில் அதிகளவான இடப்பெயர்வுகள் நடந்தது, இருபதாயிரத்துக்கும் அதிகமாக மக்கள் அங்கிருந்து வெளியேறி கிளிநொச்சி நோக்கி நகர்ந்தார்கள். அனைத்து சமூக மக்களாலும் நேசிக்கப்படும் மடு மாதா தேவாலயம் இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட போது அங்கிருந்த மாதா சிலை ஜூலை மாதத்தில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. பெருநிலப்பரப்பு என்று வர்ணிக்கப்பட்ட வன்னி நிலம் சுருங்கத் தொடங்கியது மன்னாரில் இருந்துதான் மன்னாரில் இருந்து ஓடத் தொடங்கி ஏ 32 சாலைவழியாக பூநகரியை அடைந்து அங்கிருந்து பரந்தனுக்கு வந்து ஏ 35 சாலைவழியாக புதுக்குடியிருப்பை வந்தார்கள் ஒரு தொகுதி மக்கள். இன்னொரு தொகுதியினர் பல் வேறு கிராமப்பகுதிகளினூடாகவும் ஏ 9 சாலையைக் கடந்தும் புதுக்குடியிருப்பு சந்திப்புக்கு வந்தார்கள் அல்லது முல்லைத் தீவிற்குவந்தார்கள். போர் நடவடிக்கை ஈவிரக்கமற்ற முறையில் இருந்ததாலும் கிட்டத்தட்ட நான்கு பெரும் பிரிவுகளோடு ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக சிப்பாய்களைக் கொண்ட பல் வேறு பிரிவுகளால் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராலும் மக்கள் கடந்து சென்ன பகுதிகள் எல்லாம் இராணுவத்தினர் வசம் விழுந்தது. ஊடறுத்தோ உடைத்தோ எதிர் தாக்குதல் நடத்துவதற்கான சந்தர்ப்பங்களே புலிகளுக்கு வழங்கப்பட வில்லை. அவர்கள் ஒரு தற்காப்பு யுத்தம் ஒன்றை நடத்துகிற சூழலுக்குள் நிரந்தரமாகவே தள்ளப்பட்டார்கள். எதிர்தாக்குதல் நடத்தவோ பல முனைத் தாக்குதல் நடத்தவோ புலிகளுக்கு வாய்ப்பும் வழங்கப்பட வில்லை. அவர்களை ஒன்று சேரவிடாமல் ஒரு படுபயங்கரமான போர் நெறியை இலங்கை இராணுவம் பயன்படுத்தியது. இப்போதைய போரில் புலிகள் சந்திப்பது இதுவரை அவர்கள் சந்திக்காத இலங்கை இராணுவத்தை . முந்தைய காலப் போரில் விழுந்த இராணுவத்தினப் பார்த்ததும் ஏனையவர்கள் ஓட்டிப் போகவில்லை. அவர்கள் யுத்த வெறி ஊட்டப்பட்ட சிப்பாய்களாக இருந்தார்கள்.மாதாந்திர ஊதியம் அரசு வேலை போதிய பயிர்ச்சி இன்மை இள வயது என்பதை எல்லாம் தாண்டி அவர்களுக்கும் சிங்களத் தேசீய வெறி ஊட்டப்பட்டிருந்தது. லால்கர் அனுபவம் விளைவு புலிகள் பின்வாங்கினார்கள் பின்வாங்கினார்கள் பின்வாங்கிக் கொண்டே இருந்தார்கள். மக்களும் அவர்களுடனே சென்றார்கள். அல்லது அழைத்துச் செல்லப்பட்டார்கள். மக்கள் இந்தப் போரின் கொடூரத் தன்மையை கிளிநொச்சி வரை உணரவில்லை. புலிகள் பெரும் தவறைச் செய்து இராணுவ ரீதியாகவோ அல்லது இன்னொரு நாட்டு ஒன்று தலையிட்டு போரை நிறுத்தும் என்றோ நம்பிக் கொண்டிருந்தார்கள். புலிகள் அமெரிக்காவை நம்பிக் கொண்டிருந்ததும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் மூலம் காங்கிரஸ் அரசு அல்லாமல் வேறு ஒரு அரசு அமையுமானால் அது போரை நிறுத்த வழி பிறக்கும் என்றோ நம்பியிருக்கிறார்கள். ஒரு போராளி அமைப்பு தனது இராணுவ பலத்தையோ, மக்களையோ, அரசியலையோ நம்பியதைக் காட்டிலும் ஏகாதிபத்தியங்களையும் பிராந்திய வல்லரசுகளையும் நம்பியிருப்பது எவளவு துர்பாக்கிய நிலை. இந்த இடத்தில் நாம் சரியாகச் சுட்டிக்காட்டினால் லால்கரில் மாவோயிஸ்டுகளைச் சொல்லலாம். கடந்த எட்டு மாதத்திற்கும் மேலாக மேற்குவங்க அரசிடம் இருந்து மாவோயிஸ்டுகள் விடுவித்து தங்களின் கட்டுக்குள் வைத்திருந்த லால்கரை ஒட்டிய பகுதியை மீட்கும் நடவடிக்கையை இந்திய இராணுவம் முன்னெடுத்த போது அவர்கள் இன்னொரு சக்தியின் தலையீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. நிலங்களை விட்டு விட்டு மக்களையும் விட்டு விட்டு ஜார்கண்டுக்கு நகர்ந்து விட்டார்கள். பத்து பொது மக்களின் மரணங்களுடன் லால்கரை மீட்டிருக்கிறது இந்திய இராணுவம். ஆனால் இந்த மீட்பு நடவடிக்கையின் போதும் அதற்குப் பின்னரும் மேற்குவங்கச் சூழலைப் பார்க்கும் போது அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மாவோயிஸ்டுகளுக்காகப் போராடுகிறார்கள், பழங்குடிகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். மாவோயிஸ்டுகளோ ஜார்கண்டில் இந்த படியே போராட்டம் தொடரும் என்கிறார்கள். பழங்குடிகளோ மிக வலுவான முறையில் மாவோயிஸ்டுகளை ஆதரித்து நிற்கிறார்கள். இந்தப் போர் மக்களை பலவீனமாக்க வில்லை மாறாக ஒரு வர்க்கப் போரில் மக்களின் பங்களிப்பை முன்னிலும் பார்க்க உறுதிப்படுத்தியிருக்கிறது என்றே தோன்றுகிறது. இராணுவ ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ மாவோயிஸ்டுகளை இந்திய அரசு வெல்ல நீண்ட போராட்டம் ஒன்றை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் போது. நடந்து முடிந்த வன்னிப் போரில் புலிகள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். என்பதோடு மக்களும் புலிகளிடமிருந்து மனம் வேறு பட்டி நிற்பதைக் காணமுடிகிறது. இன்று அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட ஒரு ஆயுதப் போராட்டத்தின் முடிவின் ஒரு பயங்கரவாத அரசின் கொடூர இரத்த வெறிக்கு பலியாகி நிற்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஜனவரி முதலாம் நாள் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்த அன்று சிங்கள இராணுவத்தினர் கிளிநொச்சிக்குள் நுழைந்து சிங்கக் கொடியை ஏற்றிய போது அந்த நகரமும் அதை அண்டிய கிராமங்களும் துடைத்து எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அப்படியானால் அவர்கள் திரும்பி வருகிற உத்தேசத்தோடு முல்லைத் தீவு நோக்கி சென்றிருக்கிறார்கள். முல்லைத்தீவும் புதுக்குடியிருப்பும் விழுந்த பிறகு செல்வதற்கு கடலைத் தவிற வேறு இடங்கள் ஏதும் இல்லாத சூழலில் முள்ளியவாய்க்காலில் இலங்கை இராணுவத்தின் பொறி வளைக்குள் சிக்கிக் கொண்டார்கள். பெப்ரவரி மாதவாக்கில் புதுக்குடியிருப்புக்குப் போன ஒரு கிளிநொச்சிப் பெண்ணின் வாக்குமூலம் இப்படியாக இருந்தது . ”நாங்கள் வன்னிப் பிரதேசத்து மக்கள். முதலில் எங்களையும் தமிழீழத்தின் ஏனையப் பகுதி மக்களுக்குமான வித்தியாசங்கள் உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே இங்கே நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையின் கோரத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் போரின் ஆரம்ப காலம் தொட்டே வன்னிப் பகுதிதான் அதன் இதயப்பகுதியாக இருந்து வந்திருக்கிறது. வடக்கு,கிழக்கின் எல்லாத் தமிழ் குடும்பங்களும் ஈழ விடுதலைப் போரில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தாலும் அங்குள்ள மக்கள் எல்லாக் காலத்திலும் அரசப் படைகளின் கண்காணிப்புக்குள்ளேயே வாழ நேர்ந்து வந்திருக்கிறது. ஆனால் வன்னி மக்களை மட்டும் புலிகளிடமிருந்து வேறு படுத்திப் பார்த்து விட முடியாது. ஒவ்வொரு வன்னிக் குடும்பமும் ஒரு புலிக்குடும்பமே. நாங்கள் யாரும் புலியாக பிறந்ததில்லை. புலியாக வேண்டும் என வளர்ந்ததும் இல்லை. இன்று தம்பியும், நானும் விரும்பியா சாகிறோம். அல்லது வேண்டி விரும்பி மரணத்தை நேசிக்கிறோமா? இல்லை நாங்கள் வாழ்வதற்காகவே போராடுகிறோம். வாழ்வதற்கான உரிமையை இந்திய அரசு உங்களுக்கு எப்படி வழங்கியிருக்கிறதோ அதே உரிமை எனக்கும் என் குழந்தைக்கும் உண்டு. ஆனால் ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் அதிலும் குறிப்பாக வன்னித் தமிழனுக்கும் வாழ்வதற்கான உரிமையை மறுத்து சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத் தூவி இந்தியாவின் ஆதரவோடு கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் வேகமாக ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது சிங்களப் பேரினவாதம். கிளிநொச்சியை சிங்கள ராணுவம் கைப்பற்றிய போது நாங்கள் முல்லைத்தீவிற்குப் போனோம். எங்கள் உடமைகளையும், கால்நடைகளையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனோம். புலிகள் எங்களை முல்லைத் தீவிற்கு கடத்திச் சென்று விட்டதாக சிங்கள ராணுவம் சொன்னது. ஒரு வேளை புலிகளோடு நாங்கள் செல்லாமல் கிளிநொச்சியில் ராணுவத்தை வரவேற்றிருந்தால் இன்றைக்கு வவுனியாவிலும் மன்னாரிலும் என்ன நடக்கிறதோ அது எங்களின் தாய்வீடான கிளிநொச்சியிலேயே நடந்திருக்கும். நாங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயரத் துவங்கியது ஒரு மழைக்காலத்தில். சிங்களப் படைகளின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகள் சேரும் சகதியுமான சதுப்பு நிலத்திற்குள் சிக்கி கிட்டத்தட்ட பத்து நாட்கள் தடை பட்டபோது நாங்கள். பரந்தன் முல்லைத்தீவு ஏ&35 நெடுஞ்சாலையோரமாக குடும்பம் குடும்பாக இடம்பெயர்ந்தோம் ஏற்கனவே நாங்கள் கடும் யுத்த சூனியத்துக்குள் சிக்கியிருந்த படியால் இடப்பெயர்வுக் காலத்தில் உண்ண போதுமான உணவு எங்கள் யாரிடமும் இருக்க வில்லை. ஆனாலும் வழிநெடுகிலும் நாங்கள் நம்பிக்கையை மட்டும் இழக்க வில்லை. தருமபுரம், விசுவமடு, உடையார்க்கட்டு, புதுக்குடியிருப்பு என ஒவ்வொரு கிராமமாக போனோம். ஒவ்வொரு கிராமத்தையும் சிங்கள ராணுவம் ஆக்ரமித்தது. எந்த இடத்தை பிடிக்கப் போகிறார்களோ அந்த இடத்தை பாதுகாப்பு வலயமாக( sணீயீtஹ் க்ஷ்ஷீஸீமீ) அறிவிக்கிறது சிங்கள ராணுவம். நாங்களும் பாதுகாப்பு வலயமாக இருக்கிறதே என அங்கு செல்கிறோம். உண்மையில் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கை அரசு உருவாக்குகிற இடங்களுக்குள் செல்கிற மக்களின் கதி என்ன தெரியுமா? நரிவளைக்குள் போய் சிக்கிக் கொண்ட முயல்களுக்கு என்ன கதி நேருமோ அதே கதிதான் இன்று எங்களுக்கும் நேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு இடமாக ஓடினோம். ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் ஒதுங்கினோம். கிடைத்ததை உண்டோம். வள்ளிப்புனம், தேவிபுரத்திற்குப் போனோம்,( இவை இரண்டும் மக்கள் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடங்கள்) அங்கிருந்தும் கடைசியில் ஓட வேண்டியதாயிற்று. ஓடி ஓடி இப்போது நாங்கள் வந்து நிற்பது முல்லித்தீவின் கடைசி கடலோர சிறு நகரமான முள்ளியவாய்க்காலில், நாங்கள் இந்த ந்ந்திக்கடலுக்கு அருகில் வந்து சேர்ந்த போது கிளிநொச்சியிலிருந்து நாங்கள் எடுத்து வந்த எதுவும் எங்களுடன் இல்லை. கால்நடைகள், தார்ப்பாய்கள், என எதுவும் இல்லை அது மட்டுமல்ல ஒரு குடும்பத்தில் இன்னும் எஞ்சியிருப்பது ஒரு சில உயிர்கள் மட்டுமே.கண்ணெதிரில் குழந்தையை துளைத்துச் சாய்க்கிறது குண்டு. வீதியில் சாகிற இளையவளைத் தூக்கச் சென்றால் இருக்கிற இரண்டு குழந்தைகளையும் இழக்க நேரிடலாம் அதனால் நாங்கள் எங்கள் குழந்தைகளின் பிணங்களை அப்படியே விடுகிறோம். முல்லைத்தீவு முழுக்க வீதியோரம் புதைக்க ஆளில்லாமல் சிதறிக்கிடக்கிறது ஆயிரக்கணக்கான உடல்கள். அத்தனையும் பாதுகாப்பு வலயத்திற்குள் வீசப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளால் எரிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள், தமிழர்கள் என்பதால் எரிந்து சாம்பாகிக் கிடக்கிறார்கள். இப்போது நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் உறவென்று சொல்லிக் கொள்ளவோ,தஞ்சமடையவோ எங்களுக்கென்று ஒரு இடமில்லை. கடைசியில் எதிரியிடமே சரணடைந்தால் என்ன என்று விசுவமடுவில் நாங்கள் கைகளைத் தூக்கினோம். யாழ்பாணத்தையும். மட்டக்களப்பையும் சிங்கள ராணுவம் கைப்பற்றிய போது அங்குள்ள மக்களை எப்படி அவரவர் இல்லத்தில் குடியமர்த்தி மொத்தமாக அந்தப் பிரதேசங்களை திறந்த வெளிச்சிறைச்சாலையாக்கினார்களோ அப்படி எங்களையும் எங்கள் பூர்வீக நகரமான கிளிநொச்சிக்கு அனுப்புவார்கள் என நம்பினோம். ஆனால் நாங்கள் எங்கு சரணடைந்தோமோ அந்த இடத்திலேயே எங்கள் பிள்ளைகள் இருவேறாக பிரிக்கப்பட்டார்கள். குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், என வடிகட்டினார்கள் அதில் குழந்தைகளையும், முதியவர்களையும் எங்கோ கொண்டு சென்றார்கள். இளைஞர்களையும் இளம் பெண்களையும் சிறப்பு முகாம் என அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவிற்கு கொண்டு சென்றார்கள். எத்தனை பேர் சரணடைந்தார்கள் என்றோ அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றோ எந்த விபரமும் யாருக்கும் தெரியாது. கிளிநொச்சியில் ஒரு குடும்பம் கூட குடியமர்த்தப்படவில்லை. ஆனால் வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். பெண்களை அவர்கள் அபகரிக்கிறார்கள் எங்களுக்கு மாற்று உடைகள் இல்லை உள்ளாடைகள் இல்லை ஏனைய ஆண்களுக்கு முன்னால் சகஜமாக நடக்கக் கூட கூச்சமான ஒரு வாழ்வையே நாங்கள் வாழ்கிறோம். எங்களின் ஆடைகள் எல்லாம் ரத்தக் கறைகள். இப்போது என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. புலிகளும் அழிகிறார்கள் நாங்களும் அழிகிறோம்.” என்று நீண்டு செல்கிறது அந்த வாக்குமூலம். இன்றைக்கு சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது இந்த வாக்குமூலம் மிகைப்படுத்தப்பட ஒன்றாக தெரியவில்லை. சமாதானக் காலத்தில் அங்கு ஏராளமான தன்னார்வக்குழுக்கள் பணி செய்து வந்தார்கள். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கமும் தன்னார்வக்குழுக்களும் அங்கு பல் வேறு பணிகளை ஆற்றி வந்தார்கள். சமாதானத்திற்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்ட பிறகு முதன் முதலாக அங்கிருந்து யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் வெளியேறினார்கள். ஐநாவின் மனித உரிமை கண்காணிப்பகமும் அங்கிருந்து வெளியேறியது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை போர் பகுதிக்குள் இராணுவம் அனுமதிக்க வில்லை இருந்தவர்களையும் வெளியேற்ற நெருக்கடிகளை உருவாக்கி வந்தது. சில மருத்துவர்கள், சர்வதேசப் பணியாளர்களும் மக்களோடு மக்களாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்னும் சூழலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி தமிழக உறுப்பினர்கள் போர் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது வெறும் எழுபதாயிரம் மக்களே போர் பகுதிக்குள் சிக்கியிருப்பதாகச் சொன்னார். பிரணாப் இலங்கையிடம் என்ன தகவலைக் கேட்டாரோ அந்த தகவலை மறு திருத்தமோ விசாரணையோ இன்றி அப்படியே இந்திய மக்களுக்குச் சொன்னார். இரண்டு லட்சம் மக்கள் போர்ப் பகுதிக்குள் சிக்கியிருக்க எழுபதாயிரம் பேருக்கு மட்டுமே போதுமான உணவு நீண்ட இடைவெளி விட்டு அனுப்பப் பட்டது. அது சுத்தமாக அவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் பட்டினிச்சாவுகள் மிக அதிக அளவில் அங்கு நடந்திருக்கிறது. குழந்தைகள் ஊட்டச் சத்தில்லாமல் இறந்தது போக முதியோர்களும் கடும் மன நெருக்கடியிலும் குண்டுக் காயங்களிகும் மடிந்தார்கள் இன்றும் மடிந்து கொண்டிருக்கிறார்கள். மே 14&ஆம் தேதி வரை புதுமாத்தளன் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. நான் அன்றாடம் நள்ளிரவில் தொலைபேசி செய்து மக்களின் நிலை குறித்து விசாரித்து வந்தேன். அங்குள்ள தாதிகள் சிலரிடமும் பிரதான மருத்துவப் பணியாளர்கள் சிலரிடம் என்னால் கடைசி நேர தொடர்புகள் பேணப்பட்டிருந்தது அனால் 16&ஆம் தேதி நான் மருத்துவமனை எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அந்த எண் செயலிழந்திருந்தது. அதற்கு முன்னர் பேசிய போதெல்லாம் நாங்கள் செயலிழந்து கொண்டிருக்கிறோம். எங்களின் மருத்துவர்கள் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் காயமடைந்தவர்களை இங்கு கொண்டு வரவோ அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவோ எங்களால் இயலவில்லை கடும் எரிகணைத் தாக்குதலில் நாங்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம். ஏதாவது அற்புதங்கள் நடந்தால் மட்டுமே மீதியிருக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என்று அங்கே கடைசியாக பணியிலிருந்த ஒரு தாதிப் பெண் என்னிடம் குறிப்பிட்டார். அவர் சொன்னக் கணக்கில் பிணங்கள் மட்டும் பல ஆயிரங்களைத் தாண்டி இருந்தது. அங்கிருந்து கடைசியாக வந்த புகைப்படங்களும் கனரக ஆயுதங்களின் பிரயோகிப்பட்டதை உறுதிப்படுத்தின.ஆனால் இந்தியாவும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் அங்கே கனகர ஆயுதங்கள் பயன்படுத்த வில்லை என்று தொடர்ந்து சொல்லி வந்தனர். கலைஞர் தன் உண்ணாவிரதத்தை ஒட்டி அந்த கோடூரமான இறுதிப் போரை இப்படி வர்ணித்தார் ” மழை விட்டும் தூரல் இன்னும் விட வில்லை ” என்றார். கிளிநொச்சியில் இருந்து தங்கள் வீட்டின் நிலைகளைக் கூட பெயர்த்துக் கொண்டு டிராக்டர்களிலும் மாட்டு வண்டிகலிலும் இரு சக்கர வாகனங்களிலுமாக குழந்தைகள், பெண்கள், ஆண்கள், அவர்களுக்கான உடுதுணிகள், குடைகள், சமையல் பாத்திரங்கள், உழவு இயந்திரங்கள், நகைகள், பணம், கால்நடைகள், கோழிகள், நாய்கள் என வீட்டுப் பிராணிகளையும் எடுத்துக் கொண்டு சென்றவர்கள் இப்போது உடுத்த துணியோடு எஞ்சிய தங்களின் உறவுகளைச் சுமந்தபடி இராணுவ முகாமகளை நோக்கி வந்தார்கள். அவர்கள் நந்திக்கடலைக் கடக்க வேண்டியிருந்தது . அது ஒரு வேதனையாக திரும்புதல். முல்லைத்தீவு கடலில் தரையிரங்கும் முயர்ச்சியின் போது பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டு கடைசியாக அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலையமும் உடைக்கப்பட்டபோது புலிகள் சில நூறு அடிகளுக்குள் குறுகிய எல்லைக்குள் முடக்கப்பட்டார்கள் மக்கள் உடைக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்திலிருந்து வெளியேறத் துவங்கினார்கள். குற்றுயிரும் குலையிறுமாக அவர்கள் நந்திக்கடலை கடக்க வேண்டியிருந்தது. வயது முதிர்ந்த முதியவர்களை நந்திக்கடலில் வழியே மீட்டு வர முடியாத சூழலில் பெரும் வேதனையோடு தாய்மார்கள் குழந்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களை கைவிட்டபடியே கடந்து வந்தார்கள். பலரும் தங்களின் முதிய தாய்களை இவ்விதமாய் வேதனையோடு கைவிட்டதை நினைவு கூர்கிறார்கள். அவர்கள் இப்போது என்ன ஆனார்கள் என்ற தகவல் யாரிடமும் இல்லை. வருகிற வழியில் நந்திக்கடலில் ஏராளமான பிணங்கள் மிதந்ததையும் பலர் அந்த நீரேரியிலேயே விழுந்து மடிந்ததையும் காயங்களுக்கு மருந்தில்லாத சூழலில் வருகிற வழியிலேயே நடக்க முடியாமல் காவிச் செல்வதற்கான கழிகள் கூட இல்லாமல் பலரும் மடிந்திருக்கிறார்கள். பசி, காயம், மனநலப்பாதிப்பு, உடல் உபாதைகள், நீண்ட கால ஓட்டம் என எல்லாமே அவர்களை நிர்கதியாய் கொண்டு வந்து சிங்களச் சிப்பாய்களிடம் நிறுத்தியது. இன்று அவர்கள் முகாம்களுக்குள்.

Friday, July 17, 2009

பெரியாரைப் பிழையாமை - கோவி. லெனின்

கருத்தியல் ரீதியாக எதையேனும் அளக்கவேண்டும் என்றால் பெரியார் எனும் அளவுகோலை கையில் எடுத்துக் கொள்கிறார்கள் தமிழகத்தின் அறிவாளிகள். பெரியார் எனும் அளவுகோல் தமிழகப் பரப்பை சரியாக அளவிடக்கூடியது. அதனை இவர்கள் தங்கள் வசதிக்கேற்ப நீட்டவும் சுருக்கவும் செய்து, தாங்கள் அளப்பதே 'அளப்பு' என நிறுவ முயற்சிக்கிறார்கள். அங்கே இங்கே என அளவிட்டுவிட்டு கடைசியாக குஷ்புவின் 'கற்பை' ஆழ, அகலத்தில் அளவிடவும் பெரியார் எனும் அளவுகோலையே கையில் எடுத்தார்கள். கற்பு பற்றி பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? குடும்பம் பற்றி பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? கணவன்-மனைவி உறவு பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? என 'திடுக்' கேள்விகளைக் கேட்கிறார்கள் புதுப் பெரியாரிஸ்ட்டுகளும் போலி முற்போக்காளர்களும். அவர்கள் அளப்பதை பார்க்கும்போது, மழலையர் பள்ளிக்குச் சென்று திரும்பிய குழந்தை தனது பெற்றோரைப் பார்த்து உனக்கு ஆனா, ஆவன்னா தெரியுமா? ஏ,பி,சி,டி தெரியுமா? என்று கேட்குமே, அதுபோன்ற குழந்தைத்தனம்தான் தெரிகிறது. பெரியார் எப்போது எதைப் பற்றிச் சொன்னார் என்பதை அப்போதைய காலகட்டத்திலேயே அறிந்தவர்களுக்குக்கூட இந்த புதுப் பெரியார் குழந்தைகள் பாடம் நடத்துவது நகைச்சுவை மிக்கதாக இருக்கிறது. திடுமென பெரியாரைப் படித்துவிட்டு, அது தெரியுமா இது தெரியுமா என்று கேட்பதன் மூலம் தங்கள் கையிருப்பு இன்னதென அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். அது மட்டுமின்றி, நடிகைகளின் 'கற்பு'க்கு கவசமாக பெரியாரை முன்னிறுத்தும் பேதைமைச் செயலையும் மேற்கொள்கிறார்கள்.ஆணின் ஒழுக்கநெறிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெண்கள் மட்டுமே 'விதிக்கப்பட்ட' ஒழுக்கநெறிகளுடன் வாழவேண்டும் என்றிருந்த சமூகத்தின்மீது சம்மட்டி அடி கொடுத்தவர் பெரியார். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் பெண்களுக்கும் அந்த சுதந்திரம் வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். இப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன? ஆண் சரியாக இருந்தால் பெண்ணும் சரியாக இருப்பாள் என்பதுதான். அவன் எல்லை மீறினால், அவளும் மீறுவாள என்பதுதான். இதைத்தான் தனக்கேயுரிய துணிவுடனும் வெளிப்படையுடனும், 'கணவனைத் தவிர மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள பெண்களுக்கு உரிமை வேண்டும்' என்பதாகப் பெரியார் சொன்னார். பெண் தன்னைத்தானே தீர்மானித்துக் கொள்ளும் திறனுடையவளாக மாறவேண்டும் என்பதுதான் தன் உட்பொருள். அப்போதுதான் ஆணைப் போல் பெண்ணும் வலிமைமிக்க பாலினமாக சமுதாயத்தில் விளங்க முடியும் என்பது பெரியாரின் முடிவு. பெண்ணுக்கு வகுக்கப்பட்ட ஒழுக்கநெறி ஆணுக்கு ஏன் வகுக்கப்படவில்லை? பெண்ணுக்கு மட்டும் 'கற்பு' எதற்கு? என்பதே அவரது கேள்வி. ஒரு சமுதாயம் ஒழுக்கம் மிக்கதாக இருக்கவேண்டுமென்றால் இருபாலினத்திற்கும் அது பொதுவானதாகத்தானே இருக்கவேண்டும் என அவர் கேட்டார். அதற்காக, அவர் ஒழுக்கமே வேண்டாம் என்றும் பெண்கள் எல்லோரும் திருமணத்திற்கு முன்பு கட்டாயம் உறவு வைத்துக்கொண்டே ஆக வேண்டும் என்றா சொன்னார். 'விதிக்கப்பட்ட' ஒழுக்கத்தைத்தான் அவர் எதிர்த்தாரே தவிர, சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்துபோகவேண்டும் சீரழிய வேண்டும் என்று அவர் எங்கே சொன்னார்?பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் பரவாயில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் என்று உரக்கச் சொன்னவர்தானே பெரியார். ஒழுக்கத்திற்கு விளக்கம் கொடுக்க முன்வந்திருக்கும் புதுப் பெரியாரிஸ்ட்டுகள் இவையெல்லாம் பெரியாரின் வார்த்தைகளே இல்லை என்று சொல்லிவிடுவார்களோ!கடவுள், பக்தி, மூடநம்பிக்கை இவையெல்லாவற்றையும் தகர்த்தவர் பெரியார். அவர்தானே, அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழைய அனுமதி வேண்டும் என்பதற்காகப் போராடினார்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதன் மூலமே சூத்திரன் என்ற இழிவைத் துடைத்தெறிய முடியும் எனத் தன் இறுதி மூச்சடங்கும் வரை குரல் கொடுத்தார். கடவுள்தான் எல்லா முன்னேற்றங்களுக்கும் தடை என்றவர், அந்தக் கடவுளை வழிபாடு செய்யும் உரிமை எல்லோருக்கும் வேண்டும் என்று கோரினார் என்றால், அதன் பொருள் என்ன? கடவுள் வழிபாடு என்பது தனது கொள்கைக்கு மாறுபாடான செயல் என்றபோதும் அதனை மேற்கொள்கிறவர்களில் பெரும்பகுதியினரை ஒதுக்கிவைக்கும் ஏற்றத்தாழ்வினை சமுதாயத்தில் அனுமதிக்கமுடியாது என்பதுதான் அவரது நிலைப்பாடு. கடவுள் வழிபாடு கொண்டவர்களின் உரிமைகளை குறிப்பிட்ட சிலர் பறிக்கக்கூடாது என்பதற்காகவே அவர் போராடினார். கற்பு விஷயமும் அப்படித்தானே! அதன் மீது நம்பிக்கை கொண்டு அதன்படி வாழ்கின்ற பெண்கள் மிகுந்திருக்கும் தமிழகத்தில், மேட்டுக்குடி பெண்களில் ஒரு சிலரின் பழக்கவழக்கத்தை மட்டும் வைத்து ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொத்தாம்பொதுவான கருத்தை திணிப்பது எப்படி நியாயமாகும்?கற்பு குறித்து பேச ஒரு பெண்ணுக்கு உரிமையில்லையா என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் சிலர். பெண் எது பற்றி பேசவும் உரிமையுண்டு. படைப்பாற்றல் மிக்க பெண்கள் தங்கள் உடற்கூறுகளை முன்னிலைப்படுத்திப் பேசுகிறார்கள். அது அவர்களின் உரிமை. அதுபோல கற்பு பற்றி பேசியவரும் தன்னை முன்னிலைப்படுத்தி முழு உண்மையையும் பேசியிருந்தால் அவரது உரிமையை மட்டுமல்ல, அதில் உள்ள உண்மையை துணிச்சலாக வெளிப்படுத்தியதற்கு பாராட்டலாம். அவரோ தனது பார்வையை ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தின்மீதும் திணிக்கும் வன்முறையை மேற்கொண்டார். அதன் எதிர்விளைவுகளை கண்டு பயங்கொண்டார். கண்ணீர்விட்டார். மன்னிப்பு கோரினார். தமிழகத்தைவிட்டுவிட்டு நான் எங்கே போவேன் என்று கதறினார். அவர் தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்பதில் நமக்கும் உடன்பாடில்லை. ஆனால், பெரியாரைத் திடுமென முன்னிறுத்தும் அறிவு மேதைகள், "அவரையா வெளியேறச் சொல்வது? கோகோ கோலாவையும் பெப்சியையும்தானே வெளியேறச் சொல்ல வேண்டும்" என்கிறார்கள். கோக்கும் பெப்சியும் வெளியேற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், பெரியார் எனும் அளவுகோலை கையில் எடுத்தவர்கள், அவரது 'மரண சாசனம்' எனப்படும் கடைசிப் பேருரையில்கூட வடவர் ஆதிக்கம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதை வசதியாக மறைத்துவிட்டார்களே அது ஏன்? "உன்மொழி வேறு. என் மொழி வேறு. உன்உடை வேறு, என் உடை வேறு. உன் உணவு வேறு, என் உணவு வேறு. உன் பழக்க வழக்கம் வேறு. உனக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீ உன் நாட்டுக்குப் போ" என்றுதானே பெரியார் சொன்னார். இதை ஏன் எந்த அறிவு மேதையும் குறிப்பிடவில்லை. பெரியார் எனும் அளவுகோலை தங்கள் வசதிக்கேற்ப நீட்டியும் சுருக்கியும் அளப்பதன் மர்மம் என்ன?இவையெல்லாம் போகட்டும். பெரியார் ஏன் பெரியார் எனப்பட்டார். எத்தனையோ சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். ஆனால், தனது கருத்துக்களை செயல்படுத்த இயக்கம் கண்டு தனது உயிர்மூச்சு அடங்கும்வரை அதனை வழிநடத்தியவர் பெரியார். தனது கருத்துக்களை முதலில் தன்னிலிருந்து செயல்படுத்தத் தொடங்குவார். அடுத்து, தன் குடும்பத்திலிருந்து செயல்படுத்துவார். அது நாகம்மையாராக இருந்தாலும் மணியம்மையாராக இருந்தாலும் அவர்களையும் தன் கருத்துக்களை ஏற்கச் செய்து அதனை கடைப்பிடிக்கச் செய்வார். அதன்பிறகுதான் அதனை தன் தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் நடைமுறைக்குக் கொண்டு வருவார். பெரியாரை முழுமையாக படிததவர்கள் இதனை அறிவார்கள், தான் சொல்வதை தன்னிலிருந்தும் தன் குடும்பத்திலிருந்தும் தொடங்குவதால்தான் அவர் பெரியார் என நிலைப்பெற்றார்.'கற்பு'க்கு பெரியாரை கவசமாக்குகிறவர்கள் இதையும்கூட மறந்துவிட்டார்கள். கருத்துரிமை எல்லோருக்கும் உண்டு. அதுவும் திடீர் பெரியாரிஸ்ட்டுகளாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களுக்கு நிறையவே உரிமை உண்டு. அவர்களும் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) தங்களை முதன்மைப்படுத்தி, திருமணத்திற்கு முன்பே உறவு என்பதில் தங்கள் அனுபவக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கலாம். அதனையடுத்து, தங்கள் குடும்பத்தில் உள்ள திருமணமாகாத பெண்களின் அந்த அனுபவம் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கலாம். குறைந்தபட்சம், இப்படியொரு அதிமுக்கியமான கருத்துக் கணிப்பை வெளியிட்ட இந்தியா டுடே நிறுவனத்தாரிடம், "நீங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் கருத்து சொல்லியிருக்கிறார்களா?" என்றாவது கேட்டிருக்கலாம். திடீர் பெரியாரிஸ்ட்டுகள் இதில் எதையுமே செய்யாமல் விட்டது ஏன் என்பதுதான் புரியவில்லை. - கோவி. லெனின் (govilenin@rediffmail.com)

அரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள் - டாக்டர் அம்பேத்கர்

நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் பயன்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எட்டாக்கனியே. சமத்துவமின்மையால் மிக இழிந்த அவல நிலையில் அவர்கள் வாழ்கின்றனர். தீண்டத்தகாத மக்கள் மட்டுமின்றி, இந்நாட்டின் பல்வேறு பழங்குடி மக்களும், நாடோடிகளைப் போல் அலைந்து, காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் பயன்களை அளிக்கும் முயற்சிகளை எவரும் மேற்கொள்ளவில்லை. ஆளும் வகுப்பினர், கடந்த காலத்தில் எந்த அளவுக்குத் தொண்டு மனப்பான்மையும் பொறுப்புணர்வும் கொண்டிருந்தனர் என்பதைப் புலப்படுத்தும் சான்றுகள் இவை. வருங்காலத்தில் இவர்களது போக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். இதை நம்புமளவுக்கு நாம் ஏமாளிகளல்லர். இன்றைய சாத்தான்கள் ஒரே நாளில் தேவதைகளாக மாறிவிடும் அற்புதங்களெல்லாம் எங்குமே நடைபெற்றுள்ளதாக நான் அறியவில்லை. 7. நாடு அரசியல் விடுதலை பெறும் வரை, சமூகப் பிரச்சனைக்கான தீர்வு களைத் தள்ளி வைக்கலாம் என்று நம்மிடம் சொல்லப்படுகிறது. ஆனால், இத்தகைய சிந்தனையை அறிவார்ந்த மனிதர்கள் எவரும் ஏற்க மாட்டார்கள். புதிய களம் எதிலும் காலடி எடுத்து வைக்குமுன் அங்கே புதை குழி ஏதும் உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். செல்வந்தர்களாக இருப்பவர்கள் வறியவர்களைவிட வலிமை மிக்கவர்களாக விளங்குவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்; அறிந்திருக்க வேண்டும். ஆற்றல் அதிகாரங்களைக் கொண்டிருப்பவர்கள் அவற்றைத் தாமாக ஒருபோதும் இல்லாதவர்களுக்காகத் துறந்து விடுவதில்லை என்பதையும் நாமறிவோம்; அறிந்திருக்க வேண்டும். சமூகப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட்டால், தமது மேம்பாட்டு நலன்கள் பலவற்றை இழக்க வேண்டிய வகுப்பினரிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டால், அதற்குப் பிறகு இப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று நாம் நம்பியிருக்க முடியாது. அப்படித் தீர்வு கோரும் அதிகார மேடையில் ஏற யாருக்குத் துணை நின்றீர்களோ, அவர்களை அதிலிருந்து நீக்குவதற்கு பெரும் புரட்சியொன்றை நடத்த நீங்கள் தயாராக இருந்தாலொழிய அது சாத்தியமில்லை.எனவே பெரியோர்களே! மாபெரும் அரசியல் அறிஞர் எட்மண்ட் பர்க் கூறும் அறிவுரையையே நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்: ‘‘அளவு மிக்க பாதுகாப்பு உணர்வை மேற்கொண்டு அழிந்து போவதை விட, அக்கறை மிகுந்த அய்யப்பாடுகளை எழுப்பி பிறர் பழிப்பிற்கு ஆட்படுவது மேலானது.'' இவ்வறிவுரையின்படி, சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய வழிவகைகளை முன்னதாகவே அரசியல் எந்திரத்தில் ஏற்படுத்துவதுதான் நிலையான உறுதிப்பாட்டைத் தரும் வழி என்று நான் கருதுகிறேன். மாறாக, அந்த எந்திரத்தைக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றிக் கைப்பற்ற எண்ணு பவர்களிடம் பறிகொடுத்துவிட்டு, அவர்களுடைய கருணையை எதிர் நோக்கி நிற்பது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியேயாகும்.8. இப்போது நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திட வேண்டும். இந்தியாவுக்குத் தன்னாட்சி கிடைப்பதற்கு சமூகக் காரணிகள் தடையாக இருக்காது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே வேளை தன்னாட்சி அரசுக்கான அரசமைப்புச் சட்டம் எழுதப்படும் போது – சிறிய, நலிவுற்ற சமூகங்களின் நலன்கள் ஒரு மூலையில் புறந்தள்ளி ஒதுக்கப்படாத வகையில் தடைகளும், காப்புகளும் தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என வலியுறுத்துகிறோம். தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொருத்தமட்டில், இதை நாம் எவ்வாறு பெறப் போகிறோம் என்பது குறித்துதான் நான் அடுத்தபடியாக எடுத்துக் கொள்ள இருக்கிறேன். இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டாக வேண்டும் எனும் தேவையை உணர்ந்து ஏற்றுக் கொண்டு, அத்தீர்வு தன்னாட்சி அரசுக்காக உருவாக்கப்படும் அரசமைப்புச்சட்டத்தில் இடம் பெற வேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்ளும் – இந்திய அரசியல் பிரச்சினைகளை ஆய்ந்தறிந்த மாணவர்களும் உண்டு.இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில், நான் எனது உரையில் முன்பு குறிப்பிட்ட உலகப் போருக்குப் பிறகு உருவான நாடுகள், மேற்கொண்ட தீர்வுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் இம்மாணவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஏனெனில், இந்தியாவில் தற்பொழுது காணப்படும் நிலைகள் அந்நாடுகளில்தான் அப்பொழுது நிலவின. இந்நாடுகளில் எல்லாம் சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அந்நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களில், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் குறித்த சட்டப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் போன்றதொரு அரசமைப்புச் சட்ட முறையே தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நலன்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்குரிய சிறந்த முறை என்று நேரு குழுவின் அறிக்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது.இத்தகையதொரு திட்டத்தினால் ஏமாற்றப்படாமல் இருக்க நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் எனும் கூறுகளைப் புகுத்தி, இந்த உரிமைகள் மூலம் தங்கள் நலன்களைப் பெரும்பான்மையோரிடமிருந்தும், ஆளும் வர்க்கத்தினரிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதில் அளவுக்கு மேல் நம்பிக்கை வைப்பது, இந்திய அரசியல்வாதிகளின் வழக்கமாகி விட்டது. நமது பாதுகாப்பிற்கு இத்தகைய திட்டம் போதுமென்று நிறைவடைந்து விட முடியாது. இத்தகைய உரிமை அறிக்கைகள் எவ்வளவுதான் விரிவாகவும் தெளிவாகவும் முழுமையாகவும் ஆர்வமூட்டும் நடையிலும் எழுதப்பட்டிருந்தாலும், இவ்வறிக்கைகள் மட்டுமே அவ்வுரிமைகள் நமக்குக் கிடைப்பதை உறுதி செய்துவிட முடியாது.உரிமைகள் எவை என்று வரையறுப்பதால் மட்டுமே நாம் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. உரிமைகள் மறுக்கப்பட்டால் குறை தீர்ப்புக்கான வழிமுறை எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே உரிமைகள் கிடைக்கப் பெறும். நான் குறிப்பிட்ட, போருக்குப் பிறகு உருவான புதிய நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களில் சிறுபான்மையினருக்கான அடிப்படை உரிமைகள் வரையறுக்கப்பட்டிருப்பதுடன், பெரும்பான்மையோர் அவ்வுரிமைகளை மீறினால் சிறுபான்மையோர் உலக அரங்கத்தில் முறையீடு செய்யலாம் எனும் விதிமுறையும் இடம் பெற்றிருந்தது. இத்தகைய முறையீடுகளைப் பெற்று ஆவன செய்வதற்கென்றே பன்னாட்டு சங்கம் குழுவொன்றை நியமித்திருந்தது. அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக நேரு குழு அறிக்கையில் இத்தகைய பாதுகாப்பு ஏதேனும் தெரிவிக்கப்பட்டுள்ளதா? முறையீடு செய்வதற்கான வழிவகை எதையும் என்னால் அதில் காண முடியவில்லை. எனவே, நேரு குழுவின் அறிக்கையில் காணப்படும் வாக்குறுதி ஒரு மாயத் தோற்றமே.9. நேரு குழுவின் அறிக்கையில் முறையீட்டுக்கான விதிமுறை ஏதும் சேர்க்கப்பட்டாலும்கூட, அத்திட்டத்தை ஏற்க வேண்டாம் என்றே நான் அறிவுரை கூறுவேன். பன்னாட்டு சங்கத்திற்கோ, (ஃஞுச்ஞ்தஞு ணிஞூ Nச்tடிணிணண்)அரசப் பிரதிநிதிக்கோ, அரசுக்கோ முறையீடு செய்வதற்கான விதிமுறை இருப்பது – தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில் கைகொடுக்கும் கூடுதல் ஆயுதமாக இருக்கும் என்றாலும், அது பயனுள்ள ஆயுதமாக விளங்காது. உங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த உறுதிப்பாடு, கட்டுப்படுத்தும் அதிகாரம் உங்கள் கைகளுக்கு வரப் பெறுவதுதான். அப்போது தான் வரம்பு மீறி தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் ஆற்றலைப் பெறுவதுடன் தவறு நிகழும் முன்னரே தடுத்துக் காக்கும் ஆற்றலும் கிடைக்கப் பெறும். ஆளுநரோ, அரசப் பிரதிநிதியோ, பன்னாட்டுச் சங்கம் போன்ற மூன்றாம் தரப்பினர் காப்பார்கள் என்பது நமது பாதுகாப்பை ஒருபோதும் உறுதி செய்யாது.நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரத்தைத் தம் வசம் கொண்டிருப்போர், அவற்றை முறையாகப் பயன்படுத்த முன்வரவில்லையெனில், அத்தகைய அதிகாரத்தால் நமக்கு என்ன பயன்? தன்னாட்சி இந்தியாவின் வருங்கால அரசாங்கத்தில் உரிய பங்கினை நாமும் பெறுவது மட்டுமே நமது நலன்களை உறுதி செய்யும் வழி முறையாகும். சட்டமன்றங்களில் போதிய பிரதிநிதித்துவம் பெறுவதே இதற்கான ஒரே வழியாகும். இந்த வழியில் மட்டும்தான் அரசின் செயல்பாடுகளை நாம் நாள்தோறும் கண்காணித்து, நமது பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் பேண முடியும். இத்துடன் கூடுதலான பாதுகாப்பும் உறுதிப்பாடுகளும் கிடைத்தால் பெற்றுக் கொள்ளுங்கள். அவை உங்கள் வில்லின் கூடுதல் நாண்களாக விளங்கலாம்.ஆனால் சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் எனும் பாதுகாப்பை இழந்துவிட்டு, அதற்கு மாற்றாக வேறு எந்த சலுகை கிடைக்குமென்றாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம். போதிய பிரதிநிதித்துவம் பெறுவதன் மூலம் உங்கள் நலன்களுக்கு உறுதிப்பாடு கிடைத்தாலன்றி, நாட்டின் அரசமைப்புச் சட்ட மாற்றம் எதையும் ஏற்க மறுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையுண்டு.10. ‘போதிய பிரதிநிதித்துவம்' என்று இந்தியச் சிறுபான்மையினர் அனைவராலும் பேசப்படுகிறது. ஆனால் எந்தளவுக்கு என்று அது சரியாக வரையறுக்கப்படாததால் தெளிவற்று இருக்கிறது. நமது கோரிக்கைக்குச் சரியான வடிவம் அளிக்க வேண்டுமெனில், அளவு வரையறையொன்றையும் நாம் தர வேண்டும். போதிய பிரதிநிதித்துவம் என்பது, மக்கள் தொகை விகிதத்தில் இருக்க வேண்டுமென்று காங்கிரஸ் வட்டாரங்களில் ஒரு கொள்கை நிலவி வருகிறது. இந்த விகிதக் கொள்கை, சிறுபான்மையினர் பால் பெரும்பான்மையோர் காட்டும் இரக்கமற்ற, பொருளற்ற வறட்டுக் கோட்பாடாகும். சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் அதிகாரம், அவர்களது உறுப்பினர்களையும் சமூகத் தகுதியையும் பொருத்ததாகும். இச்சிறுபான்மைத் தொகையினரைக் கொண்டு தம்மைக் காத்துக் கொள்வது இயலாது என்றுதான், தமது பங்கீட்டை உயர்த்துமாறு அவர்கள் கோருகின்றனர்.அத்தகைய கூடுதலான பிரதிநிதித்துவம் இன்றி, அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளவிருக்கும் பெரும்பான்மையினர், வலிமையான ஆதிக்கத்தைத் தாம் சமாளிக்க முடியாதென்று கருதுகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தில், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனில், மக்கள் தொகை விகிதத்தைவிட சற்றுக் கூடுதலான அளவில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். இது உண்மை எனில், சிறுபான்மையினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு உரிய விகிதத்தில் மட்டுமே பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் எனில், எந்த வகையில் அது அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும் என்ற கேள்வி எழுவது நியாயமானது அல்லவா? சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறுவதும், அவர்களுடைய மக்கள் தொகைக்கேற்ற அளவில்தான் பிரதிநிதித்துவம் பெறுவர் என்பதும் முரண்பட்ட எண்ணங்கள் என்றே கருதுகிறேன்.சட்டமன்றங்களில் சிறுபான்மையினருக்கு அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ற அளவிலேயே பிரதிநிதித்துவம் வரையறுக்கப்படும் எனில், சட்டமன்றமானது நாட்டில் நிலவும் சமூக நிலைமையை அப்படியே கொண்டுள்ள சிறு படிமமாகவே அமையும். அந்த அமைப்பில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் வலிமை ஆகியவை புறத்தே சமூகத்தில் நிலவுகின்ற நிலையில் ஒரு சிறிதும் மாற்றம் இருக்காது. சமூகப் பிரிவினரிடையேயான அதிகாரப் பகிர்வு நிலை அப்படியே நீடிக்கும். ஆனால் அந்த அதிகாரப் பகிர்வு நிலையில் சிறுபான்மையினருக்கு வலிமை சேர்க்கும் வகையில் கூடுதல் பங்கீட்டுக்கு வழிவகுக்கும் சீர்திருத்தம் செய்யப்படுவதன் மூலமே, சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு உறுதியான வழி கிடைக்கும். இக்குறிக்கோளை அடைய வேண்டும் எனில், சிறுபான்மையினருக்கு அவர்களுடைய மக்கள் தொகை விகிதத்தை விடக் கூடுதலான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்.11. பிரதிநிதித்துவம் என்பது கூடுதல் மதிப்பு உயர்வுடன் இருத்தல் அவசியம் என்பதை சிறுபான்மையினர் அனைவரும் ஏற்றுக் கொண்டாலும், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் கருத்தொற்றுமை காணப்படவில்லை. கூடுதல் பிரதிநிதித்துவம் எதற்காக கேட்கப்படுகிறது; அதனால் கிடைக்கும் பயன் என்ன என்பதைக் குறித்த சரியான புரிதல் இன்மையே காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் முன்னர் அளித்த விளக்கங்களிலிருந்து, வலுவற்றவர்களின் கரங்களுக்கு வலுவூட்டவே கூடுதல் பிரதிநிதித்துவம் என்பது தெளிவு. தங்களைக் காத்துக் கொள்ளப் போதிய வலிமை இல்லாத சிறுபான்மையினருக்கே இத்தகைய வலுவூட்டல் தேவை. எனவே, கூட்டப்பட வேண்டிய வலிமை எவ்வளவு என்பது, கரம் எந்த அளவுக்கு வலுவிழந்திருக்கிறது என்பதைப் பொருத்தே அமையும் என்பது தெளிவு.கையின் நீளம் மிகக் குறைந்ததாக இருந்தால், அக்கையில் நீண்ட ஆயுதமும், நீளமிக்க கைகளில் நீளம் குறைந்த ஆயுதமும் தரப்பட்டால்தான் சமநிலை நிலவும். மற்றொரு வகையில் கூறுவதெனில், பிரதிநிதித்துவ உணர்வு எல்லா சிறுபான்மையினருக்கும் ஒரே அளவில் இருக்கலாகாது என்பதும், அவரவர்க்குத் தற்போதுள்ள சமூகத் தகுதி நிலையையும் கருத்தில் கொண்டே முடிவு செய்யப்பட வேண்டும் என்பதும் புலனாகும். சமூகத்தில் மிகத் தாழ்வான தகுதி நிலையுடைய சிறுபான்மையினருக்கு, மிகுதியான பிரதிநிதித்துவம் மிக உயர்ந்த தகுதி நிலை கொண்ட சிறுபான்மையினருக்கு, மிகக் குறைவான உயர்ச்சியே போதுமென்பதும் பெறப்படும்.ஆனால் சமூகத்தின் தற்போதைய நிலை என்னவெனில், எந்தச் சிறுபான்மையோர் மிகுதியான வளங்கள், வசதிகளைப் பெற்று சமூகத்தில் உயர்நிலைத் தகுதியில் உள்ளனரோ, அவர்கள்தான் பிரதிநிதித்துவத்திலும் பெரும் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டு மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர். முடி வெட்டப்பட்ட ஆட்டுக்குதான் குளிர் காற்றிலிருந்து மிகுந்த பாதுகாப்பு தேவை என்பதன் அடிப்படையில்தான் பிரதிநிதித்துவத்தில் அதிக பங்கு பெறுவதற் குரிய சிறுபான்மையினர் யார் என்பதையும், யாருக்கு எவ்வளவு பங்கு என்பதையும் பற்றி முடிவெடுக்க வேண்டும். இதற்கு மாறாக, இக்கோட்பாட்டைத் திரித்து முடிவெடுத்தால் பாதிக்கப்படும் சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, இந்நாட்டுக்கும் அது தீங்காகவே முடியும்.12. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்திற்கு மதிப்பளிப்பதெனும் கோட்பாட்டைச் சரியாக எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து இதுவரை நான் எடுத்துக் காட்டினேன். சரியான அளவை நிர்ணயிப்பது எவ்வாறு என்ற கேள்விக்குத் தீர்வு இன்னும் எஞ்சியுள்ளது. இந்த அளவு சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது மாறுதலுக்குரியது என்பதைக் குறிப்பிடுவதுடன், அதைக் கணக்கிடுவதற்கான பொது அடிப்படைக் கோட்பாட்டைத் தருவது மட்டுமே என்னால் இயலும். முதலாவதாக, மக்கள் தொகை விகிதம் எந்த வரம்புக்கு மேல் இருந்தால் கூடுதல் பிரதிநிதித்துவ தேவை என்பதைக் குறித்து இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையோர் மற்றும் சிறுபான்மையோருக்கிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.பின்னர், குறிப்பிட்டதொரு சிறுபான்மை இனத்தவர்க்கான பிரதிநிதித்துவ அளவை நிர்ணயிக்கையில் அவ்வினத்தவரின் 1. சமூக நிலை 2. பொருளாதார வலிமை 3. கல்வி நிலைமை ஆகியவற்றை மதிப்பிட்டு, அவற்றுக்கு எதிர்விகிதப் பொருத்தத்தில் கூடுதல் பங்கு இருக்குமாறு பிரதிநிதித்துவத்தின் அளவு முடிவு செய்யப்பட வேண்டும். இதனைச் சரியாக நிறைவேற்றினால் சிறுபான்மைக் குழுக்களும், சிறுபான்மையினரும் ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியும். அத்தகைய உடன்பாடு நியாயமானதாகவும், சமநீதி வழங்குவதாகவும் எந்தவொரு தரப்பினருக்கும் மனக்குறை விளைவிக்காததாகவும் இருக்கும்.13. அடுத்து நமது கவனத்தை ஈர்க்கும் கேள்வி, வாக்குரிமை யையும், வாக்காளர் தொகுதிகளையும் குறித்ததாகும். கற்றறிந்த பெருமக்களே! இவற்றைக் குறித்த நமது கோரிக்கை எவ்வாறு அமைய வேண்டும்? வாக்காளர் தொகுதிகளின் அமைப்பில் இரண்டு மாற்று வழிகள் உள்ளன. ஒன்று, தனியான தொகுதிகளின் ஒதுக்கீடு; மற்றது கூட்டுத் தொகுதிகளில் இடஒதுக்கீடு. இதில் எதைத் தேர்வு செய்வது என்பதைக் குறித்து ஒடுக்கப்பட்ட வகுப்புகளிடையே கருத்து வேற்றுமை நிலவுகிறது என்பதை நான் நன்கறிவேன். ஒடுக்கப்பட்ட வகுப்புகளில் பெரும்பான்மையினர் தனித்த வாக்காளர் தொகுதிகளே வேண்டும் என்று கருதுகின்றனர். கூட்டுத் தொகுதிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டால், வாக்களிக்கும் பெரும்பான்மை வகுப்பினர், ஒடுக்கப்பட்ட வகுப்பு வேட்பாளர்களில், தங்கள் விருப்பு வெறுப்புகளுக்குப் பணிந்து, தங்கள் நலன்களுக்கு ஆதரவாக நடக்கக்கூடிய வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள் என்னும் அச்சமே காரணம். இத்தகைய அச்சத்திற்கு ஆதாரம் இல்லை என்று என்னால் கூற இயலாது.ஆனால் இதைப் போக்குவதற்கான வழிமுறை தனித் தொகுதி கோரிக்கையன்று. மாறாக, நமது வாக்குரிமை வலிமையை முடிந்தவரை அதிகரிப்பதும், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கோருவதும் ஆகும். இதன் வாயிலாக, நமது வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் பெரும்பான்மை இனத்தவரின் செல்வாக்கைக் கணிசமாகக் குறைக்க முடியும். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கோருதல் முக்கியமென்று கருதுகிறேன். அவ்வாறு வயது வந்தோர் வாக்குரிமை ஏற்கப்படுமாயின், கூட்டுத் தொகுதி முறையில், ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்திற்கு நாம் மறுப்பு தெரிவிக்க வேண்டியதில்லை.14. இது தொடர்பாக முக்கியமான ஒரு கருத்தை நான் கூறியாக வேண்டும். இந்த நாடு சாதி, மதங்களால் பிளவுபட்டிருப்பதால், சிறுபான்மை மக்களுக்குப் போதுமான பாதுகாப்பு அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்படுவதன் வாயிலாகவன்றி, இந்நாடு தன்னாட்சி சமூக நிலைக்குத் தகுதியுடையதாகாது எனும் நிலைப்பாடு இன்றைய நிலைக்கு ஏற்புடையதாக இருப்பினும் – சாதிகளாகவும், சிறு குழுக்களாகவும் பல துண்டுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும் இந்தியா ஒன்றுபட்ட நாடாக வேண்டும் என்பதே நமது அறுதிக் குறிக்கோள் என்பதை சிறுபான்மையினர் மறந்து விடக் கூடாது. இக்குறிக்கோளைத் தமது முதல் நோக்கமாகக் கொள்ளாத சிறுபான்மையினர் எவரும் தமக்கு தனியுரிமைகளும் சலுகைகளும் கோருதல் முறையன்று.எனவே, சிறுபான்மையினர் அனைவரும் தமது பாதுகாப்பு உரிமைகளைக் கோரும்போது, இந்த இறுதி இலக்குடன் அவை முரண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது புலனாக வேண்டும். உங்கள் பின்னடைவுகளால் நீங்கள் இன்னல் அடைகிறீர்கள் என்பது உண்மைதான் என்பதால் நீங்கள் பாதுகாப்புகளைக் கோரலாம். ஆனால் அந்தப் பாதுகாப்புகள் இடைவெளிகளை இணைக்கும் பாலமாக விளங்க வேண்டுமேயன்றி, இந்த ஏற்றத்தாழ்வுகள் என்றென்றும் தொடர்வதற்குரிய காரணிகளாக இருந்துவிடக் கூடாது. சிறுபான்மையினர் கோரும் பாதுகாப்புகளைத் தர இணங்குதல் என்பது, பெரும்பான்மையினரின் கடமை என்பதிலும் அய்யத்திற்கிடமில்லை. அவ்வாறே அனைத்து மக்களுக்குமிடையே ஒருமைப்பாடு உருவாவதற்குத் தடையாயிருக்கும் பாதுகாப்புகள் எவற்றையும் கோராதிருத்தல் சிறுபான்மையினரது கடமையாகும். இந்தக் கண்ணோட்டத்துடன் சிந்தித்தால் தனித்த வாக்காளர் தொகுதிகளைவிட, இடஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுத் தொகுதிகளே உகந்தவை என்பதை உணரலாம். இம்முறைதான் இன்றைய நிலைமைகளுக்குத் தீர்வாகவும், எதிர்காலக் குறிக்கோள்களுக்குத் துணையாகவும் உதவக் கூடியதாகவும் இருக்கும்.15. தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் பாதுகாப்பு நோக்கில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு கூறும் உண்டு. பொதுப் (அரசு) பணிகளில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பற்றியது அது. சட்டமியற்றும் அதிகாரத்தைவிட, அதைச் செயல்படுத்தும் அதிகாரம் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல. சட்டமியற்றுவோரின் உணர்வுகளை நிர்வாகிகளின் திரிபுவாதங்கள் வெற்றாக்கி விடவோ, சிதைக்கவோ இயலும். தாழ்த்தப்பட்ட மக்கள் அரசு நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் உரிய பங்கு பெற வேண்டும் என்பதற்கு இது மட்டுமே காரணமல்ல. வேலைப் பளு மிகுதியினாலோ, பிற சூழ்நிலைகளினாலோ எல்லாவற்றையும் தெள்ளத்தெளிவாக சட்டத்திலேயே வரையறுத்துவிட இயலாது. எனவே, நிர்வாகத் துறைகளின் தலைமையிடம் கணிசமான அளவில் சிறப்பு அதிகாரங்களை விட்டு விடுவது தவிர்க்க இயலாதது. இந்த சிறப்பு அதிகாரங்கள் எந்த அளவுக்கு விருப்பு வெறுப்பு, ஒருதலைப்பட்சம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொருத்துதான் சமூக நலனும் மேம்படும்.அரசுத் துறை பெரும்பாலும் ஒரேயொரு வகுப்பாரால் நடத்தப்பட்டு வரும் இந்தியா போன்ற நாட்டில், ஒரு குறிப்பிட்ட வகுப்பின் மேலாதிக்கத்தை வலுப்படுத்த இந்த ஏராளமான சிறப்பு அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உண்டு. இதைத் தடுப்பதற்கு உறுதியான ஒரே வழி அரசுப் பணிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்புகள் உட்பட அனைத்து சாதி, மதத்தை சார்ந்தவர்களும் பங்கு பெறுவதே என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். எனவே, அரசுப் பணிகளில் குறிப்பிட்டதொரு சதவிகிதம் ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென நாம் கோர வேண்டும். இதை நிறைவேற்றுவது ஒன்றும் கடினமல்ல. அரசமைப்புச் சட்டத்தின் மூலம் இதை உறுதி செய்யலாம். வருங்கால அமைச்சரவைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களும் இடம் பெறுவார்கள் என உறுதிப்பாடு இருப்பின் இத்தகைய பாதுகாப்பு வேண்டாமென்று கூட விட்டு விடலாம்; ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்புகள் எப்போதும் சிறுபான்மையினராகவே இருப்பார்கள் என்பதால், இதற்கு வாய்ப்பில்லை. எனவே, இத்தகைய பாதுகாப்பு தேவையென்று நீங்கள் வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது.– தொடரும்அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மாநாட்டில் (நாக்பூர்) டாக்டர் அம்பேத்கர் 8.8.1930 அன்று ஆற்றிய தலைமை

உலக அரங்கில் ஜாதியை மறைக்கும் இந்தியாஅய்.நா. அவையில் சாதிய விவாதத்தை – பா.ஜ.க. அரசைப் போலவே தடுத்த காங்கிரஸ் அரசு

இனவெறிக்கு எதிரான உலகளாவிய மாநாடு 2001 ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்றது. இம்மாநாட்டு முடிவுகளை நடைமுறைப்படுத்தியது பற்றி மதிப்பீடு செய்ய, ஜெனிவாவில் அய்க்கிய நாடுகள் அவை அண்மையில் (ஏப்ரல் 20 – 24, 2009) கூட்டிய மாநாடு உப்புச் சப்பற்று முடிவுற்றது. இஸ்ரேலை எதிர்த்து ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாத்தின் அறிக்கை மீதான உரத்த சப்தம், அதனைத் தொடர்ந்த அவரது வெளிநடப்பையும் தவிர்த்து, இம்மாநாடு பற்றிய வேறு எந்தச் செய்தியையும் வெகுஜன ஊடகங்கள் வெளியிடவில்லை. டர்பன் மாநாடு நடைபெற்றபோது மாநாட்டின் விவாதப் பொருள், எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக எழுந்த கடுமையான விவாதங்களை பல வாசகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இச்சூழலில், எட்டாண்டுகளுக்குப் பிறகு இனவெறி, இது தொடர்பான பிற பாகுபாடுகள் குறித்த முதல் உலக மாநாடு சலனமற்று முடிவுற்றது மிகுந்த வியப்பை அளிக்கிறது. செப்டம்பர் 2001இல் இனவெறியின் ஒரு குறிப்பிட்ட வடிவமே சாதிப் பாகுபாடு என்ற இந்தியர்களின் கோரிக்கை பெரும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அப்போது மய்ய அரசில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு டர்பன் மாநாட்டு ஆவணங்களில், தனது ‘வளரும் வல்லரசின்' அதிகார தந்திரம் மற்றும் சட்ட, தர்க்க அளவிலான வாதங்கள் மூலம், சாதி தொடர்பான எந்தக் குறிப்பையும் முற்றாக இடம் பெறாமல் கவனமாக பார்த்துக் கொண்டது. அரசின் இந்நிலைப்பாட்டிற்குப் பின்னால் இந்தியாவை பன்னாட்டு ஆய்விற்கு உட்படுத்துவதற்கான எதிர்ப்பில், இந்து தேசியம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்வையில் மறைந்திருந்தது என்பது வெளிப்படையான ஒன்று.இனவெறி, இனப்பாகுபாடு, அந்நியர் மீதான காழ்ப்புணர்வு, சகிப்பின்மை ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்ற மாநாட்டில் சாதிப் பாகுபாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிய தலித் ஆர்வலர்கள் சமகால உலகில் பிறப்பு, தொழில் மற்றும் சமூகக் குழுவமைப்பின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் பாகுபாடு – வெளிப்படையாகவும் முதன்மையா கவும் உள்ளதென வாதாடினர். சாதிப் பாகுபாடு, அரசமைப்புச் சட்டம் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளையும் மீறி இந்தியாவில் உள்ள மக்களை பாதிப்பதுடன், தெற்காசிய நாடுகளில் உள்ள பிற மக்களையும் பாதிக்கிறது.இந்து மத பழக்க வழக்கங்களை உலகளாவிய ஆய்விற்கு உட்படுத்த, இந்து தேசியவாத பாரதிய ஜனதா அரசு அனுமதிக்க மறுத்தது தெரிந்த ஒன்றே. ஆனால் எட்டரை ஆண்டுகளுக்கு மேலான பிறகும்கூட, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முந்தைய அரசைப் போலவே டர்பன் மறு சீராய்வு மாநாட்டில் சாதிப் பாகுபாடு தொடர்பான எந்த ஒரு விவாதத்தையும் அனுமதிக்காமல் விடாப்பிடியாக இருந்துள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க வந்த 40 அரசு சாரா அமைப்புகளில் தலித் மற்றும் சிறு தேசிய இனத்தைச் சார்ந்த 33 அமைப்புகளை, இந்திய அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்க விடாமல் தடுத்தது மட்டுமின்றி, முந்தைய பாரதிய ஜனதா அரசு சாதி தொடர்பான குறிப்புகளை இம்மாநாட்டு ஆவணங்களில் இடம் பெறாமல் செய்த நிலைப்பாட்டையே இப்போதும் எடுத்துள்ளது.இந்திய அரசமைப்புச் சட்டம் சாதி பாகுபாட்டை தடை செய்துள்ளது. அதே வேளையில் இப்பாகுபாட்டிற்கு ஆட்படுவோருக்கு உதவிட பல வழிகளையும் வகுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. செய்யத் தவறிய பல நடவடிக்கைகளை தவிர்த்து இதுபோன்ற பாகுபாடுகளை எதிர் கொண்டுள்ள பல நாடுகளை விட, இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பாகவே உள்ளன. எனினும் சாதியச் சிந்தனையோடு செயல்படும் அரசு அதிகாரிகளும் சாதி எதிர்ப்புச் சட்டங்களை மழுங்கடிக்கச் செய்ய அரசும், அதன் நிர்வாக அமைப்புகளும் தொடர்ந்து துணை புரிவதும் மறுக்க முடியாததே.சாதிப் பாகுபாடு நமது சமூகத்தில் ஆழமாக நிலைப்பெற்றுள்ளது. நடுநிலையான அரசு நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அது பரவியுள்ளது. இந்திய அரசு விடாப்பிடியாக உலகளாவிய அமைப்பின் முன் சாதியம் தொடர்பான சங்கதியை விவாதிக்க விடாமல் தடுத்துள்ளது, ‘உயர் சாதி' இந்தியாவின் ஒழுக்கக்கேட்டின் அடையாளம் என குற்றம் சாட்டுவதில் துல்லியமான காரணிகள் உள்ளன.இச்சமூக எதார்த்தத்தை மறுப்பதில் எவருக்கும் நன்மை இல்லை. இதனை மறுப்பதன் மூலமே மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் பிற பிரச்சினைகளை கையிலெடுப்பதையும், உலகளாவிய அழுத்தத்தை தவிர்க்கவுமே என்றால் அது முடியாது. குறைகளையும், தவறுகளையும் நேர்மையுடன் ஒப்புக் கொள்வதே தவறுகளை திருத்திக் கொள்ள மேற்கொள்ளும் தேவையான நடவடிக்கையாகும். மேலும், இது மேற்கத்திய நாடுகளின் தூதரக மேலாதிக்கத்தைத் தவிர்க்கவும், எதிரிகளை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவும் உதவும். இதுவே உள் நாட்டில் சாதி எதிர்ப்பு இயக்கங்களை வலுப்படுத்தவும் வெளிநாட்டில் உள்ள தலித் மக்களை ஆதரிப்பதாகவும் இருக்கும். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டையே காங்கிரஸ் அரசும் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது என்றாலும், இந்நாட்டின் அடுத்த அரசை தேர்ந்தெடுக்க உள்ள பொதுத் தேர்தல் சூழலில் இங்கு இது பற்றிய பொது விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்பது வியப்புக்குரியதாக உள்ளது.டர்பன் மாநாடு சாதிப் பாகுபாடு குறித்து சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறிவிட்டபோதும், பாலஸ்தீனியர்கள் சந்திக்கும் பாகுபாடு மற்றும் ஒதுக்கப்படும் நிலை தொடர்பாக நீர்த்துப் போனதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்து, தொடர்ந்து மாநாட்டு நடவடிக்கைகளையும் புறக்கணித்துள்ளன. ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போலந்து போன்ற நாடுகளும் இப்புறக்கணிப்பில் கலந்து கொண்டுள்ளன. யூத ஆதிக்கமும் இனவெறியும் ஒன்றே என்று கண்டனம் எழுந்துள் ளதும், அதனைத் தொடர்ந்த வெளிநடப்பும் இந்நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு தத்தம் நாடுகளில் இனவெறி, இனப்பாகுபாடு, அந்நியர் மீதான காழ்ப்புணர் வுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவியுள்ளன.அரபு மற்றும் இஸ்லாமியர் மாநாட்டு அமைப்பின் தூதரக உறவு பலத்தால் இனவெறி ஆவணங்களில் பாலஸ்தீனம் இடம் பெற முடிந்த நிலையில், உலக அரங்கில் தலித் அமைப்புகளின் வலிமையற்ற, நீர்த்துப் போன இயக்கங்களால் சுமார் 30 கோடி மக்களை பாதிக்கும் பாகுபாடு மட்டும் இவ்வாவணத்தில் இடம் பெற முடியாமல் போய் விட்டது. Economic & Political Weekly-ன் தலையங்கம் (மே 16, 2009) – தமிழில்: பொழில்

Wednesday, July 15, 2009

ஆதவன் தீட்சண்யா - பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு

அன்புள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கு,நான் உங்களைப் போல போலி மார்க்ஸிய அடிமையல்ல. மாறாக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக பழங்குடி மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டவனும், நந்திகிராமில் மார்க்ஸ்சிஸ்டுகளால் கொல்லப்பட்ட விவசாயத் தோழர்களின் மீதான படுகொலைகளுக்காகவும், மேற்குவங்க மார்க்சிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு இன்று வேட்டையாடப்படும் ஒரு இனமாக மாறியிருக்கிற பழங்குடி இனத்தின் இன்னொரு பிரிவில் பிறந்தவன் என்கிற முறையிலுமே இதை உங்களுக்கு எழுத நேர்ந்தது.நீங்கள் தமிழ் நதிக்கு எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்தது. அவரைப் போட்டு காய்த்து எடுத்து விட்டீர்கள். இதற்கெல்லாம் அவரிடம் என்ன பதில் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்னும் நிலையில் என்னிடம் சில பதில்கள் இருக்கின்றன. அதைப் பதில்களாக நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி இல்லை வழக்கம் போல இதெல்லாம் புலிக் கோஷம் என்று நிராகரித்தாலும் சரி எமக்கு அது குறித்து கவலை இல்லை. மதுரையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் காரசாரமான உரையாடலின் போது தமிழ்நதி ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்று உங்களைக் கேட்டதாகவும், நீங்கள் அதற்கு ‘‘நீங்கள் மலையக மக்களையும், தலித்துக்களையும் முஸ்லீம்களையும் எப்படி நடத்தினீர்கள்? ஏனைய அமைப்புகளைக் கொன்றீர்கள்? உங்களுக்காக ஏன் நாங்கள் பேச வேண்டும். அதை எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்?’’ என்று பேசியதாக நண்பர்கள் சொன்னார்கள். சத்தியமாக தமிழ்நதி சொல்லவில்லை.நீங்கள் பேசியது குறித்து தேவேந்திரபூபதியிடம் கேட்டபோது, அவர் தமிழ்நதிக்கும் ஆதவனுக்குமிடையிலான விவாதத்தில் வந்தது என்று சொல்லிவிட்டு பிஸியாக இருப்பதாகவும், அப்புறம் பேசுவதாகவும் சொன்னார். நான் அவரை விட பிஸியாக இருந்தேன் என்பதைத் தாண்டி இதை அவர் பேச விரும்புகிறாரோ இல்லையோ என்பதால் அதை விட்டு விட்டு இதை எழுதத் துவங்கிவிட்டேன்.நீங்கள் பேசியது உண்மை என்றால் ஒரு தலித் கிறிஸ்தவன் என்ற முறையில் சொல்கிறேன். உங்கள் பேச்சு மிக ஆபாசமானது. ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு, தினந்தோறும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படும் ஓர் இனம் குறித்த உங்களின் இந்தப் பேச்சு தலித் அரசியலின் பெயரால் நீங்கள் செய்த ஆபாசமான வன்முறை. புலிகளின் தவறுகளை மட்டுமே வைத்தும் ஈழத்தின் ஆதிக்க சாதி அமைப்பை வைத்தும் நிகழ்காலத்தில் நடந்துள்ள மாபெரும் இனவெறிக் கொலைகளை, கொடுமைகளை மறைப்பீர்கள் என்றால், நீங்கள் ஈழம் என்கிற கருத்துருவையே மறுக்கிற நிராகரிக்கிற பார்ப்பன தலைமையிலான உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் நின்று கொண்டு தலித் அரசியலை துணையாக்கி உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்று கூறுகிறேன்.தேசிய இனப்பிரச்சனையின் தீர்வு தொடர்பாக வலதுகளுக்கும் இடதுகளுக்கும் ஏராளமான முரண்கள் உண்டு. புதிய தேசம் ஒன்று அதுவும் வலதுசாரிக் கொள்கை கொண்ட தேசம் ஒன்று உருவாவதை மார்க்ஸிஸ்டுகள் நீங்கள் விரும்பமாட்டீர்கள். இன்னும் சொல்லப்போனால் பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணய உரிமை என்ற மார்க்ஸிய கோட்ப்பாட்டைக் கூட உங்கள் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்ளாது என்கிற நிலையில், நாம் தேர்தல் பரபரப்பில் இருந்தபோது, அங்கே வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது சிங்களப் படைகள். ‘சண்டையை நிறுத்து; பேச்சுவார்த்தை நடத்து’ என்று இன்று லால்கரில் ஒலிக்கிற உங்கள் குரல் ஈழத்திற்காக ஒலிக்கவில்லை.தமிழ் மக்களை புலிகள் பணையக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். லால்கரில் ஐம்பது கிராமங்களை இராணுவம் மாவோயிஸ்டுகளிடம் இருந்து கைப்பற்றி விட்டது. அந்த கிராமங்களின் பெரும்பங்கு மக்கள் மாவோயிஸ்டுகளோடு ஜார்க்கண்ட் காடுகளை நோக்கி நகர்ந்து விட்டார்கள். அந்த ஆதிவாசிகள் எப்படி மாவோயிஸ்டுகள் இல்லையோ - ஆனால் மார்க்ஸ்சிஸ்டுகள் செய்த துரோகம் எப்படி அவர்களை மாவோயிஸ்டுகளை நோக்கி நகர்த்தியதோ - இராணுவம் துரத்தும் போது சிக்கினால் சீரழிந்து விடுவோம் என்று எப்படி மாவோயிஸ்டுகளோடு சென்றார்களோ, அப்படியே வன்னி மக்களும் புலிகளுடன் போனார்கள். அதுதான் உண்மை. வன்னி மக்கள் எல்லாம் புலிகள் என்றோ ஈழ மக்கள் எல்லோருமே புலிகள் அமைப்பில் குப்பி சுமந்தவர்கள் என்றோ யாருமே சொல்லவில்லை. அவர்கள் சிங்களனை விட புலிகள்தான் தமக்கு பாதுகாப்பானவர்கள் என்று நம்பினார்கள். அதுதான் உண்மையும் கூட.இந்தியா, கம்யூனிச சீனா, பாகிஸ்தான், ஈரான், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பிராந்திய, ஏகாதிபத்திய வல்லரசுகளின் கூட்டு இராணுவ பலத்துடன் மோதிய புலிகளால் அவர்களையே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை என்பதோடு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் அப்போரின் கசப்பான முடிவு. உண்மையில் இலங்கை அதன் உண்மையான இராணுவ பலத்தோடு புலிகளை எதிர்கொண்டிருந்தால் கிழக்கையும் மீட்டிருக்க முடியாது வடக்கையும் மீட்டிருக்க முடியாது என்பதோடு இந்தப் போரின் முடிவில் பெரும் அழிவை இலங்கை இராணுவம் சந்தித்திருக்கும் என்பதுதான் இராணுவ யதார்த்தம். ஆனால் அரசியல்? அது துளி கூட புலிகளிடம் இல்லையே? அழிவுக்குப் பிறகு இன்றைக்கு புலி ஆதரவாளர்கள் சொல்கிற அரசியல் போராட்டம் என்கிற கருத்தை மூன்று வருடங்களுக்கு முன்பே, செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலேயே நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இராணுவ வாதத்தால் எல்லாவற்றையும் வெல்லலாம் என்ற புலிகளின் மிதமிஞ்சிய நம்பிக்கையும் இந்த கசப்பான முடிவுக்கு ஒரு காரணம். இதை நாம் நெடுமாறன் அவர்களிடமிருந்தோ அல்லது சீமான் பேசியோ, அல்லது வரதராஜனிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இதுதான் யதார்த்தம்.இன்றைக்கு மாவோயிஸ்டுகளை அரசியல் ரீதியாக வெல்ல வேண்டுமே தவிர அதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியாது என்று மேற்குவங்கத்தில் சொல்ல வேண்டிய கசப்பான யதார்த்தத்துக்கு வந்திருக்கிற நீங்கள் ஈழம் என்று வந்தால், புலிகள் என்று வந்தால் புலி எதிர்ப்பின் பெயரால் சிங்கள வெறியர்களுக்கு காவடி தூக்குகிறீர்கள். சமீபத்தில் லீனாமணிமேகலை ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பிரான்சில் இருந்து வந்திருந்த சுகன் சிங்களர்களின் தேசிய கீதத்தை பாடித்தான் தன் உரையை தொடங்கினார். (வாங்குன காசுக்கு ரொம்பத்தாண்டா கூவுறான் கொய்யால). ஆனால் அப்படி பாடுவதற்கு முன்னால் புலிகளையும் அவர்களுக்காக பாடல்கள் எழுதிய காசி ஆனந்தன் அவர்களையும் தன் அறிவால் உடைத்துத் தகர்த்து விட்டே இந்த மொள்ளமாரித்தனத்தை செய்தார் சுகன். மகாசேனனும், துட்டகைமுனுவும் பண்டாரவன்னியனையும், எல்லாளனையும் வென்றதைவிட கடினமான வெற்றி என்று தமிழ்மக்களை வென்றதை ஒரு வார விழாவாக கொண்டாடச் சொன்னான் பயங்கரவாத ராஜபட்சே. அதை சிங்கள தேசிய கீதத்தை சென்னையில் பாடி கொண்டாடிவிட்டுப் போனார் சுகன்.தேசத்துரோகிகளும், மறுத்தோடிகளும் எப்படி ஒரு தேசத்தின் அதுவும் பாசிச பயங்கரவாத தேசத்தின் கீதத்தை பாட முடியும் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்ப்பற்று என்று தாங்கள் நம்புகிற ஒன்றிற்காக, தமிழர், தமிழினம் என்று உணர்வுப்பூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கிற ஒன்றிற்காக ஆவேசமாகப் பேசும் தமிழகத்து ஈழ ஆதரவாளர்களை வைத்தே நீங்கள் ஈழ விடுதலையை அணுகுறீர்கள். புலிகளின் தோல்வியில் ஒட்டு மொத்தமாக சிதைக்கப்பட்டுக் கிடக்கும் மக்களின் பிணங்களின் மீது நின்று சிங்கள தேசியகீதத்தைப் பாடும் சுகன் போன்றோருக்கும், உங்களுக்காக நாங்கள் ஏன் போராட வேண்டும் எனக் கேட்கும் உங்களைப் போன்ற தலித்தியப் பார்வை கொண்ட மார்க்ஸ்சிஸ்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?புலி எதிர்ப்பு குறித்தும் இலங்கை இறையாண்மை குறித்தும் இன்றைய சூழலில் பேசுவதில் தான் ஆதாயம் அதிகம். புலி எதிர்ப்பு என்கிற கருத்துக்காக இலங்கை அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை புலத்தில் கொட்டுகிறது. சிங்கள தேசிய கீதத்தை பௌத்த மரபுக்குள் நின்று பாடுகிற சுகன்கள்தான் இன்றைய இலங்கைச் சூழலில் ஆயிரம் கருணாக்களுக்கு சமம். ஷோபாசக்தியோ, ஆதவனோ இலங்கை அரசிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படிப் பேசுகிறார்கள் என்று நான் நம்பவில்லை. பொதுவாக இப்படி பேசுகிறவர்களுக்கு தமிழகத்திலும் புலத்திலும் இலங்கை அரசு செலவு செய்கிறது என்பது உண்மைதான். ஆனால் புலி ஆதரவாளர்களுக்கு புலிகள் காசு கொடுப்பார்கள் என்பதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை. அவர்கள் நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வார்களே தவிர அவர்கள் யாருக்கும் கொடுத்தார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஆனால் புலத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் இங்கு புலிகளை எதிர்ப்போர், ஆதரிப்போர் என இருசாராரையுமே அங்கு அழைத்து விருந்து வைப்பதும் கவனிப்பதும் இருந்தது. அந்த வகையில் சிலர் புலத்திற்கு அழைத்தவர்களுக்கு நன்றியாக செயல்படுகிறார்கள். காப்பி கோப்பை கழுவியும், கார்பெட் துடைத்தும், டாய்லெட் க்ளீன் பண்ணியும் சம்பாதித்த காசில் இங்கிருந்து போய் வந்த சில புலி ஆதரவாளார்கள் இந்தத் தேர்தலின்போது புலிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தார்கள் என்பதைக் குறிப்பிடுவதோடு புலி ஆதரவாளர்களை விட புலி எதிர்ப்பாளார்களுக்கு கிடைக்கிற அனுகூலம் அதிகம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். தன்னார்வக்குழுக்கள், இலங்கை அரசு என பலதரப்பிலும் பணம் கொடுக்கிற ஒரு துறைதான் புலி எதிர்ப்பு. புலிகளின் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டத்தையோ, சகோதரப் படுகொலைகளையோ, சிறுபான்மை முஸ்லீம்களை துரத்தி விட்டதையோ - மாற்றுக்கருத்தோ கண்டனமோ இல்லாமல் நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என நினைக்கிறீர்களா? (புலிகளுக்கு மட்டுமல்ல அங்கு ஆயுதம் தூக்கிய எல்லா போராளிக் குழுக்களுக்குமே தெளிவான விடுதலைப் பார்வை இருந்ததில்லை.) இந்தியாவை நம்பியே ஈழப் போரை துவங்கினார்கள். சகோதரப்படுகொலையில் புலிகள் நடந்து கொண்ட விதத்தைத் தவிர, ஏனைய அமைப்புகளை விட புலிகள் சிறந்தவர்கள்தான். என்னைக் கேட்டால் நான் பார்த்த தலைவர்களுள் என்னைக் கவர்ந்தவரும், என்னில் நிறைந்திருப்பவரும் பிரபாகரன்தான். நீங்கள் ஆசியாவின் சேகுவேரா என்று பிரபாவை நக்கல் செய்தாலும் உண்மை அதுதான். தன்னையும் தன் பிள்ளைகளையும் களத்தில் பலியாக்கி வீரமரணமடைந்த பிரபாகரன், (பிரபாகரன் சரணடைந்து கெஞ்சினார்; உயிர்ப்பிச்சை கேட்டார் என்றெல்லாம் புலி எதிர்ப்பு சகோதரக் குழுக்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது தனி) - இலங்கைக்கு எதிராக ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதில் பெரும் பங்கு வகித்த க்யூபாவின் முன்னாள் போராளியான சேவோடு பிரபாகரனை ஒப்பிடுவதல்ல விஷயம் - உண்மையில் பிரபாகரன் என்கிற பிம்பம் ‘சே’வை தமிழக இளைஞர்களிடம் காலியாக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் யதார்த்தம்.புலிகள் மீதான விமர்சனங்களை ராஜபட்சேவின் தோள்களில் நின்று கொண்டு பேசுவதையோ, பாரதமாதாவின் முந்தானைக்குள் ஒழிந்து கொண்டு பேசுவதையோ நாங்கள் விரும்பவில்லை. காரணம் எமது மக்களை கொன்றொழித்தவர்களை நாம் எப்படி நண்பர்களாகக் கொள்ள முடியும்? இந்தப் போருக்குப் பிறகு ஒரு பேரினவாத, பயங்கரவாத அரசாகவே நான் ராஜபட்சேயையும் இலங்கை அரசையும் பார்க்கிறேன். இனி எப்போதும் தமிழ் மக்கள் சிங்களர்களுடன் சேர்ந்து வாழும் சாத்தியங்கள் இல்லை. ஆனால் இங்குள்ள சி.பி.எம் வரதாராஜனும், பிரகாஷ்காரத்துக்களும் இலங்கையின் இறையாண்மை குறித்தே கவலைப்படுகிறார்கள். விளைவு மேற்குவங்கத்திலும், கேரளத்திலும் உங்களின் கட்சி இறையாண்மை களவு போனது. மேற்கு வங்கத்தில் வரக்கூடிய காலங்களில் உங்கள் கட்சி அப்புறப்படுத்தப்படும்.பட்டாச்சார்யாக்களும், நாயனார்களும், யெச்சூரிகளும், நம்பூதிரிகளும், பிரகாஷ்காரத்துக்களும், பாப்பா உமாநாத்துக்களும், வாசுகிகளுமான பார்ப்பன தலைமையே மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலைமை. கேரளத்தில் அச்சுதானந்தன் தலித் என்று நீங்கள் சொல்லலாம். பாவம் என்ன செய்வது? மக்கள் செல்வாக்குப் பெற்றிருக்கும் அச்சுதானந்தனுக்கு கட்சியில் செல்வாக்கில்லை. கட்சி ஊழல் மன்னன் பிரணாய் விஜயனையே கொண்டாடுகிறது. விளைவு அச்சுதானந்தன் தனிக்கட்சி துவங்கும் ஆலோசனை கூட நடத்தினார்.நீங்களும் நானும் நம்பக் கூடிய தலித் அரசியலின் உரையாடலை நீங்கள் ஈழத்துக்கு எதிராக, புலிகளுக்கு எதிராக, எளிய தமிழ் மக்களின் இந்துக் கதையாடலுக்கு எதிராக வைத்து தமிழ் அரசியலை உடைத்தெறிகிறீர்கள். சிங்களப் பேரினவாதத்திற்கு மாறாக தமிழ்ப் பேரினவாதம் என்ற ஒன்றை முன்வைக்கிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். புலிகளின் ஜனநாயக மறுப்பை முன்னிட்டு வைக்கும் இந்த தமிழ்ப் பேரினவாதம் என்கிற அயோக்கியத்தனத்தை உங்களால் நிறுவ முடியுமா? மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் வன்னிப் போர் வடக்கில் மட்டும் ஐம்பதாயிரம் விதவைகளை உருவாக்கி இருக்கிறதாம். நான்காயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தவர்களாக, அன்றாடம் பாலியல் கொடுமை, கொலைகளுக்குள் வாழ்கிறார்கள். இவர்களா தமிழ்ப் பேரினவாதிகள்.தமிழர் உரிமைக் கோரிக்கையை உடைக்க நீங்கள் பயன்படுத்தும் தலித் அரசியலை உங்கள் கட்சிக்குள் ஒரு விவாதமாகவாவது வைக்க முடியுமா? நானும் உத்தபுரத்திற்காக எழுதினேன், சட்டக்கல்லூரி நிகழ்விற்காக எழுதினேன். ஆனால் உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் உத்தபுரத்திற்காக எழுதிய அளவுக்கு பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி வெறியின் பிடியில் இருந்து வதைக்கப்பட்ட சட்டக்கல்லூரி தலித் மாணவர்கள் குறித்து எழுதவில்லையே ஏன்? அதற்காக போராடவில்லையே ஏன்? சங்கரன்கோவிலில் கொல்லப்பட்ட இரண்டு தலித் சிறுவர்கள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை இங்கே தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள் இட்டுக் கட்டி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஜெர்மனியில் அகதிகளுக்கு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்தும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை பார்த்தும் இலங்கை அரசின் அனுசரணையோடும் வாழும் சுசீந்திரனை பொறுக்கி எடுத்து புது விசையில் நேர்காணலாக வெளியிட்டிருந்தீர்களே? அந்த நேர்காணலில் பதில்கள் மட்டுமல்ல, நீங்களும் யவனிகாவும் கேட்ட கேள்விகளுமே நக்கலாகத்தான் இருந்தது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி மரியாதைக்குரிய முத்துக்குமார் குறித்த கேள்விகள் எல்லாமே கிண்டல் தொனியில்தான் இருந்தது. புலி எதிர்ப்பின் பெயரால் பௌத்த மரபுக்குள் ஒழிந்து மக்கள் அழிவை ரசிக்கிற மனோநிலையில் இருக்கும் உங்கள் நண்பர்களும் நீங்களும் பேசுவதுதான் மார்க்ஸியமா? இது மார்க்சிய இனவாதம் இல்லையா? சமணக்காட்டை அழிக்க அன்றைய பார்ப்பான் சமணர்களைக் கழுவுவேற்றியதைப் போல இன்று பௌத்த மரபுக்குள் ஒழிந்து கொண்டு புலி எதிர்ப்பின் பெயரால் தமிழ் மக்களைக் கழுவேற்றுகிறார்கள் உங்கள் புலத்து நண்பர்கள். இதையே நீங்களும் செய்கிறீர்கள். இந்த சுசீந்திரனை அம்பலப்படுத்தி இணையம் வழியே ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது அதையும் உங்களுக்குத் தருகிறேன்.தமிழ்நதிக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், அவர்கள் ஊர் திரும்பிச் செல்வது குறித்து எழுதியிருந்தீர்கள். எந்தத் தமிழனும் வாழ்வதற்குரிய சூழலோ சுதந்திரமாக சென்று வரும் சூழலோ இலங்கையில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைய இலங்கைச் சூழலில் ஷோபாசக்தியோ, சுகனோ, நீங்களோ கொழும்பு சென்றால் உங்களுக்கு இலங்கை அரசின் சிகப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் உங்கள் பௌத்த மரபுதான் அங்கே இப்போது ரத்த வெறியோடு தமிழ் மக்களை வீழ்த்தியதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்ந்தியோ, புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த என்னை மாதிரி நபர்களோ இல்லை ஏனைய ஈழ ஆதரவாளர்களோ இலங்கைக்கு அல்ல இராமேஸ்வரத்துக்கே செல்ல முடியாத தமிழர் அரசியல் வீழ்ச்சியுற்ற இந்த நிலையைத்தான் சுகன் தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்.தமிழ்நதியால் தற்போது அங்கு செல்ல முடியாது என்பது தெரிந்திருந்தும் அவர் தமிழகத்தில் இருப்பது குறித்து கிண்டல் செய்கிறீர்கள். நீங்களோ நானோ நமக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறது. மனைவி குழந்தையோடு சந்தோசமாக வாழ்கிறோம். ஒரு அரங்கக் கூட்டம் என்பதும் மாற்றுக்கருத்து என்பதும் இந்த வாழ்வில் நாம் செலவிடுகிற மிகக் குறைவான இன்னொரு பகுதிதான். ஆனால் அவர்களுக்கு அப்படியல்ல. காலம் முழுக்க அவர்கள் இழப்புகளினூடே வாழ்கிறார்கள். இந்தியாவில் இருந்து இந்த அரசால் எப்போது துரத்தப்படுவோம் என்று அஞ்சி வாழ்கிறார்கள். அவர்கள் சகஜமான வாழ்வை இங்கு வாழ முடியவில்லை. ஆனாலும் தமிழகச் சூழல் ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. தமிழ்நதிக்கும் உங்களுக்கும் இடையிலான இலக்கிய, அரசியல் விவாதங்களை முன்னெடுக்கும்போதே அவரது உயிர்வாழ்வோடு தொடர்புடைய தமிழக இருத்தல் குறித்து நக்கல் செய்கிறீர்களே? புலத்தில் இருந்து வருகிற தமிழ்நதி ஆனாலும் சுகன் ஆனாலும் ஷோபாசக்தியானாலும் அவர்களுக்குக் கிடைக்கிற மரியாதை இலங்கையில் இருந்து கள்ளத்தோணி வழியாக முகாம்களுக்கு வருகிற ஏழைத் தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை. அகதி என்றால் மேற்குலகில் இருந்து வருவோரே என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருந்தாலும் அவர்கள் இங்கு சந்தோசமாக இல்லை. அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. போவதற்கு இடம் இருந்தால் போவார்கள். ஆகவே அவர்களை ‘‘இப்போ உங்க நாட்டுக்கு போங்களேன் பாப்போம்’’ என்று வெவ்வே காட்டாதீர்கள். அது அசிங்கமானது.தமிழக தமிழ்த் தேசியவாதிகள் குறித்து...பொதுவாக புலி ஆதரவாளர்கள் என்றும் தமிழ் தேசியவாதிகள் என்றும் அழைக்கப்படுகிற தமிழக ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே ஒத்த கருத்துடையவர்கள் அல்ல. சாதி ஒழிந்த தமிழ் தேசியம் பேசும் குழுக்கள், சுயநிர்ணய உரிமை பேசும் மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற இடது அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம் போன்ற தீவிர பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள், அப்புறம் நெடுமாறன், சீமான் போன்றவர்கள். இதை விட ஆர்.எஸ்.எஸ். நகைமுகன் போன்றோர் கூட தமிழர் விடுதலை குறித்துப் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாம் நமக்கு பிடித்தவர்களாகவும் பிடிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள். தலித் அரசியலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே ஈழ விடுதலையை எறிந்து விடுவீர்களா என்ன? தலித் மக்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை, அருந்ததியினரின் உள் ஒதுக்கீடு கோரிக்கை, சட்டக்கல்லூரி, உத்தபுரம் போன்ற விவகாரங்களில் தமிழ் தேசியவாதிகளின் கள்ள மவுனத்தை நான் வெளிப்படையாக தீவீரமாக கண்டித்திருக்கிறேன். ஆனால் சீமான் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார் என்கிறீர்கள். ஈழம் தவிர இட ஒதுக்கீடு, பார்ப்பன எதிர்ப்பு தொடர்பாகவும் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவரது ஈழக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு. உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாத, காலியாக உள்ள இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்ன போது அதை வரவேற்று அறிக்கை விட்ட ஒரே தமிழ் தலைவன் யார் தெரியுமா? சி.பி.ஐ.எம் வரதராஜன்தான். பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் முலாயம் சிங் யாதவ் உள் ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்கிறார். மார்க்ஸ்சிஸ்டுகள் குதியோ குதி என்று குதிக்கிறார்கள். எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது பத்து பார்ப்பனர்கள் தலைவர்களாக வந்தார்கள் என்கிற பழைய டயலாக் இன்றைய சி.பி.ஐ.எம் -க்கும் பொருந்தும்.வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்கள் பெருந்தன்மை, அன்பு, கருணை, கரிசனம் இந்த வார்த்தைகளை எல்லாம் இப்போது நான் அதிகமாகக் கேட்கிறேன். சுகன் கூட இப்படி ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகளை அன்றைக்குப் பேசினார். கேட்பதற்கு ‘திவ்யமாக’ இருந்தது. ஆனால் இந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்ப்பணிப்பு உங்களிடம் இருக்கிறதா? வெறுப்புணர்வுக்கு எதிரான முகமென்றால் உங்களுக்கு உடனே தெரிவது இந்து ராமைத்தான். ஆமாம் கொலைகார ஜெயேந்திரனின் சிஷ்யப் பிள்ளையும் குட்டி காமுகனுமான விஜயேந்திரனை தன் காரில் வைத்து ஹைதராபாத்தில் இருந்து அழைத்து வந்த மார்க்சிய முகமூடியான இந்து ராமிடம் இருந்தே தற்காலத்தில் வெறுப்புணர்வுக்கு எதிரான முகமும் இந்த வார்த்தைகளும் பிறக்கின்றன. சந்திரிகாவிடம் எப்போது அவர் சிங்கள கேல் விருது பெற்றுக் கொண்டாரோ அப்போதே அவரது வெறுப்புக்கு எதிரான முகமூடி கழண்டு அம்மணமாகிவிட்டது. ஆனால் அதே இந்து ராமுடன் கூட்டு சேர்ந்துதான் சிபிஐஎம் ஈழப் பிரச்சனையில் நிலைப்பாடு எடுக்கிறது; வெறுப்புணர்வுக்கு எதிரான கூட்டம் நடத்துகிறது. சிங்கள பாசிஸ்ட் கட்சியும் இனவெறிக் கட்சியுமான ஜே.வி.பி-க்கும் மார்க்ஸ்சிஸ்டுகளுக்குமான தொடர்பு ஆழமாக நோக்கப்பட வேண்டியது. சென்னையில் நடக்கும் இவர்களின் மாநாட்டுக்கு அவர்கள் கொழும்பில் இருந்து வருவதும் கொழும்பில் நடக்கும் அவர்களின் மாநாட்டிற்கு இவர்கள் செல்வதுமாக இந்து ராம், ஜே.வி.பி, மார்க்ஸ்சிஸ்ட் கூட்டுதான் ஈழத்தின் மீதான் கொலை வெறிக் கொள்கையை கொண்டிருக்கிறது. ஆதவனின் ஈழ எதிர்ப்பு நிலைப்பாட்டை தலித்திய அரசியலில் இருந்து அணுகுவதென்பது ஷோபா சக்தியின் சிந்தனை. அவருடைய இன்னொரு கூந்தல் நடிகன்தான் சுகன். ஒருவர் பௌத்தமரபு, ஒருவர் மறுத்தோடி, இன்னொருவர் தலித் அரசியல் நிலைப்பாடு கொண்டவர். புலி எதிர்ப்புக்கு ஒன்று சிங்கள் அரசு ஆதரவிற்கு ஒன்று என்று மிகத் துல்லியமான அமைக்கப்பட்டிருக்கும் குழு.சிபிஐஎம்-என் அறிவிக்கப்படாத லோக குரு இந்துராம். இந்துராமின் அயலுறவுக் கொள்கைதான் சிபிஐஎம்-ன் அயலுறவுக் கொள்கை. கட்சி வளர்த்துவிட்ட செக்குமாட்டு சிந்தனைகளின் வார்ப்புதான் ஆதவன் போன்றவர்களின் ஈழப்பிரச்சினை நிலைப்பாடு. தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்களை சுசீந்திரன் போன்ற புலியெதிர்ப்பு குழுவினரிடமிருந்து உருவியெடுத்து தலித் அரசியல் நிலைபாட்டில் இருந்து ஈழத்தை அணுகுகிறார் தோழர்.ஈழத்தில் இந்து மதமும் சாதியும் இருக்கிறது என்ற உலக மகா கண்டுபிடிப்பு ஒன்றை இவர்கள் பிரான்சுக்கும் ஜெர்மனுக்கும் போய் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று வரை இந்துப் பாசிச பார்ப்பனக் கருத்தியல் குறித்து மார்க்ஸ்சிஸ்டுகளுக்கு தெளிவான பார்வையே கிடையாது. பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை தந்தை பெரியாரை இழிவுபடுத்தி காந்தியை வைத்து ஜல்லி அடித்துக் கொண்டிருந்தவர்கள்தான் இவர்கள். இங்குள்ள மார்க்ஸ்சிஸ்ட் கட்சியில் தலித்தியத்திற்கோ, பெரியார் சிந்தனைகளுக்கோ துளியும் இடம் கிடையாது. நிலைமை இப்படி இருக்க ஆதவன் பேசுகிற நம்புகிற கொள்கைகளை குறைந்த பட்சம் கட்சியின் மாநிலக் குழுவிலாவது வைக்க முடியுமா? என்ன செய்ய? பில்டிங்கு ஸ்டிராங்கு! பேஸ்மெண்டு கொஞ்சம் வீக்கு!!சாதி எங்கே இருக்கிறது? இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சாதி இருக்கிறது. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், ஏன் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது. அதனால்தான் ஈழத்தில் இந்தியத் தமிழர்களை வெள்ளாளத் தமிழர்கள் அவமானப்படுத்துகிறார்கள்; இங்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்டு, பார்ப்பன மார்க்சிஸ்ட் தலைவர்கள் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். வெள்ளாளத் தமிழர்களுக்காக ஈழப்பிரச்சினையை ஒதுக்கும் ஆதவன், கிரீமி லேயர் கேட்கும் சிபிஐஎம் கட்சியை ஒதுக்காமல் அண்டியிருப்பது ஏனோ? எல்லா இடத்திலும் இருக்கிறது ஆகவே அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. இனவாதமும் இனக் கொலைகளுமே ஒரு நாட்டின் கடந்த கால நிகழ்வாக இருக்கும் போது அதை எதிர்கொள்ளத் துணியாமல் புலிகளையிட்டு தலித்தியத்தின் பெயரால் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா? கட்சியின் அடுத்த விசாரணையை அவர் சந்திக்க வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநாடுகள், பொலிட்பீரோ கூட்டங்கள் நடத்திய பின்னர்தான், சாதியை ஒரு பிரச்சினையாக பார்க்கும் தெளிவு மார்க்சிஸ்ட்களுக்கு வருகிறதென்றால், அந்தத் தெளிவை உயிர் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லாது, போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் ஆதவன் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்பதற்காகத்தான் கேட்கிறேன்.ஆதவன் நீங்கள் தலித் அரசியலில் இருந்தால் மார்க்ஸ்சிஸ்டாக இருக்க முடியாது. நான் தலித் அரசியலில் இருந்து கொண்டே தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது இதுதான் யதார்த்தம். தமிழகத்தில் தமிழ், தமிழன், தமிழினம். திராவிடர் என்கிற ஒற்றை அடையாளத்தின் கீழ் இணைவதை நான் எதிர்க்கிறேன் காரணம், தலித் அரசியல் நிலைப்பாடுதான். ஆனால் ஈழத்தில் அப்படியல்ல. அது சாதீய சமூகமாக இருந்தாலும் இனப்படுகொலையும் இன முரணுமே அங்கு பிரதானம். எப்படி ‘‘வர்க்கப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும்’’ என்று உங்கள் மார்க்ஸ்சிஸ்டுகள் சொல்கிறார்களோ அது போல ஈழத்திலே தமிழ் தேசியப் புரட்சி நடந்தால் சாதி ஒழிந்து விடும் என்று நான் சொல்லவில்லை. அந்த முட்டாள்தனமும் எனக்கில்லை. ஆனால் அந்த தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் செயல்படாதன்மையை பயன்படுத்தி தலித்தியம் என்கிற அரசியலை உங்களின் புலி எதிர்ப்பு அரசியலுக்கு இனியும் பயன்படுத்தாதீர்கள். அதிலிருந்து உங்களுக்கு ஆதாயமாக பொய் பிரச்சாரம் செய்யாதீர்கள். “ஆமாம் ஆதவன் ஒரு மநு விரோதி எப்படி மநுவின் நிழலில் அரசியல் செய்ய முடியும்?”குறிப்பு:(ஈழ நிலைப்பாடு ஒன்றை மட்டுமே வைத்து, ஆதவனின் தலித் அரசியல் – இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடுகளில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. மாறாக இவற்றிலெல்லாம், அவரது கட்சி நிலைப்பாடே அவருக்கு எதிராக இருக்கும்போது ஏன் ஷோபா சக்தியின் ஸ்பீக்கரை இங்கே ஒலிக்க வேண்டும்? ஷோபாவே நேரடியாக இங்கே பேசலாம். அதற்குத் தடை ஒன்றும் இல்லை.)இந்து ராமின் மார்க்ஸ்சிஸ்ட் முகமூடி கட்டுரையை எழுதி முடித்து, ‘அப்பாடா’ என்று கீற்றிற்கு அனுப்ப இணைய தளத்தில் உலாவியபோது இந்தச் செய்தி கண்ணில்பட்டது.மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்காணிப்பு முகாம்கள் என்று இலங்கை அரசாலும் இந்து ராமாலும் அழைக்கப்படும் வதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கிறார்கள். அன்றாடம் பாலியல் கொடுமைகள் அதன் விளைவாய் தற்கொலைகள் என்று ஓர் இனமே அழிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு பாசிச கொடூர மிருகங்களிடம் சிக்கியிருக்கிறது. முகாம்கள் குறித்து அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த மேற்குலக ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை மனித உரிமை அமைப்புகளையோ தொண்டு நிறுவனங்களையோ முகாம்களுக்குள் அனுமதிக்க மறுக்கிற இலங்கை அரசாங்கம் அங்கு அன்றாடம் கொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் கேள்விக்கிடமின்றியும் சாட்சியங்களின்றியும் நடத்தி வருகிறது.உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மேற்குலக ஊடகவியலாளர்களை அனுமதிக்காத இலங்கை அரசு முகாம்களைப் பார்க்க அழைத்துச் சென்றது யாரைத் தெரியுமா? மார்க்சிஸ்ட் முகமூடியை அணிந்து முற்போக்கு பேசிவரும் இந்து ராமை... பார்ப்பன வெறி பிடித்த இந்து ராம் இப்போது முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு இலங்கை அரசிற்கும் ராஜபட்சேவுக்கும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். தோழர் ஆதவன் அவர்களே வெறுப்புணர்வுக்கு எதிரான முகங்களின் யோக்கியதை இப்போதாவது தெரிகிறதா? அது மட்டுமல்ல இலங்கைக்கு இப்போது ராஜமரியாதையோடு செல்லத் தகுதியானர்கள் யார் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.அந்த செய்தி இதோ,சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன - இந்து ராம் கூறியதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது:இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர், முகாம்களை பார்வையிட்டுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள ராம், சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன என்பதை இதன்போது தன்னால் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.சர்வதேச ஊடகங்கள் முகாம்களுக்கு சென்று உண்மை நிலைமையை அறிக்கையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தமிழ் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக முகாம்களில் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மக்களின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றுவார் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இந்து பத்திரிகையின் ஆசிரியர் கடந்த காலம் முதல் இலங்கை ஆட்சியாளர்களுக்கு சாதகமான முனைப்புகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் இலங்கை ஆட்சியாளர்களுடன் நெருங்கி தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.நன்றி- http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=11424&cat=1வாங்குன காசுக்கு sorry சந்திரிகாவிடம் வாங்குன விருதுக்கு ரொம்பதாண்டா கூவுறான்...கொய்யா...ல. என்று போய் விடலாம். ஆனால் நம் மௌனம் அப்படி அமைதியடைய மறுக்கிறது.ஒரு இனமே அழிந்து கண்ணீரிலும் இயலாமையிலும் தவித்துக் கொண்டிருக்கும் போது கொலைகார இராணுவத்துக்கும் கொடூர ராஜபட்சேவிற்கும் சான்றிதழ் கொடுக்கும் இம்மாதிரி மநுவாதிகளை மக்கள் விரோதிகளை, ஆதவன், முடிந்தால் அம்பலப்படுத்துங்கள். - டி.அருள் எழிலன் (arulezhiland@gmail.com)

Wednesday, July 1, 2009

தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்கோ.ரகுபதி

வர்க்கம் மற்றும் மொழி முரண்பாட்டினை விடவும், குறிப்பாக தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையே சாதியடிப்படையிலான முரண்பாடே அடிப்படையான முரண்பாடாக இருந்து வருகிறது. தலித்துகளுக்கு சட்டம் வழங் கியிருக்கும் உரிமையினை அடைவதற்கு அவர்கள் முற்படும் பொழுது, அவ்வுரி மையை புறக்கணிப்பதற்கு தலித்தல் லாத சாதிகள் ஒன்றிணைவதில் சாதியே அடிப்படையான முரண்பாடாக செயல் படுவதைக் காணமுடியும். இம்முரண் பாடு தலித்துகளை சமூகப் பொருளாதார தளத்தில் விலக்குவதில் தொடங்கி அவர் களின் சொத்துக்களை சூறையாடுதல், வீடுகளை எரித்தல், பாலியல் வன் புணர்ச்சி, படுகொலை செய்தல் என்ற கட்டத்தை அடைந்து இறுதியில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுகின்ற நிலையில் முடிவடைகிறது. ஆனால் தலித்துகள் பொருளாதாரத்தில் மட்டு மின்றி எண்ணிக்கையிலும் சாதி இந்துக் களை எதிர்த்து தாக்கும் அளவிற்கு வலிமையுடன் இருக்கின்ற பகுதி களில் தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக் கும் இடையிலான முரண்பாடு உக்கிர மான மோதல் வடிவத்திற்கு சென்றுவிடு கிறது. அம்பேத்கரின் நூற்றாண்டு விழா வினையட்டி தலித்துகளின் எழுச்சி, வேலையின்மை, இடஒதுக்கீட்டின் விளைவினால் முன்னேற்றமடையும் தலித்துகளின் மீதான வெறுப்பு போன் றவை தலித்துகளுக்கும் தலித்தல்லாதோ ருக்கும் இடையிலான மோதலுக்கான காரணங்களாக கூறப்பட்டிருக்கின்றன; இவற்றினை புறக்கணிக்க இயலாது அவைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இருப்பினும், கிராம அளவில் நுணுக்க மான ஆய்வினை மேற்கொள்கிற பொழுது பன்னெடுங்காலமாய் தலித்து களை சமூகப்-பொருளாதார பண்பாட்டு மற்றும் அரசியல் செயல்பாட்டில் பங் கேற்பதிலிருந்து திட்டமிட்டே விலக்கி வைத்தலும், இவற்றில் முழுமையாகப் பங்கேற்பதற்கு அல்லது அவற்றினை அனுபவிப்பதற்கு தலித்துகள் முயற்சிக் கிற பொழுது அதனையும் சாதி இந்துக் கள் தடுப்பதனால் மோதல் நடைபெற்றி ருப்பதனைக் காணமுடிகிறது. இங்கு நுணுக்கமான ஆய்வினை மேற் கொள்வதற்கு முயற்சிக்கவில்லை, மாறாக தலித்துகளுக்கு எதிரான சாதி இந்துக்களின் கொடூர மான வன்முறையில் இந்துத்துவ அமைப்புகள் பெரும் பங்காற்றி இருப்பினும், அது குறித்த விவாதம் சமூக அறிவியல் புலத்தில் இல்லாதிருக்கிறது; மேலும், தலித்து களுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையேயான மோதல் சாதிகளுக்கிடையேயானது என்ற நோக்கு மேலோங்கி இருக்கிறது. எனவே, தலித்துகள் மீதான வன்முறையில் இந்துத்துவ அமைப்புகளின் பங்கினை எடுத்துரைப்பதற்கு இக்கட்டுரை முயற்சிக்கிறது.தேவர், தேவேந்திரர்: இந்து, இசுலாம்சமூகப்-பொருளாதார பண்பாட்டு மற்றும் அரசியல் செயல்பாட்டில் பங்கேற்பதிலிருந்து தலித்துகளை திட்ட மிட்டே விலக்கி வைப்பதில் தென் மாவட்டங்களில் முன்னணியாய் இருந்து வருகின்ற சாதிகளுள் தேவர்களும் ஒரு பிரிவினர். இவர்களோடு கடந்த நூற்றாண்டில் தீண்டாமை உட்பட இதர சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற்ற சாதியான நாடார் முதற்கொண்டு பார்ப்பனர் வரை இணைந்திருப்பினும் வெளிப்படையாக பேசப்பட்டிருப்பது தேவர் சாதியினரை குறித்து மட்டுமே. இப்பிரிவினர் தலித்துகளுக்கு எதிரான கொடூர வன்முறையில் முன்னணியாக ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை வெளி உலகம் அடையாளம் கண்டுகொண்டது. ஆனால் அவர்களுக் கும் பல்வேறு இந்துத்துவ அமைப்பு களுக்கும் உள்ள தொடர்பு குறித்தோ அல்லது தலித்துகளுக்கு எதிரான வன் முறையில் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடு குறித்தோ அதிகம் பேசப்பட்டிருக்கவில்லை.காலனிய ஆட்சி உருவாக்கிய குற்றப் பரம்பரை சட்டத்தினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாயிருந்த சாதிகளில் ஒன்றான தேவர்கள் இந்துமதத் தீண்டாமைக் கொடுமையையும் ஏற்றத்தாழ் வினையும் எதிர்த்து செயல்பட்டுவந்த சமூக இயக்கங்க ளோடு தங்களை இணைத்துக் கொள்ளாமல் அதிலிருந்து விலகியே இருந்தனர். ஆனால் சிந்தனை அளவிலும் செயல ளவிலும் பெரும்பான்மையான தேவர் சாதியினர் இந்து மதத்தின் கருத்தியலோடும் அதனை செயல்படுத்துவதிலும் ஒன்றிணைந்திருந்தனர். இதற்கான உதாரணமாக பின்வரும் வரலாற்று நிகழ்வினை குறிப்பிடலாம்: 1930களின் தொடக் கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவர்கள் தலித்துகள் கடைபிடிக்க வேண்டுமென அறிவித்த பண் பாட்டுக் கட்டளைகளானது 1928ம் ஆண்டு மத்திய இந்தியா வில் இந்தூர் மாவட்டத்தில் பார்ப்பனர்கள், ராஜ் புத்திரர்கள் முதலிய சாதி இந்துக்கள் தலித்துகள் மீது விதித்த விதி களோடு ஒத்து இருக்கிறது.2 இது தேவர் சாதியினர் கருத்தியல் மற்றும் செயல்பாட்டு அளவில் பார்ப்பனர் மற்றும் மேல்சாதி இந்துக்களின் இந்துப்பண்பாட்டிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துரைக் கிறது. குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய தலைவர்களுள் ஒருவரும் குறிப்பிடத்தக்க அளவு தேவர் சாதியினரின் ஆதரவினைப் பெற்றிருந்தவருமான முத்து ராமலிங்கத் தேவர் தன்னை இந்து மதத்தோடே ஐக்கியப் படுத்தியிருந்தார். மேலும், முதுகுளத்தூர் அருகே அபிராம் கிராமத்தில் 1946ல் அமைக்கப்பட்ட இந்து மகா சபையின் தலைவராகவும் இருந்தார்.3 இந்துத்துவத்தின் முன்னோடி யான கோல்வால்கரை அழைத்து பொன்முடி பரிசளித்தார்.4 இந்து மகா சபைத் தலைவர் தேஷ் பாண்டே, இந்து மகா சபையின் செயல்பாடுகளை பரீசிலனை செய்யவும், தேர்த லில் இந்து மகா சபைக்கு தமிழகத்தின் தலைமையினை முத்துராமலிங்கத் தேவரை ஏற்றுக்கொள்ளுமாறும் தமிழகத்தில் கணபதி என்பவர் மூலம் கேட்டுக்கொண்டார். முத்துராமலிங்கத் தேவர் இக்கோரிக்கையினை ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் அவர் எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் இந்து மகா சபாவிற்கு ஆதரவாக செயல்படு வதாக உறுதியளித்தார்.5 இந்த நிகழ்வுகள், தேவர்களின் ஒப்பற்றத் தலைவரும் அம்மக்களும் இந்துத்துவத்தோடு அணிசேர்ந்திருந்தனர் என்று முடிவு செய்வதற்கே அழைத்துச் செல்கிறது.சாதிய அமைப்பில் தீண்டாமை உட்பட பல்வேறு ஒடுக்கு முறைக்கு உள்ளாகின்ற தலித்துகளில் பள்ளர் எனப்படும் தேவேந்திரர்களும் அடக்கம். காலனி ஆட்சிக் காலத்தில் சாதிய அமைப்புகள் மூலம் தமது சமூக நிலையினை முன் னேற்றிக் கொள்வதற்கு முயற்சித்த இவர்கள் சாதிய கட்ட மைப்பில் தாக்குதலை ஏற்படுத்தும் மதமாற்றத்தையும் விடுதலைக்கான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அம்பேத்கரின் மதமாற்ற அறிவிப்பிற்கு முன்பிருந்தே தேவேந்திரர்கள் மதமாறத் தொடங்கினர். இந்து மயமாகி விட்ட கிறிஸ்துவத்தில் சமூக விடுதலை இல்லை என்பதை புரிந்து கொண்ட தலித்துகள் கிறிஸ்துவத்திற்கு மாற்றாக இசுலாம் மதத்தை தேர்வு செய்திருக்கின்றனர், 1940களில் இம்மாற்றம் தேவேந்திரர்களிடத்தில் நிகழ்ந்திருப்பதனைக் காணமுடிகிறது.6 திருநெல்வேலி அருகே உள்ள சீதைக் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரர்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்ததால் இசுலாம் மதத்தினை 1944ம் ஆண்டு தழுவினர்.7 1945ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சில கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திரர்கள் சுமார் 2000பேர் இசுலாம் மதத்திற்கு மாறியுள்ளனர். 1947ம் ஆண்டு ராமநாதபுரத்தில் தேவேந்திரர் ஒருவரை கோயிலி னுள் வழிபடுவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் அவர் இசுலாம் மதத்தைத் தழுவினார்.எவ்வித அமைப்புகளின் துணையின்றியும் நடைபெற்ற தேவேந்திரர் களின் இசுலாம் மதமாற்றத்திற்கு எதிரான வன்முறையினை இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டன. ஆர்.எஸ்.எஸ். இயக்கம், சீதைக்குறிச்சி தேவேந்திரர்களின் இசுலாம் மதமாற்ற நிகழ்வினையட்டி திருநெல்வேலி யில் முகாம் நடத்தியது.8 இந்து மகா சபையோ பொய்ப் பிரச்சாரம் செய்வ தற்கு ஒருவருக்கு பணம் கொடுத்து திருநெல்வேலிக்கு அனுப்பியது. ஆரிய சமாஜம் தலித்துகளை மீண்டும் இந்து மதத்திற்குள் இழுப்பதற்கு முயற்சித்து தோல்வி அடைந்துவிட்ட தால் தேவர் சாதியினரைக் கொண்டு தேவேந்திரர்களைத் தாக்கியது.9 இதனால் அங்கு பதற்றம் உருவாகியது, தாக்குதலும் எதிர்த்தாக்குதலும் நிகழ்ந் திருப்பினும் கொலைகள் நிகழ்ந்திருக்கவில்லை. இச் சூழலில் சென்னையில் இந்து மிஷன் இயக்கம் கோபதி நாராயணசாமி செட்டி தலைமையில் நிறுவப்பட்டது. தலித்துகள் மதம் மாறுவதைத் தடுப்பதும், தீண்டாமை யினை ஒழிப்பதும் இந்த இயக்கத்தின் இலக்கு என அறிவித் தது,10 ஆனால் தீண்டாமையை ஒழிப்பதற்கு அவ்வியக்கம் என்ன முயற்சி எடுத்துக்கொண்டது என்பது தெரிய வில்லை. இதிலிருந்து தலித்துகளின் சமூக விடுதலைக்கு எதிரான செயல்பாட்டினை இந்துத்துவ அமைப்புகள் தேவர் சாதியினர் மூலம் காலனி ஆட்சிக்காலத்திலேயே செயல்படுத்தியிருப்பது தெளிவு. ஆதலால் தேவர்களையும் தேவேந்திரர்களையும் இவ்வாறும் புரிந்துகொள்ள வேண் டும்: மத அரசியலில் முரண்பட்டிருக்கும் இந்துத்துவத் தோடு தேவர்களும் இசுலாமோடு தேவேந்திரர்களும் இணைந்திருந்தனர். சமூக விடுதலையை இலக்காகக் கொண்டிருக்கும் தலித்துகளின் இசுலாம் மதமாற்றம் இந்துத் துவத்தோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் தேவர் சாதியினருக்கு விரும்பத்தக்க ஒன்றல்ல; அது வெறுக்கத்தக்கதே. தேவர்சாதியினர் மட்டுமின்றி, காலனிய ஆட்சிக்குப் பின்னர் இந்துக்களே இந்திய ஆளும் வர்க்கமாக மாறியதால் அவ் வர்க்கத்திற்கும் தலித்துகளின் இசுலாம் மதமாற்றம் விரும்பத்தகாததே. பொது வாகவே, இந்துமதக் கருத்தியல்களையும் அதுசார்ந்த மதிப்பீடுகளையுமே மிகுதி யாக பரப்புரைக்கும் பணியை காட்சி மற்றும் அச்சு ஊடகங் கள் செய்து வருகின்ற பொழுது இசுலாத்தை தழுவுகிற மக்கள்மீது கசப்புணர்வு ஏற்படுவது இயல்பானதாகி விடு கிறது.11 எனவே சமூக ஒடுக்குமுறையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு தலித்துகள் எடுத்துக் கொண்டி ருந்த இசுலாம் மதமாற்றத்திற்கு ஆதாரவான சூழல் நிலவி யிருக்கவில்லை என்ற பின்புலத்தோடு தலித்துகள் மீதான ஒடுக்குமுறையை காண்போம்.இந்துக்களை உலுக்கிய மதமாற்றம் தமிழகத்தில் காலூன்ற முயற்சித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இசுலாம் எதிர்ப்பு அரசியலையே முன் னெடுத்தது; ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் ‘அரிஜனங்கள்’ இசுலாமிய அமைப்பின் தூண்டுதலால் மதம் மாறத் திட்டமிட்டிருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் 1980களின் தொடக்கத்தில் பிரச்சாரம் செய்தது.12 இதே காலக்கட்டத்தில் தீண்டாமைக் கொடுமை உட்பட பல்வேறு ஒடுக்கு முறைக்கு உள்ளாகிக் கொண்டிருந்த தென்காசி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் தேவேந்திரர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்தனர். 1981ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் சுமார் 1500 தேவேந்தி ரர்கள்13 இசுலாம் மதத்திற்கு மாறிய நிகழ்வு இந்திய அளவில் இந்துத்துவவாதிகளை உலுக்கியது, அவர்களில் பலரும் மீனாட்சிபுரத்திற்கு படையெடுத்தனர். ஆர்.எஸ். எஸ்., விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் தலித்துகள் மீதான சாதி இந்துக்களின் ஒடுக்குமுறையை கண்டிப்பதற்கு பதிலாக இசுலாமியர்களின் நிர்ப்பந்தத்தால் தலித்துகள் மதம் மாற்றப்பட்டதாக பொய்ப் பிரச்சாரம் செய்தது.14 விசுவ இந்து பரிஷத் ‘மறுமத மாற்றம்’ என்ற முழக்கத்தினை முன்வைத்து மீனாட்சிபுரம் அருகே உள்ள பண்பொழில் என்ற ஊரைச் சேர்ந்த பார்ப்பன நிலக் கிழாரின் உதவியுடன் மீனாட்சிபுரத்திற்குள் நுழைந்தது, ஆரிய சமாஜமும் இதே செயலைச் செய்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பேய், சுப்பிரமணிய சுவாமி (ஜனதா தள்), ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் ரெங்கசாமித் தேவர் உட்பட பலர் “அரபு நாடுகளின் பணத்தின் மூலம் மத மாற்றம் செய்யப்பட்டதாக பொய்ப் பிரச்சாரம் செய்தனர்”. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் மற்றும் சாதி இந்துக்களை ஒருங்கிணைத்து நடத்திய கூட்டத்தில் சாதி மோதல் மற்றும் ‘ஹரிஜன்’ இசுலாத்திற்கு மதம் மாறுவது குறித்து பேசப் பட்டது. பின்னர் அவர்கள் அங்கே ‘இந்து முன்னணி’ என்கிற அமைப்பினை ராம்கோபாலன் தலைமையில் உரு வாக்கினர். 15 மீனாட்சிபுரம் மதமாற்றத்திற்குப் பின்னர் அப் பகுதியில் மட்டுமின்றி திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். செயல்படத் தொடங்கியது.16 அவ்வியக்கம் சாதி இந்துக்கள் தலித்துகள் மீது கடைபிடித்து வரும் தீண்டாமை மற்றும் ஒடுக்குமுறையை ஒழிப்பதற்கு மாறாக தலித்துகள் மற்றும் இசுலாமியர்களுக்கு எதிராக தேவர் சாதியினர் மூலம் இடைஞ்சல்கள் செய்யத் தொடங்கியது.இச்சூழலில் புளியங்குடி அருகே ஒரு இடத்தில் 1982 மார்ச் மாதத்தில் தனியார் பேருந்து ஒன்று தேவேந்திரர் சாதி யினைச் சேர்ந்த ஒருவரின் மாட்டு வண்டி மீது மோதியதில் மாட்டுக் கொம்பு ஒடிந்துவிட்டது. அத்தனியார் பேருந்து ஒதுங்கி செல்வதற்கு இடமிருந்தும் மாட்டு வண்டியில் மோதியதால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி உரிமை யாளரும் அவரது மகனும் பேருந்து ஓட்டுநரை தாக்கினர். பேருந்து ஓட்டுநர் தேவர் சாதியினைச் சேர்ந்தவர் என்பதால் தேவர்கள் தேவேந்திரர்களைத் தாக்கினர், பதிலுக்கு தேவேந் திரர்களும் தேவர்களைத் தாக்கினர். பின்னர் தேவர்களோடு காவல் துறையினரும் இணைந்துகொண்டு தேவேந்திரர் களை தாக்கினர், அவர்களின் நெல் வயல், வாழைத்தோப்பு போன்ற சொத்துக்களை அழித்தனர். காவல்துறை பாதிக்கப் பட்ட தேவேந்திரர்களையே கைதுசெய்து சிறையில் அடைத்தது. அரசு அதிகாரிகளிடமும் அரசியல் கட்சி தலைவர்களிடமும் தேவேந்திரர்கள் முறையிட்டும் எந்த வித பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படாததால் வெறுப்புற்ற தேவேந்திரர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கட்சி கொடிகளை அப்புறப்படுத்திவிட்டு தங்கள் சாதிச் சங்க கொடியினை ஏற்றினர். இச்சூழலில் அப்பகுதியினைச் சேர்ந்த முஸ்லீம்களும் தேவேந்திரர்களும் இணைந்து சகோதர சமத்துவ சங்கத்தினை ஆரம்பித்தனர். அரசு சலுகை கள் பெறுவது, சமுக பாதுகாப்புக்கு ஒத்துழைப்பது, வெளி யூர்களிலிருந்து இப்பகுதிக்கு அரசு பணிகளுக்கு வருகின்ற தலித் மற்றும் இசுலாமியர்களுக்கு உதவி செய்வது போன்றவையே சகோதர சமத்துவ சங்கத்தின் நோக்கம் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.17 இச்சங்கம் சார்பில் அம்பேத்கர் மற்றும் காயிதே மில்லத் பிறந்த நாள் விழா 8 ஜூன் 1982 அன்று கடையநல்லுரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேவர், நாடார், வெள்ளா ளர், கோனார் சாதியைச் சேர்ந்தோர், ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர் இணைந்து புளியங்குடி செல்லையா கட்டிடத்தில் கூட்டமொன்று நடத்தினர்; அதில் சகோதர சமத்துவ சங்கத்தின் விழா அன்றே தாங்களும் விழா நடத்துவது, கட்சி வேறுபாடின்றி சாதி இந்துக்கள் ஒன்றிணைவது என்று முடிவு செய்தனர்.இந்துத்துவத்தோடு கைகோர்த்திருந்த மேல் மற்றும் இடை நிலைச் சாதிகள், காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சியினர் 8 ஜூன் 1982 அன்று பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். புளியங்குடி நகர் முழுவதும் மஞ்சள் நிறத்திலான பட்டுத் துணியில் ஓம் என்று எழுதி பறக்க விட்டிருந்தனர். மேல் மற்றும் இடைநிலைச் சாதியினர் சுமார் 7000 பேர் ஊர்வலத் தில் பங்கேற்றிருந்தனர்; பள்ளர், பறையர், சக்கிலியர் மற்றும் முசுலீம்கள் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப் படத்தக்கது. ஊர்வலத்தில் அரிவாள், கம்பு மற்றும் வெடி குண்டுகள் வைத்திருந்த அவர்கள் ‘ஆர்.எஸ்.எஸ் வாழ்க’, ‘இந்து சாம்ராஜ்யம் வாழ்க’ ‘பண்ணிக் கறி தின்னும் பள்ளன் ஒழிக’, என்று கூச்சலிட்டனர். இச்சமயத்தில் சகோதர சமத்துவ சங்கத்தின் விழாவில் பங்கேற்பதற்காக கடைய நல்லுர் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த தேவேந்திரர் கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஞானரதம் தங்களின் தெரு வுக்குள் வருகிற செய்தியை அறிந்து ‘நாங்கள் எங்கள் சங்க விழாவுக்குச் செல்ல இருப்பதால் ரதம் எங்கள் தெருவிற்குள் வரவேண்டாம்’ எனக் கேட்டுக் கொண்டனர். ஞானரதம் நிகழ்ச்சி தொடங்கிய பின்னரே தலித்துகள் மீதான வன்முறையும் தொடங்கப்பட்டது.18 ஞான ரதம் தங்கள் தெருவிற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தி னால் ஆத்திரமுற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடைய நல்லுர் போகும் தேவேந்திரர்களையும் முசுலீம்களையும் சொக்கம்பட்டி முக்கிய சாலையில் உள்ள ஆதிக்கச்சாதியின ரின் வீட்டு மாடிகளில் இருந்து கொண்டு நாட்டு வெடி கொண்டு, சோடா பாட்டில், கற்கள், காய்ச்சிய எண்ணை ஆகியவற்றால் தாக்கியதில் 15 தலித்துகளும் ஒரு இசுலா மியரும் படுகாயமடைந்தனர். அடுத்த நாள் 09 ஜூன் 1982 சொக்கம்பட்டி வழியாக வந்து செல்கின்ற பேருந்துகளை நிறுத்தி ‘’பஸ்ஸில் யாராவது பள்ளன், பறையன், துலுக்கன் இருந்தால் கீழே இறங்கு’’ என்று கூச்சலிட்டனர்; தலித் மற்றும் இசுலாமியரை தேவர்கள் தாக்கினர். 10 ஜூன் 1982 தேவர் சாதியைச் சேர்ந்த சுமார் 1500 பேர் அய்யாபுரம் மற்றும் வெள்ளையக்கவுண்டன்பட்டி தேவேந்திரர்களை தாக்கி வீடுகளுக்கு தீ வைத்தனர், பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டன. மேலும் காவல் துறையினரும் தேவேந்திரர்களை தாக்கினர். 15வயதுடைய தேவேந்திரர் சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் பலியானான்; ஆனால் வன் முறை கும்பல் எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்க வில்லை. காவல் துறையினர் தேவேந்திரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு செயல்படவிடாமல் தடுத்தனர் ஆனால் வன்முறையாளர்களை ஒன்றும் செய்யவில்லை, அவர்கள் தங்களின் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தனர். அய்யாபுரத்து தேவேந்திரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு தப்பித்து ஓடிய பொழுது ஓடஓட வன் முறைக் கும்பல் வெட்டியதில் சந்திரன், ஜெயசீலன், யோவான், மாசிலாமணி, மாடத்தியம்மாள் ஆகிய தேவேந் திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் மிதிக்கப்பட்டார், சில பெண்களின் நகைகள் காது களோடு சேர்த்து வெட்டி எடுக்கப்பட்டது, 6 வயது குழந்தை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப் பட்டது.19 ஒரு பெண்ணின் கைக்குழந்தையை கிணற்றில் தூக்கி எறிந்தனர். ஆண்டு முழுவதற்கும் சேமித்து வைத்தி ருந்த கம்பு, கேழ் வரகு, சோளம் போன்ற உணவு தானியங் களை எரித்தனர். மேலும் அடுத்தநாள் புளியங்குடியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் தேவேந்திரர்கள் மேற்கூறப் பட்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்; தேவேந்திரர் மற்றும் முசுலீம்களின் சொத்துக்கள் எரித்துச் சூறையாடப்பட்டது. இக்கொடூர அடக்குமுறைகள் பெரும் பாலும் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்தது.20 தேவேந்திரர் மற்றும் முசுலீம் மக்களின் மீதான இவ்வொடுக்குமுறைக்கு காரணம் அரபுநாட்டு பணம், மதமாற்றுவதற்கு விரும்பும் முசுலீம் மக்களின் செயல் என இந்துத்துவ அமைப்புகளாலும், பார்ப்பனரால்லாத மேல் மற்றும் இடைநிலைச் சாதிகளின் தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். துக்ளக் இதழானது, அரிஜனங்கள் இப்பொழு தெல்லாம் பிற சமுகத்தினரை தரக் குறைவாக பேசி வருகின்றனர், இசுலாமியரோடு சேர்ந்து கொண்டு இந்துக் களின் நலன்களுக்கு உலைவைக்கப் பார்க்கிறார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்தது.21புளியங்குடி வன்முறைக்கு நான்குநாட்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் தேவேந்திரர்கள் தாக்கப்பட்டனர். 1982ம் ஆண்டு ஜூன் மாதம் 4ந்தேதி திருநெல்வேலியில் உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராமையாத் தேவர், சுடலைக்கண்ணுத் தேவர் ஆகியோரின் ஆதரவாளர்கள் தேவேந்திரர்களைத் தாக்கினர். இதற்கு நீதி கேட்பதற்காக ராமையாத் தேவரின் வீட்டுக்கு தேவேந்திரர்கள் சென்ற பொழுது ராமையாத் தேவரும், அவரது ஆதரவாளர்களும் வெடிகுண்டுகளையும், சோடா பாட்டில்களையும் வீசி தேவேந்திரர்களைத் தாக்கியதால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர். அன்றிரவு சுமார் 11மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட தேவர்கள் குருந்துடையார்புரத்தில் நுழைந்தனர். ஒவ்வொரு தேவேந்திரர்களின் வீடுகளின் கதவுகள் தட்டப் பட்டது. கதவினைத் தட்டியவர்கள் காக்கிச் சீருடை அணிந் திருந்த காரணத்தினால் தேவேந்திரர்கள் காவல்துறையினர் என்று கருதி கதவுகளைத் திறந்த பொழுது தேவேந்திரர்கள் தாக்கப்பட்டனர். திருநெல்வேலியில் உள்ள கொக்கிரக் குளம், ஜோதிபுரம் பகுதிகளில் உள்ள தேவேந்திரர்களையும் தாக்குவதற்கு தேவர்கள் முயற்சித்தனர். காக்கிச் சீருடை அணிந்து வந்து தங்களை தாக்கியது ஆர்.எஸ்.எஸ். அமைப் பினைச் சேர்ந்த தேவர்களே என்று தாமதமாகவே தேவேந் திரர்கள் அறிந்தனர். மேலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்த தேவர் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று வரு வதும், அது தேவேந்திரர்களை தாக்குவதற்கான தயாரிப்புப் பணியே என்ற செய்தியும் நிலவியது.22 இச்செய்தியினை மேற்குறிப்பிட்ட தாக்குதல்களோடு இணைத்து நோக்கும் பொழுது உண்மை என்றே படுகிறது. இதற்குப் பின்னர் இந்துத்துவத்தோடு இணைத்திருந்த முத்துராமலிங்கத் தேவரின் சிலை தென்மாவட்டத்தில் பல இடங்களிலும் நிறுவப்பட்டது; இது தேவர்களை இந்துத்துவத்தோடு மேலும் ஐக்கியப்படுத்துகிற செயலே தவிர வேறல்ல. 1980 களின் இறுதியில் குறிப்பாக 1989ம் ஆண்டு போடி, தேவாரம் ஆகிய பகுதிகளில் தேவேந்திரர் மீதான ஒடுக்கு முறையில் இந்து முன்னணியும் இணைந்திருந்தது இவ் விடத்தில் நினைவு கூறத்தக்கது.23 1990களில் தான் தேவேந் திரர்கள் தேவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந் தெழுந்து பதில் தாக்குதல் தொடுத்தனர். 1980களில் தேவேந் திரர்கள் மீது இந்துத்துவ அமைப்புகளின் பின்னணியில் நிகழ்த்தப் பெற்ற வன்முறைக்கும் 1990களில் நிகழ்த்தப் பட்ட வன்முறைக்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகி றது. 1995 தேவர்களின் வன்முறையும் அதற்கெதிரான தேவேந்திரர்களின் எதிர்தாக்குதலும் தொடங்கிய இடம் வீரசிகாமணி, இவ்வூர் 1981ல் இசுலாம் மதத்திற்கு மாறிய மீனாட்சிபுரத்திற்கு மிக அருகாமையிலேயே உள்ளது. எனவே, 1995 வன்முறையில் இந்துத்துவ அமைப்புகளின் பங்கு இல்லை என்று கூறுவதற்கில்லை.முடிவுரைஇந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்துக் கொண்டாலும்கூட ஆளும் வர்க்கம், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் பிரச்சாரம் இந்துத்துவத்தையே அடிப்படை யாகக் கொண்டிருக்கிறது; இசுலாம் மீது ஒருவித வெறுப் பையும் கொண்டிருக்கிறது. இது இசுலாம் மீதான வெறுப்பு மட்டும் அல்ல அதில் தலித் விடுதலையை வெறுக்கும் போக்கும் ஆழப் பொதிந்திருக்கிறது. தலித் மற்றும் இசுலா மியர்களின் முன்னேற்றத்தை வெறுப்பதில் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், காங்கிரஸ், திராவிடக் கட்சிகள் என்ற பாரபட்சம் இன்றியும், பார்ப்பனர், சாதி இந்துக்கள், இடை நிலைச் சாதிகள் அனைவரும் எவ்வித வேறுபாடு இன்றியும் ஒன்றிணைந்திருக்கின்றனர். இதிலிருந்து, இந்து-சாதி மத வெறி அமைப்புகளுக்கும், விடுதலை இயக்க மரபினர், பார்ப்பனர் எதிர்ப்பின் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சி களுக்கும் இடையே வேற்றுமை அரிதே என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.தலித்துகளின் முன்னேற்றத்தினை வெறுக்கின்ற, அவர்கள் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கின்ற சாமானிய இந்துக்களுக்கும், தலித்துகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தலித்துகளின் சமூக விடுதலைக்கான ஆயுதமான மதமாற்றத்திற்கு எதிராக வன்முறையை செயல்படுத்தும் இந்துத்துவவாதிகளுக்கும் உணர்வு நிலையில் ஒற்றுமையே நிலவுகிறது. தங்களை அடிப்படையில் இந்துக்களாக உணர்ந்து கொண்டு இந்து மதத்தின் கருத்தியல்களைப் பின்பற்றிக் கொண்டு இந்து மதத்தோடு தொடர்பற்ற நாட்டுப்புற கோயில்களில் புனிதம் தீட்டு என்ற கருத்தியல்களை செயல்படுத்தி அக்கோயில் களில் வழிபடுவதற்கு தலித்துகளுக்கு அனுமதி மறுத்து வருகின்ற பார்ப்பனரல்லாத சாதி இந்துக்கள் மற்றும் இடை நிலைச் சாதிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் வேற்றுமை இல்லை. தன்னை இந்துவாக உணர்ந்து கொண்டு இந்து மரபுப்படி தலித்துகள் இவ்வாறுதான் வாழவேண்டும், தலித்துகளுக்கு வரையறுக்கப்பட்டிருக் கிற எல்லைக் கோட்டினை மீறுவது தவறு என்று கூறுகின்ற சாமானிய இந்து உளவியல் வன்முறையை செயல்படுத்து கின்றனர், இந்துத்துவவாதிகளோ உடலியல் மற்றும் உளவியல் வன்முறையை தலித்துகள் மீது ஏவுகின்றனர். இங்கு வன்முறையை செயல்படுத்துவதில் சிறிய வேறு பாடு மட்டுமே இருக்கிறது, உண்மையில் சாமானிய இந்துக் களும் இந்துத்துவவாதிகளும் அடிப்படையில் தலித் விடுதலைக்கு எதிரான ‘எதிர்ப்புரட்சி’ பிரிவினரே. தென்மாவட்டத்தில் தலித்துகள் மீது ஏவப்பட்ட வன்முறை யும் அதற்கெதிரான அவர்களின் பதில் தாக்குதலும் தேவர் மற்றும் தேவேந்திரர்களுக்கு இடையிலான மோதலாகவே பார்க்கப்படுகிறது. இதில் தேவர் சாதியினர் ‘எதிர்ப் புரட்சி யின்’ முன்னணிப்படையே. எனவே தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையிலான மோதல் சாதிய மோதல் மட்டுமல்ல அது இந்துமதம் சார்ந்த ஏற்றத்தாழ் வினை நிலைநிறுத்தும் சாதியினருக்கும், சமத்துவத்தை அடைவதற்கு மதமாற்றம் உட்பட பல்வேறு போராட்டங் களை வலியுறுத்துவோருக்கும் இடையிலான மோதலாகும். இத்தன்மை தென்மாவட்டச் சாதிய மோதலில் அடிப்படையாய் இருந்திருப்பதனைக் காணமுடியும்.மேற்கோள்கள்:1.அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 16, (புது டில்லி: இந்திய அரசு, 1999), ப. 275.2.அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், தொகுதி 10 (புதுடில்லி: இந்திய அரசு, 1993), ப. 55-6.3.ஆண்டியப்பத் தேவர், பசும்பொன் தெய்வீக திருமகனார் தேவர் வீர வரலாறு (மதுரை: தேவர் முரசு, 1993), ப. 82-3.4.தமிழவேள், சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர் (புதுவை: பண்பாட்டு ஆய்வகம், 2003), ப. ஜ்வீஜ்.5.Fortnightly Report, 1957, Tamil Nadu State Archives (Hereafter TNSA), Chennai.6.Sandberg, Emma. ‘Being a Dalit Woman in Seethai kurichy: Religious Affiliations and Social Situations’.In Lars Berge and Gunnel Cederlof,eds., Political Visions and Social Realities in Contemporary South India. (Sweden: Hogskolan Dalarna, 2003), pp. 27-8.7.Ibid.8.Fortnightly Report, 1944, TNSA, Chennai.9.கா.அ.மணிக்குமார்,நவீன தமிழகத்தில் சமூக வன்முறைகள், மனோரமா ஆண்டு புத்தகம், 2002, ப. 265.10.Fortnightly Report, 1945, p.110, TNSA, Chennai.11.A.R. Desai,‘Caste and Communal Violence in Post-Partition Indian Union’, in Asghar Ali Engineer (Ed.), Communal Riots in Post-Independence India (Hyderabad, 1984), pp.12-20.12.தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? (சென்னை: புதிய ஜனநாயகம், 2004), ப. 18-9.13.ஆ. சிவசுப்பிரமணியன், எந்தப் பாதை? (சென்னை: மக்கள் வெளியீடு, 2000), ப. 144-7.14. Organizer (June: 1981), p.6.15. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., ப. 26-7.16.Editorial, Economic and Political Weekly, 1982, p.1006.17.மருதமலர், ஜூன், 1982, ப. 8.18.Editorial, Economic and Political Weekly, 1982, p.1006.19.மருதமலர், (ஜூன்: 1982).20.இலக்கிய வெளிவட்டம், (அக்டோபர்: 1982), ப. 23-8.21.துக்ளக், (ஆகஸ்ட்:1982).22.மருதமலர், (ஜூன்: 1982).23.அய். பால்ராஜ், ஞா.தேவராஜ், சாதிக் கொடுமைகளின் சாட்சி (சென்னை: இந்திய மக்கள் முன்னணி, 1990).குறிப்பு: அம்பேத்கர் படிப்பு வட்டம் மதுரையில் (ஏப்ரல், 2005) ஏற்பாடு செய்திருந்த தலித் வரலாற்று மாதத்தில் இக்கட்டுரை வாசிக்கப்பெற்றது.