Wednesday, October 2, 2013

கல்வியிலிருந்து விலக்கப்படும் தலித்துகள்

கல்வியிலிருந்து விலக்கப்படும் தலித்துகள்

மின்னஞ்சல்அச்சிடுகPDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 


''வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்குக்கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தர கல்வி கற்பதுதான்'' -அம்பேத்கர்.
 ''.....கணிதம், கணிப்பொறி அறிவியல் போன்ற முதன்மை பாடப் பிரிவுகளில் தலித் மாணவர்கள் மிகமிக சொற்ப அளவில் பெயரளவிற்கே சேர்க்கப்படுகின்றனர். உயர் சாதி மாணவர்கள் ஒதுக்கித்தள்ளும் வரலாறு, விவசாயம் மற்றும் இன்னபிற கடைநிலை பாடப்பிரிவுகளையே தலித் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சூழ்ச்சிகரமாய் அளிக்கிறது. மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகள் பயில்வதற்கு தலித் மாணவர்கள் தகுதி பெற்றவர்களாகிவிடக்கூடாது என்கிற மனுதர்ம மனோபாவத்துடன் பள்ளி நிர்வாகம் இத்தகைய சமூக அநீதியை சமீப காலங்களில் திட்டமிட்டு இழைத்து வருகிறது'' - ஆதிதிராவிடன் புரட்சிக் கழகம். 
இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தங்களின் சமூக நிலையினை முன்னேற்றிக் கொள்வதற்கு (மேற்கத்திய) கல்வியை கற்றுக் கொண்டு அதன் மூலம் வேலையையும் பொருளாதாரத்தையும் பெறுவதால் சமூக சமத்துவத்தை அடையமுடியும் என்கிற வாதம் இருந்து வருகிறது. இதனால் தலித்துகள் கல்வி கற்பதற்கென அரசாங்கம் கொள்கை அளவில் சில சலுகைகளைக் கொடுத்து வருகிறது. (தலித்தல்லாத மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் தலித் மாணவர்களுக்கு மட்டும்தான் சலுகைகள் வழங்கப்படுவது போன்ற பொய்ப் பிரச்சாரம் இருந்து வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்). சலுகை குறித்த விவாதத்தில் அதனை எதிர்ப்பவர்களும் , ஆதரிப்பவர்களும் உண்டு.

கல்வி தலித் மற்றும் பழங்குடியினரை முன்னேற்றியிருக்கிற அதே சமயம் அது அவர்களின் சொந்த பந்தங்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது என்ற வாதமும் இருக்கிறது. ஆனால் இங்கு எழுப்பப்பட வேண்டிய அடிப்படையான கேள்வி: கல்வியை கற்றல் என்பது வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கே என்றால் வேலை வாய்ப்பினை தருகின்ற கல்வியை தலித்துகளால் கடந்த காலங்களில் எளிதாகப் பெறமுடிந்திருக்கிறதா? இன்று பெறமுடிகிறதா? வேலை வாய்ப்பிற்கான கல்வியை அடைவதிலிருந்து தலித்துகள் தொடர்ந்து விலக்கப்பட்டே வருகின்றனர், அதனைப் பெறுவதற்கு தலித்துகள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலே நிலவி வருகிறது என்று கட்டுரை விவாதிக்கிறது. கல்வியிலிருந்து விலக்கப்படுவது குறித்த விவாதம் புற உலகில் இல்லாத காரணத்தினால் தலித்துகளின் போராட்டம் தனித்தே நடைபெறுகிறது. எனவே, கல்வியிலிருந்து தலித்துகள் சமூக விலக்கம் செய்யப்படுவது குறித்து விவாதிப்பது அவசியம். தமிழ்நாடு அரசு ஆவண காப்பகம், கள ஆய்வில் பெறப்பட்ட தரவுகள், என்னுடைய சுய அனுபவம் இவையே கட்டுரையில் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி: பொருளாதார முன்னேற்றத்தின் ஆயுதம்
                காலனிய ஆட்சியாளர்களால் இந்தியாவில் நிறுவப்பட்ட மேற்கத்திய கல்வி முறை இந்து சமூக அமைப்பின் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான ஆயுதமாக இன்றும் இருந்து வருகிறது. கல்வி கற்றல் என்பது முதலில் கற்பவர்களை பண்டைய சாதி சார்ந்த குலத்தொழிலிலிருந்து விடுவிக்கிறது. பண்பாட்டு தளத்தில் அவர்களிடத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிற அதேசமயம் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. அது மட்டுமின்றி கல்வி கற்ற முன்னேறிய பிரிவினரே தலித் விடுதலையில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தலித் இயக்கத் தலைவர்கள் தலித் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் தலித்துகள் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடினர். தலித்துகளுக்கு கல்வி கொடுப்பதே அவர்களை முன்னேற்றுவதற்கான முறை என்றே காலனிய ஆட்சியினர் உணர்ந்திருந்தனர், அவர்களுக்கு கல்வி கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

தியாசபிகல் சொசைட்டி, டிப்ரஸ்டு கிளாஸ் மிஷன், பிரம்ம சாமாஜ், சோசியல் சர்வீஸ் லீக் மற்றும் கிறிஸ்துவ மிஷனரி இயக்கங்கள் தலித்துகளுக்கு தனிப் பள்ளிகள் மூலம் கல்வி கொடுத்திருப்பதனை அறியமுடிகிறது. தலித்துகளும் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியிருப்பதனை சில புள்ளி விவரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடைசி கால் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் பொதுக் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்களின் எண்ணிக்கை 30,000-இருந்து 1,50,000-ஆக உயர்ந்திருக்கிறது. 1892ம் ஆண்டு தலித் மாணவிகளுக்கென இருந்த 11 பள்ளிகளின் எண்ணிக்கை பின்னர் 100-ஆக உயர்ந்திருப்பதே தலித்துகள் கல்வி கற்பதில் காட்டிய ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.  
தலித்துகள் அன்று கல்வி கற்பதற்கு மூன்று வழிமுறைகள் இருந்தது: 1. அரசாங்கப் பள்ளி, 2. கிறிஸ்துவ மிஷினரி பள்ளி மற்றும் 3. சொந்தமாக பள்ளிக்கூடம் நிறுவுதல். கிறிஸ்துவ மிஷினரிகள் தலித்துகளுக்கென தனிப் பள்ளிக்கூடங்களை நடத்தியிருக்கின்றனர். சில சமயங்களில் கிறிஸ்துவ மிஷினரிகள் நடத்திய கல்வி நிலையிங்களில் தலித்துகள் சேர்வது கடினமாக இருந்திருக்கிறது. திருநெல்வேலியிலிருக்கும் ஜான்ஸ் கல்லூரியில் அது தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் பள்ளர் மற்றும் பறையர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து பயில்வதை நாடார் சாதியினர் எதிர்த்திருப்பதே இதற்கான உதாரணம். தலித்துகள் சொந்தமாக பள்ளிக்கூடம் நிறுவியிருப்பினும் இது அரிதாக நடைபெற்றிருக்கிறது. தீண்டாமைக் கொடுமைக்குள்ளான மக்களை விடுவிப்பதற்கென கிறிஸ்துவ மிஷினரிகள் நிறுவிய கல்வி நிறுவனங்களிலேயே இதுதான் நிலையென்றால் அரசாங்கம் நடத்திய ''பொது''க் கல்வி நிலைலயங்களில் முன்னதைவிடவும் கூடுதலான ஒடுக்குமுறையை சந்தித்தனர் தலித்துகள்.

கல்வி நிலையம் நிறுவுதல், அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்குதல், ஆசிரியர் மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் இவை அரசாங்கத்தின் ''பொது''ப் பணம் மூலம் நிர்வகிக்கப்படுவதையே ''பொது''க் கல்வி நிலையம் என்று பொருள்படும். பொதுக் கல்வி நிலையத்தில் தலித் மாணவர்கள் சேர்ந்து பயில்வதிலிருந்து அவர்கள் விலக்கப்பட்டனர். தலித்துகளுக்கு புழங்கு உரிமையற்ற பகுதியில் பள்ளியை நிறுவுதல், நேரடியாக அனுமதி மறுத்தல், தலித் மாணவர்களுக்கு அனுமதி வழங்கும் பள்ளியை தலித்தல்லாதோர் புறக்கணித்தல், பள்ளிக்குள்ளேயே தலித் மாணவர்களுக்கென தனி வகுப்பறை உருவாக்குதல், அனைத்து சாதி மாணவர்கள் இருக்கும் ஒரே வகுப்பறைக்குள் தலித் மாணவர்களுக்கென தனி இருக்கையை ஒதுக்குதல் போன்ற வடிவங்களில் தலித் மாணவர்கள் சமூக விலக்கம் செய்யப்பட்டனர். இனி, இது குறித்து விரிவாகக் காண்போம்.
புழங்கு உரிமையற்ற வெளி
                குடியிருப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப அன்றி சாதி வாரியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்து சமூக அமைப்பில் பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்களின் வசிப்பிடத்தில் தலித்துகளுக்கான புழங்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்களின் வசிப்பிடத்தின் அருகாமையிலேயே தபால் அலுவலகம், நீதி மன்றம், கல்வி நிலையம் போன்ற நவீன நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த நிறுவனங்களை அணுகுவதிலிருந்து தலித்துகள் விலக்கப்பட்டிருந்தனர். மெட்ராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் 1920 பிரிவு 40 (2) விதி 8, பள்ளிகள் அனைத்து சாதி மற்றும் சமூகத்தினர் புழங்குவதற்கு ஏற்ற இடத்திலியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கிறது. இருந்த போதிலும், பொதுக் கல்வி நிலையங்கள் தலித்துகளுக்கு புழங்கு உரிமையற்ற பகுதியிலேயே அமைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தலித் மாணவர்கள் கல்வி நிலையங்களை அணுகுவதிலிருந்தும் கல்வி கற்பதிலிருந்தும் விலக்கப்பட்டிருந்தனர்.

1928-29ஆம் ஆண்டு எடுத்த புள்ளி விவரத்தின்படி 1, 875 ''பொது''ப் பள்ளிகள் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படும் புவிப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் பத்தாண்டுகளுக்கு மேலான பின்னர், அதாவது 1935-36ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி 891 பள்ளிகளும், 1935-36ம் ஆண்டு புள்ளி விவரப்படி 440 பள்ளிகளும் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்படும் புவிப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தன. இந்த புள்ளி விவரங்களிலிருந்து தலித்துகள் எந்த அளவிற்கு கல்வி கற்பதிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள இயலும். இதனால் தலித்துகள் கல்வி நிலையங்களை அணுகுவதற்காக முதலில் புழங்கு உரிமைக்கான போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இதற்கான உதாரணமாக கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் பொதுப் பள்ளியை அணுகுவதற்கு தலித்துகள் அக்ரஹாரத்தை புழங்குவதற்கான போராட்டத்தை நடத்தியதைக் கூறலாம். இதில் தலித் மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அக்ரஹாரம் வழியாக அழைத்துச் சென்ற பொழுது பிராமணர் மற்றும் இதர சாதி இந்துக்கள் தலித்துகள் மீது வன்முறையை ஏவினர்.
அனுமதி மறுப்பு
                கல்வி கற்கும் செயல்பாட்டிலிருந்து தலித் மாணவர்களை விலக்குவதற்கு சாதி இந்துக்கள் கடைபிடித்து வந்திருக்கின்ற ஒரு வடிவம் பொதுக் கல்வி நிலையங்களில் தலித் மாணவர்களின் சேர்க்கையை வெளிப்படையாக மறுத்தல் ஆகும். தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்கிற பொழுது அவர்களை சேர்த்துக் கொள்ள முடியாது என்று அவர்களுக்கு பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்பட்டிருக்கிற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதனைக் காணமுடிகிறது. உதாரணமாக, சேலம் வட்டாட்சி வாரியத்தால் ராக்கிபட்டி மற்றும் எட்டிமாணிக்கம்பட்டி, சங்ககிரி வட்டாட்சியில் இருந்த வட்டாட்சி வாரியப் பள்ளி போன்ற பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்கு அரிதாக சென்ற தலித் சாதியைச் சேர்ந்த ஒரு சிலருக்கு கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, வெள்ளிங்கிரி என்ற தலித் ஒருவர் கோயம்புத்தூர் அரசு கல்லூரிக்கு விண்ணப்பித்த பொழுது அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. அனுமதி மறுத்தல் என்பது ஒரு பொதுவான செயலாக நடைபெற்றிருக்கிறது, இதனால் அனுமதி மறுக்கப்படும் இடங்களில் சேர்க்கைக்கான போராட்டத்தை தலித்துகள் நடத்தியிருப்பதனைக் காணமுடிகிறது. வெள்ளிங்கிரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கல்லூரி முதல்வர் மற்றும் உயர் கல்வி அதிகாரிகளுக்கு முறையிடல் என பல போராட்டங்களுக்குப் பின்னரே அவருக்கு அக்கல்லூரியில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது.
அனுமதி, புறக்கணிப்பு, தீண்டாமை
                தலித்துகளின் போராட்டங்களுக்குப் பின்னர் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு அனுமதிக்கிற பொழுது அங்கு ஏற்கனவே படித்துவரும் சாதி இந்து மாணவர்கள் அப்பள்ளிகளை புறக்கணித்திருக்கின்றனர். இதற்கான சில உதாரணங்களைக் காண்போம். திருவண்ணாமலை கீழத்தூர் நகராட்சி தொடக்க பகல் பள்ளியில் சேர்வதற்கு சுமார் 50 தலித் மாணவர்கள் வருவதை அறிந்த தலித்தல்லாத மாணவர்கள் அப்பள்ளியை புறக்கணித்தனர். சிதம்பரம் அருகே ÿமுஷ்னம் மேல்நிலை தொடக்கப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட காரணத்தினால் அப்பள்ளியில் 20 ஏப்ரல் 1933ல் 183-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 24 ஏப்ரல் 1933 அன்று 21 பேராகக் குறைந்து விட்டது. இந்த எண்ணிக்கை பின்னரே கூடியிருக்கிறது. தலித்துகள் அனுமதிக்கப்படும் பள்ளிகளில் நாங்கள் பயில மாட்டோம் என்ற சாதி இந்துக்களின் நிலைப்பாட்டிற்குள் தலித்துகளை விலக்கம் செய்கின்ற நடவடிக்கை இருப்பதனையே காணமுடிகிறது.

சில பள்ளிகளில் தலித்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும் அவர்கள் பாகுபாடுதன் நடத்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, ஒரே பள்ளிக்குள் தலித்துகளுக்கென ''தனி'' வகுப்பறைகள், ''தனி'' இருக்கைகள் என்று ''பொது'' மாணவர்களிடத்திலிருந்து தலித் மாணவர்கள் விலக்கப்பட்டிருக்கின்றனர். சிதம்பரே அருகே உள்ள ÿமுஷ்னம் மேல்நிலை தொடக்கப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பள்ளிக் கட்டிடத்திற்குப் பின் பகுதியில் தலித் மாணவர்களுக்கென தனியான கூடாரம் அமைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனை பள்ளி ஆய்வு அதிகாரிகள் கண்டித்த பின்னர் தனிக் கூடார முறை கைவிடப்பட்டிருக்கிறது. இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களை அதே நிலை படிக்கின்ற தலித்தல்லாத மாணவர்களோடு உட்கார வைப்பதற்குப் பதிலாக முதலாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களோடு உட்கார வைக்கின்ற நடைமுறையும் இருந்திருக்கிறது. மற்ற மாணவர்களிடமிருந்து விலக்கம் செய்து தலித் மாணவர்களை ''தனி''யாக உட்கார வைக்கின்ற வழமைக்கு தீண்டாமையே காரணமாக இருந்திருக்கிறது.
தனிப் பள்ளி முறைக்கு வித்திட்ட சமூக விலக்கம்
மேற்கத்திய கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலந்தொட்டு தலித்துகளை கல்வி கற்பதிலிருந்து விலக்கி வைக்கின்ற செயல் மேற்குறிப்பிட்ட வடிவங்களில் நடைபெற்றிருப்பதனை விவரித்திருக்கிறோம். இந்த சமூக விலக்கலுக்கு எதிரான நடவடிக்கையை காலனிய அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது மேலும், தலித்துகளுக்கு சாதகமான நிலைப்பாட்டினை கோட்பாட்டளவில் எடுத்திருக்கிறது. சாதி அல்லது மதம் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு மறுக்கின்ற பள்ளியின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் என்று மெட்ராஸ் ஆரம்பக் கல்வி சட்டம் 1920 அறிவித்திருக்கிறது. பொதுப் பள்ளியில் தலித் மாணவர்கள் இலவசமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்தது. உள்ளாட்சி நிறுவனங்கள் நடத்துகின்ற பள்ளிகள் அல்லது அரசு மாணியம் பெறும் கல்வி நிறுவனங்கள் அரசின் கல்விக் கொள்கையை பின்பற்ற மறுத்தால் அப்பள்ளிகளுக்கு அரசாங்கம் வழங்குகின்ற மாணியம் குறைக்கப்படும் அல்லது மாணியத் தொகை ரத்து செய்யப்படும் என்று நிலைப்பாட்டினையும் அரசாங்கம் எடுத்திருந்தது. மேலும் தலித்துகளை முன்னேற்றுவதற்கென தொழிலாளர் ஆணையர் 1920களில் நியமிக்கப்பட்டிருந்தார்.

தலித்துகளை முன்னேற்றுவதற்கு செய்யப்படுகின்ற பல்வேறு பணிகளில் அவர்களுக்கு கல்வி கொடுக்கின்ற பொறுப்பும் தொழிலாளர் ஆணையருடையதே. தனிப் பள்ளி நடத்துதல், கல்விக்கான நிதி உதவு வழங்குதல், விடுதியை பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்வதும் ஆணையருடையதே. கொள்கை அளவில் தலித்துகளுக்கு ஆதரவான நிலைப்படாட்டினை எடுத்திருந்த போதிலும் நடைமுறையில் காலனிய அரசாங்கம் அதனுடைய கொள்கையினை நடைமுறைப்படுத்தியிருக்கவில்லை. தலித்துகளை கல்வி நிலையங்களில் அனுமதிக்க மறுத்தல், அனுமதித்திருந்தால் பாகுபாட்டுடன் நடத்துதல், அனுமதி மறுப்பு மற்றும் பாகுபாட்டுடன் நடத்துதல் ஆகியவற்றை எதிர்க்கும் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லை காலனிய அரசாங்கம். விளைவு, தலித்துகள் தங்களுக்கனெ தனியான கல்வி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது. சென்னை மாகாண அவையில் தலித்துகளுக்காக நியமிக்கப்பட்ட தலித் பிரதிநிதியான ஏ.எஸ். சகஜானந்தாவின் உரையிலிருந்து தலித் மாணவர்களுக்கான தனி கல்வி நிலையங்களின் கோரிக்கையும் அதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர் இவ்வாறு உரையாற்றியிருக்கிறார்: ''ஒவ்வொரு தாலுக்காகளிலும் ஒவ்வொரு சக்கண்டரி பாடசாலையை ஏற்படுத்த வேண்டும். அதில் படிப்பவர்கட்கு இலவசமாகவே உணவு முதலியன கொடுக்க வேண்டும். இது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஜில்லாவிலும் அவசியமாக ஆதித் திராவிடர்களுக்கு ஐஸ் கூல்களேற்படல் வேண்டும். தென்னார்காடு ஜில்லாவில் ஆறு லட்சம் ஆதித் திராவிடர்களிருக்கிறார்கள். ஆறு லட்சம் ஜனங்களிலும் ஸ்கூல் பைனல் படித்தவர் ஒருவருமில்லர். இதைவிட எங்கள் துர்ப்பாக்கியத்தைச் சொல்லிக் காட்ட வேண்டாம். இவ்விஷயமாக அரசாங்கத்தாரைக் கேட்டால் எல்லாக் கல்லூரிகளிலும் ஆதித்திராவிட மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. உங்களுக்கெனத் தனிக் கல்லூரிகள் வேண்டாமெனக் கூற முயல்கின்றார்கள். அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம். அந்தச் சட்டத்தைச் செய்கையில் காண்பது அரிதாகவிருக்கிறது. நாங்களே வைதீகம் பாராட்டுமிடங்களிலுள்ள கல்வி சாலைகளுக்குச் சென்று எங்கள் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டால் சட்டத்திற்குப் பயந்து சேர்த்துக் கொள்வார்கள் அல்லது சாக்குபோக்கு சொல்வார்கள். அது விஷயத்தில் அழுத்தமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டால் பகைமையும் மாணவன் முன்னுக்கு வர முடியாத கஷ்டங்களும் ஏற்படுகின்றன. பலவித சிக்கல்களிருக்கின்றன.

உயர்ந்த வகுப்பினராகிய வலிவுள்ளவர்களிடத்தில் நாங்கள் சென்று சண்டையிட்டுக் கொண்டு உள்ளதையுங் கெடுத்துக் கொள்வதைவிட தனியே விரும்புவது நலமாகும். ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்ப்பதால் கஷ்டமுண்டாகுமென்று தோன்றும் இடங்களிலெல்லாம் ஆதித்திராவிடர்கட்குத் தனிப்பாடசாலைகள் அமைத்துக் கொடுத்தால் அது எங்கள் சமூகத்திற்குப் பெரிதும் பயன்படும். எங்கள் சமூகத்திற்கென ஏற்படும் கல்லூரிகளில் கூடுமானால் மற்றைய வகுப்புப் பிள்ளைகளும் சேர்ந்து படிக்கச் சொற்ப உதவி புரிந்தால் உயர் வகுப்பு மாணவர்களும் வந்து சேர்வார்கள். அதன் மூலம் சுலபமாக சமரசம் ஏற்படக்கூடும். தற்போது மகமதிய மாணவர்கட்கு தனிக் கல்லூரிகள் ஏற்படுத்தி நடத்தி வருவதைப் போல் எங்களுக்கும் நடத்திவரக் கேட்டுக்கொள்கிறேன்''. சட்ட ரீதியான அங்கீகாரம் இருந்த போதிலும் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளியில் பயில்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது சகஜானந்தாவின் உரையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இதுவே தலித்துகளை தங்களுக்கென தனிக் கல்வி நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது.

பொதுப் பள்ளியில் தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை என்றால் அரசாங்கமே தலித்துகளுக்கென தனிப் பள்ளிகளை உருவாக்கியிருக்கிறது. திருவண்ணாமலை நகராட்சிப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தினால் திருவண்ணாமலை நகராட்சி அவையே தலித் மாணவர்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை நிறுவியிருப்பதை இதற்கான உதாரணமாகக் கூறலாம். தலித்துகளும் அவர்களின் சுயமுயற்சியினால் தனிப் பள்ளிக்கூடங்கள் நிறுவியிருக்கின்றனர். விருத்தாச்சலம் வட்டாட்சியைச் சேர்ந்த சத்தியவாடி கிராமம் , திருநெல்வேலி மாவட்டம் திருப்பனிகரிசல்குளம் போன்ற பகுதிகளில் தலித்துகள் நிறுவிய பள்ளிகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனவே, ''பொது''ப் பள்ளிக்கூடங்களில் தலித்துகளுக்கு சேர்க்கை அனுமதி மறுக்கப்படுவதால் தலித்துகளுக்கென ''தனி''ப்பள்ளிக்கூடம் உருவாகியிருக்கிறது என்பது தெளிவு.
''தனி''ப் பள்ளிக்கூடம் என்ற கோரிக்கையினை அனைத்துத் தலித்துகளும் முன்வைத்திருக்கவில்லை. ''பொது''ப் பள்ளிக்கூடங்களில் தலித்துகள் அனுமதிக்கப்பட வேண்டும், தனிப் பள்ளிக் கூடங்கள் வேண்டாம் என்று போராடிய தலித்துகளும் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆர். வீரையன். இவர் தலித்துகளுக்கென தனிப் பள்ளிக்கூடம் தொடங்குவதனை தொடர்ச்சியா எதிர்த்திருக்கிறார். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பேசப்படுகிற இந்த ஜனநாயகச் சூழலில் ஆதி-திராவிடர்களுக்கென தனிப் பள்ளிக்கூடம் என்ற கொள்கையை அரசாங்கம் அனுமதிக்கிறதா? என்ற கேள்வியை சென்னை மாகாண அவையில் எழுப்பியுள்ளார் வீரையன். இக்கேள்விக்கு கல்வி அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்: ''தனிப் பள்ளிக்கூடம் சேரி மக்களின் கோரிக்கையினால் தொடங்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் ஆணையரின் கட்டுப்பாட்டிற்குக் கீழ்வரும் பல சேரிகளில் தனிப் பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தொடக்கக் கல்வி கொடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் அதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப் படுகிறது''.

வீரையன் மீண்டும் பின்வரும் கேள்வியை எழுப்பினார்: தனிப் பள்ளி என்பது எப்பொழுதும் ஆதி திராவிடர்களை தனியாக வைத்திருப்பதாக பொருள் கொள்கிறதா? ஆதி திராவிட மாணவர்கள் நகராட்சிப் பள்ளிகளில் அனுமதி கோரும் பொழுது மட்டும் தனிப் பள்ளி என்ற கருத்து நகராட்சி அவையிடமிருந்து தோன்றுகிறது? இதற்கு முன்னர் தோன்றுவதில்லையே ஏன்? இதற்கு கல்வி அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்: ''தனிப் பள்ளி இல்லாதிருப்பதே அரசாங்கத்தின் கொள்கை, ஆனால் அனைத்துப் பொதுப் பள்ளிகளும் அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப்பட வேண்டும். ஆனால் ஆதி திராவிடர்களிடமிருந்து தங்களுக்கென தனிப் பள்ளி வேண்டும் என்ற சிறப்பு கோரிக்கையை முன்வைத்தால் நாங்கள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்''.

இதனால் வீரையன் பின்வரும் மற்றொரு கேள்வியை இவ்வாறு எழுப்பியுள்ளார்: 300 பேர் வசிக்கின்ற சேரியில் 10 பேர் தனிப் பள்ளி கேட்கிற பொழுது 290 பேரின் உணர்வுகளை புறக்கணிக்க முடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? நீங்கள் யாருடையை உணர்விற்கு மதிப்பு கொடுக்க இருக்கிறீர்கள்? 290 பேரின் கோரிக்கையையா? அல்லது 10 பேரின் கோரிக்கையையா? வீரையனின் கேள்விகளிலிருந்து அவர் ''தனி''ப் பள்ளி முறையை கடுமையாக எதிர்த்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. தலித்துகள் முன்வைத்த கோரிக்கையில் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிக் கூடங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை விடவும் தனிப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசாங்கம் கொள்கை அளவில் தனிப் பள்ளி முறையை விரும்பியிருக்கவில்லை எனினும் நடைமுறையில் அது தனிப் பள்ளி முறையையே ஏற்படுத்தியிருக்கிறது. ''தனி''ப் பள்ளி முறை ''பொது''விலிருந்து தலித்துகளை விலக்குவதைத் தவிர வேறொன்றும் இல்லை.
 கல்வியிலிருந்து விலக்கம்: இன்றைய நிலை
                இன்றைய காலங்களில் தலித்துகள் கல்வி பெற வேண்டும் என்பதற்காக நிதி உதவி வழங்குதல் உட்பட பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நடைமுறையில் அவற்றை கல்வி நிலையத்தின் நிர்வாகம் முறையாக அமுல்படுத்துவதில்லை. இங்கு இருக்கின்ற திட்டங்கள் அமுல்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை. எவ்வாறு தலித் மாணவர்கள் உயர் கல்வியில் அறிவியல் பாடப் பிரிவில் படிப்பதிலிருந்து விலக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதை விவாதிப்போம். காரணம் அறிவியல் கல்வி பயில்வது என்பது அத்துறைகளில் படிப்பவர்களை வல்லுநர் தரத்திற்கு உயர்த்துகிறது மேலும் வேலை வாய்ப்பும் எளிதில் கிடைத்துவிடுகிறது. அம்பேத்கர் இதனை மிகத் தெளிவாக பின்வருமாறு கூறியுள்ளார்: ''பொருளாதார நிலையை உயர்த்தும் விஷயத்திலிருந்து நோக்கும்போது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்குப் பொதுக் கல்வியைவிட தொழில்நுட்பக் கல்வி அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெளிவு''.

இந்தியாவில் சில அரசாங்கங்கள் வரலாறு, பொருளாதாரம் போன்ற படிப்புகள் பயனற்றவை என்று அறிவித்ததிலிருந்தும், அத்துறையில் பட்டம் பயின்றவர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவது மிகக் கடினமான செயலாக இருந்துவரும் இன்றைய சூழலில் சமூக அறிவியல் பட்டம் என்பது தலித்துகளை பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்கு உதவாது. ஆனால் இத்துறைகளை முற்றிலும் புறக்கணிப்பது என்பது தலித் விடுதலைக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார முன்னேற்றம் நோக்கில் என்ற தலித்துகள் அறிவியல் படிப்பதும், அவர்களின் சமூக விடுதலைக்கான நோக்கில் சமூக அறிவியல் துறையில் கவனம் செலுத்துவதும் தவிர்க்க இயலாத தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கர் அறிவியல் தொழில் நுட்பத்தினை பயில்வதற்கு தலித் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். ஆனால் அத்துறையில் தலித் மாணவர்கள் சேர்வதே இன்று சிக்கலாக இருந்து வருகிறது. எனவே, பதினொராறாம் வகுப்பு, இளநிலை, முதுநிலை இளம் முனைவர், முனைவர், முதுமுனைவர் ஆகிய நிலைகளில் தலித் மாணவர்கள் எவ்வாறு அறிவியல் பாடப் பிரிவிலிருந்து விலக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதைக் காண்போம். இது குறித்து விவாதிப்பதற்கு முன்னர் பள்ளி நிலையில் தலித் மாணவர்களின் சேர்க்கை எந்த பள்ளிகளில் இருக்கிறது, அங்கு இருக்கும் பாகுபாடு என்ன என்பதைக் காண்போம்.
                கிராமப் புறங்களில் இருக்கின்ற தலித்துகள் அவர்கள் வசிக்கின்ற கிராமத்தில் அல்லது பக்கத்து கிராமத்தில் இருக்கின்ற பள்ளியில் படிக்கச் செல்கின்றனர். ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி இவைகள் இருந்தால் தலித் குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளியில் இணைந்து படிக்கின்றனர். சில கிராமங்களில் தலித்துகளுக்கென இருக்கின்ற ஹரிஜன் தொடக்கப் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தலித் குழந்தைகள் படிக்கின்றனர். அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் கூடுதலான கட்டமைப்பு வசதிகள் இருந்த போதிலும் அப்பள்ளிகளில் படிக்க இயலாத சூழலே நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டம் செந்தட்டியாபுரம், பந்தப்புளி, ரெட்டியபட்டி மற்றும் பூவன்குறிச்சி ஆகிய கிராமங்களில் கள ஆய்வு நடத்திய போது தலித் குழந்தைகள் படிக்கின்ற அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதின்மையைக் காணமுடிந்தது.

குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்கென தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குறுந்தகடு இயக்குவதற்கான பெட்டி வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் அப்பள்ளிகளில் மின்சாரம் இல்லாததால் இப்பொருட்கள் பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதனை ரெட்டியப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் காணமுடிந்தது. பூவன்குறிச்சி ஹரிஜன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்றாக இருந்தது இரண்டாக குறைக்கப்பட்டுவிட்டது. மேலும், குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கென இருக்கைகள் இல்லை, ஒவ்வொரு வகுப்பிற்கென தனித்தனியான வகுப்பறைகள் இல்லை என்பது உட்பட பல அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதிருப்பதைக் கூறலாம். கற்பதற்குத் தேவையான வசதியின்மை தலித் குழந்தைகளின் கற்றலின் தரத்தில் பாதகமான விளைவினையே ஏற்படுத்தும். இதன் பொருள் என்னவென்றால் தலித் குழந்தைகள் தரமான கல்வி கற்பதிலிருந்து விலக்கப்படுவது என்பது தொடக்கக் கல்வி நிலையிலேயே தொடங்கிவிடுகிறது.
தொடக்கக் கல்வி நிலைக்கு முந்தைய நிலையான பாலர் பள்ளியில் தலித்தல்லாத குழந்தைகளிடமிருந்து தலித் குழந்தைகளைப் பிரித்து வைக்கின்ற பாகுபாட்டு நடைமுறையையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டும். பாலர் பள்ளியில் குழந்தைகள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தலித்தல்லாத குழந்தைகள் அதிகம் இருக்கின்ற பிரிவில் சொற்ப எண்ணிக்கையிலான தலித் குழந்தைகளும், தலித் குழந்தைகள் அதிகம் இருக்கின்ற பிரிவில் சொற்ப அளவிலான தலித்தல்லாத குழந்தைகளும் என பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை ரெட்டியப்பட்டி மற்றும் பந்தப்புளி ஆகிய ஊர்களில் கள ஆய்வின் போது காணமுடிந்தது. இவ்வாறு பிரித்தல் என்பது மிகச் சமீபத்தில் நடப்பதாக அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கூறினர். இந்த பிரிவு காலனிய ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் தலித் மாணவர்கள் தலித்தல்லாத மாணவர்களிடத்தில் இருந்து தனியாக பிரித்து வைக்கப்பட்ட சம்பவங்களிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை. சமூக விலக்கம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை அனுபவித்தல் என்பது தலித் குழந்தைகளுக்கு பாலர் பள்ளியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. இந்தப் பின்னணியில் பயின்று வரும் தலித் குழந்தைகளே பின்னர் நகரங்களுக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பின்னர் சந்திக்கின்ற சிக்கலைக் காண்போம்.
மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய புள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அவர்கள் பெறுகின்ற மதிப்பெண். பின்னர் அடுத்த திருப்பத்தினை ஏற்படுத்தும் புள்ளி பதினொறாம் வகுப்பில் அவர்கள் சேர்கின்ற பாடப் பிரிவு. தலித் மாணவர்கள் பொதுவாக கணிதம், கணினி, அறிவியல் அல்லாத பாடப் பிரிவுகளான வரலாறு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் பயில்கின்றனர். தலித் மாணவர்களுக்கு வரலாறு மற்றும் விவசாயம் ஆகியவற்றின் மீது மட்டுமே ஆர்வம் இருந்து வருகிறதா? அல்லது கணிதம், கணினி, அறிவியல் ஆகிய தங்களால் படிக்க இயலாது என்ற அச்சமா? ஆர்வமும் அச்சமும் தலித் மாணவர்களிடத்தில் அக உணர்வினால் சுயமாக ஏற்படுவதில்லை அது புற உலகினால் திணிக்கப்படுகிறது. தலித் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் வரலாறு மற்றும் விவசாயம் ஆகிய பிரிவுகளிலும் சொற்ப அளவில் கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளிலும் சேர்த்துக் கொள்கிறது பள்ளி நிர்வாகம். இது எவ்வாறு நிகழ்கிறது என்றால் பள்ளியில் விண்ணப்பிக்க வரும் தலித் மாணவர்களிடத்தில் நீ பெற்றிருக்கும் மதிப்பெண்ணுக்கு கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இடம் கிடைப்பது அரிது, வரலாறு மற்றும் விவசாயம் ஆகிய பிரிவுகளில் இடம் கிடைக்கும் அதற்கு விண்ணப்பிக்கவும் என்று கூறிவிடுவர் பள்ளி நிர்வாகத்தினார்.

சொற்ப அளவிலான மாணவர்களை கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அனுமதிப்பர். மேலும், தலித் மாணவர்களிடத்தில் உன்னால் கணிதம் அறிவியல் போன்ற பாடங்களை படிக்க இயலாது, அவை மிகக் கடினமானவை. வரலாறு எளிதானது எனவே அதைப் படி என்று அறிவுரை கூறுவர். இவை அனைத்து தலித் மாணவர்களையும் ஒருங்கிணைத்துக் கூறுவதில்லை, தனித் தனியாகவே கூறுவர். மாணவர்கள் விண்ணப்பிக்கிற பொழுது தனித் தனியாக வருவதும் பள்ளி நிர்வாகத்திற்கு வசதியாக அமைந்து விடுகிறது. கணிதப் பிரிவில் சேர்த்து என்னை டாக்டராக்க வேண்டும் என்பது என்னுடையை தந்தையின் ஆசை. அதற்கு தூய அறிவியல் படித்தால் மருத்துவராகலாம் என்று என்னை அறிவியல் பிரிவிற்கு விண்ணப்பிக்க வைத்தது நாசரேத் மர்காஷியஸ் மேனிநிலைப் பள்ளி நிர்வாகம். தூய அறிவியல் படித்தால் மருத்துவப் படிப்பில் சேர்வது ‘கனவாகவே’ இருக்கும் என்பது அங்கு சென்ற பின்னரே தெரிய வந்தது. நான் அனுபவித்த அதே நிலை இன்றும் நீடிப்பதை அறியமுடிகிறது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட பல்வேறு மதச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலும் தலித்துகள் கணிதம், அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளிலிருந்து திட்டமிட்டே விலக்கப்படுவது இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கணினிப் பிரிவிற்கு விண்ணப்பிக்கச் சென்ற தலித் மாணவர் ஒருவரிடம் உன்னுடைய மதிப்பெண் அப்பிரிவிற்கு தகுதியற்றது என்றும், கணிதம் மிகக் கடுமையானது அது உன்னால் படிக்க முடியாது என்றும் கூறி அத்தலித் மாணவருக்கு கணினிப் பிரிவில் இடம் தர மறுத்திருக்கிறது திருநெல்வேலியில் உள்ள ஒரு கிறிஸ்துவப் பள்ளி. எனவே, தலித் மாணவர்களின் ஆர்வமும் அச்சமும் பள்ளி நிர்வாகம் என்ற புற உலகு ஏற்படுத்துவதே என்பது தெளிவு. இதனால் சொற்ப எண்ணிக்கையிலான தலித் மாணவர்களே கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பாடப் பிரிவில் தேர்ச்சி பெறுகின்றனர்.
                பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் பட்டப் படிப்பு செல்வது என்பது வாழ்க்கையின் அடுத்தக் கட்ட திருப்பத்தின் புள்ளி. பள்ளி நிலையில் கணிதம், கணினி, அறிவியல் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் சிலருக்கு மருத்துவம், பொறியியல் போன்ற துறையில் இடம் கிடைக்கிறது. அதில் கிடைக்காதவர்கள் இளநிலையில் அறிவியல் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கின்றனர். அங்கும் அவர்கள் விரும்பும் பாடம் கிடைப்பதில்லை. என்னை மருத்துவராக்கும் என் தந்தையின் கனவு தகர்க்கப்பட்ட போதிலும் விலங்கியில் துறையில் டாக்டர் பட்டம் பெற்றுவிட வேண்டும் எனக்குள் ஆசை இருந்தது. தூய அறிவியல் பாடப் பிரிவில் விலங்கியலை மிக ஆர்வமாக படித்து வந்த நான் பள்ளி அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தேன். நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் விலங்கியல் பிரிவில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சென்றேன். கல்லூரி முதல்வர் உன்னுடைய மதிப்பெண்ணுக்கு வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்கும், இதில் சேர்வதற்கு தாமதப்படுத்தினால் அதுவும் கிடைக்காது என்று பயமுறுத்தினார். வேறு வழியின்றி நான் வரலாற்று துறையில் சேர்ந்தேன். விலங்கியல் பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்றுவிட வேண்டும் எனது ஆசையும் தகர்க்கப்பட்டது.

என்னுடன் தூய அறிவியல் வகுப்பில் படித்து என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த தலித்தல்லாத மாணவருக்கு விலங்கியல் பாடப்பிரிவில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. என்னைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த மாணவனுக்கு விலங்கியல் பிரிவில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது அதிக மதிப்பெண் பெற்றிருந்த எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது ஏன் என்று எனக்குள் இருந்து கொண்டிருந்த கேள்விக்கு கிடைத்த விடை அவர் கிறிஸ்துவ நாடார், சமூகத்தில் உயர்ந்தவர்! நான் தலித், தாழ்த்தப்பட்டவன்!. சாதிய அரசியல் பெரிய அளவிற்கு புரியாதிருந்த எனக்கு அக்கல்லூரியில் தலித் மாணவர்களுக்கு அறிவியல் பாடப்பிரிவுகளில் இடம் வழங்கப்படமாட்டாது என்பது பின்னர்தான் தெரிய வந்தது. மற்றொரு உதாரணத்தையும் இங்கு காண்போம். வணிகவியல் படித்தால் வங்கி வேலைக்குச் செல்வது எளிது என்று நம்பிக்கை இன்றும் இருந்து வருகிறது. பல கல்லூரிகளில் வணிகவியல் மாணவர்கள் தங்களை பிரிவினை ராயல் டிப்பார்ட்மெண்ட் என்ற அழைத்துக் கொள்வார்கள். இன்றும் ஒரு முக்கியத்துவம் இருக்கின்ற வணிகவியல் பிரிவில் சேர்ப்பதில் இருந்தும் தலித் மாணவர்கள் விலக்கப்படுகிறார்கள். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் (2003) மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் வணிகவியில் துறையில் சேர்வதற்கு பன்னிரெண்டாம் வகுப்பில் 890 மதிப்பெண் பெற்றிருந்த தலித் மலையாளி மாணவர் விண்ணப்பித்த பொழுது அவருக்கு இடம் மறுக்கப்பட்டது, அவரைவிட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்த கிறிஸ்துவ நாடார் மாணவருக்கு அதே துறையில் இடம் வழங்கப்பட்டது.

தலித் மலையாளி மாணவருக்கு வணிகத்துறை மறுக்கப்பட்டது மட்டுமல்ல மாறாக அவருக்கு தமிழ் துறையில் இடம் கொடுத்ததும் ஒருவகையான ஒடுக்குமுறைதான். தலித் மலையாளி மாணவரால் எவ்வாறு தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டத்தைப் படிக்க இயலும்? தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கென இருக்கின்ற ஒரே அரசுக் கல்லூரி திருநெல்வேலியிருக்கும் ராணி அண்ணா கல்லூரியே, இதுவும் பெண்கள் கல்லூரியே. இதானல் தலித் மாணவர்கள் சிறுபான்மையினர் மற்றும் அரசு உதவி பெறுகின்ற கல்லூரியை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. இக்கல்லூரிகளிலிருந்து தலித் மாணவர்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியாயிருக்கும் கல்வியிலிருந்து விலக்கப்படுவதன் விளைவினால் தலித் மாணவர்கள் பெரும்பாலானோர் சமூக அறிவியல் துறைகளிலும் சொற்ப எண்ணிக்கையில் அறிவியல் துறைகளிலும் இளநிலை மற்றும் முதுநிலையில் பட்டம் பெறுகின்றனர். இத்தகைய கல்லூரிகள், தலித் மாணவர்களின் முன்னேற்றத்திற்கென பல திட்டங்கள் வகுத்து அதற்கென நிதியும் பல்கலைக் கழக மானியக் குழு வழங்கினாலும் கல்லூரி நிர்வாகம் தலித் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு செலவிடாமல் போலி பற்றுச் சீட்டு வைத்துக் கொண்டு அப்பணத்தை தவறாக செலவு செய்யப்படுகிறது. மேலும் உயர் கல்வியில் தலித்துகளின் பல்வேறு உரிமைகளையும் பறித்துவிடுவது குறித்து அய். இளங்கோவன் விரித்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இச்செயல் தலித் மாணவர்கள் கல்வியில் திறமையானவர்களாக வளர்வதை நேரடியாகவே தடுத்துவிடுகிறது.
                ஆராய்ச்சி படிப்பிற்கு அரிதான தலித் மாணவர்களே வருகின்றனர். அவர்களின் பொருளாதாரச் சூழல், ஆராய்ச்சியை நெறிப்படுத்துவதற்கான நெறியாளர் கிடைப்பதில் இருந்து வருகின்ற சிக்கல் தலித் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதிலிருந்து விலக்குகிறது. அறிவியல் புலத்தில் ஆராய்ச்சி முடித்து டாக்டர் பட்டம் பெற்ற தலித்துகளை விரல்விட்டு எண்ணும் அளவிற்கே நிலைமை இருக்கிறது. சமூக அறிவியல் புலத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கின்ற பல தலித்துகளில் நானும் ஒருவன். என்னை டாக்டருக்குப் (மருத்துவர்) படிக்க வைக்க வேண்டும் என்ற என் தந்தையின் கனவு தகர்க்கப்பட்ட போதிலும் போதிலும் நான் டாக்டர் (முனைவர்) பட்டம் பெற்றிருக்கிறேன். ஆனால் இதனைக்கூட கண்டு மகிழ்வதற்கு அவர் இன்று உயிரோடு இல்லை. இப்புலத்தில் பட்டம் பெற்றிருந்த போதிலும் வேலை வாய்ப்பு கிடைப்பது கடினமான ஒன்றாக இருந்து வருகிறது.

சமீபத்தில் நிரப்பப்பட்ட பின்னடைவுப் பணியிடங்களில் தலித்துகளுக்கு கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைத்திருக்கிறது, வேலை கிடைக்காதவர்களும் இருக்கின்றனர். இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய முக்கியமான சிக்கல் இருக்கிறது. அதாவது, அறிவியல் புலத்திலிருந்து விலக்கப்படுவதல் சமூக அறிவியலில் பட்டம் பெறுகின்ற தலித்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவர்களில் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அவர்களின் கல்வித் தகுதிக்குரிய பணி கிடைக்காத காரணத்தினால் நான் அறிந்த தலித்துகள் தமிழ்நாடு அரசாங்கம் நடத்துகின்ற மதுபானக் கடையில் பணி செய்கின்றனர். இதில் சட்டம் படித்த தலித்துகளும் உண்டு. வெறும் பட்டம் அல்லது சட்டம் படிப்பது தலித்துகளுக்கு அதிகம் பயனளிக்காது என்ற அம்பேத்கரின் அன்றைய கணிப்பு மிகச் சரி என்பதற்கு முனைவர் மற்றும் சட்டம் படித்த இன்றைய தலித்துகள் மதுக் கடைகளில் வேலை செய்து வருவது சாட்சியாய் இருக்கிறது.
                ஒரு கல்வி நிலையத்தில் இணைந்து படிப்பது என்பதன் இறுதிக் கட்டம் முதுமுனைவருக்கான ஆராய்ச்சி படிப்பாகும், இதில் நிதி உதவியோடு மட்டுமே ஆராய்ச்சியில் ஈடுபடுவர். பல்கலைக் கழக மானியக் குழுவில் முதுமுனைவர் ஆராய்ச்சிக்கு இரண்டு வகையில் நிதி உதவி வழங்கப்படுகிறது. தலித் மாணவர்கள் சமூக அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கென முதுமுனைவர் ஆராய்ச்சி நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. அறிவியல் புலத்தில் மட்டுமே முதுமுனைவர் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கென டாக்டர். கோத்தாரி முதுமுனைவர் ஆராய்ச்சி திட்டம் இருக்கிறது. இதில் அனைத்து சாதியினரும் விண்ணப்பித்து அதன் நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். தலித் ஒருவர் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தலித்துகளுக்கென இருக்கின்ற திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பினால் முனைவர் பட்டம் பெற்றிருத்தல், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டிருத்தல் ஆகியன தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் கோத்தாரி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை அவர் முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பித்திருப்பதே போதுமானது. மேலும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டிருக்க வேண்டாம்.

அதாவது அனைத்து சாதியினரும் விண்ணப்பிக்கக்கூடிய கோத்தாரி முதுமுனைவர் ஆராய்ச்சி நிதிக்கு குறைந்த தகுதிகளும், தலித்துகளுக்கான திட்டத்தில் கூடுதலான தகுதிகளும் இருக்க வேண்டும் என்று விதியை ஏற்படுத்தியுள்ளது பல்கலைக் கழக மானியக் குழு. அறிவியல் புலத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தலித்துகள் விரும்பினால் அவர்கள் கோத்தாரி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலும். ஆனால் எத்தனை தலித் மாணவர்கள் அறிவியலில் முனைவர் பட்டத்தில் ஈடுபட்டு அதற்கான ஆய்வேட்டினை சமர்ப்பித்திருக்கின்றனர் என்றால்? அத்தகைய நபர்களை காண்பது அரிது. சமூக அறிவியல் புலத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபட தலித்துகள் விரும்பினால் அவர்களால் ஆய்வுப் பட்டம் சமர்ப்பித்ததும் அதில் சேர்வது இயலாது. முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பித்த பின்னர் அது மதிப்பீடு செய்யப்பட்டு பட்டம் வழங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது அதற்கு மேலான வருடங்கள்கூட ஆகலாம். அது வரை முதுமுனைவர் ஆராய்ச்சி நிதிக்கு விண்ணப்பிக்காமலேயே காத்திருப்பது என்பது ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் தொய்வினை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவு தலித்துகள் முதுமுனைவர் ஆராய்ச்சியில் ஈடுபடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயமே இருக்கிறது.
முடிவுரை
                காலனிய ஆட்சிக் காலத்தில் கல்வி பயில்வது என்பதே வேலை வாய்ப்பிற்க்கான உத்தரவாதத்தினைக் கொடுத்தது. அப்பொழுது சமூக அறிவியல் படித்தால் வேலை கிடைப்பது அரிது என்றோ அல்லது அறிவியல் படித்தால் வேலை கிடைத்துவிடும் என்ற நிலையோ இருந்திருக்கவில்லை. இக்காலத்தில் தலித்துகளை சமூக அறிவியல் புலத்தில் கல்வி கற்பதை திட்டமிட்டே விலக்கினர் சாதி இந்துக்கள். இன்றைய காலங்களில் சமூக அறிவியல் புலத்திற்கான மதிப்பு குறைந்து விட்டது, அறிவியல் புலத்தில் பட்டம் பெற்றால் வேலை வாய்ப்பு கிடைப்பது மிக எளிதாக இருந்து வருகிறது. ஆனால் அறிவியல் புலத்தில் கல்வி கற்பதிலிருந்து தலித்துகளை திட்டமிட்டு விலக்கப்படுகிறார்.

காலனிய ஆட்சிக் காலத்திலும் இன்றும் தலித்துகள் கல்விப் புலத்திலிருந்து விலக்கப்படுவதற்கு இடையில் வேற்றுமை இல்லை. இந்த விலக்குதல் தலித்துகளை பொருளாதாரத்தில் முன்னெறுவதிலிருந்து தடுத்துவிடுகிறது. இதனால் தலித்துகள் மேலும் மேலும் சமுக பண்பாட்டு மற்றும் அரசியல் வெளியிலிருந்து விலக்கப்படுவதற்கே வித்திடும். கோடை விடுமுறைக்குப் பின்னர் கல்வி நிலையங்கள் திறக்கின்ற பொழுது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை என்ற பெயரில் நடைபெறும் கல்வி வணிகத்திற்கு எதிராக கல்வி அமைச்சர் மற்றும் சமூக ஆர்வலர்களின் குரல் கொடுக்கின்றனர், மாணவர் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. தலித்துகளுக்கு முதலில் அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைத்தல் அதன் பின்னர் கட்டாய நன்கொடை என இரண்டு சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. படிப்பதற்கே இடமே கிடைக்காத பொழுது தலித்துகள் இடம் கிடைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்போராட்டம் அவர்களால் “தனி”த்தே நடத்தப்படுகிறது, “பொது” மக்களின் ஆதரவு அதற்கு இல்லாதிருக்கிறது.

[1] Suma Chitnis, 'Education for Equality:Case of Scheduled Castes in Higher Education', Economic and
 Political Weekly, Vol. VII (August: 1972), pp.1675-1681.
[1] Kusum K Premi, 'Educational for the Scheduled Castes: Role of Protective Discrimination in
 Equalisation', Economic and Political Weekly, Vol. IX (November: 1974), pp.1902-1910.
[1] A. R. Kamat, Education and Social Change amongst the Scheduled Castes and Scheduled Tribes,
 Economic and Political Weekly, (August: 1981), pp.1279-1284.
[1] L. F. Rush brook Williams, India in 1920 (Calcutta: Superintendent Government Printing, 1921), p. 158.
[1] MLCD, 27 January 1932, Vol. LIX, p. 145.
[1] MLCD, 24 February 1930, Vol. LII, p. 31.
[1] MLCD, 28 November, 1938, Vol. VIII, p.85.
[1] K. Ragupathi, The History of Devendrakula Vellalar Movement in Tamil Nadu, 1920-2000, an
 unpublished Ph.D. submitted to Manonmaniam Sundaranar University, Tirunelveli (December: 2007), p. 96-97.
 [1] MLCD, 04 March 1926, Vol. XXVIII, p. 95, 27 November 1928, Vol. XLV, p.183.
[1] MLCD, 26 August 1925, Vol. XXIV, pp.788-789.
[1] காலனிய ஆட்சிக்காலத்தில் பகல் மற்றும் இரவுநேரங்களில் இயங்கும் பள்ளிகள் இருந்தன
[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.
[1] MLCD, 01 November 1933, Vol. LXVIII, p.286.
[1] MLCD, 01 November 1933, Vol. LXVIII, p.286.
[1] MLCD, 04 September 1926, Vol. XXXII, pp. 219-220.
[1] L. F. Rush brook Williams, India in 1921-22 (Calcutta: Superintendent Government Printing, 1922), p.
 218.
[1] MLCD, 28 November, 1938, Vol. VIII, p.85.
[1] MLCD, 25 March 1924, p. 1089, MLCD, 24 February 1930, Vol. LII, p.31.
[1] L. F. Rushbrook Williams, India in 1920 (Calcutta: Superintendent of Government Printing, 1921), p.
 159.
[1] Madras Government and Uplift of Harijans, Harijans, (October: 1934), Vol. II, No. 37, p. 294.
[1] MLCD, 04 March 1927, Vol. XXXIV, pp.256-257.
[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.
[1] MLCD, 14 December 1925, p.26.
[1] தகவல்:பாலசுப்பிரமணியன் , திருப்பனிகரிசல்குலம்.
[1] MLCD, 06 September 1926, Vol. XXXII, pp. 292-293.
[1] Grant of Concession to Harijans (Madras: Government of Madras, 1959), p. 2.
[1] அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி:19 பக்:35&40.
[1] கள ஆய்வு 21 ஜனவரி 2009
[1] துண்டறிக்கை, ஆதிதிராவிடன் புரட்சிக்கழகம், திருநெல்வேலி மாவட்டம்
[1] தகவல்: எட்வின், திருநெல்வேலி 01 ஜூலை 2009
[1] கோ ரகுபதி, அந்தப் பாவிகளை தண்டிப்பாராக, 2006ல் எழுதி முடிக்கப்பட்ட ஆனால் வெளியிடப்பட்டிராத சுய வரலாறு

: பால்ஸி, அருமனை, கன்னியாகுமாரி மாவட்டம், 29 ஜூன் 2009.
 அய். இளங்கோவன் வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள், தலித் முரசு

 (பிப்ரவரி: 2009), பக். 18-20.

வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை: தலித்துகளுக்கு எதிரான வன்முறையின் வரலாறு

வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை: தலித்துகளுக்கு எதிரான வன்முறையின் வரலாறு

மின்னஞ்சல்அச்சிடுகPDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
2006 செப்டம்பர் 29 அன்று கயர்லாஞ்சில் நிகழ்த்தப்பட்ட தலித் படு கொலைகள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டி, அதன் அடிப்படையிலான ஒரு சமூகவியல் ஆய்விற்கு தற்போதைய நிலைமைகளை உட்படுத்தும் வகையில்,நாட்டின் முக்கிய தலித் செயல் பாட்டாளர்களில் ஒருவரான ஆனந்த் டெல்டும்டே எழுதிய புத்தகம் கயர்லாஞ்சி: எ ஸ்டிரேஞ் அண்ட் பிட்டர் கிராப். (khairlanji: A Strange and Bitter Crop, Anand Teltumde, navayana publising, NewDelhi. 2008).
மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டம், மொஹாடி தாலுகாவிலுள்ள குக்கிராமம் கயர்லாஞ்சி.  பையாலால் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் மீது அக்கிராமமே வன்மம் கொண்டு பலி தீர்த்த வரலாற்றுப் போக்குகளையும், சமூகப்படிநிலைகளின் வன்மங்களை யும், முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமல் லாமல், அரசு (காவல்துறை), சட்டம் (நீதி மன்றம்),  ஊடகம் ஆகிய அரசமைப்புக ளும் அதற்கு எவ்வாறு துணை போயின, இதுகுறித்த தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் இருட்டடிப்பு செய்தன, நீதியைத் தாமதப்படுத்தி வருகின்றன என்பதையும் இப்புத்தகம் புள்ளிவிவரப் படுத்துகிறது. கயர்லாஞ்சி வன்கொடுமை மீது தலித் அமைப்புகள் தொடுத்த எதிர்வினைகள், தாக்குதல்கள் மூலம் அரசு எந்திரம் அதை எதிர்கொண்ட விதம் குறித்தும், தலித் மீதான வன்முறைகள் குறித்த செய்திகளை வெகுமக்கள் ஊடகங்கள் ஏன் பாகுபாட்டுடன் அணுகுகின்றன என்பதையும் ஆய்வு செய்கிறார்.
தலித்துகளின் துயரங்களைக் குறைப்பது தொடர்பான அரசமைப்புச் சட்ட நிவாரணங்கள் எவ்வாறு போதுமானவையாக இல்லை; சமூகப் பாகுபாடுகளில் இருந்து அம்மக்களைப் பாதுகாக்க ஏன் இயலவில்லை ஆகியவற்றுடன் கயர்லாஞ்சி படுகொலைகளின் அரசியல் பொருளாதாரப் பின்னணியையும் ஆராய்கிறார். முக்கியமாக விடு தலைக்குப் பிந்தைய இந்தியாவில் தலித்துகள்மீதான வன்கொடுமை களில் புதிய பரிமாணமாக உருவாகியுள்ள அபாயக்கூறுகள், சாதியப் படிநிலைகளில் தலித்துகளுக்கு எதிராக வளர்ந்துள்ள புதிய ஆதிக்க சக்திகள் குறித்தும் டெல்டும்டே புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறார்.
முன்னர் குறிப்பிட்ட நாளில் கயர்லாஞ்சி கிராமத்தில் பையாலால் போட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி சுரேகா(40), அவர்களது மகன்கள் ரோஷன்(21), சுதிர் (19) மற்றும் மகள் பிரியங்கா (17) ஆகியோர் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகள் பொதுவெளியில் அறியப்பட ஒரு மாதமாகியது. இப்படுகொலைகளில் ஈடுபட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும்  காவல்துறை அதிகாரி களும், அரசு வழக்கறிஞரும் முழுமூச்சுடன் இந்த இருட்டடிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவை வெறும்(!) படுகொலைகள் மட்டு மல்ல.  ஒரு ஒட்டுமொத்த கிராமமே பல காலமாக வன்மத்தால் பகை வளர்த்துத் தீர்த்துக்கொண்ட பலி.
குடும்பத்தின் மூத்த உறுப்பினரான பையா லால் போட்மாங்கே இல்லாத நேரத்தில் பெண்கள் உட்பட கிராமத்தினர் திரண்டு ஊரின் ஒதுக்குப்புறமான போட்மாங்கே வீட்டைச் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ள னர். அவரது மனைவி, மகள் ஆகியோரை வெளியே இழுத்து வந்து நிர்வாணப் படுத்தி, மகன்கள், சகோதரர்கள் எதிரே கும்பல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ள னர்.17வயதுச் சிறுமி பிரியங்கா சித்ரவதை தாங்காமல் உயிரிழந்த பின்னரும் சடலத்தைக்கூட விட்டுவைக்காமல் வன் புணர்ச்சியில் ஈடுபட்டனர். வீட்டுக்கு தீ வைத்து நிர்மூலமாக்கினர். அவர்களை கிராமத்தின் களத்துமேடு போன்ற இடத் துக்கு இழுத்து வந்து அடித்து சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். பின்னர், சடலங் களை ஒரு டிராக்டரில் போட்டு, வெற்றி ஊர் வலம் நடத்தி ஊருக்குச் சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆற்றங்கரையில் வீசி விட்டு நிம்மதியாக வீடு திரும்பியுள்ளனர். இவ்வளவு கொடுமைகளையும் பையா லால் போட்மாங்கே புதர்மறைவில் பதுங்கி, கையறுநிலையில் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
ஒட்டுமொத்தக் கிராமமும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு எதிராக இத்தகைய கொடூர பகைவெறி கொண்டது எதனால்? அவர்களின் ஆதிக்கசாதி அகங்காரத்துக்கு எதிராக போட் மாங்கே குடும்பம் நடத்திய தொடர்போராட்டம்தான். குறிப்பாக,  போட் மாங்கேயின் மனைவி சுரேகா நடத்திய போராட்டங்கள் ஆதிக்க சாதி யின் ஆண் மமதையை நிர்மூலமாக்கியுள்ளது. இதற்காக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் 'ஒழுக்க நீதி'. போட்மாங்கே நடத்திய போராட்டங்களில் தார்மிக ஆதரவாக இருந்துவந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்த காஜ்பியேவுக்கும் சுரேகாவுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக நீண்டகாலமாகவே ஒரு கதையை இட்டுக்கட்டி வந்துள்ளனர். இதற்காக அந்தத் தாய் மட்டுமல்லாமல் அவளது மகன்களும், மகளும் உயிரிழக்கவேண்டியிருந்தது.
ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக சமூகமே தன்னெழுச்சியாக வெகுண்டெ ழுந்ததால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடந்த எழுச்சியாக புனிதப் படுத்தும் வாதம் மூலம் நீதியைத் தாங்களே கையிலெடுத்துக் கொள் வது நியாயப்படுத்தப்படுகிறது. நீண்டகாலப் பகையைப்  பலி தீர்க்க இதுபோன்ற ஒழுக்க நியதிகளை இட்டுக்கட்டும் போக்கு புராணங்கள் புனையப்பட்டதில் இருந்தே தொடர்கிறது. இதற்கு உச்சாடனமாக, மநு முன்னிறுத்திய நான்கு வர்ணம் எனும் இந்து அறம் முன்னிற்கிறது. இந்த அறத்தைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், கொண்டு செலுத்த வும் கீழ்சாதியினருக்கு என்னவிதமான தண்டனை அளிக்கவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மநு வழி வகுத்துத் தந்துள்ளார். ஆனால், சில தலித் செயல் பாட்டாளர்களின் முன் முயற்சிகள் இல்லையென் றால் அங்கு நடந்த இக்கொடுஞ் செயல்கள் அனைத்தும் இத்தகைய 'புதிய' மநுவாதிகளால் எவ்வாறு மூடிமறைக்கப்பட்டிருக்கும் என்பதை யும், இதில் பெரு ஊடகங்களின் வெட்கக்கேடான செயல்களையும் டெல்டும்டே அம்பலப்படுத்துகிறார். ஒரு பொதுப்பிரச்சனை குறித்து சிந்திக்கவும், தீர்வுகூறவும் கீழ்சாதி யினருக்கு அருகதையில்லை என்னும் மநுநீதி காலம்காலமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. மீறுபவர்களுக்கு என்னவிதமான தண்டனை அளிக்கவும் ஆதிக்க சக்திகளுக்கு மநு உரிமை அளித் துள்ளார். இதுவே சமூக ஒழுங்காகவும் அறமாகவும் பயிற்றுவிக்கப் பட்டு வந்துள்ளது. அனைவருக்கும் சமத் துவ உரிமை, சுதந்தரம், நீதியுடன் கூடிய இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக இந்தியா திகழும் என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்கள் அமலாக்கப்பட்டு வரும் காலத்திலும் மநுகால அறம் தொடர்வதும், அதை நிலைநிறுத்தவும், தண்டனை அளிக்கவுமான அதிகாரங் களை ஆதிக்கசக்திகள் கையில் எடுத்துக் கொள்வதும் எவ்வாறு என்ற கேள்வியை டெல்டும்டே எழுப்புகிறார்.
குறிப்பாக  சில சூத்திரர்கள் தாமும் பார்ப் பனியத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் என் பதை மறந்து புதிய ஆதிக்க சக்திகளாக வும், அதிகார மையங்களாகவும் உருக் கொண்டுள்ளனர். விடுதலை இந்தியா வில் அவர்களே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடு பட்டு வருகின்றனர் என்பதை பட்டியலிடுகிறார். கீழ்வெண்மணி (தமிழ் நாடு) முதல் பெல்ச்சி(பீகார்), கரம்சேடு (ஆந்திரா),  மேலவளவு (தமிழ் நாடு), ஜஜ்ஜார் (ஹரியானா) வரை கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளைப் பட்டியலிட்டு, இவற்றில் ஈடுபட்டவர்கள் பார்ப்பனரல்லாத சாதி இந்துகள், குறிப்பாக சூத்திரர்  என்று ஒதுக்கப்பட்டுள்ள பிரிவினர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். (இதில் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த தாக்குதல் என்பது சாதிய ஒடுக்கு முறை மட்டுமல்ல. கீழ்தஞ்சை மாவட்டத்தில் நூற்றாண்டுகளாக நீடித்துவந்த நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக வர்க்கரீதி யாக அணிதிரண்ட விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங் களுக்கு எதிரான தாக்குதல்களின் உச்சக்கட்டமே  என்ற  இன்னொரு பரிமாணம் இருப்பதை  டெல்டும்டே கவனிக்கத் தவறியுள்ளார்.) சகிப்புத்தன்மை, அகிம்சை, சமாதான விரும்பிகளாக இந்திய மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர் என்ற கருத்து நிலவுகிறது.  இக்கருத்து, கிராமங்களில் மநு கூறும் சமூக ஒழுங்கு, காலம் காலமாக கட்டிக்காக்கப்படுவதை நிரூபணமாக்குவதாக விளங்குகிறது. இந்தச் சமூக ஒழுங்கு குலையும்போது, அங்கு சமூக ஒழுங்குகளையும், அமைதியையும் நிலைநாட்ட கயர்லாஞ்சி வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. எனவே, இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் எப்போது வேண்டுமானாலும் கயர்லாஞ்சியாகும் வாய்ப்புள்ளது என்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தளவுக்குச் சமரசம் செய்து கொள்கிறார் களோ அந்த அளவுக்கே அமைதியாக வாழமுடியும்; நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைகளில் மட்டுமல்லாது, முதலாளித்துவ உற்பத்திநிலை களிலும், தற்போதைய உலகமயமாக்கல் நிலைகளிலும்கூட இச் சமூகப்படிநிலை தொடர்கிறது; நிலப்பிரபுத்துவத்துடன் முதலாளிய சக்திகள் செய்துகொண்ட சமரசத்தால்தான் 60 ஆண்டுகால விடு தலை வரலாற்றிலும்கூட சாதியப்படிநிலைகளை நீக்கமுடியவில்லை. சிறுநகரங்கள், பெருநகரங்களிலும் அண்மைக்காலமாக தொடரும் சாதீய (தலித்துகள் மீதான) வன்முறைகளை இதற்கு நிரூபணமாகச் சுட்டிக்காட்டுகி றார்.
கிராமங்களில் மட்டுமல்லாது, இச்சாதியசக்திகள் நகர்ப்புறங்களிலும் இதே சமூக அமைதியை விரும்புகின்றன, அது குலைக்கப்படும் போது அங்கும் வன்மம் உருவாகிறது. இது சித்ரவதைகளாக, படுகொலைகளாக, வன்புணர்ச்சிகளாக, கயர்லாஞ்சிகளாக வெடிக்காமல் இருக் கலாம். ஆனால் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் தலித்துகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும்போது  மவுன ஒதுக்கல் மூலம் தலித்துகளின் ஆசா பாசங்கள் நசுக்கப்படுகின்றன. தனியார் குழும நிறுவனங்கள் தலித்துகளை அனுமதிப்பதே இல்லை. அவர்கள் பாரம்பரியமாகவே தகுதிக் குறைவான வர்கள் என்று கூறி தனியார் நிறுவனங் கள் ஒதுக்கி வருகின்றன. இது, கயர் லாஞ்சிகளில் நடப்பதைவிட மோசமான அநீதி என்று சுட்டுகிறார் டெல்டும்டே. மேலும், கயர்லாஞ்சியில் நிகழ்ந்த வற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் சாதியப்படிநிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானித்து, சாதியப்படிநிலைகள் அதன் கட்டமைப்பு மற்றும் பருண்மை நிலைகளில் மாற்றமின்றி தொடர்ந்தாலும், அதன் உள்ளமைப்பு மற்றும் குணங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கவனப்படுத்துகிறார்.
ஏழாம் நூற்றாண்டிலிருந்து நிகழ்ந்து வந்த ஊடுருவல்கள், 11ஆம் நூற்றாண்டிலிருந்து செல்வாக்கு செலுத்திய ஆளும்வர்க்கக் கொள்கைகளால் ஏற்பட்ட மாற்றங்களைவிட, பிரிட்டிஷ் காலனியாக் கத்தின் போது ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார். காலனியாக்கத்தின் தொடக்கத்தில் தொடங்கிய மாற்றங்கள் கடந்த நூற்றாண்டுவரை நீடித்தன. புனிதமாகக் கருதப்பட்ட நால்வருண முறை முழுமையாக இல்லாவிட்டாலும், குறிப்பிடத் தக்க அளவுக்குப் பலவீனமடைந்தது. சாதிகளின் சடங்கு அடிப்படைகள் ஒரு விதிவிலக் காகவே எதிர்கொள்ளப்பட்டன.
ஆனால், இன்றைய சாதி முறைகளை மதம் அல்லது மரபு ஆகிய வற்றின் அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. நம் காலத்தின் குணங்களைத் தீர்மானிக்கும் சக்தியாகிய அரசியல் பொருளாதாரத்தின் செல்வாக்கால் தற்கால சாதிமுறைகள் மேலும் குழப்பங்களுக்கு ஆட்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகால 'மதச்சார் பற்ற ஜனநாயக' அரசியல், 'சோசலிச' பொருளாதாரக் கொள்கை களால் சாதிய அமைப்புமுறை புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளது. கடந்தகாலத்தின் சமூக- பண்பாட்டு - உளவியல் மிச்சசொச்சங் களுக்கு இடையேயான உள்ளீடுகளின் இடைக்கால வெளிப்பாடாக வும், சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சலுகைகள் அளிக்கும் வகையில் அரசு பின்பற்றிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளாலும் ஏற்பட்ட வெளிப்பாடாகவும் தற்காலச் சாதிஅமைப்புகள் பிரதிபலிக்கப் படுகின்றன என்று விளக்கமளிக்கிறார் டெல்டும்டே. "பாரம்பரியமாக உரிமை பெற்ற சாதிகள்தாம் (பார்ப்பனர் மற்றும் இரு பிறப்பாளர்) சாதியப்படிநிலைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று இன்றும் அறிவிஜீவிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். (நீதிமன்றம், நாடாளுமன்ற- சட்டமன்றப் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் என) அரசு மற்றும் குடிமைச் சமுதாயங்களில் அவர்களின் மேலாதிக்கம் இன்றும் நீடிக்கிறது என்றபோதிலும், கிராம சமூகப் படிநிலைகளில் அவர்களின் பிடிமானம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
உண்மையில், தங்கள் பங்கை அதிகரிப்பதில் இதர சமூகக் குழுக்கள் முன்னேறியே வருகின்றன. மேலாக, தமது  தொடக்ககாலப் பண்பாட்டு மேலாண்மையுடன்,  பொருளாதாரத்தின் புதிய கூறுகளான முதலாளித்துவம் மற்றும் உலக மயமாக்கல் ஆகிய வளர்ச்சிகளின் பலன்களையும் அனுபவிக்கும் வகையில் அப்பிரிவுகளுடன் இந்தப் பாரம்பரிய மேல்சாதிகள் (பார்ப்பனியர் மற்றும் இருபிறப்பினர்) தம்மைத் தகவமைத்துக் கொண்டனர். இதனால், முன்னர் சாதியப் பாகுபாடு மற்றும் உயர் சாதித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்டவர்களும், இதர பிறபடுத்தப்பட்டவர்களும் இப்போது முன்னேறி வருகிறார்கள். கயர்லாஞ்சி போன்ற தாக்குதல்களில் இரு பிறப்பாளர் போன்ற உயர் சாதியினர் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் கீழ்வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை நடந்த தாக்குதல்களிலும் பார்ப்பனர்கள் நேரிடையாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. 1960 களுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ள இத்தாக்குதல்களில் சமூகத்தில் உயர் நிலை பெற்ற பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர்களே ஈடுபட்டுள்ளனர்' என்று அம்பலப்படுத்துகிறார் டெல்டும்டே. இந்தியாவை இங்கிலாந்து தனது நேரடியான காலனியாக்கத்தின் கீழ் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ராணுவ பலத்தாலும், தந்திரங்களாலும் தனது ஆதிக்கத்தின் கீழ் நாட்டைக் கொண்டுவந்தபின் நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஜமீன்தாரி முறை, ராயத்வாரி முறை போன்றவை அவை. இத்தகைய ஜமீந்தாரர்களாகவும், மிராசுகளாகவும் இருபிறப்பாளர் அல்லாத சூத்திர சாதியினரை நியமித்தது. அதேநேரத்தில் உயர் நிர்வாக மட்டத்தில் பார்ப்பனர்களையும், இரு பிறப்பாளர்களையும் நியமித்தது. இதனால் பார்ப்பனர் காலனியாக்கத்தின் நேரடியான பலன்களை உடனுக்குடன் அனுபவித்து வந்தனர். என்னதான் பண்ணைகளாக இருந்தாலும் பார்ப்பனர்களின் அந்தஸ்தை புதிய ஜமீந்தார்களால் அடையமுடியவில்லை. எனேவே அதிகாரத்தில் பங்கு கோரும் கோரிக்கைகள் எழுந்தன.
இதற்கிடையே மராட்டியம் போன்ற பகுதிகளில் தலித் விழிப்புணர்வு ஏற்பட்டது. ஜோதிராவ் புலேவைத் தொடர்ந்து தலித் கண்ணோட்டம் நாடு முழுவதும் உருவானது. தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,  20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மராட்டியம், தமிழகம் போன்ற பகுதிகளில் பிராமணல்லாதோர் இயக்கம் உருவா னது. இதன்மூலம் காலனிவாதிகளிடம் பெரும்சலுகைகளைப் பெற முடிந்தது. புதிய பதவிகள் பெற்றதுடன் புதிய தொழில்துறைகளிலும் ஈடுபட்டனர். இந்திய தொழில்மயமாக்கத்தில் இவர்கள் பங்கு உறுதிப் படுத்தப்பட்டது. அத்துடன் தொடர்ந்த சீர்திருத்த இயக்கங்கள் மூலம் பெற்ற செல்வாக்கைக் கொண்டு அவர்கள் விடுதலை இந்தியாவிலும் அரசியல் பொருளாதாரச் செல்வாக்கு பெற்ற புதிய சக்திகளாக உயர்ந்தனர் என்கிறார். அதேசமயம், ஏற்கனவே கொழுத்த நிலை யில் இருந்த நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொள்வதையே இந்திய முதலாளித்துவம் விரும்பியதையும், நவீனமயமாக்கலால் தங்களுக்கும் மேலும் லாபம்தான் என்பதால் நிலப்பிரபுத்துவ பிற் போக்காளர்கள் அந்த சமரசத்தை (இன்றுவரை) ஏற்றுக் கொண்டுள் ளதையும் அவர் சரியாகச்  சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலை பெற்ற இந்தியாவில் நவீனப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. நெசவு, தோல், கயிறு, கள் இறக்குதல் போன்ற பாரம்பரியத் தொழில்கள் நசிவடைந்தன. ஒதுக்கப்பட்ட பல சாதிகளைச் சார்ந்த கோடிக்கணக்கானோர்  இதனால் நலிவடைந்தனர். அதேநேரத்தில் பசுமைப்புரட்சி போன்ற திட்டங்கள் நிலவுடமைச் சாதிகளின் அதிகாரத்தை உயர்த்துவதில் முடிவடைந்தது. இதனால் ஏராளமானவர்கள் நிலமிழந்தவர்களாக வும், பாரம்பரிய வாழ்வுரிமைகளை இழந்தவர்களாகவும் ஆயினர். அதேநேரத்தில் நிலவுடமையாளர்களிடம் உபரி குவிந்ததுடன், பாரம்பரிய கிராமத் தன்னிறைவுப் பொருளாதாரத் தன்மைகளை அழித்து, கிராமப் பொருளாதாரத்தை வணிகக் கலாச்சாரமாக்கியது.
இக்காலகட்டத்திற்குள் பார்ப்பனர்களும், இரு பிறப்பினரும் நகரங் களுக்குக் குடிபெயர்ந்தனர். கிராமங்கள் முற்றிலும்  புதிய ஆதிக்க சாதிகளின் (பிற்படுத்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள்) கீழ் வந்தன. அரசின் வளர்ச்சித் திட்டங்களில் எந்தவிதமான (சமூகப்) பாதுகாப்புக்கூறுகளும் பின்பற்றப்படாததால் அவற்றால் தலித்தல் லாத சாதிகள் மட்டுமே பாரம்பரிய தன்னிறைவுக் கிராம முறைகளின் அனைத்துப் பலன்களையும் அடைந்து வளர்ந்தன என்கிறார். பொருளாதார பலம் பெற்ற நிலஉடமைச் சூத்திரசாதிகள் அரசியல் ரீதி யாகவும் தம் சாதி மக்களை அணிதிரட்டும் வல்லமை பெற்றன. சிறிய சாதிகள்கூட தமது விகிதாச்சாரத்துக்கு அதிகமான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறும் நிலை உருவாகியதையும் சுட்டிக்காட்டுகிறார். பலநிலைகளில் அவர்கள் தலித்துகளின் பொரு ளாதார நிலையுடன் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் உள்ள னர்.எனினும் அவர்கள் நில உடமைச் சாதிகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளதால், அவர்களை சமூகரீதியாக நலிவடைந்த தலித் மக்களின் பொருளாதார நிலைக்குள் இணைக்க முடியாது என்கிறார். தலித்துகள், பிற்பட்ட, இதர பிற்பட்ட மக்கள்திரள் ஒன்றிணைய வேண் டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அது சாதி அடிப்படையில் இல்லாமல் வர்க்க அடிப்படையில் அமைய வேண்டும் என்கிறார். (இதற்கு உதாரணமாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வர்க்கரீதியாக அணி திரண்டதைச் சுட்டிக் காட்டமுடியும். ஆனால், அவர் அவ்வாறு சுட்டிக்காட்டவில்லை.)  சமூகங்கள் சாதியுணர்வுடன் நீடிக்கும்வரை இதுபோன்ற இணைப்புப் போராட்டங்களால் சமூக சமத்துவம் ஏற்பட வாய்ப்பில்லை.
தலித் அல்லாத, பார்ப்பனரல்லாத சாதிகளுக்குள் சாதிக் கலப்புத் திருமணங்கள் இக்காலத்தில் பரவலாகக் காணப்பட்ட போதும், இன்னமும் தலித் சமூகங்கள், தலித்தல்லாத, பார்ப்பனரல்லாத சாதிகள் இடையேயான திருமணங்கள் அரிதாக இருக்கிறது. அவர்கள் இன்னமும் சமூகரீதியாக விலக்கப்பட்டுள்ளனர். நிலப்பிரபுத்துவ பிற்போக்காளர்களுடன் இந்திய அரசு செய்து கொண்ட சமரசத்தின் விளைவாகவே இச்சமூகப்படிநிலை நீக்கப்படவில்லை. இதனால் புதிய பொருளாதார வலிமையும், அரசியல் செல்வாக்கும் பெற்று வளர்ந்து வரும் தலித்தல்லாத, பார்ப்பனரல்லாத நில உடமைச் சாதி கள் சமூக ஒதுக்கலைத் தொடர எந்த எல்லைகளையும் மீறத் தயாரா கும் துணிச்சலோடு உள்ளனர். இதுவே கீழ்வெண்மணி முதல் கயர் லாஞ்சி வரை தலித் படுகொலைகள் தொடரத் தைரியமளித்துள்ளது. இருந்தபோதிலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எப்படி காட்டுமிராண்டிகளாக நடந்துகொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. கயர்லாஞ்சி படுகொலையில் ஈடுபட்ட ஆதிக்கசாதிகள் பெரிய அளவிலான மிராசுதார்கள் கூட இல்லை. சிறிய அளவிலான விவசாயிகள் தாம். அதுவும் இந்த பண்டாரா மாவட்டம் விவசாயிகள் தற்கொலைக்குப் புகழ்பெற்ற விதர்பா பகுதியில் உள்ளது. கடன்சுமை தாளாது தற்கொலை செய்தோரில் அனைத்து சாதிகளும் உள்ளனர். ஆனால், போட்மாங்கேயின் 17 வயது மகள் பிரியங்காவின் பெண்குறியில் வண்டியில் மாட்டைப் பூட்டப் பயன்படுத் தும் கம்பினை நுழைத்து சித்ரவதை செய்ததாக உண்மை அறியும்குழு கூறியுள்ளது. உள்ளூர் பாரதிய சனதா கட்சித் தலைவர் ஒருவர் பிரியங்கா உயிரிழந்த பின்னரும் பொதுமக்கள் முன்னிலையில் வன்புணர்ச்சியில் ஈடு பட்டுள்ளார். இதேபோன்று தமிழ்நாட் டில் திண்ணியம் கிராமத்தில் தலித்துகள் வாயில் மலம் திணிக்கப்பட்டது.
இக்கொடுமைகளைச் செய்யும் துணிச் சல் ஆதிக்க சக்திகளுக்கு எவ்வாறு ஏற் பட்டது என்ற கேள்வியை எழுப்பும் டெல்டும்டே, தான் செய்வது அனைத் தும் சரி என்ற எண்ணமும், அதற்குப் பக்கபலமாக மதரீதியாகவும் (மநுவின் வர்ணாசிரம தர்மம்), பண்பாடு, மரபுரீதியாகவும் தாம் மேலானவர்கள் என்ற மமதையும் இவர்களிடம் உள்ளது. அத்துடன் தற்கால அரசியல் மேலாதிக்கம் ஆகியவையும் இவற்றுக்கு ஊற்றுக்கண்ணாகக் உள்ளன என்கிறார். தலித்துகள் கீழானவர்கள், அவர்களுக்கு என்ன தண்டனையும் கொடுக்க தமக்கு உரிமை உள்ளது. தாம் தண்டிக்கா விட்டால் அவர்கள் தம்மைத் தண்டித்துவிடுவர் என்ற கண்ணோட் டத்தை இவர்கள் வெகுஇயல்பாகவே கொண்டுள்ளனர் என்கிறார். இதனை தலித்துகளும் தம்மை அறியாமல் ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். இதனாலேயே தம் மீது திணிக்கப்படும் வன்முறைகள் குறித்து புகார் அளிக்க தலித் மக்கள் அஞ்சுகின்றனர் என்கிறார். இவை அனைத்தையும்விட நீதி அளிக்கும் முறை தலித்துகளுக்கு எதிராகவே செயல்படுவதையும் தெளிவுபடுத்துகிறார். தலித்துகள் தம் மீதான தாக்குதல்கள் குறித்து காவல்நிலையங்களில் புகார் அளிக் கும் நிலைமைகூட சுதந்திரமாக்கப்படவில்லை. புகார் ஏற்கப்பட்டாலும் அதன் பிந்தைய விசாரணைகள் தலித்துகளை மிரட்டுவதாக உள்ளது. வழக்குகளில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்கள்கூட தலித் மக்கள் ஆதரவாளராகவோ, தலித் கண்ணோட்டம் கொண்டவரா கவோ இருப்பதில்லை. இறுதியாக வழக்கு  இழுத்தடிக்கப்பட்டு நீதி தாமதமாக்கப்படுகிறது. இது ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாகவே முடிகிறது என்று கூறும் டெல்டும்டே தேசிய குற்றப்புள்ளிவிவரங்க ளில் இருந்து ஏராளமான தகவல்களை வழங்குகிறார். எனவே இந்திய சமூகம் முழுவதும் புரையோடியுள்ள சமூகப் படிநிலை ஆதிக்க மனோபாவம் அகலாமல் இது அகலாது. ஏனெனில், இதை எதிர்த்து பலாத்காரரீதியில் போராடும் வலிமை தலித்துகளிடம் இல்லை.
சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் எண்ணிக்கை அளவிலும் குறைவானவர்களாக உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நிலத்தினைத் தேசியமயமாக்குவதில் இப்பிரச்சனைக்குத் தீர்வு இணைந்துள்ளது. அதை உணர்ந்ததால்தான் ஒப்புக்கு நிலச்சீர்திருத் தம் என்பதைவிட, நில தேசியமயமாக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந் தது என அம்பேத்கர் வலியுறுத்தினார். இதனை மேற்கொள்ள ஆட்சியில் நிபந்தனையற்ற புரட்சி  ஏற்படவேண்டும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைகள் சென்றுசேர வேண்டு மானால், உண்மையான ஜனநாயக நிறுவனங்கள் அமைத்து  அவற்றை ஆளும் வர்க்கம் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இப்படியான நிலை உருவாகியிருக்காது. ஆனால், உண்மையில் எந்தவிதமான நிர்வாகப் புரட்சியையும் மேற்கொள்ளும் நிலையில் அரசு இல்லை. இந்திய அரசு நிர்வாகிகள் அதாவது மத்திய தர வர்க்க அதிகாரிகள் முதலாளித்துவ அமைப்பைவிட பிற்போக்கு விசுவாசிகளாக உள்ளனர். இன்று  தலித் உரிமைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்களும், அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் அதைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதில்லை. விடுதலையால் தலித்துகள் எதையும் அடையவில்லை என்றும் சொல்ல முடியாது. வழங்கப்பட்ட பாதுகாப்பு ஒருசில தலித்துகளுக்கு சென்றுசேர்ந்துள்ளது. ஆனால், சாதியப் படிநிலை மாறவில்லை. மாறாக சாதிகள் பெருகிவருகின்றன.
விடுதலை இந்தியாவின் தொடக்க ஆண்டுகள் சாதிய சமத்துவத்தில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்தபோதும், குறிப்பிட்ட தனிநபர்கள் மட்டுமே வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்கும் நிலைமைகள் மேலும், மேலும் உருவா னதைத் தொடர்ந்து அதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலைமை கள் பழையபடி உள்சாதிகளை உருவாக்குவதிலும், உள் சாதிப் புனிதங்களிலும் சிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களுக்குள்ளேயே உள்சாதி பெருமை பேசும் அவல நிலைக்கு சமூகம் தாழ்ந்துள்ளது. புதிய சமுதாய நிலைகளில் பார்ப்பனியத்துக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் என்ற அம்பேத் கரிய கண்ணோட்டம் அகன்ற நிலையில், முக்கியமான மகர் சாதியில் கூட உள்சாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு தங்களுக்குள் உயர்வு- தாழ்வு பார்க்கும் நிலை தோன்றியுள்ளது. இச்சூழ்நிலையில் கயர்லாஞ்சிகள் முக்கியத்துவம் வாய்ந்த அபாய எச்சரிக்கைகள் என்று டெல்டும்டே வருத்தத்துடன் முன்னறிவித்திருக்கிறார்.
- அப்பணசாமி

சாதிவெறியின் வேரறுப்போம்; சாதி மறுப்புத் திருமணங்களுக்குத் துணைநிற்போம்

சாதிவெறியின் வேரறுப்போம்; சாதி மறுப்புத் திருமணங்களுக்குத் துணைநிற்போம்

மின்னஞ்சல்அச்சிடுகPDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
‘காதல் அடைதல் உயிர் இயற்கை’ என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். பறவைகளிலும் விலங்குகளி லும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் ஆணும் பெண்ணும் ஈர்ப்புக்குள்ளாகின்றன. எதிர் பாலினத்தின் மீதான இந்த ஈர்ப்பு இனப்பெருக்கத்தின் இன்றியமையாத கூறாக இயற்கையில் இலங்குகிறது. மனிதகுலத்தின் தொடக்கக் காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இத்தகைய ஈர்ப்பு விலங்குகளின் வாழ்நிலையிலிருந்து மேம்பட்டதாக இருக்கவில்லை.
ஆனால் மனித இனம் நாகரிகம் அடைய அடைய, இந்த ஈர்ப்பு வெறும் உடல் சார்ந்தது என்ற நிலை யிலிருந்து மேம்பட்டுக், காதலாக மலர்ச்சி பெற்றது. ஏடறிந்த வரலாற்றுக் காலம் முதல் காதல், மனித வாழ்வில் ஊடும் பாவுமாக இரண்டறக் கலந்துள்ளது. கிரேக்கத்தில் ஹோமர் எழுதிய ‘இலியட்’, மற்றும் நம் சங்க இலக்கியத்தில் அகத்துறைப் பாடல்கள் முதல் இன்று வரை காதல் மனிதனின் படைப்பிலக்கியத்திலும் பிறகலைகளிலும் கருப்பொருளாக இருந்து வருகிறது.
ஆனால் மனிதசமுதாயம் திட்டவட்டமான தன்மை யில் வர்க்கங்களாகப் பிளவுண்டபின் - ஆண்டான்-அடிமை, நிலப்பிரபு-பண்ணையாள், பணக்காரன்-ஏழை, முதலாளி-தொழிலாளி முதலான ஏற்றத்தாழ்வு கள் உண்டானபின், ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக் கும் இடையே இயல்பாக எழும் காதலுக்குப் பலவகை யான கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. இவற்றுடன், உலக அளவில் மதங்கள் பெருந்தடை யாகச் செயல்பட்டன. இந்தியாவில் இந்துமதத்தில் - அதன் ஆணிவேராக உள்ள நால்வருணமும், அவற்றி லிருந்து கிளைத்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட உட்சாதி களும், சாதியை மறுத்தெழுகின்ற காதலுக்கு எதிராக உள்ளன.
இத்தகைய தடைகளால் வரலாற்றில் எண்ணற்ற காதல் நெஞ்சங்கள் நெருப்பில் பொசுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில இலக்கியத்தில் சாகா இடம்பெற்றுள்ளன. ரோமியோ-ஜூலியட், லைலா-மஜ்னு, சலீம்-அனார்க் கலி, அம்பிகாபதி-அமராவதி என நீண்ட பட்டியல் இருக்கிறது. இப்பட்டியலில் திவ்யா-இளவரசன் காதலும் இப்போது இடம்பெற்றுவிட்டது.
பெற்றோர் விரும்பாவிட்டால், ஒரே சாதியில் பிறந்தவர்களின் காதலுக்கும் கடும் எதிர்ப்பு ஏற்படு கிறது. ஏனெனில், ‘பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணம்’ என்பதே சமூக நடைமுறையாக இருக் கிறது. இந்நிலையில் ஓர் இளம் ஆணோ அல்லது பெண்ணோ தன் சாதி அல்லாத ஒருவரைக் காதலிப் பதும், திருமணம் செய்துகொள்ளுவதும் அவர்கள் சார்ந்த இருசாதியினரால் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்தாலும் கொடியக் குற்றமாகக் கருதப்படுகிறது. இதில் ஆண் தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞனாக இருப்பின், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிடுகிறது.
இந்துமதத்தின் அச்சாணியாக இருப்பது, பிறவி யில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதி அமைப்பே யாகும். அதனால்தான் பெரியார், ‘இந்து மதம் சாதியைக் காப்பாற்றும் மதம்’ என்று சொன்னார். ஒரே சாதிக்குள் திருமணம் என்கிற அகமண முறையில் தான், அதன் உயிரியக்கம் இருக்கிறது.
சாதி ஒழிப்புக்காக அய்ம்பது ஆண்டுகளுக்குமேல் அயராது பாடுபட்ட பெரியார் வாழ்ந்த தமிழ்நாட்டில் இன்றும் 99 விழுக்காடு திருமணங்கள் ஒரே சாதிக்குள் தான் நடக்கின்றன. எனவேதான் ‘ஒவ்வொரு சாதியும் ஒரு சமூகமாக இயங்குகிறது’ என்று மேதை அம்பேத்கர் 1916ஆம் ஆண்டி லேயே கூறினார்.
கல்வி, வேலை, தொழில் முதலான காரணங்களால் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு, வெளியில் செல்லும் நிலை இப்போது வளர்ந்துவிட்டது. அதனால் ஆணும் பெண்ணும் சந் திக்கவும் பேசவும் பழகவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவர்களில் சிலர் காதல் வயப்படுகின்றனர். மாமரத்தில் ஏராளமான பூக்கள் பூக்கின்றன. ஆனால் அவற்றுள் மிகச்சிலவே காயாகின்றன. அதுபோலவே பல்வேறு காரணங்களால் இளம்பருவத்தின் முதற்காதலில் பெரும்பாலானவை குறுகிய காலத்திலேயே உலர்ந்து உதிர்ந்து விடுகின்றன. ஏனெனில் கடற்கரையில் மண லில் சிறுவர்கள் வீடுகட்டி விளையாடும் விளையாட் டல்ல காதல். சிறிய அலைகூட, அந்த மணல்வீட்டை அழித்துவிடும். கடந்த காலத்தின் இனிய நினைவு களின் பட்டியலில் ஒன்றாக முதல் காதலின் நினைவும் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் தருமபுரி திவ்யா-இளவரசன் இணையர் தங்கள் காதலுக்காக, கடலில் கடும்புயலின் நடுவே படகைத் திறம்படச் செலுத்துவது போல் போராடினார் கள். மராட்டிய எழுத்தாளரான காண்டேகரின் சிறந்த புதினமான ‘கிரௌஞ்சவதத்’தில், வால்மீகி எழுதிய பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கும்.
“முன்இணையாகிய அன்றிலின்
மோகங் கொள் ஆணினைக் கொன்றனை
மன் நெடுநாள் இனி வாழ்கலை;
வாழ்கலை! வாழ்கலை! வேடனே!”
காதல் இணையில் ஆண் அன்றிலைக் கொன்ற வேடனைப் பழிதூற்றும் பாடல் இது! அந்த வேடனைப் போல், சாதிவெறியும், சாதி அடையாள ஆதாய அரசி யலும், திருமணம் செய்துகொண்டு கணவன்-மனைவி யாக வாழ்ந்த திவ்யா-இளவரசனைத் திட்டமிட்டுப் பிரித்து, இளவரசனைக் கொன்றுவிட்டன.
தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அருகில் உள்ள செல்லன்கொட்டாய் சிற்றூரில் வன்னியர் சாதியைச் சேர்ந்த நாகராசன் மகள் திவ்யா. இவர் செவிலியர் பட்டப்படிப்பில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தார். இவரின் அகவை இருபது. அதே பகுதியைச் சேர்ந்த நத்தம் ஆதித்திராவிடர் குடியிருப் பில் இளங்கோ என்பவரின் 18 அகவை மகன் இளவரசன். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந் தார். நாள்தோறும் பேருந்துப் பயணத்தில் சந்தித்த திவ்யாவும் இளவரசனும் காதல் கொண்டனர். திவ்யா வின் குடும்பத்தினருக்கு இவர்களின் காதல் செய்தி எட்டியது. எனவே திவ்யாவிற்கு மணமுடிக்க வேறு மாப்பிளையைப் பார்த்தனர். அதனால் திவ்யாவும் இளவரசனும் 2012 அக்டோபர் 8 அன்று ஊரை விட்டு வெளியேறினர். திருப்பதியில் 14.10.2012 அன்று திருமணம் செய்துகொண்டனர். காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கோரினர். அதன்பின் திவ்யா, இளவரசன் குடும்பத்தி னருடன் இருந்தார்.
சாதிவெறியர்கள் இவர்களைப் பிரிக்கத் திட்டமிட்டனர். இரண்டு சாதியினருக்கும் இடையே 7.11.12இல் நடந்த பேச்சு வார்த்தையில், ‘திவ்யா விரும்பி வருவதானால், அவரை அவரது குடும்பத்தார் அழைத்துச் செல்லலாம்’ என்று முடிவு செய்யப்பட்டது. திவ்யாவின் தாய் தேன்மொழி 7.11.2012 அன்று இளவரசன் உறவினர்கள் 20 பேர், தன் உறவினர்கள் 8 பேர்களுடன் சென்று திவ்யாவைத் திரும்பி வந்துவிடுமாறு அழைத்தார். திவ்யா வரமறுத்து விட்டார். இந்நிலையில் பஞ்சாயத்தின் போது, முற்பகலில், உற்றார் உறவினர் முன்னிலையில் காவல்துறை அதிகாரி பெருமாளின் இழிவான-‘மானம் போவுதுண்ணா, தூக்குப் போட்டுக் கிட்டு சாவேண்டா’ என்ற ஏளனப் பேச்சுகளால் மனமுடைந்திருந்த திவ்யாவின் தந்தை நாகராசன், 7.11.12 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
தங்கள் மனக்கொதிப்பை-சினத்தை வெளிப்படுத்து வதற்கான ஒருவாய்ப்பாக நாகராசனின் தற்கொலை யைப் பயன்படுத்தி, சுற்றுவட்டாரத்திலிருந்து வன்னி யர்களும் மற்ற வகுப்பினரும் ஒன்றுதிரண்டு ஆதித் திராவிடர்கள் வாழும் நத்தம், அண்ணாநகர், கொண்டம் பட்டி ஆகிய ஊர்களைத் தாக்கினர். 268 வீடுகள் தாக்கப்பட்டன. பல வீடுகள் முற்றிலுமாக எரிக்கப்பட்டன. வீட்டில் இருந்த தொலைக் காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி முதலானவை அடித்து நொறுக்கப்பட்டன. இரும்புப் பேழைகளை உடைத்து அவற்றில் இருந்த நகை, பணம் முதலானவை கொள்ளையடிக்கப்பட்டன. இத்தகைய தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்பது காவல் துறையினருக்கும், உளவுத் துறையினருக்கும் இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னரே தெரிந்திருந் தும் காவல்துறை இவ்வளவு பெரிய அழிவு, வேலை யைத் தடுக்கத் தவறிவிட்டது. இதற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் திறமையின்மையும் ஒரு பெரிய காரணம் ஆகும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் சிற்றூர்களில் சாதி இந்துக்களுக் குக் கட்டுப்பட்டு அடங்கி ஒடுங்கிக்கிடந்த நிலைமையில் கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் பெரும் உடைப்பு ஏற்பட்டது. வேளாண்மைத் தொழில் நலிவடைந்ததாலும் இயந்திரமயமானதாலும், தாழ்த் தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் கல்வி பெற்றதாலும், தங்கள் ஊரைவிட்டு வெளியில் சென்று, நகர்ப்புறங் களில் பெரும் எண்ணிக்கையில் - குறிப்பாக இளை ஞர்கள் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அந் தந்த ஊரில், சாதி இந்துக்களைச் சார்ந்து வாழும் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டதாலும், பொருளா தார நிலையில் ஓரளவு முன்னேறியதாலும் காலங்கால மாகத் தங்களை அழுத்தி வைத்திருந்த சாதியக் கட்டுப் பாடுகளை மீறிடத் துணிவது இயல்பேயாகும். ஆனால், இந்த நிலை, பொதுவாக, சாதி இந்துக்களிடையே வெறுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. 7.11.12 அன்று நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் பேரழிவை உண்டாக்கியதற்கு இந்த மனநிலையே காரணமாகும்.
திவ்யா-இளவரசன் இல்வாழ்க்கையில் தொடர்ந்து சாதியப் புயல் வீசிக்கொண்டே இருந்தது.
*             2012 நவம்பர் 24 : தருமபுரி நீதிமன்றத்தில் திவ்யா, தான் கடத்தப்படவில்லை என்றும், இளவரச னுடன் விரும்பியே சென்றதாகவும் தெரிவித்தார்.
*             2013 மார்ச்சு 19 : திவ்யாவின் அம்மா தேன் மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் மகள் காணவில்லை என்ற அடிப்படையில் ஆட்கொணர்வு விண்ணப்பம் செய்தார்.
*             2013 மார்ச்சு 27 : உயர்நீதிமன்றத்திற்கு திவ்யா வந்தார். நீதிபதிகள் முன்னிலையில் இளவரசனுடன் வாழ விரும்புவதாகக் கூறினார்.
*             2013 சூன் 4 : ‘அம்மாவின் உடல்நிலை ஆபத் தாக இருக்கிறது’ என்று உறவினர்கள் தொலைப் பேசியில் அழைத்ததன் அடிப்படையில் திவ்யா தன் தாய்வீட்டுக்குச் சென்றார்.
*             2013 சூன் 6 : தான் பெரும் மனக்குழப்பத்தில் இருப்பதாகவும், தற்காலிகமாக அம்மாவுடன் வாழ விரும்புவதாகவும் திவ்யா உயர்நீதிமன்றத்தில் சொன்னார்.
*             2013 சூலை 1 : தாய் விரும்பினால் இளவரசனு டன் வாழ்வேன் என்று உயர்நீதிமன்றத்தில் கூறினார்.
*             2013 சூலை 3 : ‘இனி இளவரசனுடன் சேர்ந்து வாழப் போவதில்லை’ என்று செய்தியாளர்களிடம் திவ்யா கூறினார்.
*             2013 சூலை 4 : தருமபுரியில் இரயில் தண்ட வாளத்தின் அருகில் தலையில் அடிபட்டு இளவர சனின் இறந்த உடல் கிடந்தது. தற்கொலையா? கொலையா? என்ற விவாதம் இன்னும் நடை பெறுகிறது,
*             2013 சூலை 14 : இளவரசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருமணம் செய்துகொள்ளாமல் ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்வதை நீதிமன்றம் அனு மதிக்கிறது. ஆனால் திருமணம் செய்துகொண்ட திவ்யாவும் இளவரசனும் ஒன்றாக வாழக்கூடாது என்ற சாதிவெறி இளவரசனைக் கொன்றுவிட்டது; திவ்யாவின் வாழ்வையும் சீரழித்துவிட்டது. இளவர சனின் பெற்றோர் தம் மகனை இழந்தும், மருமகளை அழைக்க முடியாமலும் துன்புறுகின்றனர். திவ்யா, தந்தையையும், கணவனையும் இழந்து இடிந்து போய் உள்ளார். அவரை, அரசினரே பொறுப்பேற்றுப் படிக்க வைத்து நல்வாழ்வுக்கு வழி அமைப்பது நல்லது.
சாதியை மறுத்துக் காதலிப்போரும், திருமணம் செய்துகொள்வோரும், சாதியின் புனிதத்தை-பெரு மையைக் காப்பதற்காக என்ற பெயரால் கொல்லப் படுவது இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இவை ‘கவுரவக் கொலைகள்’ அதாவது, ‘சாதி கவுரத்தைக் காப்பாற்றுவதற்கான கொலைகள்-தற்கொலைகள்’ என்று கூறப்படுகின்றன. இந்திய அளவில் 2013இல் இதுவரை 13 கவுரவக் கொலைகள் நடந்துள்ளதாகப் பட்டியல் வெளியாகியுள்ளது. சாதி வேலியைத் தாண்டித் திருமணம் செய்து கொள்ளும் இணையரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருந்தால், அவர்தான் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்.
தஞ்சை மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பான கள்ளர் சாதியில் பிறந்த அபிராமி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, பேருந்துப் பயணத்தின் மூலம், மாரிமுத்து என்கிற ஆதித்திராவிட இளைஞனுடன் பழகினார். காதலர்களாயினர். அபிராமி யின் பெற்றோர் இதையறிந்து, 35 அகவையினரான குடிகாரத் தாய்மாமனுக்கு அபிராமியைத் திருமணம் செய்திட முயன்றனர். எனவே அபிராமி வீட்டைவிட்டு வெளியேறி, மாரிமுத்துவை 2010 செப்டம்பர் 16 அன்று திருமணம் செய்துகொண்டார். சென்னையில் வாழ்ந்த இவர்களுக்கு மகள் பிறந்தாள். அதனால் இவர்கள் மாரிமுத்துவின் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பினார்கள். குழந்தையின் முதல் பிறந்த நாளை யொட்டி, ஒரு தங்கச் சங்கிலி அளிக்க விரும்புவதாக அபிராமியின் அண்ணன், தங்கள் வீட்டுக்கு வருமாறு, மாரிமுத்துவிடம் கூறினார். அவ்வாறு சென்ற மாரிமுத்து விடம் அபிராமியின் அண்ணனும் தந்தையும் கொன்று விட்டு, காவல்நிலையத்தில் புகலடைந்தனர். சாதி உணர்வு சாதிவெறி என்பது ஒரு மனநிலைதான். ஆனால் அது சில சமயம் கொலைவெறி பிடித்தாடுகிறது.
உள்துறை துணை அமைச்சர் ஆர்.பி.என். சிங், 2012ஆம் ஆண்டில் மட்டும் 333 கவுரவக் கொலைகள் நடந்திருப்பதாகப் புகார்கள் வந்திருப்பதாக நாடாளுமன் றத்தில் 18.12.2012 அன்று கூறினார். ஜாட் சாதியினர் அதிக அளவில் வாழும் மேற்கு உத்தரப் பிரதேசம், அரியானா, இராஜ°தான் ஆகிய மாநிலங் களில் ‘கவுரவக் கொலைகள்’ பெருமளவில் நடக் கின்றன. ‘கபாக்’ என்னும் சாதிப் பஞ்சாயத்துக்கூடி, இக்கொலை களை நிறைவேற்றுகின்றன. அரியானா மாநிலத்தில் கயித்தால் மாவட்டத்தில் ‘ரோர்’ (சுடிச) என்ற சாதி இந்து வான மீனா, சூரியகாந்த் என்ற தலித் இளைஞனை 8.4.2013 அன்று திருமணம் செய்து கொண்டார். அதனால் ரோர் சாதியினர் சூரியகாந்த் வாழ்ந்த தலித் குடியிருப்பை 13.4.2013 அன்று தாக்கினர். வீடுகளைச் சேதப்படுத்தினர். பொருள்களைக் கொள்ளையடித்தனர்.
ஏணிப்படிகள் போல் அமைந்துள்ள சாதி அமைப் பில் எல்லாச் சாதிகளிடமும், பிறப்பால் உயர்வு-தாழ்வு கருதும் பார்ப்பனியச் சிந்தனை படிந்துகிடக்கிறது என்று மேதை அம்பேத்கர் கூறியுள்ளார். இத்தாக்கம் சாதிப்படி நிலையில் கடைசிப் படியாக - ‘தீண்டப்படாத’ சாதியாகக் கருதப்படும் சாதிகளுக்கிடையிலும் ஊடுருவியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ‘பறையர்’ சாதிப் பெண் கோகிலாவும், அருந்ததியர் இளைஞன் கார்த்தி கேயனும் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கோகிலா குடும்பத்தினர் இதை எதிர்ப் பார்கள் என்பதால் திருமணம் செய்துகொண் டதை இரகசியமாக இவ்விருவரும் வைத்திருந்தனர். 2012 ஆம் ஆண்டு இந்த உண்மை வெளிப்பட்டதும், கோகிலா தன் பெற்றோர் வீட்டில் மர்மமான முறையில் செத்தார். இது ஒரு கவுரவக் கொலையாகவே கருதப் படுகிறது (தி இந்து,13.7.2013).
இதுபோன்ற கவுரவக் கொலைகளில் பெரும்பாலா னவை குடும்ப அளவில் மட்டும் அறிந்த செய்தியாக மறைக்கப்படுகின்றன. பெண் ஒரு பணக்காரரின் மகள் என்றால், அல்லது மேல்சாதிக்காரி என்றால், தெருவில், ஊரில் மட்டும் கசமுசவென்று பேசப்படும் செய்தி யாக மட்டும் உள்ளன. ஆனால் திவ்யா-இளவரசன் காதல் திரு மணமும், அதையொட்டி நடந்த நிகழ்ச்சி களும் தமிழ் நாட்டையும் தாண்டி, இந்திய அளவில் பேசப்படும் செய்தியாக ஆனது ஏன்? எப்படி?
இதற்கான முதல் விசை, ஏற்கெனவே, 2012ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரத்தில் வன்னியர் குடும்பங்கள் கூடும் விழா வில், காடுவெட்டி குருவின் பேச்சிலிருந்து வெளிப்பட்டது. ‘வன்னியர் பெண்கள் மீது கைவைக்கும் பறையன்களை வெட்டுங்கள்’ என்று அப்போது குரு பேசினார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, “தலித் இளைஞர்கள் டி சர்ட், ஜீன்° பேண்ட், கூலிங்கிளா° அணிந்துகொண்டு, பிற சாதிப் பெண்களை மயக்கி ஏமாற்றித் தம் வலை யில் விழவைக்கிறார்கள். பிறகு தமது நாடகக் காதலை நடத்திப் பணம் பிடுங்கிக்கொண்டு விரட்டி விடுகிறார் கள்” என்று பல கூட்டங்களில் பேசினார்.
திவ்யாவின் தந்தை நாகராசன் தற்கொலை செய்து கொண்டபின், நத்தம், அண்ணாநகர், கொண்டம் பட்டி ஆகிய ஆதித்திராவிடர் குடியிருப்புகள் தாக்கப் பட்டு, சூறையாடப்பட்ட பிறகு, மற்ற சாதிகளின் தலைவர்களை இணைத்து, ‘அனைத்துச் சமூகப் பாதுகாப்புப் பேரவை’ என்பதை மருத்துவர் இராமதாசு ஏற்படுத்தினார். இந்தப் பேரவையின் பெயரில் பல ஊர்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆதித்திராவிட இளைஞர்கள், சாதி இந்து இளம்பெண்களின் இளமைக் கும் சொத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார் கள் என்ற கருத்து இப்பேரவைக் கூட்டங்களில் பேசப்பட்டது. கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சாதித் தலைவர்கள் இப்பேரவையில் ஆர்வமுடன் செயல் பட்டனர். ஆனால் மற்ற சாதியினர் இப்போக்கை ஆதரிக்காததால் இப்பேரவையின் தொடர் கூட்டச் செயல்பாடு முடங்கிப்போயிற்று.
5.4.2013 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், திவ்யா, “எனக்கு அறிவுரை கூறும் போதெல்லாம் என் அப்பா திரும்பத் திரும்பச் சொன்ன ஒரே செய்தி - நான் ஏற்றுக்கொண்டாலும் உன் காதலை இந்தச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது. என் அண்ணன், தம்பிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இளவரசன் பக்கத்து ஊர் என்பதுதான் என் பிரச்சனை. இதே சாதிப் பையன் தூரத்தில் ஏதாவது ஊரைச் சேர்ந்தவன் என்றால் எப்படியாவது சமாளித்துவிடுவேன் என்பது தான்” என்று கூறினார் (இதன் ஒலி வடிவம் உள்ளது).
இளவரசனின் தந்தை இளங்கோவுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திவ்யா-இளவரசன் திருமணம் புயலாக வடிவவெடுத்த நிலையிலும் இளவரசனின் தந்தை எந்தவொரு தலித் அமைப்பிடமோ, கட்சியிடமோ ஆதரவு கேட்கவில்லை.
எனவே, குடும்ப அளவில் நல்லது, கெட்டதை முடிவெடுக்க வேண்டிய திவ்யா-இளவரசன் திருமணச் சிக்கல், முதலில் பாட்டாளி மக்கள் கட்சியாலும், இரண்டாவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாலும் தங்கள் தங்கள் சாதிக் கட்சியின் அரசியல் ஆதாயத் திற்காகக் கையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனால் இது சாதிய மோதலாக வெடித்தது. இந்தச் சாதி ஆதிக்கத் தீயில் திவ்யா-இளவரசன் காதல் பொசுங் கியது. இளவரசன் மண்ணோடு மண்ணாகிப் போனான்.
கொண்டம்பட்டி ஆதித்திராவிட இளைஞர் நேதாஜி யும் 20 கி.மீ.க்கு அப்பால் உள்ள கருவேலம்பட்டி வன்னியர் குடும்பப் பெண் முத்துலட்சுமியும் கல்லூரி யில் ஒரே வகுப்பில் படிக்கும் போது காதலர்களாகி, திருமணம் செய்துகொண்டு சாதிப் பேய்க்கு அஞ்சி நெடுந்தொலைவில் வெளியூரில் வாழ்கின்றனர். இது சாதிப் பிரச்சனையாக்கப்படவில்லை. இதுபோல் திவ்யாவும் இளவரசனும் சில ஆண்டுகள் வெளியூரில் வாழ்ந் திருந்தால், இக்கொடிய தாக்குதலும் சாவும் நேர்ந்திருக்காதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
1990ஆம் ஆண்டு மேதை அம்பேத்கரின் நூற்றாண்டு தொடங்கியது. அது தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட இளை ஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த எழுச்சியை-இளைஞர்களின் உணர்ச்சி யை சில பகுதிகளில், ‘தலித்துகளில் சிலபேர் தாங்கள் தலைவராக வளரப் பயன்படுத்திக் கொண்டனர். கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் அதிகாரமும் செல்வமும் பெற்றனர். பரந்துபட்ட அளவில் செயல்பட்ட தொல். திருமாவளவன் போன்றவர்கள், டாக்டர் அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அளித்த, ‘கற்பி, போராடு, ஒன்றுபடு’ என்ற முழக்கத்தை முன் வைக்காமல், ‘அடங்கமறு, அத்துமீறு, திருப்பி அடி’ என்று முழங்கினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித்அறிவாளி எனக் கூறப்படும் இரவிகுமார் போன்றவர்கள், “தலித்துகளின் எதிரிகள் பார்ப்பனர் கள் அல்லர்; பிற்படுத்தப்பட்ட சாதியினரே” என்ற கருத்தைப் பரப்பினர். ‘பார்ப்பனியமும் முதலாளியமும் ஒடுக்கப் பட்ட வகுப்பினரின் முதன்மையான எதிரிகள்’ என்று மேதை அம்பேத்கர் கூறியதைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டனர்.
டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் விடுதலையைத் தன் வாழ்வின் குறிக்கோள் என வரித்துக்கொண்டு, செயல்படத் தொடங்கிய காலம் முதல் இறுதி மூச்சுவரை, சாதி இந்துக்களில் முற் போக்குச் சிந்தனையாளர்களின் பங்கேற்பையும் ஆதர வையும் வரவேற்றார். 1936இல் அம்பேத்கர் தொடங் கிய சுதந்தரத் தொழிலாளர் கட்சியும், தன் இறுதிக் காலத்தில், தொடக்க நினைத்திருந்த குடியரசுக் கட்சியும், உழைக்கும் மக்களான பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களும் ஒன்றிணைந்து இந்திய அரசின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றாத வரை யில், உழைக்கும் மக்களுக்கு விடுதலை கிடைக்காது” என்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டி ருந்தன. 25-4-1948 மாநாட்டில், இதையே, அரசியல் குறிக்கோளாக, மேதை அம்பேத்கர் அறிவித்தார்.
சாதி அடையாளத்தை மட்டுமே முன்னிறுத்தி, தலித்துகள் ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. அதேபோல எந்தவொரு புரட்சிகர இயக்கமும் அல்லது கடசியும் தலித் விடுதலையை முன்னிலைப்படுத்தாமல் வெற்றி பெற முடியாது. ‘பறையன்’ பட்டத்தை ஒழிக் காமல், ‘சூத்திரன்’ பட்டத்தை ஒழிக்க முடியாது, என்று பெரியார் வகுத் தளித்த கொள்கையே கலங்கரை விளக்கம் போன்ற தாகும்.
கைநிறைய சம்பளம் வாங்கும் வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த ஆணும் பெண்ணும் காதலித்தால் பெரிய அளவில் எதிர்ப்பு எழுவதில்லை. பெரும்பாலும் இரு சாதிகளின் உற்றார் உறவினரும் இத்தகைய சாதிமறுப்புத் திருமணங்களில் கலந்துகொள்கின்றனர். பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ! சாதியைக் காப்பாற்றுவதில் ஆண்களுக்கு மட்டுமே சொத்துரிமை என்கிற நடைமுறை இருப்பது ஒரு பெரிய காரணமாகும். எனவே பெண்களுக்கு உயர்கல்வியும், சொத்துரி மையும், தன் காலில் நிற்கக் கூடிய வருவாய் வாய்ப்பும் அமையும் போது இயல்பாகவே சாதி மறுப்புத் திருமணங்கள் பெருகும். இவற்றுக்கான எதிர்ப்பும் குன்றும். சாதியை மறுத்துக் காதலிக்கும் இன்றைய இளைஞர்கள் இந்தப் பொருளாதார அடித்தளத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். காதல் வெறும் உணர்ச்சிப் பெருக்காக இருந்தால் மட்டும் போதாது. அது வெற்றிபெற, அறிவுநெறியும் தேவைப்படுகிறது. காதல் என்பது மட்டுமே வாழ்க்கை அன்று; இளை ஞர்கள் தங்கள் ஒப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தவும் சாதனைகள் புரியவும் எண்ணற்ற களங்கள் உள்ளன.
‘சாதி ஒருமையில் ஒன்றுமில்லாதது; பன்மையில் தான் அது உயிர் வாழ்கிறது’ (Caste in the singular number is an unreality; Caste exists only in the plural number) என்று, 1916இல் ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற கட்டுரையில் டாக்டர் அம்பேத்கர் எழுதி னார். மக்களைப் பல சாதிகளாகப் பிரித்துவைத்து மேல்சாதி ஆளும்வர்க்கம் வரலாறு நெடுகிலும் சுரண்டி யது. இன்றும் இதேநிலைதான் கிட்டத்தட்ட நீடிக்கின்றது. இந்த ஆளும்வர்க்கத்தின் இளைய கூட்டாளிகளாக ஆவதற்காகச் சாதியை முன்னிலைப்படுத்திட முனை வோரின் முயற்சியைக் கிள்ளி எறிவோம். அதேசமயம் பெரியார், மேதை அம்பேத்கர் காட்டியுள்ள வழியில் சாதியமைப்பின் முதுகெலும்பை முறித்திட ஒன்றி ணைந்துப் போராடுவோம்!