Friday, April 13, 2012
தலித் பங்கைத் திருப்பிக்கொடு! - சுக்தேவ் தோராட்
அம்பேத்கர் - ஒடுக்கப்பட்டோர் அனைவரின் உரிமைக்குரல்
தேசிய அவமானம்
தேசிய அவமானம் செவ்வாய், 21 பெப்ரவரி 2012 17:35 புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த கருவடத் தெரு ஊராட்சி மன்றத் தலைவர் அ. கலைமணி என்ற தலித் பெண்மணி, குடியரசு நாள் விழாவில் தேசியக்கொடி ஏற்றியபோது, அதே ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மகன் 20 பேருடன் திடீரென்று புகுந்து ஊராட்சி மன்றத் தலைவரின் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி, தாக்கி, தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுத்து தானே ஏற்றியிருக்கிறார். கலைமணி தலித் என்பதால், அவரை தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்று கள்ளர் சாதியினர் திட்டமிட்டுள்ளதை அறிந்து 19.1.2012 அன்று கண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஊராட்சி மன்றத் தலைவரின் புகாரை காவல் துறை அலட்சியப்படுத்தியுள்ளது ("தி இந்து' 29.1.2012). இன்றளவும் சமத்துவத்தைப் பேண இந்து சமூகம் தயாரில்லை என்பதுமட்டும் அல்ல; அத்தகைய சமத்துவத்தைப் பேணும் தலித் மக்களையும் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு : ஒரிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த லாத்தூரில் 22.1.2012 அன்று 9 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கணேஷ் சுனா, தனக்கென ஒரு புதுச்சட்டை வாங்குவதற்காக உள்ளூரில் உள்ள ஒரு துணிக்கடைக்கு சென்றிருக்கிறார். கடையில் அந்த மாணவர் விசாரித்துக் கொண்டிருக்கும்போது, அவர் சட்டைக்கு உள்ளே பனியன் அணிந்திருப்பதை அந்த சாதி இந்து கடைக்காரர் கவனித்திருக்கிறார். இது, அவர் கண்ணை உறுத்தியிருக்கிறது. ஆனால், இதை வெளிப்படுத்தாமல் அந்த மாணவர் தன் கடைக்கு திருட வந்ததாகச் சொல்லி கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதைக் கண்டித்த அவரது தாத்தாவும் தாக்கப்பட்டுள்ளார். மேலும், இம்மாணவர் வசிக்கும் சேரிக்கு திரண்ட சாதி இந்து கும்பல் 50 வீடுகளையும், அவர்களது உடைமைகளையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளது ("தி இந்து', 25.1.2012). மகாராட்டிர மாநிலத்தில் உள்ள முல்கான் கிராமத்தில் 42 வயதான தலித் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து, தாக்கி, நிர்வாணமாக நடக்கவிட்டுள்ளனர். இப்பெண்ணின் மகன் ஒரு சாதி இந்து பெண்ணுடன் ஒரு மாதத்திற்கு முன்பு ஊரைவிட்டு ஓடிவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த சாதி இந்துக்கள், பட்டப்பகலில் அனைவரின் முன்னிலையிலும் இக்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் இப்பெண் அளித்த புகாரை போலிஸ் வாங்க மறுத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அப்பெண்மணி கூறுகிறார் : "சாதி இந்து பெண்கள் என்னை கீழே தள்ளி என் புடவையை உருவி நிர்வாணமாக்கினர். அதற்குப் பிறகு என்னைச் செருப்பாலும் கம்புகளாலும் அடிக்கத் தொடங்கினர். இரண்டு மணி நேரம் என்னை இப்படியே துன்புறுத்தினர்' ("தி இந்து', 12.1.2012). தலித் மக்கள் உண்ணும் உணவுகூட இங்கு கொச்சைப்படுத்தப்படுகிறது. "தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போதோ மாட்டிறைச்சி உண்டார்' என்று உண்மைக்கு மாறான ஒரு தகவலைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியது "நக்கீரன்' ஏடு. மாட்டிறைச்சி உண்பது கேவலமானது என்ற கருத்தின் அடிப்படையில், அது உண்மையில் தலித் மக்களைத்தான் கொச்சைப்படுத்தி யிருக்கிறது. சமூகத்தில் நிலவும் தவறான புரிதல்களை ஒழிக்க முன்வராமல், அதையும் வியாபாரமாக்கும் சூழ்ச்சி இது. இவ்வாறு தலித்துகளை கொச்சைப்படுத்துவதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் என்று "நக்கீரனு'க்கு வக்காலத்து வாங்குகிறவர்களும் நாட்டில் இருக்கிறார்கள்! இது தொடர்பாக தமிழக முதல்வர் தாக்கல் செய்துள்ள அவமதிப்பு வழக்கில், "இச்செய்தி பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல் அமைச்சர் மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கிவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார் ("தினத்தந்தி' 12.1.2012). முதல்வர் குறிப்பிடும் "தவறான எண்ணம்' எது? "மாட்டிறைச்சி உண்பது கேவலமானது' என்பதுதானே? மாட்டின் உழைப்பைச் சுரண்டுவதும், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அதைக் கொடூரமாக துன்புறுத்துவதும் தமிழ்ச்சமூகத்திற்கு பண்பாடு! ஆனால், அதை உண்பதும், உண்பவர்களும் மட்டும் கேலவமானவர்கள். சாதியற்ற சமத்துவப் பண்பாடே தலித் மக்களின் வாழ்க்கைமுறை என்பதால்தான் சாதி இந்து சமூகம் அதை (சமத்துவத்தை) அருவெறுப்பாகப் பார்த்து, ஜாதியைப் (சமத்துவமின்மையை) போற்றுகிறது போலும்! இந்தியாவில் நாள்தோறும் நடத்தப்படும் வன்கொடுமைகளால் பாதிப்பிற்குள்ளாவது தலித் மக்கள்தான் எனினும், அது அவர்கள் செய்த தவறுகளால் விளைந்தது அல்ல. சமூக, பொருளியல் வாழ்க்கையில் தலித் மக்கள் சமத்துவத்தை நிலைநாட்டும் போதுதான் அவர்கள் தாக்கப்படுகின்றனர். இது, தலித் மக்களுக்கு நேரும் அவமானம் என்று கருதி இச்சமூகம் வேடிக்கை பார்க்கிறது. மாறாக, இது, இந்து சமூகத்திற்கும், இந்திய ஜனநாயகத்திற்கும் நாள்தோறும் ஏற்படும் அவமானம். ஆனால், சல்மான் ருஷ்டிக்கு கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதற்காக கூச்சல் போடுகிறவர்கள், இந்நாட்டின் 25 கோடி மக்களுக்கான சுதந்திரம் மறுக்கப்படுவதைப் பற்றிப் பேசுவதில்லை. வன்கொடுமைகளுக்கு காரணமான ஜாதிய சமூக அமைப்பை கேள்விக்குள்ளாக்காமல், நாள்தோறும் நடைபெறும் கொடுமைகளை மட்டும் கண்டிப்பது போலித்தனமானது. சமத்துவமின்மையை கருவறுக்கும் இந்து கருத்தியலுக்கு உரமிரட்டுக் கொண்டு, சமூக ஜனநாயகத்தை மலரச் செய்ய முடியாது. அது அரசியல் ஜனநாயகத்தையும் பாழ்படுத்திவிடும்.
அன்னூரில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் உரிமைப் போராட்டம் வெற்றி
அன்னூரில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் உரிமைப் போராட்டம் வெற்றி பெ.மு. செய்தியாளர் வெள்ளி, 01 ஜூலை 2011 19:40 சாதி - தீண்டாமைக் கொடுமைகளை சட்டத்தின் பிடியிலிருந்து மறைக்க முயலும் மனித உரிமைப் பிரிவு மற்றும் காவல்துறையினருக்கு கழக சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தீண்டாமைக் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையினரும் தண்டிக்கப்படுவதற்கு சட்டத்தில் இடமிருப்பதை மறந்துவிட வேண்டாம் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எச்சரித்தார்.கோவை மாவட்டம் அன்னூர் பகுதி முழுதும் பல்வேறு வடிவங்களில் சாதி வெறியின் கோர முகமான தீண்டாமை தலைவிரித்தாடுவதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. குறுக்கிளையாம்பாளையம் எனும் கிராமத்தில் வசந்தகுமார் என்ற அருந்ததியர் சமூகத்தின் பள்ளிச் சிறுவன், பொதுக் குழாயில் தண்ணீர் எடுத்தபோது ஆதிக்கசாதியைச் சார்ந்த பெண்களும், ஆண்களும் சிறுவனைத் தாக்கியதைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகம் களத்தில் இறங்கியது. சாலை மறியல், போராட்டம் நடத்தி, அடுத்த நாள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனுவும் தரப்பட்டது.தீண்டாமைக்கு எதிராக 1000 குடங்களுடன் ‘சாதித் தடை செய்யப்பட்ட’ பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை ஜூன் 27 ஆம் தேதி கழகம் அறிவித்தது. புதுடில்லியிலுள்ள தேசிய மனித உரிமை ஆணையமும், ஆங்கில நாளேட்டில் வெளிவந்த இந்த ‘தீண்டாமை’ச் செய்தியைப் படித்து தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முன் வந்தது. அதற்குப் பிறகு பதறிப் போன காவல்துறையும் மாவட்ட ஆட்சி நிர்வாகமும் அவசர நடவடிக்கை களை மேற்கொண்டன. கழகப் போராட்டம் நடப்பதற்கு முன், ஏதேனும் ஒரு முடிவை எட்ட வேண்டும் என்று திட்டமிட்டு, சமரசக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். கோட்டாட்சியர் தலைமையில் காவல்துறையினர் பெரியார்திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆதிக்கசாதியினர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். ஆதிக்க சாதியினர், தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே தண்ணீரை எடுக்க தடுத்ததாக பொய்யான சமா தானங்களைக் கூறி தலித் மக்கள் தண்ணீர் பிடிப்பதை எதிர்க்க மாட்டோம் என்று உறுதி கூறினர். இரு தரப்பினருக்கும் சமாதானம் ஏற்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகம் பத்திரிகைகளுக்கு செய்தி வெளியிட்டது.தண்ணீர் பிரச்சினையில் பின்பற்றப்படும் ‘தீண்டாமை’ மட்டுமல்லாது, முடிவெட்டுவதில், மோட்டார் சைக்கிளில் பயணிப்பதில், செல்போன் பேசுவதில் அருந்ததி சமூக மக்கள் மீது சாதி வெறியர்கள் திணிக்கும் தீண்டாமையை முடிவுக்குக் கொண்டு வரும்வரை கழகம் போராடும் என்று கழக சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தண்ணீர் பிடிக்கும் பிரச்சினையில் சாதி ஆதிக்க வாதிகள் தீண்டாமையைப் பின்பற்ற மாட்டோம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து குறுக்கிளையாம் பாளையத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நிறுத்தப்பட்டு, அன்னூரில் ஓதிமலைப்பாதையில் மற்ற தீண்டாமை வடிவங்களை நிறுத்தி விடுமாறு வலியுறுத்தும் எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் ஜூன் 27 அன்று நடத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் போராட்டத்துக்கு திரண்டிருந்தனர். தீண்டாமைக் கொடுமைக்குள்ளான அன்னூர் பகுதி தலித் மக்களும் ஆண்களும் பெண்களும் காலி குடங்களுடன் திரண்டு வந்திருந்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உணர்ச்சி எரிமலையாய் திரண்டிருந்த கூட்டம், சாதி வெறியர்களுக்கும் காவல்துறைக்கும் கடும் எச்சரிக்கை செய்தது. கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, செங் கோட்டையன் (தலித் விடுதலைக் கட்சி), சி. கலை யரசன் (விடுதலை சிறுத்தைகள்), வழக்கறிஞர் அலெக்சு, வெண்மணி (தமிழர் விடுதலை இயக்கம்), கார்க்கி (சமத்துவ முன்னணி), மகேந்திரன் (அண்ணல் அம்பேத்கர் துப்புரவு பணியாளர் சங்கம்), மாணிக்கம் (ஆதித் தமிழர் பேரவை), பன்னீர் செல்வம் (தமிழ் நாடு மாணவர் கழகம்), ஈசுவரன் (கழக அன்னூர் ஒன்றிய செயலாளர்) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தண்ணீர் பிடித்ததற்காக தாக்கப்பட்ட பள்ளி மாணவன் வசந்தகுமார், நடந்த சம்பவத்தை விளக்கினார். மாவட்ட செயலாளர் ஆ. நாகராசன் தொகுத்து வழங்கினார்.சேலம், திருச்சி, பழனி, ஈரோடு, கடத்தூர், மேட்டூர், காவாக்குடி, திருப்பூர், பல்லடம், பொள்ளாச்சி, சூலூர், பழனி பகுதியிலிருந்து கழகத் தோழர்கள் தனி வேன்களிலும், பேருந்துகளிலும் திரண்டு வந்திருந்தனர். கழகத் தோழர்கள் கோவை பன்னீர்செல்வம், புளியம்பாடி இராசேந்திரன், அரியலூர் சதீஷ், திண்டுக்கல் இராவணன், திருமலையம் பாளையம் சிலம்பரசன், அன்னூர் ஜோதிராம், பல்லடம் விஜயன், வேடசந்தூர் காளிமுத்து ஆகியோர் 3 நாட்கள் அன்னூர் பகுதி முழுதும் கிராமம் கிராமமாகச் சென்று போராட்டத்தை விளக்கி மக்களை அணி திரட்டினர். அன்னூரில் அனல் கக்கிய வெயிலில் பகல் 11.30 மணிக்கு தொடங்கி 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் உணர்ச்சிப் பெருக்கோடு நடைபெற்றது. ஆர்ப்பாட்ட இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:அன்னூர் பகுதியில் நடந்து வரும் தீண்டாமை கொடுமை அவ்வப்போது அதற்கு வருகிற எதிர்ப்பு களையெல்லாம் மீறி, மீண்டும் தொடர்ந்து கொண் டிருப்பதை நாம் காண்கிறோம். சில மாதங்களுக்கு முன்னால் அங்கிருக்கிற ஒரு கல்வெட்டு சுவரின் மீது சட்டையோடு அமர்ந்திருந்தார்கள் என்பதற்காக சிலர் தாக்கப்பட்டுள்ளனர். முடிதிருத்த மறுக் கிறார்கள். தேனீர் கடைகளில் இரட்டை குவளை. இந்த கொடுமைகள் எல்லாம் நீடிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு, வழக்குகள் தொடுக்கப் பட்டன. போராட்டங்கள் நடத்தப்பட்டன.கடந்த மே மாதம் 21 ஆம் நாள் பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் இங்கு நடந்தது. எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வடிவங்களில் தீண்டாமை இருக்கிறது என்பதை, அந்த போராட்ட துண்டறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள். குறிப்பாக குறுக்கிளையம்பாளையம் கோவிந்தன் தேனீர் கடையில் இரட்டைக் குவளை இருக்கிறது. பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கத் தடை இருக்கிறது. நல்லிசெட்டிப்பாளையத்தில் ஊர் கவுண்டர் தேனீர் கடையில், பழனிச்சாமி தேனீர் கடையில் இரட்டைக் குவளை இருக்கிறது. அக்கரை செங்கப் பள்ளி சேகர் கடையில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிதிருத்த மறுக்கப்படுகிறது. அழகர்பாளையம் ராமசாமி கடையில் தனிக்குவளை இருக்கிறது. இவை களுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.காவல்துறையோ, அரசு அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத்தான், இந்தப் போராட்டத்தின் தேவை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் பிடிக்கத் தடை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி ஆயிரக்கணக்கான துண்டறிக்கை வினியோகித்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் உரை யாற்றிருக்கிறார்கள். பூசி மெழுகும் அதிகாரிகளின் அலட்சியப் போக்குதான், இப்படிப்பட்ட தீண்டாமை நிலவுவதற்கு காரணமாயிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு கழகம் இரட்டைக் குவளைகளுக்கு எதிராக போராட்டம் எடுத்தபோது, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜி. சொன்னார்... “தமிழ்நாட்டில் தீண்டாமையே இல்லை, அரசியலில் ஆதாயம் தேடும் சிலர் இப்படி சொல்கிறார்கள்”... என்று, இவர்தான் சமத்துவ தேனீர் விருந்து வைப்பதற்காக என்று, எழுபத்து இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிக் கொண்டார். அதே நிலையைதான் இப்போது பார்க்கிறோம்.இரண்டு நாட்களுக்கு முன்னால், கோட்டாட் சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அங்கு தீண்டாமை கொடுமைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதியின் மனித உரிமைப் பிரிவு உதவி ஆய்வாளர் தீண்டாமை இல்லை என்ற சொல்லியதாக கோட்டாட்சியரே பதிவு செய்திருக்கிறார். இதைப் படித்துக் காட்டினால் தான் இந்த அதிகாரிகளின் யோக்கியதை தெரியும் (படிக்கிறார்)...“அன்னூர் காவல் ஆய்வாளர் மற்றும் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆய்வாளர், அன்னூர் உள் வட்டத்தில் இரட்டை குவளை மற்றும் முடிதிருத்த நிலையங்களில் தீண்டாமை போன்ற நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறுவதில்லை என்றும், இது தொடர்பாக தனிபட்ட நபர்கள் மீது எந்தவித புகார்களும் வரவில்லை என்றும், அன்னூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப் பட்ட நபர்கள் உரிமை பிரச்சினை தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டது”. இது கோட்டாட்சியர் எழுதிக் கொடுத்த அறிக்கை. இவர்கள் பணியாற்றும் லட்சணம் எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அந்த காவல்துறை நண்பரை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே தணிக்கை செய்தீர்களா? அல்லது அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை எழுதினீர்களா? என்பதுதான் எங்களுக்கு தெரிய வில்லை. நீங்கள் நடவடிக்கை எடுத்துத் தொலையா விட்டாலும் பரவாயில்லை. இல்லை என்று ஏன் மறுக்கிறீர்கள்? பொய்யை கூறுகிறீர்கள்?கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை சொல்லியிருக்கிறது. ஆறுமுக சேர்வை என்பவர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட ஒருவரைப் பார்த்து சாதிப் பெயரை சொல்லியதாக வழக்கு. தண்டனைப் பெற்ற ஆதிக்கச்சாதிகாரன் உச்சநீதிமன்றம் வரை சென்றான். அங்கு தண்டனையை உறுதி செய்ததோடு நீதிபதி நிற்கவில்லை. தமிழ்நாட்டில் பல கிராமங் களில் இரட்டை குவளை இருப்பதை அறிந்து நாங்கள் வருந்துகிறோம். இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் முதலில் பணியிடை நீக்கம் செய்யுங்கள், நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுங்கள், துறைசார் நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக அரசுக்கும், மற்ற மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே, அந்தத் தீர்ப்பை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.நாம் அனைத்து கழக மாவட்ட பொறுப்பாளர் களிடமும், தீர்ப்பு நகலை கொடுத்திருக்கிறோம். புகார் கொடுக்கும்போது இதையும் இணைத்துக் கொடுங்கள். இப்படிப்பட்ட தீண்டாமை குற்றங் களே நடக்கவில்லை என்று பொய் அறிக்கை தரும் உதவி ஆய்வாளர் போன்ற தறுதலை அதிகாரிகளால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப் பாளரும்தான் பாதிக்கப்படுவார்கள். காவல்துறை அதிகாரிகளே! உங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட் டாலும் இருப்பதை சொல்லித் தொலைத்தால் மற்ற அதிகாரிகளாவது நடவடிக்கை எடுப்பார்கள் அல்லவா? ஏன் மறைக்கிறீர்கள்? தீண்டாமை கொடுமைகளை தடுக்காமல் இருப்பதைவிட இல்லை என்று சொல்வது மிகக் கேவலமான போக்கு என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.1926 ஆம் ஆண்டு பின்னாளில் பொதுவுடைமை கட்சியை நடத்திய ஜீவா அவர்கள் நடத்திய சிராவயல் ஆசிரமத்தில் காந்தி வாசக சாலையை திறந்து வைப்பதற்காக பெரியாரை அழைக்கிறார்கள். அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக காந்தி கிணறு என்று வெட்டப் பட்டிருக்கிறது. “நீங்க பொது கிணற்றில் நீர் எடுக்கப் போராடுங்கள் அல்லது தாகத்தோடு செத்துப் போங்கள், ஆனால் தனிக் கிணற்றில் நீர் எடுக்காதீர்கள்” என்று தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்து பெரியார் சொன்னார். இப்பொழுது நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில், உங்களுக்கு தனிக் குழாய் அமைத்து தருகிறோம் என்று கோட்டாட்சியர் சொல்லியிருக்கிறார். அட, பைத்தியக்காரா! இது குடிநீர் சிக்கல் அல்ல; தீண்டாமை சிக்கல் என்று நமது தோழர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். தோழர்கள் சுட்டிக் காட்டியதைப்போல் அம்பேத்கர் தொண் ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் போராடினார். குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னாலும் போராடினார். அதைத் தான் நாம் இப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்.ஆயிரம் சட்டங்கள் வந்துவிட்டன. தீண்டாமை கொடுமைகளை செய்கிறவர்கள் மீது மட்டுமல்லாது, கடமையை சரிவர செய்யாத அரசு அதிகாரிகளின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின்படி தண்டனை உண்டு என்பது பற்றியாவது காவல்துறையினரே நீங்கள் அறிவீர்களா? வழக்கு தொடுத்து முப்பது நாட்களுக்குள் புலன் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இப்பொழுது பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் பதினைந்து நாட்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். எங்கோ இருக்கிற மனித உரிமை ஆணையத்திற்கு செய்தித் தாளைப் பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இருக்கிற சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களை பார்த்தப் பின்னாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை கைது செய்வதாக இருந்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணி. ஒரு மணிக்குக் கூட வருகிறீர்கள். ஆனால் இவை எவ்வளவு பெரிய குற்றங்கள்.இவை மனித சமுதாயத்தின் சமத்துவத்திற்கு எதிரான குற்றங்கள். இவைகள் மீது நடவடிக்கை எடுக்காத போக்குதான் இருந்து கொண்டிருக்கிறது. இப்படி தனித்தனி நிகழ்ச்சிகளாக போராட வேண்டி யிருக்கிறது. இன்னொரு பக்கம் தத்துவ ரீதியாக இப்படிப்பட்ட தீண்டாமை அதைத் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிற சாதிகள், அதை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிற இந்து மதம், வேதங்கள், சாஸ்திரங்கள் இவைகள் எல்லாம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரியாரும் அம்பேத்கரும் இந்த சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற கருத்துகள். அதை நோக்கி ஒரு பக்கம் தத்துவ தளத்தில் நகருகிறபோது, சமுதாயத்தில் நடக்கிற இப்படிப் பட்ட தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நாம் அவ்வப்போது, உடனே எதிர் வினை ஆற்றியாக வேண்டும். நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மனித உரிமை பிரிவு செய்கிற தவறுகளால், மாவட்ட ஆட்சி யரும், மாவட்ட காவல் கண்காணிப் பாளரும், பதவி இழக்கப் போகிறார் கள் என்பதுதான் எங்களுக்கு வருத்த மாக இருக்கிறது. குட்டி நாய் குலைத்து பெரிய நாய்க்கு ஆபத்து என்று சொல் வார்கள். அதுபோல இவர்கள் செய்கிற தவறுகளால் மேலதிகாரிகளுக்கு ஆபத்து என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.நீங்கள் வேலைக்காரர்கள்அதிகாரிகள் என்பவர்கள், எங்களுடைய வரிப் பணத்தில் சம்பளம் பெறுகிற வேலைக்காரர்கள், பணக்காரர்களைப் போல் எங்களால் தனித்தனியாக கூர்க்கா - செக்யூரிட்டி வைத்துக் கொள்ள முடியாது என்பதால் அரசாங்கத்தின் மூலம் உங்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்களுடைய வேலைக்காரர்களாகிய நீங்கள் வேலையை சரியாக செய்ய வில்லை என்றால், உங்கள் மீது நட வடிக்கை எடுக்கும் அதிகாரம் எஜமானர்களாகிய எங்களுக்கு உண்டு. எந்த வன்கொடுமை நிகழ்ந்தாலும் 3(1)(10) பிரிவைத்தான் போடுவீர்கள்? அந்தப் பிரிவு வழக்கில் உச்சநீதிமன்றம் ஆறுமுகம் சேர்வைக்கு, தண் டனையை உறுதிச் செய்திருக்கிறது. ஏன் நீர் உரிமையை மறுத்ததற்காக 3(1)(5) பிரிவையும் சேர்த்துப் போட மாட்டீர்களா? எங்களுக்கு எந்த தனிப்பட்ட அதிகாரி மீதோ, குறிப் பிட்ட நபர் மீதோ கோபம் இல்லை. இதை செய்கிற யாராக இருந்தாலும் கோபம் வராமல் இருக்கப் போவதும் இல்லை, இது, பொதுக் குழாயில் நீர் எடுப்பதற்கு மட்டுமான போராட்டம் அல்ல. செல்போனில் பேச கூடாது. பைக்கில் போகக் கூடாது என்கிற கொடுமை பற்றி, “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையில் செய்தி வருகிறது. எங்கோ இருக்கிற மனித உரிமை ஆணையத்திற்கு செய்தித் தாளைப் பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இருக்கும் காவல்துறை புகார் ஏதும் வரவில்லை என்கிறார்கள்.புகார் கொடுக்க வருபவர்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்? எப்படி புகார் கொடுப்பார்கள்? தீண்டாமை இருப்பது பற்றி தெரிந்த பின்னாலாவது இது குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும், காவல் துறையை வருவாய் துறையை அழைத் துச் சென்று, தீண்டாமை நிலவும் பகுதிகளை காட்ட வேண்டும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எல்லாம் சட்டத்தில் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் கால் பகுதியாக இருக்கிற மக்களை, பிடித்திருக்கிற கொடுமைகளுக்கு நாம் தீர்வு காண் போம். தீர்வு காண்பதற்கான முயற்சி யில் ஒன்றுதான் இந்தப் போராட்டம். அந்தச் சிறுவனை அடிக்கிறபோது ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதை எங்களுடைய பொதுச் செய லாளர் கோவை இராம கிருட்டிணன் பத்திரிகையாளர்களிடம் வெளியிட் டுள்ளார். ‘நக்கீரன்’ இதழ் பேட்டியில், பாதிப்புக்குள்ளான சிறுவன் வசந்த குமார், தன்னைத் தாக்கியதில் கலா மணி என்ற பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற இரண்டு பெண்கள் யார் என்பதை விசாரித்தறிய வேண்டும். இவைகளை வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இப்படிப்பட்ட கொடுமை கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இனி இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழக் கூடாது என்பதை எதிர்பார்த்து தான் இந்தப் போராட்டம். இதை கேட்டுக் கொண்டிருக்கிற உளவுத் துறை உரிய அதிகாரிகளுக்கு சரியான செய்தியை சொல்லுங்கள். அதி காரிகள் தீண்டாமைகளை நிகழாமல் தடுக்க வேண்டும் என்று எச்சரித்தார். தோழர்கள் அனைவருக்கும் ஆர்ப் பாட்ட இறுதியில் மாட்டிறைச்சி பிரி யாணி கழக சார்பில் வழங்கப்பட்டது.வெற்றி!‘தலித்’ வசந்தகுமார் தண்ணீர் பிடித்தார்!அன்னூரில் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் தண்ணீர் பிடிக்க மறுக்கப்பட்ட அதே குறுக்கிளையாம்பாளையம் பொதுக் குழாயில் அன்று மாலை (அப்போதுதான் தண்ணீர் வரும்) தாக்கப்பட்ட மாணவன் வசந்தகுமார், தனது தாயாருடன் சேர்ந்து தண்ணீர் பிடித்தார். தலித் மக்களும் கியூ வரிசையில் நின்று தண்ணீர் பிடித்தனர். வசந்தகுமார் தண்ணீர் பிடிக்கும் படம்.‘இரட்டைக் குவளை’ப் போல ‘இரட்டைப் பேருந்து!’இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு என்பதுபோல் அரசுப் பேருந்திலும் இரட்டைப் பேருந்து வந்துவிட்டது. இந்த அவலத்தை அன்னூர் ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கோவைஇராமகிருட்டிணன் தனது உரையில் குறிப்பிட்டார். “தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் கேம்பனூர் எனும் கிராமத்தில், ஆதிக்க சாதியினர் வாழ்கிறார்கள். அதே ஒன்றியத்தில் அண்ணா நகர் பகுதியில் தலித் மக்கள் வாழ்கிறார்கள். அண்ணா நகர் பகுதியிலிருந்து பேருந்து வசதிகள் ஏதும் இல்லை. சட்டசபை தேர்தலின்போது தங்கள் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி. வேலுமணியிடம் தங்கள் பகுதியிலிருந்து பேருந்து வசதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எஸ்.பி. வேலுமணி, வெற்றிப் பெற்று அமைச்சராகிவிட்டார். அமைச்சரானவுடன், அண்ணா நகர் பகுதி மக்களுக்கு தாம் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றினார். அண்ணா நகர் பகுதியிலிருந்து அரசு பேருந்துகள் விட ஏற்பாடு செய்யப்பட்டது. பேருந்து கேம்பனூர் வரும்போது இருக்கைகள் நிரம்பிவிடும். அருந்ததி மக்கள், புறப்படும் இடமான அண்ணா நகரில் ஏறி இருக்கைகளைப் பிடித்து விடுவார்கள். அருந்ததியினர் பேருந்தில் உட்கார்ந்து கொண்டு, நாங்கள் ‘மேல்சாதி’க்காரர்கள் நின்று கொண்டு வருவதா என்று, கேம்பனூர் ஆதிக்கசாதியினர் போராட்டம் நடத்தினர். உடனே கேம்பனூரிலிருந்து புறப்படுவதற்கு தனிப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் வேலுமணி அறிவித்து, இப்போது, அண்ணா நகரிலிருந்து புறப்படும் பேருந்து; கேம்பனூரிலிருந்து புறப்படும் பேருந்து என்று இரட்டைப் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. ‘தீண்டாமை’ பேருந்துக்குள்ளும் வந்துவிட்டது” என்று கோவை இராமகிருட்டிணன் குறிப்பிட்டார்.
அம்பேத்கர் பார்வையில் சமயம்
அம்பேத்கர் பார்வையில் சமயம் பேரா.பேசில் செவ்வாய், 15 ஜூன் 2010 18:29 சமூக ஏற்ற தாழ்வுகளைப் பொதுவாக சமயங்கள் நியாயப்படுத்துகின்றன. சமூகப் படிநிலையில் கீழே ஒடுக்கப்பட்டிருக்கிற அடித்தட்டு மக்களின் அக்கறைகளைப் புறக்கணிப்பதோடு, அவர்களைச் சுரண்டும் சமூக, அரசியல், பொருளதார அமைப்பைத் தூக்கிப் பிடிப்பதாகவே சமயங்கள் இருந்திருக்கின்றன.... இருக்கும்! இதில் சில விதிவிலக்கான சமயங்களும் இருந்திருக்கின்றன. உதாரணமாக, இந்தியச் சூழலில் மனிதனைக் கூறுபோட்ட சாதியத்தை, பிராமணியத்தை உற்பத்தி செய்த இந்து மதத்திற்கு எதிரான குரலோடு ஒலித்தது சமணமும், பெளத்தமும்! அடித்தட்டு மக்களின் சமயமாக உருவாகி, இறுதியில் நிறுவனமாகி இறுகிப்போன சமயங்களும் வரலாற்றிலே பதிவாகியிருக்கின்றன. டாக்டர் அம்பேத்கர் நாத்திகரும் அல்லர்; பாரம்பரிய ஆத்திகரும் அல்லர். மாறாக மனிதநேயச் சமயம் பற்றிப் பேசியவர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற அறிவுசார் அற விழுமியங்களை அடித்தளமாகக் கொண்ட சமய நெறி அம்பேத்கர் கண்டது. சமயம் பற்றி விரிவானதொரு விவாதம் நடத்திய பின்னரே அம்பேத்கர் பெளத்தம் தழுவுகிறார். சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார விடுதலையை முன்னிறுத்திய சமயமே அம்பேத்கரின் மனிதநேய சமயம். 1. சமூக, கலாச்சார விடுதலை தரும் சமயம் : சமூக, கலாச்சார அடிப்படையில் இந்திய கிராமங்களை இரு கூறாக்கலாம். தீண்டத்தக்கவர், தீண்டத்தகாதவர் என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து தன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கின்றார் அம்பேத்கர். தீண்டத்தகாதோர் பொருளாதாரத்தில் ஏழைகளாகவும், அரசியலில் அதிகாரமற்றவராகவும், சமூகத்தில் தாழ்வாக கருதப்படுபவராகவும் மற்றும் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்தவராகவும் இருக்கின்றார். “சாதி என்பது தொழில் பாகுபாடு மட்டும் அல்ல; மாறாக அது தொழிலாளர்களையே கூறுபோடுவதாகும்” என்கிறார் அம்பேத்கர். சில தொழிலாளர்களை உயர்ந்தவர் (எ.கா.அர்ச்சகர்) சில தொழிலாளர்களைத் தாழ்ந்தவர் (எ.கா.துப்புரவுப் பணியாளர்) என்றும் சாதியம் கட்டமைக்கின்றது. மக்களை சாதிகளால் கூறுபோட்டு, தனித்தனியான அடையாளங்களைக் கட்டமைத்து, அவர்கள் ‘கலப்பாகி’ விடாமல் அகமணமுறை மூலம் ‘தூய்மை’ காக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக அம்பேத்கர் சாதிகளுக்கிடையே மற்றும் உள்சாதிகளுக்கிடையே உணவருந்துதலும், ‘கலப்பு’த் திருமணங்களும் சாதியை ஒழிக்க உத்தியாகப் பயன்பட வேண்டும் என்கிறார். சாதியற்ற சமத்துவ இந்தியாவைப் படைப்பதே தன் இலக்கு என்ற அம்பேத்கர், பெளத்த சங்கத்திலேயே இச்சமத்துவம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டினார். அது தம்மத்தின்(சரியானவற்றின்) அரசாகி இருக்கும் என்றார். காந்தி சொன்ன “ராமராஜ்ஜியம்” என்னும் கருத்திற்கு முற்றிலும் மாறுபட்டது இது. “காந்தி உயர்சாதியினருக்கு பிரசங்கிக்கின்றார்” என்றார் அம்பேத்கர். காந்தியின் ‘தீண்டாமை ஒழிப்பு’ என்ற கருத்தாக்கத்தை விட, முற்றிலும் புரட்சிகரமான ‘சாதி ஒழிப்பை’ முன்னிறுத்தியவர் அம்பேத்கர். எனவே தலித்துகளுக்கு சமூக, கலாச்சார விடுதலை தரும் சமயம் எதுவோ அதுவே அம்பேத்கரின் சமயம்! 2.பொருளாதார, அரசியல் விடுதலை தரும் சமயம் ஏழைகள் விடுதலை அடையவேண்டுமானால், சோலிச சமதர்மம் இந்தியாவிற்கு வர வேண்டும். ஆனால் அம்பேத்கர் பாராளுமன்ற சோசலிசத்தை இந்தியாவுக்குப் பரிந்துரைக்கின்றார். சர்வாதிகார சோலிசத்தை (ரஷ்யவகை) அம்பேத்கர் எதிர்த்தார். ஜனநாயகமே கத்தியின்றி, இரத்தமின்றி ஆனால் புரட்சிகரமான சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்களைக் கொணர முடியும் என்கிறார் அம்பேத்கர். அதே வேளையில், சாதியத்தை ஒழிக்காத ஜனநாயக சோலிசம் என்பது கற்பனையான விலங்கு போன்றது. “சமத்துவமற்ற இந்திய ஜனநாயகம் என்பது சாணத்தால் கட்டப்பட்ட அரண்மனை போன்றது” என்கிறார் அம்பேத்கர். எனவே சமூக சமத்துவத்திற்கு நம் தொழிற்கூடங்கள் மற்றும் விவசாயம் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்றார் அம்பேத்கர். அரசியல் அமைப்புச் சட்டப்படியே சாதியை ஒழிக்க முடியும் என்று நம்பினார் அம்பேத்கர். பொருளாதார அடிப்படையில் சோலிசம் பேசிய அம்பேத்கர் கம்யூனிசத்தையும் (பொது உடைமை) இந்திய கம்யூனிஸ்ட்டுகளையும் கடுமையாக எதிர்த்தார், சாடினார். முதலாவதாக மார்க்சியத்தின் ஒற்றைப் (பொருளாதார) பார்வையைக் கடுமையாக விமர்சித்தார். ஏனெனில் இந்தியாவில் வர்க்கங்களில் சாதி உள்ளது; சாதியில் வர்க்கம் உள்ளது. இவ்வுண்மையை இந்திய மார்க்சியம் பார்க்கத் தவறியதை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். இரண்டாவதாக இந்திய சாதியத்தை வர்க்கத்தில் குறுக்கிவிட முடியாது; சாதியும் வர்க்கமும் அடிப்படையிலேயே வேறுபட்டவை. சாதி பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது; தொழில் பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது; சாதிக்கு வெளியே திருமணம் சாத்தியமில்லை; சாதிகளுக்கிடையே சமபந்தி சாத்தியமில்லை; சாதிகள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வசிக்க முடியும். ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக வர்க்கம் பிறப்பால் தீர்மானிக்கப் படுவதில்லை; தொழிலும் பிறப்பால் தீர்மானிக்கப் படுவதில்லை; வர்க்கங்களுக்கிடையே திருமணம் சாத்தியம்; சமபந்தி சாத்தியம்; தனிப்பட்ட வர்க்கங்களுக்கு தனிப்பட்ட வாழிடங்கள் கிடையாது. மூன்றாவதாக, இந்த சாதி , வர்க்க வேறுபாட்டைப் புரிந்து கொள்ள மறுக்கும் இந்திய மார்க்சி யர்களை “பார்ப்பனப் பையன்களின் கூடாரம்” என்று கடுமையாகச் சாடி, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பார்ப்பன மேலாதிக்கத்தை முதலில் சுட்டிக் காட்டியவர் அம்பேத்கர். நகரத் தொழிலாளர்களை மட்டுமே மையப்படுத்தி, இந்தியக் கிராமங்களில் உள்ள நிலமற்ற விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்தது இந்திய கம்யூனிசம் என்றார் அம்பேத்கர். இறுதியாக, தன் இலக்கை அடைய வன்முறை வழியைச் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) சுட்டிக்காட்டிய கம்யூனிசத்தை உதறித் தள்ளினார் அம்பேத்கர். இரத்தமின்றிப் பொருளாதார சமத்துவத்தை அடையமுடியும் என்பதைப் பெளத்த சங்கங்கள் நமக்கு நிரூபித்துள்ளன என்கிறார் அம்பேத்கர். லெனின் செய்யத் தவறிய, சர்வாதிகாரமற்ற பொதுவுடைமைச் சமூகத்தை புத்த சங்கம் சாத்தியமாக்கும் என உறுதியாக நம்பினார் அம்பேத்கர். 3. ஒட்டுமொத்த விடுதலை தரும் சமயம் 1950 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் கண்டியில் (இலங்கை) நடைபெற்ற உலக பெளத்தர்களின் மாநாட்டில் பேசிய அம்பேத்கர், “மதம் இறப்பிற்குப் பின் அல்ல, மாறாக இன்றைய உலக வாழ்க்கையிலேயே முக்தி(விடுதலை) தருகிறதா என்று பார்க்க வேண்டும்” என்றார். எனவே இங்கேயே சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் என்ற அனைத்துத் தளங்களிலும் ஒட்டுமொத்த விடுதலையைச் சாத்தியமாக்குகிற சமயம் இருக்கின்றதா எனத் தேடலைத் தொடங்கினார் அம்பேத்கர். முதலாவதாக, இந்து மதம் விடுதலையைத் தராது என்பதோடு சாதியத்தை, தீண்டாமையை தோற்றுவித்த மதமே அதுதான் என்ற முடிவுக்கு அம்பேத்கர் வருகின்றார். 1935 அக்டோபர் 13 இரவு 10 மணிக்கு இயோலா மாநாட்டில் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் பேசிய அம்பேத்கர் ஏதோ தீவாய்ப்பால் தாம் ஒரு தீண்டப்படாத இந்துவாய்ப் பிறந்துவிட்டதாகவும், அதைத் தடுத்தல் தனது ஆற்றலில் இருக்கவில்லையயன்றும் கூறி, “ஆனால் நான் ஓர் இந்துவாகவே இறக்கமாட்டேன் என்பது மிக உறுதி” என்றும் இடியாய் முழங்கினார். வேதங்களும் மனு ஸ்மிருதியும் சமூக ஏற்றத்தாழ்வையும், சாதி அமைப்பையும் முறையே உருவாக்கி, நியாயப்படுத்தின. எனவே இந்துமத ஸ்ருதி, ஸ்மிருதி போன்றவற்றை ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்க வேண்டும் என்றார் அம்பேத்கர். திருக்குரானை நீக்கிவிட்டால் இஸ்லாம் மார்க்கம் இல்லை; திருவிவிலியத்தை ஒதுக்கிவிட்டால் கிறித்துவ சமயம் இல்லை; அதே போல் சாதி/வர்ணத்தை நீக்கிவிட்டால் இந்து மதம் இல்லை. இரண்டாவதாக, இந்து மதத்தைப் போன்று இன்னபிற சமயங்களையும் அம்பேத்கர் தன் கருத்தியல் அடிப்படையில் வடிகட்டுகிறார். இஸ்லாம் சமயத்தை வெளிநாட்டு (அயல்நாட்டுக் கலாச்சாரக் கூறுகளை உள்வாங்கிய) சமயம் என்றும், இந்திய கிறித்துவத்தில் சாதி, தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென்றும், சீக்கியத்தின் மீது ஈர்ப்புக்கொண்டாலும் அங்கும் வேறுவேறு சாதிகளுக்கு, வேறுவேறு குருத்துவாராக்கள் இருக்கிறதென்றும், மார்க்சியம் நாத்திகம் பேசுகிறதென்றும் மேற்கண்ட சமயங்களை நிராகரிக்கிறார் அம்பேத்கர். இறுதியாக, அம்பேத்கர் புத்த நெறியே அனைத்து மனிதருக்குமான விடுதலையைத் தரும் என உறுதியாக முடிவெடுக்கின்றார். பண்டைக்கால இந்தியாவில் புத்த சமயத்திற்கும் பிராமணியத்துக்கும் இடையில் ஒரு பெரும் போராட்டம் நடந்துவந்தது. கோட்பாடு பற்றிய புரட்சியாக மட்டுமின்றி புத்தம் அரசியல், சமூகத் தத்துவவியல் புரட்சியாகவும் விளங்கியது என்கிறார் அம்பேத்கர். மனிதனுக்கு மதம் கண்டிப்பாகத் தேவை என்று திட்டவட்டமாக அறிவித்த அவர், ஆனால் அது பகுத்தறிவுப் பூர்வமாக சோதிக்கப்பட வேண்டும் என்றார். உண்மையை அணுகும் புத்தரின் பகுத்தறிவுப்பூர்வ அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டார் அம்பேத்கர். உலக வரலாற்றிலேயே முதன்முதலாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற செய்தியைச் சொன்னவர் புத்தர்தான் என்கிறார்.பெளத்தம் கடவுள் மறுப்புக் கொள்கை உடையது என்பதும் அம்பேத்கரை ஈர்த்த ஒரு புள்ளி. இவ்வாறாக, ஒட்டுமொத்த (சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார) விடுதலையை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே (தலித் துகளுக்கு மட்டுமின்றி) சாத்தியப்படுத்துகின்ற சமயமாகப் புத்தநெறியை அம்பேத்கர் கண்டார். - பேரா.பேசில்
Dr. Ambedkar
அம்பேத்கர் - சாதி, தீண்டாமை, சட்டம் ஜீவசகாப்தன்
இந்தியாவில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை பல்வேறு தலைவர்கள் நடத்தியதாக வரலாறு புனைந்து கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவராக 'காந்தியை' நமது பாடநூல்கள் முதற்கொண்டு பெரும்பான்மை 'பொதுபுத்தி' ஊடகங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவித்தார் என்று பாரதியையும், அம்மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றதற்காக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், சீனிவாச அய்யங்கார் போன்றோர்களையும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாக அடையாளப்படுத்துவோரும் நம் நாட்டில் உண்டு. சனாதனப் படிநிலையை அறிவியல் அமைப்பாக உள்வாங்கிக் கொண்ட காந்தியும், 'ஈனபறையேனும் எம்மில் உண்டடா' என்று பாடிய பாரதியும் இன்னும் சில 'இந்து' மதக் காப்பாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் போற்றுதலுக்குரிய தலைவர்களாக இன்னும் இருந்து வருகின்றனர். மேற்கண்ட தலைவர்கள் அனைவரும் சாதியையும், அது தாங்கி நிற்கும் 'இந்து' மதத்தையும் பாதுகாப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்கள் என்பதை நாம் அறிந்து கொளள் வேண்டும். இவர்களுடைய 'தீண்டாமை ஒழிப்பு' சிந்தனை என்பது 'சனாதன தர்மத்தை' மறுநிர்மாணம் செய்வதற்கு மட்டுமே பயன்பட்டது. தீண்டாமைக்குக் காரணமான சாதியையும், இந்து மதத்தையும் அடியோடு அழிப்பதன் மூலம் மட்டுமே இங்கு பஞ்சமர்களும் அவர்களை ஒடுக்கும் சூத்திரர்களுக்கும் உண்மையான 'சுயமரியாதை' கிடைக்கும் என்று முழங்கியவர்கள் அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் மட்டுமே. பாபாசாகேப் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும், சூத்திரர்களுக்காகவும், பஞ்சமர்களுக்காவும், பெண்களுக்காகாவும், தொழிலாளர்களுக்காகவும், கருத்தியல் ரீதியாகவும், சட்டத்தின் மூலமாகவும் போராடிய அசாதாரணமான தலைவர் ஆவார். ஆனால், வாக்கு அரசியல் தலைவர்கள் (பாரதீய சனதா உட்பட) அனைவரும் அவரை தாழ்த்தப்பட்ட சாதி சங்கத் தலைவர் போல் உருவகம் கொடுத்து அவரது பிறந்த நாளையும், நினைவு நாளையும் கொண்டாடி வருகின்றனர். தீண்டாமை ஒழிப்பும், அம்பேத்கரின் அறிவியல் பார்வையும்: இந்து மதத்தை நிலைநிறுத்திக் கொள்ள ‘தீண்டாமை ஒழிப்பு' மூலம் சில சீர்திருத்த நடவடிக்கைகளை அன்றைய பார்ப்பன-பனியா தலைவர்கள் சிலர் மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது அம்பேத்கரின் பணி. இந்து மதத்தை நிர்-நிர்மாணம் (De-constuction) செய்வதே அம்பேத்கரின் இலக்கு. அந்த இலக்கு நோக்கியே தனது 'தீண்டாமை ஒழிப்பு பணியை' துவங்கினார். சமூக இயக்க கோட்பாட்டின்படி, “எது முதலில் தோன்றியதோ, அது கடைசியில் அழியும், எது இடையில் தோன்றியதோ, அது இடையில் அழியும், எது கடைசியில் தோன்றியதோ அது முதலில் அழியும்”. இதன்படி பார்த்தால் சாதி, சாதியப்படிநிலை, தீண்டாமை இம்மூன்றில் இறுதியாக உருவான தீண்டாமை முதலில் அழியும். இந்த அறிவியல் உண்மையை உணர்ந்து கொண்ட அம்பேத்கர், 'தீண்டாமை ஒழிப்பிலிருந்து' தனது பணியினைத் துவங்கினார். தீண்டாமை ஒழிப்பிற்காக அம்பேத்கர் போராடியதன் தொடர்ச்சியாக இன்னும் பல்வேறு சட்டத்திருத்தங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. முதன் முதலாக, தீண்டாமை (குற்றங்கள்) சட்டம் 1955ல் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்ததால் தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்கும் மக்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. அதன்பின் 1965, ஏப்ரல் 27-ல் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.எஸ்.இளையபெருமாள் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் பின்னர் 1976-ல் குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இத்தனைச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தாலும், அரசும், காவல்துறையும் 'சாதிய' மனநிலையில் இருப்பதால் குறிப்பிடும் வகையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. அதன் பின்னர் 1989ல் 'பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமைத் தடைச் சட்டம் 1989' நடைமுறைக்கு வந்தது. மொத்தம் 23 பிரிவுகளைக் கொண்ட இச்சட்டம், பிற சட்டங்களைவிட மேலோங்கி நிற்கும் வகையில் பல சிறப்புத் தன்மைகளைக் கொண்டதாக விளங்கியது. பல்வேறு வகை வன்கொடுமைக் குற்றச் செயல்களையும், அதற்கான தண்டனைகளையும் இச்சட்டம் கூறுகிறது. இத்தண்டனை ஆறு மாதத்திற்குக் குறையாததாய் ஐந்தாண்டுகள் வரை நீடிக்கும் அளவிற்கு, சிறைத்தண்டனையும் மற்றும் அபாரத்தையும் விதிக்க வகை செய்கிறது. 95களுக்குப் பிறகு, இச்சட்டங்களுக்கு விதிகள் அமைக்கப்பட்டு சரியான முறையில் நடைமுறைக்கு வந்தன. சமீபகாலமாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சாதிய அமைப்புகள் இச்சட்டத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. அப்படியென்றால், இப்போதுதான் இச்சட்டங்கள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்கிற உண்மை புலனாகிறது. தீண்டாமை ஒழிப்பிற்காக, தன் வாழ்நாளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இறந்த பின்பு சட்ட நூல்களின் மூலமும், தனது கொள்கைகளின் மூலமும் பாடுபட்டு கொண்டிருக்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். சௌதார் குளமும், சனாதன மனநிலையும்:- சௌதார் குளத்தை மகார் சமூகத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தியதால், அக்குளத்தை புனிதப்படுத்த வேண்டும் என சாதி இந்துக்கள் பிரச்சாரம் செய்தனர். இதற்கிடையே 1927 ஆகஸ்டு 4ம் நாள் சௌதார் குளத்தை தீண்டப்படாத மக்கள் பயன்படுத்தலாம் என்று நிறைவேற்றிய தீர்மானத்தை மகத் நகராட்சி இரத்து செய்தது. அதனைக் கண்டித்து, 1927, டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சத்தியாக்கிரகம் செய்வது என பாபாசாகேப் முடிவெடுத்தார். "போராட்டம் வன்முறையானதாக இருப்பினும், அகிம்சை வழியினதாயினும் அதன் குறிக்கோள் விழிமியதாயிருப்பின் அது நேர்மையானதே" என அம்பேத்கர் கருதினார். மராட்டியத்தின் பார்ப்பனர் அல்லாதார் தலைவர்களான ஜவல்கர், ஜெதே ஆகியோர் சத்தியாகிரகத் திட்டத்திற்கு முழு ஆதரவை அளித்தனர். இதே காலகட்டத்தில் பாலகங்காதரத் திலகரின் மகன் ஸ்ரீதர் பந்துக்கும், பாபசாகேப் அம்பேத்கருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அம்பேத்கர் தன்னுடைய உயரிய நோக்கத்திற்கு தோள் கொடுக்கும், பார்ப்பனரல்லாத இடைநிலை சமூகத் தலைவர்கள், பார்ப்பனர்கள் என அனைவருடனும் இணைந்து செயல்பட அணியமாக இருந்தார். சுயசாதி உணர்வும், தலைமை மீதான பற்றுதலும் இல்லாத உண்மையான பாட்டாளி வர்க்கத் தலைவர் அம்பேத்கர் ஆவார். 1927ம் ஆண்டு, சௌதார் குளப் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம் என 'களப்போராளியாக' இந்த துணைக் கண்டம் முழுவதும் அறிமுகமானார் அம்பேத்கர். அதுவரை, கல்வியாளராக, பேராசிரியராக, சட்ட வல்லுனராக இருந்த அம்பேத்கர், அதன் பிறகு இந்துத்துவத்தை கருவறுக்கும் ஆயுதமாக தன் வாழ்நாள் முழுவதும் போராடினார். அம்பேத்கர் கோரியது சலுகை அல்ல, சுயமரியாதை: அம்பேத்கரின் சமகால கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிற அமைப்புகளும் இருந்தன. அந்த அமைப்புகள் தற்காலிகமாக 'தீண்டாமை' ஒழிந்தால் போதும் என்கிற அளவில் செயல்பட்டன. ஆனால், தீண்டாமைக்குக் காரணமான சாதியையும், அதை தாங்கி நிற்கும் இந்துத்துவத்தையும் ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் போராடவில்லை. அம்பேத்கர் ஒருவர் மட்டுமே தீண்டாமைக்கும், சாதியப்படிநிலைக்கும் இடையேயான தொடர்பினைக் கண்டறிந்து, அதனை ஒழிக்க வேண்டிதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். கோவில் நுழைவுப் போராட்டத்தில் பேசிய அம்பேத்கர், "நாங்கள் எதை மிகவும் வலியுறுத்துகிறோமேனில், கடவுளை வணங்குவதால், எந்த அளவிற்கு, நீங்கள் மனநிறைவு அடைகிறீர்கள் என்பது அன்று எங்கள் கவலை. தீண்டப்படாதவன் கோவிலுனுள் நுழைந்தால் கோவில் தீட்டுப்பட்டுப் போகும் என்பதோ கடவுள் சிலையின் புனிதம் பாழ்பட்டுவிடும் என்பதோ இருக்கக் கூடாது. அதனால் தான் எமக்கெனத் தனிக்கோயில் ஏற்படுத்தும் எண்ணத்தை எதிர்க்கின்றோம். இருக்கின்ற கோயிலினுள் செல்லும் உரிமைக்காகப் போராடுகின்றோம்" என்று முழங்கினார். தாழ்த்தப்பட்ட மக்கள் கடவுளை வணங்கினால் போதும் என்று அம்பேத்கர் சொல்லவில்லை. அனைவரும் பயன்படுத்தும் பொது கோவிலுக்குள் செல்லும் உரிமையும் அந்த மரியாதையும் வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். அதனால் அண்ணல் விரும்பியது சலுகைகளை அல்ல, சுயமரியாதை என்பது நன்கு புலப்படுகிறது. அதே காலகட்டத்தில், இதே கருத்தியலை ஏந்தி காங்கிரசோடு முரண்பட்ட வரலாறு, தென்னாட்டில் பெரியாருக்கு உண்டு. உடைமைச் சமூகத்திற்கு எதிராக வர்க்கப்போராளி அம்பேத்கர்: அம்பேத்கர், 1936-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் சுதந்திர தொழிற்கட்சி (Independent labour party) என்கிற புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். நிலமற்றவர்கள், ஏழை நிலக்குத்தகையாளர்கள், விவசாயிகள், தொழிலாளாகள் ஆகிய அனைவரின் உடனடித் தேவைகள், துன்பங்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு கூறுகின்ற சீரிய வேலைத் திட்டத்தை அம்பேத்கர் துவக்கினார். தொழிற்சாலைகளை அரசுடமையாக்க வேண்டும், விவசாய குத்தகையாளர்களிடம் நிலக்கிழார்கள் குத்தகை வசூலிப்பதையும், குத்தகை செய்யும் நிலங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றுவதையும் தடுத்து அவர்களை பாதுகாப்பதற்கு சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் போன்ற பொதுவுடமை சிந்தனைகளைத் தாங்கி அக்கட்சி செயல்பட்டது. சுதந்திர தொழிலாளர் கட்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஒரு ஆங்கில நாளேடு, ‘அண்மையில் அம்பேத்கர் உருவாக்கிய புதிய கட்சி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதிலும், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதிலும் உறுதுணையாக விளங்கக் கூடும். சுதந்திர தொழிலாளர் கட்சி தனி வாக்காளர் தொகுதி முறையையும், இரட்டை வாக்குரிமையையும் கைவிட்டு விட்டால், மிகக் குறுகிய காலத்திலேயே, இக்கட்சி இந்தியாவிலேயே பெரும் சக்தி வாய்ந்த கட்சிகளில் ஒன்றாக வளாந்து விடும்" என எழுதியது. உடைமை சமூகத்தையும், சாதிய சமூகத்தையும் தாங்கி நிற்கும் பார்ப்பனியத்தையும் இணைத்தே தகர்ப்பதற்கு அம்பேத்கர் போராடினார். அம்பேத்கர் வெறும் வாக்கப்போராளியாக மட்டும் இருந்திருந்தால் சனாதனவாதிகள் அவரைக் கண்டு அச்சம் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர் இம்மண்ணின் பிறவி முதலாளித்துவமான பார்ப்பனியத்தையும் எதிர்த்துப் போராடியதால் பெரும்பான்மையான மக்களின் ஆதரவை அவர் பெற இயலவில்லை. வர்க்க அரசியலை அம்பேத்கர் கையிலெடுத்தபோது, அவருக்குத் துணையாகவும், இரட்டை வாக்குரிமை, தனி வாக்காளர் தொகுதி முதலிய கோரிக்கைகளை ஆதரித்தும் அப்போதைய கம்யூனிச தோழர்கள் எவரும் துணை நிற்கவில்லை என்பதை வரலாறு வேதனையுடன் பதிவு செய்கிறது. இந்து சட்டதிருத்த மசோதாவும், பெண்ணியப்போராளி அம்பேத்கரும்: 1948ல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் இந்து சட்டதிருத்த மசோதாவை கொண்டு வர முயற்சித்தார். சொத்துரிமை என்பது தந்தை வழி சமூகத்தை பின்பற்றுகிற ‘இந்து’ தர்மத்தில் பெண்ணுக்கு மறுக்கபட்டது. கணவர் இறந்த பிறகு மனைவிக்கும் அவரது மக்களுக்கும் ‘சொத்து’ போய் சேர வேண்டும் என்று அம்பேதகர் கோரினார். அதனை ‘இந்து’ தர்மத்தினை முழுவதும் கற்ற அம்பேத்கர், அத்தர்மத்திற்கு உட்பட்டு 'தாயாபாக'- விதியின்படி அத்திருத்தத்தை செய்ய முன்மொழிந்தார். அடுத்தபடியாக கணவனிடமிருந்து பிரிந்து போகும் பெண்களுக்கு ‘ஜீவனாம்ச’ உரிமை, சாதி மறுப்புத் திருமணம், பதிவுத் திருமணத்தை முறையாக அங்கீகரிக்கும் உரிமை என கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய உரிமைகளை பாராளுமன்றத்தில் எழுப்ப, பெண்களுக்காக சட்ட ரீதியாக உரிமைகளை பெற்றுத் தர பாடுபட்டவர் அம்பேத்கர். ஆனால், அன்றைய நேரு தலைமையிலான அரசில் இடம் பெற்றிருந்த பார்ப்பனத் தலைவர்கள் பலரும் அம்பேத்கரை கடுமையாக சாடினர். அம்பேத்கரின் உயரிய நோக்கம் புரிந்து கொள்ளப்படாமல், நூற்றுக்கணக்கான பெண்கள், இம்மசோதாவிற்கு எதிராக கூச்சல் போட்டனர். "இரண்டு பெண்கள் ஆதரவாக போராடியிருந்தால் கூட இச்சட்டதிருத்தம் செய்து இந்த மசோதா நிறைவேறியிருக்கும்" என்று அம்பேத்கர் மிகவும் மனம் வருந்தினார். பெண்களின் உரிமையை நிலைநாட்ட முடியாத இந்த சட்ட அமைச்சர் பதவி தனக்குத் தேவையில்லை என்று கூறி தனது பதவியை இராஜினாமா செய்தார். பெண்கள் இன்று முன்வைக்கும் கோரிக்கைகளை அன்றே எங்களுக்காக அம்பேத்கர் போராடினார் என்கிற வரலாறு இன்றைய பெண்ணிய அமைப்புகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இந்தியாவில் 'மார்ச் 8' மகளிர் தினத்தில் அம்பேத்கரின் இந்து மசோதாவையும் பெண்ணினத்திற்கு அம்பேத்கர் செய்த தியாகத்தையும் நினைவுகூர வேண்டியது முற்போக்காளர்களின் கடமை. சூத்திரர், பஞ்சமர், தொழிலாளர்கள், பெண்கள் என இம்மண்ணின் அனைத்து விளிம்புநிலை மக்களுக்காகவும், அரசுடனும் மற்றும் சனாதன மதத்துடனும் வாழ்நாள் முழுவதும் சமர் செய்து மடிந்த விடுதலை வீரர் அம்பேத்கர் என்பதே நாம் அனைவருக்கும் பரப்ப வேண்டிய செய்தி.