பிரிட்டிசாருக்கு ஒரு பேரரசு உள்ளது; இந்துக்களுக்கும்தான்! இந்துயிசமும் ஒரு வகை ஏகாதிபத்தியம்தானே! தீண்டத்தகாதவர்கள் இந்துக்களால் அடிமைப்படுத்தப்பட்ட இனம் தானே! இரண்டாம் உலகப் போரில் சர்ச்சில் ஈடுபடுவதன் நோக்கம் என்ன என்று தெளிவு படுத்துமாறு அவரைக் கேட்பது நியாயம் எனில், திரு. காந்தியும் இந்துக்களும் நடத்தும் விடுதலைப் போரின் நோக்கம் என்னவென்று அறிவிக்க வேண்டும் என்று கேட்பதை எப்படித் தவிர்க்க முடியும்?–டாக்டர் அம்பேத்கர் “யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க''விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிளியூர் கிராமத்தில், தலித் மக்கள் முடிவெட்டும் கடைகளுக்குச் சென்றால், சாதி இந்துக்கள் முடிவெட்ட மறுக்கிறார்கள். மேலும், அங்குள்ள கிளியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபடவும் தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்படுகிறது ("தீக்கதிர்', 12.2.2009) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதங்கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை கழுத்தில் மிதித்து, இடுப்பில் கடுமையாக உதைத்து கொடுமைப்படுத்திய சாதி இந்துவை கைது செய்யாமல், பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தையை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர் ("தீக்கதிர்' 3.2.2009).திருச்சி மாவட்டத்தில் மணப்பாறைக்கு அருகில் உள்ள திருமலையான்பட்டி என்ற கிராமத்தில், பொது சுடுகாட்டில் தலித் பிணத்தைப் புதைக்க கவுண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்து வருகின்றனர். இச்சுடுகாடு, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்'தின் கீழ் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 10.2.2009 அன்று அக்கிராமத்தில் உள்ள அமிர்தம் என்ற 70 வயது தலித் பெண்மணி காலமானார். நீண்ட காலமாக இரட்டை சுடுகாடு இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது அரசு புது சுடுகாட்டை உருவாக்கி இருப்பதால், அங்கு சென்று எரிக்கலாம் என்று நினைத்து சென்ற தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் சாதி இந்துக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது ("டைம்ஸ் ஆப் இந்தியா' 12.2.2009) கிருஷ்ணகிரி மாவட்டம் கல்கேரியில் தலித் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்து அறுவடை செய்யப்பட்ட கேழ்வரகு கதிர்களை தலித் அல்லாதோர் தடுத்து வைத்துள்ளனர். அங்கு தலித்துகள் ஆடு மாடுகள் மேய்க்கவும், விளைநிலங்களுக்குச் செல்லவும் வழிகள் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1 லட்சம் பெருமானம் உள்ள கேழ்வரகு கதிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ("தீக்கதிர்' 2.3.2009)ஜாதியை மறுத்த சிசுவையும் கொல்லும் ஜாதி!“காதலித்துக் கைப்பிடித்த என் மனைவியின் வயிற்றிலிருந்த ஆறு மாத சிசுவை, வலுக்கட்டாயமாக வெளியே எடுத்து அவள் பெற்றோரே கொன்று புதைத்துவிட்டனர் பாவிகள்'' என்று கதறுகிறார், முத்தழகன் என்ற தலித் இளைஞர். இக்கொடுமை நடைபெற்ற இடம் : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள அம்புகோவில் கிராமம். முத்தழகனின் மனைவி தனலட்சுமி இசைவேளாளர் சாதியை சேர்ந்தவர். இது குறித்து சனவரி 23 அன்று கந்தர்வக்கோட்டை போலிசில் புகார் கொடுத்திருக்கிறார் முத்தழகன். அதற்கு ரசீது மட்டும் கொடுத்தவர்கள் முதல் தகவல் அறிக்கைகூட போடாமல், விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கிறார்கள். தனலட்சுமி உயிரோடு இருக்கிறாரா என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் அவர் ("ஜுனியர் விகடன்' 8.2.2009).தமிழருக்கும் காவல்; சிங்களருக்கும் தோழன்!மருத்துவர் ராமதாசின் பாட்டாளி இளைஞர் சங்கம் "உறுதியேற்பு மாநில மாநாட்டை' சென்னையில் 7.3.2009 அன்று நடத்தியது. அதில், புகை, மது, வரதட்சணை, வன்முறை, தீவிரவாதம், ஆபாசம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை ஒழித்திடுவதாகவும்; எய்ட்ஸ், பெண் சிசுக்கொலை, ரசிகர் மன்றம், மாசுபடுதல் ஆகியவற்றைத் தடுத்திடுவதாகவும் அறிவித்துள்ளனர். ஆனால், இந்நாட்டின் அனைத்து சிக்கல்களுக்கும் முதன்மைக் காரணமான ஜாதியை மட்டும் ஒழிப்பதாகவோ, தடுப்பதாகவோ, கண்டிப்பதாகவோ அவர்கள் அறிவிக்கத் தயாரில்லை. புகை, மது போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை இவருடைய குடும்பம் நடத்தவில்லை. எனவே, இப்பரப்புரை யால் மருத்துவர் குடும்பத்திற்கு இழப்பேதுமில்லை. ஆனால், இவர்களுடைய ஜாதி (உற்பத்தி) சங்கத்திற்குப் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் தான் ஜாதியை வளர்ப்பதாக நாள்தோறும் உறுதியேற்றுக் கொண்டுள்ளனர். இதை இந்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழ் உணர்வாளர்கள் பா.ம.க.வையும் மருத்துவரையும் புரிந்து கொள்வதற்கு இன்னொரு செய்தி: “காயமடைந்த இலங்கை ராணுவத்தினருக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அளிக்கப்படும் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அம்மருந்தை இந்தியா அளிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது'' என்ற தகவலை, இலங்கை நல்வாழ்வுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார் ("டைம்ஸ் ஆப் இந்தியா' 21.2.2009). இந்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் "மருத்துவர் சின்ன அய்யா' அவர்களுடைய கடைக்கண் பார்வை இல்லாமலா இத்தகு கொடுமைகள் எல்லாம் அரங்கேறும்?கண்டிக்க மறுக்கும் தலித் இயக்கங்கள்கே.எம். விஜயன் என்றொரு மூத்த வழக்குரைஞர் "தினமணி' ஏட்டில் 24.2.2009 அன்று எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் : “மற்ற இடங்களைப் பற்றித் தெரியாது. ஆனால், தமிழகத்தில் வன்கொடுமைக்கு உள்ளாகும் ஒரே ஜாதி பிராமணர் ஜாதி தான். பிராமணரைத் திட்டுவது போல் வேறு யாரையும், எந்த ஜாதியினரையும் திட்டுவதில்லை. அவர்களுக்குத் தான் நிஜமாகப் பாதுகாப்புத் தரப்பட வேண்டும். தமிழகத்தில் இருக்கும் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களை ஜாதி பெயர் சொல்லித் திட்டியதாக சமீப வரலாறு இல்லை. இந்நிகழ்வைப் போல, தவறாக பிரயோகிக்கப்படும் வன்கொடுமைச் சட்டத்திற்கு முதலில் திருத்தம் வேண்டும்.'' கே.எம். விஜயன் சூத்திரர் என்பதால்தானோ என்னவோ, இக்கருத்துக்கு திராவிட இயக்கங்களிட மிருந்துகூட எந்தக் கண்டனமும் வெளிவர வில்லை. கொங்கு மண்டல கவுண்டர்களின் (சாதி) அரசியல் எழுச்சி மாநாடு அண்மையில் நடந்தேறியது. இதில் முன்வைக்கப் பட்ட அதி முக்கியமான தீர்மானம் : “நாங்கள் பாதிக்கப்படுவதால் வன்கொடுமைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.''கவுண்டர்களோ, கள்ளர்களோ, தங்கள் மீதான சூத்திரப் பட்டத்தை ஒழிக்க முன்வராதவரை – அவர்கள் வன்கொடுமைச் சட்டத்தை நாள் தோறும் சந்தித்தே தீர வேண்டும். ஆனால் அதில் ஒரு சிக்கல். பறையன் பட்டம் போகாமல், சூத்திரப் பட்டம் போகாதே! தீவிரவாதத்திற்கு (அமெரிக்காவிற்கு) எதிரான போர்!அண்மையில் வெளிவந்துள்ள "அமைதிக்காகப் போராடுவோம்' நூலிலிருந்து சில வரிகள் : ராணுவ நலன், எண்ணெய்க் கட்டுப்பாடு ஆகிய இரு காரணங்களுக்காக மட்டுமே தீவிரவாதத்திற்கு எதிரான போரை அமெரிக்கா அறிவித்தது. தீவிரவாதக் குழுக்கள் பல நிலப் பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. அவர்களை கண்டுபிடித்து அழிப்பது அத்தனை எளிதானது அல்ல. தீவிரவாதிகளை பிடிக்கப் போகிறோம் என்கிற பெயரில், அமெரிக்கா ஒவ்வொரு பகுதியையும் தேர்ந்தெடுத்து, அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு வீசி, அந்தப் பகுதியை கற்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஒன்றுமறியா பொதுமக்கள்தான் அமெரிக்காவின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அதிகளவில் பலியாகி வருகின்றனர். பேரழிவு ஆயுதங்களை அழிக்கும் பொருட்டுதான் ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அப்படி எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அய்.நா.வின் முடிவுகளைக் கூட இவ்விஷயத்தில் அமெரிக்கா அவமதித்தது, நிராகரித்தது. ஒன்றுமறியா ஈராக்கியர்களை கொல்வது, அபுகரீப் போல் சிறையில் இருப்பவர்களை நிர்வாணப்படுத்துவது, துன்புறுத்துவது – அமெரிக்கப் படைகளுக்கு அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.அமெரிக்காவின் எண்ணெய்க்கான போரை "நாகரிகங்களின் மோதல் கருத்தாக்கம்' நியாயப்படுத்தி வருகிறது. பின் தங்கிய இஸ்லாமிய நாகரிகம்தான் மேற்கு நாகரிகங்களுக்குப் பெரும் சவால், ஆபத்து என சாமுவேல் ஹண்டிங்டனின் கருத்தாக்கம் வாதிடுகிறது. இதன் அடிப்படையில்தான் 2005 ஆகஸ்ட்டில் "நாகரிகங்களின் கூட்டணி' என்கிற முயற்சியை அய்.நா. தொடங்கியது. அய்.நா. அறிக்கை நாகரிகங்களிடையே பல மட்டங்களிலும் உள்ள நல்லுறவை சுட்டிக் காட்டியது. ஆனால், இந்த "மோதல் கருத்தாக்கம்' உலகை, உண்மைப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பும் முயற்சியே. நம் நாட்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கே. ஆர். நாராயணன், “எப்பொழுதும் நாகரிகங்கள் மோதிக் கொண்டதில்லை; காட்டுமிராண்டிகள்தான் மோதுவார்கள்'' என்றார்.
Tuesday, March 31, 2009
பெரியாரியலுக்கு - வ.கீதாவின் பங்களிப்பு
பெரியார் பேச்சு - எழுத்துகள் - நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் எஸ்.வி.ராஜ துரைக்கு எதிராக, ‘விடுதலை’யில் கட்டுரை தீட்டிய மின்சாரம் - வ.கீதா பார்ப்பனப் பெண் என்றும், எஸ்.வி.ஆர். பெண் தோழி என்றும் எழுதியுள்ளதற்கு - எதிர் வினையாக - தமிழின உணர்வுடன் தோழர் ஒருவர் எழுதியுள்ளதை வெளியிடுகிறோம். எஸ்.வி.ராஜதுரையுடன் வ.கீதா எழுதியவை பெரியார் குறித்த நூல்கள் மட்டுமல்ல; பல்வேறு மார்க்சிய நூல்கள், கவிதை, சிறுகதை மொழியாக்கங்கள் உண்டு. வ. கீதா, எம்.எஸ். எஸ்.பாண்டியனுடன் இணைந்தும் எழுதியுள்ளார். அதேபோல இராமாயணம் பற்றி பெரியார் எழுதிய விமர்சனங்களை ஆங்கில மொழிக்குக் கொண்டு சென்ற பாலா ரிச்மன் என்னும் அமெரிக்க அறிஞருடனும் இணைந்து எழுதியுள்ளார்.பெரியாரையும் அவரது சுயமரி யாதை இயக்கத்தையும் குறிப்பிட்ட வரலாற்று, அரசியல் சூழலில் வைத்தும் பெரியார் இயக்கத்தவரால் எந்த நூலும் எழுதப் பட்டிராத நிலையில், எஸ்.வி. ராஜ துரையுடன் இணைந்து வ.கீதா எழுதியுள்ள ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம் நூலுக்கோ, எஸ்.வி. ராஜதுரை தனியாக எழுதியுள்ள ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ நூலுக்கோ இணையான நூலொன்றை வீரமணி கூட்டத்தார் என்றேனும் எழுதியிருக்கிறார்களா? அதேபோல, பெரியாரின் வாழ்வையும் சிந்தனையையும் இந்தியா முழுவதற்கு மட்டுமின்றி உலகெங்கினுமுள்ள அறிஞர் பெருமக்களுக்கும் எடுத்துச் செல்வதற்காக வ.கீதாவும், எஸ்.வி.ராஜ துரையும் இணைந்து எழுதியுள்ள ‘Towards a Non-Brahmin Millennium: From Iyothee Thass to Periyar’ என்னும் நூல் மூன்றாவது பதிப்பைக் கண்டிருக்கிறது. வ.கீதாவும், எஸ்.வி. ராஜதுரையும் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு ‘The Periyar Century: Themes in Caste and Gender’ என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் வ.கீதாவின் பங்களிப்பு தான் முதன்மையானது. ஹைதராபாத், மும்பை, டெல்லி, திருவனந்தபுரம், கோல்கத்தா போன்ற இந்திய நகரங்களில் மட்டுமல்லாது அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளும் நடத்தப்பட்ட பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பெரியார் கருத்துகளைப் பரப்பியவர் வ.கீதா.பெண் விடுதலை குறித்த சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தந்தை பெரியாரும் சுயமரியாதை இயக்கப் பெண்களும் வழங்கிய பங்களிப்புகளை ‘காலக் கனவு’ என்னும் நாடக வடிவத்தில் அமைத்து அதைத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மட்டுமின்றி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் அரங்கேறச் செய்தவர் வ.கீதா தான். ‘இந்துப் பண்பாட்டைக் காப்பாற்றுதல்’ என்னும் பெயரால் கர்நாடக மாநிலத்தில் ராம் சேனையினர் நடத்தி வரும் காலித்தனங்களைக் கண்டித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் அருந்ததி ராய் போன்ற அறிஞர்களைக் கொண்டு நடத்திய கண்டனக் கூட்டங்களில் பெண் விடுதலை பற்றி பெரியார் கூறிய கருத்துகளும் படிக்கப்பட்டன. அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அந்த மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டு வந்தவர் வ.கீதா தான்.வ. கீதா எழுதிய ஆங்கில நூல்கள், மும்பை எஸ்.என்.டி.டி. பெண்கள் பல்கலைக்கழகத்தில் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரியார் கருத்துகள் கணிசமாக இடம் பெற்றுள்ளன. ‘அனைவருக்கும் கல்வி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, தொடக் கப் பள்ளிச் சிறுவர் சிறுமிகளுக்காக ‘வாசிப்பு நூல்கள்’ சிலவற்றைக் கொண்டு வந்துள்ளது. அவற்றைக் கொண்டு வரும் பொறுப்பு வ.கீதா விடம் ஒப்படைக்கப்பட்டது. வ.கீதா வின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட நூல்களிலொன்று ‘அனைவரும் உறவுகளே’. பார்ப்பனிய கல்வி முறையே இதுகாறும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் துப்புரவுத் தொழிலாளிகளையும் செருப்புத் தைக்கும் தொழிலாளியையும் குழந்தைகள் ‘மாமா’, ‘அண்ணன்’ என்று உறவு முறை வைத்து அழைக்கும்படி செய்கிறது அந்த நூல். அந்த ‘வாசிப்பு நூல்கள்’ வெளியீட்டு விழா சென்னையில் சென்ற ஆண்டு நடந்தது. அதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வ.கீதாவின் பணிகளைப் போற்றிப் புகழ்ந்தார். ‘கீதோபசங்களை வெறுப்பவன் நான். ஆனால், இந்த கீதாவின் (வ.கீதாவின்) உபதேசங்களை மணிக்கணக்கில் கேட்பதில் எனக்கு விருப்பமுண்டு’ எனப் பேசியிருக்கிறார்.தோழர் எஸ்.வி. ராஜதுரை மார்க்சிய சிந்தனையாளர். பல ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கங்களில் இருந்தவர். தற்போது எந்தக் கட்சியையும் நிறுவனத்தையும் சாராமல் இருக்கும் அவர், பெரியார் சிந்தனையை உலகெங்கும் பரப்புவதற்காக, இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததன் காரணமாக ஒரு கண் பார்வையை இழந்து, மும்முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் புற்று நோயால் அவதியுற்ற தனது துணைவியாரின் ஓய்வூதியத்தையும், தனது எழுத்துகளுக்குக் கிடைக்கும் அற்ப சன்மானங்களையும் கொண்டு எழுபது வயதை நெருங்கும் இந்த நேரத்திலும் சலிப்பின்றி உழைத்து வருபவர்.- ஓர் உணர்வுள்ள தமிழன்
“விடுதலை”யின் சொத்தை வாதங்களுக்கு பதில்: பெரியாரியலை ‘வேதமாக்க’ வேண்டாம்!
‘விடுதலை’ நாளேடு அறிவார்ந்த கூர்மையான வாதங்களை முன் வைத்து இன எதிரிகளைக் கலங்கடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், ‘விடுதலை’ இப்போது போராட்டப் பண்புகளை இழந்து சமரசங்களோடு தனி மனித துதிப்பாடலில் மூழ்கிப் போய் கிடக்கிறது. அந்தக் கழகமே உறுதியான கொள்கைப் பயணமும், லட்சியத் தெளிவுமின்றி சந்தர்ப்பவாத சேற்றில் மூழ்கிவிட்ட போது அதன் மோசமான பிரதிகளாகவே அந்த அமைப்பின் ஏடுகளும் - மாறி விடுகின்றன!பெரியார் நூல்கள் நாட்டுடைமை பற்றி பெரியாரிய சிந்தனையாளர் தோழர் எஸ்.வி. ராஜதுரை, ‘தினமணி’யில் எழுதிய கட்டுரைக்கு ‘விடுதலை’ (3.3.2009) ஏற்கனவே எழுதிய பழைய சொத்தை வாதங்களையே மீண்டும் எழுதித் தீர்த்திருக்கிறது. தோழர் எஸ்.வி.ஆர். தனது கட்டுரையில் எழுப்பியுள்ள ஒரு கேள்விக்குக் கூட ‘விடுதலை’யின் மின்சாரத்தால் பதில் கூற முடியவில்லை. எஸ்.வி.ஆர். எழுப்பிய முக்கிய கேள்விகள் இவை தான்!1. நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு பெரியார் நூல்கள் நாட்டுடைமை பற்றியது அல்ல; பெரியார் ‘குடி அரசு’ ஏட்டில் எழுதியது, பேசியது பற்றிய முழுமையான தொகுப்பை வெளியிடுவது பற்றிய வழக்கு தான். காலவரிசைத் தொகுப்பு என்பது வேறு; நூல்கள் நாட்டுடைமை என்பது வேறு.2. தலைப்பு வாரியாக பெரியார் கட்டுரைகளை வெளியிடுவது பெரியார் பற்றிய முழுமையான பரிமாணத்தை வெளிப்படுத்தாது. பெரியார் சிந்தனையில் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு, மத மறுப்பு, பொருளாதாரம் தொடர்பான கருத்துகளைத் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. அவரது சிந்தனைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. எனவே, அவர் வாழ்ந்த சமூக அரசியல் பண்பாட்டுப் பின்புலத்திலிருந்து அவர் சிந்தித்த கருத்துகளை அந்தப் பின்புலத்தோடு காலவரிசைப்படி தருவதே சரியானது.3. பெரியாரால் - ஏற்கனவே வாங்கப்பட்ட சொத்துக்களின் அறங்காவலர்களாக சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுட்கால உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்று சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சட்ட திட்டம் கூறுகிறது. இதில் பெரியாரின் - எழுத்தும் பேச்சும், எப்படி வரும்? தனது பேச்சையும், எழுத்தையும் பெரியார் ஏற்கனவே வாங்கி வைத்திருந்ததாக வீரமணி கூறுகிறாரா? இது பெரியாரை இழிவுபடுத்துவதல்லவா?4. சுயமரியாதை சங்கத்தின் சட்டத் திட்டம் சுயமரியாதை சங்கத்துக்காக, சுயமரியாதை சங்கத்தின் நிதியிலிருந்து பெரியார் வாங்கிய சொத்துகளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறது. ஆனால், பெரியார் நடத்திய ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘விடுதலை’, ‘ரிவோல்ட்’, ‘ஜஸ்டிஸ்’ முதலிய ஏடுகள் ‘சுயமரியாதை பிரச்சார நிறுவன’த்தால் வெளியிடப்பட்டவையே அல்ல. அந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டது 1952 இல் தான்! பிறகு சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் எப்படி உரிமை கோர முடியும்?5. எழுத்துப்பூர்வமாக - ஒருவருக்கு ஒப்புதல் தந்தால் தான் பதிப்புரிமை கோர முடியும் என்று பதிப்புரிமை சட்டம் கூறுகிறது. பெரியார் - வீரமணிக்கு அப்படி எழுத்துப்பூர்வமாக பதிப்புரிமை வழங்கியுள்ளாரா? இல்லையே!6. ஏறத்தாழ எட்டு ஆண்டுகால ‘குடிஅரசு’ம், இரண்டு ஆண்டுகால ‘விடுதலை’யும் தம்மிடம் இல்லை என்று ‘விடுதலை’யில் வீரமணியே அறிக்கை வெளியிடுகிறார். இதுதான் பெரியாரின் ‘அறிவுசார்ந்த சொத்தை’ - இவர் பாதுகாத்த லட்சணமா?- இப்படி தோழர் எஸ்.வி. ராஜதுரை எழுப்பிய எந்தக் கேள்விக்கும் ஒருவரி பதில்கூட மின்சாரத்தின் கட்டுரையில் கிடையாது. பதில் சொல்ல வந்ததாக - பேனா பிடித்தவர்கள் ஒன்றுக்குக்கூட பதில் கூறாமல் திணறிப் போய் நிற்பது அவர்களின் பரிதாப நிலையையே படம்பிடித்துக் காட்டுகிறது; சரி விட்டு விடுவோம்.வேறு என்ன கருத்துகளை அக்கட்டுரை, முன் வைக்கிறது? எல்லாமுமே பழைய பல்லவி. பெரியார் நூல்களை காலவரிசைப்படி - பெரிய பெரிய தொகுதிகளாக வெளியிட்டால் அது கண்டிப்பாக அலமாரியில்தான் தூங்குமாம்! வெகு மக்களுக்கு போய்ச் சேராதாம்! வெகு மக்களுக்கு சென்றடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டுமாம்! எந்த பதிப்பகத்தாருக்கும் இதுவரை தெரியாத ஆராய்ச்சியை நடத்தி, ‘மின்சார’த்தின் கட்டுரை விளக்கம் அளித்திருக்கிறது. 300 பக்கங்களுக்கு மிகைப்படாமல் இருந்தால் அது, வெகு மக்களுக்கு போய்ச் சேர்ந்துவிடுமாம்! அதுவே 301 பக்கங்களாகிவிட்டால், அது ‘கண்டிப்பாக’ அலமாரிக்குள் முடங்கிவிடுமாம்! 299 பக்கங்கள் வரை இருந்தால் மட்டுமே அது கடை கோடி பொது மக்களுக்கு போய் சேரும் என்ற திடுக்கிடும் ஆய்வுகளைக் கூறி ‘விடுதலை’ திணற வைத்துள்ளது. பெரியாரின் கருத்துகளை தலைப்பு வாரியாகத் தொகுத்து - இதுவரை 31 தொகுதிகளை வெளியிட்டுள்ளதாகவும், அக்கட்டுரை கூறுகிறது. பெரியாரியலை வெகு மக்களிடம் கொண்டு செல்லும் ‘சூட்சமம்’ பக்கங்களின் எண்ணிக்கையில் அடங்கியிருப்பதைக் கண்டறிந்துள்ள மின்சாரத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டாம்; அவர்கள் நடத்தும் ‘திராவிடன் புத்தக நிலையமே’ பதில் தந்திருக்கிறது.தங்களின் நோக்கம் வெகுமக்களிடம் பெரியாரியலைப் பரப்புவதைத் தவிர, அறிவுஜீவிகளுக்கோ, ஆராய்ச்சியாளர்களுக்கோ அல்ல என்று மின்சாரம் எழுதுவதற்கும் இதில் பதில் கூறப்பட்டுள்ளது.‘சாதி - தீண்டாமை’ எனும் தலைப்புகளில் வெளி வந்துள்ள 31 தொகுதிகளிலும் கடைசி பக்கத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.“ஒவ்வொரு பாகமும் 300 பக்கங்களுக்கு மேல்! மக்கள் பதிப்பு... ஆய்வு மேற்கொள்ளும் மாணவ மணிகளே! மதிப்புமிகு வரலாற்று ஆசிரியர்களே கைவிளக்காய் பயன்படும் அய்யாவின் இந்த வழிகாட்டி நூலை வாங்கிப் பயன் அடையுங்கள்” - என்று அந்த விளம்பரம் கூறுகிறது. வரலாற்று ஆசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் ‘கை விளக்காக’ - வெளியிடுகிறோம் என்று விளம்பரம் செய்து கொண்டு, இன்னொரு பக்கம் ‘வெகு மக்களுக்கு’ கொண்டு செல்வதே தமது நோக்கம் அறிவு ஜீவிகளுக்கு அல்ல என்று ‘மின்சாரங்கள்’ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். 2005 ஆம்ஆண்டில் - பெரியார் சிந்தனைகளை 503 பக்கங்களில் தொகுத்து, திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது - மின்சாரத்துக்கு தெரியாது போலும்! கருத்தியல் தளம் ஏதுமின்றி சந்தர்ப்பவாத நோக்கத்தோடு, பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிகளை தடைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு - எதையாவது ஒரு பதிலைக் கூற வேண்டுமே என்ற ‘நெருக்கடிக்குள்’ சிக்கி பேனாவைப் பிடிப்பதால் தான் இப்படி - முரண்பாட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.மற்றொரு ‘திடுக்கிடும்’ ஆராய்ச்சியையும் மின்சாரம் கட்டுரை முன் வைத்துள்ளது. பெரியார் காலத்தில் - அவர் வாழ்ந்த போது பெரியார் கருத்துகளைப் பற்றி கவலைப்பட்டவர்கள் தான். இப்போது பெரியார் கருத்துகளையே பேசத் தகுதி படைத்தவர்கள் என்கிறது அந்த ஆராய்ச்சி! பெரியார் காலத்துக்குப் பிறகு உணர்ந்து, பெரியாரியலைப் புரிந்து கொண்டு - அந்த தத்துவம் மக்களை சென்றடைய வேண்டிய அவசியத்தைப் புரிந்து, அதைப் பரப்புவதற்கு முன் வந்தால் பாராட்ட மாட்டார்களாம். நீ பெரியார் காலத்தில் என்ன செய்தாய்? உனக்கு என்ன தகுதி என்று கேட்பார்களாம். அப்படியே இருக்கட்டும்; ஒரு கேள்வியை கேட்கிறோம்; தி.மு.க. தோன்றிய காலத்திலிருந்து 1967 ஆம் ஆண்டு வரை பெரியாரை குறை கூறி, பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் தானே கலைஞர். அவரைப் பார்த்து இப்போது பெரியாரைப் பற்றிப் பேச உமக்கு தகுதி உண்டா? என்ற கேள்வியை மின்சாரங்கள் கேட்பார்களா?அதே கலைஞர் கருணாநிதி - வீரமணிக்கு வழங்கிய பாராட்டுரைகளை தங்கள் தலைவருக்கான நற்சான்றிதழ்களாக இதே கட்டுரையில் எடுத்துக் காட்டி பெருமைப்படுகிறதே, மின்சாரத்தின் கட்டுரை! ஏன் இந்த முரண்பாடு! தமிழகத்திலே ‘விடுதலை’ நாளேடு ஒன்றினால் மட்டுமே “தமிழர் தலைவர்” என்று அழைக்கப்படும் இவர் தான், பெரியார் காலத்திலிருந்து இருந்து வருகிறாராம். எனவே, பெரியார் நூல்கள் பரவுவது பற்றி அவருக்கு மட்டுமே கவலை உண்டாம். மற்றவர்கள் எவரும் கவலைப்படத் தேவை இல்லை என்கிறது மின்சாரம் கட்டுரை! “என் புருசனுக்கு என்மீது இல்லாத அக்கரை உனக்கு என்னாடி?” என்கிற ‘குழாயடி’ தரத்துக்கு - ‘விடுதலை’யின் ‘அறிவார்ந்த’ வாதங்கள் சுருங்கிப் போய் விட்டனவே! அந்தோ பரிதாபம்!பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்க வேண்டும் என்பது அல்ல பிரச்சனை. பெரியாரின் எழுத்து பேச்சுகள் கால வரிசைப்படி தொகுக்கப்பட வேண்டும். இதுதான் வழக்கு என்று எஸ்.வி.ராஜதுரை எழுதியதற்கு மின்சாரம் கூறும் பதில் என்ன? “பெரியாரின் நூல்களில் - அவரின் எழுத்துகள், பேச்சுகள் இல்லையா? இதுவரை 31 தொகுதிகளை வெளியிட்டுள்ளோமே!” என்று பதில் கூறுகிறது கட்டுரை. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளட்டும்! அவை எல்லாம் பெரியாரின் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவையல்ல. பெரியார் நடத்திய ‘குடிஅரசு’, ‘புரட்சி’ போன்ற இதழ்களிலிருந்தும், ‘விடுதலை’ நாளேட்டிலிருந்தும் எடுக்கப்பட்டு, இப்போதுதான் முதன்முதலாக நூல் வடிவமே பெறத் தொடங்கியுள்ளன. தங்களின் வெளியீடு எதிலிருந்து தொகுக்கப்படுகிறது என்பதுகூட தெரியாமலேயே அவ்வளவு அவசரம் காட்டி பேனாவை எல்லாம் தூக்கிவிடக் கூடாது!பார்ப்பன ஏடுகள் - பெரியார் கருத்தைத் திரிக்க வில்லையா என்று ஒரு கேள்வி. பார்ப்பனர்கள் எப்போதுமே பெரியார் கருத்தைத் திரித்துத் தான் கூறுவார்கள்! அப்படி திரிபுவாதங்கள் நடக்கும்போது முறியடிப்பதுதான் பெரியாரியலாளர்களின் வரலாற்றுக் கடமை! எவருமே பெரியார் கருத்துகளை ‘திரித்து’ விடாதபடி - பெரியார் நூல்களை, ஏடுகளை ‘சேப்டி லாக்கரில்’, ‘தமிழர் தலைவர்கள்’ பூட்டி விடக் கூடாது; அப்படி பூட்டி வைத்திருக்கும் போதே சேலம் மாநாட்டுத் தீர்மானங்களை பார்ப்பன ஏடுகள் திருத்தி வெளியிட்டுவிட்டதாக, ‘மின்சாரம்’ கட்டுரை கூறுகிறதே! அப்போது மட்டும் எப்படி ‘திருத்தல் வாதம்’ நடந்ததாம்? இதிலிருந்து ஒரு உண்மையை ‘மின்சாரங்கள்’ புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் நூல்கள் அரசுடைமையாகா விட்டாலும் திருத்தல் வாதம் நடக்கும்; அரசுடைமையானாலும் திருத்தல் வாதம் நடக்கும்; அப்படி திருத்தல் வாதங்கள் வரும் போது - அதை எதிர் கொண்டு முறியடிப்பதுதான் - உண்மையான பெரியாரியல்வாதிகள் கடமையாக இருக்கும். இத்தகைய ‘விவாதக் களங்கள்’ எதிர் நீச்சல் வழியாகத்தான் பெரியாரியலே - தனது வெற்றிப் பயணத்தை நடத்தி வந்திருக்கிறது. அதனால்தான் தன்னுடைய கருத்துகளுக்கு எப்போதுமே எதிரிகள் தான் விளம்பரப்படுத்தி வருகிறார்கள் என்று அறிவு ஆசான் பெரியார் கூறி வந்திருக்கிறார். விவாதங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் உள்ளாகும் போதுதான் பெரியாரியல் மக்களிடம் சென்றடையும். பார்ப்பன இருட்டடிப்பைக் கிழித்து பெரியாரியம் வளர்ந்ததே - அவர்கள் காட்டிய எதிர்ப்பு - திரிப்புகளால் தான்.பெரியார் கருத்தை - பார்ப்பனர்கள் மட்டுமா திரிக்கிறார்கள்; பெரியாரை - தங்களுக்கு மட்டுமே உரிமை கொண்டாடும் “தமிழர் தலைவர்”களும் திரிக்கிறார்களே? அடுக்கடுக்கான ஆதாரங்களோடு - ‘புரட்சி பெரியார் முழக்கம்’ அம்பலப்படுத்தி வருகிறதே; அதற்கெல்லாம் பதில் உண்டா? பாரதியார் பாடல்கள் திரிக்கப்பட்டுவிட்டதாக - பாரதியாரின் பெயர்த்தி குமுறுகிறாராம்! “இதற்கு என்ன பதிலை வைத்துள்ளார்கள் ராஜதுரைகள்?” என்று சவால் விடுகிறது அந்தக் கட்டுரை! இதற்கு ராஜதுரை ஏன் பதில் வைத்திருக்க வேண்டும்? அதைத் தான் பாரதியின் பேத்தியே பார்த்துக் கொள்வாரே!பெரியார் - தனித்தமிழ் நாடே கேட்கவில்லை என்று ‘தினமணி’யில் கி.வீரமணி கட்டுரை எழுதிய போது, வீரமணியின் திரிபுவாதத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி, ‘மரபும் - திரிபும்’ நூலை எழுதினாரே ராஜதுரை! 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூலுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக ‘விடுதலை’யோ, ‘தமிழர் தலைவரோ’ - மின்சாரமோ வாய் திறக்காதது ஏன்? பதில் கூறுவார்களா?பெரியார் தனித் தமிழ்நாடு கேட்கவில்லை என்று, வீரமணி திரித்தாரா இல்லையா? அந்த திருத்தல்வாதத்தை எப்படி முறியடிக்க முடிந்தது? பெரியார் பேச்சு - எழுத்துகளைக் கொண்டுதானே! இந்த எழுத்தும் பேச்சும். பெரியார் பிறந்தகத்துக்குள் முடங்கி விட்டால் திரிப்பவர்கள் திரித்துக் கொண்டுதானே இருப்பார்கள்? இந்த ஆபத்துகள் நிகழக் கூடாது என்பதற்குத் தான் பெரியார் எழுத்து பேச்சுகளை ‘பிறந்தகத்தை’ விட்டு வெளியே கொண்டு வரவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது. தலைப்பு வாரியாகத் தொகுக்கிறோம் என்று கூறுகிறவர்களைக் கேட்கிறோம்; பெரியார் தனித்தமிழ் நாடு பற்றி பேசிய ஏராளமான பேச்சுகளை தனித் தலைப்பாகத் தொகுத்து வெளியிடுவீர்களா?‘தினமணி’ பார்ப்பன நாளேட்டில் எழுதலாமா? ‘தினமணி’ வெளியிடுகிறது என்றாலே, அதன் நோக்கம் புரியவில்லையா என்று மின்சாரம் கேட்கிறார். ‘தினமணி’ பார்ப்பன ஏடு தான். அந்த பார்ப்பன ஏட்டுக்கு பெரியார் ‘தனிநாடு’ கேட்கவில்லை என்று இதே வீரமணி கட்டுரை எழுதவில்லையா? பார்ப்பன இந்துத்துவ சக்திகளை மகிழ்விக்க ஜெயலலிதா ஆட்சியில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதை ஆதரித்து நீதிபதி வேணுகோபால் ‘தினமணி’க்கு கட்டுரை எழுதி, அந்தக் கட்டுரையை ‘தினமணி’க்கு நன்றி தெரிவித்து, ‘விடுதலை’ மறு வெளியீடாக வெளியிடவில்லையா?தனது வாதத்துக்கு வலிமை சேர்க்க வரலாற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு தாவுகிறது மின்சாரம் கட்டுரை! அது ‘பெரியார் பொன்மொழிகள்’ நூல் தடை செய்யப்பட்டு, பெரியார் கைது செய்யப்பட்ட வரலாறு. சரி; இந்த வரலாற்று நிகழ்வாவது இவர்களின் வாதங்களுக்கு வலிமை சேர்க்கிறதா என்றால், அதுவும் இல்லை. திருச்சி திராவிட மணி பதிப்பக சார்பில் 1947 இல் வெளியிடப்பட்டது ‘பொன் மொழிகள்’. பெரியார் அனுமதியோடுதான் - இந்த நூலை அந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதை பெரியாரே நீதிமன்றத்தில் கூறியுள்ளார். எனவே பெரியார் தனது காலத்திலேயே பிற நிறுவனங்கள் தமது நூலை வெளியிட அனுமதித் துள்ளார் என்பதும், தான் மட்டுமே வெளியிட கருத வில்லை என்பதும் தெளிவாகிறது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் பெரியார் மற்றொரு கருத்தையும் கூறினார்:“‘பொன்மொழிகள்’ நூலில் இடம் பெற் றுள்ளவை பொறுக்கி எடுக்கப்பட்டு தொகுக்கப் பட்டவை. அதிலுள்ள வாசகங்கள் நுணுக்கமாகப் படித்துப் பார்த்து கவலை கொள்ளவில்லை. அவைகள் என்னால் எழுதப்பட்ட, பேசப்பட்டவை தானா என்பதும் எனக்குத் தெரியாது. இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அவைகள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் என்னால் சொல்ல முடியாது” என்று நீதிமன்றத்தில் கூறிய பெரியார், இப்படி பொறுக்கி எடுத்து தொகுக்கப்பட்டதால் - இப்போது, அதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்பதை இவ்வாறு கூறுகிறார்: “பெரும்பாலும் அவைகள் அக்காலங்களில் பயிற்சியில்லாத இளைஞர்களால் நெட்டெழுத்திலே எழுதப்பட்டவைகள். மேலும் அவைகள் வெளியிடு பவர்களின் கருத்துக்கேற்றபடி வெளியிட்டிருக்க லாம். எனவே அவைகளிலிருந்து தொகுக்கப் பட்ட இத் தொகுப்பு நான் அன்று என்ன கருத்துடன் சொல்லியிருப்பேனோ அதைக் கொண்டிருக்க முடியாது” என்று தெளிவாகக் கூறியுள்ளார்.ஒரு காலத்தில் - எந்த சமூகப் பின்னணியில் எத்தகைய அரசியல் சூழலில் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்குத் தான் காலவரிசைத் தொகுப்பு வரவேண்டும் என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது. காலச் சூழல் - சமூக அரசியல் பின்னணியிலிருந்து துண்டித்து, கருத்து களை மட்டும் தலைப்பு வாரியாக பிரித்து வெளி யிடுவது சரியான புரிதலுக்கு இட்டுச் செல்லாது என்பதையே பெரியாரின் இந்த நீதிமன்ற வாக்கு மூலமே சான்றாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. “அன்று என்ன கருத்துடன் சொல்லியிருப்பேனோ” என்று பெரியார் கூறியிருப்பதுதான் இங்கே ஆழமாகக் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். பெரியார் கூறுவதற்காவது மதிப்பளித்து தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் கட்டுரையாளர்களுக்கு பதிலாக முன் வைக்க விரும்புகிறோம்.கால்பந்து விளையாட்டில் - பந்தை விட்டுவிட்டு விளையாடுகிறவர் காலை உதைப்பது போல் எஸ்.வி. ராஜதுரை அவர்களையும், அவரோடு துணையாசிரியராக இருந்தது பெரியாரியம் பற்றிய ஆழமான தமிழ் ஆங்கில நூல்களை வெளியிட்டவருமான வ.கீதாவையும், மிகவும் கீழ்த்தரமாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வ. கீதா - எஸ்.வி. ராஜதுரையின் ‘பார்ப்பனத் தோழி’யாம்! தரம்தாழ்ந்த எழுத்து! வ.கீதா பிறப்பால் பார்ப்பனர் தான்; ஆனாலும் பெரியாரியல்வாதி. பெரியாரியலுக்கு மகத்தான பங்களிப்புகளை அறிவுத்தளத்தில் வழங்கியவர். (தோழர் எஸ்.வி. ராஜதுரை, வ. கீதாவின் பெரியாரியல் பங்களிப்பு குறித்து தோழர் ஒருவர் எழுதியதை 4 ஆம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்) - பெரியாரியலுக்கு இவர்கள் வழங்கிய பங்களிப்பில் ஒரு சிறு அளவாவது கி.வீரமணி அறிவு தளத்தில் வழங்கியது உண்டா?“நான் ஒரு பாப்பாத்தி தான்” என்று சட்ட மன்றத்தில் ஆணவத்தோடு அறிவித்து, இந்து பார்ப்பனிய கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்ட, ஜெயலலிதாவை ‘சமூகநீதி காத்த வீராங்கனையாக்கி’ 12 ஆண்டு காலம் தோளில் சுமந்து திரிந்தவர்கள், பெரியாரியலை ஏற்றுக் கொண்ட பார்ப்பனரைக் குறை கூறத் தகுதி உண்டா? கலைஞர் கருணாநிதிக்கும் வீரமணிக்கும் ‘வழக்கறிஞராக’ நின்று கட்டுரை எழுதும் சின்னக் குத்தூசி யார்? அவரும் ஒரு பார்ப்பனர் தானே? அவரது ‘முரசொலி’ கட்டுரைகளை ‘விடுதலை’ வெளியிடுகிறதே! ஆந்திர நாத்திகர் கோரா - பார்ப்பனர் தானே? அவரை பெரியார் திடலுக்கு அழைக்கவில்லையா? இப் போதும் அவரது மகன் நடத்தும் நாத்திகர் மாநாடுகளுக்கு - வீரமணி போவதில்லையா? ‘நக்கீரன்’ வார ஏட்டில் “இந்து மதம் எங்கே போகிறது?” என்று அக்னிஹோத்ரம் ராமானுஜ தாதாச்சாரி எழுதி வந்த கட்டுரையை வாரம் தவறாமல் ‘விடுதலை’யும் வெளியிட வில்லையா? தாத்தாச்சாரியார் - என்ன “சூத்திரரா”?பெரியார் நூல்களைப் பரப்புவது பற்றி, “யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறுகிறது. மின்சாரத்தின் கட்டுரைத் தலைப்பு; தி.மு.க. கூட்டணியில் ‘கலைஞரின் இதயத்தில் சீட்டு’ வாங்கிக் கொண்டு சோனியாவின் தூதுவர்களாக புறப்படும் “தன்மானத் தமிழர் தலைவர்களுக்கும்” அவரது அரசவை பாராட்டுரையாளர்களுக்கும் வேண்டுமானால் பெரியார் நூல்கள் சிந்தனைகள் பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மையான பெரியாரியல்வாதிகள் கவலைப்படத்தான் செய்வார்கள். முனை மழுங்கிய வாதங்களை எழுப்பிப் பயன் இல்லை.வேதங்களைப் பார்ப்பனர்கள் அச்சில் ஏற்றாமல், தங்களுக்குள்ளேயே மனப்பாடம் செய்து வைத் தார்கள். எனவே அதற்கு ‘மறை’ என்று பெயர் சூட்டப்பட்டது. மக்களிடம் வேதத்தை கொண்டு செல்ல பார்ப்பனர்கள் மறுத்த காரணம் - அது தங்களின் சுரண்டும் உடைமை என்பதால் தான். வேத எதிர்ப்பாளரான பெரியாரின் சிந்தனைகளை தங் களுக்குள் முடக்கிட துடிப்பதும்கூட பார்ப்பனியம் தான். பெரியாரியம் பார்ப்பனர் சுரண்டலுக்கான வேதம் அல்ல; பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைப் பெட்டகம்; அது மக்களிடம் தான் வரவேண்டும்! மின்சாரங்கள் பெரியாரியலை ‘வேத’மாக்க முயல வேண்டாம்.- இராவணன்
தமிழகத்தின் தலித் அகதிகள்மதிவண்ணனுடன் கண்ணன் - காளிங்கராயன்
“இரு தரப்பு மக்களிடையே மோதல், பலர் படுகாயம், வன்முறையில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் காவல் துறை கைது செய்தது....'' என்பது போன்ற ஆறு வரி செய்திக் குறிப்பினை – நாளிதழ்களின் ஏதேனும் ஒரு மூலையில் நாள்தோறும் கண்டும் காணாமலும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம். அச்சிறு செய்திக் குறிப்பின் பின்னே ஆதிக்க சாதி அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வருகிற அநீதியும், சாதிய வன்முறையும் உள்ளுறைந்து கிடக்கிறது. கோவை மாவட்டம் அவிநாசிக்கருகில் உள்ள நம்பியாம்பாளையம் என்கிற கிராமத்தில், தற்போது நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் சமூகக் கொடுமையே இதற்கு சான்று. ஒருபுறம் ஆதிக்கசாதிக் கவுண்டர்களின் கொலை வெறித் தாக்குதல் தொடங்கி, சமூகப் புறக்கணிப்பு வரையும்; மறுபுறம் காவல் துறையினரின் பொய் வழக்குகள் என இருமுனைத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர், அக்கிராமத்தைச் சார்ந்த தலித் மக்கள். சிறிய அளவில் தொடங்கிய தனிநபர் மோதலை காரணமாக்கி, அங்கேயொரு சாதிக்கலவரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் – அப்பகுதியின் ஆதிக்கசாதிக் கவுண்டர்கள். கவுண்டர்களால் பிரச்சனையின் மய்யமாக முன்னிலைப்படுத்தப்படும் ஜெகந்நாதன் என்கிற தலித் இளைஞர், ஊராட்சித் தலைவரின் மகனை அடித்தார் என்று கூறி நூற்றுக்கணக்கான கவுண்டர்கள் திரண்டு அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சேரியிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஊரின் பொதுச் சாவடி வரை அடித்தவாறே இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது அடிபட்ட காயங்களின் மீது உப்பைத் தடவியும் துன்புறுத்தியுள்ளனர். ஜெகந் நாதனின் வயதான பெற்றோர் உட்பட, எல்லா தலித் ஆண்களையும் பெண்களையும் கேவலமாக வசையாடியபடி உதைத்துத் தள்ளியிருக்கின்றனர்.இதில் பாதிக்கப்பட்ட ஜெகந்நாதன், ஊராட்சித் தலைவர் முத்துசசி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையீடு செய்துள்ளார். பதிலுக்கு முத்துசாமியும் ஜெகந்நாதன் அவரைத் தாக்கியதாகவும், பொது குடிநீர் குழாயை சேதப்படுத்தியதாகவும் காவல் துறையினர் பொய் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்து செயல்படும் தலித் விடுதலைக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இப்பிரச்சனையில் தலையிட்டுள்ளனர். பல்வேறு ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து போராட்டங்களை நடத்தத் தொடங்கிய நிலையில், அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் வழக்கம்போல கைதுகள் – விடுவிப்புகள் – சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்று சாதி இந்துக்களை ஆற்றுப்படுத்தும் விதமாகவே நடந்து கொண்டுள்ளனர்.அதன்பின்னர், வன்கொடுமையின் உச்சபட்ச வடிவமாக மாபெரும் சமூகப் புறக்கணிப்புக்கு தலித் மக்கள் ஆளாக்கப்பட்டனர். தலித் மக்கள் வாழும் சேரிக்கு தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது. கடைகளில் அரிசி முதலிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இளைஞர்கள் பணியாற்றி வந்த விசைத் தறிகள் மூடப்பட்டு வேலை மறுக்கப்பட்டது. ஊருக்குள் வரும் தனியார் பேருந்து, சேரிக்குள் வருவது நின்று விட்டது. கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குள் தலித் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது என்ற மிரட்டலுக்கு தலைமை ஆசிரியர் பணியாததால், அது மட்டும் நடக்கவில்லை. இவ்வாறு அரசு எந்திரத்தை முழுவதுமாய் கட்டுப்படுத்தி தலித் மக்களை சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்குவது, ஆதிக்க சாதியினரின் தொடர் நடவடிக்கையாக இருக்கிறது.முற்றிலுமாக ஊர்க் கவுண்டர்களின் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளான தலித் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பும், வாழ்வுரிமையும் கோரி 12.2.2009 முதல் அவிநாசி – ஈரோடு சாலையில் உள்ள இலங்கைத் தமிழ் அகதி மக்கள் தங்கியுள்ள சந்தைப் பேட்டை அகதி முகாமில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட சுமார் 400 பேர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர். கொங்குநாடு என்று தற்போது கவுண்டர்களால் "பெருமை'யுடன் அழைக்கப்படும் இந்த மேற்கு மாவட்டங்களின் (ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல்) பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகளுக்கு உள்ளாகிற மக்களாக அருந்ததியினர் உள்ளனர். தூய்மைத் தொழில், செருப்பு கட்டுதல் தவிர, பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக கவுண்டர்களின் பண்øணயத்தில் வேலை செய்து வந்த அவர்களின் தற்போதைய இளைய தலைமுறையினர் பண்ணை யத்திலிருந்து வெளியேறி – ஓரளவு சுயமரி யாதையுள்ள விசைத்தறி தொடங்கி, பல்வேறு தொழில்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதுவே கவுண்டர்களின் தற்போதைய கோபத்திற்கான முக்கியக் காரணமாக இருக்கிறது.நம்பியாம்பாளையத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சில இளைஞர்கள் தலித் விடுதலைக் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கியபோதே கவுண்டர்கள் ஒன்றுதிரண்டு பிரச்சனையை உருவாக்கியிருக்கிறார்கள். தலித் இளைஞர்களால் தொடங்கப் பெற்ற அவ்வமைப்பு பெரிய அளவில் போராட்டங்கள் ஏதும் செய்து விடவில்லை. அருந்ததியர்களை தேர்தல் நோக்கில் ஒருங்கிணைக்கும் பணியை மட்டுமே அது மேற்கொண்டது. அதற்கே கவுண்டர்கள், தலித் இளைஞர்களை ஊர் பஞ்சாயத்து முன்பு அடித்து – வதைத்து அமைப்பைக் கலைத்து விடும்படி மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள், அதற்கு மறுத்து நீங்கள் எங்களைக் கொன்றாலும் பரவாயில்லை, அமைப்பைக் கலைக்க முடியாது என்று உறுதியாக நின்றுள்ளனர்.அதனைத் தொடர்ந்து, தலித் விடுதலைக் கட்சியின் கொடிக்கம்பத்தை நாட்டுவதற்கான முயற்சியில் தலித் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக ஊரின் அனைத்துக் கட்சி கவுண்டர்களும் ஒன்றுதிரண்டு, தலித் விடுதலைக் கட்சியின் கொடியை ஊருக்குள் வரவிடக்கூடாது என்பதற்காக, அனைத்துக் கட்சிக் கொடிகளையும் அப்புறப்படுத்தி விட்டனர். மேலும், இரவு முழுவதும் விசைத்தறிக் கூடங்களில் பணியாற்றி விட்டு பகலில் ஓய்வெடுக்கச் செல்லும் இளைஞர்களை – கோயில் திருவிழாக்கள் மற்றும் சாவு வீடுகளுக்குப் பறையடிக்க வந்தே தீர வேண்டுமென்று மிரட்டி அழைத்துள்ளனர்.கொங்கு நாடு, கொங்கு வேளாளர் என்கிற சொல்லாடல்களுக்குப் பின்னேயுள்ள சாதி அரசியல் இங்கே கவனிக்கப்பட வேண்டும். தற்போது சுற்று வட்டார 30 கிராமங்களைச் சேர்ந்த கவுண்டர்கள் ஒன்றிணைந்து, நம்பியாம்பாளையம் தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்முறையில் இறங்கியுள்ளனர். கொங்கு வேளாளரின் பேரவை முடிந்ததும் (15.02.2009) உங்களை வசமாக கவனித்துக் கொள்கிறோம் என்று பலமுறை மிரட்டல் விடுத்துள்ளனர். “நாங்களே நேராக அடித்தால்தானே, பி.சி.ஆர். போடுவே, வேற வகையிலே நாங்க கவனிச்சுக்கிறோம்'' என்று கூலிப்படை வைத்துக் கொலை செய்து விடுவதாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று அச்சத்துடன் தெரிவிக்கின்றனர் அருந்ததியினர்.ஆள், அம்பு, அரசியல் செல்வாக்கு, பணபலம் என வலுவான அதிகாரத்தில் உள்ள ஒரு கும்பல், ஒன்றுமறியாத மக்களைத் தாக்க முனையும்போது, அதனைத் தடுத்து அம்மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை, நீதித்துறை போன்ற அரசு நிர்வாக அமைப்புகள் – அதிலிருந்து விலகி தாக்குகிற ஆதிக்க சாதியனருக்கே ஆதரவாகச் செயல்படும்போது – அம்மக்கள் தமது சொந்த மண்ணி லிருந்தே புலம் பெயர்ந்து வேறிடத்தில் அகதிகளாகத்தான் வாழ நேரிடும். அத்தகைய அவல நிலையிலேயே நம்பியாம்பாளையம் கிராம தலித் மக்கள் உள்ளனர்.இத்தகைய சூழலில் வைத்துத்தான் கொங்கு வேளாளரின் "அரசியல் (ஜாதி) எழுச்சி'யை நாம் கவனத்துடன் பார்க்கவேண்டியுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று மாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர் அவர்கள். சிங்களப் பேரினவாத அரசின் கொடுந்தாக்குதலுக்கு அஞ்சி உயிர் பிழைப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தமிழீழ மக்கள். அவர்களுக்காக நாம் சிந்தும் கண்ணீரும், மேற்கொள்ளும் போராட்டங்களும் உண்மையெனில், ஆதிக்க சாதியினரின் தாக்குதலுக்கு அஞ்சி சொந்த மண்ணிலேயே புலம்பெயர்ந்து அகதிகளாக இம்மக்கள் வாழ நேர்ந்துள்ளதற்கு, நாம் எந்த வகையில் பொறுப்பேற்கப் போகிறோம் என்ற கேள்வி – நம்மை வெட்கமும், பெரும் குற்றவுணர்வும் கொள்ளச் செய்கிறது
வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள் படித்த தலித் மக்களின் பங்கு என்ன? – 6அய். இளங்கோவன்
பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. சமூக சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எல்லாரும் தேர்தல் களத்தில் கூட்டணி வியூகம் வகுத்தவண்ணமுள்ளனர். தொகுதிச் சீரமைப்பிற்குப் பின்னர் தலித் மற்றும் பழங்குடியினருக்கான 120 தனித் தொகுதிகளின் எண்ணிக்கை, தற்பொழுது 131 ஆக உயர்ந்துள்ளதாக பெருமைப்படுகின்றனர். ஆனால் தலித்துகளோ அன்றாடம் சிறுமைப்படுத்தப்படுகின்றனர். நாடாளுமன்றத்திற்கு பதினான்கு முறை நடைபெற்ற தேர்தலில், ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் 100 தலித் மற்றும் பழங்குடியின உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுடைய வாழ்வு வளமானது; ஆனால், தலித் மக்களின் வாழ்வில் மட்டும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை!தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு முற்றிலும் எதிரானதொரு சட்டவரைவு 23.12.2008 அன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 47 நிறுவனங்களில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இல்லை என்பது உள்ளிட்ட, வேறு சில எதிர்மறையான விதிகளும் இச்சட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது குறித்து ஓரளவுக்கு கண்டனக் குரல்கள் எழுந்த பிறகும் 25.2.2009 அன்று, இச்சட்டவரைவு மக்களவையில் வைக்கப்பட்டது. எதிர்ப்புகள் கிளம்பியதால், இச்சட்டவரைவு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டவரைவு அன்று விவாதத்திற்கு வரும் எனத் தெரிந்திருந்தும், பெரும்பாலான தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை!இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், இங்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இருப்பினும் ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளபடி மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு, வேலைவாய்ப்பிலும் மாணவர் சேர்க்கையிலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 25.1 கோடி தலித் மற்றும் பழங்குடி மக்கள் உள்ளனர். ஆனால், எந்த ஒரு பாடப்பிரிவிலும் இம்மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. தலித் மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபடுவதாக வாய்கிழியப் பேசித் திரியும் அரசியல் கட்சிகளும், தலித் அரசுப் பணியாளர் சங்கங்களும், தலித் மேட்டுக்குடிகளும் இவ்வவலம் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. தலித் மக்களுக்கு இடஒதுக்கீட்டை மறுக்கும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றோடு அரசுக் கல்லூரிகளும் மறைமுகமாக இணைந்து கொண்டுள்ளன. இருக்கின்ற இடஒதுக்கீட்டு உரிமைகளையும், கல்வி உதவிகளையும் இக்கல்லூரிகள் சீரழித்து வருகின்றன. தலித் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்ற பல்வேறு கல்வி மற்றும் இடஒதுக்கீட்டு உதவிகளை இக்கல்லூரிகள் திருடிக் கொள்கின்றன.இடஒதுக்கீட்டு உதவிகளை முறைகேடாகப் பயன்படுத்துவது, அதை செயல்படுத்தாமல் இருப்பதைக் காட்டிலும் மோசமான குற்றம். இக்குற்றங்கள் நாள்தோறும் பெரும்பாலான கல்லூரிகளில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.தலித் மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்கென்று "பல்கலைக்கழக நல்கைக் குழு' (மானியக்குழு – University Grants Commission )பல நலத்திட்டங்களை அளிக்கிறது. கிராமப்புறங்களிலிருந்து, தமிழ் வழிக்கல்வி படித்து விட்டு கல்லூரிக்கு வரும் தலித் மாணவர்கள் மிக அதிகம். இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், ஆங்கிலத்தில் திறன் பெறுவதாகும். தமிழ் வழியில் உயர் கல்வியை படிக்க முடியவில்லை; ஆங்கில வழியில் தன்னால் போட்டிப் போட முடியவில்லை என்பதற்காக மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்களும் உண்டு. இத்தடையை நீக்க, தலித் மாணவர்கள் ஆங்கிலத்தில் திறன் பெறுவதற்கென, ஒவ்வொரு கல்லூரிக்கும் "பல்கலைக் கழக நல்கைக் குழு' ஆண்டொன்றுக்கு மூன்று லட்சம் ரூபாயை வழங்குகிறது. இத்தொகை கணினி, பயிற்றுநர் ஊதியம், நூல்கள், மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், குறிப்பேடுகள், எழுது பொருட்கள் ஆகியவற்றுக்கு செலவழிக்கப்பட வேண்டும்.இப்பயிற்சியை பெரும்பாலான கல்லூரிகள் நடத்துவதில்லை. இங்கு பெரும்பான்மை என்று குறிப்பிடுவது, ஒன்றிரண்டு கல்லூரிகளாவது நடத்தியிருக்காதா என்ற ஏக்கத்தில்தான். அனைத்துக் கல்லூரிகள் என்றே கூட இதை வாசிக்கலாம். போலி பற்றுச்சீட்டுகளை வைத்து கணக்கு முடிக்கப்பட்டு, அந்தப் பணம் துறைவாரியாகப் பங்கிடப்பட்டுவிடும் அல்லது துறைக்கொரு கணினியாகவோ, வேறு பொருளாகவோ அது மாறிவிடும். ஆங்கிலத்துக்கு மட்டுமல்ல, தலித் மாணவர்கள் உயர் கல்வியில் பின்தங்கியிருக்கும் பாடங்களில் சிறப்புப் பயிற்சி பெறுவதற்கும் கூட, பல்கலைக்கழக நல்கைக் குழு உதவுகிறது. அந்த நல்கையும் இப்படித்தான் நாசமாய்ப் போகிறது. மாணவர்கள் எளிமையான பாடங்களாகக் கருதும் தமிழ், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு ஆகிய துறைகளுக்கும்கூட இந்தப் பணத்தில் பங்கு போய்விடுகிறது. "ஊரான் வீட்டு நெய்யே, ஆளுக்கொரு கையே' என்கிற நிலைதான்! இந்த நல்கையை கல்லூரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குகின்றன. இத்தகைய முறைகேடுகள் நடப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. பல்கலைக் கழக நல்கைக் குழுவிடம் இந்த நல்கைகளை மேற்பார்வையிட குழுக்கள் எதுவும் இல்லை.தலித் மாணவர்கள் அவர்களுக்கென்று திறக்கப்பட்டிருக்கும் அரசு விடுதிகளில்தான் தங்க வேண்டும் என்றொரு கருத்து உண்டு. ஆனால் அவர்கள் விரும்பினால், கல்லூரியின் முக்கிய விடுதியில், பிற மாணவர்களுக்கான விடுதிகளிலும் தங்கிப் படிக்கலாம். ஆனால் தனியார் கல்லூரிகள் எவையும் தமது கல்லூரி விடுதிகளில் தலித் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. கல்விச் சுற்றுலாவுக்கென நல்கைக் குழு பணம் தருகிறது. அதற்கு போலி பற்றுச்சீட்டு வைக்க முடியாது என்பதால், அந்த நல்கையை கல்லூரிகள் பயன்படுத்துவது இல்லை.ஒவ்வொரு கல்லூரியிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழிகாட்டு மய்யம் திறக்க நிதி நல்கை உண்டு. அங்கு நாளேடுகளும், நூல்களும் வைக்கப்பட வேண்டும்; எதிர்கால திட்டத்தை வகுக்க ஆலோசனை வழங்க வேண்டும். இந்த மய்யம் பெரும்பாலான கல்லூரிகளில் கிடையாது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஆதி திராவிடர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர் ஒருவரை, அம்மாணவர்களின் சிக்கல்களுக்கு உதவி செய்ய நியமிக்க வேண்டும். பிரச்சினைகளை கல்லூரிகளே செய்வதால், தனக்கே வழிகாட்டிக் கொள்ள தன்னுடைய ஆசிரியரை நியமிப்பதை அவை விரும்புவதில்லை! தலித் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்த பல்கலைக் கழகங்களும் ஒரு தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும். அதுவும் நடைபெறுவதில்லை.இடைக்கால நிதி நிலை அறிக்கையில், உயர் கல்விக்கென 9 மடங்கு அதிக நிதியை அளித்திருப்பதாக மய்ய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. தமிழக அரசு இதற்கென 1,463 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீடுகளில் தலித் மாணவர்களுக்குரிய 18 சதவிகிதத்தை கேட்கவோ, மேலும் கேட்டுப் பெறவோ இக்கல்லூரிகள் தயாராக இல்லை. அரசியல் சட்டப்பிரிவு 16(5), தலித்துகளுக்கு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதி செய்கிறது. அரசியல் சட்டத்தின் பின்புலத்தில் மாநில அரசு ஆணைகளை வெளியிடுகின்றன. ஆனால், உயர் கல்வி நிறுவனங்களில் தலித்துகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு இடஒதுக்கீடு உண்டென்கிறது தமிழக அரசின் தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் 1976. ஆனால் வேலைவாய்ப்பில் தலித்துகளுக்குப் "பட்டை நாமம்' போடுகின்றன தனியார் கல்லூரி நிர்வாகங்கள். இடஒதுக்கீட்டுச் சட்டங்களும் அரசாணைகளும் நிர்வாகங்களின் காலடியில் தான் கிடக்கின்றன. தலித் மக்களுக்கான உரிமைகள் உயர் கல்வித் துறையில் இப்படி வெகுகாலமாய் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இது குறித்த புகார்களை "தேசிய தலித் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திற்கு' அனுப்பினால் அந்த ஆணையமோ, இக்கொடுமைகளை செய்துவரும் கல்லூரி நிர்வாகம் அளித்த தன்னிலை விளக்கக் கடிதத்தையே பதிலாக அனுப்பிவிட்டு பல்லிளிக்கிறது. எவ்வகையிலும் பயனளிக்க முடியாத ஆணையமாக அது இருந்து வருகிறது. இச்சூழலில் நாம் வேறு யாரையும் விட நம்மையே நம்புவதுதான் சிறந்தது. எனினும் தலித் மக்களுக்கு இது தொடர்பான வழிகாட்டும் நிலையில் இருக்கிற படித்த தலித்துகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? படித்த தலித்துகளை நம்பி ஏமாந்து போன அண்ணல் அம்பேத்கர், தமது இறுதிக் காலத்தில் அழுத கண்ணீர் இன்னும் காயாமல் கண்ணீர் சுனையாய் ஊற்றெடுக்கிறது. தலித் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கும், பாதுகாப்பதற்கும் கல்வி பெற்ற தலித்துகள் தயாராக இல்லை!தலித் மக்களுக்கு நேரடியாகவும், அதிக அளவிலும் உதவி செய்யும் நிலையில் இருக்கும் வருவாய்த் துறையில் மட்டும் பதவி உயர்வு மூலம் நாற்பது சதவிகிதத்திற்கும் மேல் தலித்துகள் இன்று பொறுப்பில் உள்ளனர். முதியோர் உதவித் தொகை, இலவச மனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், கல்வி உதவித் தொகை, ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி உதவிகள் போன்றவற்றிற்காவது கையூட்டுப் பெறாமல் இவர்களில் பலர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்களா? உயர் கல்வி நிலையங்களில் இருக்கும் பல தலித் பேராசிரியர்கள், தலித் மாணவர்கள் "ராஜிவ் காந்தி உயர் கல்வி நல்கை' போன்ற உதவிகளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றனர். தம்மை நாடிவரும் மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக இருப்பதற்கு மறுத்து விடுகின்றனர். தலித் மாணவர்களால் வரலாறு, தமிழ், பொருளாதாரம் போன்ற துறைகளில் மட்டுமே உயராய்வு செய்ய முடிகிறது. அறிவியல் பாடங்களில் உயராய்வு செய்ய இயலாமல், தலித் மாணவர்கள் திசை வழி தெரியாமல் தவிக்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ள யார் இருக்கிறார்கள்? நன்கு படித்த ஒரு அம்பேத்கரால் ஆறு கோடி தலித் மக்கள் பயன் பெற்றனர்; இன்றும் 25 கோடிக்கும் மேற்பட்டோர் அவரது அயராத உழைப்பின் பயனை அறுவடை செய்து கொண்டிருக் கின்றனர். இன்று படித்த தலித்துகள் பல கோடிப்பேர் இருந்தும் அதனால் எந்தப் பயனும் விளைந்து விடவில்லை – பாமரனுக்கு!இந்நாட்டின் ஜனநாயகம் உயிர்த் துடிப்புள்ளதாக மாற வேண்டுமெனில், அதற்கு சமூக, அரசியல், பொருளியல், கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அடித்தட்டு மக்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அரசியல் தளங்களில் மட்டும் பிரதிநிதித்துவம் இருந்தால் போதாது. அரசியல் தொடக்கம் அனைத்துத் தளங்களிலும் அது எதிரொலிக்க வேண்டும். விடுதலை இறையியல், தலித் இறையியல் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக, கத்தோலிக்க கல்லூரிகள் மற்றும் அதையொட்டி நடத்தப்படும்தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆறு மாதங்களாக வெளிவரும் இத்தொடர் குறித்து கள்ள மவுனம் சாதிக்கின்றன. சாதி இந்துக்களின் தீண்டாமையை கை காட்டியே தங்களுடைய தீண்டாமைக் குற்றங்களை மறைத்து விடலாம் என்று அவர்கள் கனவு காண்கின்றனர். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்கான, சம உரிமைக்கான, ஜனநாயகத்திற்கான போராட்டம் – அனைத்து வகை அநீதிகளையும், பாகுபாட்டையும் சுட்டெரிக்கும் என்பது மட்டும் உறுதி.
பெரியார்: நாட்டுடைமையாக்குதலின் அரசியல்எஸ்.வி. ராஜதுரை
(கட்டுரையாளர் பெரியாரிய சிந்தனையாளர். பெரியாரியம் தொடர்பான பல ஆய்வு நூல்களை எழுதியவர். திருச்சி பாரதிதாசன் பல்கலையின் பெரியார் உயராய்வு மய்யத்தின் தலைவராக செயலாற்றியவர்.)தமிழக அரசு, பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் நாட்டுடைமை ஆக்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தமிழக முதல்வர் நேரடியாகக் கூறாமல், மூத்த பத்திரிகையாளரும், சமூகவியல் அறிஞருமான சின்ன குத்தூசி மூலம் இப்படி எழுத வைத்திருக்கிறார்:“பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமா என்பது பற்றிய வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆகவே, அது பற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை.”“பெரியார் உயிரோடு இருந்த காலத்தில் அவருடைய நூல்களையும் இயக்கப் பிரச்சார நூல்களையும் வெளியிடுவதற்காக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை தொடங்கினார். 1920-களிலிருந்து அவர் ஆற்றிய பேருரைகள், எழுதிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் அந்த நிறுவனமே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அது மட்டுமல்ல, அவரது நூல்களையும் அவர் கண்ட பகுத்தறிவு இயக்கத்தின் நூல்களையும் நகர்வுப் புத்தகக் காட்சி அமைத்து ஆண்டு முழுவதும் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்ப்பித்து வருகிறோம்” என்கிறார்கள் பெரியார் கண்ட திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படையினர்.”முதலாவதாக, உயர்நீதிமன்ற விசாரணையில் இருப்பது பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமா, கூடாதா என்பது பற்றிய வழக்கு அல்ல. மாறாக, 1925 முதல் 1938 வரை ‘குடிஅரசு’ ஏட்டில் வெளிவந்த பெரியாரின் பேச்சுகள், எழுத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துப் பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதைத் தடுக்கும்படியும், தனக்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் வழங்கும்படியும் ஆணையிடுமாறு உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடுத்த வழக்குதான்.இரண்டாவதாக, பெரியாரின் நூல்கள் என வெளியிடப்பட்டு வருபவை ‘மதம்’, ‘சாதி - தீண்டாமை’, கடவுள்’, ‘பெண்ணுரிமை’, ‘பகுத்தறிவு’, ‘ஏன், எதற்காக’ போன்ற தனித்தனிப் பகுதிகளாக, பல இடங்களில் பெரியார் தந்த தலைப்புகளை மாற்றிப்போட்டு - வெளியிடப்படும் கட்டுரைத் தொகுப்புகள் தாம். பெரியாரின் சிந்தனையில் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு, பொருளாதார சமதர்மம் ஆகியன ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. மேலும், அது அவர் வாழ்ந்த சமூக, அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில் விளைந்ததேயன்றி சுத்த சுயம்புவாக அல்ல.மூன்றாவதாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், தற்போது மேற்கொண்டுள்ள வெளியீட்டு முறையால் பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் முழுமையாக வெளியிட முடியாது. அந்த நிறுவனத்திடம் பெரியாரின் எழுத்துகளும், பேச்சுகளும் முழுமையாக இல்லை.நான்காவதாக, பெரியாரின் கொள்கைகளை வீரமணி துணிந்து திரித்து வருவது தொடர்பாக எனது ‘பெரியார்: மரபும் திரிபும்’ நூல் உள்பட, தமிழகத்தில் ஏராளமான கட்டுரைகள் அசைக்க முடியாத சான்றாதாரங்களுடன் வெளிவந்துள்ளன. எப்படி இருப்பினும், பெரியாரின் எழுத்துகளுக்கும், பேச்சுகளுக்கும் வீரமணி சட்டரீதியான மரபுரிமையர் அல்லர் என்பதைத்தான் முதல்வர் இங்கு மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.வீரமணி கொண்டாடும் மரபுரிமை என்னும் விஷயத்திற்குப் போகும்முன் வேறொன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள பல்வேறு தரப்பினரால் நீண்டகாலமாக அரசாங்கத்திடம் முன் வைக்கப்படும் கோரிக்கை, பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும்; அதுவும் கால வரிசைப்படியான தொகுப்புகளாக என்பதுதானேயன்றி பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பதல்ல.பெரியாரின் நூல்கள் என இதுவரை வெளி வந்துள்ளவற்றில் பெரியாரின் ஆக்கங்கள் பத்து சதவிகிதம் கூடத் தேறாது. காந்தி, பாரதியார், மார்க்ஸ், லெனின் போன்றோரது ஆக்கங்களைப் போலவே பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் காலவரிசைப்படி தொகுத்து வெளியிட்டால்தான் அவரது சிந்தனையிலும் செயலிலும் ஏற்பட்ட பரிணாமத்தையும் அவற்றுக்கான சமூக, அரசியல் பின்னணிகளையும் புரிந்து கொள்ள முடியும்.ஆனால், வீரமணியோ, ‘ஆனந்த விகடன்’ ஏட்டிற்கு கொடுத்த பேட்டியில், “மொத்தமாகப் பதிப்பிக்கும்போது, கொள்கைக் குழப்பங்கள் ஏற்படும்” என்னும் விநோதமான கருத்தைக் கூறியிருக்கிறார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குக்கான மனுவில் (26.8.2008) “தீவிர முயற்சிகள் மேற்கொண்டு, குடிஅரசு, ஜஸ்டிஸ், ரிவோல்ட், மாடர்ன் ரேஷனலிஸ்ட் முதலிய ஏடுகளில் பிரசுரிக்கப்பட்ட பெரியாரின் பேச்சுகள், எழுத்துகள், பேட்டிகள், இதர விஷயங்கள் ஆகிய அனைத்தையும் திரட்டி வைத்துள்ளதாக” வீரமணி கூறியுள்ளார். ஆனால், 20.12.2008-ம் தேதிய ‘விடுதலை’ இதழில் தன்னிடம் இல்லாத ‘குடி அரசு’ முதலிய ஏடுகள் பற்றிய நீண்ட பட்டியலை வெளியிட்டு, அவற்றைத் தனது இயக்க நூலகத்துக்குத் தந்துதவுமாறு ‘கழகத் தோழர்கள் மற்றும் கழகப் பற்றாளர்களுக்கு’ வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரிடம் இல்லாதவைகளில் ஏறத்தாழ எட்டாண்டு கால ‘குடிஅரசு’, இரண்டாண்டு கால ‘விடுதலை’ ஆகியனவும் அடங்கும். 1989, 1990-ம் ஆண்டு ‘விடுதலை’ இதழ்கள்கூட அவரிடம் இல்லை! பெரியார் தன்னிடம் விட்டுச் சென்றதை வீரமணி உரிமை கொண்டாடும் ‘அறிவுசார் சொத்து’ அவரால் இப்படித்தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது.பெரியாரைத் தலைவராகக் கொண்டு நிறுவப்பட்டதும் 1952-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதுமான ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ என்னும் நிறுவனத்தின் தற்போதைய செயலர் என்னும் முறையில் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்களில் கூறப்பட்டுள்ள கடமைகளையும், சொத்துகளையும் நிர்வகிக்கும் உரிமை வீரமணிக்கு மட்டுமே உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த சட்ட திட்டங்கள் பிரிவு 2 (b) (iஎ) மற்றும் (எ) ஆகியன.மேற்சொன்ன நிறுவனத்தின் குறிக்கோள்களை எய்யும் பொருட்டு செய்தித்தாள்கள், ஏடுகள் ஆகியவற்றை நடத்துவதும் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றைப் பிரசுரித்து சுற்றுக்கு விடுவதும் இது போன்ற இதர நிர்மாணப் பணிகளைச் செய்வதும் ஆகும் எனக் கூறுகின்றன. ஆதரவற்றவர்களுக்கும், கணவரை இழந்தோர்க்கும் இல்லங்களும், கல்வி நிறுவனங்களும் கட்டுவது இந்த நிறுவனத்தின் பணிகளில் ஒன்று என மற்றொரு துணைப் பிரிவு கூறுகிறது. ஆனால், கல்வியை வணிக ரீதியாக்க வேண்டும் என்று எந்தப் பிரிவும் கூறுவதில்லை.பெரியாரின் வாழ்வும், சிந்தனையும் இந்த நிறுவனத்தையும் கடந்து அரசியல், பண்பாட்டு, சமூகத் தளங்களில் இயங்கின. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களையும், கடமைகளையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான செலவுகளுக்காகப் பெரியாரும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பிறரும் சில சொத்துக்களை வாங்கினர். இது குறித்து மேற்சொன்ன சட்டதிட்டப் பிரிவு 22 கூறுகிறது.“பெரியார் ஈ.வெ.ராமசாமியால், சுயமரியாதை சங்கத்திற்காக அதன் நிதிகளில் இருந்து அச்சங்கத்தின் தலைவர் என்னும் முறையில் அவர் பெயரிலும் அவரது சொந்தப் பெயரிலும், நிறுவனத்தின் தலைவர் பெரியார் ஈ.வெ.ராமசாமியால் ஏற்கனவே வாங்கப்பட்ட சொத்துக்களுக்கும், நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் ஆயுள்கால உறுப்பினர்களே அறங்காவலர்களாக இருப்பர்.”தற்போது இந்த நிறுவனத்தின் செயலராக இருக்கும் வீரமணி, இதனுடைய சொத்துக்களுக்கான மரபுரிமை கொண்டாடுவது சட்டப்படி சரியானதே! ஆனால், இந்த சொத்துக்களில், பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றுக்கான பதிப்புரிமையும் அடங்கும் என்னும் அவரது கூற்று விவாதத்திற்குரியது. இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பொன்றில் ‘சொத்து’ என்பதற்குத் தரப்பட்டுள்ள விளக்கமொன்றினைக் கூறுகிறார். இந்த விளக்கத்தின்படி, ‘சொத்து’ என்பது ‘கண்ணுக்குப் புலப்படுகிற, புலப்படாத, தொட்டுணரக்கூடிய, தொட்டுணர முடியாதது என்பது அவரது விளக்கம்.இந்தத் தீர்ப்பு, சொத்து பற்றிய வேறு சில வரையறைகளையும் குறிப்பிடுகிறது. “ஏற்கெனவே உள்ள செல்வத்தைப் பெருக்கும் தன்மையுடையது; பரிவர்த்தனை மதிப்புடையது” என்பன இந்த வரையறைகளில் அடங்கும். அதாவது, வீரமணி உரிமை கொண்டாடும் பெரியாரின் அறிவுசார் சொத்து, அவரிடம் ஏற்கெனவே உள்ள செல்வத்தைப் பெருக்கும். பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டிருக்கும். ‘அறிவுசார் சொத்துரிமை’ கொண்டாடும் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தைத் துணைக்கு அழைப்பதில் ஆச்சரியமில்லை!சொத்துரிமை தொடர்பான இந்திய சட்டங்களின்படி இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் சாத்தியப்பாடு உண்டு என்பதை வாதத்திற்காக நாம் ஒப்புக் கொண்டாலும், வேறு சில சிக்கல்களை வீரமணி எதிர்கொண்டாக வேண்டும். மேற்சொன்ன நிறுவனத்தின் சட்டதிட்டங்கள் பிரிவு 22, ‘பெரியாரால் ஏற்கனவே வாங்கப்பட்ட சொத்துகள்’ பற்றிக் கூறுகின்றது. அவை பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றுக்கான பதிப்புரிமையையும் உள்ளடக்கும் என்னும் வீரமணியின் வாதத்தைப் பின்பற்றினால், பெரியார் தனது எழுத்துகளையும், பேச்சுகளையும் தானே விலை கொடுத்து வாங்கினார் என்பதுதான் தர்க்கரீதியான அர்த்தமாக இருக்க முடியும்! இந்த அபத்தத்தைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வீரமணி விரும்புகிறார் போலும்!மேற்சொன்ன பிரிவு 22, “சுயமரியாதை சங்கத்திற்காக, சுயமரியாதை சங்கத்தின் நிதியிலிருந்து பெரியார் வாங்கிய சொத்துகள்” என்று தான் கூறுகிறது. பெரியார் கட்டுரைகள் எழுதி வந்த ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’, ‘விடுதலை’, ‘ரிவோல்ட்’, ‘ஜஸ்டிஸ்’ முதலிய ஏடுகள் ஏதும் ‘சுயமரியாதை சங்கத்தால்’ வெளியிடப்பட்டவை அல்ல; அந்த சுயமரியாதை சங்கம் பதிவு செய்யப்பட்ட சங்கமும் அல்ல.வீரமணி தற்போது செயலாளராக இருக்கும் நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கோ, தனி நபர்களுக்கோ பெரியார் விட்டுச் சென்றவை தவிர வேறு ஏதேனும் சொத்துகள் இருக்குமேயானால், அவை சட்டப்படி அவரது துணைவியார் மணி அம்மையாருடைய ரத்த உறவுகளில் யாரேனும் ஒருவருக்குத்தான் போய்ச் சேரும்.தவிரவும், இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தின் படி, ஒருவர் தனது எழுத்துகளுக்கும் (அச்சில் வந்தவை, வராதவை) பேச்சுகளுக்கும் (அச்சில் வந்தவை) வேறு யாருக்கேனும் பதிப்புரிமை வழங்குவதாக இருந்தால் அது அவராலோ, அவரது அத்தாட்சி பெற்ற பிரநிதியாலோ, எழுத்துப்பூர்வமாகத் தரப்பட்ட ஒப்புதலாக இருக்க வேண்டும். பெரியார், தனது எழுத்துகளுக்கும், பேச்சுகளுக்கும் வீரமணிக்குப் பதிப்புரிமை வழங்க எழுத்துப்பூர்வமான ஒப்புதலைத் தந்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை. அம்பேத்கரின் பேச்சுகளும், எழுத்துகளும் இந்தியாவில் நூற்றுக்கணக்கானோரால் பதிப்பிக்கப்படுகின்றன. எனினும், காலவரிசைப்படி இல்லாவிட்டாலும் அவற்றை முழுமையாகத் தொகுத்து மலிவு விலையில் வெளியிடும் பணியை மகாராஷ்டிரா அரசாங்கம்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது.எனவே, பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும் அவர் இறந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகாவது முழுமையாக அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள்.(‘தினமணி’ நாளேடு 26.2.2009-ல் வெளியிட்ட கட்டுரை)பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்க பத்திரிகையாளர்கள் வலியுறுத்தல்மார்ச் 3 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் ‘இசட்-தமிழ்’ தொலைக்காட்சியில் - நூல்கள் நாட்டுடைமை பற்றிய விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பத்திரிகையாளர்கள் சிகாமணி, ‘தீக்கதிர்’ பொறுப்பாசிரியர் க.பொ. அகத்தியலிங்கம் ஆகியோர் - “பெரியார் எழுத்து-பேச்சு நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
தலித் வாழ்வுரிமைக்கு முற்றுப்புள்ளிடி. ராஜா
மறைமலையடிகளின் தலித் விரோதம் - பெரியார் இயக்கத்தின் கடும் எதிர்ப்பு வே.மதிமாறன்
முந்தைய பாகம்....* பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களான பிள்ளைமார், சைவ முதலியார், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் ஜாதிவெறியையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியையும் நியாப்படுத்திய சைவ சமயத்தையும் கந்தலாக்கியது பெரியார் இயக்கம். அதில் கோபமுற்று பெரியாரை எதிர்த்து எழுதினார்கள், சைவ சமயத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள். ஒருமுறை மறைமலையடிகள் - நந்தனாரைக் குறித்து எழுதும்போது தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி மிக மோசமான விளக்கத்தைக் கொடுக்கிறார்;"பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று. மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதருமோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் ஐந்தினை கொடுப்பதாய் உள்ள ஆவினை (பசு மாட்டை) அச்சாதியர் கொன்று அவற்றின் இறைச்சியை உண்ணும் புலைத்தொழிலிற் பழகியவராவர். இங்ஙனம் மிகக் கொடியதான புலையொழுக்கத்திற் பயின்றது பற்றியே பறைச்சாதி ஏனை எல்லாச் சாதிகளிலும் இழிவடையலாயிற்று." என்று எழுதியிருந்தார்.இதைக் கடுமையாக கண்டித்தது பெரியார் இயக்கம். பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த தமிழறிஞரான சுயமரியாதைச் சுடர் 'கருவூர் ஈழத்து அடிகள்' மறைமலையடிகளைக் கண்டித்து இப்படி எழுதியிருந்தார்;"இதில் பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போலல்லாமல், தேவர்கள் எல்லாரும் ஒருங்கே குடியிருக்கும் இடம் பசுவின் உடம்பு என்பதை, ........... எண்ணிப் பாராது அதனைக் கொன்று தின்னுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை அடிகளார் பறையர் மீது ஏற்றுகின்றார்.தேவர் எனப்படுவார் யாவர் என்று அடிகளார் எடுத்துக் காட்டவில்லையாயினும், ஆரியர் வேதங்களிற் பேசப்படும் முப்பத்து முக்கோடி தேவர்களையே அடிகளார் குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்னறால், தமிழ்நாட்டில் தேவர்கள் என்ற ஒரு பிரிவினர் இருப்பதாகக் கொள்வதற்குக் கருவியாதுமில்லை.தமிழ்நாட்டிலுள்ள கள்ளர்-மறவர்-அகம்படியார் என்ற பிரிவிருட் சிலர் தங்களை 'தேவர்' என்று சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள் எவரும் பசு மாட்டைத் தங்கள் குடியிருக்கும் வீடாகப் பயன்படுத்தாமல், மற்றை மக்களைப் போலவே அவர்களும் நிலத்தின் மீது வீடுகள் அமைத்து அவற்றிலேயே குடியிருக்கிறார்கள். ஆதலால், அடிகளார் கூறும் தேவர்கள் ஆரியர் நூல்களிற் காணப்படும் தேவர்களையே என்பது பெறப்படும்.முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாரும் ஒரு பசுவின் உடம்பில் இடம்பெற்றுள்ளனரா? அல்லது பகுதி பகுதியாகப் பிரிந்து ஆசியா-அய்ரோப்பா-அமெரிக்கா முதல் இந்நிலவுலகிலுள்ள பசுக்கள் எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளனாரா?அன்றித் தனித்தனி ஒவ்வொரு பசுவிலும் இத்தனை இத்தனை தேவர் விழுக்காடு இடம்பெற்றுள்ளனர், என்று கணக்கிடப்பட்டுள்ளதா? இங்ஙனம் பசுவின் உடம்பில் குடியிருக்குந் தேவர்கள், எந்த முறையில் அதன் கண் வாழ்கின்றனர்? அவர்களுக்கு உணவு எப்படி கிடைக்கிறது? அவர்களின் படுக்கையறை முதலியன எந்த முறையில் பசுக்களின் உடம்பில் அமைந்துள்ளன? என்பன போன்ற அய்யப்பாடுகள் எம்மால் தெளிந்து அறியுமாறில்லை. இவற்றை அக்கதையை நம்பும் அடிகளார் போன்றோர் விளக்குதல் நலம்."பால்-தயிர்-நெய்-நீர்-சாணகம் என்னும் அய்ந்துஞ் சிவனுக்குப் பயன்டுவதாக ஆராய்ச்சி அறிவு நிரம்பிய அடிகளாரே ஒப்புக் கொள்கிறார் என்றால், அதைக் கண்டு நாம் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. கோயில்களிற் காணப்படும் சிவ வடிவம், கல் செம்பு முதலியவற்றால் அமைக்கப்பெற்ற வடிவங்களேயாதலால், அவை, அவற்றை சாப்பிடுகின்றன எனறு சொல்லுதற்கில்லை.ஒரு வேளை சிவனை வழிபடும் அடியவர்களின் அன்பு வலையிற் சிக்கிப் பால் முதலான பொருட்களைச் சாப்பிடும் வடிவத்தை உடையவராகி, அவற்றைச் சாப்பிட்டு அடியவர்களை மகிழ்விக்கிறார் சிவன் என்று வைத்துக் கொண்டாலும், பால், தயிர், நெய் என்னும் மூன்றையுஞ் சாப்படுவரேயன்றி சிறிநீரையுஞ் சாணியையும், அடியவர்கள் எவ்வளவு அன்பு காட்டிக் கொடுத்தாலும் அவற்றைச் சாப்பிடுவாரா? சாப்பிடத்தான் முடியுமா?""தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டுச் சேரிப்புறங்களிலும் மலைப்புறங்களிலும் வாழ்ந்துவரும் ஏழைத் தமிழ்மக்கள் எல்லாரும், இந்து மதக் கோட்பாட்டுக்கு மாறாகக் கல்வி கற்க முயன்றவர்களும்-வேதங்களைப் படிக்கவும் கேட்கவும் முயன்றவர்களும்- பார்ப்பனர்களை மதியாது நடந்தவர்களும்- இந்துமதக் கடவுளரை வழிபட மறுத்தவர்களும ஆன வீரத் தமிழ்ப் பெருமக்களே" என்று பதில் எழுதினார் கரூவூர் ஈழத்து அடிகள்.* சைவசமயத்தை நோக்கி பெரியாரும், பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களும் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கற்று வெறும் அவதூறுகளையும் சவடால்களையுமே அள்ளி வீசினார்கள் சைவப் பழங்கள்.'தாங்கள் உயர்ஜாதிக்காரர்கள்' என்று அவர்கள் எவ்வளவு முக்கினாலும், 'பார்ப்பனர்களுக்கு இவர்கள் சூத்திரர்கள்தான்' என்கிற உண்மையை அவர்களுக்கு உணர்த்தியவர் பெரியார். வயித்து வலி தாங்காமல் மதம் மாறுன, வயதுல மூத்த திருநாவுக்கரசரை விட சின்னப் பையன் ஞானசம்பந்தனை, 'பெரிய கில்லாடி' என்று அவர்கள் ஒத்துக் கொண்டுள்ளதே, அவர்களின் சூத்திர மனோபாவத்துக்கு சாட்சி, என்று நிறுவியது பெரியார் இயக்கம்.காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார் தமைநன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன்நாமம் நமச்சிவாய வே.என்று ரொம்ப நல்லவன் மாதிரி தேவாரம் பாடியிருக்கானே பார்ப்பனப் பிஞ்சு ஞானசம்பந்தன், அவன் நாத்திகர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக பாடியிருக்கிறான் தெரியுமா?இதோ தந்தை பெரியார் சொல்கிறார்: “சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் - பக்தனாம் அந்த அயோக்கியப் பயல்! அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டேயெல்லாம் நான் படுக்கணும்’ என்று. கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று”இப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது. நாத்திகர்களின் ஜென்ம விரோதிகள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்தான். சைவ சமயத்தைப் பற்றி தந்தை பெரியார் தன்னுடைய இறுதி சொற்பொழிவில்,“சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.* சிவன் சொத்து குலநாசம் என்பது மக்கள் நம்பிக்கை. ஆனால் சிவன் சொத்து தன் சொத்து என்பது தீட்சிதர்கள், ஆதினங்களின் வாழ்க்கை. அதனால்தான், சிதம்பரம் கோயிலில் பெரியவர் ஆறுமுகசாமி தேவாரம் பாடப் போன போது, அவருக்கு ஆதரவு தராமல் அமைதிகாத்தார்கள் தேவாரம், திருவாசக்தை தன் உயிர் மூச்சாகக் கொண்ட ஆதினங்கள்.ஆதினங்களின் இந்த பேரமைதிக்குப் பின் இருக்கிறது, பேரிரைச்சல் கொண்ட ஒரு அரசியல். பகிரங்கமாக தெரிகிற அந்த ரகசிய அரசியல் இதுதான்.ஆதினங்களாக வரவேண்டும் என்றால், சைவப் பிள்ளையாகவோ, அல்லது சைவ முதலியாராகவோ இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நம் சிவனடியார் ஆறுமுகச்சாமியோ, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இன்று அவரை வைத்து சிற்றம்பல மேடையில் பாடச் சொல்வார்கள். பிறகு கருவறைக்குள் நுழைந்து தமிழ் பாட வைப்பார்கள்.அதன்பிறகு “அண்ணாச்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒக்காருங்க. நம்ம ஆளு கொஞ்சம் அதுல ஒக்காரட்டும்” என்று ஆதினங்கள் பதிவிக்கும் பங்கு கேட்பார்கள் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வுதான், ஆதினங்களின் மவுனத்திற்குக் காரணம்.‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.* பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த, தமிழறிஞரான 'கருவூர் ஈழத்து அடிகள்' 1941ல் 'பெரிய புராண ஆராய்ச்சி' என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார்.'தேவாரம், திருவாசகம் பாடிய நால்வர் காலத்தில் ஒழிக்கப்பட்ட சமண சமயம், அநபாய சோழன் காலத்தில் மீண்டும் தலைதூக்கியது. சமண சமயத்தின் தாக்கத்தால் கவரப்பட்ட அநபாய சோழன், 'சீவக சிந்தாமணி' என்ற சமண மத நூலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கண்டு அஞ்சிய பார்ப்பனர்கள், சேக்கிழர் முதலியாரை தங்கள் கைகூலியாகப் பயன்படுத்தி, பெரியபுராணத்தை எழுத வைத்து பார்ப்பனியத்தையும் சைவசமயத்தையும் மீட்டுக் கொண்டார்கள் என்று நிறுவி இருக்கிறார், அந்த நூலில் கருவூர் ஈழத்து அடிகள்.பெரியபுராணம் எப்படி பொய்யும், பார்ப்பனத் தன்மையுமாய் நிரம்பி இருக்கிறது என்பதை அதன் முரண்டுபாடுகளில் இருந்தே அம்பலப்படுத்தி இருக்கிறார். அவரின் கேள்விகளுக்கு இன்றுவரை எந்த சமய தமிழறிஞனும் பதில் சொல்லவில்லை.* சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்த தமிழறிஞர்களை ஒருபுறமும், தமிழை அதன் வராலாற்று போக்கில் புரிந்து கொண்ட பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த, தமிழறிஞர் கருவூர் ஈழத்து அடிகளை மறுபுறமும் நிறுத்தினால், அவரின் கால்தூசுக்குக் கூட பெறமாட்டார்கள் சமய சார்பு கொண்ட தமிழறிஞர்கள்.பெரியாரின் இந்த மேடையில் இருந்து சைவ சமயத்தைச் சார்ந்த தமிழறிஞர்களைப் பார்த்து சவாலாகக் கேட்கிறேன், குறிப்பாக தன்னைத் தானே தமிழ்க்கடல் என்று சொல்லிக் கொள்கிற நெல்லை கண்ணனை பார்த்துக் கேட்கிறேன்,பெரியபுராணம் குறித்த ஈழத்து அடிகளின் கேள்விகளுக்கு எதாவது ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு, அதன் பிறகு உன் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்.* மதவாதிகள், வெறுமனே இலக்கியவாதிகள், முதலாளித்துவ கலைஞர்கள் - முற்போக்காளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்கள் போய் ஒளிந்து கொள்கிற இடம் - கலை வடிவம், அழகியல்.இந்த அழகியல் மதவாதிகளின் அல்லது முதலாளிகளின் கலைவடிவத்தை விட முற்போக்காளர்களின் கலைவடிவத்தில்தான் அதிகம் இருக்கு. உலகளவில், சோவியத் இயக்குனர் ஐஸன்ஸைடனிடம் இருந்து களவாடியதுதான் ஹாலிவுட் படங்களுக்கான இன்றைய நவீன வடிவம்.80 ஆண்டுகளுக்கு முன்னால் புரட்சியை விளக்கி அவர் எடுத்த, 'பொட்டம்கின், அக்டோபர்' போன்ற படங்கள் போட்ட பிச்சைதான் இன்று வரை ஹாலிவுட் படங்களுக்கான வடிவம்.* முற்போக்காளர்கள் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவத்தைத் தீர்மானிக்கிறர்கள். பிற்போக்காளர்கள் மிக மட்டமான விஷயத்தைக் கூட நேர்த்தியான வடிவத்தில் தருகிறார்கள்.தங்கத் தட்டில் வைத்து தரப்படுகிறது என்பதற்காக மலத்தை தின்ன முடியுமா?'தின்ன முடியும்' என்கிறார்கள், கம்பராமாயண அபிமானிகள். பெரியார் கம்பராமாயணத்தை எதிர்த்தற்குக் காரணம், 'மலத்தை தின்னாதீர்கள்' என்பதற்காகத்தான்.(தொடரும்)- வே.மதிமாறன் (askmathi@gmail.com)
தலித் எழுச்சியும், தலித் - இஸ்லாமிய ஒற்றுமையும்ஆதவன் தீட்சண்யா
1.எனது சிறுபிராய காலத்தில் எங்களது கமலை மாடுகளுக்கு லாடம் கட்ட ஒருவர் வருவார். அவரை பாய் என்று என் அப்பா அழைப்பது வழக்கம். அப்போது பாய் என்பதை அவருடைய பெயர் என்றுதான் நான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேனேயன்றி அது இஸ்லாமியரை விளிக்கும் ஒரு சொல் - அவர் ஓர் இஸ்லாமியர்- இஸ்லாம் ஒரு மதம் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் காலக்கிரமத்தில் எனக்குத் தெரிந்த முதல் இஸ்லாமியர் அவர்தான். ஆறாம் வகுப்பில் ஒரு மாணவர் சேர்ந்தார். அவர்தான் எனக்குத் தெரிந்த இரண்டாவது இஸ்லாமியர் என்று இப்போது கணக்கில் வைக்கிறேன். ஆனால் அப்போது தெரிந்திருக்கவில்லை. யோசித்துப் பார்த்தால் எனக்கு அப்போது வேறுசில இஸ்லாமியர்களும் பரிச்சயமாகியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒருவர் சைக்கிள் ஷாப் வைத்திருந்தார். அவரிடம் வாடகைக்கு எடுத்துதான் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர் எங்களூர் சிறார்கள். மற்றவர் குடை ரிப்பேர் செய்கிறவர். இன்னாருவர் அங்கிருந்த கூட்டுரோட்டில் சின்னதாக ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் கறிபோடும் பாய் ஒருவர். இவர்களது பெயர்களெல்லாம் நினைவில் இல்லை. எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு இஸ்லாமியர் அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக வரத் தொடங்கினார். மேல்நிலை வகுப்பில் ஒரு மாணவர் எனது பெஞ்ச்மேட்.எனது பதினேழு வயது வரை என் வாழ்வில் குறுக்கிட்ட இஸ்லாமியர்கள் இவர்கள்தான். அதாவது ஒரு கை விரல்களுக்குள் முடிந்த போகிற அளவிலானதுதான் இந்த எண்ணிக்கை. அவர்களில் இஸ்லாமிய சகோதரி ஒருவருமில்லை. அப்போது என் வயதொத்த சிறுவர் சிறுமியர் இஸ்லாத்திலும் இருக்கத்தானே செய்திருப்பார்கள்? அவர்களெல்லாம் எங்கே போனார்கள் படிக்க? அல்லது படிக்கவே வரவில்லையா? படிக்க வரவில்லையானால் அவர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அன்று தொடங்கி இன்றுவரை கணக்கிட்டால் எனக்கு இப்போது அனேக இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு நண்பர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு நானே உதட்டைப் பிதுக்கி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை என்று ஒப்புக் கொள்வதே நேர்மையாக இருக்கும்.2.கமலைகள் மறைந்து ஆயில் என்ஜின்களும் மின் மோட்டார்களுமாகிவிட்ட இக்காலத்தில் மாடுகளே தேவையற்றதாகிட்ட நிலையில், மாட்டுக்கு லாடமடிக்கிற அந்த பாய் எங்கே போயிருப்பார்? யூஸ் அண்ட் த்ரோ நாகரீகம் உச்சத்திற்கு வந்துவிட்ட நிலையில் குடை ரிப்பேர் செய்கிற ஒருவர் இங்கு இன்னமும் தேவைப்படுகிறாரா? அரூர் போன்ற சின்ன நகரங்களில் குதிரை வண்டி ஓட்டிக்கொண்டிருந்த அந்த பாய்களும் குதிரைகளும் எந்த இரு சக்கர வாகனத்தின் கீழ் அரைபட்டு மாண்டிருக்கக்கூடும்? மோட்டார் வாகன ஒர்க்ஷாப்புகளில் ஆயிலும் கிரிசும் கரியும் படிந்து தன் சொந்த நிறத்தையும் முகத்தையும் இழந்துவிட்ட சிறுவர்களில் ஏன் பலரும் இஸ்லாமியராகவே இருக்கின்றனர்? வெகு அரிதான சிலரே வணிகத்திலும் தொழில்களிலும் அரசுப்பணியிலும் இருக்கின்றார்கள் என்றால் மற்றவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக என்ன செய்கிறார்கள்?ஆளுங்கட்சியில் ஒருமுறை ஒன்றியச் செயலாளராயிருந்தவன் வாரீசுகள் கூட ஒன்பது தலைமுறைகளுக்கு உட்கார்ந்து தின்னுமளவுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளும் ஒரு சமூகத்தில், ஆளுமையும் தேசபக்தியும் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகவும் திகழ்ந்து வீரமரணமடைந்த திப்புசுல்தானின் வாரீசுகள் வேலூரில் பீடி சுற்றிப் பிழைப்பதற்கு காரணமென்ன? சுமார் 800 ஆண்டுகள் இந்த நாட்டை இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி செய்திருந்த போதும் இஸ்லாமியர்கள் ஏன் இப்படி அவலவாழ்வில் வீழ்ந்து கிடக்கிறார்கள்? அப்படியானால் ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்களும் இந்த அடித்தட்டு இஸ்லாமியரும் வெவ்வேறானவர்கள் தானே? பின் ஏன் அந்த அரசர்கள் நிகழ்த்திவிட்டதாகக் கூறப்படும் ‘வரலாற்றுத் தவறுகளுக்காக’ இந்த அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்? கருவிலிருக்கிற இஸ்லாமியக் குழந்தைகூட கடப்பாரையால் குத்திக் கொல்லப்படுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?பாபர் மசூதி தகர்ப்புக்குப் பிறகு ஒவ்வொரு இஸ்லாமியரும் தேசவிரோதியாகவும் தீவிரவாதியாகவும் உருவகிக்கப்படுகிற அரச பயங்கரவாதத்திற்குள் இந்து பெரும்பான்மை மனோபாவம் வகிக்கும் பங்கு என்ன? தன் தேசபக்தியை நிறுவித் தொலைத்தாக வேண்டிய கட்டாயம் ஏன் இஸ்லாமியர் மீது திணிக்கப்படுகிறது?இந்த கேள்விகளுக்கெல்லாம் சச்சார் கமிட்டி அறிக்கையிலும்கூட நமக்கு போதிய பதில்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. அதன் பரிசீலனை வரம்புகளும் நோக்கங்களும் வேறாக இருப்பது மட்டுமே இதற்கான காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சச்சார் கமிட்டி ஒரு உண்மையை உணர்த்தியிருக்கிறது. அதாவது இந்த நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களின் பல்வேறு முனைகளில் இஸ்லாமியர்களது நிலை தலித்துகளைப் போல அல்லது தலித்துகளைவிடவும் கீழ்நிலையில் இருக்கிறது என்பதே அது. இங்கேதான் தலித்துகளையும் இஸ்லாமியரையும் இணைத்தும் பகுத்தும் பார்க்கும் தேவையேற்படுகிறது.பார்ப்பனீய மேலாதிக்கவாதத்தின் வர்ணாசிரம- சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு வடிவமாக இஸ்லாத்தை தழுவியர்களே இந்திய முஸ்லிம்களில் பெரும்பான்மையோர். இந்த உண்மையை மறைத்து, இந்தியாவில் இருக்கிற எல்லா இஸ்லாமியரையும் வெளியே இருந்து படையெடுத்துவந்த இஸ்லாமிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கற்பிதம் செய்வித்தும், வாள்முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் என்று பாசாங்காய் கருணை காட்டியும் இந்துத்வவாதிகள் கிளப்பிவிடும் தேசியவெறி உலகப் பிரசித்தமானதுதான். இந்த பிரச்சாரத்தின் நோக்கம், எஞ்சியுள்ள தலித்துகளை தங்கள் பிடிக்குள்ளேயே நிறுத்திவைப்பதுதான்.3.இந்தியப் பூர்வகுடிகளாகிய நாகர்களும், வெளியே இருந்து நெடுங்காலத்திற்கு முன்பே வந்துவிட்ட த்ரேனியர்களின் வழித்தோன்றல்களாகிய திராவிடர்களும் இணைந்து உருவாக்கி நிலைபெற்றுவிட்ட ஒரு நாகரீக சமூதாயத்திற்குள் ஆரியர்களின் நுழைவு ஏற்படுத்திய மாற்றங்கள் இங்குள்ள எல்லா பேதநிலைகளுக்கும் வழியமைத்தது. நிற, இன, மொழி துவேஷங்களின் வழியாக தமது தனித்துவத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆரியர்களின் பதைப்பில் உருவான தீட்டு- புனிதம், உயர்வு-தாழ்வு, நல்லது-கெட்டது என்ற கருத்தாக்கங்களின் இறுகிய வடிவமாக வர்ணாசிரமக் கோட்பாடு உருவானது. வேதத்தின் முதன்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களும், போரில் தோற்றவர்களும், அடிமைகளும் வர்ணத்துக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டனர். வர்ணபேதங்களை எதிர்த்துப் போராடிய பௌத்தம் வீறுகொண்டெழுந்தபோது கட்டுக்குள் நிறுத்தப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், புஷ்யமித்திர சுங்கனின் கொலைச்செயல்களின் மூலம் மீண்டும் வெறிபிடித்தெழுந்தது. இப்போது அவர்ணர்களின் பட்டியலுக்குள் பௌத்தர்களும் நெட்டித் தள்ளப்பட்டனர்.இருந்தபோதும் வர்ணப்பிரிவினையில் உள்ள நெகிழ்வுத்தன்மைகள் தூயத்துவத்தைக் காப்பாற்றுவதற்கு தடையாக இருந்தது. எனவே மேல்கீழ் மற்றும் கிடைமட்ட பரிவர்த்தனைகளை முற்றாக விலக்கிவிட்ட மேலும் இறுகிய வடிவமாக சாதி உருவானது. இந்த சாதியக் கட்டமைப்பிலும் பார்ப்பன மேலாதிக்கமே நிலைநிறுத்தப்பட்டது. வர்ண அமைப்புக்குள் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்ணகளுடன், சாதிக்கலப்பால் உருவான பிரதிலோம சாதி என்ற தொடத்தகாத சாதிகளும் இணைக்கப்பட்டு தீண்டத்தகாத சாதிகளின் பெருந்தொகுப்பு உருவாக்கப்பட்டது.பார்ப்பனருக்கு பிறசாதியினர் அனைவருமே தீண்டத்தகாதவர்கள். பிறசாதியினர் ஒவ்வொருவருக்கும் தம்மைத்தவிர மற்றவையனைத்தும் தீண்டத்தகாதவை. தீண்டாமைக்கு உள்ளான சாதிகள் இந்த ஒடுக்குமுறைக்கும் ஒதுக்கிவைப்புக்கும் எதிராகத் திரண்டுவிடாதபடி ஒவ்வொரு சாதியும் உட்சாதிகளாக சிதறடிக்கப்பட்டது. இந்த உட்சாதிகளுக்குள் நிலவும் இணக்கமற்றத் தன்மைகளுக்கும் மோதல்களுக்குமான நியாயமும் தத்துவபலமும் பார்ப்பனர்களாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் வழங்கப்பட்டன.ஒருசாதி, இன்னொரு சாதியைக் கண்காணிப்பதாகவும் கட்டுப்படுத்துவதாகவும் இருப்பதால் இவற்றுக்கு ஒடுக்கப்படுகிறோம் என்ற அவமானவுணர்வும், ஒடுக்குகிற அதிகாரம் பற்றிய பெருமிதவுணர்வும் ஒருங்கே வாய்த்தன. எல்லாவற்றுக்கும் கீழே- எல்லோராலும் ஒடுக்கப்படுகிவர்களாக- தாம் ஒடுக்குவதற்கு தமக்குக் கீழே யாருமற்றவர்களாக- தன்மீதான சகல ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுவித்துக் கொள்வதற்கு முன்னிபந்தனையாக ஒட்டுமொத்த சாதியமைப்பையும் தகர்த்தெறிய வேண்டியவர்களாக தலித்துகள் மாறிய நெடிய வரலாறு இன்னும் விரிவாக பேசப்பட வேண்டியுள்ளது.சமூகத்தின் இயற்கை வளங்களிலும் வழிபாட்டுத்தலங்களிலும் பொதுஇடங்களிலும் நிதியாதாரத்திலும் பண்பாட்டு நடவடிக்கைகளிலும் தமக்கான பங்கைக் கோரி தலித்துகள் மேலெழுந்துவிடாதிருக்கும் பொருட்டு கடும் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து தலித்துகள் நடத்தியப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டில் புதிய கட்டத்தை எட்டியது. பிரிட்டிஷ் ஆட்சியில் - பல்வேறு உள்நோக்கங்கள் இருந்தபோதிலும்- தலித்துகள் பொதுவெளிக்கு வருவது சாத்தியமாகியது. அவர்கள் பிரிட்டிஷாரின் ராணுவப் படைகளில் சேர்ந்து ஆயுதம் ஏந்தியதன் மூலம் புதிய மனவலிவைப் பெற்றனர். (பிறசாதியினரும் ராணுவத்தில் சேர்ந்த பிறகு- அவர்களது சாதியுணர்வுக்குப் பணிந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தலித்துகளை சேர்க்க தடையுத்தரவு பிறப்பித்து நீண்ட காலத்திற்கு அமல்படுத்தியதையும் இங்கே நினைவிற் கொள்ள வேண்டும்)சமூகவாழ்வின் எல்லா முனைகளிலும் ஒதுக்கிவைக்கப்பட்ட தலித்துகளை, அவர்களைப் போலவே மாட்டுக்கறி உண்கிற மிலேச்சர்களான வெள்ளையர்கள் தமது சமையல்காரர்களாகவும் பங்களா உத்யோகஸ்தர்களாகவும் சேர்த்துக்கொண்டதன் உடன்விளைவாக நிகழ்ந்த மாற்றங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. அதாவது ஆட்சியாளர்களின் அருகில்- அதிகாரத்திற்கு அருகே- அது சமையல்கட்டு என்றாலும்- பொதுவெளியில் தலித்துகள் புழங்குவதற்கான வாய்ப்பு உருவாகியது.தன் சொந்தத் தேவைகளின் பொருட்டு அரசு கல்வியை ஜனநாயகப்படுத்தியது. ஆனால் கிறிஸ்தவ இறைப்பணியாளர்களின் மிஷனரிகளும் அரசும் திறந்த கல்விச்சாலைகளுக்குள் நுழைய தலித்துகள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. பெண்களுக்கும் இதேநிலைதான். பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கிய முதல் இந்தியர்கள் மகாத்மா ஜோதிராவ் பூலேவும் அவரது துணைவியார் சாவித்திரியும். அவர்கள் தொடங்கிய கல்விச்சாலை அன்றிரவே கொளுத்தப்பட்டது. தமக்கென்று ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவுவதற்கான இடத்தையும் நிதியையும் அகமத்நகர் தலித்துகள் திரட்டிக் கொடுத்த பிறகும் உயர்சாதிக்காரர்களின் நிர்ப்பந்தத்தால் பள்ளிக்கூடம் திறக்க அரசாங்கம் மறுத்துவிட்ட நிலைமை 1850களிலும் நீடித்ததை அம்பேத்கர் பிறிதொரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறார். மீறி படிக்க வந்த இடங்களில் தலித்துகள் மீது எவ்வளவு பாரபட்சங்கள் காட்டப்பட்டன என்பதின் சாட்சியாக அம்பேத்கரின் வாழ்க்கை விரிந்துகிடக்கிறது.தடைகளை மீறி தலித்துகளிலிருந்து கல்வி பெற்ற ஒரு பகுதியினர் உருவாகி வந்த போது அவர்கள் தமது சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையின் வரலாற்றை முன்வைத்து சிறப்புரிமைகளைக் கோரினர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஸ்தலஸ்தாபன நிர்வாகத்திலும் (அதிகாரத்திலும்) பங்கு கேட்டனர். மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களை இந்துமதத்திலிருந்து விலக்கிக் காட்டி தனிப்பிரிவாக வெளிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்துமதத்தின் ஒருபகுதியாக வலிந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு இந்தமத வழிபாட்டுத்தலங்களில் உரிமை வேண்டும் என்று கோரியதோடு நிற்கவில்லை தலித்துகள். நாசிக் காலாராம் கோவிலுக்குள் அம்பேத்கர் தலைமையிலும், வைக்கத்தில் பெரியார் தலைமையிலும் நடந்ததைப் போல நாடு முழுவதும் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். மகத் நகரின் சௌதார் குளத்தில் இறங்கியதைப் போல நாட்டின் பல்வேறு நீர்நிலைகளில் அவர்கள் பருகத் தொடங்கினர்.முதலில் உயர்சாதியினரிடம் கவனஞ் செலுத்திய கிறிஸ்தவம் பிற்பாடு அடித்தட்டு மக்களை நோக்கி பரவத் தொடங்கியபோது, இந்துமதத்தின் பிடியிலிருந்து வெளியேறும் வழியாக தலித்துகள் கிறித்துவத்தைத் தழுவினர். அங்கும் இவர்கள் சமமாக நடத்தப்படவில்லை. இந்துமதத்தின் நச்சுக்கிருமியான சாதி கிறிஸ்தவத்திலும் விஷம் பாய்ச்சியிருந்தது. ஆகவே கிறிஸ்தவத்திற்குள்ளும் சமத்துவத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் தலித்துகள் போராட வேண்டிய நிலை இன்றளவும் நீடிக்கிறது.சோழராட்சிக் காலத்திலேயே குடவோலை முறை மூலம் ஜனநாயகப்பூர்வமாக தேர்தலை நடத்திய நாடு எங்களுடையது என்ற மோசடியான பெருமிதங்கள் நிறைய இங்குண்டு. அதிலே யாரெல்லாம் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்ற விவரங்களைச் சொல்வார்களேயானால் அது எந்தளவிற்கு ஜனநாயகமானது என்பதும் அம்பலப்பட்டுப்போகும். பிரிட்டிஷார் காலத்திலும் அதுதான் நடந்தது. கல்வியையும் சொத்தையும் வாக்களிப்பதற்கான அடிப்படைத் தகுதிகளாக இடம்பெற வைத்ததன் மூலம் புதியதாக உருவாகி வந்த அதிகாரமையங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முற்பட்ட சாதியினர் வெற்றியடைந்தனர். வர்ண- சாதிய விதிகளின்படி தலித்துகளை சொத்தில்லாதவர்களாகவும், கல்வி பெற முடியாதவர்களாகவும் ஒடுக்கிவைத்துவிட்டு- அதன்பேராலேயே வாக்குரிமையும் மறுக்கப்படுவதை எதிர்த்தும் தலித்துகள் போராட வேண்டியிருந்தது.வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற கோரிக்கையை எழுப்பியதன் மூலம் தலித்துகளுக்கு மட்டுமல்லாது தலித்துகளை ஒடுக்குகிற பிறசாதியனருக்கும் கூட அம்பேத்கர்தான் வாக்குரிமையைப் பெற்றுத் தந்தார். வாக்காளர்களாவதற்கும், போட்டியிடுவதற்கும், போட்டியிட்டு வெற்றிபெற்றால் தொடர்ந்து உயிரோடு இருப்பதற்கும் தலித்துகள் போராடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்பதை மேலவளவுப் படுகொலையும் பாப்பாப்பட்டி உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்துகளும் நமக்கு உணர்த்துகின்றன.எல்லா அரசாங்க வேலைகளும் பார்ப்பனர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் அடிப்படையான உடைவை ஏற்படுத்தும் பொருட்டு இடஒதுக்கீடு- மறுபங்கீடு என்ற கோரிக்கையை தலித்துகளே முதலில் முன்வைத்தனர். பின் அது பிற்படுத்தப்பட்டவர்களின் கோரிக்கையாகவும் மாறி பார்ப்பன ஏகபோகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது இந்த நாட்டின் சமூகநீதி வரலாறாகத் திகழ்கிறது.இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருப்பதாக காந்திஜி கூறினார். அவரால் பெரிதும் விதந்தோதப்பட்ட அந்த ஆன்மா சாதியத்தால் தாக்குண்டு அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. கிராமப்புற உடைமைச் சாதிகள் தலித்துகள் மீது கட்டவிழ்த்துவிட்ட தாங்கொணாக் கொடுமைகளை எதிர்த்தப் போராட்டம் செங்கொடி இயக்க வரலாறாக பரிணமித்துள்ளது. சாணிப்பாலும் சவுக்கடியும் பாலியல் வன்முறைகளும் படுகொலைகளுமாக தலித்துகள் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடியே இன்று ஓரளவுக்கு கண்ணியமான வாழ்க்கையை கிராமப்புற தலித்துகள் எட்டியுள்ளனர். ஆனாலும் உத்தப்புரங்களும் திண்ணியங்கÙம் கயர்லாஞ்சிகளும் ஒழிந்தபாடில்லை.இவ்வாறு வாழ்வின் எல்லா நிலைகளிலும் நிராகரிக்கப்பட்ட தலித்துகள் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைக் கட்டி அதன் வழியாக தொடர்ந்து அழுத்தங்களை உருவாக்கி தங்களது கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளனர். இருந்தபோதும் இன்றளவும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு தலித்துகளை கீழ்ப்படுத்தவே முற்பட்ட வகுப்பினர் முயற்சித்து வருகின்றனர்.இந்துமதத்தின் பிடியிலிருந்து வெளியேறாதவரை சாதியிழிவும் தீண்டாமையும் தொடரவே செய்யும் என்பதால் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதையும் பிற மதங்களைத் தழுவுவதையும் ஒரு போராட்ட வடிவமாகவே தலித்துகள் கைக்கொண்டுள்ளனர். தலித்துகளின் மீதான தங்களது பிடி இறுகுவதை சகித்துக்கொள்ளாத இந்துத்வவாதிகள்- தலித்துகள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடு உரிமையையே ஒரு துருப்புச்சீட்டாக வைத்து அச்சுறுத்துகின்றனர். பிறமதத்திற்கு செல்லும் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று இந்த அச்சுறுத்தல்களையும் மீறி மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.நேற்றுவரை டாய் என்றவர்கள், இன்று பாய் என்று அழைக்கிறார்கள் என்கிறபோது ஏற்படுகிற மனநிலை மிக முக்கியமானதாக தலித்துகளால் உணரப்படுகிறது. ஆகவே இஸ்லாத் மீது தலித்துகளுக்குள்ள ஈர்ப்பை தணிப்பது- முடிந்தால் ஒழித்துக்கட்டுவது என்பதில் இந்துத்துவம் கவனங் குவித்துள்ளது. அதன்பொருட்டே இஸ்லாத்தை ஒரு பயங்கரவாதிகளின் தத்துவமாக முன்னிறுத்தும் அமெரிக்க பயங்கரவாத ஆட்சியாளர்களுடன் அது வெளிப்படையாகவே கைகோர்த்து நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த ‘புனிதக்கூட்டின் இளையப் பங்காளி’களான இந்துத்வாவினர்- ஏகாதிபத்தியம் முன்வைக்கிற உலாகளாவிய ஒற்றைப் பண்பாட்டைப் போலவே- இவர்களும் ஒரு ஒற்றைத் தேசிய பண்பாட்டை முன்வைக்கின்றனர். சமூகத்தின் பன்முகத்தன்மையை ஒழித்துக் கட்டுவதன் மூலம் ஏகத்துவமான ஒரு மதவாதத்தை இங்கே நிறுவும் அவர்களது கனவுகளைத் தகர்ப்பது தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்கும் முதற்கடமையாகிறது.தலித்துகள் தொடர்ந்து போராடி பல்வேறு உரிமைகளை அடைந்திருந்த போதிலும் அவர்கள் மீதான தீண்டாமை மற்றும் புறக்கணிப்பு, உரிமை மறுப்பு ஆகியவை தொடரத்தான் செய்கின்றன. அதை எதிர்த்த தலித்துகளின் போராட்டம் தொடர்கிறது. சச்சார் கமிட்டி அறிக்கை இஸ்லாமியர்களின் நிலையும் தலித்துகளின் நிலையும் கிட்டதட்டட சமநிலையில் முடக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இவ்விரு சமூகங்களும் ஒன்றிணைவது அவசியமாகிறது.இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், பார்ப்பனீய மேலாதிக்கக் கனவில் முன்வைக்கப்படும் இந்துத்வாவை எதிர்கொள்ளவும், பெரும்பான்மை மதவாதத்திற்குள் இந்திய அரசு எந்திரம் மூழ்கிப் போய்விடாமல் ‘மதச்சார்பற்ற அரசு’ என்ற அரசியல் சாசன வாசகங்கள் மெய்ப்பிக்கப்படவும் இந்த ஒற்றுமை அவசியமாகிறது. சரியான தலைமைகளால் அணிதிரட்டப்படாத போது தலித்துகளில் ஒருபகுதியினர்- தங்களைப்போலவே ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் இஸ்லாமியரைத் தாக்க மதவெறியர்களால் பயன்படுத்தப்பட்டதை குஜராத்தில் நேடிரயாகக் கண்டோம். எனவே இந்துத்துவத்திற்கு எதிராக- அதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வழங்குகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தலித்- இஸ்லாமியர் ஒற்றுமை அவசியமாகிறது.ஆனாலும் சாதி- மத அடிப்படையிலான உறவுகள் சில தற்காலிக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே உதவும் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அவரவரது தனித்தன்மைகளை அங்கீகரித்து இணங்கி வாழும் ஒரு சமூகத்திற்கான விழைவையே நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.(‘‘தலித் எழுச்சியும் தலித்-இஸ்லாமிய எழுச்சியும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம்)- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
Tuesday, March 24, 2009
ஹரிஜன் தினம்: தலித் அரசியல் தோல்வியை கொண்டாடிய காந்தி கோ. ரகுபதி
உலக அளவில் கொண்டாடப்படுகின்ற குறிப்பிட்ட தினங்களுக்கும், (உழைப்பாளர் தினம் மற்றும் மகளிர் தினம்) தேசிய அளவில் கொண்டாடப்படுகின்ற, சுதந்திர தினத்திற்கும் வரலாற்றுப் பின்னணி உள்ளீடாக இருப்ப தனைக் காணலாம். வர்க்க, பாலியல், சாதிய, இன, மத வகைப்பட்ட -ஒடுக்குமுறைக்கெதிரான சம்பந்தப்பட்ட மக்கட்பிரிவினரின் உக்கிரமான போராட்டம் அதனால் கிடைக்கப் பெற்ற விடுதலை - இவ்வரலாறே அந்த உள்ளீடு. இந்தியாவில் 1930களில் ''ஹரிஜன தினம்'' கொண்டாட்டம் காந்தியால் தோற்றுவிக்கப்பட்ட ஹரி ஜன சேவா சங்கம் என்ற அமைப்பின் மூலம் தொடங்கப் பட்டிருக்கிறது; ஆனால் சிலவருடங்கள் கழிந்த பின்னர் அக்கொண்டாட்டம் காணாமல் போய்விட்டது. எனவே, ஹரிஜன் தினம் உருவான வரலாறு, அதன் அரசியல் பின்புலம், அத்தினம் கொண்டாடப்பட்ட விதம், அதற் கும் தலித்துகளுக்கும் இருந்த உறவு போன்றவற்றை கட்டுரை ஆராய்கிறது.ஹரிஜன் தினம் உருவான பின்னணி:ஹரிஜன் தினம் முதன்முதலாக 18 டிசம்பர் 1932ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.(*1) இதற்கு சிலமாதங்களுக்கு முன்னர், தலித்துகள் மட்டுமே வாக்களித்து தங்கள் பிரதி நிதிகளை தேர்வு செய்து கொள்வதும், மேலும் பொதுத் தொகுதியில் வாக்களிக்கும் உரிமையும் என தலித்து களுக்கு வழங்கப்பட்டிருந்த இரட்டை வாக்குரிமையை அபகரிப்பதற்கு காந்தி நடத்திய சுயவன்முறைத்தன்மை கொண்ட உண்ணாவிரதம்; அதன் விளைவால் அவ்வுரிமை பறிக்கப்பட்டது என இந்த அரசியல் பின்புலத்திலிருந்தே ஹரிஜன் தினம் உருவான சூழலினை புரிந்து கொள்ளவேண்டும். தலித்துகள் அனைவராலும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்பேத்கரால் தலித் விடுதலைக்கு வட்டமேசை மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வயது வந்தோருக்கான வாக்குரிமை காலனிய ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டதால் அவர் ஓதனிவாக்காளர் - முறை என்ற அரசியல் கோரிக்கையினை வலியுறுத்தினார். (*2) இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 1932ம் ஆண்டு தலித்துகளுக்கு வழங்கப்பட்டிருந்த வகுப்புவாரி அரசியல் உரிமையின்படி தலித்துகளே தலித் பிரதிநிதிகளை தேர்வுசெய்து கொள்ளலாம், மேலும் பொதுத்தொகுதியிலும் வாக்களிக்க முடியும். (*3) தலித்துகளே தலித் பிரதிநிதிகளை தெரிவு செய்துகொள்ளும் முறை எந்த அளவுக்கு அம்மக்களுக்கு சாதகமானது என்பதை அறிந்து கொள்வதற்கு சென்னை மாகாண அவைக்கு நியமனம் செய்யப்பட்ட தலித் பிரதிநிதிகளின் (இவர்கள் மேற்குறிப்பிட்ட முறையில் தேர்வு செய்யப் பட்டிருக்கவில்லை எனினும்) செயல்பாடுகளை ஊன்றி கவனித்தல் அவசியம், இதனை பின்னர் காண்போம். தலித்துகளுக்கு வழங்கப்பட்டிருந்த இந்த அரசியல் உரிமையினை தட்டிப்பறிப்பதற்கு, அம்மக்களின் எந்த விதமான கோரிக்கைக்கும் ஒருபோதும் உண்ணாவிரதம் மேற்கொண்டிராத, அவர்களுக்கென தனி அமைப்புகள் அதுவரை ஏற்படுத்தியிராத(*4) ஆனால் "தீண்டப்படாத மக்களுக்கு" அயராது உழைத்தார் என்று இன்றளவும் நம்பப்படுகின்ற காந்தி, இரட்டை வாக்குரிமை முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சுயவன்முறையை 20 செப்டம்பர் 1932ம் ஆண்டு தொடங்கினார். (*5) காந்தியின் -தன்னைத் தானே வருத்திக்கொண்டு பிறரை நிர்ப்பந் திக்கும் சுயவன்முறைத்தன்மை கொண்ட- உண்ணா விரதத்தின் விளைவால் 25 செப்டம்பர் 1932 புனா ஒப்பந்தம் உருவானது. அதன்படி மாகாண சட்டமன்றங் களில் பொதுத்தொகுதி இடங்களிலிருந்து தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான தேர்தல் கூட்டு வாக்காளர் தொகுதிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட் டது. இதில் தலித்துகளுக்கு ஒரு வாக்கு மட்டுமே வழங்கப்பட்டது. (*6) தலித்விடுதலைக்கு அம்பேத்கர் முன்வைத்த, தலித்துகள் தங்கள் பிரதிநிதிகளை தாங்களே தேர்வு செய்கிற முறை காந்தியின் நிர்ப்பந்தத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டதால் காந்திக்கும் காங்கிரஸூக்கும் எதிராக தலித்துகளின் பகைமை அதிகரித்தது. இச்சூழ்நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி காந்தியின் முயற்சியால் பம்பாயில் அகில இந்திய தீண்டாமை எதிர்ப்புக் கழகம் உருவாக்கப் பட்டது. (*7) அது தீண்டப்படாதோருக்கான சேவைக்கழகம் என்று காந்தியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது, பின் னர் ஹரிஜன சேவா சங்கம் என்று அவராலேயே மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. (*8) மேலும், ஹரிஜன் என்ற இதழும் இக்காலக்கட்டத்தில் உருவாக்கப்பட் டது. ஹரிஜன் சேவா சங்கத்தின் தோற்றத்தினை அம்பேத்கரின் மொழியில் பின்வருமாறு கூறலாம்:(*9) ''ஹரிஜன சேவா சங்கம் என்பது பெயரளவில்தான் ஓர் அறச்சிந்தனை அமைப்பே தவிர, மற்றபடி தீண்டப்படா தவர்களை இந்துக்களுக்கும் காங்கிரசுக்கும் பாதசேவை செய்பவர்களாக ஆக்குவதும், இந்துக்களது சமூக, சமய, பொருளாதார, அரசியல் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் நோக்கத்தோடு அவர்கள் தொடங்கும் எந்த இயக்கத்தையும் முளையிலேயே கிள்ளியெறிவதும்தான் சங்கத்தின் உண்மையான குறிக் கோளாகும்''. அம்பேத்கரின் இக்கூற்றுக்கு காந்தியின் செயல்பாடே ஆதாரமாக இருப்பதனைக் காணலாம்.காந்தி இரட்டை வாக்குரிமையை மட்டுமின்றி அவர் தோற்றுவித்த ஹரிஜன் சேவா சங்கத்திலும் நிர்வாக அமைப்பில் தலித்துகளை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டதனை சோஷியல் ரிபார்மர் பத்திரிகை எழுதியுள்ளது. (*10) காந்தியின் இந்நிலைப்பாடு “சமூக சீர்திருத்தச் செயல் பாட்டிற்கே முரணானது” என்று அப்பத்திரிகை கூறியிருப்பது தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கையில் காந்தியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறது. (*11) காந்தி, இரட்டைவாக்குரிமையை மறுத்ததற்கும் ஹரிஜன சேவா சங்க நிர்வாகத்தில் பொறுப்பு வழங்க மறுத்ததற்கும் வேற்றுமை இல்லை; அதிகாரப் பொறுப்பில் தலித்துகள் இருப்பதை காந்தி விரும்பியிருக்கவில்லை. மாறாக, அம்பேத்கர் கூறியதுபோல் தலித்துகளை ''இந்துக்களுக் கும் காங்கிரசுக்கும் பாதசேவை செய்பவர்களாக ஆக்கு வதற்குத்தான்'' அவர் விரும்பினார் என்பதனை மெய்ப்பிப்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை.இந்த பின்புலத்தில் ஹரிஜன் சேவா சங்கம், ஹரிஜன் பத்திரிகை, ஹரிஜன் தினம் ஆகியவற்றின் தோற்றத்தை ஆராய்கிறபொழுது அது தலித்துகளின் பாதுகாப்பிற்கு கிடைத்த இரட்டை வாக்குரிமை என்னும் அரசியல் ஆயுதம் காந்தியால் தட்டிப் பறிக்கப்பட்டதன் மேல் கட்டியெழுப்பப்பட்டிருப்பதனைக் காணமுடிகிறது. உழைப்பாளர், மகளிர் தினம்போல் ஹரிஜன் தினம் போராட்டத்தினால் விளைந்தது அல்ல. மாறாக, அது சம்பந்தப்பட்ட மக்கள் பிரிவான தலித்துகளின் அரசியல் தோல்வியை கொண்டாடுவதற்கு, அம்மக்களின் வாழ்க் கையைப் பற்றி எதனையும் தெரிந்திராத, புரிந்திராத தலித்துகளுக்கு அந்நியரான, காந்தியால் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இரட்டைவாக்குரிமையை தட்டிப் பறித்த காந்தியே "ஹரிஜன் தினம்" என்று தலைப்பிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:(*12) ''தீண்டப்படாதாருக் கான சேவைக்கழகம் இந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதியை ஹரிஜன தினமாக அறிவித்திருக்கிறது. இது, பூனா ஒப்பந்தம் என்று தவறாக அழைக்கப்படுகிற எரவாடா ஒப்பந்தத்தின் ஆண்டு விழாவாகும். இந்நாள் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமையாகவும் இருப் பதால் மகிழ்ச்சி''. காந்தியின் “எரவாடா” சிறை/பூனா ஒப்பந்தமே தலித்துகளின் இரட்டை வாக்குரிமையை குழிதோண்டி புதைத்துவிட்டு அதனை கொண்டாடுவதற்கு ஹரிஜன் தினம் என்று பெயரிடப்பட்டதற்கு அவரே சாட்சியாயிருக்கிறார். காந்தியின் இச்செயல் எழுப்பும் கேள்விகள் இதுதான்: தலித் சுதந்திரத்திற்கு கிடைத்த அரசியல் ஆயுதமான இரட்டை வாக்குரிமை காந்தியால் தட்டிப் பறிக்கப்பட்டதால் நிச்சயமற்ற எதிர்காலம் உருவாகியிருப்பதனை உணர்ந்து பதற்ற நிலையிலிருந்த தலித்துகளிடத்தில் இனிப்பு கொடுத்து ஹரிஜன் தினம் கொண்டாடிய காந்தியை எவ்வாறு மதிப்பிடுவது? தலித் துகளின் வேதனையை, நிச்சயமற்ற நிலையினை கொண்டாடிய காந்தியின் உள்ளக்கிடக்கையை என்னவென்று கூறுவது? இதற்குப் பொருள் என்ன? மனிதநேயமா? தீண்டாமை ஒழிப்பா? இதுதான் ஹரிஜனங்களின் மீதான கரிசனமோ?ஹரிஜன் தின கொண்டாட்டம்:ஹரிஜன தினத்தை, காந்தியின் காலம் அவருக்குப் பிந்தைய காலம் என இரண்டு கட்டமாகவும், மேலும் அத்தினத்தின் நிகழ்ச்சி நிரல், அதனை செயல்படுத்துதல் என இரண்டுவிதமாக பாகுபடுத்தி புரிந்து கொள்வோம்.காந்தியின் காலம்: முதன்முதலில் கொண்டாடப்பட்ட ஹரிஜன் தின நிகழ்ச்சியில் திருப்தியடையாத காந்தி அதற்குப் பின்னர் அத்தினத்தின் நிகழ்ச்சி நிரலுக்கான எல்லையினை வடிவமைத்து ஹரிஜன் இதழில் அறிவித்தார்; அது பல இதழ்களிலும் இடம் பெற்றிருப்பதால் அதனை இங்கு தொகுத்துக் கொள்வோம்; இது ஹரிஜன் தினத்தின் இலக்கினை விளங்கிக் கொள்வதற்கு உதவி புரியும். காந்தி வடிவமைத்த நிகழ்ச்சிநிரல் பின்வருமாறு:1.ஹரிஜன் தினம் விடியற்காலை 5 மணிக்கு வழிபாட்டுடன் தொடங்கப்பட வேண்டும் மற்றும் தன்னுடைய தகுதிக்கேற்ப பணம் அல்லது ஆடை அல்லது தானியத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். ஏழ்மை நிலையிலிருக்கும் மக்கள் எவ்வித மனவருத்தமுமின்றி தன்னுடைய ஒருநேர உணவினை உண்ணாமலிருப்பதன் மூலம் அல்லது அவ்வுணவில் ஒருபகுதியை ஒதுக்குவதன் மூலம் இதனை செய்ய இயலும். நன்கொடைகள் பணமாக மாற்றப்பட வேண்டும், அது நடைபெற இயலாத இடங்களில் அப்பொருட்களை மிகவும் தேவைப்படும் ஹரிஜனங்களுக்கு கொடுக்கவும்.2.பங்கியின்(*13) வேலையை செய்யவேண்டும், குறைந்தபட்சம் அவரோடு பங்கேற்க வேண்டும். இது பங்கி செய்யும் பணியை ஒருவர் உணர்ந்து கொள்வதற்கு உதவும், மேலும் அதுபோன்ற பணிகளைச் செய்வதற்கு ஒரு முன்னேறிய வழியை காண்பதற்கு உதவும்.3.இவ்விரு பணிகளைச் செய்து முடித்தப் பின்னர் அத்தினத்தில் பங்கேற்பதற்கு நாம் தயாராவோம்; அது வீடுவீடாய் பணம் அல்லது பொருள் வசூலிப்பதன் மூலம் தொடங்கப்பட வேண்டும். இப்பணியை ஒருமணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும். இப்பணம் உள்ளூர் அமைப்பு வழியாக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். வசூலில் ஈடுபடுபவர்கள் பிரசுரங்களையும் ஹரிஜன் இதழையும் விநியோகிக்கவும்.4.ஹரிஜன குடியிருப்புகளை பார்வையிடல், சுத்தம் செய்தல், ஹரிஜனங்களை சந்தித்தல் மற்றும் அவர்களின் தேவைகளை குறித்துக் கொள்ளுதல், தீண்டாமையை விலக்குதலில் அவர்களையும் பங்கேற்கும்படி அறிவுரை கூறல், மாமிச உணவை விட்டுவிடக் கூறுதல், ஹரிஜன குழந்தைகளை சுற்றுலா அழைத்துச்செல்லல், சுகாதாரமுறையை செயல்படுத்தல்5.தீண்டாமையை விலக்குதல் மற்றும் கோயில் நுழை விற்கான தீர்மானத்தை ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் சவர்ணர்களும் ஹரிஜனங்களும் பங்கேற்கச் செய்து அதனை நிறைவேற்றுதல்6.பொதுக்கருத்து சாதகமாக இருக்கும் பகுதியில் பொதுக்கிணறும் தனியார் கோவில் களும் ஹரிஜனங்களுக்கு திறந்துவிடுதல்.(*14)7.தனிநபர் களும் சமூகமும் அவர்களின் கையிருப்பினை தீண்டா மையை விலக்குவதற்கு உதவுதல்.8.ஹரிஜனங்களும் அவர்களின் கையிருப்பினைக் கொடுத்தல். தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளுதல், இதன்மூலம் இந்து மதத் தினைச் சுத்தப்படுத்துதல். (*15)மேலும், 24 செப்டம்பர் 1933 ஹரிஜன் தினம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தீண்டப்படாதோருக்கான சேவைக் கழகத்தின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.இங்கே,மேலே குறிப்பிடப்படாமலிருக்கும் அறிவிப் பினை மட்டும் காண்போம்.1.இந்த ஆண்டு செய்து முடித்த காரியங்களை பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தல்2. ஹரிஜன மற்றும் இதர குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல், கிணறு, கோயில், சாலை இதில் எதையாவது ஒன்றினை ஹரிஜனங்களுக்கு திறந்துவிடுவதற்கு ஏற்பாடு செய்தல்.(*16)காந்தி வடிவமைத்திருக்கும் ஹரிஜன் தின நிகழ்ச்சிநிரல் தலித்துகளை இந்துமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டி ருப்பதும் அவர்களை வெறும் யாசிப்பவர்களாகவே அணுகியிருப்பதும் மிகத்தெளிவு. பங்கியோடு அவர்களு டைய வேலையை பகிர்ந்துகொள்வதன் மூலம் பங்கி யின் பணியைத் தான் உணர்ந்து கொள்வதற்கு கூறியிருக் கிறாரே தவிர பங்கிகளின் மொத்த வாழ்க்கையையும் புரிந்து கொள்வதற்காக அல்ல. பொது நீர்நிலைகள், சாலைகள், தபால் அலுவலகம், பேருந்து போன்ற வற்றை சாதி, மத, நிற வேறுபாடின்றி பயன்படுத்திக் கொள்வதற்கு 1924ம் ஆண்டு காலனிய ஆட்சியினரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.(*17) இருப்பினும், அரசாங்க சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சாதி இந்துக்கள் பொதுச் சொத்துக்களை தலித்துகள் பயன்படுத்துவதை தடுத்து வந்தனர். காந்தி ஹரிஜன் தின கொண்டாட்ட நாளில் ''வாய்ப்பு இருக்கும் இடத்தில் மட்டும்'' பொதுச் சொத்துக்களை தலித்துகள் பயன்படுத்திக் கொள்வதற்கு திறந்துவிடுங்கள் என்று தனது ஊழியர்களுக்கு அறிவுறுத் துகிறார். இது அறிவுரை மட்டுமல்ல அதுதான் விதியாகவும் பின்வருமாறு இருந்திருக்கிறது:(*18) ''தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதிலும், எல்லாப் பொதுக் கிணறுகளையும், தர்ம சத்திரங்களையும், சாலைகளையும்... தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடுவதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதிலும் எத்தகைய நிர்ப்பந்தத்தையோ, வன்முறையையோ பயன்படுத்தக் கூடாது''. இங்கு எழுகின்ற கேள்விகள் இதுதான்: இரட்டை வாக்குரிமையை தட்டிப்பறிப்பதற்கு காந்தி செயல்படுத்திய உண்ணாவிரதம் என்ற சுயவன்முறை ஆயுதத்தை, தலித்துகள் பொதுச்சொத்துக்களை சட்டரீதி யாக பயன்படுத்திக்கொள்ள தடையாக இருந்துவரும் சாதி இந்துக்களுக்கு எதிராக அவர் செயல்படுத்தாதது ஏன்? பொதுச்சொத்துக்களை தலித்துகளுக்கு திறந்துவிடு வதில் பொதுக்கருத்து சாதகமாக இருக்கவேண்டுமென காந்தி எதிர்பார்த்தது ஏன்? இரட்டை வாக்குரிமையில் தலித்துகளின் பொதுக்கருத்து மட்டுமல்லாது பிறரது கருத்தும் அதற்கு சாதகமாக இருந்தபோது காந்தி மட்டும் அதற்கு எதிராக இருந்தது ஏன்? காந்தி வடிவமைத்த ஹரி ஜன் தின நிகழ்ச்சிநிரல் அவருக்கு தலித் ''முன்னேற்றத் திற்குக்கூட'' பாடுபட வேண்டும் என்ற உண்மையான இலக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை மாறாக, அதற்கு உள்நோக்கம் இருந்திருக்கிறது என்பது தெளிவு.இனி, தலித் மாணவர்களை தங்களோடு இணைத்துக் கொண்டு ஹரிஜன ஊழியர்களால் ஹரிஜன் தின நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்பட்ட விதத்தினை பின்வருமாறு தொகுத்துக் கொள்வோம்: குழந்தைகளை விளையாட வைத்தல்; பாடல் சொல்லிக் கொடுத்தல், குழந்தைகளை வரிசையாக நிற்கவைத்து அவர்களில் மிகவும் சுத்தமான நான்குபேரை ஒரு குழந்தை மூலம் தேர்வு செய்து பின்னர் அதில் அழுக்கானவர்களை சுட்டிக்காட்டி கண், காது, பல் மற்றும் உடுப்பு இவற்றினை எவ்வாறு சுத்தமாக இருப்பது என்று பாடம் சொல்லிக் கொடுத்தல், மேலும் அருகிலுள்ள நதியில் குளிக்க வைத்தல், ஹரிஜன குடியிருப்புக்குச் சென்று சுத்தம் செய்தல், அவர்களின் தேவையைக் கேட்டறிதல், ராமனைப் புகழும் பாடலான ரகுபதி ராகவ ராஜாராம்... என்ற பாடலை பாடிய பின்னர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குதல், மகாத்மா காந்தியின் புகைப்படத்தினை பரிசளித்தல், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தல்.(*19) இச்செயல்பாட்டினை காந்தி வடிவமைத்த ஹரிஜன் தின நிகழ்ச்சிநிரலோடு ஒப்பீடு செய்தால் அது முழுமையாக செயல்படுத்தப்பட் டிருக்கவில்லை என்பதைக் காணமுடியும், அதில் கவ னம் செலுத்துவது தேவையற்றது. தலித்துகள் மீது சாதி இந்துக்கள் கடைபிடித்துவரும் தீண்டாமையை ஒழிப்ப தற்கு காந்தி குறிப்பிடும்படியான செயல்வடிவம் கொடுத் திருக்கவில்லை; தலித்துகளுக்கு எது அத்தியாவசியமான தேவையோ அதனை காந்தி செய்வதற்கு முற்பட்டிருக்க வில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். இத்தினம் தலித்துகளால் தொடங்கப்பட்டிருக்கவில்லை, காந்தி யால் உருவாக்கப்பட்ட அத்தினத்தில் தலித்துகள் ஆர்வ முடன் பங்கேற்றிருக்கவில்லை என்பது காந்தியின் ஹரிஜன் தினத்திற்கு உள்நோக்கம் இருந்திருப்பதையே உணர்த்துகிறது. மேலே விவரிக்கப்பட்டிருக்கிற ஹரிஜன் தினத்தின் உள்ளீடு மற்றும் அதன் செயல்பாடு இவற்றை நோக்கும் பொழுது அது தலித்துகளின் அரசியல் தோல்வியை கொண்டாடுவதற்கும் தலித் விடுதலையை முடக்குவதற்கும் அம்பேத்கரின் தலைமையை முறிய டிப்பதற்கும் காந்தியால் உருவாக்கப்பட்டதே ஹரிஜன் தினம் என்று கூறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கி றது. 1932-33 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஹரிஜன் தினத்தை அடிப்படையாகக் கொண்டே விவாதம் மேலே முன்வைக்கப்பட்டது. ஆனால் காந்தியின் காலத்தில் ஹரிஜன் தினம் 1935 வரை நடைபெற்றிருப்பதனைக் காணமுடிகிறது அது மேலே விவரித்ததிலிருந்து மாறுபட் டிருக்கவில்லை, மேலும் குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு முற்போக்கான வடிவமும் உருவாகியிருக்கவில்லை(*20) ஆதலால் இனி காந்தியின் காலத்திற்குப் பின்னர் நடைபெற்ற ஹரிஜன் தினம் குறித்து காண்போம்.காந்திக்குப் பின்:தலித்துகளை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அம்மக்களுக்காக மாகாண ஹரிஜன நலக்குழு 1947ம் ஆண்டு இறுதியில் அமைக்கப்பட் டது.(*21) அக்குழு தனது பல்வேறு திட்டங்களில் ஒன்றாக ஹரிஜன் தினம் மீண்டும் கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானித்தது. இதுகுறித்து சென்னை மாகாண அவையில் 25 செப் 1948 அன்று, அத்தினம் எந்தநாள் கொண்டாடப்படவேண்டும்? அத்தினம் கொண்டாடப் படுவதின் அவசியம் என்ன? போன்றவை குறித்து விவா திக்கப்பட்டது. ஹரிஜன நலக்குழு பல்வேறு திட்டங் களை தலித் முன்னேற்றத்திற்கு வகுத்திருந்த போதிலும் அவை அரசாங்கத்தால் செயல்படுத்தப்படாதிருக்கும் சூழலில், ஹரிஜன் தினம் கொண்டாடுவதில் என்ன தேவை இருக்கிறதென்ற, தலித் உறுப்பினர் வி.ஐ. முனுசாமி பிள்ளையின், கேள்விக்கு அலுவலர்களை விடவும் தலித்துகளுக்கு அறிவு புகட்டுவதே அத்தினத்தின் தேவை என்று பதிலளிக்கப்பட்டது.(*22) பி.எஸ்.மூர்த்தி என்ற உறுப்பினர் காந்தி பிறந்ததினமான அக்டோ பர் 2ந் தேதியை ஹரிஜன் தினமாக கொண்டாட வேண்டுமென வலியுறுத்தினார். இத்தினம் சேரியில் மட்டுமல்லாது கிராமம்தோறும் கொண்டாடப்பட வேண்டுமென வலி யுறுத்தியிருக்கிறார் காங்கிரஸ் உறுப்பினர் பி.கக்கன். ஹரிஜன் தினக் கொண்டாட்டத்தினால் நன்மையிருப்பதாக கூறப்பட்டாலும் அதுகுறித்த விவரங்களைக் கொடுப்பதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டதன் காரணம் தெரியவில்லை.(*23) இந்தகாலங்களில் ஹரிஜன் தினத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று தெளிவான நிகழ்ச்சிநிரல் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், 1953ம் ஆண்டு அதற்கான ஒரு திட்டம் இருந்திருக்கிறது. சேரிகளை சுத்தப்படுத்தல், காந்தியின் புகைப் படத்துடன் ஊர்வலம் செல்லுதல், கோயில் நுழைவு, விளையாட்டுப்போட்டி நடத்துதல், இனிப்பு வழங்கு தல், சுகாதாரம் குறித்து கூறுதல், ஹரிஜனங்களிடம் இருக்கும் தாழ்வுமனப்பான்மையைப் போக்கக் கூறுதல், சலுகைகளை பயன்படுத்த ஆலோசனை கூறுதல், கோயில் நுழைவு மற்றும் சமூக இயலாமை ஒழிப்புச் சட்டங்கள் குறித்து ஹரிஜனங்களுக்கு கூறுதல், சாதி இந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தல், வாய்ப்பு இருந்தால் உணவு அருந்த ஏற்பாடு செய்தல் போன்ற வையே அத்திட்டம். மேலும் இத்தினம் 25 செப்டம்பர் மாதம் நடத்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் 30-ந்தேதி கொண்டாடப்பட்டிருக்கிறது.(*24) இதில் சிலபகுதி களில் பத்துக்கும் குறைவான நபர்களே பங்கேற்றிருக் கின்றனர்.(*25) சிலபகுதிகளில் அத்தினம் கொண்டாடப் படாமலேயே இருந்திருக்கிறது.(*26) இதற்கான செலவினங் களுக்கு அரசாங்கம் பணம் ஒதுக்கியிருக்கவில்லை, ஆனால் வசூல் செய்து கொள்ளும்படியும் அதற்கு ஹரி ஜன முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களை இணைத்துக் கொண்டு அத்தினத்தினை கொண்டாடும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டனர்.(*27)1955ம் ஆண்டில் ஹரிஜன் தினம் எவ்வாறு எங்கெங்கு கொண்டாடப்பட வேண்டும் என்று ஒரு தெளிவான நிகழ்ச்சிநிரல் ''ஹரிஜன் தின கொண்டாட்டத்திற்கான திட்டம்'' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.(*28) இதில் காந்தி மற்றும் அவருக்குப் பின் நடைபெற்ற (மேலே குறிப்பிடப்பட்டிருக்கிற) நிகழ்ச்சிநிரலோடு பின்வருவனவும் கூடுதலாக இணைக்கப்பட்டிருந்தன:1.சாதிஇந்துக்களிடம் ஹரிஜனங்கள்பாலுள்ள போக் கினை மாற்றுதல்2. உணவு விருந்திற்கு ஏற்பாடு செய்து அதில் ஹரிஜனங்கள் பரிமாறுதல் பிறரோடு இணைத்து அவர்களுக்கும் உணவு பரிமாறுதல்3.சென்னையில் தொழிலாளர் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் தலைமை ஆசிரியை மற்றும் பள்ளிக் குழந்தைககளை உள்ளடக்கி பாட்டுப் பாடி ஊர்வலம் செல்லுதல். சாதி இந்துக்களின் மனப்போக்கினை மாற்றுதல் என்ற போக்கு குறிப்பிடத்தக்க மாற்றம் எனினும் அது எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டது, அதன் விளைவு என்ன என்பது குறித்த விபரம் இல்லை. இந்த ஆண்டில் நடை பெற்ற மற்றொரு மாற்றம் என்னவென்றால் அத்தினத்தை சாதி வேறுபாடு அதிகமாக இருக்கின்ற கிராமங்களை தேர்வு செய்து அங்கு நடத்துதல் என்ற முடிவாகும்.(*29) மேலும், ஹரிஜன் தினம் சிலபகுதிகளில் நடத்தப்பட வில்லை ஆதலால் அங்கு நடத்தப்படவேண்டும் என்றும், அத்தினத்திற்கு அப்பகுதியிலுள்ள முக்கியமான தலித் தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், ஆலயப் பிரவேசம், குடிதண்ணீர் கிணற்றுப் பிரவேசம், ஹோட்டல் பிரவேசம் போன்றவற்றை ஹரிஜன் தினத் தன்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை தலித் உறுப்பினர்களான ஆறுமுகம், முத்து, ஐயனார் போன்றோர் வலியுறுத்தினர். ஹரிஜன் தினத்திற் கென அரசாங்கம் தனியாக நிதி ஒதுக்கீடு செய்திடாத காரணத்தினால் பொதுமக்களிடம் வசூல் செய்த பணத் தினை அதிகாரிகள் ஹரிஜன் தினம் கொண்டாடப்பட்டதாக பொய்க்கணக்குக் காட்டி பணம் கையாடல் செய்தது குறித்த குற்றச்சாட்டும் கூறப்பட்டது. (*30)காந்தியின் காலம் மற்றும் அவருக்குப் பின்னர் நடை பெற்ற ஹரிஜன் தினம் இவை இரண்டுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மாற்றத்தினை புரிந்து கொள்வதற்கு அவை இரண்டையும் ஒப்பீடு செய்வது அவசியம். காந்தியின் காலத்தில் அத்தினம் கொண்டாடப்பட வேண்டிய நாள், அதன் நிகழ்ச்சிநிரல், எல்லை, செலவினங்களுக்குப் பணம் வசூலித்தல், அதனை சங்கத்திடம் ஒப்படைத்தல், அதுகுறித்து ஹரிஜன் இதழில் அறிவித்தில் என ஹரிஜன் தினம் தொடர்பான சகலத்தையும் தீர்மானித்தார் காந்தி; இதில் தலித்துகளின் பங்கு துளியும் இருந்திருக்க வில்லை. எனவே, காந்தியின் ஹரிஜன் தினத்தில் ஜன நாயகத்திற்கான இடம் இருந்திருக்கவில்லை. காந்தியின் எதேச்சதிகாரப் போக்கினால் உருவாக்கப்பட்டு தலித்து கள் மீது திணிக்கப்பட்டதே ஹரிஜன் தினம் என்பது திண்ணம். ஆனால், காந்திக்குப் பின்னர் மீண்டும் கொண்டாடப்பட்ட ஹரிஜன் தினத்தில் சில மாறுதல்கள் உண்டாயின. முதலில், தலித்துகளின் அரசியல் தோல்வி நிகழ்ந்த நாளில் மட்டுமே ஹரிஜன் தினம் நடைபெற வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்கவில்லை. இரண்டாவது, அத்தினம் குறித்து சென்னை மாகாண அவையில் விவாதம் நடைபெற்றிருப்பதானது காந்தியின் எதேச்சதிகார திணிப்பிலிருந்து விடுபட்டு தலித்துகளுக் கும் அத்தினத்தின் மீது கருத்து கூறுவதற்கு வாய்ப்பு கிட்டியது; அவர்களின் கருத்து முற்பகுதியில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. காந்திக்குப் பின்னர் நடைபெற்ற ஹரிஜன் தினம் காந்தி வடிவமைத்திருந்த நிகழ்ச்சி நிரலிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை எனினும், வாய்ப்பு இருக்கும் பகுதிகளில் மட்டுமே பொதுச்சொத்துக்களை தலித்துகளுக்கு திறந்துவிடவேண்டும் என்ற காந்தியின் திட்டத்திற்குப் பதிலாக ''பிரவேசிக்க வேண்டும்'' என்று உள்ளீட்டில் மாற்றத்தினை வலியுறுத்துவதற்கு தலித்துகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ''நிர்ப்பந்தம் செய்தல்'' என்ற இக்கோரிக்கை ஏற்கனவே அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டு காந்தியால் புறக்கணிக்கப்பட்டதைத் தான் தலித் உறுப்பினர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தலித் உறுப்பினர்களின் இச்செயல்பாடு, அத்தினத்தில் தலித்துகளின் பங்கேற்பு உண்மையிலேயே முதன் முதலில் காந்திக்குப் பின்னரே நடைபெற்றிருப்பதனை எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்ல, ஹரிஜன் தினத்தில் ஏதாவது ஒருபகுதியில் தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்பதிலும் தலித் உறுப்பினர்கள் ஈடுபாட்டுடன் இருந்திருக்கின்றனர் என்பதும் தெளிவு. காந்திக்குப் பிந்தைய ஹரிஜன் தினமே, அது ஆளும் வர்க்கத்தால் வழங்கப்பட்டிருந்த போதிலும்கூட, தீண்டாமையை உண்மையாக ஒழிக்கவேண்டும் என்ற திசையில் பயணிக்க முயற்சித்திருக்கிறது. தீண்டாமை ஒழியும் வரை ஹரிஜன் தினம் இருக்குமென ஹரிஜன் தினம் உருவான செப்டம்பர் மாதத்தில் கூறப்பட்டாலும்(*31) அதுகுறித்த விவாதம் பின்னர் குறிப்பிட்டுக் கூறும்படி நடைபெற்றிருக்கவில்லை; தலித் உறுப்பினர்களும் கேள்வி எழுப்பியிருக்கவில்லை.சென்னை மாகாண அவையில் ஹரிஜன் தினம் குறித்து 1955ம் ஆண்டுக்குப் பின்னர் கேள்வி எழுப்பாமைக்கு காந்தியின் சுயவன்முறையால் உருவான பூனா/எரவாடா சிறை ஒப்பந்தமே ஒரு அடிப்படைக் காரணமாக இருக்கி றது. தலித்துகளுக்கு வழங்கப்பட்ட இரட்டை வாக்குரி மையில் தலித்துகளே தங்களின் தலித் பிரதிநிதியை தேர்வு செய்கின்ற முறை தலித் விடுதலைக்கான ஒரு கூர்மையான ஆயுதம். இந்தவகைத் தேர்வுமுறை காந்தி யால் அபகரிக்கப்பட்டதன் விளைவு தலித் உறுப்பினர் களை கேள்வி கேட்பதிலிருந்து தடுத்திருக்கிறது; இன்றும் தடுத்துவருகிறது. இதுகுறித்து மிகச் சுருக்கமாகக் காண்பது அவசியம்.புனா ஒப்பந்தமே இன்றைய ஒதுக்கப்பட்ட தொகுதிக் கான அடிப்படை. அனைத்துச் சாதியினராலும் ஒதுக்கப் பட்டத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்படும் தலித் உறுப்பினர்கள்மைய நீரோட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்; இவர்கள் முதலில் தலித்துகளைவிடவும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு விசுவாசமானவர்களாகவும், அக்கட்சியின் செயல்திட்டத்தினை நிறைவேற்றுபவர்களாகவும், அக்கட்சித் திட்டத்தின் விதி, ஆணைகளுக் கிணங்க தலித் பிரச்சினைகளை அணுகுகின்றனர், தலித்துகளின் எதார்த்தப் பிரச்சினையை முற்றிலுமாக புறக்கணித்துவிடுகின்றனர். ஹரிஜன் தினம் இவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மேலே கூறப்பட்ட தலித் உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், அவர்கள் காந்தியின் ஹரிஜன் தின நிகழ்ச்சிநிரலின் உள்ளீட்டினை மாற்றுவதற்கு முயற் சிக்கிற பொழுது அதனை காங்கிரஸ் கட்சி எவ்வாறு அனுமதிக்கும்?ஆரம்பகாலங்களில் வி.ஐ.முனுசாமி பிள்ளை, ஆர்.எஸ்.ஆறுமுகம், இளையபெருமாள், சத்தியவாணி முத்து போன்றோர் தலித்துகளுக்காக குரல் கொடுத்தி ருப்பினும் பின்னர் அதுவும் இல்லாமற் போனது. பல பத்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் மருத்துவர். கிருஷ்ணசாமி தலித்துகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார். ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மையநீரோட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்குக் கட்டுப்பட்டு அவர்களுக்கே விசுவாசமாக இருந்துகொண்டு தங்களுடைய சுயதேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றனர்.இந்த உறுப்பினர்களுக்கு நேர்மாறாக, சென்னை மாகாண அவைக்கு நியமிக்கப்பட்ட தலித் உறுப்பினர்களின் செயல்பாடு தலித்துகளுக்கானதாக இருந்திருக்கிறது. இவர்கள் தலித்துகளால் தேர்வு செய்யப்பட்டிருக்க வில்லை எனினும் காலனியாட்சியில் சென்னை மாகாண அவைக்கு தலித்துகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள். இது அம்பேத்கர் முன்வைத்த இரட்டை வாக்குரிமை முறையில் தலித்துகளை தலித்துகளே தேர்வு செய்யும் முறைக்கு ஒப்பானது. தலித்துகளுக்காக நியமிக்கப்பட்ட தலித் உறுப்பினர்களான இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா உட்பட பல தலித் உறுப்பினர்கள் தீண்டாமைக்கு எதிரான சட்டம் கொண்டு வருதல், அதனை அமுல்படுத்தல், தீண்டாமைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுத்தல், சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுத்தல், தலித் மாணவர்கள் முன்னே றுவதற்கான திட்டங்களை ஏற்படுத்தி அமுல்படுத்தக் கூறுதல், நிலம் கேட்டல் என அவர்களின் போராட்டம் சென்னை மாகாண அவைக்குள் நிகழ்ந்திருக்கிறது.நியமிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட தலித் உறுப்பினர்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு நோக்கினால் முன்னவர்கள் தலித்துகளுக்கான போராளிகளாகவும், பின்னவர்கள் கட்சி விசுவாசிகளாகவும் சுயநலவாதிகளாகவும் இருக்கின்றனர் என்பது விளங்கும்.(*32) இதனை இவ்வாறு கூறலாம்: காந்தியின் பூனா ஒப்பந்தம் சாதியின் பெயரால் தலித்து களுக்கு துரோகமிழைக்கும் சுயநலமான தலித் உறுப்பி னர்களை உருவாக்கியது.அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையோ, அது காந்தியால் பறித்தெடுக்கப்பட்ட போதிலும், தலித்துகளுக்காக குரல் கொடுக்கும் தலித் போராளிகளை உருவாக்கும் தன்மை கொண்டிருந்தது என்பதை தலித்துகளுக்காக நியமிக்கப்பட்ட தலித் பிரதிநிதிகளின் செயல்பாட்டிலிருந்து உறுதிபடக் கூறலாம்.முடிவாக, தலித்துகளின் விடுதலைக்காக ஒருபோதும் உண்ணாவிரதம் இருந்திருக்காத காந்தி தலித்துகளுக்கு வழங்கப்பட்டிருந்த இரட்டை வாக்குரிமையை உண்ணா விரதம் என்ற சுயவன்முறையினால் தலித் அரசியல் உரிமையை அபகரித்த நாளையே ஹரிஜன் தினமாகக் கொண்டாடியிருக்கிறார்; அதனை தலித்துகள் மீதும் எதேச்சதிகாரமாய் திணித்திருக்கிறார். தலித்துகளை இந்துமயமாக்குதலும், அவர்களை இரந்து நிற்ப்பவர் களாக வைத்திருப்பதும் அத்தினத்தின் உள்ளீடு. அவரு டைய தலித்துகளை “சுத்தமாக்கும்” செயல் மிகவும் வேடிக்கையானது. பள்ளிகளில் ஹரிஜன் தினம் கொண்டாடும் பொழுது ஏழை மேல்ஜாதி மாணவர்கள் தலித் மாணவர்களை குளிக்க வைப்பது காந்தியின் சுத்தப்படுத்தும் திட்டம். திருநெல்வேலி மாவட்டம் சண்முகரெங்கபுரம் பள்ளியில் தலித் மாணவர் ஒருவர் இவ்வாறு கேட்டிருக்கிறார்: நான் தினமும் குளித்துவிட்டுதானே வருகிறேன் இன்று ஏன் என்னை குளிப்பாட்டி விடுகிறீர்கள்?(*33) தலித் வாழ்க்கை குறித்தும் அவர்களின் விடுதலை குறித்தும் சிறிதும் புரிந்திருக்காத காந்தியின் ஹரிஜன் தின திட்டத்தின் விளைவினை உணர்த்துவதற்கு மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டே போதுமானது. இவருக்குப் பின்னர் அரசாங்கம் முன்னின்று நடத்திய ஹரிஜன் தினத்தில் ஜனநாயகத்தன்மை தோன்றுவதற்கான வாய்ப்பு உருவாகியிருந்த போதிலும் உள்ளீட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்க வில்லை. தலித் உறுப்பினர்கள் சிலர் உள்ளீட்டில் மாற்றத்திற்கான கோரிக்கையை முன்வைத்த காலத்தில் அத்தினம் குறித்து விவாதமே சட்டமன்றத்தில் நடை பெறாமல் போனது. காந்தியால் உருவாக்கப்பட்ட எரவாடா/பூனா ஒப்பந்தமே ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட தலித் உறுப்பினர்கள் தலித்துகளுக்காக குரல்கொடுக்காமல் இருப்பதற்கான மூலக் காரணம். இந்த துரோக ஒப்பந்தம்மே தலித்துகளின் எந்த பிரச்சினையையும்-அது முதுகுளத்தூர், உஞ்சனை, தோட்டக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மொத்தப் படு கொலைகளாக இருந்தாலும், அல்லது சங்கனாங்குளம் போன்ற வன்புணர்ச்சியாய் இருந்தாலும், அல்லது இதர தீண்டாமை-ஒடுக்குமுறையாக இருந்தாலும்- ஒதுக்கப் பட்ட தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்படும் மைய நீரோட்ட அரசியல் கட்சிகளுக்கும் சாதி இந்துக்களுக்குமான கைப்பாவை தலித் பிரநிதிகள் ஒருபோதும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்திருக்கவில்லை. தலித் விடுதலையின் மிகப்பெரும் முட்டுக்கட்டை என்றால் அது காந்தி உருவாக்கிய எரவாடா/பூனா ஒப்பந்தமே; அது உருவாக்கப்பட்ட தினத்தை தோற்கடிக்கப்பட்ட தலித்துகளின் முற்றத்திலேயே அத்தோல்வியைக் கொண்டாடிய காந்தி யாருக்கானவர்? காந்தியின் ஹரி ஜன சேவா சங்கத்தின் செயல்பாடுகள் அம்பேத்கரின் இரட்டை வாக்குரிமையோடு சமன்படுத்திவிட முடியுமா?***ஆதாரமும் குறிப்பும் :(*1) Harijan, Vol I, No.10 (April 15: 1933), p. 3.(*2) Eleanor Zelliot, 'Gandhi and Ambedkar - A Study in Leadership', in J.Michael Mahar (ed.), The Untouchables in Contemporary India (New Delhi: Rawat Publications, 1998), p.84(*3) Dr.Ambedkar - Writings and Speeches Vol.15 (Tamil), (New Delhi; Government of India, 1999), p.669(*4) See. Dr. Ambedkar-writings and Speeches Vol.16 (Tamil), (New Delhi: Government of India, 1999), pp. 383-98(*5) Eleanor Zelliot, 'Gandhi and Ambedkar' - A Study in Leadership', p.85(*6) Dr.Ambedkar - Writings and Speeches Vol.15, pp.978-9(*7) Ibid., Vol 16, p.209(*8) Ibid., ஆரம்பக் காலகட்டத்தில் அம்பேத்கர், சீனிவாசன், எம்.சி.ராசா ஆகியோர் அவ்வமைப்பின் மத்தியக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அம்பேத்கர் அவ்வமைப்பிலிருந்து விலகிய பின்னர் மற்ற இருவரும் விலகிவிட்டனர்.(*9) Dr.Ambedkar - Writings and Speeches Vol.16, p.239(*10) Ibid, Vol