Thursday, December 11, 2008

சென்னையில் சாதி வெறியர்கள் மற்றும் காவல்துறையின் சாதி வெறியாட்டமும் அதிகார அத்துமீறலும்புரசை கோ. தமிழேந்தி

அனுப்புனர்:

புரசை கோ. தமிழேந்தி, ஆ/வ-33, அமைப்பாளர் - திருவள்ளுவர் செந்தமிழ்ப் பேரவை, 155, 5ஆவது தெரு, 'ஆஃ பகுதி, சிவசண்முகபுரம், புரசைவாக்கம், சென்னை - 600 007.

பெறுநர்:

ஆசிரியர் "கவிதாசரண்”

பெருமதிப்பிற்குரிய அய்யா,

பொருள் : சாதிவெறியர் மற்றும் காவல்துறையின் அதிகார அத்துமீறலுக்கு எதிராக இப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ள செய்தியை தங்கள் இதழ் செய்தியில் வெளியிட்டு, எங்களுக்கு நீதி பெற்றுத்தர கோருதல் தொடர்பாக.வணக்கம். மேற்கண்ட புரசை கோ. தமிழேந்தி, என்னும் நான் 22.03.2007, வியாழக்கிழமை காலை சுமார் 10.15 மணியளவில், எண்.2, சிறுவள்ளூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை-600 011 இல் உள்ள பெரம்பூர் ஒற்றுமை நிலையத்தில், தென்னக இரயில்வே தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்.எண்.285-ஏ, பணந்தோப்பு இரயில்வே குடியிருப்பு 5ஆவது தெரு, அயன்புரம், சென்னை-600 023 இல் குடியிருக்கும் மேற்கண்ட தென்னக இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், ரயில்வே ஊழியருமாகிய தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த வித்யாவதி, பெ/வ-48 (க/பெ. மனோகரன்) என்பவர் என்னிடம் கொடுத்து கொடுக்கச் சொன்ன (ஏன் தயங்குகிறீர்கள் விரைவில் தீர்வு காணுங்கள் 6500 உறுப்பினர்கள் உங்களை நம்பி இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்) என்கிற தலைப்பில் அடங்கிய விளக்க அறிக்கையை (இரண்டு பக்கம் கொண்டது), நானும் (கோ. தமிழேந்தி) எனது மனைவியும் (சென்னம்மாள்) மற்றும் எங்கள் பகுதியில் குடியிருக்கும் அய்யனார் என்கின்ற தம்பி ஆகிய மூன்று பேர் மேற்படி பெரம்பூர் ஒற்றுமை நிலையத்தின் நுழைவாயில் (கேட்டில்) நின்றுகொண்டு தென்னக இரயில்வே தொழிலாளர் சங்கச் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த உறுப்பினர்களிடம் கொடுத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது அங்கே இருந்த ஆச்சாரி சாதியை சார்ந்த தென்னக இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வி. ஆறுமுகம், ஆ/வ-77, மற்றும் முதலியார் சாதியைச் சார்ந்த மேற்படி சங்கப் பொதுச் செயலாளர் சூரியபிரகாசம், ஆ/வ-43 மற்றும் இணைப் பொதுச் செயலாளர், பிள்ளை சாதியைச் சார்ந்த நல்லதுரை, ஆ/வ-43 ஆகியோரும் மற்றும் (பெயர் தெரியாத, அடையாளம் காட்டக்கூடிய பலர் எங்களை தர தரவென்று சங்க அலுவலகத்திற்குள் இழுத்துச்சென்று ''பறை நாய்களே இங்கே ஏண்டா வந்து இதை கொடுக்கிறீங்கள்” என்று சாதிப் பெயரைச் சொல்லி, மிகவும் இழிவாக ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார்கள். மேலும் எங்களை சூழ்ந்து நின்றுகொண்டு சராமாரியாக அடித்து உதைத்தார்கள். மேலும் எனது மனைவி சென்னம்மாளை ஆளுக்கு, ஆள் கையை பிடித்தும், மேலாடையையும், தலைமுடியையும் பிடித்தும் இழுத்து மிகவும் கேவலமாக கொச்சையான ஆபாச வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தினார்கள்.அப்பொழுது அங்கே வந்த கே-1, செம்பியம் காவல்நிலைய தலைமைக் காவலர் இரத்தினசாமி மற்றும் ஓட்டுநர் (பெயர் தெரியவில்லை. ஆனால் அடையாளம் காணக்கூடிய) ஆகியோரிடம் நடந்த நிகழ்வை சொல்லி புகார் கூறினோம். ஆனால் அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் எங்கள் மூவரையும் தர தரவென்று இழுத்துக்கொண்டு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மேற்படி கே-1, செம்பியம் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார்கள்.காவல் நிலையத்தில் அடைத்து வைத்து மேற்கண்ட தலைமைக் காவலர் எங்களைப் பார்த்து கண்டார ஓழிமொவனே, புண்ட மொவனே, வேசிமொவனே என்று தரக்குறைவான ஆபாச வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்தும், முதுகில் ஓங்கி, ஓங்கி குத்தினார். மேலும் ஓட்டேரி, சிவசண்முகபுரம் ஏரியா புத்தி அதான் உங்களை இப்படிச்செய்யச் சொல்லுது என்று திட்டி எட்டி, எட்டி பூட்ஸ் காலால் உதைத்தார். (இப்பகுதி முழுவதும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பறையர் சாதி மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) மேலும் என் பாக்கெட்டில் இருந்த கைபேசி, ரூபாய், முகவரி அட்டை மற்றும் அடையாள அட்டைகளை எடுத்துக் கொண்டார்.மேலும் என் மனைவியை (சென்னம்மாள்) பார்த்து பொம்பளையாடி நீ தேவடியா மாதிரி இருக்க, தேவடியா தொழில் செய்யறத்துக்கா வந்தே என்றும், இன்னும் மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொடுமைப்படுத்தினார். மேலும் உங்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளிடுவோம் என்றும் எங்களை கடுமையாக மிரட்டினார். அப்பொழுது சிறிது நேரத்திற்குள் காவல் நிலையத்திற்கு வந்த நிலைய ஆய்வாளர் கே. சிவமணி மற்றும் உதவி ஆணையாளர் கே. ராஜாராம் ஆகியோரும் மேற்படி வார்த்தைகளால் திட்டினார்கள்.அப்பொழுது நான் சாதிவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் எழுதிக்கொடுத்தேன். ஆனால் என் புகாரை பதிவு செய்யாமல் எங்களைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசிய நல்லதுரை தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கும்பல் காவல் நிலையத்திற்குள் வந்து காவலர்கள் முன்னிலையிலேயே எங்களை மிரட்டித் தாக்கினார்கள். மேலும் தென்னக இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சாதி வெறியர்களுக்கு சாதகமாக அவர்களிடம் புகாரைப் பெற்று பதிவு செய்து, ரசீதும் கொடுத்து அனுப்பினார்கள். ஆனால் தலைமைக் காவலரே ஏற்கனவே எழுதி வைத்திருந்த தாளில் என்னிடம் வற்புறுத்தி கையெழுத்து பெற்றுக்கொண்டார். மேலும் எங்களை (அடையாளம் காட்டக்கூடிய) காவலர்கள் மாறி மாறி விசாரித்து துன்புறுத்தினார்கள். எங்கள் தரப்பு நியாயத்தையும், நாங்கள் கொடுத்த புகாரையும் பதிவு செய்ய மறுத்ததுடன் எங்களை கடுமையாக மிரட்டினார்கள்.மேலும் எங்கள் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கவும் அனுமதி மறுத்து விட்டார்கள். மேலும் என்னையும், என் மனைவியையும் மற்றும் என்னுடன் வந்திருந்த அய்யனார் ஆகிய மூன்று பேரையும் காலையில் இருந்து மாலை வரை தண்ணீர் கூட கொடுக்காமல் காவல் நிலையத்திலேயே அடைத்துவைத்திருந்து வெள்ளைத் தாளிலும் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார்கள்.எனவே இதன் தொடர்பாக தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி), சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர், மாநில மனித உரிமை ஆணையம், மாநில மகளிர் ஆணையம், மாநில தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் ஆணையம், மாநில சிறுபான்மையினர் ஆணையம் ஆகியோருக்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் - 1889 (சட்ட எண்.33/1989) பிரிவு 3, (III), X, XI. பிரிவு-4இன் படியும் “Harrasment Act ”இன் படியும் ''இந்திய தண்டனைச் சட்டத்தின்” நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனுவை தந்தி மூலமாகவும் தொலைநகல் மூலமாகவும் கூரியர் மூலமாகவும் அனுப்பி வைத்தோம். ஆனால் இதுவரையில் புகார் மனுமீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியதால் கே.1, செம்பியம் காவல் நிலைய காவலர்கள் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும், புகாரில் குறிப்பிட்டுள்ள சாதி வெறியர்கள் எங்களை கொலை செய்வதாகவும் மிரட்டி வருகிறார்கள். எனவே சாதிவெறியர் மற்றும் காவல்துறையின் அதிகார அத்துமீறலுக்கு எதிராக இப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ள செய்தியை தங்கள் இதழ் செய்தியில் வெளியிட்டு, எங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள(கோ. தமிழேந்தி)

நாள் : 22.3.2007

இடம் : சென்னை-7.

ஆதிக்கத் தமிழ்ச் சாதிகளின் அதிகாரக் கொள்முதலும் தன்மான விற்றொழிப்பும் - கால்டுவெல் நூல்பதிப்பை முன்வைத்து... கவிதாசரண்

கவிதாசரண். ஜன - பிப்ரவரி 2006 இதழட்டையில் "தமிழகம் கண்டறியாத கால்டுவெல்லின் பின்னிணைப்புகள்” என்றொரு வாசகம் இடம் பெற்றிருந்தது, இதழுக்குள் கால்டுவெல் பற்றி இரண்டு கட்டுரைகள் வெளிவந்திருந்தன, பொ,வேல்சாமியும் வேதசகாயகுமாரும் எழுதியவை, வேல்சாமியின் கட்டுரை கால்டுவெல் நூலின் பதிப்புக் குளறுபடிகள் பற்றிய தகவல்களை ஏறக்குறைய முழுமையாகத் திரட்டித் தந்திருந்தது, வேதசகாய குமாரின் கட்டுரை அக்குளறுபடிகளுக்கூடான சாதி அரசியலை வெகு நுட்பமாகத் துலாம்பரப் படுத்தியிருந்தது, என்னிடம் ஒரு தேடலைத் தோற்றுவித்த அரிய கட்டுரை அது,(இந்தக் கட்டுரையில் வேதசகாயகுமாரின் கருத்துகளை நான் முழுக்கமுழுக்க வழிமொழிந்து மேற்செல்கிறேன், ஐயத்திற்கிடமின்றி நிறுவப்படும் எந்த உண்மையும் வெறும் காப்புரிமை கோரும் கருத்தியல் பதிவாக மட்டுமே முடக்கப்பட்டுவிடாமல். பலரும் பல சந்தர்ப்பங்களிலும் பேசுபொருளாக்குவது சமூக அளவுகோலைப் புதிப்பிக்கும் காலத்தின் கட்டாயமாகிறது,)வேதசகாயகுமார் தன் கட்டுரைக்கு "கால்டுவெல்லின் மற்றொரு முகம்” என்று பெயரிட்டிருந்தார், அந்தத் தலைப்புக்கான நிறைவுக் கட்டுரை இன்னும் எழுதப்படவே இல்லை, அவர் எழுதியது அதற்கான முன்னோட்டத்தைத்தான், அதுவே பல திறப்புகளை வெளிச்சப்படுத்துவதாயிருந்தது,இக்கட்டுரைகளைத் தமிழகப் பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணைவேந்தர்கள் சிலரும் மேலும் சில பொறுப்புள்ள தமிழ்ப் பேராசிரியர்களும் படித்து அதிர்ந்து போனதாகவும். "கால்டுவெல் காலத்திற்குப் பிறகு அவருடைய நூல் முழுமையாக அச்சிடப்படவில்லை” என்பதையே அவர்கள் நம்ப மறுத்ததாகவும் கேள்வி, (எனக்கு இதில் நம்பிக்கையில்லை, அவர்களாவது அதிர்வதாவது, ஆகவே இது ஒரு கனவுநேரக் கற்பனையாக இருக்கவும் வாய்ப்புண்டு,) அப்படி நேர்ந்திருந்தால் அது ஒரு கணப்பொழுதுக்குத்தான், அதன்பிறகு எந்தத் தேடலோ எதிர்வினையோ இல்லாமல் ஆழ்ந்த அமைதி சூழ்ந்துகொண்டது,கால்டுவெல்லின் மறைவுக்குப் பின் வெளிவந்த மூன்றாவது பதிப்பின் முன்னுரையிலேயே "சில பகுதிகள் நீக்கப்பட்டன” என்னும் குறிப்பு இடம் பெற்றிருப்பது அந்தப் பெரியவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டதாம், ஆகவே. அவர்கள் அமைதி அடைந்திருப்பார்கள், "நமது முன்னோர்கள் செய்திருந்தால் அது நியாயமாகத்தான் இருக்கும், அதைக் கிண்டிப் பார்க்கிற கிறுக்குப் புத்தி நமக்கு வேண்டாம்” என்று முடிவெடுத்திருப்பார்கள், மேலும். தமிழையும் தமிழினத்தையும் காப்பதற்கென்று காப்பு கட்டிக் கொண்டிருக்கும் தங்களையன்றித் தமிழைப்பற்றிப் பேச இவர்கள் யார் என்று நம்மேல் அவர்களுக்கு ஒவ்வாமை இருக்கலாம், தமிழை ஒரு துறைசார் பொருளாக்கித் தூங்கப் பண்ணும் அவர்களது மயிர்க்கால்களில் உலகெங்கிலும் ஒரு புதிய அலையடிப்பாய்க் கிளர்ந்திருக்கும் தீவிர மறுவாசிப்பு எழுச்சி எவ்விதக் குறுகுறுப்பையும் ஏற்படுத்தியிருக்காது, அதனாலேயே அவர்கள் "நல்ல தமிழர்கள்” ஆகிறார்கள், "நல்ல பாம்புகள்” இல்லையா? நறுவிசான சாதியாள்களாகிப் போன வெகு நல்ல சூத்திரர்கள் அவர்கள்,கால்டுவெல்லே சொல்கிறார்: தென்னிந்தியாவில் சூத்திரர் என்றால் அது வடஇந்தியாவில் போல் இழிபெயர் அல்லவாம், ஒருவேளை இனப்பெயராகப் பாவித்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமே சமஸ்கிருதக் கலாச்சாரம் அரசதிகாரப் பொதுச் செலாவணியாகி நிலைத்த பின்னர் அந்த இனப்பெயரே இழிபெயராகிப் போனதென்பது தெரியாமலா தங்களைச் சற்சூத்திரர்கள் என்று அழைத்து மகிழ்ந்திருப்பார்கள் நமது சட்டாம்பிள்ளைத் தமிழ்ச் சாதியாள்கள்?மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அந்தப் பெயரை அவமதிப்புச் சின்னமாகக் கழித்துக் கட்டினபோதே அது இன்னொரு வகை சூத்திரப் பார்ப்பனியத்தின் வக்கிர வெளிப்பாடாகிப் போனதென்பதும் மறுக்க முடியாத உண்மை,*வேதசகாயகுமாரின் கட்டுரையால் வந்த நல்லறமாய் கால்டுவெல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பின் மூலப்படியை எப்படியேனும் பார்த்துவிட வேண்டும் என்னும் என் விருப்பத்தை நண்பர்கள் சிலரிடம் சொல்கவைத்தேன் குறிப்பாக வேல்சாமியிடம் கொஞ்சம் அழுத்தமாக, காரணம். பழைய நூல்களைத் தேடிப் பிடிப்பதிலும் வாங்கிப் படிப்பதிலும்தான் அவர் கருத்தும் சமர்த்துமே அடக்கம்,தேடலின் முதல் வரவாக ஏஷியன் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனம் (Asial Educational Services- AES) 1998இல் மறு அச்சாக வெளியிட்ட ஒரு படியை நண்பர் கிடாம்பி எனக்களித்தார், (அதை நான் திருப்பித் தர வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்,) அது 1913இல் வெளியிடப்பட்ட மூன்றாம் பதிப்பின் மறுஅச்சு, நூல் நல்ல வெள்ளைத் தாளில், தெளிவான அச்சில், கெட்டிக் கட்டமைப்பில், அழுத்தமான தையலில், எளிதாகத் திறந்து பார்க்கும்படி அழகாக தயாரிக்கப்பட்டிருந்தது, ஆனால் அதன் சந்தைப்படுத்தலில் திணிக்கப்பட்டுள்ள பித்தலாட்டத்தை இங்கு சொல்லியே ஆக வேண்டும். 680 பக்கங்கள் உள்ள நூலின் அச்சிட்ட விலை ரூ.695/-, ஆங்கில நூல்களுக்கு வைக்கப்படும் நியாயமான விலை. ஆனால் அவ்விலையின் மேலேயே ஒரு மஞ்சள் வில்லைத்தாள் ஒட்டப்பட்டு அதில் ரூ.995/- என்று புதிய விலை குறித்து அந்த நிறுவனமே விற்றிருக்கிறது, நாம் ஒரு புதிய அகராதி எழுத வேண்டும். அதில் கறைபட்ட சொற்களைப் புதிதாக அர்த்தப்படுத்துவதன் ஓர் அடிப்படை அலகாக "இதுதான்-இந்த விற்பனைதான் புலைத்தொழில்” என்று சுட்ட வேண்டும், ஆனால் இதைச் செய்யாத நிறுவனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்தான்.தொடர்ந்து, சென்னைப் பல்கலைக் கழக வெளியீட்டையும் வாங்கினேன். இது பற்றியும் எனக்குச் சொல்லிக்கொள்ள செய்திகள் உண்டு. உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகமல்லவா. ஆனால் எப்போது, எதற்காக என்பவை இப்போதைய கேள்விகள். அதன் நூல் விற்பனைத் துறை அவ்வளவு தூய்மையாகவும். சுறுசுறுப்பாகவும், நவீனத்தன்மையுடனும் இல்லை என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துகொள்ளலாம். அவர்களுடைய நூலாக்கங்களும் கிழடு தட்டிப்போனவையாகவே நீள்கின்றன. விற்பனைப்பிரிவு ஊழியருக்கு கால்டுவெல் நூல் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஒரு நல்ல ஊழியர் குறைந்தபட்சம் கையிருப்பில் உள்ள நூல்கள் என்ன என்னும் தகவலறிவாவது பெற்றிருந்தால் நலமாயிருக்கும். நான் கேட்டதும் என்னையே தேடிப்பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளச் சொன்னார். நானும் ஒவ்வொரு அலமாரியாய்த் தேடி, ஒன்றின் அடித்தட்டில் கட்டு பிரிக்கப்படாமல் இரண்டு பொதிகள் திணித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தேன்.அவற்றில் ஒரு கட்டை நெகிழ்த்தி ஒரு படியை எடுத்துப் பிரிக்கும்போதே மடிகள்(Forms) தையல் பிரிந்து வெளிப் பிதுங்கின. நான் ஒவ்வொன்றாய்ப் பிரித்துச் சோதித்து அவற்றுள் "தேவலை” என்று தோன்றிய ஒரு படியை எடுத்துப்போய் அவரிடம் கொடுத்தேன். அவர் ரசீது போடுவதற்காக அதைப் பிரித்தபோது அதுவும் நெக்கு விட்டுக் குலைவுற்றது. மீண்டும் நானே அதைக் கொண்டு சென்று திரும்ப வைத்துவிட்டு வேறொரு படியைத் தேடி எடுத்து வந்து கொடுத்தேன். அதையும் வீட்டில் கொண்டுவந்து பிரித்தபோது தையல் அறுந்து மடிகளும் தனித்தனித் தாள்களுமாகப் பிதுங்கின. அவற்றைக் கவனமாக உள்தள்ளி பசைத்தாள் போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன். 2000இல் வெளிவந்த நூல். அது வாசிப்பதற்காகத் தைக்கப்படவில்லை. தனித்தனிப் படிகளாகக் கணக்கு காட்டுவதற்காக ஒப்பேற்றப்பட்டிருந்தது. ராயல் வடிவில் தயாரிக்கப்பட்ட 676 பக்கங்களுள்ள நூல். விலை ஆக மலிவு. வெறும் ரூ.160/-தான். ஆனால் இதிலும் அதே தில்லுமுல்லுதான். (Deluxe Binding. Rs.200/-) என்று தனி முத்திரை குத்தி, 15% கழிவு நீக்கி ரூ.170க்கு எனக்கு விற்கப்பட்டது. "உலகமே நாடக மேடை. நாம் அதன் நாடகப் பாத்திரங்கள்” என்பது போல "எங்கும் மாமாக்கள் ராஜ்யம். நாம் அதன் ஏமாளிகள்” என்பதாகத்தான் இருக்கிறது நாட்டு நடப்புகள்.நூலின் உள்ளடக்கத்தில் AES பதிப்பிலுள்ள பின்னிணைப்பில் 5 பக்கங்களும், 5 பக்கச் சொல்லடைவும் வெட்டியெறியப் பட்டிருந்தன. 1956இல் இருந்த பதிவாளர் எழுதிய 8 வரிக் குறிப்பும் 2000இல் துணைவேந்தராய் இருந்த பொன்.கோதண்டராமன் எழுதிய ஒரு பக்க முகப்புரையும் முன்பகுதியில் சேர்க்கப்பட்டிருந்தன. "பல்கலைப் பதிப்புக்”கான முத்திரை அது. அன்றைய துணைவேந்தரான பொற்கோ அவர்கள் மொழியியல் அறிஞரும் இலக்கியத் துறைஞருமான தமிழ்ப் படிப்பாளி. அவராவது முயன்று கால்டுவெல்லை முழுமையாகக் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்திருக்கலாம்.ஆண்டுக்கொருமுறை ஊதிய உயர்வு பெறும் பணிப் பாதுகாப்புள்ள அரசூழியப் பொறுப்பில் அமர்த்தப்படும் கசுமாலங்களாயினும் அறிவாளிகளாயினும் எல்லாருமே ஒன்றுபோலத்தான் கலங்கிய குட்டையில் எருமைகளோடு குளித்துக் கரையேறும் மேய்ப்பர்களாகக் கோவணம் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் முதல் வாசிப்புக்குக்கூடத் தாங்காத நைந்த தையலோடு நூல் வெளியிடும் எனில் அதன் புகழ் எதன் பொருட்டு? நூலின் விலை ஆகக் குறைவாக மட்டுப் படுத்தப்பட்டிருப்பது எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கத்தில்தான். விலை மட்டுப் படுத்தப்பட்டதில் பல்கலையோ, அச்சகமோ, தைக்கிறவரோ இழப்பது ஒன்றுமில்லை. சம்பந்தப்பட்ட துறையின் மாதச் சம்பளக் கூலிகள் இடைத்தரகர்களாகக் காசு பார்க்காதிருந்தாலொழிய இந்த அவலம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்காது. கையூட்டு கொடுக்க மறுத்தால் ஆகச் சிறந்ததும் தட்டிக் கழிக்கப்படலாம். கொடுத்துவிட்டாலோ குப்பையையும் காசாக்கிவிடலாம். பொறுக்கித்தனங்களாலேயே புனையப்பட்ட ஒரு சீரழிவுச் சமுதாயத்தில் சவடால் பேச்சைத் தவிர வேறென்ன சாதனை நிகழ்ந்துவிடப் போகிறது?எனக்கு வேண்டியது கால்டுவெல் பதிப்போடு வைத்து ஒப்பிடக்கூடிய ஆங்கிலப் பதிப்புகள்தாம் என்பதால் தமிழ் மொழிபெயர்ப்புகளைக் கணக்கில் எடுத்துக் கெர்ளளவில்லை. கால்டுவெல்லே விரும்பியபடி, அவரைக் கடந்து சென்று பேசப்படக்கூடிய அளவுக்கு செழுமை செய்யப்பட்ட இன்னொரு ஒப்பிலக்கணம் இன்னும் எழுதப்படவில்லை. அதை விட, கால்டுவெல்லே இன்னும் முழுமையாகப் பதிப்பிக்கப் படவில்லை, அறிவு நாணயத்துடன் மதிப்பிடப்படவில்லை என்பதுடன், முறையாகவும் சரியாகவும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது, முழக்கங்களாலேயே தமிழை உன்னதப்படுத்திவிட முனைகிறவர்களின் அதிகாரச் சுரணைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய புள்ளிகள்.கடைசியில் எதிர்பார்த்ததை விடவும் எதிர்பாராத விதமாக என் விருப்பம் ஒரு வழியாக நிறைவுக்கு வந்தது, கால்டுவெல்லின் மூலப்பதிப்பு, ஒரு நூல் வடிவில் அல்லாமல், தலைப்பும் சில பதிப்புரைப் பக்கங்களுமின்றி. ஒளியச்சு செய்யப்பட்ட தாள்திரட்சியாக என் கைக்கு வந்து சேர்ந்தது. சேர்ப்பித்தவர் நண்பர் பொ.வேல்சாமி. அதற்குத் துணையிருந்தவர் நண்பர் பெருமாள்முருகன். நூலை ஒளியச்சு செய்துகொள்ளக் கொடுத்து உதவியவர் அரிய நூல்கள் பலவற்றைத் தேடிச் சேமித்துக் காத்து வரும் நாமக்கல் வணிகப் பெருந்தகை நா.ப. இராமசாமி அவர்கள். இந்த மூலநூல் தமிழ்நாட்டில் மிஞ்சிமிஞ்சிப் போனால் ஐந்து அல்லது ஆறு படிகள் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அவை இருக்கின்றன என்பதைவிட ஒளித்து வைக்கப்பட்டுள்ளன என்பதே பொருந்தும். அவற்றுள் ஒன்றைக் கண்டுபிடித்துத்தான் வேதசகாயகுமார் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். அதனை அவர் தந்துதவ மாட்டார். அல்லது தந்துதவும் நிலையில் இருக்க மாட்டார் என்பது என் அனுமானம். ஆகவே, நா.ப.இராமசாமி அவர்கள் கொடுத்துதவியது இலண்டனுக்கே சென்று கண்டெடுத்ததற்குச் சமமானது. இவரைப் போலும் அறிவுச் சேகரம் பண்ணும் "கிறுக்குக் கனவான்கள்” சிலரேனும் இருப்பதால்தான் தமிழ் வரலாறு தன் புதையடுக்குகளிகருந்து மெல்லமெல்ல மீண்டெழுந்து கரையேறித் தெளிந்து வருகிறது.இவருக்கொப்பாக, நூல்களைத் தேடுவதிலும் அவற்றை நுகர்ந்தளைவதிலும் வேல்சாமிக்குள்ள தேர்ச்சியை ஒப்பிட வேண்டுமானால், பட்டுத் துகிலைத் தன் கண்ணாலேயே தொட்டுப் பார்த்து அதன் தரம் கணிக்கிறவனின் தேர்ச்சியைத்தான் சொல்ல வேண்டும். இதில் இன்னொரு புள்ளியும் உண்டு. இந்தத் தேர்ச்சியை ஒரு வித்தைக்காரனின் சாகசம்போலக் காட்சிப்படுத்திக் கைதட்டலைக் கோருகிறவர்கள் அரசியலற்றுப் போகிற தொழில்நுட்ப வல்லுநர்களாகத் தங்களை அவதாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவதாரம் வியப்பூட்டும்தான். ஆனால் தனக்கான அரசியல் நிலைப்பாடுள்ள ஒரு எளிய மனிதன் அவதாரங்களைவிட அதிக நம்பகத் தன்மையுள்ளவனாகிறான். பிரயாசை இல்லாமல் நம்மோடு கை கோர்த்துக்கொள்கிறான்.மாணவப் பருவத்தில் கால்டுவெல் பற்றி என் மனத் திரையில் ஒரு சித்திரம் வரையப்பட்டது. சீரும் சிறப்பும் செல்வச் செழிப்பும் மிக்க ஓர் இல்லம். சூதுக்கு இரையாகி, பார்வையும் ஊடுருவ முடியாத மையிருட்டில் மௌனப்பட்டுக் கிடந்தது. எங்கிருந்தோ வந்து பார்வையாளராய் வீட்டுக்குள் நுழைந்த பயணி ஒருவர் கருணை மிக்கவராய் நடுவீட்டில் ஒரு மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்தார். பொல்லென்று பூத்த ஒளியில் இல்லம் தன் பழம்பெருமையை மீட்டெடுத்துக்கொண்டு, வெளிச்சத்துக்கு வராத தன் பழஞ்சொத்துகளையெல்லாம் தேடி எடுத்துப் புத்தெழுச்சி பெற்றது.இச்சித்திரத்தில் கால்டுவெல்தான் அந்தப் பயணி. அவரது நூல்தான் அவர் பொருத்தி வைத்த ஒளிவிளக்கு. சித்திரம் இன்றும் எவ்விதச் சேதாரமும் இல்லாமல் என் மனத்தில் புத்தம் புதிதாய்ச் சிரித்துக்கொண்டிருக்கிறது. கால்டுவெல் பல பரிமாணங்களிலும் தொடர்ந்து பேசப்பட்டிருக்க வேண்டியவர். அது நாம் அவருக்குச் செய்யும் சிறப்பு என்பதைவிட நம்மை நாமே மறுசீரமைப்புச் செய்துகொள்ளும் சமூக அறத்தின்பாற்பட்ட முன்னெடுப்பாய் இருந்திருக்கும்.ஆனால் என்ன நடந்ததெனில், அவரது நூலின் தலைப்பைக்கொண்டே ஒற்றைப் பரிமாணம் கொண்ட மொழியியலாளராகவே அவரை அங்கிங்கசையாதபடி கட்டிப் போட்டுவிடும் முயற்சியில் அவரது நூலையே தங்களுக்கிசைந்தாற்போல் புடைத்தெடுத்துக்கொண்டார்கள்.எனக்குக் கிடைத்த நூலை நான் இன்னும் முழுமையான வாசிப்புக்கு உட்படுத்தவில்லை. அதற்குச் சில காலம் பிடிக்கலாம். ஆனால் ஒரு மேலோட்டமான பார்வையிலேயே அவரது சமூக அரசியல் பேசும் அழுத்தமான நிலைப்பாட்டினை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. இன வரைவியல் அடிப்படையிலான ஒரு சமூகப் போராளியின் கண்ணோட்டத்தைப் பிரதிபகக்கும் நிலைப்பாடு. நூலின் விரிவாக்கத்தில் விளைந்த அதன் சுயேச்சையான போக்கால் இந்த நிலைப்பாடு அவரை வந்தடைந்ததா, அல்லது நூலுக்கு வெளியேயும் அதைக் கொண்டிருந்தாரா, கொண்டிருந்தாரெனில் புறத்தே வேறெங்கேனும் அதைப் பதிவு செய்தாரா என்பவையெல்லாம் ஆய்வுக்குரியவை. நூலுக்கு அவர் எதிர்கொண்டிருக்கக்கூடிய கடும் விமர்சனங்கள் நடைமுறையில் அவரை சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இறையியலாளராக, அதிலும் ஆளும் வர்க்கச் சார்போடு இயங்குபவராகக் குவியப்படுத்தியிருக்கும் பட்சத்தில் அவருடைய புறப்பதிவுகளில் அந்த நிலைப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒப்பிலக்கணம் அவரது ஆய்வறிவின் வெளிப்பாடு. பிற எழுத்துகள் ஒரு சராசரி பாதிரியின் அன்றாட முறைப்பாடு. இதை நான் இங்கே சொல்லக் காரணம், பறையர்கள் பற்றியோ அவர்களது அவலங்கள் பற்றியோ அவர் வேறெங்கும் பேச முனையவில்லை என்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது. (இது வெண்மணிப் படுகொலை பற்றி பெரியார் ஒன்றும் பேசவில்லை என்பதற்கொப்பானது.) ஆனால் அது எந்த விதத்திலும் நூலின் அரசியல் காத்திரத்தை எளிமைப்படுத்திவிடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.கால்டுவெல் 1856இல் "திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravadian or South Indian family of Languages) என்னும் தலைப்பில் தன் நூலை வெளியிடுகிறார். உள்ளடக்கமும் தலைப்பும் ஒன்றுக்கொன்று இணக்கமாய்ப் பொருந்தியிருந்த முதல் பதிப்பு அது. தலைப்பில் உள்ள "திராவிடம்” என்னும் சொல்லும், "திராவிட மொழிகள்” என்னும் கருத்தாக்கமும் கால்டுவெல்லின் கண்டுபிடிப்புகளல்ல. ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துவிட்ட சொற்கள் அவை. 1801க்கு முன்பே "திராவிட மொழிகள்” சிலவும் அவற்றைக் குறிக்கும் அப்பெயரும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டன. ஆயினும் "அப்படியொன்றும் இல்லை. சமஸ்கிருதத்திகருந்து தனித்து அடையாளப்படும் மொழிகள் ஏதுமில்லை. அப்படிச் சொல்லப்படுபவையும் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவையே” என்றே கூக்குரலிடப்பட்டது. அதாவது, இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமஸ்கிருதமே மூலம் என்பது ஐயத்திற்கப்பாற்பட்ட நம்பிக்கையாய்த் திணிக்கப்பட்டிருந்தது.கால்டுவெல் செய்ததெல்லாம் அந்த நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைத்ததுதான். ஏற்கனவே கண்டறியப்பட்ட மொழிகளையும் சேர்த்து முதற்பதிப்பின்போது 12 திராவிட மொழிகளை அடையாளப்படுத்தி "இவை சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர்த்தன்மை கொண்டவை. தனித்தன்மை பேணுபவை. தனித்தியங்குபவை” என்று ஆய்வு ரீதியாக நிலைப்படுத்தினார். மேலும், "திராவிட மொழிகளுள் தமிழ் மிகவும் பழமையானது; செழுமையானது; இலக்கிய வளப்பம் மிக்கது; தனித்துவமான மூலச் சிறப்புள்ளது” என்று சான்றாதாரங்களோடு மெய்ப்பித்தவரும் அவரே. அதாவது, தமிழின் செம்மொழித் தகுதியை முதன்முதலாக உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தவர் என்று சொல்லலாம்.இங்கே நாம் ஓர் உண்மையைத் தெளிவாக நினைவில் கொள்ள வேண்டும். கால்டுவெல்தான் தன் ஆய்வின் மூலம் முதன்முதலில் திராவிட மொழிகளின் தனித்தன்மையை நிலைநாட்டியவர்; தமிழின் தொல்பழஞ் சிறப்பை விதந்து கூறியவர். அதற்கும் மேலாக, "பிற திராவிட மொழிகளின் பெருவாரியான சிறப்புச் சொற்கூறுகளை யெல்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும் தனிச்சிறப்பு தமிழுக்கு மட்டுமே உண்டு” என்று கண்டறிந்து நம்மைப் பெருமிதப்படுத்தியவர். ஆனால் நம்மில் பெரும்பாலோர் முழங்கிக்கொண்டிருப்பது இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றை- அதாவது, தமிழிகருந்துதான் பிற திராவிட மொழிகள் தோன்றின என்பதாக. இதைக் கால்டுவெல் சொல்லவில்லை. நம்மில் எந்த மொழி அறிஞரும்கூட உலகம் ஒப்பும்படி மெய்ப்பிக்கவில்லை. பிறகு நமக்கெதற்கு இந்த வில்லங்கமான ஆசை? தமிழர்களின் இந்த "அடாவடித்தனமான உரிமை கோரல்” பங்காளி மொழிக்காரர்களைப் பதற்றத்தில் ஆழ்த்துகிறது. குதர்க்கத்தை வளர்க்கிறது.ஏற்கனவே பிற திராவிடச் செவ்வியல் மொழிகள் விடுபட முடியாதபடி சமஸ்கிருதக் கூறுகளை உள்வாங்கிக்கொண்டு, உளவியல் ரீதியாகத் தமிழ்-தமிழர்க்கொதிரான பகை முகத்தை எழுதிக்கொண்டுவிட்டன. கடைசியில் சமஸ்கிருதத்திகருந்து தன்னந்தனித்ததாக எஞ்சி நிற்பது தமிழ் மட்டுமே என்றாகிவிட்டது. இது ஒருவகை அரிய சிறப்புதான் எனினும் முற்றும் சமஸ்கிருத மயமான இந்தியப் பின்புலத்தில் ஒற்றையாய் நின்று உட்பகையையும் வெளிப்பகையையும் வென்றெடுப்பதென்பது உயிர்வாதையாய் மாறி வருகிறது. சூரியக் குடும்பம் ஒரு காலத்தில் பரந்து விரிந்த நீர்மமாய் சுற்றிக்கொண்டிருந்தது என நம்பப்படுகிறது. (இங்கே வேறொரு கட்டுரையிலும் இது சொல்லப்படுகிறது.) கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் ஒரு கட்டத்தில் அது மெல்லமெல்ல உறைந்து, விரிசலுற்று, பல துண்டுகளாகச் சிதறித் திரண்டு, இன்றுள்ளதைப்போல தனித்தனிக் கோள்களாகத் திடப்பட்டன என்பார்கள், ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு நிறையீர்ப்பில் திடப்பட்டு, ஒருபோக்கான வெவ்வேறு ஓடுபாதையில் நிலைப்பட்டது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம். அவற்றுக்குள்ள ஒற்றுமை அவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒரே மூலத்திகருந்து பிரிந்தவை என்பதே.திராவிட மொழிகளுக்கும் இதுதான் சூத்திரம். எல்லா மொழிகளும் திராவிட மூலத்திகருந்து வெவ்வேறு காலகட்டத்தில் திரண்டு பிரிந்தவை. ஆகவே அவற்றின் மாதிரிகளும் இயங்கு திசைகளும் பொதுத்தன்மை உள்ளவையாகின்றன. முதகல் பிரிந்த தமிழானது திராவிட மூலத்தின் குவிமையத்திகருந்து வெளித்திரண்டிருக்கலாம். அதனால்தான் திராவிட மூலக் கூறுகள் அனைத்தையும் தன்னுள் சேமித்துக்கொண்டதாய் இருக்கலாம். ஒவ்வொரு மொழியும் எப்போது ஒழுங்கமைதி பெறுகிறதோ, அப்போதிருந்துதான் அதன் வரலாற்றடையாளம் தொடங்குகிறது. ஆனால் அதன் தனித்திரட்சிக்கான வளர்சிதைமாற்றங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கும். திராவிடச் செவ்வியல் மொழிகளில் மலையாளத்தின் தோற்றம்-அதாவது வரலாற்றடையாளம்- மிக இளமையானது. ஆனால் அதன் தனித்திரட்சிக்கான முன்னெடுப்புகள் வெகுகாலத்துக்கு முற்பட்டிருக்க வேண்டும். 8ஆம் நூற்றாண்டில் மலையாளம் "இல்லை”. ஆனாலும், அப்போது பிறந்த ஆதிசங்கரன் சிலப்பதிகாரத் தமிழையோ பாண்டித் தமிழையோ பேசியிருக்க மாட்டான். பேசியிருந்தால் சம்பந்தனை "திராவிட சிசு”-அதாவது "தமிழ்க் குழந்தை” என்று பிறனாய் அடையாளப்படுத்தியிருக்க மாட்டான். ஆகவே அவன் பேசிய மொழி தமிழ் அன்று. அவனும் தமிழனல்லன். (அவன் ஒரு நம்பூதிரியாதலால் தமிழனல்லன் என்பதாக இடைவெட்டும் இனப்பகையை இங்கு பொருட்படுத்தவில்லை.) அவனை மலையாளக் கூறுகளுள்ள ஆனால் "மலையாள”மாகாத ஒரு மொழிக்குரியவன் என்று அடையாளப்படுத்தலாம். (அரசதிகார வரலாறு அவனைக் "கேரளீயன்” என்று சுட்டும். இந்தப் பெயர் நிலம் சார்ந்த சிறப்புச் சுட்டலாக மாமன்னன் அசோகன் கால முதலே தொடர்ந்து வந்திருக்கிறது.) அதை விடுத்து, அப்போது மலையாளம் இல்லையாதலால் அவன் தமிழ் பேசிய தமிழனே என்று வரையறை செய்வது குதர்க்கமே தவிர வேறில்லை.2ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ்நாட்டைக் களப்பிரர்கள் ஆண்டார்கள். அவர்கள் இன்றைய கன்னட நிலப்பகுதியிகருந்து வந்தவர்கள். அப்போது கன்னடம் அடையாளப்பட்டிருக்கவில்லை. அவர்களும்கூட தமிழ் வளர்ச்சியிலும், பொதுக்கல்வியைப் பரப்புவதிலும், பார்ப்பன வரலாற்றுச் சொல்ககள் அவர்களது ஆட்சிக் காலத்தை "இருண்ட காலம்” என்று சபிக்கும்படியாக பார்ப்பனர்களையும் பார்ப்பன தர்மங்களையும் ஒடுக்குவதிலும். பௌத்த- ஜைன மதங்களை ஆதரிப்பதிலும் தமிழிலும் தமிழ்நாட்டிலும் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்கள். ஆயினும் அவர்கள் தமிழர்களா என்றால், இல்லை. (இல்லை என்று எல்லாரும் எளிதாய் நம்புகிறார்கள். காரணம் பார்ப்பனர்கள் அந்தக் காரியத்தை ஏற்கனவே செய்துவிட்டார்கள்.) திராவிட மொழிகளின் சகோதரத்துவம் பற்றிய இவ்வகைப் புரிதலே திராவிடர்களை சமப் பங்காளிகளாய் ஒருங்கிணைக்கும் அர்த்தமுள்ள காரணிகளாய் இருக்கும்.கால்டுவெல்லின் ஒப்பிலக்கணமே அப்படியோர் திராவிட ஒருங்கிணைவை- சமஸ்கிருதத்துக் கெதிரானதும் அதன் மேன்மை-தாழ்மைக் கோட்பாடுகளைக் கடும் பகடிக்குட்படுத்துவதுமான திராவிட ஐக்கியத்தை ஓர் இயங்குவிதியாய் வரையறுக்கும் கலகப் படைப்புதான். கலகம் ஒப்புக்கொள்ளப்படும்போது அதுவே புரட்சியாகப் போற்றப்படுகிறது. புரட்சி தோற்கும்போது கலகமாக ஒடுக்கப்படுகிறது. கால்டுவெல் நூலுக்கு இரண்டுமே நேரவில்லை. அப்படி நேராமல் பார்த்துக்கொண்டதில் ஆதிக்கத் தமிழ்ச்சாதிகளுக்கு எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லை. அதன் வெளிப்பாடுதான் கால்டுவெல் வெறும் ஒப்பிலக்கணவாதியாய் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.இந்தியாவுக்கு வந்த எல்லா பாதிரிகளையும் போலவே கால்டுவெல்லும் சமஸ்கிருதம் கற்றவர்தாம்; நேசித்தவர்தாம்; வியந்தவர்தாம், தமிழைவிட சமஸ்கிருதம் அதிகப் பழமையும் இலக்கியச் செழுமையும் கொண்ட மொழி என்னும் தகவலறிவில் நம்பிக்கை கொண்டவர்தாம். ஆயினும் தமிழைப் பற்றித் தாம் கண்ட உண்மைகளைத் தயங்காமல் எடுத்துவைப்பதில் நேர்மை காத்தவர். எனவேதான். தென்னிந்திய மொழிகளின் அகராதிகளில் மகந்து கிடக்கும் சமஸ்கிருதச் சொற்களைக் கருத்தில் கொண்டு. "சமஸ்கிருதத்திகருந்தே அவை உருவாயின” என்று பலரும் முடிவு செய்த குருட்டுத்தனத்தை அவர் மேற்கொள்ளவில்லை.திராவிட மொழிகள் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர்த்தன்மை கொண்டவை என்பதை வலுப்படுத்தும் விதமாக. அவை சித்தியன் மொழிக் குடும்பத்துக்கு நெருக்கமானவை என்பதையும் அவரே நிறுவுகிறார். இது அவரது ஆய்வினை ஓர் எதிர்ப் புரட்சியின் வலிய போர்க்கருவியாக- சமஸ்கிருத மேன்மைக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் கலகக் குரலாகத் தன்னடையாளம் கொள்ள வைக்கிறது.முதல் பதிப்பின்போது அவருக்கு இது ஒரு புதிய கண்டுபிடிப்பு மட்டுமே. ஆனால் இரண்டாவது பதிப்பின்போது இதுவே அவரை வழி நடத்தும் காரணியாகிவிடுகிறது. சமூக மதிப்பீட்டில் இதன் பாரதூரமான தாக்கம் சரியாகவே உணரப்பட்டிருந்தது.சமஸ்கிருதம். யுரேஷியராகத் தோற்றம் பெற்று, இந்தோ - ஆரியராக நிலைப்பட்ட வெண்ணிறத்தவரின் மொழி. ஐரோப்பிய வெள்ளையர்க்குச் சகோதர மொழி. வெண்மை, மேன்மையின் சின்னம்; உயர்வின் அடையாளம். ஐரோப்பியர் இன்னும் வெள்ளையாகவே இருந்து அந்த உயர்வின் உளவியலை அடை காக்கிறார்கள். இந்தோ -ஆரியர்களின் வெண்மையோ வரைமுறையற்ற இனக்கலப்பால் கலங்கிக் கறுத்துக் குழம்பிப் போய்விட்டது. ஆயினும் சமஸ்கிருதத்துக்குச் சொந்தம் கொண்டாடுகிறவர்கள் தங்கள் வைதிகக் கோட்பாடுகளாலும் கலாச்சார வீச்சின் வலிய மனோபாவத்தாலும் தங்களை இன்னும் "மேலானவர்கள்” என்பதாகவே கற்பிதஞ் செய்துகொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். சித்தியன் (துரானியன்) மொழிக்குடும்பம் கறுப்பு நிறம் சார்ந்தது. மனிதகுலத்தில் ஆகத்தாழ்வின் அடையாளம். வெள்ளையை மேன்மையின் சின்னமாகக் கொள்பவர்களுக்கு கறுப்பு கீழ்மையின் வெளிப்பாடு. தமிழை சமஸ்கிருதத்தோடு தொடர்பு படுத்தும்போது அதற்கொரு ஒளியும் மேன்மையும் வந்துவிடுமாம்.அப்படிப்பட்டதொரு மேன்மையின் ஆசீர்வதிப்பில் தன்னை ஒரு "தாழ்மையுள்ள தமிழ் மாணவன்” என்று ஜி.யு.போப் ஐயர் தன் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லும்போது அவரது வெள்ளை நிறம் கண்ணியம் காத்துக்கொள்கிறது. அல்லாமல் சித்தியன் மொழிக் குடும்பத்தோடு சம்பந்தப்படும் தமிழுக்குத் தன்னை மாணவனாக்கிக் கொள்வதெனில் அது வெள்ளை ஐயருக்கு வெட்கக்கேடான வீழ்ச்சியாகிவிடுகிறது. கால்டுவெல்லின் ஆய்வு முடிவுகளுக்கு ஜி.யு.போப் கடும் கண்டனம் தெரிவித்தார் எனில் அதன் வேர் மூலம் இப்படியாகத்தான் நீள்கிறது. இது இன்னொரு உள்ளோட்டத்துக்கும் இட்டுச் செல்கிறது: தமிழ் அதன் உள்ளார்ந்த செழுமைக்காகப் போற்றப்பட்டதைவிட அதை சமஸ்கிருதச் சார்பின் கிளைச்செழுமையாகக் கருதித்தான் ஜி.யு.போப் போன்றவர்கள் போற்றியிருக்கிறார்கள் என்றாகிறது. இதைத்தான் நீரைவிடக் குருதி நெருக்கமானது என்பது. கால்டுவெல்லுக்கு கறுப்பைப் பற்றிய ஒவ்வாமை இல்லை என்பதோடு சமஸ்கிருதக் கலாச்சாரத்தின் மேன்மைக் கோட்பாட்டிலும் உடன்பாடில்லை என்பது தமிழுக்கு அவர் வழங்கிய நேர்மையான கொடை.150 ஆண்டுகளுக்கு முன் இந்திய மொழியியலில் நிகழ்த்தப்பட்ட முதல் முயற்சியாக கால்டுவெல் தன் ஒப்பிலக்கணத்தை உருவாக்கினார். தமிழுக்கு மக்களாய்ப் பிறந்த இன்றைய நம் தமிழறிஞர்கள் பலரை விடவும் அதிகம் தமிழறிந்தவர் கால்டுவெல் என்று சொன்னால் அது தவறாய் இருக்காது. அவர் ஒன்றும் வரலாறு படைக்க ஆசைப்பட்டுத் தன் நூலை எழுத முனையவில்லை. தமிழை அதன் கடைசிக் கணு வரை கண்டு சுவைக்கும் ஆசையோடே எழுதினார். உண்மையில் திராவிட மொழிகளின் சிறப்பையும் உயிர்ப்பையும் வெளிச்சப் படுத்துவதெனில் அவற்றை ஒப்பாய்ந்து கற்பதொன்றே சரியான வழி என்பது அவரது அறிவியல்பூர்வமான நம்பிக்கையாய் இருந்தது. தனக்குப் பின் தென்மொழிகளின் சொந்தக்காரர்களே இன்னும் தீவிரமாக, ஆழமாக, விரிவாக ஒப்பாய்வு செய்து தங்கள் மொழிகளின் சீர்மையை வெளிச்சப்படுத்த வேண்டும், அதற்குத் தனது நூல் ஒரு முன்மாதிரியாய் இருக்க வேண்டும் என்பது அவருடைய பெருவிருப்பாய் இருந்தது. ஆனால் அதை நிறைவேற்றும் அருகதையை நாம் இன்னும் பெறவில்லை.திராவிட மொழியியலில் இன்றைக்கும் அவருடைய நூல்தான் முதலும் கடைசியுமாகப் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது எனில், அதுவே அவரது சிறப்பையும் நமது பொறுப்பின்மையையும் ஒருசேரச் சுட்டும் சாட்சியமாகிறது.கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் அவரது முப்பத்தேழாண்டு காலத் தமிழுறவிலிருந்து காதல் மிக்க கரிசனத்தோடு வடித்திறக்கப்பட்ட இனிய சாரம். அதன் முதல் பதிப்புக்கு அவர் எதிர்பார்த்ததை விடவும் மிகுந்த வரவேற்பு கிடைத்ததென்கிறார். ஆயினும் அதன் இரண்டாம் பதிப்பு அடுத்து 19 ஆண்டுகள் கழித்து 1875இல்தான் கொண்டுவர முடிந்திருக்கிறது. அதில் மேலும் ஒரு திராவிட மொழி அடையாளப் படுத்தப்பட்டது. இந்த நீண்ட இடைவெளியில் அவர் சேமித்த பட்டறிவும் ஆய்வுமுறையின் புதுப்போக்குகளும் அவரது முதல் பதிப்பின் குறைபாடுகளையும் போதாமைகளையும் கவனம் கொள்ள உதவுகின்றன. ஆகவே, தன் நூலைத் திருத்தியும், விரித்தும், புதுக்கியும், எதிர்வரும் ஐயங்களைச் சோதித்தும்,சரிபார்த்தும், காலப்பரிமாணத்தை முன்னடைவு செய்தும் ஏறக்குறைய ஒரு புது நூலாகவே செழுமைப்படுத்தி இரண்டாம் பதிப்பாகக் கொண்டுவருகிறார். இப்போது அவரது முதல் பதிப்பு கிடைக்குமெனில், இரு பதிப்புகளையும் ஒப்பிட்டு அவரது ஆய்வுச்சிந்தனையின் போக்கையும் புதிய வெளிச்சங்களையும் வெகு துல்லியமாகக் கண்டறிந்து வகைப்படுத்தலாம். முதல் பதிப்பில், நூலின் குவியத்தைக் கருத்தில் கொண்டுதான் அதற்கான தலைப்பைத் தெரிவு செய்திருப்பார். ஆனால் இரண்டாம் பதிப்பில் உள்ளடக்கம் தலைப்புக்குள் ஒன்றுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அடங்க மறுத்து, உடன்பாடான திசையில் தன்னிச்சையாய்ப் பரவி விரிகிறது. ஒளியின் குவிமையம் எரியும் திரிதான் என்றாலும், அதன் வெளிச்சம் வெகுதூரம் வரை பரவித் தாவுவதைப்போன்றதொரு அளாவுதலில் விசாலிக்கிறது. எனில், எப்போது புதிய பேசுபொருள்கள் நூலின் உள்ளடக்கமாகச் சேர்க்கப்பட்டனவோ அப்போதே அதன் தலைப்பிலும் அதைப் பிரதிபலிக்கும் வகையில் தகுந்த இணைப்பைச் செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.அதாவது, ஓர் உதாரணத்துக்குச் சொல்வதெனில் ஏற்கனவே இருக்கும் தலைப்போடு “and A critical Review of the social evolution of the Dravidians of South Indians” என்பது போல ஏதேனும் பொருத்தமான ஒன்றை இணைத்து, புதிய சேர்க்கையை நூலின் பிரிக்க முடியாத அங்கமாக்கிப் பெயரடைவு செய்திருக்கலாமே என்று படுகிறது. இது ஒருவகையில் கொடுத்த தலைப்புக்குள் கட்டுரை எழுதப் பயிற்றுவிக்கும் பள்ளிச் சிறுவர் விவகாரம்தான். அதனால்தானோ என்னவோ கால்டுவெல்லுக்கு அது தோன்றவில்லை. அதற்கு மாறாக, அந்தச் சாதனையாளர் இரண்டாம் பதிப்பைத் தயாரித்ததில் தான் செலுத்திய அக்கறையும் உழைப்பும் கொஞ்சநஞ்சமல்ல என்று தன்னைத்தானே தட்டிக்கொடுத்துத் தேற்றிக்கொள்கிறார். அதற்கு மேலும் சென்று, "தான் மிகுந்த ஈடுபாட்டோடு உழைத்துத் திரட்டித் தந்துள்ள பல குறிப்புகளும், திராவிட மொழிகளைச் சிறப்புப் பாடமாகப் பயில்கிறவர்களுக்கு வேண்டுமானால் மட்டு மீறிய ஈடுபாட்டைத் தருவதாயிருப்பினும், மற்றவர்களுக்குக் கொஞ்சமும் ஈர்ப்பற்றதாகவும் தேவையற்றதாகவும் இருக்கவும் வாய்ப்புண்டு” என்று ஓர் எதிர் சாட்சியம்போல் வீண் எக்களிப்பைத் தவிர்க்கும் நல்லடக்கத்தோடு சொல்லி வைக்கிறார்.இந்த வாசகங்களில் தெரியும் நம்ப முடியாத அளவு பாசாங்கற்ற கால்டுவெல்லைத் தாங்கவும் கொண்டாடவும் தவறுவீர்களெனில், சந்தேகமே இல்லை- நீங்கள் தார்க்குச்சியால் வழிநடத்தப்படும் வ(ச)ண்டி மாடுகள்தாம். ஆனால் அதுதான் நடந்தது. கால்டுவெல்லின் இந்த அறிவிப்பையே சாக்காகக் கொண்டு அவர் காலத்திற்குப் பிறகு 1913இல் மூன்றாம் பதிப்பை வெளியிட்டவர்கள் "கால்டுவெல்லே ஒத்துக் கொள்வதைப்போல, நூலின் மைய நீரோட்டத்துக்குப் பொருந்தாத பகுதிகளை நாங்கள் நீக்கிவிட்டோம்,” என்று வெகு அலட்சியமாக அறிவிப்பதுடன், "முழுதும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பலவும் பேசியுள்ளார். பல பக்கங்கள் நீளும் அவற்றையும் நீக்கிவிட்டோம்,” என்று நூலாசிரியரையே குறை கூறித் தங்கள் அத்துமீறலை நியாயப்படுத்தியுள்ளனர். இதில் அவர்கள் சொற்களின் தொனிப்பொருள் அவர்களுடைய செயலை விடவும் அருவருப்பாய் உள்ளது.மனித விழுமியங்களின் இனிய சித்திரமாய்த் தன்னை ஒப்புக்கொடுக்கிற தோழன் ஒருவனின் தொண்டைக் குழியைக் கவ்விக்குதறி இரத்தம் குடிக்கிற செயலோடு இதை ஒப்பிடலாம். இரண்டாம் பதிப்பின் ஒளியச்சுத் தாள்கட்டு என் கைக்கு வந்தபோது அடைந்த முதல் பரவசத்திலிருந்து மீண்டு இயல்பு நிலையை எட்டியதும் நான் செய்த முதல் வேலை, என்னிடமுள்ள மூன்றாம் பதிப்பை வைத்துக்கொண்டு எவையெல்லாம் நீக்கப்பட்டுள்ளன என்று கணக்கெடுத்ததுதான்.நீக்கப்பட்ட பகுதிகள்:1. The relative antiquity of Dravidan Literature என்னும் தலைப்பின் கீழ் வரும் 34 பக்கங்களுள்ள முழுப்பகுதியும்2. பின்னிணைப்புகளில்,II Remarks on the Philological portion of Mr,Gover’s “Folk songs of Southern India”III, Sundara PandyaIV, Are the Pariars (Pareiyas) of Sourthern India Dravidans?V, Are the Neilghery (Nilagiri) Tudas Dravidans?VI, Dravidian physical TypeVII. Ancient Religion of the Dravidiansஇந்த 6 தலைப்புகளில் மொத்தம் 76 பக்கங்கள். பொருளடக்கத்தில் இவை நீக்கப்பட்ட 3 பக்கங்கள்.3. அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்ட 507 வரிகள்.4. நூலின் உட்பகுதிகளிலிருந்து அங்கங்கே பத்திகளாகவும் பக்கங்களாகவும் (குறிப்பாக Introduction பகுதியிலிருந்து).மொத்தம் நீக்கப்பட்ட பகுதிகள் மூன்றாம் பதிப்பின் அச்சு வடிவத்தில் 160 பக்கங்கள் வரக்கூடியவை. இதில் வெறும் 48 பக்கங்கள் உள்ள இரண்டு பகுதிகளை நீக்கியதற்கான காரணங்களை மட்டும் தருகின்றனர். 1. "திராவிட இலக்கியங்களின் பழமை”ப் பகுதியை நீக்கக் காரணம்: "அது நூலின் மையக்கருத்துக்குத் தேவையில்லாதது. பழங்கால நூல்களுக்கு கால்டுவெல் கணித்த காலங்கள் பலவும் காலாவதியாகிவிட்டன (இது உண்மை).” 2. பின்னிணைப்பில் கோவருக்கு கால்டுவெல் தரும் பதிலை மட்டும் குறிப்பிட்டு அதை நீக்கியதற்கான காரணம்: "கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையற்ற அல்லது காணாமல் போய்விட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கு கால்டுவெல் பெரும் சிரமம் எடுத்துக் கொண்டு பல பக்கங்களில் கூறும் அவை வீண் சர்ச்சைக்குரிய விஷயங்கள்.”மீதமுள்ள 70 சதவீதப் பக்கங்களை நீக்கியதற்கு அவர்கள் வெளிப்படையாக ஒரு காரணமும் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, அப்பகுதிகளைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதைக் கூட வெகு சாமர்த்தியமாகத் தவிர்த்துவிடுகின்றனர். அப்பகுதிகள் ஆதிக்கத் தமிழ்ச் சாதிகளின் உள்ளாவிக்கு விடப்பட்ட அறைகூவல்கள். இந்த உள்ளாவியின் பரந்த பின்புறத்தில் பார்ப்பனர்களின் பதுங்கு குழிகள் எப்போதும் நிரம்பியிருக்கும். அவர்களைக் காரணம் சொல்லித்தானாக வேண்டும் என வற்புறுத்தியிருந்தால் "அவை நூலின் மைய நீரோட்டத்துக்குப் பொருத்தமில்லாதவை” என்றுதான் சொல்லியிருப்பார்கள். அதை வெகு சாடைமாடையாகத் தங்கள் முன்னுரையின் கடைசிப் பகுதியில் சொல்லவே செய்கின்றனர். "கீழை தேயத்து மொழிகளை மாணவர்கள் கற்பதற்கான தொடர்புப் பாலமாய் கால்டுவெல் நூலை இணக்கப்படுத்துவதே எங்களது முக்கியப் பணி,” என்பது அவர்களது வாக்குமூலம்.1Our sole object has been to enable students to obtain access to so much of the author’s work as retain a permanent value in view of the increased attention paid to the study of oriental languages in general,- Editor’s Preface for the third editionஒரு நூல், அது எழுதப்பட்ட காலத்தின் இருப்பையும், கருத்தையும், தகவல்களையும், தடயங்களையும் அடிப்படையாகக் கொண்டே எழுதப்படுகிறது. அதைப் படிக்கிறவன் அல்லது பதிப்பிக்கிறவனின் விருப்பத்தையும் தேவையையும் கருதி எழுதப்படுவதில்லை. இந்த மலைமுழுங்கிப் பதிப்புச் செம்மல்களைப்போல ஒவ்வொருவரும் செய்யத் துணிந்தால் உலகத்தில் நூல்கள் வெறும் சோரக்குவியல்களாகவே மிஞ்சும். அவற்றை மானுடக் கசாப்புக் கடைகளில் கூறு கட்டி விற்கலாம்."தென்னிந்தியாவின் நாட்டுப் பாடல்கள்” எழுதிய கோவர் முக்கியமானவரா முகவரியற்றவரா என்பதுகூட கால்டுவெல்லின் பிரச்சினையில்லை. மொழியியல் பற்றிய அவரது கூற்றுகளை விவாதித்துத் தன் நிலைப்பாட்டினை நியாயப்படுத்த வேண்டியது அவரின் கடமை. அதைத்தான் அவர் செய்துள்ளார். இந்தப் பதிப்பாளர்கள் கோவரை வெற்றாள் என்று கட்டம் கட்டுவதன் மூலம் கால்டுவெல்லின் கடமையையே கொச்சைப் படுத்துகின்றனர். ஒருவர் வெற்றாளா வெற்றியாளரா என்பது அவரை எதிர்கொள்கிறவர்கள் தீர்மானிக்க வேண்டிய கருதுபொருள். இராமாயணத்தையோ மகாபாரதத்தையோ குழி தோண்டிப் புதைத்துவிட முடியும் எனில் வால்மீகியும் வியாசனும்கூட வெற்றாள்கள்தாம்.இவ்வொப்பிலக்கண நூலின் அடிக்குறிப்புகள் அனைத்தையும் ஏன் நீக்கினார்கள் என்பதற்குக் காரணம் சொல்லப்படவில்லை. அடிக்குறிப்புகள் நூலுக்கு இணையான முக்கியத்துவமுள்ளவை. எழுதியவரின் கடின உழைப்பைக் கோருபவை. அவரது அரசியலையும் மதிப்பீடுகளையும் பேசுபவை. மேலதிகத் தகவல்களை அடைகாப்பவை. உதாரணத்துக்கு ஓர் அடிக்குறிப்பைப் பார்க்கலாம். நூலின் 3ஆம் பக்கத்திலேயே வரும் அடிக்குறிப்பு இப்படிப் பேசுகிறது: "ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் அரசுப் பணியாளர்கள், பல்கலைக் கழகத் தொடர்பாளர்கள் தவிர ஆங்கிலம் ஒருபோதும் பொதுமக்கள் மொழியாக முடியாது. அப்படி ஆகவேண்டுமெனில் நாட்டு மக்கள் தொகைக்குப் பொருத்தமாக ஆங்கிலேயக் குடிகளும் கூடுதலாய் இருக்க வேண்டும். ஆனால் இப்போதைய தொகை சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. திருநெல்வேலி, மதுரை ஆகிய இரு மாவட்டங்களின் மொத்த மக்கள்தொகை 40 இலட்சம். ஆனால் இங்குள்ள ஆங்கிலேயர்களின் எண்ணிக்கையோ வெறும் 150 மட்டுமே. நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், எஸ்டேட் சொந்தக்காரர்கள் என்போரைச் சேர்த்துத்தான் இந்தத் தொகை. பெண்களையும் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டாலும் 200க்குக் குறைவுதான். 40 இலட்சத்திற்கெதிராக விரல் விட்டு எண்ணக்கூடியவர்களாய் ஆங்கிலேயர்கள்!” என்று சொல்லிச் செல்கின்றார். இப்படி ஒவ்வொரு அடிக்குறிப்பும் தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்ததே. ஆனால் எல்லாவற்றையும் நறுவிசாகத் துடைத்து விட்டார்கள். இதற்குப் பெயர்தான் பதிப்புப் பணி என்றால் இதைச் செய்த மண்டைக்குள் என்ன வஞ்சகம் பிறாண்டிக் கொண்டிருந்திருக்கும்?"திராவிட இலக்கியத்தின் பழைமை” பற்றிய பகுதியில் பழம் நூல்களுக்குக் கால்டுவெல் கணிக்கும் காலங்கள் இன்றைக்கு அபத்தமானவைதான். ஆனால் அவர் காலத்தில், பல தமிழ்நூல்கள் அறியப்படாத நிலையில், அவருக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு, நடுநிலை நிற்க விரும்பும் ஓர் அந்நிய அறிவியல் மனத்துக்கு அவ்வளவுதான் கண்டடைய முடிóதிருக்கிறது. "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி,,,” என்னும் பாடலில் வரும் "வான்கோழி”யை வைத்துக்கொண்டு ஒளவையார் காலத்தை 18ஆம் நூற்றாண்டு வரை தள்ளிக்கொண்டு வந்து பார்க்கலாமா என்று மலைத்துப் போகிறார்.வான்கோழி, 18ஆம் நூற்றாண்டில்தான் இந்தியாவுக்கு அறிமுகமாகிறது என்று அவர் சொல்ல, "இல்லை. அதற்கு முன்பே இங்கு இருந்தது” என்று அக்காலத் தமிழ்ப் புலமைகள் கச்சை கட்ட, இரு சாராருக்குமே ஒளவை என்னும் பெயரில் வெவ்வேறு காலகட்டத்தில் புலவர்கள் இருந்திருக்கக் கூடும் என்று தோன்றாமல் போயிற்றோ தென்தமிழகத்தில் நாசரேத் என்னும் ஊர் இருப்பதால், ஏசுநாதர் இங்குதான் பிறந்தார் என்று இன்னும் சிலபல நூற்றாண்டுகளுக்குப் பின் ஓர் ஆய்வாளன் தீர்மானித்தால் எப்படியிருக்கும்! நல்ல வேளை, கால்டுவெல் அறுதியிட்டுக் கூறத்துணியாமல் ஐயத்தின் பலன் கருதி நிறுத்திக் கொள்கிறார். அறிவியல் ரீதியான ஆய்வுக்கும் ஓர் எல்லையுண்டு என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.இவற்றையெல்லாம் இன்றைய கிடா மீசைத் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனில், நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்? கால்டுவெல்லுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு, "அன்று இருண்டிருந்த காலம் இன்று சிறிது விடிந்தொளிரும் நிலையிலேயே அவரது காலக் கணிப்புகள் முற்றாகப் பிழைகளாகிவிட்டன” என்று வெகு நிதானமாக ஒரு விளக்கக் கட்டுரை எழுதி நூலின் முகப்பிலேயே இணைத்திருக்க வேண்டும். அதை விடுத்து கட்டுரையையே நீக்கி விடுவதென்பது, பின்னொரு நாளில் "திருட்டுக் காலங்களைச் சுவைத்துக் கொண்டிருப்பவனின் பதற்றம் மிக்க அழிவேலை இது” என்று பிரிதொருவன் குற்றம் சுமத்த ஏதுவாகாதா? காலப் பிழையை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டால்,அந்தக் கட்டுரை இன்றைக்கும் நமக்குப் பல பயன் தரத்தக்க ஆய்வம்சங்களை வழங்குகிறது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிச் சொல்லும்போது 1. ஜைனர் காலம், 2. தமிழ் இராமாயண காலம், 3. சைவ மறுமலர்ச்சி காலம், 4. வைணவ காலம், 5. இலக்கி மறுமலர்ச்சி காலம், 6. பிராமண எதிர்ப்பு காலம், 7. தற்கால எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்திப் பேசுகிறார்.கட்டுரையின் பிற்பகுதியில் அச்சுப்பொறி அறிமுகமான பிறகு 1865இல் வங்க மொழியிலும் தமிழிலும் 12 வகைப்பாடுகளில் வெளிவந்துள்ள நூல்களின் எண்ணிக்கையைத் தருகிறார்.* தண்டச் சோற்றுத் தடியன்களைப் பெற்ற அன்னையொருத்தி தன் சாமர்த்தியத்தால் அவர்களை செக்குமாடாகவேனும் உழைக்க வைத்து, தன்னையும் தன் குடிப்பழமையையும் காத்துக் கொண்டாற்போல, தமிழே தன்னைத் தற்காத்துக் கொள்கிறதோ என்று மலைக்கத் தோன்றுகிறது. தமிழ் நூல்கள் எண்ணிக்கையில் விஞ்சியிருப்பினும் வங்கத்தின் அறிவுச் செயல்பாடு போலத் தமிழில் இல்லை; மாறாக, பழையதை மறுபதிப்புச் செய்துகொள்வதே அதிகமாயிருந்தது என்பது அவர் கண்டறியும் உண்மை. இதில் உற்றறிந்து தேற்றிக் கொள்வதற்கும் ஓர் உண்மை இருக்கிறது: மறுபதிப்புச் செய்துகொள்ளுமளவு தமிழில் பழையவை பல்கிப் பெருகியிருந்தன என்னும் உண்மை!இந்தக் கட்டுரையின் கடைசி வாக்கியம் இது:I have added an excurses on ‘Sundara Pandia’. and I have endeavoured to answer the question. “Are the Paraiyas and Tudas Dravidians?” and have adjoined some remarks “on the Dravidian Physical Type”. and “on the Religion of the ancient Dravidian Tribes,”மூன்றாம் பதிப்புச் செய்தவர்களுக்கு இந்த வாக்கியம்தான் பிரச்சினையே. கோவருக்கான பதிலைத் தவிர்த்தது ஒரு போக்குக்குத்தானே தவிர அவர்களுக்கு அது முக்கியமில்லை. மாறாக, இந்த வாக்கியத்தைக் கொண்டுள்ள கட்டுரையையும் இவ்வாக்கியத்தில் குறிக்கப்படும் பின்னிணைப்புகளையும் முற்றாக மௌனப்படுத்துவதே இவர்கள் பதிப்புப் பணியின் தலையாய நோக்கமாயிருந்திருக்கிறது.ஆக, கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் மீதான என் கவனங்களை இரண்டே புள்ளிகளில் தொகுத்துவிடலாம் என்று தோன்றுகிறது. இவ்விரு புள்ளிகள் மீதான கருத்தியல் தாக்கங்களின் எதிர்வினைகளாகத்தான் நடைமுறைச் செயல்பாட்டுப் பரிமாணங்கள் தமிழ்ச் சமூகத்தை ஊடும் பாவுமாக நெய்து கொண்டிருக்கின்றன.முதல் புள்ளி: சமஸ்கிருதப் பசுமாட்டை அதன் புனித ஊர்வலங்களிகருந்து ஓட்டிவந்து அதற்கான முளைக்குச்சியில் கட்டிப்போட்டதும், திராவிட மொழிகள் தனித்துவமுள்ளவை என்பது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு வெளியில் யுரேஷிய மொழி என்ற அளவிலேயே சமஸ்கிருதம் திராவிட மொழிக்கூறுகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது என்று நிரூபித்ததும் அதன் "தேவ பாஷை” படிமத்தை அடியோடு தகர்த்துவிடப் போதுமானதாயிருந்தன. நூல் வந்த காலத்தில் வெள்ளையரும் இதை விரும்பவில்லை. இந்திய சமூகத்தை இரண்டாகப் பிளந்துவிடும், சமூக அமைதியைக் குலைத்துவிடும் என்னும் வருத்தம் அவர்களுக்கு. ஆயினும் அவர்களது அறிவு நாணயம் அதை ஏற்கவே செய்தது.வேதப் பார்ப்பனர்களுக்கோ இது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்னும் கோபம். அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் மலையே குலைந்தாலும் நிலை குலையாது தங்கள் "மேட்டிமைக் கலாச்சாரத்தை”த் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியைக் கைவிடாதிருப்பதுதான். முடிந்தால் இந்த நூலையே அமுக்கியிருப்பார்கள். ஆனால் கால்டுவெல் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர், ஆக்கிரமிப்பு இனத்தில் பிறந்தவர் என்பதால் நூல் வெளியீட்டைத் தடுக்க முடியவில்லை. சூத்திரச் சாதிகளுக்கு நூல் ஒரு வரம்போல. பார்ப்பனர்களோடு அதிகாரப் பங்கீட்டுப் பேரம் பேசுவதில் சமநிலை கோரக் கிடைத்த ஒரு நல்வரவு. என்னதான் அறுத்துப் போட்டாலும் "பார்ப்பனர்கள் மேன்மக்களே. பார்ப்பன வேதம் புனிதமானதே” என்னும் இரத்தத்தில் ஊறிப்போன அடிமை மனோபாவத்திலிருந்து தங்களை மீட்டுக்கொள்ளாமலேயே பார்ப்பனரோடு அதிகாரப் பகிர்வு செய்துகொள்ளும் சூத்திரக் கில்லாடிகள் அவர்கள்.இரண்டாவது புள்ளி: பறையர்கள் உடல்ரீதியாகத் திராவிடர்கள்தாம் என்று ஐயத்திற்கிடமின்றி நிரூபித்ததோடு, வாழ்வியல் ரீதியாகவும் அவர்கள் சூத்திரர்களைப் போலவே பார்ப்பனக் கலாச்சாரவாதிகள்தாம் என்று உறுதிப்படுத்தியதாகும்.பார்ப்பனக் கலாச்சாரத்தின் அடிநாதம், குவிமையம், மணிமகுடம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்: அது "பிறவி ஏற்றத்தாழ்வை’ப் பேணிக் காப்பது. அதன் உறுதிப்பாட்டுக்கான துணைக்கருவிகள்தாம் வேதங்கள், ஆகமங்கள், ஸ்மிருதிகள், மதங்கள், கடவுள்கள் யாவும். கால்டுவெல் தன் பின்னிணைப்பில் பேசும் திராவிடக் கோட்பாடுகள் என்னதான் உண்மையாயிருப்பினும் ஆதிக்க சாதிகள் ஒருபோதும் அவற்றை உள்வாங்கிக் கொள்ளத் தயாராயில்லை. அதன் நடைமுறை வெளிப்பாடுதான் கால்டுவெல் மரணத்திற்குப் பிறகு அவரது பின்னிணைப்பை-அதிலுள்ள தலைப்புகளைச் சொல்லி அவற்றின் தடயங்களைக் கூடப் பதிவு செய்துவிடக் கூடாது என்னும் வைராக்கியத்தோடு- வெட்டியெறிந்துவிட்டு, மூன்றாம் பதிப்பைக் கொண்டுவந்து, கடந்த 95 ஆண்டுகளாக அதையே திருப்பித் திருப்பி மறுஅச்சு செய்து, தங்கள் திருகுதாளம் பற்றி மூச்சு காட்டாமல் அமைதி காப்பது. இந்தக் கீழறுப்பு வேலையில் பார்ப்பனர்களுக்கும் உடன்பாடுதான் என்பதால் அதை மறைத்துவிடுவது அவர்களுக்கு எளிதாகிவிட்டது.காலமெல்லாம் வர்ணாசிரம தர்மத்தைப் போற்றி வந்த "மகாத்மா”வை வர்ணாசிரமவாதி ஒருவனே கொன்றாற்போல, வாழ்வு முழுதையும் தமிழுக்காகவே செலவிட்ட கால்டுவெல்லை வஞ்சகத் தமிழர்களே மூடி மறைத்தார்கள்.இன்றைய காலகட்டத்தில் இந்திய சமூகம் தலித்துகளை விடுவித்து விடவில்லையென்றாலும், அவர்களைப் பற்றி கால்டுவெல்லை விடவும் தீவிரமாகப் பேசவும் விவாதிக்கவும் உருவாகியுள்ள வாய்ப்புகளைக் குலைத்துவிட முடியாமல் பல்லைக் கடித்தபடி சகித்துக்கொண்டு வருகிறது. ஆனால் இந்த விழிப்பை எழுப்பிய கால்டுவெல்லை மறைத்ததன் மூலம் அந்த வாய்ப்பை ஒரு நூற்றாண்டுக் காலம் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள்! இது ஒரு வரலாற்று இருட்டடிப்பு. தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட நூற்றாண்டுகால வன்கொடுமை.இப்போது என்னிடம் பளிச்செனத் தோன்றிய கேள்வி: நான் ஏன் இந்த நூலை வெளியிடக் கூடாது?- கால்டுவெல்லின் இரண்டாம் பதிப்பை அச்சு அசலாக அப்படியே கொண்டு வருவதோடு, நூல் பற்றிய இவ்விவாதங்களையும் மேலும் சில ஆய்வுகளையும் சேர்த்து? தமிழோடும் உலகோடும் நான் வாழ்ந்திருப்பதன் ஓர் அங்கமாக நான் ஏன் இந்த முயற்சியை மேற்கொள்ளக் கூடாது?அதற்கொரு தகுதி வேண்டும். அது எனக்கில்லையெனில் வேறு யாருக்கு இருந்துவிடக் கூடும்? எனக்குத் தமிழ் வெறும் ஊடக மொழியன்று. அது என் ஆளுமையின் வரிவடிவம். எனக்கென மொழி உண்டு; தமிழுக்குள் உயிர்க்கும் மொழி; சிலந்திக்கு வலை போல. வலையில் மிதக்கும் போதுதான் சிலந்தி அதன் உச்சத்தில். வலைக்கு வெளியே அது வெறும் பூச்சி; பசிக்குண்ணும் பூச்சி. என் கதியும் அதுதான். இந்த ஒரு தகுதியைக் கொண்டே நான் இவ்வெளியீட்டுப் பணியை மேற்கொள்கிறேன்.இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல். அதனால் என்ன? எனக்கு அந்த மொழியில் முதிர்ந்த பட்டமும் பயிற்சியும் உண்டு.மறைக்கப்பட்ட பக்கங்களை அச்சுக்குத் தகுதிப் படுத்தியபோதுதான் முழு நூலையும் பதிப்பிப்பதே சரியென்னும் உறுதிப்பாட்டுக்கு வர நேர்ந்தது. ஆகவே, நூல் அச்சுக்கான பணிகள் நடைபெறுகின்றன.நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் கொண்டு வரப்படுகிறது. அப்படித்தான் என்னால் கொண்டுவர முடியும். இந்த முயற்சியை கால்டுவெல்லை மறைப்பதில் கண்ணும் கருத்துமாய்ச் செயல்பட்ட சோழியக் கூட்டம்போல இன்றைய மறுவாசிப்புக் காலத்தில் வாழும் சமூகமும் குலைத்துவிடாது என்று திட்டமாய் நம்புகிறேன். வாசக நண்பர்கள் தங்கள் தேவையை உடனடியாக அஞ்சலட்டை மூலம் உறுதி செய்வதில்தான் அந்த நம்பிக்கை உயிர் பிழைக்கும்.1. ஆதிக்கத் தமிழ்ச் சாதிகளின்...வெள்ளைக்காரர்களின் காலடி படாத ஒரு சிற்றூர். ஆப்பிரிக்கக் கண்டத்தில் கறுப்பர்கள் வாழும் சிற்றூர். இன்னும்கூட அப்படிப்பட்ட இருப்பிடங்கள் அக்கண்டத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும். கண்டம் முழுவதும் காடுகளாலும் கறுப்பர்களின் காலடித் தடங்களாலும் சூழப்பட்டதுதான். ஆயினும் அந்நியர்கள், அதிலும் வெள்ளையர்கள் காலடி படாத மண் என்பதன் குறியீடாகத்தான் அது இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்டது. அதாவது கறுப்பர்களின் மனித அடையாளத்தையே மறுக்கும் பெயர் அது.அந்தச் சிற்றூரில் ஒரு சின்னஞ்சிறுமியிடம் இரண்டு படங்கள் கொடுக்கப்பட்டன. ஒன்று வெள்ளைக் குழந்தையின் படம். மற்றொன்று அவளைப் போன்ற ஒரு கறுப்புக் குழந்தையின் படம். சிறுமி உடனே வெள்ளைக் குழந்தையின் படத்தை வீசியெறிந்துவிட்டு, கறுப்புக் குழந்தையின் படத்தை வாங்கி முத்தமிட்டு மார்போடணைத்துக் கொண்டு சிரித்தாள். இதே சோதனை மற்றொரு சிற்றூரிலும் நடத்தப்பட்டது. இந்த ஊரில் வெள்ளையர்கள் ஊடுருவியிருந்தனர். மக்களிடம் ஒரு விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். இவ்வூர்ச் சிறுமிக்குக் கறுப்புக் குழந்தையே கண்ணில் படவில்லை. முழுக்கமுழுக்க வெள்ளைக் குழந்தையே அவளைக் கொள்ளை கொண்டிருந்தாள்.உலகமெங்கிலும் இதுதான் வரலாறாகியிருக்கிறது. வெள்ளையர்கள் கறுப்பர்களைப் பகையாடி முறியடித்தாலும் சரி, உறவாடி வசப்படுத்தினாலும் சரி, வெள்ளைத் தாக்கத்துக்கு முன்னால் கறுப்பு தாழ்ந்தே போயிருக்கிறது. தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டுமிருக்கிறது. இன்று அதன் வரலாற்றுத் தொடர்ச்சி என்பது இந்தத் தாழ்ச்சியிலிருந்து மீட்டுக்கொள்ளும் உள்ளுறை தணலை ஊதிப் பெருக்கிக் கொண்டிருப்பதாக மாறியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை இந்தத் தாழ்ச்சி அடிநாள் தொடங்கியே மெல்லமெல்ல இறுக்கம் பெற்று, நாளடைவில் எழுதப்படாத உடன்பாடாகவே ஏற்கப்பட்டு விட்டது.ஏற்பு, கேள்விக்கப்பாற்பட்ட ஒன்றாக முற்றுப் பெற்றபோது தமிழ் ஆளுமையின் தன்மானம் மீட்டுக்கொள்ள முடியாதபடி விற்றொழிக்கப்பட்டுவிட்டது. ஆயினும் அது காலங்காலமாக ஆதிக்கம் செலுத்திவந்த ஆளுமை என்பதால், தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில், வெள்ளை நலன்களையும் மேன்மையையும் கோரும் விதிமுறைகளைப் பேணிக்காக்கும் அறங்காவலர் பணியைத் தன் தலைமேல் தூக்கிப் போட்டுக்கொண்டு தன்னைத் தற்காத்துக் கொண்டது. காலப்போக்கில் இந்நிலைபாட்டின் மேல் தொடர்ந்து ஏவப்பட்ட நிர்பந்தங்களுக்கு இரையாகி, முடிவில் வெள்ளை நலன்களின் ஏவல் நாயாக இருப்பதே தன் ஆட்சி அதிகாரத்தின் முதன்மைப்பணி என்பதாக - வேறு மொழியில் செல்வதானால் ஒருவகை அடியாள் அதிகார மையமாகத் தன்னைத் தக்கவைத்துக் கொண்டுவிட்டது. இன்று வரை பார்ப்பனியத்திற்கும் தமிழ் ஆளுமைக்கும் இடையே நிலவிவரும் சமன்பாடு இதுதான்.ஆதிகாலத்தில் மனிதகுலத்துக்குத் தலைமையேற்றுவந்த பெண்குலம் எப்போது, எப்படி தன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்துவிட்டு அடிமைப்பட்டுப் போனது என்பது இன்றும் புதிர்த்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அவ்வளவு கடும் புதிராக இல்லாவிடினும் பார்ப்பனியத்திற்குத் தமிழ் ஆளுமை முற்றாகப் பணிந்துபோனது உளவியல் ரீதியாகவேனும் அதனோடு ஒப்பிடும்படியான சில புதிர்க்கூறுகளைக் கொண்டவைதாம்.பார்ப்பனர்கள் இங்கே வந்தபோது வெள்ளையாக இருந்தார்கள். இன்று இந்தியச் சமூகம் முழுவதுமே பல்வேறு நிறச் சாயை கொண்டதாக மாறிவிட்டது. கறுப்பில் உறைத்துக்கொண்ட நிறச்சாயைகள் அவை. அன்று வெள்ளை வெகு இயல்பாக முன்வைத்த மேன்மைக் கற்பிதத்தைவிட, இன்று அதன் மாற்றாகக் கட்டமைக்கப்பட்ட பார்ப்பனிய மேன்மைத் தத்துவம் சிந்துபாத்தின் தோள்விட்டு இறங்காத கடற்கிழவனின் கொடூரத்தைவிடக் கடும் குரோதமுள்ளதாய் சமூகத்தைப் பிடித்தாட்டுகிறது.அன்று பார்ப்பனர்கள் தெற்கு நோக்கிக் கலாச்சாரத் தூதுவர்களாகவே வந்தார்கள். வடஇந்தியா முழுவதும் போரும், படையெடுப்பும், ஆக்கிரமிப்பும், அலைக்கழிப்பும் எனக் கொந்தளிப்பாகக் கிடந்த சூழலில், அவற்றின் காரணமாகவே இடம் பெயர்ந்து வந்த பார்ப்பனர்களுக்கு தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது மட்டுமல்லாமல் தமிழ் அதிகார ஆளுமைகள் அவர்களின் காவல் தெய்வங்களாகவே காட்சியளித்தார்கள். உண்மையில் பார்ப்பன மதமும், கலாச்சாரமும் அதன் படிநிலைப் பாய்ச்சல்களும் தம் ஆக்டொபஸ் கொடுங்கைகளுடன் முழுமையடைந்ததும் வலிமை பெற்றதும் தெற்கேதான் என்பதும், அதற்குத் துணைபுரிந்தவர்களும் தங்கள் சமூகத்தையே சோதனைக் களமாகத் தத்தம் செய்தவர்களும் தமிழர்கள்தாம் என்றால் அதுதான் பேருண்மை.கறுப்பர்களின் நிறம் அவர்களுக்குத் தானாக வந்துவிடவில்லை. காலங்காலமாக மேற்கொண்ட கடும் உழைப்பு அவர்களுக்குத் தந்த பரிசு. உலகைச் சுற்றியும் நிலநடுக்கோட்டை ஒட்டிய மக்கள் வெய்யிலை உள்வாங்கிக் கறுத்தே வாழ்ந்திருக்கிறார்கள். இவ்வாறு உழைத்துண்ணும் மக்களுக்குப் பகிர்ந்துண்ணும் பழக்கம் இரத்தத்தோடு கலந்து பண்பாட்டுச் சாரமாகியிருக்கிறது. பகிர்ந்துண்ணலின் இன்னொடு பெயர்தான் விருந்தோம்பல். சாவா மருந்தென்றாலும் விருந்தோடு பகிர்ந்துகொள்ளச்சொல்கிறார் வள்ளுவர். இப்படிப் பகிர்ந்துகொள்ள வந்த விருந்தினன் சுயநலக்காரனாகவும், பிறர் உழைப்பைத் திருடுகிறவனாகவும், தின்று கொழுக்கிறவனாகவும் இருந்துவிட்டால், நாளடைவில் உழைப்பை இழி தொழிலாகவும், உழைப்பவனை ஊழியக்காரனாகவும் பாவிக்கும் அதிகாரப் பிச்சைக்காரனாகிவிடுவான்.உண்மையில் அறிவை மட்டுமே உயர்வென்று நம்பியிருப்பவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் அதிகாரப் பிச்சைக்காரன்தான். உழைக்கிறவன் திமிர்ந்தெழும்போது வயிறு வளர்க்க மண்டியிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கப் போவதில்லை.தொல்காப்பியர் காலத்திலேயே பார்ப்பன வாழ்வியல் தத்துவங்களும் கலாச்சாரப் போக்குகளும் தமிழ் வாழ்வின் கடைமடை வரை பாய்ந்து நனைத்திருந்தன என்பதற்கு தொல்காப்பியமே சான்றாக விளங்குகிறது. கூடவே தமிழ் வாழ்வின் மேன்மை அம்சங்களும் பல்கியிருந்தன. பார்ப்பன அறங்கள் முதலில் பார்ப்பனர்களைக் காக்கும் கலசங்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, பார்ப்பான் கொலை செய்துவிட்டால் அவனுக்கான தண்டனை அவனைக் கொல்வதாக இருக்கக்கூடாது. இதைப் பின்பற்றியே தன் சகோதரனைக் கொன்ற பார்ப்பானையும் அவனது வம்சத்தாரையும் எல்லா வசதிகளோடும் நாட்டைவிட்டு அப்புறப்படுத்துகிறான் ஒரு சோழ மன்னன். பார்ப்பன தர்மம் சூத்திரர்களைக் கல்வி கற்க அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ் வாழ்வில் கீழ்நிலையிலுள்ள ஒருவன் கல்வி பெற்றால் அவன் மேன்மகனாகக் கருதப்படுவான் என்று தமிழ் மன்னனே சொல்கிறான். பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது தமிழின் வாழ்வறமாகவே தொடர்கிறது.நால்வருணம் தமிழ்ச் சமூகத்துக்கில்லை. அதற்கீடாக அந்தணன், அரசன், வணிகன், வெள்ளாளன் என்று மாற்றீடு செய்து மகிழ்கின்றன தமிழ் ஆளுமைகள். சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வாழக்கூடாது என்றொரு விதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அது கடைபிடிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, சூத்திரர்களே இங்கு இல்லை என்பதே உண்மை. இங்கே ஆள்கிறவன்தான் கோத்திரங்களற்ற சூத்திரனாகக் கருதப்பட்டான். ஆனால் இந்தச் சூத்திரப்பட்டம் பார்ப்பன ஆளுமை சொல்லும் கீழ்மைப் பொருளில் அல்ல. ஆனால் காலப்போக்கில் பார்ப்பனனைப் போல் வாழும் தமிழ்ச் சூத்திரர்களின் மோகம் தமிழ் வாழ்வியலை வருணக் கீழ்மை பேசும் நச்சுக்காடாகவே மாற்றிவிட்டது.பார்ப்பன அறத்தைக் கேள்விக்குட்படுத்துவதாகவே புத்தர் தன் இயக்கத்தைக் கட்டமைத்தார். அந்தச் சங்கத்தை ஆதிமுதலே தழுவி நின்ற சமூகப் பிரிவினர் அடிநாளிலிருந்தே பார்ப்பனர்களையும் பார்ப்பன மேன்மையையும் மறுத்தவர்களாகவே வாழ்ந்துவந்தனர். அவர்கள்தாம் இன்றைய தலித்துகள். ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்த ஓர் உளவியலைப் பொய்யாக்கிய பௌத்தர்களைப் பார்ப்பனர்களும் சூத்திரர்களும் சமூகத்தின் கடைகோடிக்குத் தள்ளுவதில் இன்று வரை பிடிவாதமாயிருக்கின்றனர். வாழ்வியல் போக்குகளில் பார்ப்பனர்களுக்கும் தமிழ்ச் சூத்திரர்களுக்கும் (பிறருக்கும்கூட) நம்பிக்கைகளிலும் கடைபிடிப்புகளிலும் எந்த வேறுபாடும் இல்லை. ஒருவனை ஆதிக்கப் பார்ப்பான் என்றால் மற்றவனை அடியாள் பார்ப்பான் என்றே அழைக்கலாம். அவர்களுக்கிடையே அதிகாரப் பகிர்வில் வில்லங்கம் வந்தால் ஒருவரையொருவர் எதிரிகளாக்கி மல்லுக்கு நிற்பர்.ஆங்கிலேயன் காலத்தில் பார்ப்பனர்கள் கை ஓங்கியபோது பார்ப்பன எதிர்ப்பியக்கமாக நீதிக்கட்சி தோன்றியது. அதை எதிர்ப்பியக்கமாக அயோதிதாசர் ஏற்கவில்லை. காரணம், பார்ப்பன மதம், வேதம், கலாச்சாரம், கடவுள் என யாவற்றையும் பின்பற்றும் ஒருவன் பார்ப்பானை எதிர்க்கிறேன் என்பது பித்தலாட்டமான செயல் என்கிறார்.இந்த வகையில் பார்ப்பானுக்கு எதிரானவர்கள் தலித்துகள் மட்டுமே என்று தன்ஒட்டுமொத்த எதிர்ப்பையும் ஒரு பௌத்தனாக இருந்து வெளிப்படுத்தியவர் அயோத்திதாசர். அவருக்குப் பின்னால் பார்ப்பன அம்சங்கள்அனைத்தையும் எதிர்க்கிறவராய் வாழ்ந்துகாட்டியவர் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளராய் வாழ்ந்து காட்டியவர் பெரியார். அவருக்குச் சாதி வேண்டியிருக்கவில்லை. ஆனால் பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு நீதிக்கட்சியின் சாரத்தை வாழ்வியலாகப் பேணும் திராவிடக் கட்சிகளுக்குச் சாதி இன்னமும் தேவையாகத்தான் இருக்கிறது. கால்டுவெல்லின் காணாமற்போன பக்கங்கள் மீட்கப்படாமலே போனமையின் காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்?*இடையில் கட்டுரை சார்ந்த இன்னொரு கிளைக்கதையையும் இங்கு சொல்லிவிடத் தோன்றுகிறது. வேதசகாயகுமார் இதை ரசித்துச் சிரித்து மகிழ வேண்டும் என்பதை ஒரு முன்நிபந்தனையாகச் சேர்த்துக் கொள்ளலாம். கவிதாசரணுக்காக அவரிடம் கட்டுரை கேட்டவர் நண்பர் பொ.வேல்சாமி. அவரும் கட்டுரை தரச் சம்மதித்துவிட்டார். நானும் அவரைத் தொடர்பில் வைத்துக்கொண்டேன். இடையில் வேதசகாயகுமாரைத் தெரிந்த பிற நண்பர்கள் பந்தயம் கட்டாத குறையாக, “அவரிடம் கட்டுரை வாங்கிவிடுவீர்களா? பார்த்துவிடலாமா?” என்று ஏகத்துக்கும் கடுப்பேற்றியிருக்கிறார்கள். வேல்சாமி அதை ஓர் அறைகூவலாக ஏற்று, விடாப்பிடியாக முயன்று கட்டுரையை வாங்கிவிட்டார். இதில் என்னுடைய பங்கு தள்ளுபடி செய்துவிடக்கூடிய அளவே. ஆனால் கட்டுரை கிடைத்தபோது காலம்தான் காயசண்டிகை போல ஒரு பத்துப்பதினோரு வாரங்களை விழுங்கிவிட்டிருந்தது.இதழ் தாமதப்பட்டாலும் கட்டுரைக்காகக் காத்திருந்ததில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. மாறாக, கட்டுரையில் அவர் திறந்துவைத்த சாளரங்கள் வழியே கால்டுவெல்லைச் சரியான வெளிச்சத்தில் உள்வாங்கிக்கொண்ட நிறைவும், கூடுதலாக கால்டுவெல்லின் மூலப்பதிப்பைப் பார்த்துவிட வேண்டும் என்னும் புதிய ஆசையுமே என்னை ஆட்கொண்டன. இடையிடையே தொலைபேசியில் வேதசகாய குமார் கசியவிட்ட பல கருத்துச் சித்திரங்கள் அந்த ஆசையை ஊதிப் பெருக்கிவிட்டது.வேதசகாயகுமார் தன் கட்டுரையை, “ஆனால் கால்டுவெல்லின் மற்றொரு முகம் காலத்தின் முன் மறைக்கப்பட்டது,” என்னும் கடைசி வாக்கியத்தோடு முடித்திருந்தார். நான் அதற்குக் கீழே, “அது எவ்வாறு என்பதைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம். அது தலித் எழுச்சிக்கு உந்துசக்தியாகத் திகழும்,” என்றொரு குறிப்பெழுதி முடித்திருந்தேன். அடுத்த இதழுக்கான அவரது இரண்டாவது கட்டுரைக்கு நான் கொடுத்த அழுத்தம் அது. அவரிடம் தொலைபேசியிலும் வேண்டினேன். வேல்சாமியிடமும் சொல்லிவைத்தேன். கட்டுரையைப் பத்து நாட்களுக்குள் கட்டாயம் அனுப்பிவிடுவதாக உறுதி சொன்னார். இந்தா அந்தா என்று மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. ஒரு கட்டத்தில் வேல்சாமி, “இது கல்லில் நார் உரிக்கிற கதை,” என்று ஓய்ந்துபோனார்.ஆனால் நான் ஓயவில்லை. "இன்று மாலை, நாளைக் காலைஃ என்று தொடர்ந்து நம்பிக்கையூட்டப்பட்டுக் காத்திருந்தேன். நம் இதழின் அரசியலுக்கு அவர் கட்டுரை வலிய துணையாயிருக்கும் என்பதால் அதனோடுதான் இதழ் வரவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். அப்போது ஒரு வாசக நண்பர், “இதை, நீங்கள் வெளிப்படையாக அறிவிக்காமலேயே இதழை நிறுத்திவிட மேற்கொள்ளும் உத்தியாக நாங்கள் புரிந்துகொள்ளலாமா ஐயா?” என்று வெகு நாசுக்காகத் தன் ஆத்திரத்தை ஆற்றிக்கொண்டார். வேறு வழியின்றி சென்ற இதழை அவருடைய கட்டுரை இல்லாமலே அடுத்த ஒரு வாரத்தில் வெளிக்கொணர்ந்தேன்.இதில் நான் வேதசகாயகுமாரைக் குறை சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொருவரும் ஒரு தகவமைப்பில் இறுகிப்போயிருப்பார்கள். வேதசகாயகுமாரும் அதற்கு விதிவிலக்கல்ல. அவரைக் குறை சொல்வதெனில் முக்கியமாக நானும்கூட அதற்கு விதி விலக்கல்ல. இப்பொழுதும் அவருடைய கட்டுரை- அதுவும் கால்டுவெல் பற்றிய கட்டுரை- கிடைக்குமெனில் அதற்காக மகிழ்ச்சியோடு காத்திருப்பேன்; வெளியிடுவேன்.சிற்றிதழ்கள் தாமதப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஆனால் கவிதாசரண், பல சந்தர்ப்பங்களிலும் தெறிப்பான அரசியல் பார்வைகளை முன்னெடுக்கவே இடைவெளிகளைத் தாமதங்களால் நிரப்பியுள்ளது. குறித்தபடி எழுதி நிரப்புவதற்கென்று ஒவ்வொரு பத்திரிகைக்கும் நண்பர்கள் குழு தெரிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வகைப் பத்திரிகைகள் காலக் கணக்குப் பிசகாமல் மையெழுத்து நிரப்பல்களோடு வந்து கொண்டிருக்கும். எல்லாமே நியதிக்குட்படுத்தப்படும்போது இயல்பாகவே ஒரு மரத்தனம் வந்துவிடுகிறது. சிற்றிதழ்த் தன்மை செத்துப்போவதை நியதிமாரடிப்புகளால் நிரப்பி, ஒழுங்குமுறையோடு அடங்கி வாழ்வது உகந்ததுதான். அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும். கவிதாசரண் அப்படி நடத்தப்படுகிற இதழன்று என்பது நீங்கள் அறியாததல்ல. கவிதாசரணை நிரப்ப எத்தனையோ பேர் வந்தார்கள்; சென்றார்கள்.சிலரின் செல்கைக்கு நானேகூட காரணமாயிருக்கலாம். புற நட்பைத் தாங்கிப் பிடித்துக்கொள்ளத் தெரியாத என் நடத்தையும், திரும்பத் திரும்பத் தொடர்பு கொள்ள முயலாத என் தேவையற்ற மெத்தனமும், எல்லாரையும் ஒரே நிறையில் வைக்கும் சமரசமற்ற என் விமர்சனமும் அவ்வப்போது வில்லங்கங்களை அவர்களுக்கு உற்பத்தி செய்திருக்கலாம்.கவிதாசரண் இவ்வகை பாதிப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கரிசனப்பட்டதில்லை. யோசித்தால் இதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது நான் மட்டும்தான் என்றாகிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் இன்னொன்றும் தட்டுப்படுகிறது. என்னைத் தின்னும் தாமதங்களை வெல்ல முடியாமல்தான் இன்னொருவர் துணை கிடைக்காதா என்று சாக்குபோக்கு சொல்லிக் கொண்டலைகிறேனோ என்றும் தோன்றுகிறது. இருக்கலாம்.அதுவும் ஒருவகையில் இலாபம்தான். இடையே ஒரு இதழ்ப்படியைத் தவிர்ப்பதால் எங்களுக்கான குறைந்தபட்சத் தேவைகளை அவ்வப்போது ஈடுகட்டிக்கொள்ளலாம்தானே. எல்லா ஆறுகளும் பள்ளத்தை நோக்கித்தான் பாய்கின்றன. பாய்வதைப்பற்றிய கவலை நீரில்லாத ஆறுகளுக்கில்லை.

ஒடுக்கப்பட்ட இந்துக்கள் எம்.சி. ராஜா

(குறிப்பு: 1927இல் எம்.சி.ராஜா அவர்கள் எழுதி வெளியிட்ட ஆங்கில நூலினை சென்னை, சேத்துப்பட்டு “அம்பேத்கர் சிந்தனைக் கூடம்” “ஒடுக்கப்பட்ட இந்துக்கள்” என்னும் பெயரில் தமிழாக்கித் தன் மூன்றாவது வெளியீடாக 1952இல் கொண்டு வந்தது. அந்நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பக்கங்களின் தொகுப்புதான் இந்த ஆவணக் கட்டுரை.எம்.சி.ராஜா அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின்போது அம்பேத்கருக்கு இணையாகப் புகழ்பெற்றிருந்த அகில இந்தியத் தலித் தலைவராவார். அக்காலத்தில் தலித் மக்களின் தீராத துயரங்களையும் இன்றியமையாத் தேவைகளையும் முன்வைத்து அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்ட தலித் தலைவர்கள் தமிழகத்தில்தான் மிகுதியாகக் காணப்பட்டார்கள். அவர்களில், அயோத்திதாசரின் பங்கு தனித்துவமானது. தலித் வரலாற்றுத் திரித்தலைத் திருத்தி எழுதும் நோக்கமுடையது. தலித் கருத்தியல் தளத்தில் செயல்பட்ட பௌத்த சிந்தனையாளராகவும் வரலாற்றுப் புனைவியலை நேர் செய்து மீள்கட்டமைக்கிறவராகவும் தொன்ம வழக்கியலினூடாக நவீன அரசியலைக் கட்டுடைக்கிறவராகவும் விளங்கிய இதழியலாளர்.மற்ற தலைவர்கள் யாவரும் அரசியல் பங்கேற்பாளர்களாய்ச் செயல்பட்டவர்கள். முதுபெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா, மீனாம்பாள், சிவராஜ், ஜே.சிவசண்முகம் பிள்ளை போன்ற அனைவருமே, அம்பேத்கரைப் போலவே தங்கள் மக்கள் நலன் கருதி காங்கிரஸ் கட்சியுடன் மல்லுக்கு நின்றவர்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியோவெனில் அவர்கள் அனைவரையுமே ஏதோ ஒருவகையில், தகுந்த சந்தர்ப்பத்தில் தனது சாதியம் போர்த்திய செயல்தந்திரத்தோடு வெகு சாமர்த்தியமாகத் தன் செல்வாக்குக்குப் பயன்படுத்திக் கொண்டது. அவர்களும் பயன்பட்டனர். கவிந்தழுத்தும் சாதியச் சமூகத்தில் தம் மக்கள் நலன் பேண அப்படித்தான் செயல்பட்டாக வேண்டியிருந்தது.எம்.சி.ராஜா அவர்களைப்பற்றி எனக்கொரு மனக்குறை இருந்தது. இரட்டை வாக்குரிமை கோரிக்கையின் ஆகப்பெரும் சிக்கலான தருணத்தில் அம்பேத்கரைத் தனிமைப்படுத்தி விட்டார் என்னும் மனக்குறை அது. எல்லார் வாழ்விலும் இதுபோன்ற முரண்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இடறத்தான் செய்கின்றன. பொதுமனிதனின் “நாம்உணர்வு” அவனுக்குள்ளிருக்கும் தனிமனித “நான் உணர்வால்” தட்டழிந்து போவதை வரலாறு நெடுகிலும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். “நானுக்கும்” “நாமுக்கும்” ஒட்டுறவற்ற வார்ப்பமைதி சாத்தியமில்லாத வரை அதன்பொருட்டுத் தீவிரமாகக் குறைபட்டுக் கொள்வதில் ஆவதொன்றுமில்லை. எம்.சி.ராஜா அவர்கள் அடுத்த சந்தர்ப்பத்திலேயே அம்பேத்கருடன் இணைந்து கொண்டார் என்பதுதான் அவருக்கான பலம்; தம் மக்களுக்காக அவர் வாழ்ந்த வாழ்வின் தகர்க்க முடியாத நிலைப்பாடு.இந்த நூலுக்கு “விளக்கமும் வேண்டுகோளும்” என்னும் பெயரில் பொன்னோவியம் அவர்கள் ஒரு பக்கம் எழுதியுள்ளார். அதில் அவர் இவ்வாறு சொல்கிறார்: “தலைவர் எம்.சி.ராஜா அவர்கள் தன் வாழ்நாள் முழுதும் மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை அரசியல், சமுதாயக் குறிப்பேடுகள் நன்கு உணர்த்துகின்றன. அவர் வெள்ளையர் ஆட்சியைத் தாக்கியும், அன்றைய தேசியக் காங்கிரசைப் பழித்துக் கூறியும், நீதிக் கட்சியை இழித்துச் சாடியும் இருக்கிறார். -ஏன்? ஆதிதிராவிடர்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும்.”இது முற்றும் உண்மை. குறிப்பாக நீதிக்கட்சியை அவர் சாடியுள்ளதை வெளிச்சப்படுத்துவதற்காகவே இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது. இதிலும்கூட சாடலின் ஒரு பகுதி மட்டும்தான் இடம் பெறுகிறது. தலித்துகளை எதிர்கொண்டதில் காங்கிரஸ் கட்சியைவிட நீதிக்கட்சி சற்றுத் “தேவலை” என்றொரு கருத்து எனக்கிருந்தது. அது இந்த நூலின் மூலம் தகர்ந்து போய்விட்டது. அவர்கள் ஏதேனும் செய்திருந்தால் அது சட்டத்துக்குட்பட்டும் தவிர்க்க முடியாத சூழலிலும் வேறு வழியில்லாமல் செய்த துரும்பளவுதானே தவிர சமதர்ம சமுதாயம் காணும் தன்னெழுச்சியால் அல்ல. எந்தக் கட்சிக்காரனாயிருந்தாலும் சாதி இந்துக்களின் கோணல் பார்வையால்தான் தலித்துகள் அளக்கப்படுகிறார்கள்; நிறுக்கப்படுகிறார்கள்; முகக்கப்படுகிறார்கள்; விமர்சிக்கப்படுகிறார்கள். நீதிக்கட்சிக்காரர்களும் அந்த சாதிக்கட்சிக்காரர்கள்தாம் அல்லவா? அதிலும் நாமமும் தலைப்பாகையும் அணிந்த மிட்டா மிராசுகளின் சங்கமத் திரள் அல்லவா? பார்ப்பனர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கும்போது தவிர்க்க முடியாமல் சிந்திச் சிதறியவைதான் தலித்துகளுக்கான பங்காயிருந்தன.தலித்துகள் அவலம் பற்றியும் தலித்தல்லாதவர்களின் மூர்க்கம் பற்றியும் சென்ற நூற்றாண்டுத் தலித் தலைவர்கள் குரல் கொடுத்ததை விடவும் அதிகமாக யாரும் சாதித்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. இந்த தலித் யுகத்தில் அவர்கள் ஊதிப்பெருக்கிய ஊழிநெருப்பை எரிமலைக் குழம்பாக்கி வழியவிடுவதொன்றே அடுத்த கட்ட வளர்ச்சியாயிருக்கும்.முடிந்தால் இதுபோன்ற நூல்களை மீண்டும் வெளிக்கொணர்வது தலித் தன்மான உணர்வுக்குக் காப்புக் கவசமாயிருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது.- கவிதாசரண்)“தாழ்த்தப்பட்ட வகுப்பினர்” என்ற சொல்லை “பிற்பட்ட வகுப்பினர்” என்பதோடு வைத்துக் குழப்பக்கூடாது. பிற்பட்ட வகுப்பினர் கல்வியில் மட்டும் பின்னடைந்தவர்கள். ஆனால் சமயம், சமுதாயம், பொருளாதாரம் ஆகியவைகளில் உண்மையிலேயே உயர்ந்திருப்பவர்கள்.மாறாக, “தீண்டாத வகுப்பினர்” என்று கூறப்பட்டு, கல்வி, பொருளாதாரம், சமுதாயம் ஆகியவைகளில் பின்தங்கியுள்ள சமுதாயத்தினர்தான் “தாழ்த்தப்பட்ட வகுப்பினர்” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இம்மக்கள் சாதி இந்துக்களின் பன்னெடுங்கால மிகுந்த கட்டுப்பாடான கொடுமைகளாலும், சமுதாய அழுத்தல் போன்ற புறக்கணிப்பாலும் தாழ்த்தியே வைக்கப்பட்டு வந்துள்ளனர். உயர்சாதிக்காரர்கள் என்போர் நெடுங்காலமாக நடத்திவரும் கட்டுப்பாடான கொடுமைகளின் விளைவுதான் பழங்குடி மக்களின் இன்றைய இழிநிலைக்குக் காரணமாகும்.இவ்வாறு ஓர் இனம் இருப்பது என்பது இந்தியாவுக்கு மட்டும் ஓர் புதுமையானது அல்ல என்று சில சமயங்களில் வாதாடப்படுகிறது. சாதி பாகுபாடு-தன்மை, இந்தியாவில் அது செயல்படுகின்ற சூழ்நிலை போன்று வேறெங்குமில்லை. மற்ற நாடுகளில் பத்தில் ஒரு பகுதியினரின் தாழ்ந்த நிலைக்கு முக்கியமாகப் பொருளாதாரக் காரணங்களைத்தான் கூறவேண்டும். ஆனால் இம்மாநிலத்தில் அழுத்தப்பட்டிருக்கும் ஆறில் ஒரு பகுதியினரின் அல்லது ஆதிதிராவிடர்களின், ஆதி ஆந்திரர்களின் மற்றும் பிறரின் இழிநிலைக்கு, நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இவர்களுக்கு எதிராக இயங்கிவரும் சமய சமுதாய செயல்முறைகள்தான் காரணமாகும்.இந்தியாவுக்கு மட்டும் தனித்தன்மை, இவ்வாறான இழி நிலையிலுள்ள ஓர் சமுதாயம் இருப்பதில் அடங்கியிருக்கவில்லை; ஆனால் அதைவிட மிகுதியாக, பழங்குடி மக்களை முன்னேற விடாமல் முட்டுக்கட்டை போடுவதற்காக - அதிகாரம், செல்வாக்கு இவைகளை உரிமையின்றி கைப்பற்றிக் கொண்டவர்கள், நிரந்தரமாகக் கையாளும் முறையில்தான் தனித்தன்மையே அடங்கியிருக்கிறது. எப்படி இவர்களெல்லாம் தீண்டாதவர்களாக, நெருங்கினால் தீட்டினை ஏற்படச் செய்பவர்களாக மதிக்கப்படுகிறார்கள் என்பதில் சமூக ஊழியர்கள் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்.நீர் குதிரையைத் தொடலாம். நாயைத் தட்டிக் கொடுக்கலாம். பூனையைத் தடவிவிடலாம். ஆனால், பழங்குடிமகனை நீ தொடக் கூசுகிறாய். நீங்கள் உங்களுடைய வீடுகளில் பசுக்களையும் நாய்களையும் வளர்க்கலாம். உங்களின் பாவங்களுக்குப் பிராயசித்தமாக நீங்கள் பசுக்களின் சிறுநீரைக் குடிக்கலாம், அவைகளின் சாணங்களைக்கூட விழுங்கலாம்; ஆனால் நீங்கள் ஒரு பழங்குடிமகனை அணுகக்கூடாது! சோன்னரெட் என்பவரின் “கிழக்கிந்தியத் தீவுகளுக்குக் கடற்பயணம்” என்ற நூலில் கீழ்க்காணும் வாசகத்தைக் காணலாம்.......ஒரு இந்தியன் ஆதிதிராவிடனுடன் பேசும்போது அவப்பேருடையவனான ஆதிதிராவிடன் தன்னுடைய கையால் வாயை மூடிய வண்ணம் பொத்திக் கொள்ள வேண்டும் என்பதினைக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அவனுடைய மூச்சு விடும் காற்றினால் இந்தியனின் தூய்மை கெட்டுவிடும். நெடுஞ்சாலைகளில் சந்திக்க நேர்ந்தால், உடனே ஆதிதிராவிடன் ஒதுங்கி நின்று மற்றவர்(சாதி இந்து) போக வழி விட வேண்டும். ஆதிதிராவிடன் தொட்டுவிட்டால் (சாதி இந்து) குளிப்பதன் மூலம் தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்...............................மனிதனை மனிதன் மனிதத் தன்மையற்று நடத்தும் போக்கு கணக்கற்ற ஆயிரக்கணக்கானவர்களைத் துயருறச் செய்கிறது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த அவலநிலை தொடர்ந்து வர இருக்கிறதோ?மனிதனுக்குரிய உணர்வுகள் - எதிர்காலத்தில் அறியாமை அடிமைத்தன்மை துயர்தோய்ந்த வாழ்க்கையில் உழன்று தாங்களே முன்னேற்றமடைய - அல்லது உயர்த்திக்கொள்ள - எந்த வித பேரவா கொண்டாலும் அவ்வாறு எண்ணுவதே பாவம் என்று கட்டாயப்படுத்துவது போன்ற தவறுகளைச் செய்து ஒரு சமுதாயத்தை அழிக்கும் பெரும்பிழை வேறு இருக்க முடியாது. கோடிக்கணக்கான ஏதுமறியா ஆதிதிராவிட பழங்குடி மக்கள், ஒவ்வொரு நாளும் வதைக்கப்படுகிறார்கள். வெறுப்புணர்ச்சியுடன் இழிந்த மிருகங்களைவிடக் கேவலமாக, காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்படுகிறார்கள். பசிக் கொடுமை, நிர்வாணக்கோலம், வாழ்க்கையில் ஊக்கமற்ற போக்கு, கேவலமான குடிசைகளில் வாழும் கோரம், நெடுங்காலக் கொடுமைகளினால் வந்தடைந்திருக்கும் கெஞ்சல் போக்கு - அடிக்கடி ஏற்படும் பசிக் கொடுமை களிலிருந்து விடுபட எது கிடைத்தாலும் உண்ணுகின்ற நிர்பந்தம் - நிராதரவாக விடப்பட்ட அவலநிலை போன்ற முற்றிலும் துயர் நிரம்பிய இழிந்த, சக்தியற்ற நிலையில் பழங்குடிமக்கள் இருக்கிறார்கள். இது இந்த நாட்டைச் சேர்ந்த ஒரு மாபெரும் பழி இல்லையா?இந்தியாவின் சமூக ஒதுக்கம் செய்யப்பட்டவர்களின் சமுதாய நிலை மிகவும் துயரம் நிறைந்ததொன்றாகும். நூற்றுக்கணக்கான நீண்ட ஆண்டுகளாக நடந்துவரும் கொடுமைகளின் விளைவாக, அவர்களிடமிருந்து ஆண்மை அத்தனையும் அற்றுப் போகச் செய்துவிட்டனர். சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் தன்னுடைய மனிதத் தன்மையின் விடுதலையை அல்லது சாதாரண குடிமகனுக்குரிய முக்கியமான உரிமைகளை வற்புறுத்த முற்பட்டவுடன், சட்டத்தை மீறி தான்தோன்றித்தனமான கொடுமை மிகுந்த செயல்கள் ஓராயிரம் உருவங்களெடுத்து அவனைத் தொடர்ந்து சென்று தாக்குகின்றன. மேலும், பழைய நிலைமைக்குத் தள்ளப்பட்டு இன்னும் படுமோசமான நிலைக்கு அவன் உள்ளாக்கப்படுகிறானே ஒழிய, தான் எடுத்த முயற்சிக்கு முன்னேற்றம் எதுவும் அடைவதில்லை. கல்வியறிவற்று சமுதாயத்தின் அடித்தளத்தில் அழுத்தப் பட்டிருப்பதனால், அவனை சுற்றிலுமுள்ள சாதி இந்துக்கள் ஈவு இரக்கமின்றி கொள்ளையடிக்கிறார்கள்.தற்போது, தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் தங்களுடைய வலிமையற்ற தன்மையை உணர்கிறார்கள். ஆதிதிராவிட பழங்குடி மக்கள் தங்களுடைய பண்டைய மரபுரிமை பரிக்கப்பட்டதை மிக அதிகமாக உணர்கிறார்கள்.சாதி இந்துக்களின் ஓரவஞ்சனை, குறுகிய இனப்பற்று, குருட்டுத்தன்மை, சாதிச்செருக்கு, கொடுங்கோன்மை ஆகியவைகள்தான் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் பட்டினிக்கும் அறியாமைக்கும் காரணம் என்பதை ஆதி திராவிட மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.ஆதிதிராவிடர் இந்த மண்ணில் பிறந்தவர்கள். செருக்குக் கொண்ட இந்து சகோதரர்களுடன் சரிநிகர் உரிமைகளை - சிறப்புரிமைகளை - நுகரும் குடியுரிமையாளர்கள் தாங்கள் என்பதையும் பழங்குடி மக்கள் உணருகிறார்கள்.வெள்ளையரின் வருகைக்கு முன்னாலிருந்த இந்திய அரசர்களின் ஆட்சியின்கீழ் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் நிலையுடன் இன்றைய அவர்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது வணக்கமான நன்றியுடன் கூடிய உணர்ச்சிதான் முதன்மையாக நிற்கிறது. ஆங்கிலேயரின் வருகையுடன் ஆதிதிராவிடர்களின் அடிமைத்தளை அறுபட ஆரம்பமாயிற்று. அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடையத்தான் ஆரம்பமாகியிருக்கிறதே தவிர முழுமையாக பூர்த்தியாகவில்லை. சிலர் அந்நிய ஆங்கிலேயரைப் பற்றி வெறுப்புடன் பேசுவதை நாம் கேட்கிறோம். ஆனால், இந்த கல்வி, பொருளாதார முன்னேற்றம், தனி மனிதன் உரிமை ஆகியவை சிறிதளவாவது எய்தியமைக்குக் காரணம்அந்நியர்கள்தான் என்பதற்கு, இந்த மக்கள் அவர்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டாமா? அதை விடுத்து, சாதி வெறி, தன்னலம் கொண்ட சாதிஇந்து- ஒப்புக்காக ஒரே மரபினம் என்று கூறிக்கொண்டு நப்பாசையும் பேராசையுங் கொண்டு தாழ்த்தப்பட்டோரின் உழைப்பை உறிஞ்சி, உழைப் பிற்கேற்ற ஊதியம் தராமல் மிகவும் சொற்ப கூலி கொடுக்கும் - சாதி இந்துவுக்காக பழங்குடி மக்கள் எப்படி கடமைப்பட்டவர்களாக இருக்க முடியும்?......................ஆதிதிராவிடர்களின் அன்றைய பெருமைகளைச் சொல்ல வேண்டுவதில்லை.ஆனால் அவர்களுடைய பழைய மாண்புகளை அவர்கள் நினைவில் கொண்டுள்ளார்கள் எனக் கூறத்தான் வேண்டும்.இந்த நாட்டில் ஆதிகாலத்தில் இருந்த முதல் மனிதர்கள் இவர்கள்தான் என்று கூறிக்கொள்வதில் இவர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.1.................................சாதி அமைப்பு பற்றி வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இங்கு நோக்குவோம். நான்கு சாதிகள் படிப்படியாக நாளா வட்டத்தில் பற்பல துணைச்சாதிகளாக உருவெடுத்தன. சாண்டிராகோட்டிஸ் காலத்தில் ஏழு இந்து சாதிகள்தான் இருந்தன என்று கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ் குறிப்பிடுகிறார். அவையாவன:1. தத்துவ மேதைகள் 2. விவசாயிகள் 3. இடையர்- வேட்டையாடுவோர் 4. தொழிலாளர்-வணிகர்,தட்டுமுட்டு சாமான்கள் விற்பனையாளர் 5. போரிடுவோர் 6. மேற்பார்வையாளர்கள் 7. வரி கணிப்பாளர்கள், அரசுக்கு ஆலோசனை கூறுவோர்.அன்று அடிமைத்தனம் இல்லை. முதலில் இருந்த நான்கு சாதிகள் அல்லது அதற்குப் பிறகு தோன்றிய ஏழு சாதிகளுக்குப் பதிலாக இப்போது 2,400 பெரிய சாதிகளும் பிரிவுகளும் தோன்றியிருக்கின்றன. தென்னிந்தியாவில் ஐம்பது வகை இனங்களும் தேசியங்களும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்தியாவில் சாதியானது சக்தி வாய்ந்த ஒரு இயக்கமாக விளங்குகிறது. தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை எங்கும் எப்போதும் ராட்சதத் தன்மை பெற்ற சாதி விளையாடாத இடமோ நேரமோ இல்லை.மனிதனை மனிதன் வெறுக்கும் நிலை சாதியினால் உண்டாகிறது. இந்துக்களின் ஒவ்வொரு அசைவும் சாதியால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் அது மக்களின் உடலை பலவீனப்படுத்துவதல்லாமல் தேசத்தில் ஏழ்மை நிலையை உண்டாக்குகிறது. வேற்றுமைக்கும் வெறுப்புக்கும் வித்தாக அமைகிறது. மக்களினத்தைக் கொடுமை நிறைந்த மிருகங்களாக மாற்றுகிறது. அல்லல் படும் ஒருவனைப் பார்த்து மற்றொருவன் மனம் இரங்கா வண்ணம் அவனுடைய இதயத்தைக் கல்லாக்கிவிடுகிது. இந்த வகையில் ஒருசிலர் மட்டும் பெருமையோடும், திமிரோடும், இறுமாப்போடும் உலவிவர முடிகிறது.தமிழ் மாவட்டங்களில் - பறையர், பள்ளர், வள்ளுவர் என்றும், கிழக்குக் கரையிலுள்ள தெலுங்கு மாவட்டங்களில் - மாலா, மாதிகா என்றும், மேற்குக் கரையில் செருமார், ஹோலியர் என்றும் கீழ்ச்சாதி மக்களென்றும் அழைக்கப்படுகின்றனர். தீண்டாத எல்லா வகுப்பினரையும் “பறையர்” எனப் பொதுவாக அழைப்பது மரபு. “பறையர்” என்ற வார்த்தை முதன் முதலாக, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாங்குடி கிழார்2 என்ற புலவரால் கையாளப்பட்டிருக்கிறது. பழங்கால கல்வெட்டுகளிலோ3 பண்டையத் தமிழ் இலக்கியங்களிலோ இந்த வார்த்ததை காணப்படவில்லை..........................மேளத்தைக் குறிக்கும் “பறா” அல்லது “பறை” என்ற வார்த்தையிலிருந்து விரிந்துபட்டதே “பறையர்” என்ற சொல். மேளம் அல்லது பறை என்ற வாத்தியத்தை பயன்படுத்திய காரணத்தால் அவர்கள் பறையர்கள் போலும்!பறை என்ற வார்த்தை4 மேளத்தை குறிக்கும் சொல்லாக, தமிழ் மலையாள மொழிகளைத் தவிர்த்து வேறெந்த திராவிட மொழிகளிலும் காணப்படவில்லை. பறையர் என்போர் மேளம் கொட்டுபவர் என்றால், இந்தியாவில் மேளம் கொட்டுபவர் எல்லோரும் பறையர் என்ற வார்த்தையால் அழைக்கப்பட வேண்டும் அன்றோ? ஆனால், இத்தொழில் புரிவோர் கன்னட நாட்டில் ஹோலியர் என்றும் தெலுங்கு தேசத்தில் மாலவாடு என்றும் அல்லவா அழைக்கப்படுகிறார்கள்!இப்போதெல்லாம் பறையர் என்று சொல்லப்படுவோர் பறையடிப்பதில்லை. திருவிழாக்களிலும், திருமணங்களிலும் தவுல், மேளம் முதகயவற்றை வாசிப்பவர்களை அம்பட்டர்கள் என அழைக்கிறார்கள். இவர்கள் நாவிதர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்நாவிதர்கள் சூத்திர வகுப்பைச் சார்ந்தவர்கள். பறையர் என்போர் உண்மையிலேயே நிலச்சுவான்தார்கள். நாளாவட்டத்தில் அவர்களிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டு5 ஆரியரிடம் சேர்ப்பிக்கப்பட்டன. இவ்வாறாக, நிலத்துக்கு உரிமையானவர்கள் காலப்போக்கில் அந்நிலத்தில் வேலை செய்யும் கூலிகளாக மாற்றப்பட்டார்கள்.............................சாதி இந்துக்கள் இவர்களை வெகுகாலமாக பறையர் என்றே அழைத்து வந்தார்கள். இப்பெயர் எப்படி வந்ததாக இருப்பினும், சாதி இந்துவின் நாவிகருந்து “பறையர்” என்ற வார்த்தை வெளிப்பட்டது என்றால், அதற்கு கீழ்த்தரமான வெறுக்கத்தக்க பொருள்தான் தொனிக்கிறது. தூய்மை, மதிப்பு மிக்கது போன்ற வார்த்தைகளின் எதிர்ப்பதங்கள்தான் இவ்வார்த்தைக்கு இந்நாட்களில் பொருள். தன்மான உணர்ச்சியின் காரணமாக ஆதிதிராவிட மக்கள் பறையர் என்ற பதத்தை வெறுத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.சாதி இந்துக்களில் சிலர், ஐந்தாவது வருணத்தைக் குறிக்கும் “பஞ்சமர்” என்ற பெயரை உபயோகிக்கலாம் என அபிப்பிராயப்பட்டனர். எப்படியாவது தாங்கள் பறையர் என்று அழைக்கப்படாமலிருந்தால் போதும் என்ற எண்ணத்தில், பஞ்சமர் என்ற பெயரை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் தன்மான உணர்ச்சி வளர வளர, பஞ்சமர் என்ற பெயர் எந்தவித தீய நோக்கோடு சூட்டப்பட்டிருக்கிறது என்பதை இவர்கள் உணர ஆரம்பித்தார்கள். பொதுவாக நான்கு வருணங்களே உள்ள சமுதாயத்தில், பஞ்சமர் அல்லது ஐந்தாவது வருணத்தை அல்லது சாதியை ஏற்படுத்துவது - அவர்களைக் கீழ்மக்களாகக் கருத வேண்டும் என்ற காரணத்துக்காகவே!தென்னிந்தியாவின் முதல் குடிமக்கள் என்ற பொருள் தொனிக்கும்படியாக ஒரு பெயர் தங்களுக்கு இருத்தல் அவசியம் என உணர்ந்த மக்கள், மிக மோசமான சாதிமுறைக்கும் தங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை எனக் கண்டார்கள். பூர்வீக மக்கள் என்பது தெளிவாகத் தெரியும்படியாக ஒரு பெயர் தங்களுக்கு வேண்டும் என்று விரும்பினார்கள். “யூரேஷியர்” என்ற சுட்டுப் பெயரை விரும்பாத யூரேஷிய இன மக்கள், தங்களை “ஆங்கிலோ-இந்தியர்” என அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். சூத்திரர் என்று கூறிக் கொள்ளப் பிடிக்காத பிராமணரல்லாத சாதி இந்துக்கள், தங்களை “திராவிடர்கள்” என்று அழைத்துக் கொண்டார்கள்.முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன் அதாவது (1895இல்) தங்கள் இனத்துக்கு ஒரு பெயர் சூட்டிக்கொள்ள விரும்பிய இம்மக்கள், “திராவிடர்” என்று பெயர் மாற்றிக்கொண்ட சூத்திரர்களிடமிருந்து தாங்கள் தனிப்பட்டவர்கள் என்பதை விளக்கும் வகையில் “ஆதிதிராவிடர்” என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்........................................ஆதிதிராவிட சமுதாயம் ஒரு காலத்தில் மிக்க செல்வாக்கோடும் பெரும் புகழோடும் வாழ்ந்து வந்தது என்ற உண்மையை மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை. அச்சமுதாயம் சொந்த அரசாங்கத்தையும் நீதி மன்றங்களையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்தைந்து பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு பஞ்சாயத்து என்ற பெயரில் செயல்புரிந்து வந்தார்கள். இந்தவித பஞ்சாயத்துக்கு மூத்தோர்கள் குழு என்று பெயர். ஐந்து பேர்கள் தலைமை வகிக்க கூட்டப்படும் நீதி மன்றமே பஞ்சாயத்து ஆகும். இந்த ஐந்து பேர்களிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர்தான் நாட்டாண்மைக்காரர். இச்செயல் முறைகளை கிராமங்களிலே இன்றும் நாம் காணுகிறோம். கிராமங்களில் தோன்றும் தீர்த்து வைக்கக்கூடிய வழக்குகளை, இந்தப் பஞ்சாயத்து போற்றத் தகுந்த முறையில் தீர்த்து வைக்கிறது.ஆதிதிராவிடரில் ஒரு பகுதியான வள்ளுவர்கள்,6 பல்லவ மன்னர்களின் மத குருக்களாக, பிராமணர் வருவதற்கு முன்னும், வந்த பிறகு சிலகாலம் வரைக்கும் விளங்கினார்கள்.“இத்தனி உவச்சன் ஸ்ரீவல்லுவம் பூவணவன் நியமம் ஆறாளிட்டு உவச்சப்பணி செய்பவன்”என்று 9ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் காணப்படுவதாக சர். ஹெரால்டு ஸ்டூவர்ட், 1891ஆம் ஆண்டு வெளியிட்ட மக்கள் தொகை பற்றிய அறிக்கையில் குறிப்பிடுகின்றார்........................................................................................................................ஒருகாலத்தில் உன்னதமாகவும் உயர்ந்த நிலையிலும் இருந்த இனம் அவலநிலைக்கு ஆளாகிவிட்டது. ஆங்கிலேய அமைப்பு ஓரளவு இவர்களை காக்கவந்தது. எனினும் இன்னும் ஆதிதிராவிட மக்களை பொதுக்கிணறு, குளம் இவைகளில் அனுமதிப்பது கிடையாது. மேலும் பொது நிதியினின்றும் இயங்கும் பள்ளி, கல்லூரி இவைகளில் இவர்களுக்கு இடமில்லை. இவர்கள் பாமரர்கள் என்றும் தற்குறிகள் என்றும் பழிக்கப்படுகிறார்கள். ஆண்டவர் தரிசனத்திற்கும் அறுகதையற்றவர்களாம். ஆலயங்களின் கதவுகள் இவர்களுக்கு திறக்கப்படுவதில்லை. பொதுச் சாலைகளில் செல்வதற்கும், சவங்களை புதைப்பதற்கும் மற்ற இனத்தினரின் தயவையே எப்போதும் நம்பி வாழும் நிலையிலிருக்கிறார்கள்.... சாதி இந்துக்கள் ஆதிதிராவிடர்கள்பால் இத்தகைய கொடும்பாவ போக்கினை கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இவர்கள் நிலைமை சற்று மாறி இருக்கிறது.மனுவின் நீதி நூலுக்கு மேட்டுக்குடியினர் உகந்த வகையில் கல்லறை கட்டினார்களா? எல்லா நடைமுறைக் காரியங்களுக்கும் அது இறந்துபட்டதாக இருந்தாலும் மீண்டும் அது அமுலுக்கு கொண்டு வரப்படாமலா போய்விடும்? ஆயிரம் ஆண்டுகள் ஆண்ட முஸ்லீம் ஆட்சியிலும், ஆங்கிலேயர் ஆண்ட ஆட்சிக்காலத்திலும் நம்மால் சாதிக் கொடுமையை ஒழிக்க முடிந்ததா? மாறாக சாதிவெறி தலைத்தூக்கி ஆடுகிறது. சாதிவெறி மக்கள்பால் கொண்ட வெறிப் பிடியைத் தளர்த்தி வருகிறது என்று சொல்லப்பட்டாலும் தனி மனிதனுக்கு உண்டான சுதந்திரத்தை, உரிமையைத் தாழ்த்தப்பட்டவருக்கு அளிக்க சாதி இந்துக்கள் மறுக்கிறார்கள். சட்டமும் இச்செயலை அனுமதிக்கிறது. இதற்கேற்ப நீதிமன்றமும் இதனை ஆமோதிக்கிறது. தேசிய வளர்ச்சிக்குத் தனி மனித உரிமை ஓர் முக்கிய அம்சமாகும்.சமூகத்திலுள்ள முரண்பாடுகள் சீர் செய்யப்படாத வரையில் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடாது. அரசியல் சுதந்திரம், அரசியல் சமத்துவம், அரசியல் சகோதரத்துவம் பெற விரும்பும் மக்களுக்கு, முதகல் சமூக சுதந்திரம், சமூக சமத்துவம், சமூக சகோதரத்துவம் முதகயவற்றை வலியுறுத்த வேண்டும்.உயர் வகுப்பினர் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சக தோழர்களுக்கு ஆற்றவேண்டிய அரும்பணி அநேகம் தெளிவாகவும் குறிப்பாகவும் இருக்கின்றன; ஆனால், அவர்களோ மாறாக உங்களுடைய தேவைகள் என்ன? நீங்கள் ஏன் திருப்தி அடையவில்லை என ஏளனமாகவும் கேலியாகவும் கேட்கும் நிலைதான் உள்ளது. நாங்கள் வேண்டுவது என்ன? நாங்களும் உங்களைப்போல மனித இனம்தானே. எங்களைப் போன்று நீங்களும் உங்கள் விருப்பத்திற்கு மாறாக கலாச்சாரம் என்ற பெயரால் மாற்று வகுப்பினரின் ஆதிக்கத்தின் பிடியில் நீண்டகாலம் சிக்கி சீரழிந்து போனால் நீங்கள் என்ன விரும்புவீர்கள். உங்களைச் சுரண்டினால்-நீங்கள் அறிவுப் பசியால் வாடினால்-பள்ளி, நடைபாதை, பொது இடம், கிணறு, கோயில் போன்ற பொதுநல வாய்ப்புகள் இழக்கப்பட்டால், நாள்தோறும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானால் நீங்கள் என்ன விரும்புவீர்கள்! நாங்கள் கற்களோ பாறைகளோ அல்ல. எங்களுக்கும் ஆசாபாசங்களும், தேசப் பெருமையுனூடே பேரும் புகழும் அடைய வேண்டும் என்ற உணர்ச்சிகளும் இருக்காதா? நாங்கள் எத்தனை துன்பங்களையும், கொடுமைகளையும், சுரண்டல்களையும், அவமானத்தையும், அல்லல்களையும் அனுபவிப்பது!எங்கள் தேச அபிமானத்தை சிதைத்திருக்கிறீர்கள். அவமதிப்புகளை அளவில்லாமல் எங்கள்மீது குவித்து எங்கள் தன்மானமே அழியுமளவுக்கு ஆக்கிவிடிருக்கிறீர்கள். அரசியல் துறையிலும், பொருளாதாரத்திலும் நாங்கள் அழிந்தே போகுமளவுக்கு எங்களை அல்லல்களுக்கு உட்படுத்தி அலைக் கழித்திருக்கிறீர்கள். முதலில் நாங்கள் சுதந்திரம் அடையவேண்டும். நாங்கள் மனிதராக வாழவேண்டும். மனித உரிமையும் எங்களுக்கு வேண்டும். இதுவே நாங்கள் வேண்டுவதெல்லாம். யாருடைய பரிவோ, பரோபகாரமோ எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் பெற விரும்புவது சமூக முன்னேற்றம், அரசியல் எழுச்சி, பொருளாதார உயர்வு.ஏழை எளியவர்க்கு சேவை செய்வது சிறந்தது. அவர்கள் கடவுளரின் பிள்ளைகள். அவர்களை புறக்கணிக்கக் கூடாது. இயேசும், கிருஷ்ணனும், வாமனும் அரண்மனைகளிலே பிறந்தார்களில்லை.இயேசு வளங்கொழிக்கும் கேப்பர்னாம்பெத்ஸிடயா நகரங்களிலா பிறந்தார்? கலீலியாவிலுள்ள இழிந்த குடியானவனோடு இருந்தார். அவர் செல்வர்களையும் சீமான்களையும்விட பாவிகளையும் பாமரர்களையுமே நாடினார். நைந்துபோன ஆடைகள் சிறிய பாவச் செயல்களைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. ஆனால் ஆடம்பர ஆடை அணிகள் பெரும் பாவச் செயல்களை மூடிமறைக்கின்றன. மற்றவர்கள் செய்யும் குற்றமெல்லாம் குற்றமாக எண்ணாமல் ஏதோ ஒரு சமாதானம் கூறி மறைக்கப்படுகிறது. ஆனால் ஒதுக்கப்பட்டவர் செய்யும் சிறு காரியமானாலும் அவையெல்லாம் பெரிதாக்கப்படுகின்றன. இருப்பினும் ஆதிதிராவிட உள்ளம் எதையும் தாங்கும் உரம் பெற்றதாக இருக்கிறது.தாழ்த்தப்பட்டோர்களின் முன்னேற்றத்தில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட இனம் என்று ஒன்று இருக்கின்றவரையில் முழு பொறுப்புள்ள அரசாங்கத்தை அளிப்பதோ, ஆட்சி சீரமைப்புக்கு அடிகோலுவதோ மிகப் பெரியதோர் தவறை வகய வரவழைப்பதைக் காட்டுமேயன்றி வேறென்ன!............................இந்துக்களைப் போன்று ஆதிதிராவிடர்களும் இந்த நாட்டு மக்களில்லையா? அவர்கள் வாழ்க்கைத் தரம் கேவலமாக இருப்பதால் மேட்டுக்குடிகளின் வெறுப்பிற்கும் ஏளனத்திற்கும் ஆளாக வேண்டுமா? ஆதிதிராவிடர்கள் அசுத்தமாகவும் அறியாதவர்களாகவும் இருப்பதற்கு சாதி இந்துக்களன்றோ காரணமாவார்கள். தாழ்த்தப்பட்டோர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் என்றால் இவர்கள் உழைப்பை உறிஞ்சி வயிற்றுக்கும் போதாத ஊதியத்தை கொடுத்த அந்த மேட்டுக்குடி சாதி இந்துக்களே பொறுப்பாளிகள் - குடிகாரர்களாக இருக்கிறார்கள் என்றால் சாதி இந்துக்கள் அவர்களைத் தீய வழிகளில் நடத்திய காரணத்தினால் அல்லவா? - வாழ இடமில்லாமல் வாடுகிறார்கள் என்றால் மேட்டுக்குடிகள் நிலங்களை அபகரித்துக் கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்காததாலல்லவா?அயல்நாட்டினரும் மற்றவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்த்துக் கூறும் குறைகள் என்னவெனில் அவர்கள் மிகவும் அசுத்தமானவர்கள் என்பதே. தூய்மையைப் பற்றி சொல்லப்போனால் தாழ்த்தப்பட்டவர்களில் பலர் உயர்சாதி என அழைப்பவர்களைவிட அதிகமாகத் தூய்மையுடையவர்கள் எனக் காட்டலாம். இயற்கை எல்லோருக்கும் ஈந்த தூய நீரைத் தாங்களே உடமையாக்கிக் கொண்டு இவர்களுக்கு தூய்மையற்ற நீரை அனுபவிக்கவிட்டால் இவர்கள் எவ்வாறு தூய்மையாக இருக்கமுடியும்?தவறு யாருடையது? தாழ்த்தப்பட்டோர்களுக்கு குடிக்க - குளிக்க - நீர் கொடுக்காமல் இவர்களை தூய்மையற்றவர்கள் என்று மட்டும் கூறத் துணிவு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்க நல்ல நீர், இருக்க இடவசதியற்று அசுத்தத்திலே உழல்வதால் நோய் நொடிகளுக்கு ஆளாகிறார்கள். இதற்கு யார் காரணம்? இத்தனை கொடும் பாவச் செயல்களுக்கெல்லாம் சாதி இந்துக்களே காரணம். இந்த வாழமுடியாத நிலைமை மாற்றி அமைக்கப்படுமா? இந்தியா உரிமை பெறுகின்ற நேரத்தில் இந்த நிலைமை மாறும் என்று கூறிய காலமொன்று இருந்தது. அந்த நேரத்தை நெருங்கி விட்டோமா? இப்படிப்பட்ட வெட்கக்கேடான நிலைமை ஒன்று நாட்டில் ஒருகாலத்தில் இருந்ததே என்று சாதி இந்துக்கள் நினைத்துப் பார்க்கும் காலம் எப்போது வரும்! சாதி இந்துக்களுடைய நாட்டுப் பற்றும் மதக் கோட்பாடுகளும் அவர்கள் நீண்ட காலமாக செய்து வரும் தவற்றை நீக்காவிட்டாலும் - நல்ல எண்ணமுள்ளவர்களையும், தரும சிந்தனையாளர்களையும், நற்காரியங்களில் நாட்டமுள்ளவர்களையும் இப்போது வேண்டிக்கொள்வது - தாழ்த்தப்பட்டோர்களின் சமூக முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், அரசியல் சுதந்திரத்திற்கும் தீவிரமாக உழைக்க முன்வரவேண்டும் என்பதே! அப்போதுதான் இந்தியாவின் முன்னேற்றம் உறுதியாக்கப்படும்.ஆனால் இதுவரை மனித சுபாவம் இருந்து வந்திருக்கிறதே எவ்வாறு - ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக இந்துக்கள் மனப்பூர்வமாக உழைப்பார்கள் என்றோ அல்லது முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்வார்கள் என்றோ எதிர்பார்ப்பது அவ்வளவு அறிவுடைமையாகாது.................................1923ஆம் ஆண்டு ஜூலை 21, 22ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த இரண்டாவது தென்னிந்திய ஆதிதிராவிட பேரவையில் நான் ஆற்றிய தலைமையுரையிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகின்றேன். அந்த மேற்கோள், சட்டமன்றத்தில் அன்று அதிகாரத்தைப் பற்றி ஆண்ட சாதி இந்துக்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை, பல உண்மைநிகழ்ச்சிகளோடும் புள்ளி விவரங்களோடும் உங்களைத் தெளிவுபடுத்தும்:“திருத்தி அமைக்கப்பட்ட இச்சட்ட மன்றத்தில் நீதிக்கட்சி உறுப்பினர் பெருவாரியாக இருந்தும் நீதிக்காக இம்மன்றம் என்ன செய்தது? இக்கட்சி பதவியில் அமர்ந்த ஓராண்டு காலத்துக்குள் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தில் ஒரு லட்சம் ரூபாயை வெட்டியது. இதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் குன்றிவிட்டது; பறிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிக்கட்சித் தோழர்கள் தாழ்த்தப்பட்டோர் நலத் துறைகளை மூடிவிட்டனர். அத்துறைகளில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகள் எல்லோரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இக்கொடிய செயலால் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் முடமாக்கப்பட்டது. அந்த நிலையில் ஆதிதிராவிட ஏழை மக்களின் நிலைமையை சிந்திக்க வேண்டுகிறேன். நல்லகாலமாக நீதிக்கட்சியின் பதவிக்காலம் இரண்டாண்டோடு முடிந்துவிட்டது. கடவுள் நம்மைக் காப்பாற்றினார். சாதி இந்துக்கள் நம்மீது பிறவிப் பகை கொண்டிருக்கிறார்கள்................................................“இப்போது அதிகாரத்திலிருக்கிற கட்சி நம்முடைய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல நன்மைகளைச் செய்தது என்று நான் கேள்விப்பட்டபோது வியப்பில் ஆழ்ந்துபோனேன். ஆதிதிராவிடர்களின் செலவிற்காக சில மானியங்களையும் ஒதுக்குகின்றது என்று சில அரசியல்வாதிகள் என்னிடம கூறினர். இது அவர்கள் பெருந்தன்மையால் வந்தது என்பதா அல்லது பெருந்தன்மையற்ற ஒருசில தனியார் வினையென்பதா என்று எனக்கே புரியவில்லை. ஒருவர் தன்னை ஒரு தாழ்த்தப்பட்டவன் என்றும் தாழ்த்தப்பட்டவரின் பிரதிநிதி என்றும் கூறிக்கொண்டு, அரசாங்கம் நமக்காக செய்வதாகக் காட்டும் பல காரியங்களின் புள்ளி விவரங்களையும், பல திட்டங்களையும் பொது மக்களிடையே பேசி அவற்றை அம்மக்கள் புரிந்துகொள்ள அரும்பாடுபடுகிறார்.“இதே சூழ்ச்சிக் கொள்கையை மக்கள் முன் வைத்துத்தான் கபட நாடகமாடி நீதிக்கட்சிக்காரர்கள் ஆட்சிக்கு வந்தனர். நமக்காக ஒதுக்கப்பட்ட தொகை, நம் நலனுக்காகையாலும் முறை, துறை என்று காணப்படும் வரவு செலவு புள்ளி விவரங்கள் யாவும் உண்மையானவை அல்ல;பொய்யே. மேலும் உண்மையாகக் கூறப்போனால் “ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்” ஆட்சியாளரிடம் கேட்ட செலவுப் புள்ளிகளைத்தான் நமக்காக செலவிடப்படுவதாய் வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையில் அந்த புள்ளிவிவரப்படி இவர்கள் நமக்குச் செலவிடவில்லை. தனது கட்சி தாழ்த்தப்பட்டோருக்குச் செலவிடும் புள்ளிவிவர நகலில், அதன் பெருந்தன்மைகளைக் கூறும் அறிக்கையில் இவையாவும் உன்மையென உறுதிப்படுத்த நம் இனத்தைச் சேர்ந்த ஒருவரை கையொப்பமிடச் செய்வது ஒரு பெருத்த சூழ்ச்சியேயாகும்.தங்களுடைய செயல்களைத் திரித்துக் கூறும் நீதிக்கட்சியின் வர்க்க புத்திக்கும், அநீதிக்கும், உண்மைகளை மறைத்துப் போக செயலுக்காக ஆதிதிராவிடரை துணைக்கு அழைக்கும் போக்கிற்கும் “அரசியல் சூழ்ச்சி” என்றுதான் பெயர்........................தென்னிந்தியாவில் அரசியல் சீர்திருத்தம் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆரம்ப நிலையிலேயே சீர்திருத்தத்தின் பேரால் பிராமணர் அல்லாத சாதி இந்துக்கள் பல நகராண்மைக் கழக மன்றங்களிலும் இடம்பெற்று, தங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் பாதுக்காப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு செய்யும் செயல்களைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. அவர்களின் நயவஞ்சகச் செயல்களால் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் தடைபடுகிறது. உழைப்பாளர் மிகுந்துள்ள தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் அவ்வுழைப்பாளரின் முதுகெலும்பு ஆவர். இந்த முதுகெலும்பு சாதி இந்துக்களால் ஒடிக்கப்படுகிறது; அதன் நம்பிக்கைகளும், ஞானமும் தேய்வுபடுகின்றன. இதனால்தான் இந்தியாவிலுள்ள தலைவர்கள், எளியோர்- தாழ்த்தப்பட்டோர் உரிமைகளையும் நலன்களையும் காப்பார்கள் என்று நம்பவே கூடாது என்று அயல்நாட்டார் மிக உண்மையாக அன்றே கூறினர்.ஆங்கிலேயன் ஓர் அந்நியன். இந்தியாவை இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆண்டாலும் இங்குள்ள இந்தியரின் உள்ளக் கிடக்கையை உள்ளபடி அறியமாட்டான். ஆனால், நாம் ஒருவரை ஒருவர் ஆழமாக அறிவோம். அவன் ஐரோப்பாவைச் சேர்ந்தவன். ஆனால் இந்தியாவையும் ஆளுபவன். தன் நாட்டில் ''பொதுமக்கள் கருத்து” என்பதனைத்தான் உளமாற அறிவான். அதுவே அந்நாட்டு மக்களின் கருத்து என்பதை அவனால் நன்கு உணர முடிகிறது. தன்னுடைய கருத்துக்கும், கோட்பாடுக்கும், கடமைக்கும் - தன் நாட்டிற்கும் - தன் மக்களுக்கும் உள்ள தொடர்பினை ஆழமாக ஆனாலும் உண்மையாக அறிவான். அதே சொல்லான ''பொது மக்கள் கருத்து” என்பதை ஒருசில இந்திய அரசியில்வாதிகளின் கூச்சல்களிலிருந்து அவன் அறியும்போது, இக்கூச்சலின் பிரதிபலிப்பே இந்தியாவில் உள்ள ''பொதுமக்கள் கருத்து” என்று கொள்வானேயானால் அது பிழையாகும்.ஆனால் அவன் இந்த அரசியல்வாதிகளின் வேடத்தை நம்பி விடுகிறான். சாணிக் குப்பையைக் கிளறிக் கொழுத்த அந்த கோழிகள் கையில் முக்கியமான அரசியல் துறைகளை ஒப்படைக்கிறான். இந்த அரசியல்வாதிகள் தங்களை ''பொது மனிதர்கள்” என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள். ஆம். இவர்கள் ''பொது மகளிர்கள்” போலவே வாழ்கிறார்கள். இவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த ஐக்கியமுமில்லை..............................................''இந்தியர் மயம்” ஆக்குதல் என்பது அரசாங்கத்தையே இந்தியப் பண்பாடாக்குதல் என்பதோ அல்லது பிரிட்டானியர் பண்பாட்டை வடிகட்டி இந்தியப் பண்பாட்டிற்கு ஒத்துவரச் செய்தல் என்பதோ முடியாத காரியம். பிரிட்டானியர் அமைத்துள்ள அரசியல் அமைப்பு முறை நிலைத்திருக்க வேண்டும். நீதி, உரிமை, முன்னேற்றம், போன்ற சொற்களின் உயர்ந்த கோட்பாடுகளை இன்று இந்த நாட்டில் நடமாடவிட்டிருப்பது பிரிட்டானியர்களே ஆவர். இந்தியர் சாதி வெறியர்கள். இவர்களின் பொறுப்பில் பெரிய பதவிகள் வரும்போது சாதீய கண்ணோட்டத்தில்தான் நடப்பார்கள். இதனால் திறமையற்ற நிலைமை ஏற்பட்டு நிர்வாகம் கெடும். ஆங்கிலேயன் ஓர் அந்நியன். ஆனால் சாதிவெறி அவனிடமில்லை. எனவே நிர்வாகத்தில் எந்தக் காரியத்திலும் திறமையாகவும், பாரபட்சமின்றியும் அவன் நடந்து கொள்கிறான்...... நிர்வாகத்தை திடீரென இந்திய மயமாக்க முனைவது கூடாது. இதை நிதானமாக தாழ்த்தப்பட்டோர் நலம் கெடாதபடி செய்யவேண்டும். இந்த நாட்டில் சாதி இருக்கின்றவரை ஆங்கிலேய ஆட்சிமுறை தேவைதான் அல்லது அவர்களின் சேவையாவது தேவைதான். 1924ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி வெகங்டன் பிரபுவின் பிரிவு உபசாரத்தின் போது தாழ்த்தப்பட்டோர் தந்த உபசார இதழிகருந்து சில வரிகளைக் கூற விரும்புகிறேன். ''தகைமைச் சான்றோரே, தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறோம். தாங்கள் இங்கிலாந்து சென்றவுடன் ''தாழ்த்தப்பட்ட இந்தியா” தங்களின் நலன்களைக் காக்கும் அறங்காவலர்களாக பிரிட்டானியரைக் கருதுகின்றனர் என்று கூறுங்கள்.உயர்குலத்தானே ஆளத் தகுதியுடையவன் என்ற சாதிய அடிப்படை இந்நாட்டிலிருக்கின்றவரை, உழைப்பாளர்களை ஒடுக்கி வைத்திருக்கின்றவரை, பழக்குடிகளின் நலம் பாதிக்காதபடி கண்காணிக்கவும், கட்டுதிட்டம் செய்யவும், ஒத்துபோகக் கூடிய ஆட்சி இங்குத் தேவை...............''இந்தியர் மயம்” ஆக்கப்படவேண்டுமென்ற கூச்சல் திடீரென பலம்பெற்று வெற்றியும் கண்டுவிட்டால் தாழ்த்தப்பட்ட நாங்களெல்லாம் நாதியற்று எங்கள் பூண்டே இல்லாது மறைய நேரிடும்.”தாழ்த்தப்பட்டோருக்கு மிகமிகத் தேவையான பொருள் கல்வியேயாகும். அக்கல்வியும் உரிமை எனும் கல்வியாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட கல்வியால்தான் ஆதிதிராவிடர் மனிதர்களாக தலைநிமிர்ந்து நடக்க முடியும். கல்வி ஒன்றுதான் இவர்களைப் பற்றியுள்ள எல்லா பிணிகளையும் போக்கவல்ல சகலரோக நிவாரணியாகும். ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும்கூட கட்டாயக் கல்வி தேவையா? அதுவும் ஒரு குறிபிட்ட இனத்து ஆண், பெண்களுக்குத் தேவையா என்று விவாதிப்பது இன்றைய நிலைக்கு ஒவ்வாத வாதமாகும். கல்வி ஒன்றுதான் தாழ்த்தப்பட்டோரை ஒளிவீசும்படியும், மேலும் தூய்மையடையும் படியும், மகிழ்ச்சி கொள்ளும்படியும் செய்யும். அன்றுதான் அவர்களின் உழைப்பு அவர்களுக்கே பயன்பட்டு இனிக்கும். கல்வி நலனை அடையத் தாழ்த்தப்பட்டோர் பேராவல் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுடைய தாங்க முடியாத ஏழ்மை அதற்குத் தடையாக நிற்கிறது. தாழ்த்தப்பட்டோர் பிள்ளைகளுக்குக் கட்டாயக் கல்வித் திட்டம் தேவை. அவர்களுக்கு மதிய உணவும் வயிறாற வழங்க வேண்டும், அதோடு அப்பிள்ளைகளின், சிறு கூலியால் வயிறு வளர்த்த பெற்றோருக்கு ஒருவித நிதி (போனஸ்) உதவியும் அரசாங்கம் செய்யவேண்டும்.தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகள் கட்டாயம் எப்பாடு பட்டாகிலும் கல்வியின் பயனை அடையவேண்டும். அவர்களுக்கு எழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுத்து திசை காட்டும் கருவியற்ற கப்பல்போன்ற வாழ்க்கைக் கடலிலே தத்தளிக்க விட்டு விடக்கூடாது. அன்றாட உணவை அவர்கள் தேடிக்கொள்ளும் வகையில் அவர்களுக்குக் கல்வியறிவும் கைத்தொழிலும் கற்பிக்க வேண்டும். கல்விக் கூடங்களில் கல்வியோடு ஒரு கைத்தொழில் பயிற்சித் திட்டத்தையும் கட்டாயமாக இணைக்க வேண்டும். இத்தகைய திட்டம் இன்று அரசாங்கத்தால் ஒருசில இடங்களில் ஏற்படுத்தப் பட்டிருந்தாலும் இது தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகைக்கு மிகமிக போதாததே.அரசாங்கம் இதை அக்கரையோடு ஏற்படுத்தவுமில்லை. ஏதோ ஒருசில கருணையுள்ளம் கொண்ட வெள்ளையர் அரசியல் சீர்திருத்தம் இங்கு தொடங்குவதற்கு முன்பே தாங்களே முன்வந்து ஆரம்பித்தார்கள். 1923ஆம் ஆண்டில் உள்துறை சட்டமன்றத்தில் ஆதி திராவிடப் பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளங்களை அதிகரிக்க வேண்டு மென்று நான் ஓர் தீர்மானத்தைக் கொண்டுவந்தேன். அன்று கல்வி அமைச்சராக இருந்தவர் ஒருசாதி இந்து. அவர் “ஏழ்மை என்பது ஆதிதிராவிடருக்கு மட்டும்தான் உள்ள தனி சொத்தல்ல, மற்ற வகுப்பாரிலும் ஏழைகள் இருக்கின்றனர்” என்று கூறி என் தீர்மானத்தை எதிர்த்தார். 1923 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கல்வி அமைச்சரின் போக்கு பற்றி மனம்விட்டு இப்படிப் பேசினேன்:7”ஆதிதிராவிடக் குழந்தைகளின் உபகாரச் சம்பளம் சம்பந்தமாக நேற்றைய தினம் உபகாரச் சம்பளத்தையும், எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என்று கோரி நான் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய கல்வி அமைச்சர் அவர்களின் போக்கைக் கண்டிக்கிறேன். ஏழ்மை என்பது தாழ்த்தப்பட்டோரின் ஏகபோக சொத்தல்ல, பிராமண பிள்ளைகளில்கூட ஏழைகளிருக்கின்றனர் என்று அவர் கூறினார். இந்த உண்மைகளை எங்கே எப்பொழுது அவர் கண்டுபிடித்தார் என்று நான் வியப்படைகிறேன்.மற்ற வகுப்பாரில் ஏழ்மை இருந்தாலும் தீண்டாமை இல்லை. உதாரணமாக பிராமணரிடத்தில் முதலியார்களும், முதலியார்களிடத்தில் பிராமணர்களும் பழகலாம், பணியாற்றலாம். இவ்வாறே எல்லா வகுப்பினரும் கலந்து கொள்ளலாம்; இது கல்வி பொருளாதாரங்களில் சரளமான புழக்கத்தை ஏற்படுத்தி முன்னேற வழிகோலும். ஆனால் தாழ்த்தப்பட்டோர் தீண்டாமையின் காரணமாக எவரிடமும் சென்று பணியாற்ற முடியாததோடு கல்வி, பொருளாதாரத் துறைகளில் பிறரால் ஒடுக்கப்பட்டு பின்தங்கி விடுகின்றனர். எனவே, ஆதிதிராவிடருக்கு தனித்தொரு சலுகைகள் எல்லாத் துறைகளிலும் வழங்க நியாயமிருக்கிறது.................................அவர் இதை அமைச்சராவதற்கு முன்பே கண்டாரா? அல்லது அமைச்சரான பிறகு கண்டுபிடித்தாரா? பிராமணப் பிள்ளைகள் ஏழைகளென்றால் ஏன் பிராமணர் அல்லாதார் தலைவராகிய இவர் பிராமண மாணவர்களுக்காகப் பாடுபடக் கூடாது?தாழ்த்தப்பட்ட மாணவர்களோடு மற்ற மாணவர்களும் ஏழ்மையில் உழலுகிறார்கள் என்றால் இவரும் இவருடைய கட்சியாரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஏன் சலுகைகள் வழங்குகின்றனர்? தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஏழ்மைக்கும் மற்ற சாதி மாணவர்களின் ஏழ்மைக்கும் இவர் வேறுபாடு இல்லை என்று எண்ணுகிறாரா? தாழ்த்தப்பட்டோரின் ஏழ்மைக்குக் காரணம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மேட்டுக் குடியினர் கையாண்ட ஒடுக்குமுறைச் சதிதான் என்பதனை அவர் உணர்கிறாரா? மற்றவர்கள் பல தனிப்பட்ட உரிமைகளை அனுபவிக்கும்போது நமக்கு இந்த சலுகையாவது தேவை என்று கேட்பது நமது நேர்மையான கோரிக்கையாக ஆகாதா? அவர் இந்த அடிப்படையான அரசியல் பாடத்தை மறந்து விட்டிருந்தால் தற்போது அரசாங்கம் வெளியிட்டுள்ள ஜி. ஓ. 239 எண் உத்தரவை அவருக்குப் படித்துக் காட்டுகிறேன்.அந்த உத்தரவு கூறுவதாவது:“இந்தக் குழு தனிப்பட்ட சலுகைகள் சில வகுப்பாருக்கு இன்றியமையாதவை என்று நினைக்கிறது; இதன்படி ஆதிதிராவிட வகுப்பாரைப் பொறுத்தமட்டில் தேவையான உணவு வசதியும் சம்பள வசதியும் செய்து தரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்நிலைக்கு அவர்கள் ஏழைகளாக இருக்கக் காரணம் இந்நாட்டின் விசித்திரமான சாதிப் பழக்க வழக்கங்களும் செயல்களுமேயாகும். அதின்றி இந்த வகுப்பார் பரம்பரை பரம்பரையாகப் பெற்றுவரும் பிறப்பு குறைபாடன்று. இந்த நோக்கத்தோடு பார்க்கும் போது தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி வழங்குதல் என்பது இந்த தேசத்தின் கடமையாகும். எனவே, பொதுப் பணத்தை இவர்களின் முன்னேற்றத்திற்கு எல்லா வகைகளிலும் செலவிடுதல் சாலப் பொருந்தும்”.''நேற்று கல்வி அமைச்சர் பேசிய பேச்சு என்றுமே நான் கேட்ட றியாத கருணைமிக்க பேச்சாகும். இது இந்த அவையின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் உதடுகளிலிருந்து வெடித்தது. ''பின்தங்கிய வகுப்பார்” என்று அழைக்கப்படுவோரின் ஏழ்மையை எனக்கு மாண்மிகு அமைச்சர் சுட்டிக்காட்டினார். எப்பொழுதெல்லாம் நான் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பற்றிக் கேட்கிறேனோ அப்பொதெல்லாம் பின்தங்கிய வகுப்பாரை முன் வைத்து எனது கோரிக்கையை நிராகரித்து விடுகிறார்கள். பின்தங்கிய வதுப்பார் என்போர் யாவர்? அவர்களை தாழ்த்தப்பட்டோரினின்று எவ்வாறு வேறுபடுத்தி அறிவது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அவர்களெல்லாம் மேல்சாதி இந்துக்கள் என்றே எண்ணுகிறேன். இந்த பின்தங்கிய சாதி இந்து வகுப்பிலிருந்து வந்த குறைந்தது இரண்டு அமைச்சர்கள் இச்சபையில் இருக்கிறார்கள்”.சாதி இந்து அமைச்சர்கள் இவ்வாறு நம்மை நடத்துவார்கள் என்று ''சீர்திருத்தம்” இங்கு கொண்டுவருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் எதிர்பார்த்ததுதான். இம்மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் அமைப்பாகத் திகழ்ந்த சென்னை ''ஆதிதிராவிட மகாஜன சபா”வை 1918இல் இந்திய அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரும் முன் சில ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது ஆதிதிராவிட மகாஜனசபை கீழ்க்கண்டவாறு தன் எண்ணங்களை வலியுறுத்திற்று:''இந்தச் சீர்திருத்த சட்டத்தைப் பற்றி எங்களுடைய உள்ளக்கிடக்கையைப் பொதுப்படையாக உணர்த்த விரும்புகிறேன். இன்றைய மக்களின் கருத்தோட்டம் - சமூகநீதியின் மேம்பாடு இந்நாளில் நடந்து கொண்டிருக்கும் காலக்கட்டம்-தாறுமாறாக வேறுபட்டிருக்கும் எண்ணற்ற சமூக வகுப்புக்கிடையே இன்று மேலோங்கி நிற்கும் மனப்போக்கு-ஆகிய இவைகளைக் கருத்திற் கொண்டு அணுகும்போது இந்நாட்டில் இரட்டை ஆட்சி8 முறை அமைவதை நாங்கள் கட்டோடு வெறுக்கின்றோம். எந்த ஒரு நிர்வாகத்தையும் இப்பொழுது மக்களாட்சிக் கட்டுக்குள் மாற்றப்படுவதை ஆதிதிராவிட மக்களாகிய நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். குறிப்பாகவும், சிறப்பாகவும் கல்வித் துறை மக்கள் பிரதிநிதிகளாகிய அமைச்சர்களின் ஆளுமைக்கு உட்படுத்துவதை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த அமைச்சர்கள் தங்களுடைய சமூகத்தாரின் நலன்களைப் பேணிக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர். அவர்கள் எங்களை என்றென்றும் அவர்கள் பின் கை கட்டிச் செல்லும் அடிமைக் கூட்டமாகவே தயார்படுத்துவர்.”பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லும் ஆதிதிராவிட மாணவ மணிகளுக்குப் போதுமான கல்வி மானியமும், தாராளக் கட்டணக் குறைப்பும் வழங்கப்பட வேண்டும். இம்மாநிலமெங்கும் ஆங்காங்கே இப்பிள்ளைகளுக்காகப் பற்பல விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.ஒடுக்கப் பெற்ற ஆதிதிராவிட பிள்ளைகளைக் கல்விக் கூடங்களுக்கு அனுப்பி விட்டால் எதிர்காலத்தில் மேட்டுக்குடியினர் இடும் குற்றேவலுக்கு, கூகக் கூட்டம் கிடைக்காமல் போய்விடும் என்றும், நசுக்கப்பட்ட இந்த நந்த குலப்பிள்ளைகள் நாளை நாலும் தெரிந்த பெரிய மனிதர்களாகிவிடுவர் என்றும் சிலர் அஞ்சுகின்றனர். நான் கேட்கிறேன்; ஏன் அவர்கள் அங்ஙனம் மாறக்கூடாது? அவர்களும் இம்மண்ணின் மைந்தர்கள் இல்லையா? அவர்களும் சாதி இந்துக்கள்போல் சரிநிகர் உரிமை பெற்ற இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா?வீதியிலே கூவித்திரியும் விறகு வெட்டியாய்-குடத்திலே நீர் சுமந்து செல்லும் கூலிகளாய் அவர்கள் ஆண்டாண்டு நிரந்தரமாக இருக்க வேண்டுமா? இந்த சாதி இந்துக்கள் என்றென்றும் அவர்களை அதட்டிக் கோலோச்சும் கோமான்களாக இருக்க வேண்டுமா? எப்படி ஒரு முழு சுழற்சிதான் ஒரு சுற்று ஆகுமோ அப்படியே ஒரே சீரான சமூக முன்னேற்றமே ஆரோக்கியமான மேம்பாடாகும். எனவே இப்பிள்ளைகளின் கல்வி நாட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு நிர்வாகத் துறையில் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். சாதிக் கொடுமையின் கோரப் பிடியிலிருந்து இன்னும் விடுபடாத சமுதாயமும் - சமூகப் பண்பாட்டை மதக் கோட்பாடுகளாகத் தவறாகக் குழப்பிக் கொள்ளும் மனப்போக்கும் மலிந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவே அரசுத் துறைகளில் பங்கேற்பது இந்நாட்டின் நலனுக்குப் பெருங்கேடாகும். இந்து-முஸ்லீம் ஒற்றுமை பற்றிப் பேசுவது சாலச் சிறந்ததுதான்; இந்துக்களோடு தோளோடு தோள் சேரவில்லை என்று மகமதியரைப் பழிப்பது மிகமிக எளிது. ஊருக்கு உபதேசம் அப்புறம் இருக்கட்டும்! முதலில் உம் உடம்பைப் பாரும்! இந்துக்களிடையே ஒற்றுமை இல்லை எனின் இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் காணுவது எங்ஙனம்?நிர்வாகத்துறையில் நீதித் துலாக்கோல் சமனாக செயல்பட வேண்டுமாயின் சமுதாயத்தின் எல்லாப் பிரிவினருக்கும் அங்கு பிரதிநிதித்துவம் வேண்டும். வாயிருந்தும் ஊமையாய் உழலும் ஆதிதிராவிட மக்களுக்கு இது மிகவும் அவசர அவசியமாகும். மேட்டுக் குடியினராக இருக்கும் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தங்கள் குரல்களுக்கு சமூக அரங்குகளிலுள்ள செல்வாக்கையும் - நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றலையும்-ஆளவந்தாரின் மோகனப் புன்னகையையும், வசீகரிக்கும் தங்கள் திறத்தையும் மற்றோர் வகுப்பாருக்கு எதிராகத் திருப்பிவிட இயலும் என்பது நாடறிந்த உண்மையாகும்.அரசுத் துறைகளை அலங்கரிப்போருக்கு திங்கள் தோறும் ஊதியம் மட்டும் போய்ச் சேரவில்லை. அரசு அதிகாரமும் - நிர்வாக கீர்த்தியும் - அரசியல் செல்வாக்கும் கூடவே கைமாறுகின்றன.அரசுத் துறைகளில் ஆதிதிராவிட மக்கள் பங்கேற்பின், ஒடுக்கப்பட்ட சமூகத்தாரின் கோரிக்கைகள் உடனுக்குடன் கனிவுடன் கவனிக்கப்படும். கிள்ளுக்கீரையாக ஆதிதிராவிடர்களை மற்றவர் கருதும் மனப்பான்மையும் அச்சத்தால் மாறும்.அரசுத்துறையில் ஆதிதிராவிடர்கள், இடம் பெறுவதானது ஒடுக்கப்பட்டோர்பால் மற்றவர் கொண்டிருக்கும் தீண்டாமை போன்ற பேதைமைக் கருத்துகளை விரட்டியடிக்கும் மந்திரச் சக்தியாகச் செயல்படும். தீண்டாமை-தீட்டு என்ற பைசாசங்களைத் திருவாளர் காந்தியின் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் விரட்டியடிக்கப் போவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களை அரசுத்துறையில் கணிசமான அளவில் பங்கேற்கச் செய்வதின் மூலமும்-நிர்வாக இயந்திரத்தை இயக்கிச் செல்லும் வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கு வழங்குவது மூலமுந்தான் சமூகத்தில் அவர்களது மதிப்பை உயர்த்த முடியும். அரசுத்துறைகளில் மேற் கீழ் இரு மட்டங்களிலும் சேர்ந்து 63 விழுக்காடு பிராமணர் அல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. குறைந்தது 30 விழுக்காடு தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். அரசுத் துறைப் பணி பற்றிய அறிவிப்பில் கோரப்பட்டிருக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியே எங்களுக்கும் போதுமானதாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.ஆதிதிராவிட மக்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இழைக்கப்பட்டிருக்கும் கொடூர அநீதிகளைக் கருத்திற்கொண்டு நோக்குவோமாயின் வரும் கால்நூற்றாண்டிற்கு அரசுத்துறைப் பதவிகள் அனைத்தும் அவர்களுக்கே ஒதுக்கினாலும் அது மிகக் குறைந்த பரிகாரமேயாகும்.ஆண்டுகள் பலவாக கொடுமையால் அலைக்கழிக்கப்பட்ட அவர்கள் உள்ளம் அதனால் ஓரளவு நிம்மதியடையலாம். ஆதிதிராவிட மக்களும் மற்ற சமூகத்தாரும் பொறுப்பாட்சிக் குறிக்கோளை நோக்கி கைபிணைத்து நடை பயிலும் காலம் ஒன்று அதற்குப் பின்வரும். அன்றே மகிழ்ச்சி ஒளிவிடும் - மனைகளைப் பெற்ற ஒரே குடும்பமாக இந்தியா மாறும்.எங்களுடைய கோரிக்கைகள், அத்தியாவசியங்கள், தேவைகள் பலவகைப்பட்டவை; எண்ணிறந்தவை. நூற்றுக்கணக்கான கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பண்ணிப்பண்ணி வலியுறுத்தப் பெற்றவை. இந்நாட்டிகருக்கும் மேல்சாதி சகோதரர்கள் நாங்களும் அவர்களைப்போன்ற சரிநிகர் மனிதர்கள்தான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விழைகிறோம்.முடியரசர்களாயும், பேரரசர்களாயும், மதியூக அமைச்சர்களாயும் இருந்த ஆதிதிராவிடரான நாங்கள் அன்று தாய்நாட்டிற்குள் நுழைந்த ஆரியப் பகைவனை வாள் கொண்டு எதிர்த்தோம். ஆனால் தோல்வி கண்டோம். தோல்வி கண்டும் துவளாமல்-மற்றைய கோழையர் கூட்டம் போலல்லாது- மாற்றானின் நாகரிகத்தைத் தழுவ மறுத்து நின்ற எங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் கொடுமை உலக வரலாறு காணாத ஒன்று; நிரந்தரமான ஒன்று.1 அந்தக் கொடுங்கோன்மையின் கோரம் அன்றிகருந்து இன்றைய சந்ததி வரையில் நிரந்தரமாயும் சற்றும் குறையாமலும் தொடர்கிறது. ரோமாபுரியை ஆக்கிரமித்த காட்டுமிராண்டிகள் கட்டவிழ்த்துவிட்ட வெறியாட்டமும்- நெதர்லாந்தில் மாறுபட்ட மதக் கொள்கையாளர்க்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும்- நீரோ மன்னனின் அள்ளித் தெளித்த அட்டூழியங்களும்-டேமர்னினும் செங்கிஸ்கானும் இழைத்த கொடுங்கோன்மையும் இங்கு சாதியின் பேரால் எங்களுக்கிழைத்த அநீதிகளோடு ஒப்புவமை காணுங்கால் அவைகள் யாவும் குறுகி- சிறுத்து- வெளுத்துப் போய்விடும்.வின்டர்டன் கோமகன் குறிப்பிடுகையில், “தாழ்த்தப்பட்ட வகுப்பு” என்ற பெயரால் ஒரு சமூகம் நீடித்திருக்கும் வரையில் இந்தியன் எவனும் மற்றுமோர் சீர்திருத்தத் தவணைக்கு சுத்தமாக அருகதையற்றவன் என்று தெற்றென விளக்கி இருக்கிறார்.மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று உள்ளவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் எங்கள் சமூக நலனில் அக்கறை காட்டி, எங்கள் முன்னேற்றத்திற்கு ஆவன செய்வர் என்று நம்புகிறோம். அவ்வாறு அவர்கள் செயல்பட்டு, ஆட்சிப் பொறுப்பினை மற்ற சாதி இந்துக்களிடம் வழங்கி செல்லுங்கால் இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமைத் தளையில் ஆட்பட்டு விடுபட்ட ஆயிரக்கணக்கான ஆதிதிராவிட மக்களின் ஒட்டுமொத்த ஆசிகளையும் சுமந்து செல்லக் கூடும்.“எப்பொழுதும் எனக்குத் தோல்வி இல்லை; ஏனெனில் என்றும் நான் முயற்சியை இழக்கப் போவதில்லை.”

இடங்கை வலங்கைப் போராட்டமும் அயோத்திதாசரும்பொ வேல்சாமி

தமிழ்மக்களிடம் ‘இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன?’ என்ற ஒரு சொலவடை வழங்கி வருகின்றது. இதன் பொருள் எத்தகைய அரசு அமைப்பிலும் தங்கள் நிலை மாறவில்லை என்பதாக எல்லோரும் கருதுகின்றோம். ஆனால் எந்த அரசு வந்தாலும் ஏன் அந்த மாற்றம் நிகழவில்லை என்று யாரும் கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை. அதாவது ஆட்சி மாற்றங்கள் என்பது மேல்நிலையில் மட்டும் ஏற்படுகின்றது. பொதுமக்கள் வாழ்வில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. இதனை மார்க்ஸ் ‘ஆசிய உற்பத்தி முறை’ மற்றும் ‘கீழைத் தேய வல்லாட்சி’ என்று குறிப்பிடுவார். சோழர் காலத்தை ஆராய்ந்த பர்ட்டன் ஸ்டெயில் ‘சமய-நீர்ப்பாசன சமூகம்’ என்பார். அதாவது இந்திய- தமிழ்நாட்டு அரசமைப்புகள் உலகின் மற்ற பகுதிகளிலிருந்த அரசு அமைப்புகளிலிருந்து வித்தியாசமானது என்பதைக் குறிக்க மேற்கூறிய சொல்லாட்சிகளைக் கையாண்டனர். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான இடங்களில் கோவில் நிர்வாகம் சார்ந்த பார்ப்பன உயர்சாதிச் சூத்திரக் கூட்டமைப்புகளாலும், நீர்ப்பாசன வசதியற்ற மேட்டு நிலப்பகுதிகளில் சாதியமைப்புச் சார்ந்த குழுக்களாலும் சிவில் நிர்வாகம் என்று சொல்லப்படுகின்ற உள்ளூர் நிர்வாகம் நடைபெற்று வந்தது. இத்தகைய அமைப்புகளில் பேரரசன் அல்லது அரசன் என்பவன் பெரும்பாலான காலகட்டங்களில் உள்ளூர் நிர்வாகத்தில் தலையிட்டுள்ளதாகக் கூறியுள்ள குறிப்புகள் குறைவு. அரசன் என்பவன் இராணுவத் தலைமை சார்ந்து மட்டும் செயல்பட்டான். எந்த அரசன் அல்லது அரசு மாறினாலும் உள்ளூர் நிர்வாகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. அதனால் மேற்படி இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்ற சொலவடை உருவாகி நிலைபெற்றது. இத்தகைய அமைப்பில் ஆளும் சாதிகளுக்கும் ஆளப்படும் சாதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போராட்டங்களாக வெளிப்பட்டபோது அதனை வலங்கை -இடங்கைச் சாதிப் போராட்டமென்று வரலாற்றாளர்கள் மயங்கிக் குறித்துள்ளனர்.தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதியவர்கள் பலரால் குறிப்பிடப்படும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ‘இடங்கை - வலங்கை’ப் போராட்டம் ஆகும். சோழர் காலத்தின் மையப் பகுதி என்று கருதப்படும் 11ஆம் நூற்றாண்டின் இறுதி - 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான சுமார் 900 ஆண்டுகள் இப்போராட்டம் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் தொடர்ந்து குறிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்த சாதிகள் இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்து நீண்ட காலங்களாகத் தங்களுள் பூசலிட்டு வந்ததாக அக்குறிப்புகள் பேசுகிகின்றன. இந்தச் செய்தியைப் பற்றி வரலாற்றாசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.உண்மையில், சாதியமைப்பும் அது உணர்த்தும் சமூக, பொருளாதார முறைகளும் ஏறக்குறைய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் ஆக்கப்பட்ட சமூக ஒழுங்கை நிலைநிறுத்துவது அரசனின் முக்கிய கடமையாகக் கொள்ளப்பட்டது. வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், உணவு, விவாகம் சம்பந்தப்பட்ட வரையில் தனித்தனியே பிரிந்து நின்றதற்கும், அதே வேளையில், கோவிலையும் அதன் சுற்றாடலையும் முகாமை செய்தல், கிராமத்தில் நில, நீர்ப்பாசன உரிமைகளை ஒழுங்குசெய்தல், தல விவகாரங்களைப் பாலனஞ் செய்தல் முதலிய பொது வேலைகளில் எல்லாரும் ஒன்று சேர்ந்துஒத்துழைத்ததற்கும் இதுவே காரணமாக விருந்தது. தனி ஒருவனது அல்லது ஒரு கூட்டத்தினரது உரிமைகளிலும் பார்க்க, ஒருவன் எந்த நிலையில் (சாதியில்) இருக்கின்றானோ அதற்குரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அழுத்திக் கூறப்பட்டது. சமூக ஒற்றுமையும், அப்போதிருந்த சமூக ஒழுங்கில் திருப்தியும் நிறைந்த சூழ்நிலையே பொதுவாக நிலவியது. வேறுபாடுகளும் சண்டைகளும் இருந்தன என்பது உண்மைதான் - இவையின்றி எந்த ஒரு சமூகமும் இருக்கவில்லை - ஆனால், அவை ஒருபோதும், கடுமையானவையாக இருக்கவில்லை. ‘வலப்பக்கச் சாதி, இடப்பக்கச் சாதி’ என்ற வேறுபாடு பழைய காலத்திலேயே இருந்தது. இது எவ்வாறு தொடங்கியதென்பது மர்மமாகவே இருக்கிறது; இந்த இரு சாதியினருக்குமிடையே ஏற்பட்ட சண்டைகள்கூட, இதற்குப் பிற்பட்ட காலங்களிற் காணப்பட்ட பலாத்காரத்தையும் முரட்டுத்தனத்தையும், அப்போது அடையவில்லை. பட்டணங்களிலும் கிராமங்களிலும் பல்வேறு சாதி மக்களும் தத்தமது சாதிக்குச் சொந்தமான தனித்தனிப் பகுதிகளில் வாழ்ந்து, தத்தம் சாதியினரின் பிரத்தியேக பழக்க வழக்கங்களை மேற்கொண்டொழுகினர். சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள், கிராமத்திலிருந்து சற்றுத் தூரத்திலுள்ள குக்கிராமங்களில் வாழ்ந்தனர்; (அடிமைத் தனத்திலிருந்து அதிக வேறுபாடற்ற நிலையிலிருந்த) அவர்கள் நிலத்தைக் கொத்தியும் வேறு இழிந்த வேலைகளைச் செய்துகொண்டுமிருந்தார்கள்.(தென்னிந்திய வரலாறு, பக்.365, 366)ஆனால் சாஸ்திரியாரே தன்னுடைய ‘சோழர்கள்’ என்ற நூலில், ஒரு புராண நூலின்படி கரிகாலன் காலத்தில் இரு தரப்பினரிடையே சண்டை மூண்டு வழக்கு அரசரின் தீர்ப்புக்கு விடப்பட்டபோது ஒரு தரப்பினர் அரசனின் வலப்புறமும் மற்றொரு தரப்பினர் அரசனின் இடப்புறமும் நின்றதாகச் செவிவழிச் செய்தி உண்டு என்றும், முதலாம் குலோத்துங்கன் இரண்டாம் ஆட்சியாண்டில் பாபநாசம் வட்டம் (தஞ்சை மாவட்டம்) இராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலத்தில் வலங்கை, இடங்கைச் சண்டை பெரிய அளவில் நடந்து, அச்சண்டையில் அவ்வூர்க் கோவில் சொத்துகள் கொள்ளையிடப்பட்டு, கோவிலும் இடித்துச் சேதப்படுத்தப்பட்டது என்றும், பிராமண, வேளாளச் சாதிகளைச் சேர்ந்த நிலக்கிழார்களும் அரசாங்க அதிகாரிகளும் வன்னியர் சாதிகளைச் சேர்ந்தவர்களை இணைத்துக்கொண்டு இடங்கை வகுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிடுகிறார். (சோழர்கள், பக்.724, 725)‘கல்வெட்டில் வாழ்வியல்’ என்ற நூலில் அ. கிருட்டிணன், விஜயநகர காலத்து வலங்கை இடங்கை பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கூறுமிடத்தில்,“அந்நாட்டில் பிறந்த அந்தணரும், வேளாளரும் வார வரி வசூலிப்பதினின்றும் நிறுத்திக் கொள்ள வேண்டும். பொய்க் கணக்கு எழுதியும், தரவுக்கள ஊழியர்களின் பயனைப் பெற்றும், அரசினர் மற்றும் சீவிதக்காரர்களின் பயனைப் பெற்றும், அரசு அலுவலர்க்கு அச்சமுதாயத் தினரைப் பற்றிப் பொல்லாங்கு கூறி எவரும் நாட்டுக்குத் தீங்கு செய்யக் கூடாதென முடிவெடுக்கப்பெற்றது.தன் வகுப்பைச் சேராதவர்களின் கொடைகள் மற்றும் வாழ்வியல் அடிப்படை உரிமை நலங்களை எவரேனும் விலைக்கு விற்றாலோ, விலைக்குப் பெற்றாலோ அரசு வரியான இராசகரம் என்னும் வரியைத் தவிர பிற வரிகளை மக்களிடையே வசூலிப்போர் நாட்டுத் துரோகிகளாகக் கருதப்பெற்றனர். (பக்.162, 163)என்கிறார்.‘தமிழ்நாட்டு வரலாறு- சோழப் பெருவேந்தர் காலம்’ என்ற நூலில், "வடநாட்டிலிருந்து கொண்டுவந்து புகுத்தப்பெற்ற நால்வருண சமுதாய அமைப்புக்கு எதிராக ஏற்படுத் தப்பட்ட ஓர் அமைப்பே இவ்விடங்கை - வலங்கைச் சாதிப் பாகுபாடு என்று ஒருசில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். வருணாசிரம அமைப்பில் பிராமணர் கள் பெற்ற தனி உரிமைகளைக் கண்டு மனம் புழுங்கிய பிராமணரல்லாதார் ஒன்றுகூடித் தாங்களும் அரசனிட மிருந்து பல்வேறு உரிமைகளைப் பெறுவான் வேண்டி இவ்வித அமைப்பைத் தோற்றுவித்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. எனினும் இந்தச் சமுதாயப் பிரிவுகள் எங்ஙனம் தோன்றின என்பது இன்னும் ஒரு புதிராகவே இருந்து வருகிறது."வலங்கை, இடங்கைச் சாதி வரலாறு” எனும் தலைப்பிட்ட கையெழுத்துச் சுவடி ஒன்று சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தின் பழஞ்சுவடிகள் பிரிவில் (Old Manuscript Library) காணப்படுகிறது. இச்சுவடியானது இடங்கை-வலங்கைப் பிரிவினைச் சேர்ந்த 98 சாதிகள் கரிகாற்சோழன் காலத்தில் ஏற்பட்டன என்றும், வெள்ளாளரும் அவர்களது ஆதரவாளர்களும் இடங்கைச்சாதியினர் என்று கருதப்பட்டார்கள் என்றும் கூறுகிறது. நிலையாக ஓரிடத்தில் வாழ்ந்து வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளாளர், பறையர் ஆகியோர் வலங்கைச் சாதிகளிலும், இடம் விட்டு இடம் பெயர்ந்து கைவினைத் தொழில்கள் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த கம்மாளர்கள், சக்கிலிகள், கோமுட்டிகள் முதலியோர் இடங்கைச் சாதிகளிலும் இச்சுவடியில் தொகுக்கப்பட்டுள்ளனர். இதற்கேற்பப் பிரெஞ்சுக்காரர் ஆண்ட காலத்தில் புதுச்சேரியில் நீதிபதி ஒருவர் ஒரு வழக்கை விசாரித்த போது வேளாளர், பறையர் போன்ற வலங்கைச் சாதியார் நீதிபதியின் வலப்பக்கத்திலும், கம்மாளர், சக்கிலியர், கோமுட்டிகள் முதலிய இடங்கைச் சாதியார் அவருடைய இடது பக்கத்திலும் நிற்பது வழக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது”(தமிழ்நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் - பக். 59, 60)மேலே காட்டப்பட்ட கருத்துகள் அனைத்தும் இடங்கை வலங்கைப் பிரச்சினை என்பது தமிழ்நாட்டு வரலாற்றில் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு சாதியப் பிரச்சினை என்பது போலத்தான் குறிப்பிடுகின்றன. உண்மையில் இந்தக் கருத்து நியாயமானதுதானா?இதனை சாதியம் சார்ந்த பிரச்சினையாக இவர்கள் அனைவரும் எண்ணிக்கொண்டதனால்தான் இந்தக் குழப்பம் நேர்ந்துள்ளது. இடங்கை வலங்கைப் பிரச்சினை என்பது அரசியல் நிர்வாகம் சார்ந்த ஒன்று. அதிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் அரசியலும் நிர்வாகமும் என்பது உலக அரசியல் வரலாற்றிலிருந்தும் இந்திய அரசியல் வரலாற்றிலிருந்தும் பெரிதும் வேறுபட்ட தன்மையுடையது. இதற்கான அடிப்படையான காரணம் தமிழ்நாட்டுச் சைவ வைணவக் கோயில்கள். தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர் காலத்திலிருந்து ஆங்கிலேயர்களின் ஆட்சி வரையிலான காலத்தில் தமிழ்நாட்டு வளமான நிலங்களின் பெரும்பகுதி இந்தக் கோவில்களின் உடைமையாக இருந்ததுவும் உள்ளூர் நிர்வாகம் என்பது இந்தக் கோவில் சார்ந்த நிர்வாகக் குழுக்களிடம் இருந்ததுவும்தான். (இது பற்றிய விரிவான ஆய்வுகள் கோவில்-நிலம்-சாதி என்ற என்னுடைய கட்டுரைகளில் காணலாம்).இடங்கை வலங்கைப் பிரச்சினைகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளிலும் கல்வெட்டுச் செய்திகளிலும் சொல்லப் பட்ட சில செய்திகள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.1. இந்தச் செய்திகளில் பெரும்பாலானவை ஏதாவதொரு கோவிலை மையமாகக் கொண்டே குறிப்பிடப் பட்டிருக்கும்.2. அரசனுடைய அதிகாரிகள், படைவீரர்கள் பற்றிய குறிப்புகளாக இருக்கும்.3. பெரும்பாலும் இடங்கைப் பிரிவினர் பாதிக்கப்பட்ட தாகச் செய்திகள் இருக்கும்.4. இவர்களைத் துன்புறுத்துபவர்களாகப் பார்ப்பனர், வெள்ளாளர் போன்றவர்களைப் பற்றி மிகுதியாகவும் மற்ற உயர்சாதி நிலவுடைமையாளர்களைப் பற்றி ஓரளவும் குறிப்புகள் கிடைக்கின்றன.5. சில கல்வெட்டுகளில் இடங்கை வலங்கை ஆகிய இரு பிரிவினரும் இணைந்து பார்ப்பன, வெள்ளாள நிலவு டைமையாளர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் எதிர்த்ததாக இருக்கும்.6. பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலக் கல்வெட்டுகளில் செருப்புப் போடுதல், குடை பிடித்தல், மாடி வீடு கட்டிக்கொள்ளுதல், கல்யாண ஊர்வலங்கள் இன்னின்ன பகுதிகளில் செல்லலாம் என அனுமதி கூறுதல் போன்ற சமூக மதிப்புகளைக் கோருவதாக இருக்கும்.இத்தகைய செய்திகளினூடே வலங்கைப் பிரிவில் பறையர் சாதியார் இடம்பெற்றிருப்பதும் இடங்கைப் பிரிவில் கைவினைத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், பள்ளர் சாதியார் இடம்பெற்றிருப்பதும் ஆய்வாளர்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களாகிய பறையர் சாதியார் ஆளுகின்ற சாதிகளுடன் எவ்வாறு இணைந்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் தவித்தனர்.கோவில்-நிலம்-சாதி கட்டுரைத் தொடரை நான் எழுதிவரும்போது கோவில் நிர்வாக ஆளும் குழுக்களில் கடைநிலை ஊழியர்களாகப் பறையர் சாதியார் குறிக்கப் படுவதைக் கண்டேன். உள்ளூர் நிர்வாக அமைப்பில் தலையாரி போன்ற கடைநிலை அரசு ஊழியர்கள் பெரும் பாலும் பறையர் சாதியினரே. கோவில் நிர்வாகத்திலிருந்து ஊதியம் பெறுபவர்கள் இவர்கள். ஆனால் பள்ளர் சாதியார் உட்பட இடங்கைச் சாதிகளைச் சார்ந்தஅனைவரும் கோவிலுக்கு மகன்மை, வரி போன்றவற்றைச் செலுத்துபவர் கள்தான். சுருக்கமாகக் கூறினால் "வலங்கை” என்பது கோவில் சார்ந்த நிலவுடைமை "ஆளும் சாதிகள்”. "இடங்கைஃ என்பது அந்தக் கோவிலின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்கள். அதாவது ஆளப்படும் சாதிகள். வலது என்பது அதிகாரம் சார்ந்தது. இந்த முடிவுக்கு நான் வந்தபோது இதனை உறுதிசெய்வதற்கு வேறு சான்றுகள் கிடைக்குமாவென தேடிக்கொண் டிருந்தேன். அயோத்திதாசர் எழுத்துகளைப் படிக்கும்போது வலங்கை இடங்கை பற்றிய செய்திகளை அவர் எழுதி யிருப்பது கண்டு ஆச்சரியத்துடன், ஆனால் கவனமாக வாசித்தேன். முதல் தொகுதியில் 11 இடங்களிலும் இரண்டாம் தொகுதியில் ஒரு இடத்திலும் இதனைப் பற்றி அவர் பேசுகிறார்.""1814-வது வருடத்தில் விஸ்வபிரம வம்மிஷத்தாரெனும் கம்மாளருக்கும், பிராமணரென வழங்கும் விப்பிராளுக் கும் விவாக சம்மந்த விஷயமாய் வியாஜியங்கள் நேரிட்டு மாஜிஸ்டிரேட்டு கோர்ட்டிலும், சித்தூர் ஜில்லா அதவுலத் கோர்ட்டிலும், கம்மாளர்களே ஜெயமடைந்து விட்டபடியால் விப்பிராளென்னும் பிராமணர்களென் னப் பட்டவர்கள் சகல சாதியோரையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டதுபோக கம்மாளர்களுடன் சண்டை சச்சரவு செய்து தங்களைக் காப்பதற்கு தங்களால் பறையரென்று தாழ்த்தி வந்த சாதியோரை சினேகப்படுத்திக்கொண்டு அவர்களைக் கிஞ்சித்து உயர்த்தி வைத்தார்கள்.அதாவது நாற்பது வருடங்களுக்கு முன்பு பஞ்சாயத்துக் கூடுவோர் தேசாயச்செட்டி பஞ்சாயத்தென்று வகுத்து வைத்திருந்தவற்றுள், சுங்கச்சாவடியண்டையிலிருந்து சுங்கம் அல்லது ஆயம் வாங்குவோர்களுக்கு தேய ஆயச் செட்டியென்று கூறப்படும் அவர்களிடம் பஞ்சாயத்து செய்யப்போகிறர்வகள் மீனாட்சியம்மன் முத்திரை யையும், மணியையும் மத்தியில் வைத்து அதன் வலங்கைபுறமாக பிராமணர்கள், வேளாளர்கள், பறையர்கள் வீற்றிருக்கலாமென்றும், அதன் இடங்கை புரமாக கோமுட்டிகள், சக்கிலியர், கம்மாளர்கள் வீற்றிருக்கலாம் என்றும் ஓர் நூதன ஏற்பாட்டைச் செய்து காரைக்கால், புதுச்சேரி முதலிய தேசங்களிலுள்ள பௌத்தக் குடிகளை கம்மாளர் அடிதடிக்கு பயந்து வலங்கைசாதியார் வலங்கைசாதியாரென சிறப்பில் வைத்திருந்தார்கள்.என்ன உயர்த்தி வைத்திருந்தபோதிலும் அவர்களுக்கு கம்மாளர்களால் ஆபத்து நேரிடுங் காலத்தில் வலங்கையர்களும்,வலங்கை சாதியென்போர் முன்னுக்கு வர ஏற்படுங்கால் பழயப் பறையர்கள் என்றே தாழ்த்தப்படுவார்கள். இ*து நாளதுவரையில் நிறைவேறிவரும் அநுபவங்களாகும்.இன்னும் இக்குலத்தோருக்கு உற்சாகம் உண்டாக்கித் தாங்கள் கோவில்களுக்கு வலு தேடிக்கொள்ளுவதற்கும், கம்மாளர்களைத் தாழ்த்தி வைப்பதற்கும், சிவன் கோவிலில் பறையனென்னும் ஓர் அடியான் இருக்கின் றான் என்றும், விஷ்ணு கோவிலில் பறையனென்னும் ஓர் அடியானிருக்கின்றான் என்றும் பொய்க்கதைகளால் இவர்களை உற்சாகப் படுத்தி வைத்துக்கொண்டு தற்காலந் தங்களுக்கு எதிரிகளாகத் தோன்றிய கம்மாளர்களுக்குள் ஓரடியாரையுஞ் சேர்க்காமல் தொழுது வருகிறார்கள்.திராவிட பௌத்தர்களுக்கு வலங்கையரென்னும் பெயர் விப்பிராளென்னும் பிராமணர்கள் கம்மாளர்கள் அடிதடிக்கு பயந்து மீனாட்சி முத்திரையின் வலபுரம் நிறுத்தி பறையனென்னும் பெயரை தாட்சண்ணியத் தினால் அகற்றி, முத்திரைக்கு வலங்கையிலிருந்த படியால் வலங்கை சாதியோர்கள் என வகுத்து நாளதுவரையில் புதுச்சேரி, காரைக்கால் முதலிய இடங்களில் வழங்கி வருகின்றார்கள்.ஃஃ(அயோத்திதாசர் சிந்தனைகள் ஐ பக்.137)அயோத்திதாசர் இடங்கை வலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி (1909) எழுதும் காலத்தில் தமிழக வரலாறு பற்றிய நூல்கûள் பெரும்பாலும் வெளிவரவில்லை எனலாம். இருந்தாலும் தன் காலத்தில் வெளியிடப்பட்ட பல புதிய செய்திகளை அவர் தன் எழுத்துகளில் பயன்படுத்துகின்றார். தமிழ்நாட்டில் நிலவிய நிலவுடைமை முறை பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் அன்றைய காலத்தில் தொகுக்கப்பட வில்லை. ஆயினும் பார்ப்பனர்களுடனும் உயர்சாதிச் சூத்திர நிலவுடைமையாளர்களுடனும் இணைந்து நின்று பறையர் சாதியினர் பிற சாதியினரைத் துன்புறுத்தி வந்தனர் என்பதையும் உயர்சாதிக்காரர்களுக்கு அடியாள்கள் போலச் செயல்பட்டார்கள் என்பதையும் தன்னுடைய எழுத்துகளில் அயோத்திதாசர் குறிப்பிட்டாலும், பறையர் சாதியினர் மட்டும் ஏன் அவர்களுடன் சேர்ந்தார்கள்? என்பதும் மற்ற ஒடுக்கப்பட்ட சாதியினர் உயர்சாதி யினருடன் ஏன் இணையவில்லை என்பதை அவரால் விளக்க முடியவில்லை. ஆனால் வலங்கை இடங்கைப் போராட்டங்கள் பற்றி செய்திகளில் காணப்படும் பார்ப்பன, உயர்சாதிச் சூத்திர வலங்கை ஆளும் குழுக்களுடன் பறையர் சாதியினர் இணைந்திருந் தனர் என்பதை அயோத்திதாசர் வழியாக நாம் உறுதிபடுத்திக் கொள்ள முடிகின்றது.தமிழக வரலாற்றில் நிகழ்ந்த இடங்கை - வலங்கைப் போராட்டங்கள் ஒரே மாதிரியாக இல்லை. சோழர், பாண்டியர் காலத்தில் அதாவது கிட்டத்தட்ட பதினைந் தாம் நூற்றாண்டு வரை இடங்கைக் குழுவிலுள்ள சாதிகள் பார்ப்பனர், சூத்திர உயர்சாதி, பறையர் சாதி என்ற கோவில் வழி ஆளுகை செலுத்தும் வலங்கைப் பிரிவினரை எதிர்த்தும், சில காலங்களில் உயர்சாதி வலங்கைப் பிரிவினருடன் இணைந்திருந்த அரசு அதிகாரிகளை எதிர்த்தும் நிகழ்ந்துள்ளன. இஸ்லாமியர்களைத் தமிழ்நாட்டிற்குள் பாண்டியர்கள் அழைத்து வந்ததனால் அடுத்துவந்த காலங்களில் தமிழ்மக்கள் மீதான தங்கள் ஆதிக்கத்தையும் சாதிய மேன்மையையும் இழக்கும் தருவாயில் இருந்த இவர்கள், விஜயநகர இந்து சாம்ராஜ்ய அரசர்களுடன் இணைந்து அதனைமீட்டெடுத்தனர். இதனால் பின்வந்த காலங்களில் தமிழ்நாட்டு வலங்கை உயர்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை, நிலவுடைமையை விஜயநகர இந்து-தெலுங்கு ஆதிக்க சக்திகளுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த வரலாற்று நிகழ்வுக்குப் பிறகான வலங்கை இடங்கைப் போராட்டங்களில் தெலுங்க பேசும் கைவினைச் சாதியினர் தமிழ்நாட்டு இடங்கைப் பிரிவின ருடன் இணைந்து கொண்டது கவனிக்கத் தக்கது. சுருக்கமாகச் சொன்னால் தெலுங்கு பேசும் ஆதிக்க சாதிகள் தமிழ்நாட்டு வலங்கைப் பிரிவினருடனும் தெலுங்கு பேசுகின்ற ஆளப்படும் சாதிகள் தமிழ்நாட்டு இடங்கைச் சாதியினருடனும் தங்களை இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கால கட்டங்களில் தமிழ்நாட்டு நிலவுடைமையில் சிறிது மாற்றம் ஏற்படுகிறது. தமிழ், தெலுங்கு உயர்சாதியினரிடையே தனியார் நிலவுடைமையாளர்களும் உருவாகின்றனர். இத்தகையவர்களுடைய கொடுமைகளை எதிர்த்து இடங்கைப் பகுதியினர் போராடுவதும் விஜய நகர நாயக்கர் மன்னர்கள் அதனைத் தீர்த்து வைப்பதையும் கல்வெட்டுகளும் பட்டயங்களும் குறிப்பிடுகின்றன.ஆங்கிலேயர்கள் காலத்தில் வலங்கைச் சாதியினர் அனுப விக்கும் பல்வேறு உரிமைகள் தங்களுக்கும் வேண்டுமென்று இடங்கைச் சாதியினர் ஆங்கில ஆட்சியாளரிடமும் பிரெஞ்சு ஆட்சியாளரிடமும் வேண்டுகோள் விடுப்பதும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் உருவாகி விட்ட நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதும் என்று மூன்று வகையான இடங்கை- விலங்கைப் போராட்டப் பிரச்சனைகளை வரலாற்றில் நாம் சந்திக்கிறோம்.பயன்பட்ட நூல்கள்:1. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி; தென்னிந்திய வரலாறு, இலங்கை அரசாங்க வெளியீடு, முதற்பதிப்பு 1966, பக்.365, 366.2. அ. கிருட்டிணன்; கல்வெட்டில் வாழ்வியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற் பதிப்பு 1991, பக்.162, 163.3. தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு; தமிழ்நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம், தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை, முதற்பதிப்பு 2000, பக்.59, 60.4. ஞான அலாய்சியஸ் (தொகுப் பாசிரியர்); அயோத்திதாசர் சிந்தனைகள் 1, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை. பக்.137, முதற்பதிப்பு 1999.