Monday, December 1, 2008

தனி இடஒதுக்கீடு: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம்-2

தனி இடஒதுக்கீடு: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம் திங்கள், 1 டிசம்பர் 2008( 13:00 IST ) நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அரசியல் சட்டத்தின்படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் எவ்வித மாற்றத்தையும் செய்திடவில்லை. எந்த சாதியையும் அப்பட்டியலில் சேர்த்திடவோ, அல்லது நீக்கிடவோ முயற்சி செய்திடவில்லை. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அருந்ததியர் என்கின்ற சமுதாயத் தொகுப்பின் கீழ் அதே பட்டியலில் இடம் பெற்றுள்ள அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மடிகா மற்றும் தோட்டி ஆகிய ஏழு ‌பிரிவினரை உள்ளடக்கி, தாழ்த்தப்பட்டோர் அனைவருக்கும் தற்போது மொத்தமாக வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இந்த ஏழு பிரிவினரின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமான விகிதப்படி 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார். அந்தப் பரிந்துரை தமிழக அமைச்சரவையால் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயலா? அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப்புறம்பானதா? அரசியல் சட்ட மாமேதை (ப) ஜெயலலிதா தான் அவனிக்கு விளக்கிட வேண்டும்..தாழ்த்தப்பட்டோருள் அருந்ததிய சமுதாயத்தினருக்கு முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கிட முடிவெடுத்ததற்கு ஏற்கனவே முன் மாதிரி இருப்பதை ஜெயலலிதாவுக்கு யாரும் எடுத்துரைக்கவில்லை போலும்.பஞ்சாப் மாநிலத்திற்கான தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் 39 சாதியினரை உள்ளடக்கி இந்திய அரசியல் சட்டத்தின்படி, அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எற்கனவே இருந்து வந்த மொத்த ஒதுக்கீடான 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் பால்மீக்கிகள், மஷாபி சீக்கியர்கள் என்ற இரண்டு பிரிவினருக்கு மட்டும் 12.50 சதவிகித உள் ஒதுக்கீடு 5.5.1975 முதல் ஓர் அரசு அறிவிக்கையின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றம், பஞ்சாப் அரசு சட்டமாக இதனை நிறைவேற்றாமல், வெறும் ஆணையாக மட்டுமே அமல்படுத்தி வந்ததை 25.7.2006 அன்று ரத்து செய்தது. எனினும் பஞ்சாப் மாநில அரசு அந்த இரு பிரி‌வினருக்குமான உள் இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து நடைமுறைப்படுத்திடும் வகையில் 5.10.2006 அன்று சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அது இன்றளவும் செயல் முறையில் தொடர்ந்து இருந்து வருகின்றது.அதனால் தான் நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் தமது அறிக்கையிலே இம்மாதிரியான சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு, பஞ்சாப் மாநிலத்தில் 2006-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் எண். 22-ன் படி 4-வது பிரிவில் 5-வது கிளைப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளதைப் போன்று- அருந்ததியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட எவ்விதத் தயக்கமுமின்றிச் சட்டம் இயற்றலாம். அப்படி சட்டம் இயற்றுவதற்கு முன்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338 (9) வது பிரிவின்படி தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்துடன் கலந்தாலோசனை செய்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.அவர் குறிப்பிட்டுள்ளபடி தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் பூட்டாசிங்க்கு அருந்ததியினருக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கருத்துருவினைப்பற்றிய அறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

No comments: