நவ.27ல் அருந்ததியர் ஒதுக்கீடு குறித்து முடிவு: முதல்வர் சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2008 ( 13:23 IST ) ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுப்பதற்காக வரும் 27ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:அருந்ததியர் வகுப்பினர் முன்னேற்றத்துக்காக, ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க அரசு கருதியிருப்பதாக சட்டசபையில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.இதுதொடர்பாக, நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்ட ஒரு நபர் குழு அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த நீதிபதி ஜனார்த்தனம், ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்தார்.இந்த பரிந்துரை அறிக்கையை பரிசீலனை செய்து முடிவெடுப்பதற்காக வரும் 27ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவின் அடிப்படையில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. (மூலம் - வெப்துனியா)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment