Monday, July 22, 2013

தருமபுரி சாதி வெறியாட்டம் - சமத்துவத்திற்கு விடப்பட்ட சவால்! அரங்க.குணசேகரன்

தருமபுரி சாதி வெறியாட்டம் - சமத்துவத்திற்கு விடப்பட்ட சவால்!

               

 தலித் அல்லாதோர் பேரவை' 1999 ஆம் ஆண்டு கோவை செழியனால் உருவாக்கப்பட்டது; இதை மீண்டும் அவரது நினைவு நாளான மார்ச் 14 இல் கொங்கு வேளாள கவுண்டர் பேரவையின் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தொடங்கப் போகிறாராம்! அதற்குக் காரணமாக அவர் அளிக்கும் விளக்கம்தான் விசித்திரமும், வேடிக்கையும் நிறைந்து நகைப்புக்கு உரியதாகவும் இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவான தமிழகத்தில் தலித் அல்லாதோர் பேரவையாம்! ஈழத்து ஆறுமுகனாரும், தமிழகத்து வையாபுரிப் பிள்ளைகளும் நிரந்தரமாகச் சாகவில்லை; தமது சமூக சிந்தனையின் வாரிசுகளை விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை ராமதாசு, மணிகண்டன் போன்றவர்களின் செயல்பாடுகள் நினைவூட்டுகின்றன. இச்சாதி ஆதிக்கவாதிகள், “கலப்புத் திருமணங்கள் அல்லது சாதி மறுப்புத் திருமணங்களால் தங்கள் சாதியின் பாரம்பரியப் பெருமைகளும், தனித்தன்மைகளும் சீரழிந்து போய்விடுகின்றன” என்று கூக்குரலிடுகின்றனர்.
காதல் என்பது வயது, பருவம், பணியிடம், கல்வி கற்கும் சூழல்கள், பழகுவதில் ஏற்படும் நெருக்கம், அன்பு, இரக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இருபால் இளைஞர், இளம்பெண்களிடம் கருக்கொண்டு உருவாகிறது. இதை ஏதோ தலித்துகளின் திட்டமிட்ட சதியாக மணிகண்டனும், மருத்துவர் ராமதாசும் புரிந்து கொண்டிருப்பது அபத்தமாகும். காதல் திருமணங்களை / சாதி மறுப்புத் திருமணங்களை சமுதாய வரலாற்று வளர்ச்சியின் விரும்பத்தக்க அம்சமாக பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் சாதி ஒழிப்புக் கருத்தின் வெற்றியாக, மார்க்சிய, தமிழ்த்தேசிய அரசியலுக்கு உந்து சக்தியாகப் பார்க்க மறுத்து, ஏதோ தங்கள் சாதியின் பாரம்பரியம், பெருமை போன்றவற்றுக்கே கேடு நேர்ந்துவிட்டதாகப் புலம்புகிறார்கள். கொங்கு வேளாளர் பெண்களைத் திருமணம் செய்யும் தலித்துகள் அவர்களது சொத்தில் பங்கு கேட்பதாக வேறு பிதற்றுகிறார்கள்.
கொங்கு வேளாளர், வன்னியர், தேவர் உள்ளிட்ட சாதிகளின் பாரம்பரியப் பெருமைகள் என்று இன்று எதனையும் குறிப்பிட்டுக் கூற இயலாது. கொங்கு மண்டலம் பழைய காலத்தில் வானம் பார்த்த புஞ்சை; நவதானிய பூமி. மரக்கலப்பைகளால் மாட்டைக் கொண்டு ஏர்பூட்டி, நாள் முழுவதும் உழுது விதைத்துவிட்டு, மறு மழை வரும் வரை விதை முளைக்குமா, பயிர் பிழைக்குமா என்றிருந்த நிலைதான் இவர்களது வேளாண்மைப் பாரம்பரியம். ஆனால் இன்றும் அந்த நிலையா நீடிக்கிறது?
 வெள்ளைச்சேலை உடுத்தி விதவைகளை வீட்டுக்குள் அடைத்து வைத்த இவர்கள், இன்று அதே சமுதாய விதவைப் பெண்கள் பல வண்ண ஆடை உடுத்துவதும், மறுமணம் செய்து கொள்வதும் வீட்டுக்கு வெளியே தொழில், வணிக, கல்வி நிறுவனங்களில் வேலைக்குச் செல்வதும் நடக்கிறதா இல்லையா? இதையெல்லாம் கூடாது என்ற பொருளில் நாங்கள் இங்கே வாதிடவில்லை. இப்படிப்பட்ட கண்மூடித்தனமான பழக்கவழக்கங்கள் எல்லாம் மண்மூடிப் போக வேண்டும் என்று தான் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும், மேதை அம்பேத்கரும் இன்னபிற வணக்கத்துக்குரிய சமூக முன்னோடிகளும் பாடுபட்டார்கள். ஆனால் அவர்கள் சொன்னபடியும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் காலமாறுதலில் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட இந்தப் பாரம்பரிய சிசுக்கள், சாதி மறுப்புத் திருமணத்தில் மட்டும் தங்கள் பாரம்பரியம் அழிந்து விடுவதாக உளறுவதுதான் நகைச்சுவையாக இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவன் குதிரை ஏறிச் சென்று திருமணம் செய்யவும், கட்டை வண்டியின் இருப்பிடத்தில் உட்கார்ந்து வண்டி ஓட்டவும் இருந்த தடைகளைத் தகர்த்து தொழில்நுட்பமும், அறிவியலும் தாழ்த்தப்பட்டவர்களை விமானிகளாகவும், பேருந்து ஓட்டுநர்களாகவும் மாற்றிவிட்ட பிறகு, தலித்துகள் ஓட்டுநர்களாக இருக்கும் வாகனங்களில் பயணம் செய்ய மறுத்து, கொங்குவேளாளர்களும், வன்னியர்களும் கால்நடையாக நடந்தேதான் வெளியூர்களுக்கு செல்கிறீர்களா?
பறையரும், பள்ளரும், சக்கிலியரும் சு கொங்குவேளாளர், வன்னியர், கள்ளர் சாதி உள்ளிட்ட இதரசாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதால் மட்டும் தான் உங்கள் பாரம்பரியம் கெட்டுவிடுமோ? தலித்துகள் கல்வி கற்பதும், அரசு தனியார் துறைகளில், வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் பணிக்குச் செல்வதும், புதிய உடைமை வர்க்கங்களாக வளருவதும், அதன் பயனாக சமூக வளர்ச்சியின் வெளிப்பாட்டில் எங்கோ சிலர் சாதி மறுத்து காதலித்து திருமணம் செய்து கொள்வது மட்டும் எப்படிப் பாரம்பரிய மீறலாகும்?
எல்லாவற்றிலும் தங்கள் பாரம்பரியத்தை மீறிய கொங்குவேளாளர்கள் உள்ளிட்ட தலித் அல்லாத சாதிகள், தலித்துகளோடு திருமணம் செய்து கொள்வதை மட்டும் பாரம்பரியத்துக்கு எதிரானது என்று கூக்குரலிடுவது ஏன்? நம்முடைய வட்டாரக் குலதெய்வங்கள் பலவற்றின் வரலாற்றைத் தோண்டித் துருவினால் அத்தனையும் சாதி மீறிக் காதலித்து திருமணம் செய்து கொண்ட வரலாறுகள் தான். காத்தவராயன் கதை, முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை, வெள்ளையம்மாள் வெள்ளச்சிகதை, வேம்பையன், தங்கயம்மாள் கதை, இப்படிப் பல கதைகளும் வரலாறுகளும் சாதி மீறியும், மாறியும் காதலித்த கதைகள் தான்.
சாதிவெறியைத் தூண்டி தன் சாதி மக்களைத் திரட்டி, தலித்துகளின் மீது தாக்குதல் தொடுத்து அதில் தலைவனாகி, தன் சாதி ஓட்டுகளைப் பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக உயர்ந்து, உயரத்துக்கேற்ப கொள்ளையடித்துப் பணம், சொத்து சேர்க்க இந்தச் சாதிவெறி மூலதனமாகுமேயல்லாமல், தன் சொந்த சாதி ஏழைக்கு, தொழிலாளிக்கு, கடனில் மூழ்கித் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிக்கு மயிரளவும் உதவிட துணை செய்யாது.
பறையர், பள்ளர், அருந்ததியர், வண்ணார், நாவிதர் போன்ற சாதியினர் உங்கள் பார்வையில் என்றென்றும் அடிமைச் சாதிகள், சேவைச் சாதிகள். இவர்கள் இப்படி அடிமைத் தொழிலாளியாக, கூலித் தொழிலாளியாக, சேவைத் தொழிலாளியாக சில நூறாண்டுகாலமாக ஊதியமின்றியும், குறைந்த ஊதியத்திற்கும்; ஏன்? எதற்கு என்று கேட்காமல் நீங்கள் காலால் இட்ட வேலையை தலையால் செய்து தாங்கியதால் தான் உங்களின் "உயர் சாதி'ப் பெருமையும், பாரம்பரியமும் நீடித்து வந்தது, வருகிறது! இது உடைந்து நொறுங்குகிறபோது பாரம்பரிய சாதிப் பெருமைபேசி வானத்துக்கும் பூமிக்குமாய் எகிறிக் குதிக்கிறீர்கள்!
தீண்டாமை, கீழ்ச்சாதி, பிறவி ஏற்றத்தாழ்வு + சாதிப் பெருமை பேசும் மணிகண்டன் உள்ளிட்ட சாதி இந்துக்களே! சாதித் தமிழர்களே! தலித் பெண்கள் வயலில் நடவு செய்யும் போதும் களைபறிக்கும்போதும், அடர்ந்த கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டும் போதும், கால்வழியே தான் சிறுநீர் கழிக்கிறார்கள். நீங்கள் பயிருக்குப் போடும் யூரியாவோடு எங்கள் தலித் பெண்கள் விட்ட சிறுநீரில் உள்ள உப்பும் (யூரியா) சேர்ந்து தான் நெல்லும், கரும்பும், வாழையும், மஞ்சளும், பருத்தியும் விளைகிறது என்பதை உங்கள் அடிமை மூளைகளுக்கு அறியச் சொல்கிறோம்! தலித் பெண்ணின் சிறுநீரில் விளைந்த அரிசியும், கரும்பும் வாழையும் இனிக்கிறபோது, தலித் பெண்ணும் உங்கள் சாதி ஆணும், தலித் ஆணும் உங்கள் சாதிப் பெண்ணும் கலந்து இணைந்து வாழுகிற வாழ்க்கை மட்டும் எப்படிக் கசக்கும்? பெரியார் மொழியில் சொன்னால் பாரம்பரியமாவது வெங்காயமாவது! உடைபடட்டும் உங்கள் பாரம்பரியம்! ஒழியட்டும் சாதியம்; தழைக்கட்டும் சாதி மறுப்புத் திருமணங்கள்! மலரட்டும் தமிழ்த்தேசம்! மிளிரட்டும் மானுடம்!
II
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று செயல்திட்டம் தீட்டி போராட்டம் நடத்துகிறார்கள் இச்சாதிவெறியர்கள். தீண்டாமைக் கொடுமையே செய்யாத நிலையில் பிறசாதியினர் மீது பொய்யாகப் புகார் கொடுக்கிறார்கள். இச்சட்டத்தால் தலித் அல்லாத பிறசாதியினர், அதாவது பெரும்பான்மைத் தமிழ்ச் சாதியினர் அச்சுறுத்தப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம்; எனவே இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கதறுகிறார்கள்.
இதன் பொருள் நாங்கள் எத்துணை மேலவளவுகளையும், திண்ணியங்களையும், தருமபுரிகளையும் நிகழ்த்தினாலும் எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது, ஏனெனில் நாங்கள் ஆளப்பிறந்தவர்கள். எங்களின் ஆளுகைக்கு கட்டுப்பட மறுக்கிறபோது, எங்களின் அடக்கு முறைக்கு நீங்கள் உட்பட்டு, கட்டுப்பட வேண்டுமே தவிர, சட்டத்தின் துணை கொண்டு நீங்கள் தப்பிப்பதையோ, பாதுகாப்புத் தேடிக் கொள்வதையோ, சட்டத்தின் வழியாக எங்களுக்குச் சமமாக உங்களை நாங்கள் நடத்த வேண்டும் என்பதையோ நாங்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது என்பது தானே!
நாட்டில் இருக்கிற கிரிமினல், சிவில் சட்டங்களும், நாடாளுமன்ற, சட்டமன்றங்களும், நீதிமன்றங்களும் அதிகாரவர்க்க நிர்வாக அமைப்பு முறைகளும் எங்களுக்கு (ஆதிக்கச் சாதிகளுக்கு) மட்டும் சேவை செய்வதற்கானதே என்றும், நாங்களாகப் பார்த்து உங்களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுத்தால் மட்டும் அதைப் பெற்றுக் கொள்ளலாமே தவிர, உங்களுக்கென்று, எங்களைக் கட்டுப்படுத்துகிற தனிச் சட்டங்கள் இருப்பதை ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்பதையே மணிகண்டன் பேட்டி மூலம் தலித்துகளுக்குச் சொல்கிறார்.
உலகமயமாதல் கொள்கைக்கு முன்பு 165 வடிவங்களில் தமிழகத்தில் தீண்டாமை நிலவியது. 1990க்குப் பிறகு அதுவே 200க்கும் மேற்பட்ட வடிவங்களில் கோலாச்சுகிறது. ஊராட்சிமன்றங்களின் பொது இடங்களில் வைக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியில், ஊராட்சிமன்ற சிமெட்டிப் (பெஞ்சில்) பலகையில் உட்கார்ந்து தலித்துகள் படம் பார்ப்பது, தலித்துகள் செல்போனில் பேசுவது, இருசக்கர மோட்டார் சைக்கிளில் பயணிப்பது போன்றவற்றைத் தடைசெய்யும் படியாக தீண்டாமை பல புதிய வடிவங்களை எடுத்துள்ளது.
அனைவருக்கும் வாடகைக்கு அளிக்கப்படும் திருமண அரங்குகள், நம்பியூரில் அருந்ததியருக்கு மறுக்கப்பட்டதும் நவீன தீண்டாமைதான். இத்தகைய பாகுபாடுகளுக்கு, கொடுமைகளுக்கு குறைந்த அளவு தீர்வு காணவும், குற்றங்களைக் களையவும் தான் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 ஆம் ஆண்டு இந்திய அளவில் கொண்டு வரப்பட்டது. ஆதிக்கச் சாதியினரால் பணியிடத்திலோ, பொது இடத்திலோ, தனியிடத்திலோ அவமதிக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், ஆயுதம் கொண்டு தாக்கப்படுவதும் மட்டுமே இங்கே தீண்டாமையின் கோரத்தாண்டவமல்ல!
ஆதிக்கச் சாதியிடம் கூலி வேலைக்குப் போகாமல் சொந்த நிலத்தில் தலித்துகள் சாகுபடி செய்யும் சுதந்திரத்தைக் கூட அனுமதிக்கமாட்டோம் என்றுதான் 2006 இல் சாதி வெறியர்கள், மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சி என்கிற கிராமத்தில் பய்யாலால் என்ற தலித் ஒருவரின் மனைவியையும், மகளையும் சாலையில் தரதரவென இழுத்துவந்து வன்புணர்ச்சி செய்து, கொலை செய்து சாதிவெறியாட்டம் போட்டனர்.வேலைக்குப் போக மறுத்தாலும் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் வீடுதேடி வரும் நிலைமையே இன்னும் இங்கே தொடர்கிறது.
இத்தகைய நாட்டில் ஒரு சில கொங்கு வேளாளரும், ஒரு சில வன்னியரும், ஒரு சில கள்ளர்களும் வேண்டாம் என்று சொன்னவுடன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எவ்வளவு வன்மம் இருக்கும் என்பதை தயவு செய்து ஜனநாயக ஆற்றல்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
தலித்துகள் பொய்ப்புகார் கொடுத்தால், அந்தப் புகாரின் பேரில் போலிசார் வழக்குப்போடுவது அவ்வளவு எளிதானதா? உண்மையான குற்றங்களுக்கே புகாரை வாங்க மறுக்கும் போலிசார், பொய்ப்புகார்களை அவ்வளவு எளிதில் வழக்காகப் பதிவு செய்து விடுவார்களா? ஒரு புகார் பொய்யா / மெய்யா என்பதைப் புலனாய்வு அதிகாரியும், நீதிமன்றமும் தான் இறுதி செய்ய வேண்டுமே தவிர, புகாருக்கு உள்ளானவரே அதைப் பொய்ப்புகார் என்பதை எந்த தர்க்கத்தின் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சாதாரணக் கொலை வழக்குகளில் கூட, கொலைக் குற்றம் செய்தவன் தான் கொலையே செய்யவில்லை, என் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்று தான் வாதிடுகிறான். அவன் அப்படிச் சொன்ன மாத்திரத்திலேயே அய்.பி.சி. தண்டனைச் சட்டப்பிரிவுகளையே ரத்து செய்ய வேண்டும் என்று ஒருவன் கோருவான் என்றால் அப்படிக் கோரு பவனை பைத்தியக்காரன் என்று தான் உலகம் சொல்லும்.
இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் நக்சல் பாரிப் புரட்சியாளர்கள், தேசிய இன விடுதலைக்காகப் போராடும் போராளிகள், மனித உரிமைப் போராளிகள், சாதி ஒழிப்புப் போராளிகள் எனப்பலர் மீதும் பல பொய்யான வழக்குகளைப் போட்டு, பல ஆண்டுகள் சிறை வாசிகளாகவே வைத்திருக்கிறார்கள். அவர்கள் கூட இந்தியத் தண்டனைச் சட்டத்தை எடுத்துவிட வேண்டும் என்று கோரவில்லை. தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் மட்டும் அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தபட்டதால் ஜனநாயக ஆற்றல்கள் போராடி அச்சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன.
பொய்யான புகாரில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூட, எப்படி இந்தியத் தண்டனைச் சட்டத்தை ரத்து செய் என்று கோராமல், தான் வழக்காடி தன் மீதான புகார் பொய்யென நிரூபணம் செய்து விடுதலை ஆகிறாரோ அப்படித்தான் தீண்டாமை / வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் வழக்கு நடத்தி தான் குற்றமற்றவரா? தண்டிக்கத்தக்கவரா? என்று நீதிமன்றத்தின் முடிவுக்கு உட்பட வேண்டுமே தவிர, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று சொல்வதும், அனைத்துப் புகார்களும் பொய்யானவை, தலித் அல்லாதவர்கள் அனைவரும் சமரச சன்மார்க்கவாதிகள் என்று பேசுவதையும் ஒப்புக் கொள்ள முடியாது.
வன்கொடுமைத் தடுப்புப் புகாரின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை நீதிமன்றத்தில் தோல்வியடைவதற்குக் காரணம், புகாரின் பொய்த் தன்மையல்ல. மாறாக, பதிவு செய்கிற காவல் அதிகாரி, குற்ற அறிக்கை தயார் செய்கிற காவல் அதிகாரி, மருத்துவ அறிக்கை கொடுக்கிற மருத்துவர், எதிர்வழக்காடுகிற வழக்கறிஞர், தீர்ப்புச் சொல்லுகிற நீதிபதி அனைவருமே சாதி இந்துக்கள். சாதிய இந்து மனங்களைக் கவ்வியுள்ள இருட்டில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்ற சிறு தீக்குச்சி வெளிச்சத்தால் மட்டுமே தலித்துகளுக்கு முழு நீதியும் கிடைத்துவிடாது. ஆகக் குறைந்த அளவு பாதுகாப்பு என்ற அளவில்தான் இச்சட்டம் தன்னளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையும் எடுத்துவிட்டால் சாதி வெறியர்களின் கட்டறுத்த கொலைவெறியாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர வழியே இல்லை.
III
                கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் பெரும் பான்மை சாதி மக்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்றும் இச்சாதி வெறியர்கள் புலம்பிவருகிறார்கள். அப்பட்டமான பொய்யும், அண்டப்புளுகும், ஆகாசப்புளுகும் என்றால் என்ன என்பதற்கு மிகச்சரியான எடுத்துக் காட்டே இது போன்ற புலம்பல்கள்.
இன்றுவரை தெருக்கூட்டுகிற துப்புரவுப் பணியில் 100 விழுக்காடும் தலித்துகள் தான். அதிலும் கூட அருந்ததியினரே 90 விழுக்காட்டினர். நகர சுத்தித் தொழிலான இதுவும் முத்திரை வில்லை (குtச்ட்ணீ) ஒட்டி அரசு சம்பளம்பெறுகிற வேலைதான். அரசுப்பணியில் வேலைவாய்ப்பில் பெரும்பான்மைச் சமூகங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக வேதனைப்படும் மணிகண்டன் துப்புரவுப்பணிக்கு / மலம் அள்ளுகிற பணிக்கு, கழிவுக் கிடங்கில் இறங்குகிற பணிக்கு எத்தனை கொங்கு வேளாளர்கள் தயார்? பட்டியல் கொடுங்கள்; உடனே பணியில் சேர்த்து விடுவோம்! கலெக்டர் வேலைக்கும், பேராசிரியர் வேலைக்கும், பொறியாளர், மருத்துவர் வேலைக்கும் இடஒதுக்கீடு கோருகிற உங்களைப் போன்றவர்கள், ஏன் மலம் அள்ளும் பணிக்கு மட்டும் இடஒதுக்கீடு கோர மறுக்கிறீர்கள்? மருகுகிறீர்கள்?
தமிழகத்தில் தலித்துகள் 22 விழுக்காடு உள்ளனர். அவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட்டிருப்பதோ 18 விழுக்காடு மட்டுமே. பழங்குடியின ருக்கு 1 சதவிகிதம் மட்டுமே. தலித்துகளுக்குச் சேரவேண்டியதோ இன்னும் 3 சதவிகிதம் ஆகும். ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள 18 சதவிகிதம் அனைத்துத் துறைகளிலும், அனைத்து நிலைப் பணியிடங்களிலும் முழுமையான இட ஒதுக்கீடு நிறைவு செய்யப்படவில்லை என்பதே தலித்துகளின் தொடர் கோரிக்கையாகவும், போராட்டமாகவும் இருக்கிறபோது, தலித் அல்லாத சாதிகளின் இடஒதுக்கீட்டை தலித்துகள் அபகரித்துக் கொள்வதாக அவர் சொல்வது, ஒருவேளை தலித்துகளுக்கு அரசுப்பணி அளிக்கப்படுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது என்ற சாதி வெறியின் உச்சமாக இருக்குமோ? மாறாக, அவர்களது கரும்புத் தோட்டங்களில் கரும்பு வெட்டும் தினக்கூலிகளாக பண்ணையடிக்க வேண்டும் என்பதுதானே அவரது வாதத்தின் ஆழமான பொருள்.
தமிழ்நாடு உங்களுக்கு மட்டுமோ, உங்களைப் போன்ற சாதி வெறியர்களுக்கு மட்டுமோ பட்டா போடப்பட்ட நாடல்ல. இது தலித்துகளின் தேசம். அவர்களின் ரத்தமும், சதையும், வியர்வையும் கசிந்து வளர்ந்த, வளர்க்கப்பட்ட தேசம் என்பதை உங்கள் கண்களுக்கு ஒளியூட்டியும், காதுகளில் ஓங்கி அறைந்தும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். தலித்துகளை பொருத்தவரை அரசுப் பணிக்கு மட்டும்தான் ஓரளவு வாய்ப்புள்ளது. தனியார் துறையில் தலித்துகள் என்றால் உதட்டைப் பிதுக்கும் முதலாளிகளும், நிறுவனங்களும்தான் இங்கு அதிகம். சில நிறுவனங்களில் தலித்துகளுக்கு வேலையளிக்கப்பட்டாலும் அது குறைந்த கூலியும், கொத்தடிமைக் கீழ் மட்டப் பணியுமாகத்தான் இருக்கும்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் தொகை 75% ஆனால் அவர்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பு நிறுவனங்களில் அளிக்கப்பட்டிருப்பதோ 27 சதவிகிதம் மட்டுமே. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதம், மிகப்பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 சதவிகிதம் தான். இந்த இடஒதுக்கீட்டின் அளவு நியாயமாக 75 சதவிகிதம் ஆக இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் நடைமுறையில் இருப்பதோ (ஆஇ 30/+ Mஆஇ 20%) 50% மட்டுமே. 75% உயர்த்துவதற்குத் தடையாக இருப்பது மணிகண்டன் பட்டியலிடும் பூர்வீக(?) பெரும்பான்மைத் தமிழ்ச்சாதிகளின் எஜமானர்களான பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனிய மனோபாவம் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான். தகுதி திறமை என்ற பெயரால் சிறுபான்மை பார்ப்பனர்கள் பெரும்பான்மை கல்வி, வேலைவாய்ப்புகளைக் கபளீகரம் செய்யக் கண்டு பிடித்த துருப்புச் சீட்டுத்தான் உச்ச அளவு இடஒதுக்கீடு 50% க்கு மேல் அதிகரிக்கக் கூடாது என்ற வரம்பு ஆகும். அரசியல் சட்டத்துக்கே முரணாக தீர்ப்பளிக்கும் இந்த நீதிமன்றங்களை எதிர்த்துப் போர் முழக்கமிடாமல் மணிகண்டன்களும், ராமதாசுகளும் தலித்துகளின் மேல் பாய்வது ஏன்?
IV
                இறுதியாக நில        உரிமை மீட்பு பற்றியது. தலித்துகள் கோரும் நில உரிமையோ, உரிமை மீட்புப் போராட்டமோ கொங்கு வேளாளர்களையோ, இதர சாதிகளுக்குச் சொந்தமான நிலங்களையோ குறித்ததல்ல. தலித்துகளுக்கு பிரிட்டிஷார் அளித்த பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக் கோருகிறோம். எங்களால் சம்பாதிக் கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அரசால் பறிக்கப்பட்ட, பறிக்க முயலும் நிலங்களை மீட்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் போராடுகிறோம். எங்கள் தேவைக்கும், வரலாற்று ரீதியாக வஞ்சிக்கப்பட்ட எங்கள் வாழ்வுரிமைக்கும் ஈடாக, தற்போதுள்ள அரசுக்குச் சொந்தமான தரிசுகள், காடுகள், மலைகள், கோயில்கள், மடங்கள் பெயரில் குவிந்து கிடக்கும் நிலங்களில் எங்களின் பங்கினைக் கோரிப் போராடுகிறோம். எங்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவை மத்திய, மாநில அரசுகளே தவிர மணிகண்டன்கள் அல்லவே. எங்கள் பங்குரிமை கொங்குவேளாளர்களால் அபகரிக்கப்பட்ட நிலங்களாக இருக்குமேயானால், அந்நிலங்களுக்காகவும் நாங்கள் போராடுவது எங்கள் நில உரிமைப் போராட்டத்தின் கடமைகளில் ஒன்றுதான்.
தமிழக மீனவர்களை அன்றாடம் தாக்கியும், கடத்தியும், சிறைப்பிடித்தும், 600 மீனவர்களை இதுவரை கொலையும் செய்துவிட்ட சிங்கள அரசுக்கு எதிராகவோ, இத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் ராஜபக்ஷேவுக்கு விருந்து, உபசாரம் நடத்திக் கொண்டும் இருக்கிற மத்திய அரசுக்கு எதிராகவோ உங்கள் ஆதிக்கச் சாதி வெறிக் கூட்டணியின் மயிராவது அசையுமா?
தமிழகப் பெரும்பான்மைச் சாதிகளிடமுள்ள சிறுதொழில், குறுதொழில், வேளாண்மை, வணிக நிறுவனங்களின் இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள இந்திய அரசின் மின்சாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவீர்களா? சில்லரை வணிகத்தை அழித்து, பன்னாட்டு மொத்த வணிக நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் மத்திய அரசை எதிர்த்து மரம்வெட்டி சாலை மறியல் செய்து, மத்திய / மாநில அரசுகளை நிலை குலைய வைப்பீர்களா?
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக உங்கள் நிலங்களைப் பறிக்கும் மத்திய மாநில ஆட்சியர்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் எதிர்த்துப் போராடுவீர்களா? தமிழ் மண்ணின் நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் வணிகச் சந்தையில் கொள்ளை லாபமடிக்கும் கொக்கோகோலா, பெப்சி கம்பெனிக்கு எதிராகப் போராடுவீர்களா? உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு பல கோடிகளை மானியமாகவும், கடன் தள்ளுபடியாகவும் வரி விலக்குகளாகவும் தந்து கொண்டிருக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு பஞ்சுமிட்டாய் மானியங்களைக் கூட வெட்டுவதைக் கண்டித்து வீதிக்கு வருவீர்களா?
இவை எதையுமே செய்யாத உங்கள் சாதிக் கூட்டணி என்ன செய்யும்? தலித்துகளின் நிலங்களை அபகரிக்கும்! வீடுகளைக் கொளுத்தும்! உழைப்பைச் சுரண்டும்! ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கூட்டணி போட்டு ஓட்டுப் பொறுக்கி கொள்ளையில் பங்கு போட்டுக் கொள்ளும்! இதைத்தானே மருத்துவர் ராமதாசு பாட்டாளி மக்கள் கட்சியாக சாதித்தார். அவர் தனியாகச் செய்ததை சாதிக் கூட்டணியில் இணைந்து அனைவரும் கொள்ளை லாபத்தில் பங்கு பெறப்போகிறீர்கள். அதற்குத்தானே தலித் அல்லாதோர் பேரவை! பெரும்பான்மை சாதிகளின் கூட்டணி! என்று பெயர் வைக்கிறீர்கள். "நேரடியாக, கடந்த காலங்களில் தனித்தனியாக ஊரையடித்து உலையில் போட்டுக் கொண்டவர்களின் சாதிக் கூட்டணி' என்று பெயர் வைப்பதுதானே சாலப் பொருத்தமாக இருக்கும்.
தருமபுரி கலவரத்தில் ஊடகங்களும், சனநாயகவாதிகளும், தலித் தலைவர்களும் சொல்வதில் 60 விழுக்காடு உண்மையில்லையாம்; எரியும் ஒரு குடிசையிலிருந்து இன்னொரு குடிசைக்கு படல்களை ஊடகமாக்கி தலித்துகள் தாங்களாகவே எரித்திருக்கிறார்கள். என்றுகொங்குவேளாளர் முன்னேற்றப் பேரவை மணிகண்டன் கூறுகிறார்! "தருமபுரியில் எரிக்கப்பட்டது 4 வீடுகள்தான். மீதி வீடுகள் தலித்துகள் தானாகவே எரித்துக் கொண்டது' சு மருத்துவர் ராமதாசு பேட்டி!
பாரம்பரியப் பெருமை பேசும் கொங்குவேளாளரின் பாரம்பரியம் என்னவென்பது இப்போது தானே எங்களுக்குப் புரிகிறது. தருமபுரியில் எரிக்கப்பட்டவை குடிசைகள் அல்ல; ஓட்டு வீடுகளும், பல லட்சங்கள் ரூபாய் மதிப்புள்ள மாடி வீடுகளும் ஆகும். அவதூறும், பொய்யும் திரித்துப் பேசுவது தான் உங்கள் பாரம்பரியம் என்பதை எண்ணி வெட்கப்படுகிறோம். இப்படிப்பட்ட சாதிப் பெருமிதங்களை கோடி கோடியாய் கொடுத்தாலும் பெறமாட்டார்கள் தலித்துகள். சத்தியம் தவறாத உத்தமர்கள் தலித்துகள்!
சரித்திர ரீதியாக உழைப்பாளிகள் தலித்துகள். பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களே தவிர, யாரையும் வஞ்சித்தவர்கள் அல்லர். நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டியில் தலித்துகளின் வீடுகளைத் திட்டமிட்டு கொள்ளையடித்து விட்டுப் பிறகு தீவைத்துச் சூறையாடியுள்ளது வன்னிய சாதிவெறிக் கூட்டம்! உள்ளே நுழைந்ததும் பீரோக்களை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் பெட்ரோல் குண்டுகளால் தீ வைத்து எரித்துள்ளனர்.
சைக்கிள்கள், இருசக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் வாடகைக்கு விடும் ஒலிபெருக்கி மய்யம் வைத்திருந்த தகரக் கொட்டகை, மரக் கட்டில்கள், மெத்தைகள், கதவுகள், நிலைகள் எரிக்கப்பட்டன. ஓடுகள், கண்ணாடிகள், பண்ட பாத்திரங்கள், ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டி, கிரைண்டர், மிக்சி, வீடியோ செட்டுகள், அனைத்தும் உடைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன. அங்கே நிகழ்த்தப்பட்ட கொள்ளையின், சேதப்படுத்தப்பட்ட பொருள்களின் மதிப்பு அரசு மதிப்பீட்டின்படியே 5 கோடி ரூபாய்க்கும் மேலே. அவற்றை முழுமையாகப் பட்டியலிட உகந்த இடம் இப்பகுதியல்ல என்பதால் ஒரு சிறு துளியளவே இங்கே கோடிட்டுக் காட்டியுள்ளேன். ஒருமுறை தருமபுரி நத்தம் காலனிக்கும், அண்ணாநகர், கொண்டம்பட்டிக்கும் நேரில் வந்து பாருங்கள்.
அதெப்படி கொங்குவேளாளரான மணிகண்டனும், வன்னியரான ராமதாசும் பொய் பேசுவதில் யாரை யார் மிஞ்சுவது என்று போட்டிபோடுகிறீர்கள்? இப்படியே பேச ஆரம்பித்தால் நந்தன் முதல் நத்தம் குடியிருப்பு வரை, வெண் மணி முதல், பாச்சாரம்பாளையம் வரை கொளுத்தப்பட்ட தலித்துகளின் வீடுகளையும், கொல்லப்பட்ட தலித்துகளின் உயிரையும் – தலித்துகள் தங்களுக்குத் தாங்களே கொளுத்திக் கொண்டும், தங்களைத் தாங்களே கொலை செய்து கொண்டும் தங்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொண்டதாகக் கூட உங்கள் இருவராலும் (மணிகண்டன், ராமதாசு) கூற முடியும்.
ராஜபக்ஷேவாக இருப்பதற்கு சிங்களவனாகத் தான் பிறக்க வேண்டுமென்பதில்லை; சாதித் தமிழனாக இருந்தாலே போதும்!

7 comments:

Unknown said...

தருமபுரி (அன்று):
ஒரு பெண் காதலித்துவிட்டால் குறுக்கே நிற்க அவளின் தகப்பன் யார்?
காதலுக்கு சாதியோ, வயதோ, தொழிலோ, பொருளாதாரமோ, கௌரவமோ, முக்கியமானதா?
-சேரன் மற்றும் நீயா நானா முற்போக்கு வேடதாரிகள்

சென்னை (இன்று):
ஒரு பெற்றோர் என்ற முறையில் தனக்கு வரும் மருமகன் யார் என்பதை தீர்மானிக்க்கும் உரிமை எனக்கு உண்டு.
-சேரன் (03.08.2013 பேட்டி)


சேரன் மகளை மறந்து விடு இல்லாவிட்டால் காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என்று சொல்லிவிடுவோம்.
-சேரன் மகளின் காதலன் (03.08.2013 பேட்டி)

நீயா நானா கௌரவ கொலைகள் நிகழ்ச்சியை நடத்திய கோட்டு கோபிநாத், கௌரவ பிரகாஷ்ராஜ், கவின் மலர், எவிடன்ஸ் கதிர் மற்றும் முற்போக்கு வேடதாரிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் ?

சேரனின் மகள் விவகாரத்தை முன்
வைத்து காதலை எதிர்க்கும் ,
தந்தைகளும் மகள்களும் பங்கேற்கும்
கார சார விவாதம் என்று ஒன்றை
வைத்து அதில் சேரனும் அவரது மகளும்
பங்கேற்க ...
கோபிநாத் நியா நானா நிகழ்ச்சி
செய்வாரா ?

Unknown said...

முற்போக்கு' கூட்டத்தின் இரட்டை வேடம்
---------------------------------------------------------------

சென்னையில் மிக வலிமை வாய்ந்த இரண்டு சாதிகள் இருக்கின்றன. ஒன்று சினிமா சாதி, இன்னொன்று பத்திரிகை சாதி. இந்த இரண்டு சாதிகளும் இப்போது இயக்குநர் சேரனுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன.

இதைக் கண்டுதான் முற்போக்கு வேடதாரிக் கூட்டம் மிரண்டுபோய் தலைமறைவாக நிற்கிறது.

அதுதானே, தர்மபுரி மாவட்டத்தின் அப்பாவிக் கிராம மக்கள், படிக்காதவர்கள் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் மோதலில் ஈடுபட்டல் - அதனை உலகமகாக் கலவரமாக இட்டுக்கட்டிப் பேசலாம், மாபெரும் சதி என வர்ணிக்கலாம், சாதிவெறி என்று சாடலாம்.

அதுவே, சென்னை நகரத்தின் நவநாகரீக சினிமாக் கூட்டத்தினர் என்றால், அதை எதிர்த்து வாய்த்திறக்க முடியுமா? எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு மௌன விரதம் இருந்துதானே ஆகவேண்டும்!

இதுவும் ஒரு சாதி மறுப்பு காதல் திருமணம்தான்!

"இளவரசன் - திவ்யாவோடு சந்துரு - தாமினியை ஒப்பிடாதீர்கள்" என்று ஜூனியர் விகடன் அழுகுணி ஆட்டம் ஆடுவது போன்று, முற்போக்காளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்கிறவர்கள் இனியும் ஓடி ஒளியக் கூடாது.

சுப. வீரபாண்டியன், ஞானி, தமிழருவி மணியன், அ. மார்கஸ், மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், மே 17 இயக்கம், சேவ் தமிழ்ள்சு இயக்கம், பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் என "இளவரசன் - திவ்யா" விவகாரத்தில் 'சம்மனே இல்லாமல் ஆஜரான' எல்லோரும் சந்துரு - தாமினிக்காகவும் வெளியே வரவேண்டும், இயக்கம் கட்ட வேண்டும், போராட வேண்டும், கருத்தரங்குகள், வெளியீடுகள் என 'தாரைத் தப்பட்டை கிழியும் வரை' முழங்க வேண்டும். அதுதான் நியாயமாக இருக்க முடியும்.

இதுவும் ஒரு காதல் திருமணம்தான், இதுவும் ஒரு சாதி மறுப்புத் திருமணம்தான், இங்கேயும் தந்தையும் தாயும் வயது வந்த பெண்ணின் காதலுக்கு குறுக்கே நிற்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், திருமண வயது இல்லாததால் இளவரசன் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடியவில்லை. சந்துருவுக்கு அந்தத் தடையும் இல்லை.

முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்களே, உங்கள் அறிவு நாணயத்தை நிரூபியுங்கள்.

"நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி,
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே! நாளில் மறப்பாரடீ

மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்

ஈனர்க் குலந்தனில்-கிளியே! இருக்க நிலைமையுண்டோ?"

நன்றி - பசுமைதாயகம் - அருள் ரத்தினம்

Anonymous said...

Oru pennai petraduthu varathu alaki pennar yaro m7n pin theriyadha oruvanukun kadhal puriya eenam maanam ulla akkarai ulla endha petrorum vida matargal ..idharuku nee sathi sayam poosadhe...ipozhudhu ungal thirutu kadhal sayam veluka thodangivtathu..

Unnai ondru kekeran yen ethanaiyo thalith pengal vazhvu atravargal irukirargal neengal yen ungal illaingargsl moolam vazkai koduka vendiyadhudhane..

Anonymous said...

Oru pennai petraduthu varathu alaki pennar yaro m7n pin theriyadha oruvanukun kadhal puriya eenam maanam ulla akkarai ulla endha petrorum vida matargal ..idharuku nee sathi sayam poosadhe...ipozhudhu ungal thirutu kadhal sayam veluka thodangivtathu..

Unnai ondru kekeran yen ethanaiyo thalith pengal vazhvu atravargal irukirargal neengal yen ungal illaingargsl moolam vazkai koduka vendiyadhudhane..

Unknown said...

நாடகக் காதல் இருக்கிறது என்கிறார்கள் சேரனும் அமீரும்: உண்மைக் காதல் ஆதரவாளர்கள் எங்கே?

சந்துரு - தாமினி காதல் விவகாரம் ஒரு 'நாடகக் காதல்' என்கிறார் இயக்குநர் அமீர். இந்தக் கருத்தை ஒத்துக்கொள்கிறார்களா? என்று 'சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், தமிழருவி மணியன், அ. மார்கஸ், மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், அறிவுமதி, ஷாநவாஸ், மே 17 இயக்கம், சேவ் தமிழ்ள்சு இயக்கம், பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள்' ஆகியோர் நேர்மையாக தெளிவுபடுத்த வேண்டும்.

இயக்குநர் அமீர் கூறும் நாடகக் காதல்

"காதலில் புது டெக்னிக்: ஒரு பெண் இருக்கும் வீட்டில், சந்துரு காதல் வலை விரிப்பதில்லை. இரண்டு பெண்கள் உள்ள வீட்டில், இரண்டாவது பெண்ணிற்கு காதல் வலை விரிப்பது, நூதனமாக பிரச்னை ஏற்படுத்துவது, பெண்ணின் வீட்டாருக்கு காதல் விவகாரம் தெரிய வைப்பது, அவர்கள், முதல் பெண் இருக்கும் போது, இரண்டாவது பெண்ணிற்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என, தவிப்பது. இந்த தவிப்பை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சந்துரு, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதும் நடந்துள்ளது. சென்னையில் ஒரு பெண்ணை, இரண்டு வருடங்களுக்கு முன் காதல் வலையில் வீழ்த்தி, விலகிச் செல்ல, டீல் பேசி, 3 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளான்.

அமீர் காட்டிய ஆதாரம்
பணம் பறிப்பு: சந்துருவை வைத்து அவனது குடும்பத்தினர், ஐந்து வீடுகளில் பணம் பறிக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. காதலிப்பதாக நடித்து, சென்னையில் ஒரு பெண்ணிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. சந்துருவின் சகோதரி பத்மா, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில், முகமது இலியாஸ் என்பவரை காதலிப்பதாக நடித்து, அவரது மனைவி இருக்கும்போது, அவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவரிடம் பணம் பறிப்பதற்காக, மதம் மாறி, பத்மாவும், சந்துருவும், பாத்திமா, அப்துல் என பெயர் மாற்றிக் கொண்டுள்ளனர். இவரது குடும்பத்தினரும் மதம் மாறியுள்ளதாக, பெயர்களை மாற்றியுள்ளனர். இலியாசை ஏமாற்றி, 300 சவரன் நகை, 30 லட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்துள்ளனர்.

சந்துரு, முஸ்லிமாக மாறிய பின், மானாமதுரையில் வசதியான முஸ்லிம் வீட்டு பெண்ணை காதலித்து, பணம் பறிக்க முயன்றதால், அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டான்." - என்கிறார் இயக்குநர் அமீர். (இங்கே காண்க: தாமினியின் காதலன் சந்துருவின் குடும்பம் ஒரு மோசடி கும்பல்: இயக்குனர் அமீர் ஆத்திரம்)

Unknown said...

இந்நிலையில், இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்தில் விஸ்வரூபம் எடுத்தவர்கள், இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு தலைமறைவாக இருக்கின்றனர்.

'காதலைக் கொண்டாடுவோம்' என ஞானி, மனுஷ்யப்புத்திரன், கவின்மலர் ஒருங்கிணைத்த 'வன்மத்தில் சிறைபடுமோ காதல்' கவியரங்க அழைப்பிதழில்.

சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், தமிழருவி மணியன், அ. மார்கஸ், மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், அறிவுமதி, ஷாநவாஸ், மே 17 இயக்கம், சேவ் தமிழ்ள்சு இயக்கம், பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் என "இளவரசன் - திவ்யா" விவகாரத்தில் 'சம்மனே இல்லாமல் ஆஜரான' எல்லோரும் சந்துரு - தாமினிக்காகவும் வெளியே வந்து போராடுவதுதான் நியாயமாக இருக்கும்.

இதுவும் ஒரு சாதி மறுப்பு காதல் திருமணம்தான்!

சந்துரு - தாமினி: இதுவும் ஒரு காதல் திருமணம்தான், இதுவும் ஒரு சாதி மறுப்புத் திருமணம்தான், இங்கேயும் தந்தையும் தாயும் வயது வந்த பெண்ணின் காதலுக்கு குறுக்கே நிற்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், திருமண வயது இல்லாததால் இளவரசன் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடியவில்லை. சந்துருவுக்கு அந்தத் தடையும் இல்லை.

இளவரசனுக்கு சுய வருமானம் இல்லை, ஆனால், சந்துரு சம்பாதிக்கிறார். இளவரசனின் வழக்குரைஞர் சங்கர சுப்புதான் சந்துருவுக்காகவும் வழக்காடுகிறார்.

காதல் பஞ்சாயத்துக்கு தடைக் கேட்டவர்கள் எங்கே?

'கௌரவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்று' என்கிற பெயரில் முற்போக்குக் கூட்டத்தினர் ஒரு கருத்தரங்கம் நடத்தினர். மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பெரியாரிய இயக்கங்கள் பங்கேற்பதாகக் கூறப்பட்ட இக்கூட்டத்தில் 'கௌரவக் கொலை தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும்' எனப்பேசினர்.

இந்திய அரசின் சட்ட ஆணையம் 'கௌரவக் கொலை தடைச் சட்டம்' இயற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை வைத்துள்ளது. இச்சட்டத்தினை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியே மேற்கண்ட கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே, திருமண வயது வந்தவர்களின் திருமணத்தில் மற்றவர்கள் யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது. அவ்வாறு பஞ்சாயத்து செய்யும் நோக்கில் யாரும் ஒன்று கூடக் கூடாது' என்பதுதான்.

ஆனால், இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளதற்கு நேர்மாறாக, சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய திரையுலகினர் ஒன்று கூடியுள்ளனர்.

'அடுத்தவர்கள் காதலிலோ, கல்யாணத்திலோ யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது' என்பதற்காக சட்டம் வேண்டும் என்று போராடிய அதே முற்போக்குக் கூட்டம் - இப்போது சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் திரையுலகினர் ஒன்று கூடி பஞ்சாயத்து செய்வதைக் கள்ள மவுனத்துடன் வேடிக்கைப் பார்ப்பது ஏன்?
தர்மபுரிக்கு ஒரு நியாயம் - சென்னைக்கு வேறொரு நியாயமா?

சென்னையில் மிக வலிமை வாய்ந்த இரண்டு சாதிகள் இருக்கின்றன. ஒன்று சினிமா சாதி, இன்னொன்று பத்திரிகை சாதி. இந்த இரண்டு சாதிகளும் இப்போது இயக்குநர் சேரனுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன. இதைக் கண்டுதான் முற்போக்கு வேடதாரிக் கூட்டம் மிரண்டுபோய் தலைமறைவாக நிற்கிறது.

தர்மபுரி மாவட்டத்தின் அப்பாவிக் கிராம மக்கள், படிக்காதவர்கள் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் மோதலில் ஈடுபட்டல் - அதனை உலகமகாக் கலவரமாக இட்டுக்கட்டிப் பேசலாம், மாபெரும் சதி என வர்ணிக்கலாம், சாதிவெறி என்று சாடலாம்.

அதுவே, சென்னை நகரத்தின் நவநாகரீக சினிமாக் கூட்டத்தினர் என்றால், அதை எதிர்த்து வாய்த்திறக்க முடியுமா? எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு மௌன விரதம் இருந்துதானே ஆகவேண்டும்

Unknown said...

ஏன்டா நாய்யா எப்படிடா கதை கதையாக எழுதுற உனக்கு எல்லாம் மனச்சாட்சி இல்லையா ? இல்லை உனக்கு மன சிதைவா ?